அத்தியாயம் 9 · 10 / 52
அத்தியாயம் 9
Chapter 9
மூல ஸ்கேன் 84-92
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
9
மாயாண்டிக் கிழவர் பிரயாணம் செய்த கள்ளத் தோணி போலீசாரிடம் சிக்கிய அதே நேரத்திலே தான் - முரடர்களின் கையிலே சிக்கிய பரிமளாவும் பிரக்ஞையற்ற நிலையில் தூக்கி வரப்பட்டாள். அந்த எழில் முல்லைக் கொடி எங்கு கொண்டுபோகப் படுகிறாள்? பறித்துவிட்ட அல்லித் தண்டுபோல் துவண்டு கிடக்கும் அந்தத் தோகை மயிலை - தொட்டாலே இனிக்கும் சுவைப் பேழையை - தொடுத்தெடுத்த மலர்க் குழுவை - தோளிலே சுமந்து ஓட்டமும் நடையுமாக விரைந்து கொண்டிருந்தார்கள், அந்தக் கொழுத்த மனிதர்கள். சுமை தாங்கும் கழுதைக்கு முதுகிலே அடுக்கியிருக்கும் பட்டுத் துணியின் அருமை பெருமை தெரியுமா? பரிமளாவைத் தூக்கிச் செல்லும் துஷ்டர்களும், கழுதையைப்போல எஜமான விசுவாசத்தை மட்டும் கடமையாகக் கொண்டு காரியமாற்றினார்கள். அதனால் பரிமளா - மந்தி கை சிக்கிய மாலையாகாமல் காப்பாற்றப்பட்டாள்!
அந்தக் காட்டான்களின் மந்தை கடற்கரை நோக்கித் தான் போகிறது என்பது விரைவிலே தெரிந்துவிட்டது. “வேகமா! வேகமா!” என்று ஒருவன் மெதுவாக சப்தம் போட்டுக்கொண்டே போனான். அவனைத் தொடர்ந்து மற்றவர்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள். பின்னால் யாராவது தொடர்கிறார்களா என்று சிலர் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டார்கள். அவர்களது வேகமான நடையிலே, அவர்களது பார்வைக்கு ஆகாயத்திலே நிலவும் வேகமாக ஓடுவதுபோல் தெரிந்தது. ஓடும் நிலவின் பிம்பத்தை தண்ணீரில்தான் காணமுடியும்; இதோ தரையிலும் காணமுடிகிறதே என்பதுபோல் பரிமளாவின் முகம் காட்சியளித்தது. ஆம்; தெளிவற்று வாடிக்கிடந்தது அவள் வதனம்.
கடற்காற்று 'ஜில்' என்று வீச ஆரம்பித்தது. கரையின் அருகாமையிலே வந்து விட்டோம் என்ற உற்சாகம் பிறந்தது அந்த முரட்டுக் கூட்டத்திற்கு! கடல் அலைகள் கரையிலே மோதிக் கிளம்பும் ஓசையும் காதிலே விழுந்தது - இன்னும் அருகே வந்து விட்டார்கள் - துஷ்டனின் தோளிலே கிடந்த பரிமளா மயக்கம் தெளிந்தாள். இதயம் நொறுங்கிச் சிதறிவிடும் போன்ற உணர்ச்சியால் பீடிக்கப்பட்டாள் - கண்களை மெதுவாகத் திறந்து பார்த்தாள். சிறுவயதிலே அவளுடைய பாட்டி சொல்லுவாள்; சாவு என்றால் என்ன என்று!
“யமலோகத்திலே யிருக்கிற எருமையேறும் தரும ராஜன், தன்னுடைய ஆட்களிடம் பாசக்கயிறு கொடுத்து உயிர்களைப் பிடித்து வரச் சொல்லுவான். அந்த ஆட்களுக்கு யம கிங்கிலியர் என்று பெயர். அவர்கள் உயிர்களைப் பிடித்துக் கொண்டு போய் யமனிடம் சேர்ப்பார்கள். போகும் வழியெல்லாம் பயங்கரமாயிருக்கும். நெருப்பாறு ஓடும் - அதில் மயிர்ப்பாலம் இருக்கும் - கல்லும் முள்ளும், தேளும் பாம்பும், முதலைகளும், புலிகளும், யானைகளும் நிறைந்த காடுகளைக் கடக்கவேண்டும். உயிர், யமலோகம் போவது என்றால் அதுதான்!”
இதுபோலப் பாட்டி பலமுறை சொல்லியிருக்கிறாள்; ஒரு முறை யமலோகம் போய்ப் பார்த்துவிட்டுத் திரும்பியவள் போல! அந்தக் கிழவி சொன்ன கதைகளை அப்போதெல்லாம் பரிமளா கிண்டல் செய்திருக்கிறாள் - ஆனால், இப்போது யமலோகம் - யம கிங்கிலியர் - என்பதெல்லாம் பொய்யென்றாலுங் கூட, தான் தூக்கிச் செல்லப்படும் அந்தக் காட்சியும், தூக்கிச் செல்லுகிற ஆட்களின் தோற்றமும், பாட்டி சொன்ன பழைய கதைகளை பரிமளாவுக்கு ஞாபகப்படுத்தத் தவறவில்லை. தான் இறந்துபோய் விட்டதாகவும், தன்னுடைய உயிரை யாரோ தூக்கிக்கொண்டு போவது போலவும் மட்டுமே அவளால் நினைக்க முடிந்தது.
ஒரு சமயம்; தான் காண்பது கனவா என்று கருதினாள். அய்யோ இது கனவாகவே இருந்துவிடக்கூடாதா என்று வேண்டிக்கொண்டாள். தூங்கிக் கொண்டிருப்பது போலவும், சீக்கிரம் விழித்துக்கொள்ள முடியாமல் அவஸ்தைப் படுவது போலவும் நெளிந்தாள்.
குழப்பத்தின் கொடிய நகங்களால் கீறப்பட்டுத் தவித்த அவளுக்கு புதியதோர் சக்தியையும் - ஆறுதலையும் மின்னல் போல அளித்து மறைந்தது, எதிரே காணப்பட்ட அந்த ஏழடுக்கு எழிற் கோபுரம்! மனோரா! அதைப் பார்த்த பரிமளாவுக்கு சிறு மனச் சாந்தி ஏற்பட்டது என்றாலும் அந்த சாந்தி நீடிக்கவில்லை. ஊருக்குப் பக்கத்திலே தான் இருக்கிறோம் என்ற நிம்மதி - அதோடு, தன் காதலனோடு தனித்திருந்த மாளிகை என்ற எண்ணம் இப்போதும் தன் காதலன் அங்கிருந்து தன்னைக் காண்கிறான் என்பது போன்ற உணர்வு - இத்தனையும் பரிமளாவின் உள்ளத்திலே 'பளிச்' 'பளிச்' என மின்னி பழையபடி வேதனையிலே அவளை வீழ்த்தி விட்டன. கண்களை மூடிக்கொள்வது சிறிது ஆறுதலாக இருந்தது அவளுக்கு. கனவுலகத்தில் மரண யாத்திரை நடத்துவது பயமூட்டக் கூடியது என்றாலும், விழித்துக் கொண்டால் கனவு கலைந்துவிடும் என்ற ஒரு திடமான எண்ணம், எங்கோ ஒரு மூலையிலிருந்து எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருக்குமல்லவா? அந்த எண்ணத்தை மட்டுமே துணையாகக் கொண்டு, பரிமளா துவண்டு கிடந்தாள்.
அந்த மனிதக் கூட்டம், அவளுடன் மனோராவில் நுழைந்தது. உப்பரிகையின் படிகளில் ஏறி ஏறி ஒவ்வொரு ஆளாகப் பின்னுக்குத் தங்கிவிட்டார்கள். இரண்டொருவர் மட்டுமே பரிமளாவைத் தூக்கிக் கொண்டுபோய் மனோராவின் முதல் தளத்தில் வைத்தார்கள்.
பரிமளா கண் விழித்துப் பார்த்தால் எதிரே என்ன கோர நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்குமோ -- அதையேன் பார்க்க வேண்டும் - என்று கருதி, கண்களை இறுக்கி மூடிக் கொண்டிருந்தாள். மேல் தளத்துப் படிகளிலேயிருந்து யாரோ கீழ்நோக்கி இறங்கிவரும் செருப்பு சப்தம் கேட்டது. ஆட்கள் மேலே ஆவலாகப் பார்த்தார்கள். ஒருவன் அந்தப்படியின் பக்கம் மேலே ஏறிப் பார்த்துவிட்டு அவசரமாக கீழ்நோக்கி ஓடிவந்து மற்றவர்களிடம், “ஏ, வாங்க - வாங்க - அவர் வந்துட்டார் - அவர் தான்!” என்று கூறினான். பரிமளாவிடம் நின்ற இரண்டொருவரும் அதை விட்டுப் போய்விட்டார்கள். பரிமளா தனியாக அந்த உப்பரிகைத் தளத்தில் கிடந்தாள்.
பகல் நேரங்களிலே அந்தப் பக்கம் மேய்வதற்கு வரும் ஆடு மாடுகள் தாங்கள் சுலபமாக ஏறி இளைப்பாரக் கூடிய இடமாகத் தேர்ந்தெடுத்திருந்தது அந்த அடித்தளம் தான். அவைகள் இளைப்பாறியிருந்தால் அந்தத் தளம் எப்படியிருந்திருக்கும்! கண்மூடிக் கிடக்கும் பரிமளாவின் மூக்கைத் துளைத்தது நாற்றம் - அதோடு படிகளில் இறங்கிவரும் செருப்பின் சப்தமும் அவள் காதுகளில் பயங்கரமாக எதிரொலித்துக் கொண்டிருந்தது. அந்த ஒலி அருகே வந்துவிட்டது. யாரோ, ஒரு ஆள் - அவன் தன்னிடம் வருகிறான். உலகத்தில் ஒரு பெண், தன்னையே நம்பி - தன் பலத்தையும் மனோதிடத்தையும் உபயோகித்துக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அந்த உயரிய பொருளைக் கொள்ளையிட வந்துவிட்டான்; உயிரிழந்தும் கூட உலகத்திலே வாழுகிறார்கள்; புகழுடலிலே புகுந்து கொண்டு! ஆனால் மானத்தை இழந்தால் சொந்த உடலில் உயிர் இருக்கும்போது கூட வாழ முடியாதே - அதை வாழ்க்கை என்று கூறமுடியாதே! இந்த நினைவுச் சுருள்கள் அவள் நெஞ்சத்திலே விரிந்து பரந்தன.
இதயத்தின் விளிம்புகளைத் தொட்டுக்கொண்டு நின்றன. புயலும், இடியும் போட்டி போட்டுக்கொண்டு முழங்குவதுபோல அவள் நெஞ்சில் குமுறல் எழுந்தது. திடீரென அமைதி, செருப்பு சப்தம் நின்றது. அவள் உள்ளத்திலும் ஒரு விநாடி சுடுகாட்டு அமைதி சூழ்ந்தது.
“பரிமளா! பரிமளா! - ஏ, பெண்ணே! டே - குட்டி! எழுந்திரு!”
இந்தக் குரல் அவள் காதை முட்டியது; பரிமளாவினால் இப்போது எதையும் நினைக்கவும் முடியவில்லை. அப்படியே பிணமாகிவிடக் கூடாதா என்று ஆசைப் பட்டாள்.
“கண்ணைத்திற-- அட! - திறக்கிறியா இல்லியா?”
ஒரு சிறு கம்பால் பரிமளாவின் மேனி தீண்டப்பட்டது. அது அவளுக்கு பாம்பு ஊர்ந்தது போலிருந்தது தோலில்!
“டே - பயப்படாதே குட்டி! எழுந்திரு - இல்லேன்னா......”
குரலிலே அதிகாரம், முரட்டுத் தனம் இருந்ததே தவிர கனிவு இல்லை.
“எழுந்திரு! இல்லேன்னா......” என்ற வார்த்தை வந்ததுதான் தாமதம்; பரிமளா அலறிக்கொண்டு அவளையுமறியாமல் எழுந்து நின்றுவிட்டாள். எதிரே பார்த்தாள். கண்களை அகலத் திறந்து விழித்தாள். டக் டக் என்று இமைகளைத் திறந்து திறந்து மூடினாள். தெளிவாகத்தான் பார்க்கிறோமா என்ற ஐயமும் அச்சமும் சேர்ந்து எழுந்தது. சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எதிரே நின்று பேசுகிறவரை உற்று நோக்கினாள். எதிரே வெள்ளியம்பலம் நின்று கொண்டிருந்தார்.
“துடிக்காதே பெண்ணே - உனக்கு ஒரு ஆபத்தும் வராது -”.
“இப்போது வந்திருப்பதற்குப் பெயர் என்ன?”
“இதை ஆபத்துன்னு நினைக்கிறீயா?”
“அகராதியைப் புரட்டிப் பார்க்கிறேன்; வேறு வார்த்தை இருக்கிறதா என்று!”
“நீயே பெரிய அகராதி தானே-”
“அய்யா-ஊருக்குப் பெரிய மனிதரே; என்னை ஏன் இங்கு தூக்கிக் கொண்டு வந்தீர்? அதைச் சொல்லும்”.
“பரிமளா! நான் ஊருக்குப் பெரிய மனுஷன் மாத்திரம் இல்லே நான் நினைச்சேன்னா, நூறு கொலை...”.
“தேங்காய் வெட்டுவீர்னு எனக்குத் தெரியும் — தேவையான விஷயத்தைச் சொல்லும்”.
“பெண்ணு! நீ நினைக்கிற மாதிரி - எதுவும் இங்க நடக்காது - நான் உன்னை இங்க கொண்டாந்திருக்கிறது; உன்னைக் காப்பாத்தவே தான் - உன்மேல உங்கப்பனுக்கு ஒரே சந்தேகம் - உன்னைக் கொல்லவே திட்டம் போட்டு, எனக்கிட்ட காலையிலே கோபமா சொல்லிட்டுப் போனான் - அதிலேயிருந்து உன்னைப் பாதுகாக்கத்தான் முதல்லெ நான் கவலைப்பட்டேன்”.
“ஆகா-ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்”.
“அட முட்டாளே - இதைக் கேளு; உனக்கு ஒரு ஜோடியிருக்கிறான்னு நானும் தெரிஞ்சுகிட்டேன் - உங்கப்பனும் தெரிஞ்சுகிட்டான் - உங்கப்பன் கையிலேயிருந்து இப்ப நான் உன்னை மீட்டுவிட்டேன் - எனக்கு நீ ஒரே ஒரு உபகாரம் செய் - போதும்!”
“நீர் என்ன பேசுகிறீர் என்றே எனக்குப் புரியவில்லை அய்யா!”
“நீ மறுபடியும் வீட்டுக்குப் போயிபாரு! அப்பத்தெரியும்; இந்த அம்பலம் சொன்னது நிஜமா? பொய்யா? என்று! தாண்டவன் என்கிட்ட தாண்டிக் குதிச்சதும், ஒரே வெட்டாக வெட்டி உன்னைப் புதைத்துவிடப் போகிறேன் என்று கூச்சல் போட்டதும் எனக்கல்லவா தெரியும்”.
“நான் அப்படி செத்திருந்தாலும் பரவாயில்லை போல் இருக்கிறதய்யா - இங்கு வந்து இந்த இருட்டில் இப்படி நிற்பதைவிட...”.
“அய்யோ அய்யோ - நீ சாவதா? சீ சீ! - பைத்யக் காரப் பெண்ணு - என் ஆசையெல்லாம், நீயும் சாகக் கூடாது... அதோட; அந்த ஒரு விஷயத்தை மட்டும் எனக்கிட்ட சொல்லிடணும்!”
“என்ன விஷயம்”
“அதுதான் - உன் ஆசைக் காதலன் இருக்கானே; அவன் யார் என்று!”
பரிமளா பேசாமல் நின்றாள். தன் காதலன் பெயரை விசாரிப்பதற்கு இவ்வளவு சிரமம் எடுத்துக்கொள்வானேன், இந்தப் பெரிய மனிதன் - என்று சிந்தித்தாள்.
“என்ன மௌனமாகிவிட்டே - சொல்லும்மா - அவன் யாரு? எங்கே யிருக்கான்? - அதெல்லாம் மறைக்காதே - உனக்கு ஒருத்தன் உண்டுன்னு எனக்குத் தெரியும்; இத பாரு; உன் ஆளு செருப்பை!” என்று கூறியபடி அம்பலம் படிக்கட்டுப் பக்கம் போட்டிருந்த ஒரு செருப்பை எடுத்து அவளிடம் காட்டிச் சிரித்தார். அந்த செருப்பு, தன் காதலன் துரையினுடையது என்பதைத் தெரிந்துகொண்டாள் அவள். காதலன் அணியும் பொருள் அது என்பதிலேயும் அதைக் காண்பதிலேயும், அவள் ஒரு மகிழ்ச்சியடைந்தாள்.
“என்ன கண்டு பிடிச்சேனா? பாரு என் சாமர்த்தியத்தை - பரிமளம் - சொல்லிடு, அந்த ஆசாமி யாருன்னு?”
“அவரைப்பற்றி நீர் ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்?”
“ஆளைத் தேடிப் பிடித்து உனக்குக் கல்யாணமே செய்து வைப்பேன் - உனக்குத்தான் தெரியுமே; ஊரிலே நடக்கிற நல்லது கெட்டது எல்லாம் என்னால்தானே நடக்கிறது!”
“கல்யாணம் செய்துவைக்கும் சிரமம் எல்லாம் உங்களுக்கு வேண்டாம்.”
“பரிமளம் - வீணாகப் பேசாதே - அவன் யார் என்று எனக்குச் சொல்லிவிடு! இல்லாவிட்டால் உன்னை விடமாட்டேன் - அவனை என்னிடம் சொல்லிட்டா, நீயும் உங்கப்பன் கோபம் தணியிற வரையிலும் என் வீட்டிலேயே இருக்கலாம் - என் வீட்டிலே இருந்தா உங்கப்பனும் ஒண்ணும் செய்ய முடியாது!”
“எனக்கு யார் வீடும் தேவையில்லை - என்னை விட்டு விடுமய்யா!”
“முடியாது - பரிமளம் - என் கோபத்தைக் கிளராதே - என்னைப்பற்றி உனக்குத் தெரியும் - சந்து வீட்டு சந்தான கிருஷ்ணன் தலைபோன இடம் இன்னும் தெரியிலே! புதுப்பட்டினத்திலே உடம்பும், சேது பாவா சத்திரத்திலே காலும், நாடியத்திலே கையும், நடுக் கடலிலே தலையும் மிதந்துதே - நாராயணப் பெருமாள் சாவு ரகசியத்தைத்தான் சொல்றேன்; அதையெல்லாம் மனசிலே வச்சுக்கிட்டு என்கிட்ட பேசு!”
பரிமளம் பதில் பேசவில்லை; நின்றாள்.
“சொல்றீயா இல்லையா?” என்று அருகே நெருங்கினார் அம்பலம். அப்போது திடுதிடுவென்று அவரது ஆட்கள் சிலர் மேலே ஓடிவந்து, “எஜமான் எஜமான்!” என்றனர். “என்னடா?” என்று அதட்டினார் அம்பலம் -.
“இரண்டு தோணிகள் கரை நோக்கி வருதுங்க!”
“ஆங் - சரி - நீங்க போயி கவனிங்க; இதோ வந்துட்டேன்” - முரடர்கள் ஓடிவிட்டார்கள்.
“முடியுமா, முடியாதா பரிமளம்?” என்று மறுபடியும் அருகே நெருங்கி கூச்சலிட்டார் அம்பலம். அவருக்கு இப்போது அவசரம் வேறு; தோணிகளிலே வருகிறவர்கள் கண்களிலே சிக்கிவிடக் கூடாதே என்று! அந்தத் தோணியிலேதான் தன்னுடைய துரை வருகிறான் என்று பரிமளாவுக்குத் தெரியாது. அலைகளைக் கிழித்துக்கொண்டு தோணிகள் கரை நோக்கி வருவதை சாளரத்தின் வழியாக அம்பலமும் ஒரு முறை பார்த்தார்.
“உம் - இப்போது சொல்லப் போகிறாயா? இல்லை - கஷ்டப்படப் போகிறாயா?” என்று பயங்கரமாகக் கத்திக் குதித்தார் அம்பலம்.
பரிமளாவின் முகக்குறி, அவள் ஏதோ ஒரு பொய் சொல்லப் போகிறாள் என்பதை உணர்த்தியது. கனைத்துக் கொண்டாள்.
“உம் - நல்ல பெண்ணுல்ல சொல்லு!” என வாய் பிளந்து நின்றார் அம்பலம். அவன் பெயர் தெரிந்துவிட்டால், அவனைப் பிடித்து - அவன் மூலம் “தங்கத்தைப் புதைத்த இடம் எது” எனத் தெரிந்துகொள்ளலாம் என துடித்தார். தங்கத்தைத் தோண்ட எண்ணிய ஐயப்பன் கடலிலே கைதியாக வந்துகொண்டிருக்கிறான். இங்கே அம்பலம் ஆலாய்ப் பறக்கிறார்!
“சொல்லும்மா!”
“சொல்லுகிறேன்”.
“சொல்லு”.
“சொன்னால் அவருக்கு ஒன்றும் ஆபத்து வராதே!”
“வரவே வராது!” என்று கூறிக்கொண்டே அம்பலம் கடலை ஒருமுறை பார்த்துக்கொண்டார். தோணிகள் வேகமாக வந்துகொண்டிருந்தன.
---
கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்