அத்தியாயம் 13 · 14 / 52

அத்தியாயம் 13

Chapter 13

மூல ஸ்கேன் 119-128 (chapter-13 portion)

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

13

துக்காராமும் அம்பலமும் வாய்க்காலின் ஓரமாகவுள்ள ஒரு கூறை வீட்டை அடைந்தனர். தோட்டம் சூழ்ந்த அந்த வீட்டை சுற்றிச் சுற்றிப் பார்த்தான் துக்காராம். அவனுக்கு எண்ணம், ஒருவேளை இதுதான் பரிமளாவின் வீடோ என்று! முதலில் அம்பலம் வீட்டுக்குள்ளே நுழைந்தார். "டேய் ராமா!" என்று சப்தம் கொடுத்தார். பதறி அடித்துக்கொண்டு ஓடி வந்தான் ஒரு அசடு வழியும் வேலைக்காரப் பையன். அவன் வந்த வேகத்தில் அம்பலத்தின் மீது முட்டிக்கொள்வான் போலிருந்தது. குள்ளமான உருவமும், இளித்துக்கொண்டேயிருக்கும் வாயும், ஆடிக்கொண்டேயிருக்கும் தலையும் அந்த வேலைக்கார ராமனின் தனி லக்ஷணங்கள். உத்திரவுக்காக காத்து நின்ற அவனிடம், அம்பலம்—"என்னடா விசேஷம்?" என்று கேட்டார்.

"விசேஷம் என்னங்க......நீங்கதான் சொல்லனும்" என்று ராமன் இளித்தான்.

"அடக் கழுதை! என்னையே திருப்பிக் கேக்கிறியா? டேய்—இந்த பாரு—இந்த அய்யா வெளியூருக்காரரு!"

"பாத்தாலே தெரியுதுங்க எஜமான்!"

"நம்ப வீட்டு விருந்தாளியா வந்திருக்காரு—அவரை ஒழுங்கா கவனிச்சுக்க! அவருக்கு என்னென்ன வேணுமோ......"

"சரிங்க..." என்று ராமன் இளித்தான். அம்பலம் துக்காராமை உபசரித்து; உள்ளேயுள்ள பலகையில் உட்கார வைத்து, தானும் கொட்டாவி விட்டபடி அங்குள்ள சாய்வு நாற்காலியில் சாய்ந்தார்.

"என்ன, வீட்டில் நீங்க மாத்திரம்தான் தனியா?" என்று ஏதோ கேட்க ஆரம்பித்த துக்காராமிடம் அம்பலம்,

"இல்லை இல்லை! வீடெல்லாம் ஊருக்குள்ளேயிருக்கிறது. இது நமக்கு தனி பங்களா மாதிரி—இங்கேயிருந்து எனக்கு வயல் வெளி தோட்டம் துரவு கவனிக்க ரொம்ப சௌகரியம். அதனால்—இங்கே ஒண்ணு கட்டிப்போட்டேன்" என்று பதில் கூறினார்.

"அவுங்க வீடெல்லாம் ரொம்ப எட்டியாக்கும்!"

"ஓ—தம்பிக்கு அவசரம் போல இருக்கு!—அவுங்க வீடு கொஞ்சம் எட்டித்தான் இருக்கு......தம்பீ!—அவசரப்பட்டு அந்தப் பக்கம் போய்ட வேண்டாம்—ஏன்னா; அவுங்க அப்பன் கொஞ்சம் முரடன். இந்தக் காதல், கீதல் எல்லாம் அவனுக்கு ஒரு மண்ணாங்கட்டியும் புரியாது!"

"பார்த்தீங்களா! உலகத்திலே காதல் சரியாக பரவாததினால் எவ்வளவு சங்கடம் வருகிறது? அதனால் தான் என்னுடைய புஸ்தகத்திலே எழுதியிருக்கிறேன்; கடலில் உள்ள மீனுக்கும், காட்டில் உள்ள மானுக்கும், தேன் குடிக்கும் வண்டுக்கும், வயல் நண்டுக்கும் காதல் வழங்கிய கடவுளே! மனித ஜாதிக்கு அதை வழங்காமல் அதற்குள் உன் கடையை ஏன் மூடிவிட்டாய்? எப்படி என் கருத்து என்று நினைக்கிறீங்க!"

"நல்லாயிருக்கு தம்பீ! நீங்க சொந்தமாகவே இதை எழுதுனீங்களா! இல்லை........"

"பல ஆராய்ச்சி செய்து எழுதியிருக்கிறேனாக்கும். பழைய காலத்து கல்வெட்டுன்னு கேள்விப்பட்டதில்லியா? சாக்ரடீஸ் என்றே ஒரு மனிதர் இந்தியாவுக்கு வந்து அகத்தியரோடு பேசிக்கொண்டிருக்கும்போது, அகத்தியர் காதலைப்பற்றி இப்படிச் சொல்லியிருக்கிறார். அந்த வார்த்தைகளை கல்லிலே செதுக்கி வச்சிருக்காங்க!—அதுவும் அராபி பாஷையிலே!—அதைத் தேடிப் பிடிச்சு கொண்டாந்து, நம்ப கதையிலே சேத்தேன்!"

துக்காராமின் பேச்சினிடையே, ராமன் குறுக்கிட்டு—

"என்னங்க, நண்டும் வண்டும் தேடிப்பிடிக்க அகத்தியூரு வரையிலும் போய் அலைந்திருக்கீங்க—எனக்கிட்ட சொன்னு கூட, நம்ப வயக்காட்டிலே பிடிச்சாந்து தருவேனே!"

"அய்யோ—இது காதல் நண்டப்பா?"

"கிராமத்திலே கிடைக்காதாக்கும்!"

"ஏன் கிடைக்காது! காதலுக்கு கிராமம், நகரம் என்ற பேதம் ஏது?—காதல் என்பது ஒரு ரோடு ரோலர்! மேட்டையும் பள்ளத்தையும் சமப்படுத்தும் சமதர்ம தத்துவம் தான் காதல்—அதற்கு கிராமம், நகரம் என்ற வித்தியாசமே கிடையாது!"

"ஓ! அப்படீங்களா?"

"பாவம் உனக்கு இதெல்லாம் தெரியவில்லை. உனக்கு மட்டுமா? உலகத்துக்கே இந்த அரிய விஷயங்கள் தெரிய வேண்டுமானால், என்னுடைய புத்தகம் அச்சு வாகனம் ஏறவேண்டும்—"

என்று தனக்குள்ளாகவே மிகுந்த கவலைப்பட்டுக் கொண்டான் துக்காராம். ராமனும், துக்காராமும் பேசிக்கொண்டிருக்கும் போது எங்கேயோ நீண்ட சிந்தனையில் இருந்த அம்பலம், திடீரென எழுந்து—"ஏ, ராமா! போடா வெளியே!" என்றார். ராமன், வெளியே மாயமாய்ப் பறந்து விட்டான். துக்காராமுக்கு ஒன்றும் புரியவில்லை. விழித்தான். அவனைப் பார்த்து அம்பலம்:

"தம்பீ! கொஞ்சம் இருங்க—நான் போய் பரிமளாவிடம் நீங்க வந்திருக்கிற விஷயத்தை சொல்லிவிட்டு வந்துடுறேன்—" என்றார்.

வேண்டாமென்று கூறுவானா துக்காராம்! "சரி சரி" என்று ஆமோதித்துக்கொண்டே எழுந்தான். "ராமன் இருப்பான் இங்கே......கொஞ்ச நேரத்தலே வந்து விடுறேன்" என்று அம்பலம் அதை விட்டுப் புறப்பட்டார். போகும்பொழுது அவர் ராமனைத் தனியாகக் கூப்பிட்டு, "ஏ பயலே! அவரை ஜாக்கிரதையா கவனிச்சுக்க—எங்கயும் அவர் போகாம பாத்துக்க—" என்று உஷார் படுத்திவிட்டு கிளம்பினார். ராமனும் துக்காராமுக்கு பேச்சுத் துணையாக வந்து சேர்ந்தான்.

அம்பலம், நேராக பரிமளாவின் வீட்டுக்கு நடந்தார். நடக்கும்போதே பலவித எண்ணக் குழப்பங்கள் அவரைப் படாதபாடு படுத்தின. எப்படியும், துக்காராமின் மூலமாக தங்கம் புதைக்கப்பட்ட இடத்தை தெரிந்துகொள்ளவேண்டும் என்ற உறுதியான முடிவு மாத்திரம் அவருக்கு உற்சாகமூட்டிக்கொண்டேயிருந்தது—பரிமளாவைப் பார்த்து அவளிடம் அவளது காதலன் வந்திருக்கிறான் என்று சொன்னால் அவள் என்ன நினைப்பாள்? தன் வார்த்தையை நம்பி, அவள் தன் வீட்டுக்கு வருவாளா? அப்படியே வந்தால் தான் துக்காராமிடமிருந்து தான் ரகசியத்தைப் பெறுவதற்கு அவள் எப்படி துணை செய்ய முடியும்? அவள் வராவிட்டால் துக்காராம் தன்னை நம்பாமல் போய்விடக் கூடுமே! பரிமளாவுக்காகத் தான் அவனை அழைத்து வந்திருக்கிறேன் என்று என் மீது அவன் நல்ல அபிப்பிராயம் வைக்க வழி என்ன? என்றெல்லாம் யோசித்துக்கொண்டே போனார் அம்பலம்.

அவருடைய இந்த யோசனைகளையெல்லாம் தரைமட்டமாக்குவதுபோல செய்தி கிடைத்தது, அவர் பரிமளாவின் வீட்டில் நுழைந்ததும்!

தாண்டவன் கோபாவேசமாக நின்று கொண்டிருந்தார். அங்கே அம்பலம் விஷயத்தை விசாரித்தார். அன்றிரவு தூக்கிச் செல்லப்பட்ட பரிமளா, திரும்ப வீட்டுக்கே வரவில்லை என்பதைப் புரிந்துகொண்டார்.

"யார் தான் தூக்கிப் போயிருக்க முடியும்?" என்று தெரியாதவர் போல கேட்டார்.

"வேறு யார்? எல்லாம் அவளுடைய கள்ள புருஷனுய்த் தானிருக்கும். இங்கேயிருந்தால் செத்துவிடுவோம், என்று பயந்து அவனோடு ஓடிவிட்டாள் மானங் கெட்ட பெண்! அன்னைக்கு மாத்திரம்; நான் மட்டும், ஒரு நிமிஷம் முந்தியிருந்தா—அவளைத் துண்டு துண்டா வெட்டிப் போட்டிருப்பேன்?" என்று பற்களைக் கடித்துக்கொண்டார் தாண்டவன்.

"காரியத்தை இவ்வளவு தூரம் வளர்த்துட்டீங்களே—இப்ப, பரிமளாவைத் தேட வேண்டாமா?" என்று அம்பலம் கேட்டார்.

"போலீசிலே ரிப்போர்ட்டு பண்ணி தேடுவேன்னு நினைக்கவேண்டாம்—அதுதான் இந்த தாண்டவங்கிட்ட நடக்காது! நானே தேடுவேன்—நானே கண்டுபிடிப்பேன்—நானே அவுங்களை கண்ட துண்டமா நறுக்குவேன்—வந்த அவமானம் வந்தாச்சு! இனிமே என்ன ஆனா என்ன?"

அம்பலத்தின் மூளை வேலை செய்தது—பரிமளா காணாமற் போய்விட்ட சேதி ஊரில் பரவினால், அது துக்காராமுக்குத் தெரிந்து, அவனும் ஓடிவிடுவானே என்று பயந்தார். அதனால் அவர் தாண்டவனிடம் தந்திரமாகப் பேசினார்.

"பரிமளா காணாமற்போன சேதி யாருக்கும் தெரிய வேண்டாம். அவள் பட்டுக்கோட்டையில் இருப்பதாகவே ஊரில் கூறிவிடுவோம்—அவளை தேடுகிற வேலையை ரகசியமாகவே செய்வோம்—இல்லாவிட்டால் ஊரில் கேவலமாகப் பேசுவார்கள்."

தாண்டவனும் அம்பலத்தின் பேச்சுக்கு தலையசைத்தார். ஆனாலும், அவரது ஆத்திரம் நிலைகொள்ளாததாயிருந்தது. தன்னுடைய பரம்பரையிலேயே இல்லாத பயங்கரமான களங்கம் இப்போது தன்னை சுற்றிக்கொண்டதாக எண்ணிக் குமுறினார். அம்பலமோ, "பரிமளா எங்குதான் போயிருப்பாள்?" என்ற சிந்தனையுடன் திரும்பினார். ஒரு வேளை அந்தப் போலீஸ்காரர்கள் கையில் சிக்கியிருப்பாளோ—அப்படி சிக்கியிருந்தாலும், போலீஸ்காரர்கள் அந்தச் செய்தியை உடனே வெளியிட்டிருப்பார்களே—இது என்ன; ஒரே மாயமாயிருக்கிறது—என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டார். இப்போது துக்காராமுக்கு என்ன பதில் சொல்வது? அது வேறு பிரச்சினை!

துக்காராம் பார்வைக்கு அசடு போலத்தான் தெரிகிறான். ஆனாலும், தங்கம் இருக்கும் இடத்தை அவ்வளவு சுலபமாக சொல்லிவிடுவானா? அடக் கடவுளே! இந்த அசடனிடம் போய், அவ்வளவு பெரிய அந்தரங்கம் சிக்கிக் கொண்டிருக்கிறதே! என்றெல்லாம் நொந்துகொண்டார் அம்பலம். அவனைச் சந்தோஷப்படுத்தியே காரியத்தை சாதிக்கவேண்டும் என்று மாத்திரம் அவர் முடிவு கட்டிக்கொண்டார். கடைசி காலத்தில் வேண்டுமானால்—கத்தியைக் காட்டி, காரியத்தை சாதிக்கலாம் என்றும் தீர்மானித்துக்கொண்டார். சந்தோஷமாக காரியத்தை சாதிக்க பரிமளா ஊரில் இருந்தால் பரவாயில்லை—அவளோ காணப்படவில்லை—இப்போது பரிமளா ஊரில் இருந்தால் தான் துக்காராமை, இரண்டு நாள் தங்கவைக்க முடியும்—இந்தக் குழப்பத்தின் இறுதியில் அம்பலம் ஒரு நல்ல தீர்மானத்திற்கு வந்தவர் போல, பரபரப்பாக நடந்தார்—வீட்டுக்குள் நுழையாமல் வெளியே வாசலில் நின்றபடியே "ராமா!" என்று கூப்பிட்டார். அவனும் ஓடி வந்தான். அவன் பின்னே, துக்காராமும் வந்து எட்டிப் பார்த்தான். அம்பலம் அவனிடம்; "தம்பீ! பழம் தான்!—கொஞ்சம் இருங்க—இதோ வந்து விடுகிறேன்" என்று கூறி ராமனை அழைத்துக்கொண்டு வயல் பக்கமாகப் போகத் தொடங்கினார்.

ராமன், என்றைக்குமில்லாமல் எஜமான் தன்னை தனியாக அழைத்துப் போகக் காரணம் புரியாமல், கைகட்டியபடி பின்னே சென்றான். அம்பலம் ராமனிடம் பேச ஆரம்பித்தார்.

"ராமா! நீ ஒரு காரியம் செய்யவேண்டும்!"

"சரிங்க!"

"கெட்டிக்காரத்தனமா செய்வாயா?"

"ஏங்க செய்யமாட்டேன்—என்னமோ; அன்னைக்கு ஒரு நாளு, தவறிப்போயி; நம்ப வீட்டுக்கு வந்த அய்யரு சாமியைப் பார்த்து, தண்ணி சாப்பிடுறீங்களான்னு கேட்கிறத்துக்கு பதிலா தண்ணி, போடுறீங்களான்னு கேட்டுட்டேன்—அவ்வளவு தானுங்களே!"

"ஏய்—அதெல்லாம் போகட்டும்—பட்டுக்கோட்டை ஆள் வந்திருக்குதே!"

"ஆமாம்—என் பக்தன்!"

"என்னது?"

"ஆமாங்க—ராமபக்தன் தானே துக்காராம்!"

"போடா கழுதை!—நான் சொல்றதைக் கேளுடா!—அந்த துக்காராம் இருக்கானே, அவனுக்கு நம்ப தாண்டவன் மகள் பரிமளா மேலே காதல்!"

"சரிங்க—நடக்கட்டும்!"

"என்னடா நடக்கட்டும்?"

"காதல்!"

"அது ஒண்ணும் நடக்கலே!"

"ஓடுதுங்களா?"

"ஓடிட்டுது!—ஏ, கழுதை! அந்தப் பரிமளா எங்கேயோ ஓடிவிட்டாள். நான், இவனை ஒரு முக்கியமான காரியத்துக்காக அழைச்சிகிட்டு வந்திருக்கேன்—என்ன தெரியுமா?—பரிமளாவும் துக்காராமும்......"

"அய்யய்யய்யே!—உங்களுக்கு ஏன் எஜமான் இந்த வேலை எல்லாம்—அவுங்க எப்படியோ போறாங்க—"

"சீ!—அவுங்களை ஒண்ணும் நான் ஜோடி சேர்க்கப் போவதில்லேடா?—பரிமளா இங்க இருக்கிறதா சொல்லி இவனை அழைச்சுட்டு வந்துட்டேன்—அவள் இங்க இல்லே! அதனால் நீ என்ன செய்யணும்னா?........."

"சொல்லுங்க செய்றேன்!"

"பரிமளா, வீட்ல இருக்கிற மாதிரியும், நீ அவளுகிட்ட இருந்து தூது வர்ர மாதிரியும் இந்த துக்காராமுகிட்ட நடந்துக்கணும்!"

"சரிங்க!"

"இப்ப, நான் அவனுக்கு நேரா, உன்னை பரிமளா வீட்டுக்கு போய்விட்டு வான்னு அனுப்புவேன். நீ போற மாதிரி போயி, கொஞ்ச நேரம் கழித்து திரும்பி வந்து, பரிமளா சேதி சொன்னது மாதிரி சொல்லனும்—"

"ஆகட்டுங்க!"

"என்ன சொன்னாள் என்று சொல்லுவே?"

"காதலரே!—பிராண நாதா!—பிரிய புருஷா!—உங்களைக் காணாமல் என் கண்கள் கெடிகாரத்தின் பெண்டூலம் போல இங்கும் அங்கும் ஆடுகிறதே!"

"டே டே—சபாஷ்!—இதெல்லாம் எங்க படிச்சே?"

"படிக்கணுங்களா?—அல்லி அர்ஜுனா தெருக்கூத்து பார்த்தா போறாதுங்களா?—அதோட, துக்காராம் வேற இத்தனை நாழி இதானெ பேசிகிட்டு இருந்தாரு!"

"சரி—சரி—வா! பரிமளா, சொன்னதாகச் சொல்லு அவனிடம்; வீட்ல அப்பா, அம்மா உத்திரவு பயங்கரமாயிருப்பதால், நேரா சந்திக்கிறது கஷ்டமாயிருக்குன்னு அவள் சொன்னதாகச் சொல்லு!"

"சரிங்க—இனிமே எல்லாம் நான் பாத்துக்கிறேன்."

அம்பலம், ராமனின் முதுகில் தட்டிக்கொடுத்தபடி வீட்டுக்குத் திரும்பினார்.

துக்காராம் வாசலில் நின்றபடியே அம்பலத்தின் வருகையை எதிர்பார்த்து இருந்தான்.

"தம்பீ! பரிமளா, வீட்லதான் இருக்குது!—அவுங்க அப்பனோட கட்டுப்பாடு ரொம்ப அதிகம்! அதனால் நான் ஜாஸ்தி பேச முடியிலே—நீங்க வந்திருக்கிற விஷயத்தை மட்டும் ஜாடையாச் சொன்னேன்—நீங்க ஏதாவது சேதி சொல்லி அனுப்பவேண்டுமானால், இதோ ராமனை ஏற்பாடு பண்ணியிருக்கேன்—அவனிடம் சேதி அனுப்புங்கள்" என்று அம்பலம் கூறிவிட்டு வீட்டுக்குள்ளே போய்விட்டார்.

துக்காராம், ராமனை பரிவோடும், புதிய பாசத்தோடும் பார்த்துக்கொண்டே அவனிடம் நெருங்கினான்.

"என்ன ராமா! போய் வருகிறாயா?"

"உத்திரவு கொடுங்கள்—இந்த ராமன் அனுமாரைப் போல தூது போய் வருவான்" என்று மண்டியிட்டு அமர்ந்துகொண்டான் ராமன்.

துக்காராம், தன் காதலிக்கு சேதி அனுப்பினான்.

"இதை அவளிடம் சொல் ராமா!—அவளைப் பிரிந்தது முதல் அன்ன ஆகாரமின்றிக் கிடக்கிறேன் என்று சொல்!"

"ஊஹூம்—நான் பொய் சொல்லமாட்டேன்—இப்பத் தானே; இரண்டு சட்டி சோறு என் கையாலேயே போட்டேன் உங்களுக்கு!"

"ராமா!—அவளை எப்போது பார்க்கலாம்?—எங்கே பார்க்கலாம்?—என்று கேள்—பார்க்க முடியாவிட்டால்; அவளிடம் ஒரு முத்தமாவது வாங்கி வா!"

"செய்கிறேன்—செய்கிறேன்" என்று கூறிவிட்டு ராமன் ஓட்டம் பிடித்தான்.

---

கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்