அத்தியாயம் 2 · 2 / 23
அத்தியாயம் 2
Chapter 2
மூல ஸ்கேன் 13–22
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
2
அவளுக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது. பெங்களூரிலிருந்து பெண்வீடு பார்க்க வரப்போகிறார்கள். அதுவும் ஒரு முறைக்காகத்தான். மற்றபடி பேசவேண்டியவைகள் எல்லாம் முன்கூட்டியே பேசப்பட்டு—மணமகன் படத்தை மணமகளும்—மணமகள் படத்தை மணமகனும் பார்த்துத் தங்கள் விருப்பத்தை வெளியிட்டுவிட்டார்கள். அடுத்த மாதம் திருமணத்திற்கு நாள் குறிக்கவேண்டியது தான் பாக்கி...... அதற்குள் சம்பிரதாயப்படி பெண்வீடு, பிள்ளைவீடு பார்த்தாகவேண்டுமே—பிள்ளைவீடு பார்த்தாகி விட்டது.
பெங்களூர் மாப்பிள்ளை மிகப் பெரிய இடம். ஏராளமான சொத்துக்கு அதிபதி. எடுபிடி ஆள் அப்புகள் தேவைக்குமேல் உண்டு. எழுபட்டு வீடுகள்; ஏறத்தாழ அரண்மனை மாதிரி! இத்தனைக்கும் அவன் ஒருவனே சொந்தக்காரன். வீட்டுக்கு ஒரே பிள்ளை. வயதான விதவைத் தாயார். பையன் பெயர் அழகப்பன். காரணப் பெயர் என்றுதான் சொல்லவேண்டும், அவ்வளவு கவர்ச்சிகரமான காளை. அவனது புகைப்படத்தைப் பார்த்துவிட்டு—சிந்தாமணி, பூந்தோட்டங் கண்ட பொன்வண்டின் நிலை பெற்றாள். புன்முறுவல் தேங்கியிருக்கும் இதழ்கள். அவைகளுக்கு மெருகேற்றி அழகூட்டும் அரும்பு மீசைகள். எடுப்பான மூக்கு. ஏறு நோக்கு. பேசாத அந்தப் படமே ஒரு காதல் காவியத்திற்கு முன்னுரை தீட்டும் சக்தி பெற்றதாக இருக்குமானால் நேரில் காணும் அந்த உருவம் எத்துணை காந்த தன்மை கொண்டதாக இருக்குமோ என நினைந்து மகிழ்ந்தாள் சிந்தாமணி. இன்பம் ததும்பும் அவளது சந்தேகத்திற்கு விளக்கம் சுருக்கமாகத் தரப்பட்டது அவளது பெற்றோர்களால்!
“அழகில் அர்ச்சுனன்—அதற்குமேல் கேட்காதே போ!” என்றார் பாரதத்தைக் கரைகண்ட அவளது தகப்பனார் சிவநேசர்.
அப்போது அருகே இருந்த ஆண்டாள்—குறும்புக்காரியாயிற்றே; சும்மாயிருப்பாளா—துருதுருத்த வாயை மூடிக்கொண்டு!
“அழகில் மட்டுந்தானே மாமா அர்ச்சுனன்? செய்கையில் அப்படியொன்றுமில்லையே?” என்று கேட்டு வைத்தாள். நல்லவேளை நாம் கேட்கவேண்டிய கேள்வியை ஆண்டாள் கேட்டாளே என்ற களிப்பு சிந்தாமணிக்கு!
“குணத்தில் தருமன்போல் தருமன்” என்றாள் சிந்தாமணியின் தாயார் சிவகாமி.
“குதிரைப் பந்தயப் பழக்கமுண்டோ?” எனச் சட்டென்று கேள்வியை வீசினாள் ஆண்டாள்!
“குறும்புக் கழுதை—அவர் குதிரையில் ஏறி உட்கார்ந்தால்... அடடா... சிவாஜி மகாராஜா மாதிரி இருக்கும்.”
“ஆங்... இப்படி ஏதாவது தெரிந்த உவமையாகச் சொல்லுங்கள்” எனக்கூறி ஆண்டாள் சிரித்தாள்.
சிந்தாமணியோ சிந்தையெல்லாம் தேன்மணக்க நின்றாள். இந்த நிகழ்ச்சி மாப்பிள்ளை வீடு பார்த்துவிட்டு வந்த நாளன்று நடந்தது.
சிந்தாமணிக்கும் அவள் பெற்றோருக்கும் பெங்களூர் சம்பந்தம் மிகவும் பிடித்துவிட்டது. “என்னய்யா பிடிக்காது! லட்சண சொரூபன், அதோடு லட்சாதிபதியுமாம்! சிவநேசனுக்கு சரியான அதிர்ஷ்டம் அடித்ததய்யா!” இப்படி ஊரிலே பேச்சு கிளம்பிற்று. சிந்தாமணிக்கோ எழில்மயமான எதிர்காலம், கனவுகளில்—நினைவுகளில் வந்து நின்று நர்த்தனம் புரிந்தது.
தடாகத்திலே நீராடிக்கொண்டிருக்கிறாள். அவள் நினைவுகளோ சதிராடிக்கொண்டிருக்கின்றன.
“அர்ச்சுனன் மாதிரி அழகன் என்றாரே அப்பா!... ஆகா! நான் எவ்வளவு பாக்கியம் செய்தவள்! பாரதம் நடந்ததோ நடக்கவில்லையோ—பொய்யோ—புளுகோ அதைப்பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை.... அதிலே<!-- source join: scan 14 ends அதிலே; scan 15 begins வரும் அர்ச்சுனன் --> வரும் அர்ச்சுனன் என்ற கதாபாத்திரம் ஆணழகன்—அவனுடைய முகத்தின் அழகைக் காணவேண்டுமென்று பார்வதி தேவியே ஆசைப்பட்டு அந்த ஆசையைத் தன் கணவன் பரமசிவனிடம் கூறினாளாம். மனைவியின் ஆசையைத் தீர்த்துவைக்க எண்ணிய பரமசிவன், அர்ச்சுனனை வலுச்சண்டைக்கு இழுத்து—இருவரும் சண்டைபோடும் போது அவனது முகத்தைப் பார்வதியின் பக்கம் திருப்பி அந்த அழகை அவள் கண்டு ரசிக்குமாறு செய்தாராம். அப்படிப்பட்ட அழகனும் அர்ச்சுனன். இல்லாவிட்டால் அல்லி அவன் அடிமையாவாளா? பவளக்கொடி படருமா அவன்மீது! சுபத்திரை சுற்றித் திரிவாளா அவனை! அந்த எழில் மன்னனுக்கு என்னுடையவரை ஒப்பிடுகிறார்களே; அவர் எதிரே நிற்பதற்கு நான் ஏற்றவள்தானா? அவருடைய தகுதிக்கும் என்னுடைய தகுதிக்கும் ஏணிவைத்தாலும் எட்டாதே! எட்டாத பழம்—கிட்டாத பொருளன்றே எனக்குக் கிடைத்துவிட்டது. அம்புலியைப் பிடித்துக் கொடம்மா என்று சிறுவயதில் அடம் செய்வேன். அம்மா, முயன்று முயன்று இப்போதுதான் அந்த அம்புலியைப் பிடித்துக் கொடுத்ததுபோலிருக்கிறது எனக்கு!
பருவமென்னும் பட்டு விரித்து, நினைவுகள் என்னும் மல்லிகை பரப்பிய இதய மஞ்சத்திலே என்னுடையவரை மடியிலே படுக்கவைத்து அழகு பார்க்கும் அந்த எதிர்காலம்......
“விண் பெற்ற வெள்ளித்தட்டே!” என அவர் அழைக்க... “இந்த மண் பெற்ற பேறே!” என நான் அவரை மடக்க...... தோல்வியால் துவண்டு அவர் என் தோளில் சாய... அடடா அந்த எதிர்காலம்......
கண்பொத்தி விளையாடும் என் கை பற்றி அவர் இழுக்க...நான் தடுக்க... “தடையில் தான் வளருதடி காதல் இன்பம்! தந்திடுவாய் இதழ்த் தேன்” என்று—தருவதற்கு முன் எடுத்துக்கொள்வார்! எதிர்பார்த்தேன் நடந்ததென்று எண்ணிக்கொள்வேன்—அந்த நன்னாள் வருவதற்கு ஏன்தான் தாமதமோ?
உல்லாசப் படகு—அதில் ஓய்யார கீதம்—கதைகளில் வரும் காதலர்கள்—காட்சிகளில் தோற்றுகின்ற இன்பபுரி வெண்புருக்கள்—அவர்கள் எல்லாம் தோற்றோட நேரிட்டாலும் ஆச்சரியமில்லை. காதல் மகா காவியத்தின் சாகாத பாத்திரங்கள் எனைக் கண்டு நாணவேண்டும். இல்லறத்து விளக்கு இவளன்றோ—இதுவன்றோ நல்ல குடும்பம்—பல கலைக் கழகமெனும் சொல்லுக்கு எடுத்துக்காட்டு என ஊர் முழுவதும் புகழவேண்டும்...
சிந்தாமணி உடலை நீரிலும்—உள்ளத்தை நினைவுகளிலும் மூழ்கடித்துக்கொண்டிருந்தாள்.
இன்ப நினைவுகள் அவள் நெஞ்சத்தைத் தாக்கும் போது—நீரலைகள் அவள் மேனியில் படுவதும் அவளுக்குக் கூச்சத்தைத் தந்தது.
அவள் கற்பனை செய்துகொண்டிருந்த மணவாளனின் மென்மை மிகுந்த கரங்களோடு—அலைகளின் அணைப்பை ஒப்பிட்டுப் பார்த்துத் தனக்குத்தானே வெட்கப்பட்டுக் கொண்டாள்.
ரோஜாவின் மென்மை பரவியிருக்கும் அவள் உடலில்—மிருதுவான பாதங்களில்—தடாகத்து மீன் குஞ்சுகள் கடித்துக் கடித்து ஒரு புதிய பரபரப்பை உண்டுபண்ணின. உடலைக் கடித்து அன்புத் தொல்லை கொடுக்கும் அந்தமீன் குஞ்சுகளோடு போட்டி போட்டுக்கொண்டு அவளது தோழிகள் அவளது உள்ளத்தை உதடுகளால் கடித்து உபத்திரவம் செய்ய ஆரம்பித்தனர். பல் படாத கடிதான்! ஆயினும் பருவக்கொடியன்றோ—
ஆயிரமாயிரம் உணர்ச்சிகளால் தாக்கப்பட்டு மெய் மறந்து போனாள். ஆண்டாளும், ராதாவும் மற்ற தோழிகளும் சிந்தாமணியின் எதிர்கால எழிலோவியத்தைக் கேலித் தூரிகை கொண்டு எழுதிக் காட்டினர். மதுவை வாயிலே ஊற்றும்போது கசப்பாகத்தானிருக்கிறது. சிறிது நேரத்திற்குப் பிறகு அது தரும் இன்ப மயக்கத்தை எண்ணும்<!-- source join: scan 16 ends எண்ணும்; scan 17 begins போது— --> போது—ஆரம்பத்தில் ஏற்படும் கசப்பை அடியோடு வெறுத்துவிடுவதில்லை. வெறும் முகச் சுளிப்போடு நின்று விடுகிறார்கள். அந்த முகச் சுளிப்புதான் தோழிகள் கிண்டல் செய்யும்போது சிந்தாமணியின் முகத்திலும் ஏற்பட்டது. இன்னும் சிறிது அவரைப் பற்றிப் பேசமாட்டார்களா? என்ற ஆவலே அவளுக்கு அதிகமாயிற்று. கசப்பைச் சமாளித்துக்கொண்டே ‘இன்னும் இன்னும்’ என்று கள் பருகுகிறவனுக்கு ஏற்ற உதாரணமானாள் அவள்.
“சிந்தாமணியின் புருஷன் பெயர் என்ன தெரியுமாடி?” ஒருத்தி!
“பில்வமங்களா?” இன்னொருத்தி!
“போடி...வேலையில்ல உனக்கு?” இது சிந்தாமணி.
“ஏண்டியம்மா சிந்தாமணி, உன் மாமியாருக்கு சரியாகக் கண் தெரியாதாமே, அரைப் பார்வைதானுமே... தட்டுத் தடுமாறித்தான் நடக்கமுடியுமாமே!”
“ரொம்ப நல்லதாப் போச்சு! சிந்தாமணி பாடு கொண்டாட்டந்தான்! அல்லும் பகலும் அத்தாளோடு அந்தப்புரத்தில் இருந்துகொண்டே ‘அடுப்பங்கரையில் இருந்தேன் அத்தை’ என்று ஏமாற்றலாம்.
“சமையல் வேலையை யாரடி மேற்பார்வையிடுவது!”
“அப்படியானால், அத்தானை அடுப்பங்கரையிலேயே உட்காரவைத்துக்கொண்டு, அத்தை கேட்கும்போது, ‘அவர் வெளியே போயிருக்கிறார்’ என்று பொய் சொல்லிவிட்டுப் போகிறாள்!”
“ஏண்டி ஆண்டாள்! சிந்தாமணி கல்யாணத்துக்கு என்னடி பரிசு கொடுப்பது?”
“நான் ஒரு பாலாடை—கெண்டி தரப்போகிறேன்! ராதா நீ?”
“நான் தொட்டில்!”
“சுசீலா! நீ?”
“நான் ஓடாத கடிகாரம் ஒன்று தரப்போகிறேன். அப்போதுதான் கால வரையறையின்றிக் காதல் பேசி முடிந்துகொண்டேயிருக்கும்.”
“அடி சரோ! நீ என்னடி?”
“நான் கம்பராமாயணம் எளிய உரைநூல் ஒன்று தருவதாக இருக்கிறேன். கற்காததைக் கற்றுக்கொள்ள!”
“காந்தா! உன் பரிசு என்ன?”
“‘டேப் ரிகார்டர்’ என்று ஒன்று வந்திருக்கிறதே; அது!
இரவிலே பேசுவதைப் பதிவு செய்து......காலையிலே கேட்டு...ஒருவரைப் பார்த்து ஒருவர் வெட்கப்பட நல்ல சாதனம்!”
“சரிதான்—காந்தா அனுபவத்தைக் கக்குகிறாள்—கல்யாணமானவள் அல்லவா?......சரி......ஜெயா! உன்னுடைய பரிசு எது?”
“என்னுடைய பரிசா! சிந்தாமணியின் கன்னங்களுக்கு இரண்டு இரும்புக் கவசங்கள்!”
“போதும்—போதும் நிறுத்துங்கள், உங்கள் பரிசும் பவிஷும்!” என்று தண்ணீரை அள்ளி அவர்கள்மீது இறைத்தாள் சிந்தாமணி.
“ஏண்டியம்மா! இன்றைக்குப் பெண் பார்க்க யார் யார் வருகிறார்கள்?”...என்றாள் ஆண்டாள்.
“எனக்குத் தெரியாது—தாயார் வருவார்கள்!”
“யாருடைய தாயார்?”
“அவருடைய தாயார்தான்!”
“எவருடைய தாயார்?”
சிந்தாமணியின் கன்னம் இப்போது அசல் செந்தாமரையாகிற்று! பதில் சொல்லாமல் தண்ணீரில் தலையை அமுக்கி மூழ்க ஆரம்பித்தாள்.
“எப்படியடி திடீரென்று பெண் வீடு பார்க்க வருகிறார்கள்?”
“நாள் பார்த்து தந்தி கொடுப்பதாகச் சொல்லியிருந்தார்களாம். நேற்று தந்தி வந்ததாம்; இன்று வருவதாக!”
“ஆமாம் ஆமாம்; இன்னைக்கு வெள்ளிக்கிழமை—நல்ல நாள்! மாப்பிள்ளை வீடும் பெரிய வைதீகந்தான் போலிருக்கு!”
“சம்பந்திகள் இரண்டு பேருமே...வைதீகப் பழங்கள்! மாப்பிள்ளை எப்படியோ?”
“மாப்பிள்ளையும் பெண் பார்க்க வருவாராடி சிந்தாமணி?”
பேசாமல் குளித்துக்கொண்டிருந்த சிந்தாமணியின் வாயைக் கிளறினார்கள்.
“வந்தாலும் வரலாம்” என்று இதழைத்தாள் அந்தப் பருவ மயில்.
அதைக் கண்டு அனைவருமே கொல்லென நகைப்புக் கொட்டினர்.
அந்த சிரிப்பொலியை ரசித்தவாறே குளத்தின் அடுத்த படித்துறைப் பக்கம் ஒரு கம்பீரமான மனிதன் பல் துலக்கியவாறு வந்து நின்றான்.
சிரிப்பொலி திடீரென அடங்கியது. ஒருவருக்கொருவர் மெதுவாகப் பேசிக்கொண்டார்கள்.
“அடி அடி...அதோ பார் டைகர்! டைகர்!” என்று ஒருவருக்கொருவர் அச்சத்தோடு சுட்டிக்காட்டினர்.
“வந்துவிட்டானா......மண்டுகம்?” என்று கேலியும் ஆத்திரமும் கலந்த குரலில் கேட்டாள் சிந்தாமணி.
“நான் அப்பொழுதே சொன்னேன்—சீக்கிரம் வீட்டுக்குப் போகலாமென்று! இந்தப் பாவிப்பயல் பார்வையிலே படாமல் போகலாம்னு கேட்டீங்களா?” என்று அங்கலாய்த்தாள் காந்தா!
அடுத்த படித்துறையிலே நின்றவாறு அவர்களையே கண்களால் விழுங்கிக்கொண்டிருந்தான் அந்த மனிதன். டைகர் என்று அவர்கள் அழைத்ததற்கு ஏற்ப தோற்றமுடையவன்தான் அவன். அவனது முகத்திலே மிருக சுபாவத்தின் சாயல் செதுக்கப்பட்டிருந்தது. அவனது பெரிய விழிகளிலே பயங்கரம் பளிச்சிட்டது. அவன் பல் துலக்கும் அந்தத் தோரணை மூலமாகவே உள்ளத்தில் கொழுந்துவிட்டு உடலைத் தகித்துக்கொண்டிருக்கும் காமத் தீக்கு ஆளாகித் தவிக்கிறான் என்ற நிலை புரிந்தது.
சிந்தாமணியும் தோழிகளும் அவசர அவசரமாக குளத்தை விட்டுக் கரையேற முயன்றனர். அவர்கள் பக்கம் திரும்பி நின்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் விலங்குப் பார்வை வீசிக்கொண்டிருந்த அவன் தோளிலே இன்னொருவன் கைவைத்து—“என்ன டைகர்! உலகத்தையே மறந்து விட்டாய் போலிருக்கே?” என்று கூச்சலிட்டான். திடுக்கிட்ட டைகர், “அடேடே! வேம்புவா? வாப்பா—வா!...பார்த்தாயா? ...தேவலோகமே இந்தத் திருக்குளத்தில் இறக்குமதியானதுபோல் இருக்கிறது!” என்றான் அந்தப் பெண்களின் காதில் விழும்படியாக!
“ஓகோ—அதுதான் தேவேந்திரன் இந்தப் பக்கம் விஜயமோ?” என்றான் வேம்பு.
“டேய் வேம்பு—தெரியுமா சேதி?......சிந்தாமணிக்கு கல்யாணம் நிச்சயமாயிட்டுது!”
“அடே—அப்படியா? எப்ப?”
“இன்னம் தேதி குறிக்கிலே...இன்னைக்கு பெண்வீடு பார்க்க வர்றாங்க!”
“அப்ப...உன் கதை என்ன ஆச்சு?”
“என் கதை இனிமேல்தான் தொடரப்போகிறது. நேற்று சிவநேசனிடம் சென்று கடைசியாகப் பெண் கேட்டேன். எனக்கும் அந்தக் கிழட்டுப் பயலுக்குமுள்ள பழைய சொந்தபந்தம் எல்லாம் சொல்லி, எனக்குத்தான் சிந்தாமணி உரியவள் என்று கூறினேன், வாதாடினேன் வக்கீல்போல்!”
“ஜட்ஜ்மெண்ட் என்ன ஆச்சு?”
“சாதகமில்ல! கிழட்டுக் குரங்கு மறுத்துவிட்டது கிளியைத் தருவதற்கு!”
“கிளி என்ன சொல்லுகிறது?”
“சொன்னதைச் சொல்லுகிறது கிளிப்பிள்ளை! கிழவன்—கிழவி இருவரும் என்ன சொல்கிறார்களோ; அதையே சொல்கிறது!”
“பிறகு...என்ன செய்வதாக உத்தேசம்?”
“அவள் கல்யாணம் நடக்க முடியாமல் செய்வேன்! பெண்வீடு பார்க்க வருகிறார்களாம் பெண் வீடு!......ஒழுங்காகவா வந்துசேரப் போகிறார்கள்?”
“என்ன டைகர் சொல்றே?”
“இந்த டைகர் சுயாச்சாரந்தான் உனக்குத் தெரியுமே......சிந்தாமணி எனக்குச் சொந்தமாக என்னென்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமோ; அவ்வளவும் எடுக்கப்போகிறேன்.”
“அதான் சரி—சபாஷ் டைகர்! வேறு என்ன? இந்த ஊரிலே நீ ஒரு பெரிய புள்ளி! மைனருக்கு மைனர்—பெரியவங்களுக்குப் பெரியவன்! உன்னைக் கண்டா ஊரே பயப்படுது...இந்த உதவாக்கரை சிவநேசன் மாத்திரம் உன்னை மதிக்கலேன்னு......அதை விட்டுக்கூடாது!”
“வேம்பு!...பெங்களூரிலேயிருந்து வர்ற மாப்பிள்ளை வீட்டு மோட்டாரு...ரோட்டுமேல்தானே வரணும்?”
“சந்தேகமில்லாம!”
“மோட்டாரு—முழுசா வந்துசேராது பாரு!”
“அடி சக்கை! அது பிரமாதம்!”
“முதல்லே வரும்போதே...சகுனத்தடை...மாப்பிள்ளை வீட்டுக்காரன் சரியா வாங்கிக்கிட்டு போய்ச்சேரப் போறான்”
“டைகர்! ஆள் எல்லாம் ரெடியா?”
“எல்லாம் தயார்—உன்னைத்தான் தேடிக்கிட்டு இருந்தேன்—நல்லவேளை; நீயும் ஊர்லேயிருந்து வந்துட்டே!”
“லேடி டாக்டர் வந்தாச்சுல்லே?”
“வந்தாச்சே!......அவங்கதானே உன்னைக் கூப்பிட்டுக்கிட்டு வரச்சொன்னாங்க...பத்து நாளா உன்னைப் பார்க்காம ஏக்கம் பிடிச்சு கிடக்கிறுங்க அம்மா!”
“அப்படியா?....”
என்று இனித்துக்கொண்டே டைகர் குளத்தில் இறங்கி முகம் கழுவிக்கொண்டான்! அதற்குள் சிந்தாமணியும் மற்றவர்களும் கரையேறத் துவங்கினர், ஒருவர் பின் ஒருவராக! கடைசியாக சிந்தாமணி, ஈரப் புடவையுடனும்... அதனால் விளைந்த புதிய அழகுடனும்—இடையில் குடமெடுத்து படிகளில் ஏறினாள். அப்போது டைகர் வீசியெறிந்த சிறிய கல் ஒன்று அவள் தோள்பட்டையிலே வந்து விழுந்தது!
சிந்தாமணி திடுக்கிட்டுத் திரும்பினாள். திடீரென ஏற்பட்ட அதிர்ச்சியில் கால் தவறியது. படியில் படிந்திருந்த பாசியின்மீது அவள் பாதம் பதிந்தது. சிந்தாமணி அதைச் சமாளிக்க முடியவில்லை, வழுக்கிவிழுந்தாள். ஐந்தாறு படிகளில் உருண்டு, தண்ணீரில் போய் குப்புற விழுந்தாள். அதற்குள் தோழிகள் அள்ளிக்கொண்டு ஓடிப்போய் சிந்தாமணியைத் தூக்கினர். டைகரும் வேம்புவும் இருந்த இடம் தெரியவில்லை; மறைந்துவிட்டார்கள். சிந்தாமணிக்கு நெஞ்சிலே மிகப் பலமான அடி பட்டுவிட்டது, அவள் பிரக்ஞை இழந்தாள். பேச்சில்லை, மூச்சு மட்டும் இழைந்தது. தோழிகள் அவளைத் தூக்கிக்கொண்டு வீடு நோக்கி நடந்தனர். சிவநேசரும் சிவகாமியும் அலறியடித்துக்கொண்டு அழுது புலம்பினர். அவசர அவசரமாக அவளை டாக்டர் வீட்டுக்குக் கொண்டுபோனால்தான் பிழைப்பாள் என்றனர் தெருவினர். சிவகாமி, “அய்யோ—நல்ல நாளும் அதுவுமா—பெண்வீடு பார்க்க வர்ற வேளையிலே—இப்படி ஆச்சே!” என்று கதறினாள். “அழுவதற்கு நேரமா இது?” என அதட்டினார் ஊரார்.
சிந்தாமணி, லேடி டாக்டர் ஆனந்தியின் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டாள். அவள் பிழைப்பாளா என்ற சந்தேகம் பலமாக எழுந்துவிட்டது சிவநேசருக்கும்—சிவகாமிக்கும்!
கலைஞர் மு. கருணாநிதி · வெள்ளிக்கிழமை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்