பொருளடக்கம்

வெள்ளிக்கிழமை

அத்தியாயம் 3 · 3 / 23

அத்தியாயம் 3

Chapter 3

மூல ஸ்கேன் 23–33 before centered 4

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

3

லேடி டாக்டர் ஆனந்தி கொஞ்ச வயதினாள். இரண்டு மூன்று வருடங்களாகத்தான் அவள் வேதபுரத்திலே மருத்துவமனையைத் துவக்கித் தொழில்புரிந்து வருகிறாள் என்றாலும், அந்த வட்டாரத்திலே பெயர்பெற்ற லேடி டாக்டராக ஆகிவிட்டாள். ஆனந்தியின் தொழில் திறமையைவிட பழகும் தன்மை யாவரையும் கவரக்கூடியது. பருவமும் அத்தகையது. உருவமும் அதற்கு ஒத்துழைக்கக்கூடியதுதான். பெயருக்கேற்ப ஆனந்தமாகவே எப்போதும் காணப்படுவாள். நோயாளிகள் உயிருக்கு மன்றாடிக்கொண்டிருக்கும் நேரத்திலேகூட அவர்களுக்குத் தன் புன்னகைமூலம் ஆறுதல் வழங்குவாள். எந்த நேரத்திலும் எப்படிப்பட்ட நிலைமையிலும் பிணியால் பீடிக்கப்பட்டவர்கள் வந்தால் அவர்களை அனுதாபத்தோடு கவனித்து ஆகவேண்டியவைகளைக் கவனிப்பதில் ஆனந்திக்கு நிகர் யாருமில்லை என்று ஊரே பாராட்டும். வியாதியால் துடிப்பவர்களிடம் வெகுண்டு பாயும் குணம் அவளிடத்தில் இல்லை. இது அவள் தொழிலுக்குத் தேவையான அரிச்சுவடிதானே என்று நினைக்கலாம். ஆனால் அந்தப் பாலர் பாடத்தை மறந்துவிட்டு எத்தனை பாதகர்கள் ‘ஸ்டெதாஸ் கோப்பை’ தூக்குக் கயிறுபோல தங்கள் கழுத்திலே தொங்கவிட்டுக்கொண்டு, பாசக்கயிற்றோடு காட்சியளிக்கும் புராண காலத்து யமன்போல நோயாளிகளை உற்று நோக்குகிறார்கள்! உறுமிப் பாய்கிறார்கள்!! அப்பப்பா! அந்த உத்தமர்கள் உலவும் மருத்துவ உலகத்திலேதான் சில சமயம் அப்பாவி நோயாளிகள் சிக்கிக்கொண்டு உயிரை விடமுடியாமல் திணறிச் செத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஆனந்தி கானல் நீரைப் போலக் காட்சியளித்ததில் வியப்பெதுவும் இல்லைத்தான்! நோயாளிகளைக் குணப்படுத்துவதில் மருத்துவருக்கு அடுத்த படியான இடத்தை மருத்துவரின் இன்முகந்தான் பெறுகிறது. இந்த உண்மையை ஆனந்தி உணர்ந்திருந்ததோடு<!-- source join: scan 23 ends உணர்ந்திருந்ததோடு; scan 24 begins மட்டுமல்ல; --> மட்டுமல்ல; அதுபோலவே உழைத்திடவும் அக்கறை எடுத்துக்கொண்டாள். அதனால் அவள் பெயர் வேதபுரத்து வட்டாரத்திலே செல்வாக்கோடு மின்னிக்கொண்டிருந்தது. மருத்துவ மனைக்கு வரும் கிழவிகள், ஆனந்திக்கு பாட்டி முறை ஆகிவிடுவார்கள். நடுத்தர வயதினர் அம்மா என்ற அன்பழைப்புக்கு ஆளாவார்கள். சமவயதினர் சகோதரிகள் என்ற உறவு முறையால் பிணைக்கப்படுவார்கள். அவள் உள்ளத்திலே அப்படி எண்ணுகிறாளோ—அல்லது வைத்தியத் தொழிலின் வளர்ச்சிக்காக அந்த முறையைக் கையாளுகிறாளோ—அதுபற்றி காய்ச்சல்காரர்களுக்கு என்ன கவலை! அவர்களுக்குத் தேவையானது உடல் நலம்! அதனால் ஆனந்தியின் உள்ளத்திலே புகுந்து ஆராய்ச்சி நடத்த அவளது வாடிக்கை நோயாளிகளும் சரி—புதிய வரவுகளும் சரி—அக்கறை எடுத்துக்கொண்டதில்லை. ஊரிலே யாரும் எடுத்துக்கொள்ளாத அந்த அக்கறையை டைகர் மட்டுமே எடுத்துக்கொண்டான். ஆனந்தியின் உள்ளம் எப்படிப்பட்டது என்று கண்டுபிடிப்பதிலே அவன் செலவழித்த நாட்கள் பல! அவன் ஆனந்தியை அடிக்கடி சந்திக்கிற நிலைமைகளை உண்டாக்கிக்கொண்டான். நோயாளி அல்ல; ஆயினும் தன் நோய் தீர்க்கும் மாத்திரை அவளிடம் இருக்கிறதா என்பதை எப்படியாவது தெரிந்துகொள்ளத் துடித்தான். டைகர்—ஆனந்தியின் வைத்திய சாலையைத் துவக்குவதற்காக வேதபுரத்திலே பட்டிருக்கிற கஷ்டங்கள் ஏராளம்.

ஆனந்தி, அந்த ஊரில் குடியேறித் தொழில் நடத்த விரும்பியபோது—அவளது அண்ணன், தங்கைக்குத் தக்கது செய்து உதவவேண்டுமென்று வேதபுரத்திலேயுள்ள தன் பால்ய நண்பன் ஒருவனுக்குத்தான் கடிதம் எழுதியிருந்தான். அந்த நண்பன்தான் டைகர்! தோழனின் வேண்டுகோளை அலட்சியம் செய்யாமல்—ஆனந்தியின் மருத்துவமனை ஆரம்பிப்பதற்கான காரியங்கள் அத்தனையும் பார்த்துக்கொடுத்தான். ஊரிலே செல்வாக்குள்ள மைனர்; வீட்டுக்கோ செல்லப்பிள்ளை! கிராமங்களில் அவர்<!-- source join: scan 24 ends அவர்; scan 25 begins கள்தானே -->கள்தானே கிருஷ்ணபரமாத்மாவாகத் தெரியமுடிகிறது! டைகரைச் சுற்றி எப்போதுமே ஒரு வாலிபப் பட்டாளம். அவன் குடித்து மிச்சம்வைத்த மதுவைக் குடிக்க! புகைத்து வீசியெறிந்த சிகரெட் துண்டைப் புகைக்க! மற்ற நேரங்களில் அவன் இட்ட வேலையைச் செய்து வயிறு வளர்க்க! இத்தகைய பட்டாளமொன்று பக்கபலமாக இருக்கும் போது டைகர் போன்றவர்கள் வேதபுரம் போன்ற ஊர்களிலே வீரர்களாக உலவமுடியாதா என்ன? டைகருக்கு இயற்பெயர் அதுவல்ல! பெற்றோர்கள் இட்ட பெயர் ராமகிருஷ்ணன். பரமஹம்சரிடத்திலே பக்தியிருந்தவர் செத்துப்போன அவன் அப்பா! அதனால் அவரது நினைவாக அப்பெயர் சூட்டினர். ராமசாதுவாக வளருவான் தன் மகன் என்று புளகாங்கிதம்கொண்டிருந்தார். அவனே டைகர் என்ற பட்டத்துக்குரியவனாக—வேதபுரத்து வீரனாக வளர்ந்துவிட்டான். ராமனுக்கு அருகிலே ஒரு குரங்குப் பட்டாளம்—இவனுக்கும் அப்படித்தான்! கிருஷ்ணனுக்குப் பாவையர் பட்டாளம் தேவைப்பட்டது! இவனும் அந்த நிலைக்கு உயர்ந்துகொண்டிருந்தான்.

எப்படியோ ஒருவிதத்தில் தந்தை வைத்த பெயர் அவனுக்குப் பொருத்தமாகவே அமைந்திருந்தது. ராமகிருஷ்ணன் டைகரானான். அந்த டைகரின் வேட்டையில் சிக்கிய இளமான்கள் ஏராளம். சிந்தாமணி, அவனுக்குச் சொந்தக்காரி. மாமன் மகள், ஒரு உறவுக்கு! அவளைத் திருமணம் என்ற பெயரால் சுவைக்கவேண்டுமென்று திட்டமிட்டான் டைகர். சிந்தாமணியின் தந்தை டைகரின் மிரட்டல்களுக்குப் பணியவில்லை. மிஞ்சல்—கெஞ்சல் எதுவுமே அவரை அவன்பக்கம் சாய்த்திட உதவவில்லை. அவருக்குத் தெரியும் அவனது நடவடிக்கைகள் அனைத்தும்! ஊருக்கேதெரியும்—ஏன்; ஆனந்திக்குக்கூடத்தான் தெரியும்; டைகர் எப்படிப்பட்டவன் என்று! டைகருக்கு மட்டுமே ஆனந்தி எப்படிப்பட்டவள் என்று தெரியாமல் இருந்தது. அந்த ரகசியத்தை வெளியிடத்தான் போலும், வேம்பு ஆனந்தி வீட்டுக்கு வேலைக்காரனாக வந்து சேர்ந்<!-- source join: scan 25 ends சேர்ந்; scan 26 begins தான். -->தான். ஊரார் கைதேர்ந்தவள்—கனிவு மிக்கவள் என்று பாராட்டுகிறார்கள். நோயாளிகளோ அவள் தரும் மருந்தாலும், அதைவிட மேலான அன்புப் பணியாலும் நலிவு நீங்கி வாழ்த்துகின்றனர்.

அத்தகையவள் தன் சொந்த வாழ்வைப் பொறுத்தவரையில் ஒரு சாதாரணப் பெண்ணை விட மிகவும் கேவலமான நிலைமைக்கு ஆளாகிவிட்டாள். அந்த நிலை அவளாகத் தேடிக்கொண்டதல்ல. தேடாமலே வந்தது! வந்த பிறகு அவளாலே விலக்கமுடியாத விருப்பத்துக்குரிய நிலைமையாகவும் ஆகிவிட்டது! வேலைக்கார வேம்புவைத் தட்டிக்கொடுக்க ஆரம்பித்தான் டைகர்! வெண்புர வேட்டைக்காரர்களுக்கு வேம்பு போன்றவர்கள்தானே அம்புகள்! அந்த அம்பைக் கூரேற்றினான், இரண்டுநாள். தேனீர்! இரவு நேரங்களில் டைகரோடு ஊர்வலம் அவ்வளவுதான். வேம்பு உண்மைகளைக் கக்க ஆரம்பித்தான்.

ஆனந்தியின் குடும்ப விசாரணையில் ஆரம்பித்த பேச்சு டைகரின் குறிக்கோளின் எல்லைக்கோட்டை வந்து தொட்டு நின்றது. “ஆனந்தி துணிச்சல்காரி தானப்பா! தன்னந்தனியாக வாழ்க்கை நடத்துகிறாளே, கைகாரி!” என்று பாராட்டி வேம்புவின் வாயைக் கிண்டினான்.

“ஆமாம், அந்தக் குடும்பத்திலேயே ஆனந்தி அம்மாதான் தைரியசாலி! நல்லவங்க! அவுங்க அண்ணன் ஒரு பயந்தாங்கொள்ளி, விளக்குவச்சால் வெளியே கிளம்ப மாட்டாரு! இத்தனைக்கும் அவரு “இடிமுழக்கம்” அப்படிங்கிற பத்திரிகைக்கு ஆசிரியர்!” என்று டைகருக்கு வேண்டாத விஷயங்களை விவரித்துக்கொண்டிருந்த வேம்புவின் நாக்கைச் சிரமப்பட்டு வளைத்து நெளித்து, அதைச் சூடேற்ற சிறிது சுவையான பானத்தையும் அளித்து டைகர், தன் பேச்சுத் திறமையைப் பயன்படுத்தி வெற்றி கண்டான்.

“இவ்வளவு கெட்டிக்காரியாயிருந்தும் ஒரு நாள் ஏமாந்து போய்ட்டாங்க எங்கம்மா?”

“எப்படிடா வேம்பு—எப்படி?”

“அஞ்சாவது மைலிலே அய்யனாருன்னு ஒரு பெரிய பண்ணையிருக்கே தெரியுமா?”

“ஆமாம் தெரியும்! அந்தப் பண்ணைக்காரரைக்கூட எனக்குப் பழக்கமாச்சே! பாலகங்காதரத் தேவர்!”

“ஆங்...அந்த தேவர் வீட்டிலே ஒருநாள் ராத்திரி பிரசவம்னு...அவசரமா ஆள் ஓடிவந்தான்!”

“ஆனந்தியை அழைக்கவா?”

“ஆமாம்! அம்மாளும் உடனே என்னைக் கூட்டிக்கிட்டு பண்ணையிலேயிருந்து வந்த காரிலே புறப்பட்டாங்க! நாங்க ரெண்டுபேருமா போய்ச் சேர்ந்தோம்!”

“எங்கே? பண்ணை வீட்டுக்கா?”

“ஆமாம், அப்படித்தான் சொன்னுங்க! நல்ல இருட்டு; தெருவிலே மினுக்கு மினுக்குன்னு விளக்கு எரிஞ்சுகிட்டு இருந்தது! வாசல்ல போயி இறங்கினோம். உள்ளே பிரசவ வேதனையில் யாரோ சத்தம் போட்ட மாதிரி காதில் விழுந்துகிட்டேயிருந்தது. பண்ணைக்காரரு...அவருதான் தேவரு...அம்மாளை வரவேற்று உள்ளே அழைச்சுகிட்டு போனாரு! நான் மாத்திரம் வாசல்ல உட்கார்ந்திருந்தேன். எனக்கு ஒரு சந்தேகம்; “என்னடா இவ்வளவு பெரிய மனுஷர் காரெல்லாம் வச்சிருக்கார், வீட்டு வாசல்லே ஒரு நாதியைக்கூட காணோமே” அப்படின்னு யோசிச்சேன்!”

“ம். அப்புறம்?”

“அப்புறம் என்ன...ரொம்ப நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தேன். உள்ளே சத்தத்தையே காணோம்; பிரசவவேதனை சத்தம் கேட்டதே; அதுவும் இல்லை!”

“ஓகோ குழந்தை பிறந்துட்டதாக்கும்!”

“அதான் இல்ல!...குழந்தை பெக்கிற ஆளே அங்கே இல்லங்கிறது எனக்கு அப்பறந்தான் தெரிஞ்சது!”

“என்ன—என்ன? விவரமாச் சொல்லு!”

“என்னடா—சத்தமே காணும்னு கதவுப் பக்கம் போனேன். கதவு உள்ளே தாள்போட்டிருந்தது! சரி; ஜன்னல் பக்கம் கவனிப்போம்னு பார்த்தேன். ஜன்னலெல்லாம் மூடியிருந்தது. கதவைத் தட்டிக்கிட்டு கேட்டேன். ஆனந்தியம்மாவோட குரல் கேட்டது! அய்யோ பாவி! என்னை விடு! விடு!” என்று சத்தம்! எனக்குப் பொறுக்கமுடியவில்லை; புரிந்துகொண்டேன். பலநாளா வலைவீசி, இந்தப் பாலகங்காதரத் தேவர் இன்னைக்கு நினைச்சதை முடிச்சுட்டான் அப்படின்னு தெரிஞ்சுபோச்சு எனக்கு! ஓகோன்னு கூச்சல்போட வாயைத் திறந்தேன். அவ்வளவுதான். வாயை எவனோ கட்டினான். காலு கையிலே கயிறை மாட்டினான் எவனோ! தாழ்வாரத்திலே உருட்டி விட்டானுங்க! காதை யாரும் மூடலே! உள்ளே என்ன நடக்குதுன்னு கவனிச்சு கேட்டேன். கொஞ்ச நேரம் ஆனந்தியம்மாளுடைய ஆவேசமான குரல் கேட்டுக்கிட்டேயிருந்தது! அப்புறம்...சத்தமே இல்லே!....எனக்கு மயக்கம் வந்துடும்போல இருந்தது!....கதவு திறக்கப்பட்டது! என் கட்டுகளும் அவிழ்க்கப்பட்டன! டாக்டரம்மா சிலை மாதிரி அசையாம நின்னாங்க! அவுங்க முகத்திலே...அய்யய்யோ...சாவுக்களை படிந்து இருந்ததை நான் பார்த்து நடுங்கிப்போனேன். காரில் ஏறச்சொன்னார் தேவர், ஏறிக்கொண்டோம். அவர் எங்களை வழியனுப்பி வைக்க கார் அருகில் வந்து நின்றார். “ஜாக்கிரதை! விஷயம் வெளியே தெரிந்தால் தலைபோய்விடும். ஆமாம். டேய்! உனக்குத்தான் சொல்லுகிறேன்” என்று என் தலையில் ஒரு குட்டு வைத்தார். கார் நகர ஆரம்பித்தது. எனக்கும் டிரைவருக்கும் நேராகவே டாக்டரம்மாவின் முகத்திலே தேவர் ஒரு முத்தமிட்டார்! பிணம்போல அம்மாள் இருந்தார்களே தவிர எந்தவிதமான எதிர்ப் பேச்சும் கிடையாது!”

“அதற்கப்புறம் அந்தத் தேவர்...வருவது போவது உண்டா?......”

“உண்டோ என்னமோ, என் கண்ணில் படவில்லை. ஆனால், அம்மா என் காலில் விழுந்து, விஷயத்தை வெளி<!-- source join: scan 28 ends விஷயத்தை வெளி; scan 29 begins யில் சொல்லாதே... -->யில் சொல்லாதே என்று கேட்டுக்கொண்டார்கள். நான் இப்போது உன் காலிலே விழுந்து கேட்டுக்கொள்ளுகிறேன்; காதை சுத்தமாகக் கழுவிவிடு!”

டைகர் ஜெயித்துவிட்டான். டாக்டர் ஆனந்தியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ரகசியமொன்றையே அறிந்துகொண்டுவிட்டான். அந்த ரகசியத்தின் அடிப்படையிலேயே தன் ஆசைக் கோட்டையை எழுப்பிவிடத் தீர்மானித்துப் புறப்பட்டான்.

என்றும்போல் அன்றும் டைகரை ஆனந்தி வரவேற்றாள். எவ்வளவுதான் ஊரிலே ஊதாரியாகத் திரிந்தாலும் தன்னைப் பொறுத்தவரையில்—தன் அண்ணனின் பால்ய சிநேகிதன் என்ற உணர்ச்சியோடு—இவ்வளவு உதவிகள் செய்கிறானே என்ற எண்ணம் அவளுக்கு! என்ன தெரியும்; வெள்ளாடுகளே—புள்ளிமான்களைக் கண்ட மாத்திரத்தில் பாய்ந்து விழுந்து பசியாற்றிக்கொள்ளும் வேங்கை—வெறியை அடக்கிக்கொண்டு, பசுவைப் பதம் பார்க்க நேரம் பார்த்துக்கொண்டிருக்கிற சங்கதி?

அதனால், அவள் அவனை நம்பினாள். அவனிடத்திலே ஒரு பாசமும் வைத்தாள். அந்தப் பாசத்திற்கு எத்தகைய உறவு வர்ணமும் பூசவில்லையே தவிர களங்கமற்ற பாசந்தான் அது!

என்றைக்குமில்லாத மாதிரியில் அன்று டைகர் சோகமாகக் காணப்பட்டதை ஆனந்தி வியப்போடு நோக்கி, “ஏன் வாட்டம்?” என்று கேட்டாள்.

டைகரின் குரல் நடுங்கியது. விம்மி விம்மி அழுதான்.

“ஏன், எதற்காக இப்படி?...யாருக்காவது...ஏதாவது ஆகிவிட்டதா?” என்று துடித்துக் கேட்டாள் ஆனந்தி!

“யாருக்கும் எதுவும் ஆகவில்லை! ஆனந்தி, உன் முகத்தைப் பார்க்கவே எனக்குப் பயமாயிருக்கிறது......... அய்யோ உன் எதிரில் என்னால் நிற்கவே முடியவில்லை!”

“என்ன சொல்கிறீர்கள்? என் முகம் பயங்கரமாக இருக்கிறதா?”

“பறிக்காத செந்தாமரைப் புஷ்பம்போல் இருந்த உன் முகத்திலே—எப்படித்தான் இவ்வளவு களங்கக் கீறல்கள் விழுந்ததோ தெரியவில்லை...பால் நிலவு உன் முகம் என்று பாராட்டித் திரிவேனே; அந்த நிலவு இப்படியா தேய்ந்து விடுவது?”

“என்ன? என்ன பேசுகிறீர்கள்?”

“ஆனந்தி! இதை இத்தனை நாள் என்னிடம் ஏன் ஒளித்துவைத்தாய்? மறுநாளே சொல்லியிருந்தால், அந்த மடையனின் கழுத்தை அறுத்து பிணத்தை மிதக்க விட்டிருப்பேனே. பேயன்! பித்தன்!! பெண் இனத்தின் பெருமை உணராத அற்பன்!!!”

“நீங்கள் சொல்வது......?”

“பாலகங்காதரத் தேவனைப் பற்றிப் பேசுகிறேன்—பாவையுந்தன் கற்பைப் பாழ்படுத்திய பாவியைப்பற்றிப் பேசுகிறேன்!”

இந்த வார்த்தைகள் காதிலே பட்டதும் ஆனந்தி மூர்ச்சையுற்றுக் கீழே சாய்ந்தாள். கற்பு பறிபோனதை விட—பறிபோன விஷயம் வெளியே தெரியும்போதுதான் அவமானத்தைத் தாங்கமுடியாமல் அல்லாடுகிறார்கள் சில பெண்கள் என்பதற்கு ஆனந்தி உதாரணமாகிவிட்டாள்! அலறினாள்; பிரக்ஞை வந்த பிறகு! அழுது புலம்பினாள்!

டைகர்—நேரத்தைச் சாதுர்யமாகப் பயன்படுத்திக் கொண்டான்.

“கவலைப்படாதே! இந்த சேதி இனி என்னைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது. பெண்ணொருத்தி தனியாக இருந்ததால் அல்லவா அந்தத் தேவனின் திமிராட்டத்திற்கு இடங்கொடுத்துவிட்டது! இனி நான்தான் உனக்கும் உன் கற்புக்கும் காவல்!” எனக் கண்ணீர் விட்டபடி—தேம்பித் தேம்பி அழுதபடி—ஆனந்தியின் கரங்களை எடுத்துத் தன் கன்னங்களிலே பொத்திக்கொண்டான். ஆனந்தியை இப்போது தாட்சண்யம் வந்து அடிமையாக்கிக் கொண்டது.

தனக்காகக் கவலை எடுத்துக்கொள்ளக்கூடிய ஒருவன் இருக்கிறானே என்று நினைத்துப் பெருமூச்சு விட்டுத்தான் அவளால் முடிந்ததே தவிர அவனது தோள்களிலே தன் தலை சாய்க்கப்பட்டிருப்பதையும், அவளால் வேறுபாடாக உணரமுடியவில்லை.

பஞ்சினும், பட்டுத் துணியினும் மிருதுவான அவள் நெஞ்சில் டைகர் போன்றவர்களின் முரட்டுப் பாதங்கள் பதிந்திட அவள் விரும்பத்தானில்லை! என் செய்வது; முள்வேலி தேவைப்படுகிறதே; முல்லைக் கொல்லைக்கு!

அவ்விதமானாள் ஆனந்தி! முல்லைத்தோட்டம் அவள்! அதில் தேவர் போன்ற முரட்டு மாடுகள் நுழையக்கூடாதாம்—முள்வேலியாக இருக்கிறேன் என்றான் டைகர்! மானுக்கு புலி—காவலாயிற்று! மாற்ற இயலாத சூழ்நிலை—மனத்தைச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டாள் அந்த மங்கை.

பருவத்தைக் கொத்திச் சாப்பிட்டு சித்ரவதைசெய்ய, பாலகங்காதரன் போன்ற கழுகுகள் இன்னும் எத்தனை பறக்குமோ; அவைகளின் பயங்கர நகங்களிலேயிருந்து தப்ப—பாதுகாப்பாக ஒரு பகவதியின் பலிபீடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்டது நியாயமே என எண்ணியது ஆனந்தியெனும் அந்த ஆடு!

வேம்பு மூலம் கிடைத்த கரும்பு இதுவெனக்கொண்டு டைகர் மகிழ்ந்தான்! தொழில் முறைக்கு ஊனம் வந்துவிடக் கூடாதே என்று சற்று ரகசியமாகவே அவனது தொடர்பை வைத்துக்கொண்டிருந்தாள் ஆனந்தி! பலாத்காரமாகக் கற்பழிக்கப்படுவது பாப விமோசனத்திற்கு உரியதுதான்—பிராயச்சித்தம் செய்திட ஏற்றதுதான் என ஆறுதல் கூறுவான் அவன் ஆனந்திக்கு! அவளும் மகிழ்வாள். இருவருமே வாழ்க்கை ஜோடிகள் ஆகிவிட்டால் என்ன என்று நினைப்பான், ஜாடையாகச் சொல்லுவான். “காலத்தை எதிர்நோக்கியிருக்கிறேன்—உன்னைப்பற்றித்தெரிந்தவர்கள் இந்த உலகத்தில் மூன்றுபேர் இருக்கிறார்கள்; ஒருவன் தேவர்! மற்றொருவன் அவன் கார் டிரைவர்! மூன்றாவது<!-- source join: scan 31 ends மூன்றாவது; scan 32 begins ஆள் வேம்பு! --> ஆள் வேம்பு! இந்த மூவரையும் ஒழித்துவிட்டால் ஆனந்தியின் களங்கம் பற்றிப் பேச ஆளே கிடையாது உலகில்! அதற்கப்புறம் திருமணம்” என்பான் டைகர்! ஆனந்திக்கு அந்த வாதம் பிடிக்காதுதான். ஆனாலும் பொறுத்துக் கொள்வாள். அவனையும் விட்டு விட்டு எப்படி வாழ்வது? உயிர்மேல் ஆசை உள்ளவர்கள் முருங்கைக் கொம்பானாலும் பிடித்துக்கொண்டு கரையேறத்தானே முயற்சிக்கிறார்கள்! அந்த ரகந்தான் ஆனந்தி!

அவளது மருத்துவ மனைக்குத்தான் சிந்தாமணி கொண்டுசெல்லப்பட்டாள். சிந்தாமணியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக உணர்ந்தாள் ஆனந்தி. அவசரமாகவும் அவசியமாகவும் செய்யவேண்டிய சிகிச்சைகள் அனைத்தும் செய்து, பிழைத்துவிடுவாள் என்ற தைரியத்தை அவளது பெற்றோர்களுக்கு அளித்து—சிந்தாமணி இரண்டு நாட்கள் மருத்துவ மனையில் தன் கண்காணிப்பில் ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது என்று கூறினாள்.

சிவநேசரும், சிவகாமியும் ஆனந்தியிடம் தங்கள் குமாரியை எப்படியாவது பூரண செளக்கியப்படுத்துமாறு மன்றாடிக் கேட்டுக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினர். மாப்பிள்ளை வீட்டார் குறித்த நேரத்தில் வந்துவிடுவார்கள்—அவர்களுக்கு! படுக்கையில் கிடத்தப்பட்டிருக்கும் சிந்தாமணியிடம் விடைபெற்றுக்கொள்ள விரும்பினர்.

அவளோ, சிறிதுநேரத்துக்கு முன்புதான் விழித்து... மீண்டும் கண்மூடி அயர்ந்திருக்கிறாள். அதனால் மகளிடம் எதுவும் பேசாமலே—மாலையிலே வருவதாக டாக்டரிடம் கூறிவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டனர். அவர்கள் போன சிறிது நேரத்திற்கெல்லாம் டைகர் மருத்துவ மனைக்கு வேம்புடன் வந்துசேர்ந்தான். அவனிடம் ஆனந்தி, சிந்தாமணியின் விபத்து குறித்துச் சொன்னாள். டைகரும், வேம்புவும் சிந்தாமணி களைப்புடன் கண்ணயர்ந்திருக்கும் கட்டில் பக்கம் போய்ப் பார்த்துவிட்டுத் திரும்பினார்கள். டைகரின் கண்களிலே ஒரு புது விதமான சுழற்சி! நெற்றியிலே நீண்ட ஆழமான பயங்கரம் நிறைந்த சுருக்கங்கள்!

“ஆனந்தி! கொஞ்சம் உன்னிடம் தனியாகப் பேச வேண்டும், இப்படி வாயேன்!” என்று அவளை அழைத்துக் கொண்டு ஒரு அறைப்பக்கம் சென்றான் டைகர்!

கலைஞர் மு. கருணாநிதி · வெள்ளிக்கிழமை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்