அத்தியாயம் 10 · 11 / 52
அத்தியாயம் 10
Chapter 10
மூல ஸ்கேன் 93-98; continues on scan 99
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
10
பரிமளா, தன் காதலனின் பெயரை சொல்லிவிடப் போகிறாள் என்ற மகிழ்ச்சியில் அம்பலம் ஆவலாக நின்று கொண்டிருந்தார்; என்றாலும் அவரது கண்கள் சாளரத்தின் வழியாக சமுத்திரத்தை நோக்கத் தவறவில்லை. தோணிகள் மிக வேகமாக வந்து கொண்டிருந்தன. அம்பலம் துடித்தார் - “சொல்லிவிடு! சொல்லிவிடு!” என்று உரக்கக் கத்தினார்.
“சத்தியமாக அவருக்கு ஒரு ஆபத்தும் வராது என்று சொல்லுங்கள்” இது பரிமளம்.
“சமுத்திர ராஜன் ஆணையாச் சொல்றேன் - ஒரு ஆபத்தும் வராது - அட சனியனே; சீக்கிரம் சொல்லித் தொலையேன்......?”
“சொல்லுகிறேன் - ஹே! சமுத்திர ராஜா! உன் மீது சத்தியம் செய்திருக்கிறார் இந்தப் பெரிய மனிதர் - இவர் ஆணையை மீறினால், என் காதலருக்கு ஏதாவது ஆபத்து வந்தால் - பிறகு உன்னைத்தான் கேட்பேன்.”
“அட சீக்கிரம் சொல்லு!”
“அவசரப்படாதீர்கள் - அவர் பெயர்!”
“ம் - அவர் பெயர்? - என்ன......?”
“அவர்....... அட...... அய்யய்யோ...... மறந்து விட்டேனே? ஆமாம் கணவன் பெயரை சொல்லலாமா?”
“அட ஆபத்துக்குப் பாபமில்லை!”
“இப்போது எனக்கு என்ன ஆபத்து வந்து விட்டது?” சோகத்திலும் அவள் கிண்டல் செய்யத் தவறவில்லை.
“உனக்கு ஒன்றும் ஆபத்து இல்லை - எனக்குத்தான் ஆபத்து வருது!” என்று கூறியபடி சாளரத்தின் வழியாக கடலைப் பார்த்தார். தோணிகள் இன்னும் சில நிமிடங்களில் கரையை அடைந்துவிடும் எனக் கண்டார். பரிமளாவிடம் திரும்பி “சொல்லும்மா சீக்கிரம்! கல்யாணம் ஆகாததற்கு முன்பு சொன்னால் பாபமேயில்லை”.
“ஓகோ, அப்படியொரு விதி விலக்கு இருக்கா - அப்படியானால் என் காதல் துரையின் பெயரை சொல்லித்தான் தீரவேண்டுமா?”
“ஆமாம் - ஆமாம் - ஆமாம் -” என்று தன் தலையிலேயே அடித்துக் கொண்டார் அம்பலம். பரிமளாவுக்கு சோகத்தினிடையேயும் சிரிப்பை உண்டாக்கியது அந்த நிகழ்ச்சி.
“சொல்லப் போகிறாயா? இல்லை சாகிறாயா” என்று சீறிக் கிளம்பினார் அவர்.
“சொல்லுகிறேன் - கோபிக்காதீர்கள். அவர்... அவர் பெயர்... முதலெழுத்து -... 'து!'... உம் - அடுத்த எழுத்து...?”
“அவர் பெயர் ....து...து...து...து...”.
“துப்பினது போதும் - சொல்லு!”
“துக்காராம் அவர் பெயர்!!”
“துக்காராம் ஜே ஜே விட்டல்!”
அம்பலத்திற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.
“சரி! - அவன் விலாசம் என்ன?”
“விலாசமா? துக்காராம் - சைக்கிள் கம்பெனி - சக்கரவர்த்தி தெரு - பட்டுக்கோட்டை. இதுதான் அவர் விலாசம்.”
அம்பலம் அந்த விலாசத்தை தனக்குள்ளாகவே இரண்டு மூன்று தடவைகள் முணகிக் கொண்டார், மறந்து விடாமல் இருப்பதற்காக!
“சரி - பரிமளா! இனிமேல் உனக்கு எந்தக் கஷ்டமும் இல்லை - நீ நல்ல பெண்ணு... நான் சொல்றதைக் கேளு! உனக்கு உயிருக்கு ஆபத்து வராம இருக்கணும் என்றால், கொஞ்ச நாளைக்கு என் வீட்டிலாவது வந்து தங்கியிரு - உண்மையாச் சொல்றேன்; உங்கப்பன் உங்கத்தியை தீட்டி வச்சுகிட்டு தயாராயிருக்கிறான், உன் தலையை வெட்ட! ஆமாம் - ஜாக்ரதை!”
“முடியாது! நான் எங்கும் வரவில்லை”.
“முட்டாள் - பிடிவாதம் பிடிக்கதே! உன் காதலனையே அங்கு அழைச்சு கிட்டு வர்ரேன்-”.
“வேண்டாம்; என்னை விட்டு விடுங்கள்!”
“சொல்வதைக் கேளு - வீணா சாகாதே!”
அம்பலத்தின் பேச்சினிடையே அவரது ஆட்கள் தடதடவென்று மேலே ஓடி வந்தார்கள். “என்ன என்ன” வென்று அவர் பதறினார்.
“தோணியில் வருகிறவர்கள் போலீசார்” என்ற செய்தியைச் சொல்லி அவர்களும் நடுங்கினார்கள்.
“ஆ - போலீசாரா?”
“ஆமாம் - எங்களைக் கூடப் பார்த்து விட்டார்கள் -”.
“அய்யோ - நீங்க, மேலெ ஏறிவந்ததையும் பாத்திருப்பாங்களா!”
“பாத்திருப்பாங்க! கண்டிப்பா பாத்திருப்பாங்க!”
“சரி - சரி - வாங்க - ஓடி விடலாம்!” எனக் கூறியபடி சாளரத்தின் வழியே அம்பலம் பார்த்துக் கொண்டார் - தோணிகள் கரையோரத்திலே மெதுவாக அசைந்து கொண்டிருந்தன. ஒரு தோணிக்கும் மறு தோணிக்கும் இடையே சிறிது தூரம் இருந்தாலும் கூட இரண்டும் ஏக காலத்தில் கரை சேர்ந்துவிட்டன. அம்பலமும் ஆட்களும் கீழிறங்கி ஓடுவதற்குத் தயாரானார்கள். பரிமளாவையும் தங்களுடன் ஓடி வரும்படி அம்பலம் அவசரப்படுத்தினார். அவளும் அவர்களுடன் ஓடுவதற்குத் தயாரானாள்.
கீழிறங்கி விட்டார்கள் வேகமாக - மிகவும் களைத்துப்போயிருந்த பரிமளாவினால் வேகமாக ஓட முடியவில்லை - அந்தச் சமயத்தில் திடீர் என்ற துப்பாக்கி சப்தமும் கேட்டது - அம்பலமும் மற்றவர்களும் வேகமாக ஓடி அடர்ந்த பகுதிகளின் பின்னே மறைந்து செல்ல ஆரம்பித்தனர். துப்பாக்கி ஒலியால் அதிர்ச்சியடைந்த பரிமளம், ஒரு கல்லில் கால் இடறவே, அலறிக்கொண்டு கீழே வீழ்ந்தாள். அவளால் எழுந்து நிற்க முடியவில்லை. அதற்குள் அம்பலம் கூட்டத்தார் வெகுதூரம் போய்விட்டார்கள் - கரையில் இறங்கிய 'போலீசார்' பரிமளம் விழுந்து கிடக்கும் இடம் நோக்கி ஓடிவந்தார்கள். கீழே கிடப்பது யார் என்று துரைக்குத் தெரிந்துவிட்டது - “பரிமளா!” என்று கத்திவிட்டான். அவளோ திகைத்துப் போனாள். திசைகாணமுடியாத இருட்டுப் பாதையில் அதுவும் அமாவாசை தினத்தன்று திடீரென நிலவு தோன்றி வெளிச்சம் தர முன்வந்தால்கூட அவள் ஆச்சரியப்பட்டிருக்கமாட்டாள்; இப்போது ஆச்சரியத்திலேயே முழுகிவிட்டாள்; அவளால் பேச முடியவில்லை. துரையை அணைத்துக் கொண்டு, பொங்கி வரும் கண்ணீரை அவன் கன்னத்திலே பொழிந்து விடவேண்டுமென்று துடித்தாள்.
பக்கத்திலே மற்றவர்கள் இருக்கிறார்கள் - ஆகையால் அசைவற்றுப் போனாள். துரை, தன் தோழர்களைக் கூப்பிட்டு “நீங்கள் தோணிக்குப் போய், அந்தக் கிழவரைத் தூக்கிச் சென்று, மனோராவுக்குள் வையுங்கள்!” என்றான். அவர்கள் தலையசைத்தபடியே, “ஆமாம் - அந்த ஐயப்பன் கோஷ்டியை என்ன செய்வது?” என்றனர்.
“அவர்களை மிரட்டி வெகு தூரத்திற்கு துரத்தி விடுங்கள்” எனக் கூறிவிட்டு, பரிமளாவின் பக்கம் திரும்பினான். அவனது அவசரத்தையும், அவன் போட்ட திட்டங்கள் அனைத்தும் பரிமளாவைக் கண்டதும் மாறிவிட்டதையும் நினைத்துக்கொண்டு அவனது தோழர்கள் மனத்திற்குள் சிரித்தவாறு அதைவிட்டுப் போய் விட்டார்கள். அவர்கள் போனதுதான் தாமதம், பரிமளாவும் துரையும் அந்த வெள்ளி மணல் படுக்கையிலே தழுவிக்கொண்டு சில விநாடிகள் அசைவற்றுப் போயினர். “நீ மாத்திரம் கோபிக்காமலிருந்தால், உன் கன்னங்களை என் விரல்களால் தடவிக் கொண்டே உலகத்தை மறந்து, உயிர் போமளவும் இருப்பேன்” என்று பலமுறை துரை அவளிடம் சொல்லியிருக்கிறான். அவ்வளவு அழகு வாய்ந்த கன்னங்கள். ஒளி சிந்தும் மாம்பழக் கதுப்புகள். அந்த அழகு சிங்காரியின் மடியிலே இருப்பது அவனுக்கு வர்ணிக்கவொண்ணாத பெருமை. சந்திர மண்டலத்துக்குப் போகவேண்டுமென்று யார் யாரோ எப்படி யெப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள்; ஆனால் நானோ சந்திர மண்டலத்திலேயே வாழ்கிறேன் - என்று அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டே துரை எத்தனையோ முறை சொல்லி, அதற்கு தண்டனையாக, அவன் உதடுகளை அவள் எச்சில்படுத்தியிருக்கிறாள்.
அந்த ஒரு விநாடி அணைப்பிலே, அந்த விருந்து நிகழ்ச்சிகள் எல்லாம் வந்து வந்து போயின. அவர்கட்கு வலிமை சேர்த்தன. தெவிட்டுவதற்கு முன்பே அந்தத் தெவிட்டாத தெள்ளமுது, தன் தேகத்தை அவனிடமிருந்து பிரித்துக் கொண்டு, “அத்தான்!” என்றாள்.
“அமுதே!” என அவன் அழைத்துக்கொண்டான் மனதிற்குள்ளாகவே! அப்படி அழைப்பதை அந்த மென்மையான முத்தத்தின் மூலமாகக் காட்டிக் கொண்டான். “நீங்கள் எப்படியத்தான் இங்கு வந்தீர்கள்?”
இந்தக் கேள்விக்குப் பிறகே, துரை தன்னையுணர்ந்தான்.
இதே கேள்வியை அவன், பரிமளாவைக் கேட்டிருக்க வேண்டும் ஆனால் கேட்காமல் இதுவரையில் இருந்துவிட்டான்.
மலரைக் கண்டதும் மங்கை சூடத்தான் எண்ணுகிறாள், எப்படி இங்கே வந்தது என்று கேட்பது பிறகுதான்!
கனியைக் கண்டதும் வாய் ஊறுகிறது! எப்படிக்கிடைத்தது எனக் கேட்கும் யந்திரம் தாமதமாகத்தான் வேலை செய்கிறது, மனித உடலில்!
அதுபோலத்தான் பரிமளாவைக் கண்ட துரை, சொக்கிவிட்டான் - சுவைத்தான் - பிறகு நினைத்தான் 'எப்படி வந்தாள்?' என்று கேட்க! கேட்டும் வைத்தான்.
“நேற்றைய நிகழ்ச்சியின் தொடர்ச்சி” என்றாள் அவள்.
“எனக்கும் அப்படித்தான் - இதுவும் நேற்றைய நிகழ்ச்சியின் தொடர்ச்சிதான்!” என்றான் துரை.
கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்