அத்தியாயம் 1 · 1 / 23
அத்தியாயம் 1
Chapter 1
மூல ஸ்கேன் 4–12
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
1
“விடிந்தால் வெள்ளிக்கிழமை. எனக்கு மிக விசேஷமான நாள் என் வாழ்வில் எத்தனையோ வெள்ளிக்கிழமைகள் வந்து போய்விட்டன; இன்னும் வர இருக்கின்றன. ஆனாலும் இந்த வெள்ளிக்கிழமைக்கு மட்டும் இவ்வளவு பெரிய சிறப்பு எங்கிருந்து வந்தது! நினைக்க நினைக்க நெஞ்சு இனிக்கிறது. வியப்பு பெருகிவிடுகிறது. இளம் வயதிலே-பள்ளிப் பருவத்தில் என் அன்னைப் பெற்ற கிழமை ஞாயிற்றுக்கிழமை யென்றுதான். இப்போதோ-ஆயிரம் ஞாயிற்றுக்கிழமைகள் வந்தாலும் நான் வரப்போகிற ஒரு வெள்ளிக்கிழமைக்கு ஈடாகுமா-என்ற கேள்வி என் இருதயத்திலே கொடிபோட்டுக்கொண்டு குதிரை மீது செல்லும் மாவீரனைப் போல கம்பீரமாக எழுகிறதே; அது எப்படி?
இன்று மாலையிலே தெருவிலே பிச்சை எடுத்துக் கொண்டு போயிற்று ஒரு பரதேசி கும்பல். அதிலே ஒருவன், “குதிரை பிறந்தது வெள்ளிக்கிழமை ராஜா தேசிங்கு” என்று பாடிக்கொண்டே போனான். நம் ராஜா தேசிங்கு பெரிய எழுத்துப் புத்தகத்தில் அந்தப் பாட்டை எத்தனையோ முறை படித்திருக்கிறேன்; கேட்டுமிருக்கிறேன். அப்போதெல்லாம் இல்லாத உணர்ச்சி இன்று மட்டும் ஏற்படுவானேன்! ராஜா தேசிங்கின் குதிரை வெள்ளிக்கிழமை பிறந்தால் என்ன, சனிக்கிழமை பிறந்தால் என்ன: அல்லது பிறக்காமலே போனால்தான் என்ன என்று அலட்சியச் சிரிப்பு கொட்டிய என் உள்ளத்திலே இப்போது மட்டும் அந்த கிராமியப் பாட்டு ஆழப்பதிந்து ஏதோ<!-- source join: scan 4 ends ஏதோ; scan 5 begins இன்பக்கனவுகளோ --> இன்பக்கனவுகளோ உற்பத்தி செய்வதின் மர்மந்தான் என்ன? அடுத்தத் தெருவில் இருக்கும் என் தோழி கிளியோ-அவளது கிறிஸ்தவ மதத்திற்கு ஆண்டிலே ஒரு வெள்ளிக்கிழமை மகத்துவம் பொருந்திய வெள்ளிக்கிழமை யென்றும்-அன்று எசுநாதருக்கு ஏற்றநாளென்றும் கூறி சர்ச்சுக்குப் போவாள். அப்போதெல்லாம் வெள்ளிக்கிழமைக்கு என் நெஞ்சத்தில் இவ்வளவு பெரிய முக்கியத்துவம் ஏற்பட்டதேயில்லை.
‘வெள்ளிக்கிழமையும் அதுவுமா-வீடு வாசல் சுத்தம் செய்யாமல்-சாணமிட்டு மெழுகாமல்-கோலமிட்டு அழகூட்டாமல்-குடும்பப் பெண் இப்படிச் சோம்பேறித்தனமாக இருக்கலாமா?’ என்று பல வீடுகளில் மாமியார்கள் போராட்டத்திற்கு வஜ்ராயுதம் செய்வதை நான் கண்டிருக்கிறேன். வீட்டுக் குலதெய்வத்திற்கு வெள்ளிக்கிழமை மாலையிலே நல்ல விளக்கு ஏற்றிவைத்து படையல் போடுவதையும் பார்த்திருக்கிறேன்.
பெண்களுக்கு-மாங்கல்யம்-மஞ்சள்-குங்குமம் எவ்வளவு புனிதமானதோ, அவ்வளவு புனிதமானது வெள்ளிக்கிழமையும் என்று எங்கள் தெருவில் நடந்த விகடக் கச்சேரியொன்றில் பாகவதர் குறிப்பிட்டு தெருப்பெண்களின் ஏகோபித்த பாராட்டுதலைப் பெற்றதும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. கிழமைகளின் பெயரை யாராவது அடுக்கிக்கொண்டு போகும்போது எனக்கு சிரிப்பு பொங்கிக்கொண்டுவரும்.
திங்கட்கிழமை-சோமவாரம்! சோமவார விரதத்திற்கு திவ்யமான நாளாம்! ‘செவ்வாயோ வெறுவாயோ’ என்பார்கள்! பொன் அகப்பட்டாலும் புதன் அகப்படாதாம்-அவ்வளவு அருமையானதாம் அந்தக் கிழமை. செவ்வாய்க்கிழமை இரவு தூங்க ஆரம்பித்து வியாழக்கிழமை காலையில் எழுந்திருக்கிறேனே; அவனுக்குத்தான் புதன் அகப்படாது என்று நான் கிண்டல் கூட செய்வேன். இப்படியெல்லாம் கிழமைகளைப்பற்றி கிழங்கள் வர்ணிக்கும்போது அவைகளே<!-- source join: scan 5 ends அவைகளே; scan 6 begins கேலிக்குரியதாக --> கேலிக்குரியதாக ஆக்கிய என்னை இந்த வெள்ளிக்கிழமை-அதுவும் நாளைக் காலையில் வர இருக்கிற வெள்ளிக்கிழமை-இப்படிக் கவர்ந்து விடுவானேன்!
உலக உத்தமர் மகாத்மா காந்தி கொல்லப்பட்ட நாள் கூட வெள்ளிக்கிழமைதான். உலக மக்களின் கண்ணீரால் குளிப்பாட்டப்பட்டு-பெருமூச்சுக்களால் அலைக்கழிக்கப்பட்டு-மறைந்துபோன வெள்ளிக்கிழமை! அந்த வெள்ளிக்கிழமை, காந்தியின் சவத்தை ஏந்திய மடியாக மட்டுமின்றி, என்னைக் களிப்பிலாழ்த்தும் மஞ்சளாகவும் மாறிடும் சக்தி வாய்ந்தது என்பதை இப்போதுதான் உணருகிறேன். உணருகிறேனா... அல்லது ஏதாவது உளறுகிறேனா? சே! சே! வாய்விட்டுப் பேசிவிட்டோம் போலிருக்கிறதே-யார் காதிலாவது விழப்போகிறது! விழுந்தால் காலையில் ஊர் முழுவதும் தப்பட்டமடித்து நம் தலையைக் குனியவைத்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள்!”
சிந்தாமணி, படுக்கையில் புரண்டுகொண்டேயிருந்தாள். சிந்தனை அலைகள் அவள் உள்ளத்திலே புரண்டு புரண்டு எழுந்தன.
தலையைத் தூக்கி சுற்று முற்றும் பார்த்துக்கொண்டாள், யாராவது விழித்துக்கொண்டிருக்கப் போகிறார்கள் என்ற அச்சம் அவளை அப்படிச் செய்யவைத்தது.
அருகிலிருந்த விளக்கைத் தூண்டிவிட்டு சுவரில் தொங்கிக்கொண்டிருந்த கடிகாரத்தை நோக்கினாள். மணி ஐந்து! அதேசமயத்தில் அவள் வீட்டுத் தெருக்கோடியில் உள்ள கடிகார மண்டபத்திலேயிருந்து ஐந்து பெரிய ஒலிகள் எழுந்து, பொழுது விரைவில் விடியப்போகிறது என்பதை அவளுக்கு அறிவித்தன. மணிக்கூண்டு கடிகாரக் கணக்குப்படி வழக்கமாகக் கூவிக்கொண்டிருக்கும் சேவலும் தனது ‘கொக்கரக்கோ’ கீதத்தை ஆரம்பித்து சூரியனுக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடிற்று! சிந்தாமணிக்கு அப்போதுதான் ஆச்சரியம் அளவுகடந்து போயிற்று; இரவு முழுதும் தூங்காமலிருந்திருக்கிறோமே என்று!
சேவலின் முழக்கத்தை அவள் எத்தனையோ நாள் கேட்டிருக்கிறாள். அத்தனை நாளும் அதைப்பற்றி அவள் சிந்தனை செய்தது இல்லைத்தான்! சேவல் என்பது ஆண்-பெட்டை என்பது பெண். இதையெல்லாம் இப்பொழுது ஏன் அவள் நினைத்து தனக்குத்தானே புன்னகை புரிகிறாள்! சேவல் கூவுகிறது, தன் வாழ்க்கையிலும் சேவல் கூவும் கட்டம் வந்து விட்டதா அவள் எண்ணுகிறாளா? அந்த இன்ப நினைவுகளால் தனக்குத்தானே வெட்கப்பட்டுக்கொள்கிறாளா? மணிக்கூண்டு கடிகாரம்-பெரிய கோயில் மணி, இவைகள் எல்லாம் விடியற்காலையில் எப்போதும்போல் தங்கள் கடமையைச் செய்துகொண்டு தானிருக்கின்றன. மணிக்கூண்டு யந்திரத்தில் பழுது ஏற்பட்டாலன்றி, ஆலயத்து மணிக்காரன் தூங்கிவிட்டாலன்றி அந்த வைகறை ஒலி நிற்பதேயில்லை. ஆனால் சிந்தாமணியின் இருதயத்திலே மட்டும் என்றுமில்லாத யாழ் ஒலி முழங்குகிறது! இந்த ஒலி வழக்கமாக ஒலிக்கும் கடிகார ஒலியோ-ஆலய மணி யொலியோ அல்ல! அவை களினும் மேம்பட்ட ஒலி!
வைகறையில் சங்கு ஊதும் தாதன் தெருவிலே போகிறான். அமைதிப் படுக்கையிலே சுருண்டு முடங்கிக்கிடந்த இரவு, அசதியை உதறிவிட்டு சோம்பல் முறித்தபடி எழுந்து உட்காருகிறது போலும்-அந்த ஊமைச் சத்தந்தான் தாதனின் சங்கு மூலம் வெளிப்படுகிறதோ என்னவோ? தெள்! தெள்!! தெள்!!! இந்தச் சங்கு முழக்கம் சிந்தாமணியை எங்கேயோ ஒரு புதிய உலகத்திற்கு அழைப்பது போலவே அமைந்துவிட்டது. “ஊதுகிற சங்கை ஊதிவைத்தால் விடிகிற பொழுது விடியட்டுமே!” என்று பழமொழி சொல்வார்கள். சேவல் கூவுவதாலோ-தாதனின் சங்காலோ-ஆலய மணியாலோ-பொழுது விடிவதில்லை என்பது அவளுக்குந் தெரியும். ஆனால், அன்று மட்டும் அவர்களால்தான் பொழுது விடியப்போகிறது என எண்ணி, பொழுது விடியக் காரணமாக இருக்கும் சேவல்-தாதன்-ஆலயத்து மணிகாரன்-மணிக்கூண்டு கடிகாரத்தை அவள் வாழ்த்திக்கொண்டேயிருந்தாள்.
அவர்கள் எல்லாம் சேர்ந்துதான் மலையடிவாரத்திலே-கடலுக்கடியிலோ தூங்கிக்கொண்டிருக்கும் கதிரவன் எழுப்பிவிடுகிறார்கள் என்று நினைத்தாள். கதிரவன் களைத்துத் தூங்கிவிட்டால்; வெள்ளிக்கிழமை வருவதற்கு நேரமாகிவிடும் என்று அவள் பயந்தாள். தாதன் போனதும்-‘நல்ல காலம் பிறக்குது-நல்ல காலம் பிறக்குது!’ என்ற பரம்பரைப் பல்லவியுடன் பவனிவரும் குடுகுடுப்பைக்காரனின் கூச்சல்! அது அவளுக்கு கூச்சலாகவா இருந்தது!
குடுகுடுப்பைக்காரர்கள் இரவு நேரங்களில் மயானத்தில் படுத்திருப்பார்களாம். அப்போது அவர்கள் கனவில் இஷ்ட தேவதைகள் தரிசனமாகி, அந்த ஊரில் யார் யார் வீட்டுக்கு நல்ல காலம் வரப்போகிறது. எங்கெங்கே ‘அய் யோன்னு’ ஒருத்தன் போகப் போறான் என்ற செய்திகளெல்லாம் பட்டியல் போட்டுத் தந்து விடுவார்களாம். அந்தப் பட்டியலில் குடுகுடுப்பைக்காரன் பொழுது விடிவதற்குள் ஊரில் சொல்லிவிடவேண்டுமாம். அதற்காகவே விடியற்காலை ஒருமுறை வந்து இஷ்ட தேவதை சொன்னதாக ஏதேதோ சொல்லிவிட்டுப் போவான். பின்னர்-பொழுது விடிந்தபிறகு மறுபடியும் ஒருமுறை வந்து பழைய துணிக்காக இரவு பாடிய பல்லவியைக் கொஞ்சம் புதுப்பித்து மெருகேற்றிப் பாடுவான். இது அவ்வளவும் அவன் பிழைப்புக்காக ஏற்படுத்திக்கொண்ட பொய்யுரைகள் என்பதை சிந்தாமணி நன்கு அறிவாள். அவள் வீட்டிலே இது வரை குடுகுடுப்பைக்காரனுக்கு ஒரு கிழிந்த பழைய துணியும் போட்டது கிடையாது. இப்போது மட்டும் அவனுக்கு ஒரு புதிய துணி உடனே கொடுக்கவேண்டும் போலிருந்தது அவளுக்கு! “நல்ல காலம் பிறக்குது!” என்று அவன் சொல்கிறானே! என்ன பைத்தியக்கார நினைவு!
“குடு குடு குடு!” அவன் கையிலேயுள்ள குடுகுடுப்பை-குழந்தைகளைப் பூரிக்கவைக்கும் கிலுகிலுப்பை போல புதிய சக்தி பெற்றதோடு--அவளையும் குழந்தைபோல ஆக்கிவிட்டது. சிந்தாமணி படுக்கையை விட்டு எழுந்து பலகணி வழியே வீதியை நோக்கினாள். கிழக்கு வானம் வெளுக்கத்<!-- source join: scan 8 ends கிழக்கு வானம் வெளுக்கத்; scan 9 begins துவங்கிவிட்டது. --> துவங்கிவிட்டது. சிந்தாமணியின் எதிர்காலத்தைப் பற்றிய புதிய அறிவிப்பா அது? அதோ, உழவர்கள் மாடுகளை ஒட்டிக்கொண்டு கலப்பைகளைச் சுமந்தவாறு கழனி நோக்கிப் புறப்பட்டுவிட்டார்கள்!
வயலுக்குச் சென்றதும் மாடுகளைக் கலப்பைகளில் பூட்டுவார்கள்! குடும்பத்தை கலப்பைக்கும் கணவன் மனைவியை அந்த மாடுகளுக்கும் ஒப்பிட்டுப் பேசுவார்களே; அப்போதெல்லாம் சிந்தாமணி வாய்விட்டுச் சிரித்து-கலப்பையிலே பூட்டுகிற மாடுகள் இரண்டும் காளைகளாயிற்றே, அப்படித்தான் குடும்பத்திலும் இரு ஆண்கள் வாழ்க்கை நடத்துகிறார்களா? எனக்கேட்டுக் கேலிசெய்வாள்! இப்போது அவள் கண் எதிரேதான் காளைகளும், கலப்பைகளும், கலப்பை சுமக்கும் உழவர்களும் தென்படுகிறார்கள். இப்போது அந்தப் பழைய கேலி-கிண்டல் எல்லாம் எங்கேயோ போய் ஒளிந்துகொண்டுவிட்டன. இல்லறத்தை நடத்த இருவரின் அன்பும் ஒத்துழைப்பும் தேவையென்பதை வலியுறுத்தவே அந்த உதாரணம் பெரியவர்களால் கையாளப்பட்டது என்று உண்மையை உளத்திற்கு எடுத்துச் சொல்ல அவள் தயாராக நின்றுகொண்டிருப்பது போலக் காணப்பட்டாள்.
இரவு—முல்லை மலர்கள் பூத்துக் குலுங்கிய வானச் சோலையில்—இப்போது தன்னந்தனியாக ஓர் ஒரு செம் பருத்திப் பூ மட்டும் காட்சியளித்தது! அதுவும் கிழக்குத் திசையில்!
இரவு முழுதும் எண்ணங்களால் குழப்பட்டு—தூங்காமல் தொல்லைப்பட்டு—அந்தத் தொல்லையிலும் ஒரு சுகம் கண்டு—புதியதோர் பாதையிலே அடியெடுத்துவைக்கும் ஆனந்தத்தோடு புறப்பட்ட அவளுக்கு—கிழக்கிலே காணப்பட்ட இளங்கதிர், அபாயம் அறிவிக்கும் ஒரு சிகப்பு விளக்குப் போலவும் தென்பட்டது! திடுக்கிட்டாள். பின் சமாளித்துக் கொண்டாள்.
இன்னும் சிறிது நேரத்தில் தோழிகள் வந்துவிடுவார்கள் நீராட அழைப்பதற்கு! தினந்தோறும் தோழிகள் வந்துகொண்டுதானிருக்கிறார்கள். கிராமத்திலும் சேராமல்—நகரத்திலும் சேராமல்—நடுநிலை வகிக்கிற வேதபுரத்துப் பெரியகுளம் காலை ஏழு மணிவரையிலே அந்தப் பகுதியிலேயிருக்கிற பெண்களுக்குத்தான் சொந்தம். பருவப் பெண்கள் அதிகாலையிலேயே கூட்டைவிட்டுப் புறப்படும் புறாக்கள் போல வீட்டை விட்டுப் புறப்பட்டு ஆண்கள் நடமாட்டம் ஆரம்பமாவதற்குள் தங்கள் கடமைகளை முடித்துக்கொண்டு வீட்டில் போய் அடைந்துவிடுவார்கள். அப்படிக் கிளம்பும் புறக்கூட்டத்தின் ஒரு பகுதியிலே சிந்தாமணி அங்கம் வகிக்கிறாள். அவளும் பருவக் கொடியன்றோ! அந்தக் கூட்டத்திலேயே காலையில் சிறிது தாமதமாகப் படுக்கையைவிட்டு எழுவது சிந்தாமணிதான்!
தோழிகள் வந்து தொல்லை கொடுத்து எழுப்பி அவளை நீராட அழைத்துச் செல்வார்கள்.
அதிலே ஒருத்தி திருப்பாவையை மனப்பாடம் பண்ணியவள்—அவள் பெயரும் ஆண்டாள்தான்! அவள் தினந்தோறும் ஒரு திருப்பாவை பாடி சிந்தாமணியை எழுப்புவாள்—
“உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண் செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய்! எழுந்திராய்! நாணாதாய்!”
எனப் பாடுவாள் இசையோடு! இன்னொருத்தி, “எல்லே! இளங்கிளியே இன்னம் உறங்குதியோ?” என்று கூச்சல் போடுவாள். இப்படியெல்லாம் கொட்டமடிக்கும் தோழிகள்—இப்போது வரப்போகிறார்கள். அவர்களுக்கு நேராக அவள் விழித்துக்கொண்டு இருந்தாள்—<!-- source join: scan 10 ends இருந்தாள்—; scan 11 begins the quoted question --> “இத்தனை நாள் இல்லாமல் இன்று மட்டும் எப்படியடி அதிகாலையில் விழித்துக்கொண்டாய்?” என்று கேட்பார்கள்—அதற்குப் பயந்துகொண்டு சிந்தாமணி தூங்குவது போலப் படுத்துக்கொண்டாள்.
வழக்கம்போல தோழிகள் வந்துவிட்டார்கள். சிந்தாமணி கண்களை இறுகமூடிக்கொண்டு அயர்ந்து தூங்குவது போலப் பாசாங்கு செய்துகொண்டிருந்தாள். ஆண்டாள் பாட ஆரம்பித்துவிட்டாள் திருப்பாவையை!
“தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத் தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!”
என்றபடி சிந்தாமணியின் அழகிய கருவிழிகளை மூடி இருக்கும் இமைக் கதவுகளைத் தன் விரல்களால் திறந்து விட்டாள் ஆண்டாள். நன்றாகத் தூங்கியவள்போல சிந்தாமணியும் கண்களைக் கசக்கிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தாள்.
“உம்! இப்போது......நாங்கள் உன்னைத் திருப்பாவை பாடி எழுப்புகிறோம், இன்னும் கொஞ்சநாள் போனால் அவரை எழுப்ப அவரது நண்பர்கள் திருப்பாவை பாடுவார்கள்!”
“யாரையடி! யாரை?” என்றபடி சிந்தாமணி வெட்கித் தலை குனிந்து கொண்டாள்.
“அவரைத்தான், அதுவும் எப்படி எழுப்புவார்கள் தெரியுமா? அடி ஆண்டாள்! அந்தத் திருப்பாவையைப் பாடிக்காட்டடி!” என்றாள் ராதா!
ஆண்டாள் திருப்பாவையைத் தொடங்கினாள்.
“குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பின்னைக் கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்!”
ஆண்டாள் பாடி முடிப்பதற்குள் சிந்தாமணிக்கு ஆத்திரமும் வெட்கமும் தாங்கமுடியவில்லை.
“ஆண்டாள்! இது என்ன விகாரமான பாட்டு! நிறுத்து! நிறுத்து!” என உத்தரவு போட்டாள் சிந்தாமணி.
“இது இந்த ஆண்டாளின் பாட்டில்லையம்மா; பெரியாழ்வாரின் திருப்புதல்வி ஆண்டாள் அம்மை, பெருமாளை நோக்கிப் பாடிய பக்திரசப் பாட்டாகும்பெண்ணே!” எனக்கூறிச் சிரித்தாள் ஆண்டாள். அந்தப் பருக்கூட்டமே நகை முழக்கம் செய்துகொண்டு புறப்பட்டது திருக்குளம் நோக்கி!
சிந்தாமணி, தனது சிறுத்த இடையில் செப்புக்குடம் தாங்கி நட்சத்திரங்களுக்கிடையே நிலவு போல நடை போட்டாள். தாமரையில்லாத அந்தத் தடாகத்திற்கு அவள் தாமரையானாள். தந்தமோ-தங்கமோ என மயங்கிடும் நிலையிலுள்ள அவளது அழகுமேனி முழுமையும் சுவைத்திடும் பாக்கியம் அவள் உடுத்தியிருக்கும் பச்சை வர்ணச் சேலைக்குக்கூட கிட்டுவதில்லை; அந்தப் பளிங்கு நீர்த் தடாகம் அந்தப் பெரும் பாக்கியத்தை நாள்தோறும் அதிகாலையில் பெற்று மகிழ்கிறது. தடாகத்து நீரை அள்ளி இறைத்து—ஆடிப்பாடி—அவளையுமறியாது எழுந்த உணர்ச்சிப் பிரவாகத்தோடு நீராடி நீந்தி விளையாடினாள், சிந்தாமணி.
அவள் எதிர்பார்த்த வெள்ளிக்கிழமையல்லவா வந்துவிட்டது—விரைவில் வீடு திரும்பவேண்டும்; அவர்கள் வந்தாலும் வந்துவிடுவார்கள்-அதற்குள் அலங்காரங்களோ முடித்துக்கொள்ள வேண்டும் என்ற அவசரம் வேறு அவளை நிலைதடுமாறச் செய்தது. அப்படி அவளுக்கு என்றுமில்லாத மகிழ்ச்சியைத் தரக்கூடிய அந்த நிகழ்ச்சி தான் என்ன?
கலைஞர் மு. கருணாநிதி · வெள்ளிக்கிழமை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்