அத்தியாயம் 11 · 12 / 52
அத்தியாயம் 11
Chapter 11
மூல ஸ்கேன் 102-110 (chapter-11 portion)
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
11
முதல் நாளிரவு சந்தித்த அந்தக் காதலர்களை கிழவர் காணும்போது, அவர் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை. தன்னைச்சுற்றி போலீசார் சூழ்ந்திருப்பதையும், அந்த இருவரும் தன்னை அன்போடு நோக்குவதையும் கிழவர், பெரியதோர் புதிராகக் கருதினார். தன் மடியை ஒரு முறை தொட்டுச் சரிபார்த்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசை, அளவு மீறி எழுந்தாலுங்கூட, அவர் அந்த முயற்சியில் ஈடுபடவில்லை. ஏனெனில், கடல் பயணத்தின் போது இப்படித் தொட்டுப் பார்த்ததின் விளைவாக ஐயப்பன் விரோதத்தை சம்பாதித்துக்கொள்ள நேரிட்டது. மடியிலுள்ள பொருளும் பறிபோய்விடக் கூடிய நிலைமை பிறந்தது. ஆகவே கிழவர் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு அந்தக் காதலர்களைப் பார்த்து ஒரு வரட்டுச் சிரிப்பு சிரித்தார். அந்தச் சிரிப்பைத் தொடர்ந்து துரை பேச ஆரம்பித்தான். அவர் பக்கம் நெருங்கி அமர்ந்து, "எப்படி யிருக்கிறது உடம்பு?" என்று அன்பு சிந்தினான்.
"நன்றாயிருக்கிறது — ஏன்; போலீஸ்டேஷனுக்கு தூக்கிக் கொண்டு போக வேண்டுமென்று யோசிக்கிறீர்களா — பயப்படாதீர்கள். இன்னும் சில விநாடிகளில் எழுந்து மெல்ல மெல்ல நடக்க முடியும் என்னால்!" என்று கூறிக்கொண்டே துரையின் தோளில் கையை வைத்து அழுத்தியவாறு எழுந்து உட்கார்ந்துகொண்டார் மாயாண்டி.
"ஐயப்பனுக்கு, காப்புப் போட்டுவிட்டார்களாக்கும்!" இது கிழவர்.
"இல்லை, அவனை மன்னித்து அனுப்பிவிட்டோம்!"
"மன்னித்து விட்டீர்களா; அப்படியானால் நீங்கள் எல்லாம் போலீஸ்காரர்கள் இல்லை போலும்!"
துரை மெதுவாக சிரித்தான். எனினும், காட்டிக்கொள்ளாமல், "நாங்கள் போலீசார் தான்! ஐயப்பன் கோஷ்டி, கெஞ்சினார்கள். இனிமேல் இதுபோல் செய்யவில்லையென்று காலில் விழுந்தார்கள், அதனால் விட்டு விட்டோம்" என்றான்.
"ஓகோ! அப்படியானால் என்னை விடமாட்டீர்கள். ஏன் என்றால் நான் கெஞ்சப்போவதில்லை!" என்று கிழவர் கம்பீரமாகப் பேச ஆரம்பித்தார். அவர்கள் மட்டும் உண்மையான போலீசாயிருந்தால் கிழவருக்கு சரியான பரிசு கிடைத்திருக்கும் அந்த வார்த்தைகள் வெளிவந்தவுடனேயே! இவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டு, தங்களுக்குள்ளாகவே, கிழவரின் தைரியத்தைப் புகழ்ந்து கொண்டார்கள். சிறிது நேரம் அமைதி நிலவியது. தன் எதிரே நிற்கும் அந்தப் பெண்ணை உட்காரச் சொல்ல வேண்டும்போலிருந்தது கிழவருக்கு.
"ஏனம்மா நிற்கிறாய்?" என்றார்.
"பரவாயில்லை" என தழுதழுத்த குரலில் பதில் சொன்னாள் பரிமளம், "உட்காரம்மா!" என்று கிழவர் ஒரே வார்த்தையில் பிடிவாதத்தை உணர்த்தினார். பரிமளமும் அவர் அருகே உட்கார்ந்தாள். கிழவருக்கு இப்போது என்ன பேசுவதென்றே தெரியவில்லை.
முதல் இரவு, இதே மனோராவின் மேலடுக்கிலே, தன்னால் தாக்கப்பட்டு, அவஸ்தைப்பட்ட அந்தக் காதலர்களின் முகத்தைக்காண கிழவர் மிகவும் கஷ்டப்பட்டார்.
அந்த நிகழ்ச்சியை மீண்டும் நினைவூட்ட வேண்டும் போலவும் இருக்கிறது, நினைவூட்டுவதற்கு சங்கடமாகவும் இருக்கிறது. அந்த எண்ண அலைகளால் ஏற்படும் வேதனையிருக்கிறதே; அதை கிழவரின் முகத்திலே நன்றாகக் காண முடிந்தது. துரை - பரிமளம் - இருவராலும்!
பேச்சை மாற்றலாம் என்று கருதிய துரை, கிழவரிடம், "ஆமாம் - அந்த ஐயப்பன் யார்? உங்களுக்கு நெடு நாள் பழக்கமா?" என்று கேட்டான்.
"போலீஸ் விசாரணையை இங்கே ஆரம்பித்து விட்டீர்களா?" கிழவர் சிரித்தார்.
"இல்லை—தொந்திரவாக இருந்தால் ஒன்றும் பேச வேண்டாம். ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்!"
"ஓய்வு! இந்தப் பழங்கட்டைக்கு இனிமேல் தான் ஓய்வு, ஓய்வுபெற்று, உடல் வளர்த்து, உலகத்தை ரக்ஷிக்கப் போகிறேனாக்கும்!"
"உங்களுடைய ஒவ்வொரு பேச்சிலும் உலகத்தைப் பற்றிய சலிப்பு பின்னியிருக்கிறதே! காரணம் என்ன?"
"காரணம் ஏன் கேட்க வேண்டும்; மண்ணை நோக்கி தொங்கிக் கொண்டிருக்கும் சருகுகள், காற்றிலே காம்பொடியும் வரையிலே மரத்தின் வாழ்வைப்பற்றி சலிப்பாகத்தானே பேசிக் கொண்டிருக்கும்."
"கிழவர்களின் சலிப்புக்கும் உங்கள் சலிப்புக்கும் வித்யாசமிருப்பதாக உணருகிறேன்."
"என்னைப்போல ஒரு கிழவனை இப்போதுதான் பார்க்கிறாய், அதனால் அப்படி சொல்கிறாய், நீ இதுவரை பார்த்த கிழவர்கள் எல்லாம் பேரன் பேத்திகளோடு விளையாடிக் கொண்டிருப்பவர்கள்—அல்லது பேரன் பேத்தி ஆள் இல்லையே என்று ஏங்குகிறவர்கள்—எண்பது தொண்ணூறு ஆண்டுகள் வாழ்ந்து அலுத்துப்போய்—இனியும் வாழ வேண்டுமானால் இளமை திரும்ப வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருப்பவர்கள், அப்படிப்பட்ட கிழவர்களைத்தான் நீ பார்த்திருக்கமுடியும். நான் அத்தகைய கிழவனல்ல—நான் ஒரு பைத்தியக்காரக் கிழவன். கிண்ணாரக் கிழவன் என்பார்களே; அது யாருமல்ல—நானே தான்!"
துரைக்கு, இன்னும் பேச வேண்டும்போல ஆசையா யிருந்தது—இங்கேயே நேரம் கடந்துவிட்டால்—பிறகு பொழுது விடிந்து விடும், போலீஸ் வேடம் வெளிச்சமாகி விடும். பரிமளா வேறு இருக்கிறாள். ஆகவே, அதை விட்டு உடனே புறப்பட வேண்டுமென்று தீர்மானித்தான். கிழவரிடம், "சரி வாருங்கள் போகலாம்" என்றான்; "எங்கே போவது?" என ஆவலாகக் கேட்டார் அவர். "எங்குமில்லை—நீங்கள் நினைப்பது போல போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகத் தேவையில்லை, இங்கிருந்து பக்கத்திலே புதுப்பட்டினத்தில் எங்கள் வீடு இருக்கிறது. அங்கு போய் இளைப்பாறலாம்."
"ஊஹும்—நான் எங்கும் வர விரும்பவில்லை."
"இப்படிக் கண்டிப்பாகப் பேசக்கூடாது - நீங்கள் எங்களுடன் புறப்படுவது தான் நல்லது!"
"என்னய்யா வம்பு—சாகப் போனவனை கொண்டு வந்து வைத்துக்கொண்டு, உயிரை வாங்குகிறீர்கள்?"
"நாங்கள் போலீசுகள்—எங்கள் கடமையைச் செய்ய வேண்டும்!"
கிழவரும் கண்டிப்பாகவே பேசினார். துரையும் அவரைப் போலவே பேசினான் - அப்படிப் பேசா விட்டால் கிழவரை, தான் நினைக்கிறபடி அழைத்துக் கொண்டு போக முடியாது என்பதை அவன் புரிந்து கொண்டான். பரிமளாவுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது, வயதான காலத்தில் அவரைப்போய் தொந்திரவு செய்வது.
"எழுங்கள் சீக்கிரம்!" என்றான் அதிகாரமாக துரை.
"நான் மட்டும்தான் இளிச்சவாயனா?—மற்றவர்களையெல்லாம் ஏன் விட்டீர்கள்—என்னை மட்டும் பிடித்துக்கொண்டு?"
"உங்களிடம் தான் காரியம் இருக்கிறது."
இந்தப் பதில் கிழவரைத் திணற அடித்துவிட்டது. துரை நினைத்துக்கொண்டு சொன்னது வேறாயிருந்தாலும் கிழவர் கலங்கிப் போய்விட்டார். இந்தக் கலக்கத்தில் அவரையுமறியாமல், அவரது கை மடியைத் தடவிப் பார்த்துக்கொண்டது.
"உம்—நான் வரத்தான் வேண்டுமா?"
"ஆமாம் - போலீஸ் உத்திரவுக்கு கீழ்ப்படிவது தானே நல்லது!"
"இது ஒரு புதிய போதனையா?—'போலீஸ் உத்திரவுக்கு கீழ்ப்படி'—என்று புதிய ஆத்திச்சூடியே எழுதலாம் போலிருக்கிறதே!"
கிழவர் நிற்பதற்கு முயற்சி செய்தார். அதற்குத் துரையும் துணை புரிந்தான்—"சிறிது தூரம் நடந்து—அந்தத் தோணிக்கு வந்துவிட முடியுமா?"
"ஓ—மறுபடியும் கடற் பயணமா?—ம்—நானே நடக்கிறேன்."
"கடற் பயணம், அதிக தூரமில்லை—புதுப்பட்டினம் வரையில் தான்!"
"என்னமோ போங்க, கள்ளத் தோணியை பிடித்தீர்கள்—ஐயப்பனை அடித்து விரட்டினீர்கள்—என்னை இழுத்துப் போகிறீர்கள்—அதுவும் போலீஸ் ஸ்டேஷனுக்கா என்றால் இல்லை! புதுப்பட்டினத்திற்கு!"
"தலையொன்றும் போய்விடாது வாருங்கள்!"
"தலை மட்டும் போகக்கூடாது அப்பனே!—உயிரோடு என்னை எங்கு தள்ளிப் புதைத்தாலும் எரித்தாலும் கவலையில்லை" என்று கூவினார் கிழவர்.
"சரிசரி வாருங்கள்!" என்று துரை அவரை அழைத்துக்கொண்டு தோணியிருந்த இடத்தை நோக்கி நடந்தான், பரிமளாவும் மற்றவர்களும் அவர்கள் பின்னே நடந்தனர். தோணியில், முதலில் கிழவரை ஏற்றிவிட்டான்—தோழர்கள் அனைவரும் ஏறிக்கொண்டனர். பரிமளா கரையில் நின்றாள்.
"உம்—நீயுந் தான்!" என்று கூப்பிட்டான் துரை. அருகே வந்தாள். அவளையும் தோணியில் தூக்கி தொப்பென்று போட்டான் அவன். துரை ஒரே குதூகலமாயிருந்தான் என்பதை அந்த செயல் எடுத்துக் காட்டிற்று. தோணி, புதுப்பட்டினத்தை நோக்கி, கரையோரமாகவே செல்ல ஆரம்பித்தது.
மறுநாள் காலை பட்டுக்கோட்டையின் கடைத் தெருவிலே வருவோர் போவோரையெல்லாம் பார்த்து ஒரு குரல், "சக்கரவர்த்தி தெரு எங்கேயிருக்கிறது?" என்று கேட்டுக்கொண்டேயிருந்தது. அது யாருடைய குரலாயிருக்க முடியும்? தங்கப் புதையலைத் தேடும் வெள்ளியம்பலத்தின் குரல் தான் அது!
யாரோ ஒரு கடைக்காரர் அம்பலத்திடம், மிகவும் விபரமாக சக்கரவர்த்தி தெரு இருக்குமிடத்தை சொல்லியனுப்பினார். அம்பலம் அந்த ஊர் முழுதும் சுற்றி, கடையாக சக்கரவர்த்தி தெருவைக் கண்டுபிடித்துவிட்டார். பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் வழி அதுதான்! அந்தத் தெருவிலே ஒரு வீட்டில் சென்று, "துக்காராம் சைக்கிள் கடை எங்கேயிருக்கிறது?" என்று விசாரித்தார். வீட்டுக்காரர்கள், தெருக்கோடியிலே அந்தக் கடை இருப்பதாக அறிவிக்கவே, வெள்ளியம்பலம் வேகமாக கடையைத் தேடிப் புறப்பட்டார்.
சிகப்பு, பச்சை, மஞ்சள், கருப்பு, வெள்ளை முதலிய பல வித வர்ணங்களிலே அமைந்த பத்து பதினைந்து சைக்கிள்கள் வரிசையாக வெளியே நிறுத்தப்பட்டிருந்தன. அவைகளில் சிலவற்றுக்கு 'பிரேக்' இல்லை—ஒரு சில சக்கரத்தை இழந்தும் நின்றுகொண்டிருந்தன. வெளியில் பார்ப்பதற்கு பகட்டான கடை. "துக்காராம் சைக்கிள் கம்பெனி" என்ற பெரிய எழுத்துப் போர்டு, அந்தக் கடை எல்லையையும் தாண்டி வெளியேயும் நீட்டிக்கொண்டிருந்தது.
உள்ளே போடப்பட்டிருந்த இரண்டு மூன்று நாற்காலிகளில் சில நண்பர்களை உட்கார வைத்துப் பேசிக்கொண்டிருந்தான் துக்காராம்.
நல்ல உயரமும், கெச்சலான வடிவமும், அசடு வடியும் முகமும், துக்காராமின் அடையாளங்கள். தன்னைப் படாடோபமாக அழகுபடுத்திக் கொண்டிருப்பதாக நினைத்து, அவன் ஒரு மஸ்லீன் ஜிப்பா போட்டிருப்பான். அந்த ஜிப்பா, அவன் உள்ளே போட்டிருக்கும் கருப்பு முண்டா பனியனை வெளியிலே காட்டிக் கொண்டிருக்கும். மெல்லிய நூல் போன்ற ஒரு தங்கச் சங்கிலியும் அவனது நெட்டைக் கழுத்தை அலங்கரித்தது. கையிலே ஒரு நாய்க்குட்டியுடன் கொஞ்சிக்கொண்டு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தான்.
"என்னா பிரதர்! ஒரே டல்லா இருக்கு லைப்!" — இது துக்காராம்.
"ஆமாம்ப்பா — அவ ஊருக்குப் போன பிறகு, துக்காராம், துக்கராமாக மாறிவிட்டாய்!" — இது ஒரு நண்பன்.
"பரிமளா, இந்தத் தெருவிலே நடக்காம இந்தத் தெருவே பாழாய்ப்போன மாதிரி தெரியுது — பாலைவனமாகக் காட்சி அளிக்குது!"
"கூடிய சீக்கிரம் உனக்கு பரிமளா பைத்தியம் பிடித்தே விடும்!"
"பைத்தியம் பிடிக்காவிட்டாலும், பரிமளா, பரிமளா என்று கத்திக்கொண்டிருந்தால் திருப்தியாயிருக்கும் போலிருக்குப்பா!"
"அல்லி, அல்லி என்று அர்ச்சுனன் ஒரு கல்லைப் போட்டுத் தேய்த்தானாமே; அதுபோல நீயும் எதையாவது தேய்த்துக் கொண்டிரேன்!"
"இப்படித்தான் யோசனை சொல்வீங்கடா நீங்க! அர்ச்சுனன் தேச்சது மாதிரி தேயின்னு சொல்றீங்களே தவிர, யாராவது ஒருத்தன் — அந்த அர்ச்சுனனுக்கு உதவி பண்ணின கிருஷ்ணன் மாதிரி எனக்கு உதவிசெய்ய வாரீங்களா?"
"அது சரியப்பா! என்னமோ எங்களால் முடிந்தது அவள் ஊரைத்தான் விசாரித்துச் சொன்னோம். அவளிடமே உன்னை அழைத்துப் போகமுடியுமா, அல்லியிடம் அர்ச்சுனனை அழைத்துப்போன மாதிரி!"
"ஏன் அழைத்துப் போனால் என்னவாம் — திறமை யில்லேன்னு சொல்லுங்கடா!"
"அழைத்துப் போகிறோம் — ஆனால் நீ, அர்ச்சுனன் மாதிரி, பாம்பாக மாறவேண்டுமே!"
"போங்கடா — போக்கற்றவனுங்களா! — சரி—சரி—நான் கொஞ்சம் கடைத்தெரு மட்டும் போய்ட்டு வர்ரேன்—டே பையா! கடையைப் பார்த்துக்க—அலோ! கையாலாகாத நண்பர்களே! நான் வருகிறேன் சாயங்காலம் பார்ப்போம்" என்று கூறியபடி துக்காராம், தன் நாய்க்குட்டியுடன் சைக்கிளில் ஏறிப் புறப்பட்டான். சைக்கிள் சிறிது தூரம் நகர்ந்தது. எதிரே, அம்பலம் ஒரு பையனிடம் துக்காராம் கடையை விசாரிக்க, அந்தப் பையன் "அதோ அவரே சைக்கிளில் வருகிறார்!" என்று துக்காராமைக் காட்டிவிட்டுப் போய்விட்டான்.
அம்பலம் விரைவாக வந்து, துக்காராமை நிற்கும்படி கையை உயர்த்திக் காட்டினார் — துக்காராம் சைக்கிளில் இருந்து இறங்கி, "யார், என்ன வேண்டும்" என்று ஆவலாகக் கேட்டான்.
---
கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்