அத்தியாயம் 12 · 13 / 52

அத்தியாயம் 12

Chapter 12

மூல ஸ்கேன் 110 (chapter-12 portion)-118

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

12

துக்காராம் சைக்கிளைப் பிடித்துக்கொண்டே நிற்க, அவனருகே அம்பலம் நெருங்கிச் சென்று "உங்களிடம் ஒரு முக்கிய சமாச்சாரம் பேச வேண்டும்!" என்று குழைவாகச் சொன்னார். "என்னிடம், முக்கிய சமாசாரமா? அடேடே என் வாழ்க்கையிலேயே இப்பதான் இப்படி ஒரு ஆளைப் பார்க்கிறேன். என்னெய்யா முக்கிய சமாசாரம்?" என்று இளித்துக்கொண்டே கேட்டான் துக்காராம்.

"தெருவிலே நின்றுகொண்டா பேசுவது? வாங்களேன் கடைக்குப் போவோம்!"

"மணிக்கணக்கா பேச வேண்டிய சமாசாரமோ? எனக்கு அவசரமா வேலையிருக்குதே!"

"அப்படி யொன்னும் பெரிய விஷயம் இல்லே! கடையிலே போய் உட்கார்ந்து பேசலாமென்று நினைச்சேன் — அவ்வளவுதான்!"

"அது சரி; நீங்க எந்த ஊரு?"

"நான் இருக்கிறது மருங்கப்பள்ளம்!"

"என்ன மருங்கப்பள்ளமா?"

துக்காராமின் உள்ளத்தில் புதிய உற்சாகம் கரை புரண்டது. தன் நெஞ்சங் கவர்ந்த பரிமளாவின் சொந்த ஊரும் மருங்கப்பள்ளம் தான் என்று அவன் முன்பே அறிவான். அம்பலமும் அவள் ஊர்தான் என்றதும் அவளைப் பற்றிய நிறைய விபரங்களை சேகரிக்கலாம் என்று மனக் கோட்டை கட்டினான். ஒரு சமயம் பரிமளாவே மனம் உருகி, இறுதியாக இந்த ஆளை அனுப்பிவைத்திருக்கிறாள் போலும் தூதாக — என்றும் கற்பனை செய்து கொண்டு களிப்படைந்தான். இந்த ஆசாமி பரிமளாவின் தகப்பனாராக இருந்து விட்டால் என்ன செய்வது; தான் பரிமளாவிடம் நடந்து கொண்ட குறும்புத்தனமான நடவடிக்கைகளுக்கு தண்டனை தருவதற்காக அவரே நேரில் வந்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையே என்றும் சிறிது அஞ்சினான். இந்த எண்ண அலைகள் அவனை சிறிது நேரம் மௌனத்திலாழ்த்தியது.

"என்ன தம்பி பேசாம நிற்கிறீங்க?" என்று கேட்டார் அம்பலம்.

"ஒன்றுமில்லை — வாருங்கள் கடைக்கே போகலாம்" என்று அம்பலத்தை அழைத்துக்கொண்டு துக்காராம் கடைக்குப் புறப்பட்டான். அம்பலம் வாயிலிருந்து எத்தகைய வார்த்தைகள் உதிரப் போகின்றனவோ என்று ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டே உட்கார்ந்தான் துக்காராம். அவனுடைய நண்பர்கள் எல்லாம் முன்பே போய்விட்டது அவனுக்கு இப்போது மகிழ்ச்சியாக இருந்தது.

"டே பையா! இரண்டு கிளாஸ் டீ வாங்கிட்டு வாடா!"

"வேண்டாம் தம்பீ—நான் டீ சாப்பிடுற பழக்கமே இல்லை!" என்றார் அம்பலம்.

"காப்பி சாப்பிடுங்க—ஏ, காப்பி வாங்கிட்டு வாடா!"

"ஐயோ—காப்பியா? ஊஹும்!"

"சரி! சோடா!—பையா—போடா!"

"சோடாவே தொடமாட்டேன்!"

"காஷ்—?"

"என் அனாவசியமா செலவு—எனக்கு அந்த சீனித் தண்ணிகளே புடிக்காது—காசு போற தெண்டம்!"

"பாதாம் கீர் சாப்பிடுங்களேன்—"

"அடாடா—விடமாட்டீங்க போலிருக்கு—சரி—உங்க ஆசையைக் கெடுப்பானே?"

"பாதாம் கீர் வாங்கிட்டு வாடா பையா!" என்று கூறியபடி துக்காராம் மணிப்பர்சை திறந்தான் காசு எடுப்பதற்காக! பர்ஸில் ஒரு அணாவோ இரண்டு அணாவோ தான் இருந்தது. அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல்—"ஓகோ! நூறுரூபா தாளா இருக்குதோ—சரி—சரி இந்தா! போயி சில்லறை மாத்தி பாதாம் கீர் வாங்கிட்டு வா!" என்று பர்சை பையனிடம் மூடியபடி விட்டெறிந்தான். எஜமானனுடைய தந்திரத்தைப் புரிந்து கொண்ட பையனும் பர்சுடன் ஓட்டமாக ஓடிவிட்டான். அவனுக்கு ஊர் சுற்றிப் பார்க்க சில மணி நேர ஓய்வு கிடைத்ததே என்ற சந்தோஷம்.

பையன் போன பிறகு துக்காராம், அம்பலத்தைப் பார்த்து சமாச்சாரத்தை அறிந்து கொள்ளும் ஆவலை தன் முகக்குறிப்பின் மூலம் வெளியிட்டான்.

"மருங்கப்பள்ளத்திலே உங்களுக்கு யாரையாவது தெரியுமா?" அம்பலத்தின் இந்தக் கேள்விக்கு உடனடியாக பதில் சொல்ல துக்காராம் தயங்கி, பிறகு தன்னைத் தானே சமாளித்துக்கொண்டு, "ஆமாம் — தெரியும்!" என்றான்.

"தெரிந்த ஆள் — ஆணு, பெண்ணு?"

"இது என் இந்த புதிய கேள்வியைக் கேட்கிறீங்க — யாராயிருக்கணும் என்று நினைக்கிறீங்க — நீங்க?"

"பதினாறு முழம் என்று தான் நினைக்கிறேன் —"

"இல்லை — தப்பு! பன்னிரண்டு முழம்தான் இப்போதெல்லாம்!" என்று கூறிவிட்டு சிரித்தான் துக்காராம்.

"குறும்புக்காரத் தம்பிதான் — அதான் அந்தப் பெண்ணு சொக்கிப்போயி கிடக்கு!"

துக்காராம் வெட்கத்தால் தலை குனிந்து கொண்டான். பரிமளாவிடமிருந்து தித்திப்பான சேதியொன்று வந்திருப்பதாக யூகித்துக் கொண்ட துக்காராமினால் மகிழ்ச்சியைத் தாங்க முடியவில்லை.

"பரிமளா ஏதாவது சேதி சொல்லி அனுப்பியதா?" என்று அவசரமாகக் கேட்டே விட்டான் அவன்.

"அடிசக்கை! பேரையே சொல்லிட்டீங்களே தம்பீ! — உம்; காதலுக்கு கண்ணு ஏது? யாராயிருந்தாலும் — அவுங்க யாரு என்னாண்ணு பாக்காம — பேசிடறது தான் காதல் லக்ஷணம்னு சொல்லக் கேட்டிருக்கேன். எங்க காலத்திலே எல்லாம் காதலாவது கத்தரிக்காயாவது—இப்பத்தான் அதையெல்லாம் கேள்விப்படுறோம்!" என்றார் அம்பலம்.

"என்ன அப்படி சொல்லிட்டீங்க! உங்க காலத்திலே காதல் இல்லியா? உங்க முப்பாட்டன் காலத்துக்கு முன்னேயே காதல் இருந்திருக்கு!—நேத்திகூட வள்ளித் திருமணம் நாடகம் பார்த்தேன்—வள்ளியும் முருகனும் காதலை அள்ளி அள்ளிப் பருகினாங்களே—அடா அடா! அதிலே ஒரு காதல் பாட்டு வருகிறது கேளுங்கள்!" என்று ஆனந்த மிகுதியால் துக்காராம் பாட்டு ஆரம்பித்து விட்டான்.

"காயாத கானகத்தே!" என்ற பாட்டை ஆரம்பித்து, "மேயாத மான்! புள்ளி மேவாத மான்! எந்தன் மேயாத மான்!" என்று பிர்க்காக்களை உருட்ட ஆரம்பித்தான்.

"சரிதான்; காதலிலே அரைப் பயித்தியமாயிருக்கிறதாக்கும்!" என்று நினைத்துக் கொண்ட அம்பலம் அவனது பாட்டை அருமையாக ரசித்தார்.

"தம்பி; காதல் ரொம்ப காலமா உலகத்தை ஆட்டி வைக்குது—ஆண்களை பைத்தியமாக்குது—பெண்களை பித்துக்குளி ஆக்குது—என்பதை ஒரு பாட்டாலேயே விளக்கிட்டீங்க!"

"பாட்டு மாத்திரமா? இதோ வசனம் கேளுங்க!

"ஏ—குறவள்ளியே! கொண்ட காதலை கண்ட துண்டமாக்காதே! தினைப்புனத்திலே ஆலோலம் பாடிக் கொண்டிருக்கும் உன்னை தாலேலோ பாடும் தாயாக மாற்ற இந்த வேடன் விரும்பி விட்டான்! காதல் நிலவே! ஆசை நட்சத்திரமே! இன்ப சூரியனே! நேச வானமே! பாச விளக்கே! மோசம் பண்ணாதே! மோடி செய்யாதே!"

"போதும் தம்பி போதும்! காதலைப்பற்றி ஒரு காலக்ஷேபமே பண்ணி விடுவீர் போலிருக்கு!"

"அதில் என்ன ஆக்ஷேபனை! இதோ கேளுங்க காலக்ஷேபத்தையும்!—சந்திரனாகப்பட்டவன் தாரையின் முகார விந்தத்திலே மயங்கியவனாய் அவள் தன்னுடைய குரு பத்தினி என்பதையும் மறந்து அவளோடு கூடுவதற்கு புறப்பட்டான், அதைப் போலவே அந்த தாரையாகப்பட்டவள், சந்திரனாகப்பட்டவன் தன் மாணவன் என்பதை மறந்து அவனோடு கூடுவதற்கு உடன்பட்டாள். தாரையின் ரூபலாவண்யமோ ரதியையும் மிஞ்சக் கூடியது! சந்திரனின் ரூபலாவண்யமோ மன்மதனையும் மிஞ்சக்கூடியது! இருவரும் இன்பமாக இருந்தபோது தாராதேவியாகப்பட்டவள் அளித்த முத்தங்களின் வடுக்கள் தான் இன்றைக்கும் சந்திரனின் முகத்திலே கருப்பாகத் தெரிகிறது. அதைக் களங்கமென்று புகல்வார்கள் காதல் மகத்துவம் புரியாதவர்கள். தாரையினுடைய கணவனுக்கு வேண்டுமானால் சந்திரனின் முகத்திலே யிருக்கிற கருப்பு களங்கமாயிருக்கலாம் என்று கூறலாம். இப்படியாகத்தானே சந்திரனும் தாரையும் பாபச் செயலிலே ஈடுபட்டு, குருவின் சாபத்திற்கு ஆளானார்கள்."

"பலே தம்பி—பலே! காதலைப்பத்தி ஒரு ராமாயணமே எழுதுவீங்க போலிருக்கு!"

"அதுவும் எழுதியிருக்கிறேன்—இதோ!" என்று அங்குள்ள பெட்டியைத் திறந்து ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தை எடுத்து அம்பலத்திற்கு முன்பு விரித்துக் காட்டினான்.

"இந்தக் கதைக்குப் பெயர்; 'இன்பலோகம் அல்லது இரண்டு ஜோடிப் புறாக்கள்'. இதை எழுதி முடித்து ஒரு வாரமாகிறது. இதில் வரும் கதாநாயகிக்குப் பெயர் பரிமள காந்தி என்பது."

"ஓகோ—அந்தப் பெயரையே........."

"ஆமாம்—ஞாபகார்த்தமாக!—இந்தக் கதையில் வரும் சம்பவங்கள் எல்லாம் ஒரே பயங்கரம்! ஒரே காதல்! ஒரே மர்மம்! ஒரே திடுக்கிடல்! ஒரே மகிழ்ச்சி! ஒரே மோகம்! ஒரே சோகம்! ஒரே வேகம்!"

"ஒரே தாகம்!"

"உம்—அதுவுமிருக்கு!"

"ஓகோ! இதோ தர்ரேன்—அடேடே, பாதாம் கீர் வாங்கப் போனவன் ஆளையே காணுமே—" என்று தண்ணீரை கொடுத்துவிட்டு மீண்டும் நோட்டை விரித்தபடி; "இந்த இன்பலோகக் கதையிலே ஒரு விசேஷம் என்னவென்றால்; காதலர்கள் ரெண்டுபேரும் செத்துப்போயி கூட அவர்கள் ஆசிரியர் விடவில்லை. அதாவது நான் தான் ஆசிரியர்! என்ன செய்திருக்கிறேன்னா, செத்த காதலர்கள் இருவரும்—மேல் உலகத்திலே போயி ஜாலியா இருக்கிறாங்க!—அங்கேயும் ஒரு வில்லன் வர்ரான்—அங்கேயும் சண்டை சச்சரவு—இப்படி வச்சுட்டேன்—கடைசியாகப் பரமசிவன் தலையிட்டு, அந்த வில்லனை நரகலோகத்துக்கு அனுப்பிவிட்டு, காதலர்கள் இருவரையும் சேர்த்து வைக்கிறார் என்று கதை முடிகிறது."

"நல்ல முடிவு தம்பி!"

"இந்தக் கதையை என் சினேகிதர் ஒருவர் படித்து விட்டு இதை இங்கிலீஷிலே மொழி பெயர்க்கலாம் என்று துடியாய்த் துடிக்கிறார்—முதல்லே, தமிழிலே வெளியிடுறதா—இங்கிலீஷிலே வெளியிடுறதா—அப்படிங்கிற சந்தேகத்திலே கதையை அச்சுக்குக் கொடுக்க தயங்கி கிட்டு இருக்கேன்."

"ஆண்டவன் புண்யத்திலே அச்சாகி வரட்டும்"

"இதிலே ஒரு இடம்—படிக்கிறேன் கேட்கிறீங்களா?"

"அப்புறம் சாவகாசமாக படிக்கலாம் தம்பி—இப்ப வந்த விஷயத்தைப் பேசி விடுகிறேன்."

"என்ன விஷயம்?—அதைச் சொல்லுங்க"—

"நீங்க—என்னோட நம்ப ஊருக்கு வரணும்?"

"மருங்கப்பள்ளத்துக்கா?"

"ஆமாம்!"

"ஏன்—எதற்காக?"

"பரிமளாவுக்கும் உங்களுக்கும் ஒரு மாதிரி இருக்கிற விஷயம், அவுங்க அப்பாவுக்கு தெரிஞ்சு போச்சு!"

"அய்யோ!"

"பயப்படாதிங்க—அந்தப் பெண்ணு உங்கமேலே உயிரை வச்சிருக்கு—"

"ஆகா—அதிலென்ன சந்தேகம்!"

"நான் ஒரு மாதிரி அவுங்க அப்பனை சமாதானம் பண்ணி வச்சிருக்கேன். அவன் உங்களை பாத்துட்டான்னு சரின்னு சொல்லிடுவான்—நான் வந்து பரிமளாவுக்கு மாமன் முறை வேணும்—எனக்கு அந்தப் பெண்ணு மேல உயிருதான்! அது இஷ்டத்துக்கு விரோதமா என்னாலே நடக்க முடியாது—நீங்க ஊருக்கு வந்தா கல்யாணத்தை ஒரு தினுசா முடிவு பண்ணி விடலாம்—"

"பரிமளா என்ன சொன்னது?"

"உங்களை அழைத்து வரும்படி அதுதானே விலாசமெல்லாம் கொடுத்தது!"

துக்காராமினால் சந்தோஷத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமலிருக்க முடியவில்லை. அவருடன் மருங்கப்பள்ளம் புறப்படுவதற்குத் தயாரானான்.

துக்காராமும், அம்பலமும் மருங்கப்பள்ளம் கிராமத்தின் எல்லையை அடைந்து விட்டார்கள்.

"கிராமம் மிகவும் அழகாயிருக்கு" என்றான் துக்காராம்.

"கிராமம் ஏன் அழகாயிருக்காது! கிளியல்லவா இருக்கிறது இங்கே!" என்று கிண்டல் செய்தார் அம்பலம். துக்காராம் பெண் போல நாணிக்கொண்டான். மருங்கப்பள்ளத்துச் சிவன் கோயிலுக்கு கொஞ்ச தூரத்தில் இருவரும் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது அம்பலத்திற்கு துக்காராமிடம் ஏதாவது குறிப்பறிய வேண்டும் என்று அவசர புத்தி உதயமாயிற்று ஆசைக்காரரல்லவா அவர். ஆகையால் அவர் துக்காராமைப் பார்த்து, "அதோ அந்த கோயிலை நீங்க பார்த்திருக்கீங்களா தம்பி?" என்று கேட்டார். எந்தவித முகமாற்றமும் காட்டாமல் துக்காராம், "இதுமாதிரி எத்தனையோ கோயில் பார்த்திருக்கேன்" என்று பதில் கூறினான். அதற்கு மேல் அவனை குறுக்கு விசாரணை செய்து தன் குறிக்கோளை கெடுத்து விடக்கூடாது என்று எண்ணிய அம்பலம், துக்காராமை அழைத்துக் கொண்டு தன் வீடு நோக்கி நடந்தார்.

---

கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்