அத்தியாயம் 23 · 23 / 23
அத்தியாயம் 23
Chapter 23
மூல ஸ்கேன் 172 after centered 23 – 179
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
23
அவசரத்தோடும் ஆவலோடும் உள்ளே வந்த தேவர் அங்கே சிந்தாமணி இல்லாதது கண்டு ஆச்சரியமடைந்தார். கனவிலே வந்ததுபோல் வந்து மறைந்துவிட்டாளே; யார் அவள்?—என்ற ஏக்கம் அவரைப் பிடித்துக்கொண்டது. ஆட்களை அனுப்பித் தேடச்சொன்னார். யார் கண்ணிலும் சிக்காமல் சிந்தாமணி தப்பித்துக்கொண்டாள். வேதபுரத்து வழியைத் தவிர வேறுவழி கிடையாது. அவள் அந்தப் பகுதியைவிட்டு வெளியேறுவதற்கு! ஊருக்குள்ளே போகாமல் வெளிப்புறங்களிலேயே திரிந்து கொண்டிருந்தால் இரவு வந்ததும் ஊரைக் கடந்து போய்விடலாம் என்ற யோசனையும் பிறந்தது அவளுக்கு!
வேதபுரத்து இடுகாட்டுப் பக்கம் போகவேண்டுமென்று ஒரு ஆசை அவளை உந்தித் தள்ளியது. அங்கு தான் அவளுடைய தாயாரின் பிணம் வரவேண்டும். ஊராரின் கண்களில் படாமல் ஒளிந்திருந்தாவது அந்தக் காட்சியைப் பார்க்கவேண்டுமென்று துடித்தாள். மனப் போராட்டத்திற்கு இடமேயில்லாமல் சுடுகாட்டுப் பக்கம் வந்துவிட்டாள். சுடுகாட்டைச் சுற்றியுள்ள புதர்கள் அவள் மறைந்துகொள்வதற்கு உதவிபுரிந்தன.
அப்போதுதான் கொலை செய்யப்பட்ட ஆனந்தியின் சவத்தை அடக்கம் செய்துவிட்டுப் போலீசாரும், வேலைக்கார வேம்பு முதலியவர்களும் போய்க்கொண்டிருந்தார்கள். சிந்தாமணியோ, புதரின் மறைவிலிருந்து, தன் தாயாரின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருந்தாள். அம்மாவை அடக்கம் செய்வதற்கு யாராவது அக்கறை எடுத்துக்கொண்டார்களோ; இல்லையோ—நாதியற்ற பிணமாகப் போய்விட்டார்களோ என்னவோ—என்றெல்லாம் எண்ணி எண்ணிக் கண்ணீர் உகுத்தாள் சிந்தாமணி ஒரு நாலைந்து பேர் சிவகாமியின் உடலைச் சுமந்துவந்து கொண்டிருந்ததைச் சிந்தாமணி பார்த்தாள். அந்த வேதனையிலும் அவளுக்குச் சிறிது ஆறுதல் இருந்தது. அம்மாவை அடக்கம் செய்கிற அளவுக்காவது சிலர் கருணை காட்டினார்களே; என்ற ஆறுதல்தான் அது!
தாயின் உடலிலே தீ பிடித்துக்கொண்டது சிறிது நேரத்திற்கெல்லாம் தாயின் உருவம் சாம்பலாகிவிடும். அய்யோ—அவளைப் பெற்று வளர்த்து சீராட்டிப் பாராட்டிய மாதா, மண்ணோடு மண்ணாகக் கலந்துகொண்டிருக்கிறாள். சுடலைக்கு வந்தவர்கள், தங்கள் கடமை முடிந்துவிட்ட திருப்தியுடன் அந்த இடத்தைவிட்டு அகன்றார்கள். சிந்தாமணி புதரின் மறைவிலேயிருந்து அன்னை எரிந்து கொண்டிருக்கும் இடம் நோக்கி ஓடிவந்தாள். தாய் தணலுக்கு இரையாகும் அந்தக் காட்சியைக் கண்ணீர் வடித்தவாறு பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் நெஞ்சிலே<!-- source continuation: scan 173 ends அவள் நெஞ்சிலே; scan 174 begins எழுந்த குமுறல்கள்!... --> எழுந்த குமுறல்கள்!... அப்பப்பா—விவரிக்கவொண்ண வேதனைச் சூழல்கள்!......சுடலையை விட்டுப் புறப்பட்டாள். அய்யோ; அவள் குடும்பம் எவ்வளவு சீக்கிரம் சிதைந்து விட்டது!......பக்தியின் எல்லை வரையிலே போனவர் அவளது அப்பா!...ஆண்டவனின் திருவடிகளையே நம்பி வாழ்ந்த அவளது அம்மா!...அந்த இருவரையும் ஆண்டவன் இவ்வளவு பாடுபடுத்திவிட்டாரே; என்ன குறை செய்தார்கள்—அவர்கள் ஆண்டவனுக்கு!
நாள் நட்சத்திரம் பார்க்காமல், வாசற்படிகூட தாண்டமாட்டார் சிவநேசர்—அவ்வளவு பெரிய சனாதனி! அவருடைய வீடு, இப்படி அல்லோலகல்லோலப்பட்டு விட்டது!...பெங்களூர் மாப்பிள்ளை சம்பந்தமாக முதன் முதல் கடிதம் எழுதுவதற்குக்கூட ஒரு நாள் முழுவதும் பஞ்சாங்கத்தைப் புரட்டி, நல்ல லக்னம் பார்த்தே கடிதம் எழுதினார். அப்படிப்பட்ட பக்தசிரோன்மணியை பகவான் பதைக்க விட்டு விட்டார்! அவர் குடும்பத்தையே பாழ்வன மாக்கிவிட்டார்!...மிச்சமிருக்கும் சிந்தாமணி, வேதபுரத்துக்குள்ளே நுழையாமல் வயற்புறங்களிலும், ஆற்றோரங்களிலும் அன்று பகல் முழுவதும் அலைந்துகொண்டே இருந்தாள்.
அலையும்போதுதான் அவள் காதில் மற்றொரு திடுக்கிடும் செய்தி விழுந்தது. ஆனந்தி கொலை சம்பந்தமாக அழகப்பனும் நயினு முகம்மதும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று சேதிதான் அது!....அவளால் அந்தச் செய்தியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அழகப்பனை எப்படியும் விடுவித்தாகவேண்டும் என்று முடிவுகட்டினாள்.
அவனே அவள் தன் கணவனாகவே கருதிக்கொண்டிருந்ததால் அந்தத் துடிப்பு அவள் நெஞ்சில் எழுந்தது. ஆனந்தி கொலைக்காக அழகப்பன் கைது என்றதும், அவள் நினைவு, பாலகங்காதரத் தேவர் வீட்டு நிகழ்ச்சியின் மீதே சென்றது. உண்மையான பாலகங்காதரத் தேவரை<!-- source continuation: scan 174 ends உண்மையான பாலகங்காதரத் தேவரை; scan 175 begins சிக்கவைக்கவேண்டுமென்றும் --> சிக்கவைக்கவேண்டுமென்றும், போலி பாலகங்காதரத் தேவர் யார் என்று கண்டுபிடிக்கவேண்டுமென்றும் தீர்மானித்துக்கொண்டாள்.
தீர்மானத்தின் படி அவள் வேலையைத் துவங்குவதற்கு இருளும் வந்து சேர்ந்தது. கால்வலியையும் பொருட்படுத்தாமல் நடந்து நடந்து, ‘டி. எஸ். பி.’ அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தாள். ‘டி. எஸ். பி.’ மிக அக்கறையோடு சிந்தாமணி தெரிவித்த விஷயங்களைக் கவனித்தார். சிந்தாமணி தன் கதை முழுவதையும் ‘டி. எஸ். பி.’யிடம் வர்ணித்தாள். அவருக்குச் சிந்தாமணியின் மீது ஆழ்ந்த அனுதாபம் ஏற்பட்டது.
போலீஸ் படையுடனும், சிந்தாமணியுடனும் ‘டி. எஸ். பி.’ புறப்பட்டு நேராக அய்யனார் சென்றார். அப்போது, பாலகங்காதரத் தேவர் வீட்டிலே பாரத காலட்சேபம் ஒரு பாகவதரால் அதிக விமரிசையாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. தேவர் ஒரு ஆடம்பரமான ஆசனத்தில் அமர்ந்து காலட்சேபம் கேட்டுக்கொண்டிருந்தார். ஊர்மக்களும் குழுமி இருந்தார்கள். போலீஸ் படை நல்ல சமயத்தில் ‘திபு திபு’ வென உள்ளே புகுந்தது. சிந்தாமணி போலீசாரிடம் தேவரும், இடும்பனும் இரத்தக் கறை படிந்த துணிகளையும், அரிவாளையும் புதைத்து வைத்த இடத்தைக் காட்டினாள். அந்த இடத்தைச் சோதித்ததில் இரத்தத் துணிகளும் அரிவாளும் அகப்பட்டன. அதே இடத்தில் தேவரும் இடும்பனும் கைது செய்யப்பட்டார்கள்!
போலி பாலகங்காதரத் தேவர் யார் என்று கண்டுபிடிக்கவேண்டுமே; அதற்காக சிந்தாமணியின் யோசனைப்படி போலீசார் சிந்தாமணியின் வீட்டில் பதுங்கியிருந்தார்கள். சிந்தாமணியிடம் பெங்களூரில் தெரிவித்திருந்தவாறு, போலி பாலகங்காதரத் தேவர் ஒரு வாடகை மோட்டாரில் வந்து இறங்கினர். போலீசார் அவரைச் சூழ்ந்து<!-- source continuation: scan 175 ends போலீசார் அவரைச் சூழ்ந்து; scan 176 begins கொண்டார்கள். --> கொண்டார்கள். ‘டி. எஸ். பி.’ அவரது வேடத்தைக் கலைத்தார். பாலகங்காதர் மறைந்துவிட்டார். அந்த இடத்திலே டைகர்தான் நின்றுகொண்டிருந்தான். அவன் வலையில் தன்னை சிக்கவைக்கும் கருத்துடனேதான் தனக்கு உதவி செய்திருக்கிறான் என்பதைச் சிந்தாமணி புரிந்து கொண்டாள். போலீசாருக்கு ஒரே மகிழ்ச்சி! தங்களை ஏமாற்றி ஓடிவிட்டவன் அகப்பட்டுக்கொண்டானே என்ற பூரிப்பு! அவர்கள் சிந்தாமணிக்கு நன்றி தெரிவித்து விட்டுப் பிறகு வந்து சந்திப்பதாகச் சொல்லி, டைகரை விலங்குமாட்டி இழுத்துக்கொண்டு புறப்பட்டார்கள்.
மறுநாள் காலையில் நயினு முகம்மதும், அழகப்பனும் விடுதலை செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. வேலைக்காரன் வேம்புவிடம் விவரம் கேட்டார்கள். அவன், “எனக்கு இந்தக் கொலையைப்பற்றி எதுவும் தெரியாது. வெளியில் எங்கேயோ போய்விட்டு, மருத்துவ மனைக்குத் திரும்பும்போது யாரோ ஒருவன் மருத்துவமனையிலிருந்து ஓடிவந்து என்னைத் தெரிந்தவன்போல் “டே வேம்பு! ஆனந்தியை நயினு முகம்மது கொலை செய்து விட்டான்! இதோ, போலீசை அழைத்துவருகிறேன்” — என்று ஓடினான். போனவன் திரும்பவில்லை. அதற்குள் போலீஸ் வேன் ஒன்று இந்தப் பக்கம் போகவே அவர்களை நிறுத்தி அழைத்துக்கொண்டு மேலே வந்தேன். எனக்கு அப்போது அவ்வளவுதான் தெரியும்!” என்றும் விளக்கினன்.
“ஆனந்தியைப் பாலகங்காதரத் தேவர் கொலைசெய்ய வேண்டிய அவசியமென்ன?” என்று கேட்டான் அழகப்பன்.
அதற்கு வேம்பு, “சில நாட்களாகவே தேவர், ஆனந்தியை அவரது பங்களாவுக்கு வருந்தி வருந்தி அழைத்ததாகவும்—அதை அந்த அம்மாள் மறுத்ததால் இப்படிச் செய்திருப்பார் என நினைக்கிறேன்” என்றும் யூகம் தெரிவித்தான்.
இந்த உண்மைகளையெல்லாம் சிந்தாமணிதான் வெளிப்படுத்தித் தங்களையும் விடுவித்தாள் என்ற செய்தி கேட்டு அழகப்பன், சிந்தாமணிமீது அடங்காத மதிப்பு வைத்தான். சிந்தாமணி களங்கமற்றவள் என்பதற்கு வேம்புவும் ஆதாரங்களை அள்ளி வீசினன்.
சிந்தாமணியிடம் சென்று மன்னிப்புக் கேட்டுக்கொள்ளவேண்டுமென்று நயினுவிடம் தெரிவித்தான். நயினுவுக்கோ ஆனந்தியின் முடிவால் ஏற்பட்ட சோகம் தீரவில்லை. அவன் ஊமையாகவே ஆகிவிட்டான், கண்ணீர் வடித்தவாறு தலையசைத்தான்.
பிறகு, அழகப்பனும் நயினுவும் சிந்தாமணி வீட்டுக்குப் புறப்பட்டார்கள். வழியில் அன்றைய தினசரிப் பத்திரிகையை வாங்கிப்புரட்டிப் பார்த்தான் அழகப்பன். அதில் பெங்களூர் இரயில் அபின் கடத்தல் வழக்கில் உண்மையான குற்றவாளி சிக்கிவிட்டான் என்றும், சிந்தாமணி மீது குற்றமில்லையென்று ருஜுவாகிவிட்டதென்றும் செய்தி காணப்பட்டது.
சிந்தாமணி சபதம் எடுத்துக்கொண்டது போலவே, விபச்சாரப் பட்டத்திலிருந்தும்—அபின் கடத்தல் குற்றத்திலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டு — தானொரு மாசற்ற மணிவிளக்கு என்பதை உலகுக்கு நிரூபித்து விட்டாள். அந்த மணிவிளக்கிடம் மன்னிப்புக் கோர அழகப்பன் ஓடிவந்தான் நண்பன் நயினுவுடன்...!
சிந்தாமணி, அன்றைய தினசரிப் பத்திரிகையைப் பார்த்தவாறு ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள். அழகப்பன் ஓடிவந்து அவள் காலைக் கட்டிப்பிடித்துக் கொண்டு “சிந்தாமணி! என்னை மன்னித்துவிடு!” என்று கதறினான். அவள் அவன் காலில் விழுந்துக் கண்ணீர் பொழிந்தாள்.
“இப்போதாவது என்னை நம்புகிறீர்களா?” என்று கேட்டாள் சிந்தாமணி—அவள் குரல் தழுதழுத்தது!
“நம்புகிறேன்—சிந்தாமணி! என்னை மன்னித்துவிடு!” என்று அழுதான் அழகு!
“அப்படியானால்.........இப்போதே நமது திருமணம் நடைபெற வேண்டும்!”—சிந்தாமணி தேம்பியவாறு கூறினாள்.
அழகு தன் மோதிரத்தைக் கழற்றி அவள் கையில் அணிவித்தான். இருவரும் ஒருவரையொருவர் புன்னகை தவழப் பார்த்தனர்.
அழகப்பன் அவளைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவள் தடாலெனத் தரையில் சாய்ந்தாள்.
“சிந்தாமணி” என்று தாவித் தூக்கினான் அழகப்பன். அவள் மெல்ல விழி திறந்து இழுமூச்சைத்தாள்.
“என்னை மன்னித்துவிடுங்கள்: நான் கொடிய விஷம் சாப்பிட்டிருக்கிறேன்” என்றாள். அழகப்பனும் நயினுவும் திடுக்கிட்டனர்.
“ஒரு நாள்...வெள்ளிக்கிழமை...உங்கள் வருகையை ஆவலோடு எதிர்பார்த்தேன்........இன்று கூட வெள்ளிக்கிழமைதான்...அந்த ஆவல் பூர்த்தியாயிற்று!” என்றபடி அவன் முகத்தில் ஒரு முத்தமிட்டாள்...பிறகு அவள் கண் விழிக்கவேயில்லை!
சபதத்தை நிறைவேற்றிக்கொண்டு அந்தப் புள்ளி மயில் சவமாகிவிட்டது, வெள்ளிக்கிழமையிலே!
வெள்ளிக்கிழமையிலே பெண் வீடு பார்க்க வந்த நண்பர்கள் இருவரும்......தங்கள் வாழ்க்கை ஏட்டிலே அழியாத இடம் பெற்றுவிட்ட இரண்டு பெண்மணிகளையும் நினைத்து நினைத்து நெஞ்சு நெகிழ்ந்தவாறு பெங்களூர் திரும்பினர்கள்.
கலைஞர் மு. கருணாநிதி · வெள்ளிக்கிழமை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்