அத்தியாயம் 14 · 15 / 52
அத்தியாயம் 14
Chapter 14
மூல ஸ்கேன் 128 (chapter-14 portion)-138 (chapter-14 portion)
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
14
புதுப்பட்டினம் போய்ச் சேர்ந்த பின்னர் கிழவர் மாயாண்டியும் நன்றுக எழுந்து நடமாடக்கூடிய அளவுக்கு பலம் பெற்றார். பரிமளாவுடனும், துரையுடனும் கலகலப்பாகவே பேச ஆரம்பித்தார். துரை, போலீஸ் அதிகாரி இல்லை என்றும்—ஏதோ ஒரு காரணத்திற்காகவே அவன் போலீஸ் வேஷம் போட்டுக்கொண்டு வந்திருக்கிறான் என்றும் கிழவர் புரிந்துகொண்டார். ஆனால் என்ன காரணம் என்பது மட்டும் அவருக்குப் புரியவில்லை. கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்பினார். அதற்கு நேரம் எப்போது ஒய்வாகக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்.
துரையும், கிழவர்—தனது போலீஸ் வேடத்தைப் பற்றி ஏதாவது கேட்டுவிடுவார் என்பதற்காகவே தனது தோழர்கள் தன்னோடு வைத்துப் பேசிக்கொண்டே இருந்தான். அந்த வீட்டிலேயிருந்த நேரம் போக்குக்கு நல்ல வேலை கிடைத்தது. நான்கு பேராக உட்கார்ந்துகொண்டு ஒரே குதூகலத்துடன் நேரம் ஆடுவதும், பரிமளாவும், கிழவரும் பக்கத்திலேயிருந்து அதை ரசிப்பதுமாகவே பல மணி நேரங்கள் கழிந்தன. குழியிலே விழப்போகும் கேரம் காய் குதித்து வெளியே வந்து குழியோரத்திலே உட்கார்ந்து கொள்ளுமல்லவா — அப்போதெல்லாம் கிழவர் தன்னை நினைத்து சிரித்துக்கொள்வார். தானும் கடலிலே விழுந்து மீண்டும் கரைக்கு வந்த நிகழ்ச்சி அவருக்கு ஞாபகம் வந்துவிடும் போலும்.
துரை, கேரம் ஆட்டத்திலேயே ஈடுபட்டிருப்பதும் அவனது தோழர்கள் அவனை விட்டு அகலாதிருப்பதும் அவருக்கு மிகத் தொல்லையாக இருந்தது. கடைசியாக ஒரு முடிவுக்கு வந்து தைரியமாகவும் வெளிப்படையாகவும் தான் நினைத்ததை சொல்லியே விட்டார்.
"நீங்கள் எல்லாம், உங்கள் நண்பர் துரையை, என்னோடு சிறிது நேரம் தனியாகப் பேசவிடவேண்டும்" என்று அவர் கூறியதும், நண்பர்கள் எழ ஆரம்பித்துவிட்டனர். துரையும் அதைத் தடுக்க முடியாதல்லவா! கிழவர் என்னென்ன கேட்பாரோ, எப்படியெப்படி பதில் சொல்லவேண்டுமோ என்றெல்லாம் முன்கூட்டியே துரை யோசித்து வைத்திருந்தாலும்—இப்போது சிறிது அச்சமடைந்தான். நண்பர்கள் துரையிடம் விடைபெற்று ஒதுங்கிச் சென்றார்கள். துரை கிழவரின் இதழசைவை ஆவலோடு எதிர்பார்த்திருந்தான். பரிமளாவும், கிழவரின் பேச்சு எதைப் பொருத்ததாயிருக்கும் என்று தெரியாமல் விழித்தாள் — கிழவர் அங்குமிங்கும் மெதுவாக உலவிக்கொண்டேயிருந்தார். 'என்ன ரகசியம் பேசவேண்டும்' என்று துரை தானாகக் கேட்க விரும்பவில்லை. கிழவரும் சீக்கிரத்தில் பேச்சை ஆரம்பிக்கவில்லை. உலவிக்கொண்டேயிருந்தார், கிழட்டுப் புலி போல! கிழவரின் வாயை தானே திறப்பது என்று முடிவு கட்டிக்கொண்ட துரை, "பரிமளாவும் இங்கு இருக்கக் கூடாதோ?" என்று உண்மையாக கேட்பதுபோலவே கேட்டான்.
"பரவாயில்லை—இருக்கட்டும், துரை! அப்படியொன்றும் அச்சத்திற்குரிய ரகசியம் எதுவும் பேசப்போவதில்லை. நீ போலீஸ் அதிகாரி என்பது உண்மைதானா—தெளிவுபெறவேண்டும் நான்! தயங்காமல் உடன் பதில் கூறு!" என்று கிழவர் கண்டிப்பான குரலில் கேட்டார். சந்தேகத்துடனோ—கேட்கலாமா கூடாதா என்ற ஐயத்துடனோ—தயவான குரலில் கேட்ட கேள்வியாக அது இல்லாததால் துரையும் உண்மையான பதில் சொல்லிவிட எண்ணினான்.
"நான் போலீஸ் அதிகாரி அல்ல!"
"அப்படியானால் வேஷம் போடவேண்டிய அவசியம்?"
"அவசியமில்லாமலா போடுவேன்!"
"எவனாவது கள்ளத் தோணியில் சரக்கு ஏற்றிப் போனால் அவனை மிரட்டி, அந்த சரக்குகளை கஷ்டப்படாமல் பயன்படுத்திக்கொள்வதாக்கும்—நல்ல பிழைப்பு! நரி, புலி வேஷம் போட்டுக்கொண்டு கழுதை வேட்டையாடிய கதையாக இருக்கிறது."
இந்த வார்த்தைகள் துரைக்கு சிறிது ஆத்திரத்தை அளித்தனவாயினும், அவன் கிழவர்மீது வைத்திருக்கும் மதிப்பு காரணமாக மௌனமாக இருந்தான்.
"மௌனமாக இருப்பதால் நீ ஒத்துக்கொண்டதாக நான் கருதமாட்டேன்—கள்ளத் தோணியை வேட்டையாடத்தான் வந்தீர்களா—அல்லது வேறு நோக்கமா?" என்று கிழவர் தொடர்ந்து பேசினார்.
"ஒரு மர்ம மனிதரைக் கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் தான் அந்த முயற்சி எடுத்தேன்."
"யார் அந்த மர்ம மனிதர்?"
"நீங்களேதான்—உங்களுடைய பேச்சும் செயலும், எனக்குப் பெரியதோர் குழப்பத்தை உண்டுபண்ணிவிட்டது — எப்படியாவது தங்களைக் கண்டுபிடித்து, உங்களுடைய அந்த நடவடிக்கைகளுக்குக் காரணம் என்ன, என்று தெரிந்துகொள்ளவே விரும்பினேன்."
கிழவருக்கு ஆச்சரியம் மேலிட்டது.
"நான் மர்ம மனிதனா? இல்லை — தப்பு! தப்பு!!" என்று பெரிய குரலில் சொன்னார்.
"மர்ம மனிதர் இல்லாவிட்டால், ஆகாயத்தைப் பார்த்து அவ்வண்ணம் பிரார்த்திப்பானேன்? எங்கள் இருவரையும் திடீரெனத் தாக்கிக் கீழே தள்ளுவானேன்? கள்ளத் தோணியிலே ஏறிச் செல்வானேன்? கடலிலே விழுந்து உயிர்விட முயற்சிப்பானேன்?"
"இதெல்லாம் மர்ம மனிதனுக்கு அடையாளமா? மண்டை குழம்பியவனுக்கு அடையாளமப்பா இதெல்லாம்! நான் ஒரு பைத்தியக்காரன்! இதை நிச்சயமாகத் தெரிந்து கொள்!"
"நிச்சயமாகத் தெரிகிறது—நீங்கள் பைத்தியக்காரர் இல்லை!"
"எப்படித் தெரிகிறது?"
"பைத்தியக்காரன், தன்னை பைத்தியக்காரன் என்று ஒத்துக்கொண்டதே இல்லை!"
"இது முற்றிய பைத்தியம்—அதையும் ஒத்துக்கொள்கிறது!"
"ஆனால் அதை ஒத்துக்கொள்ள—நான் அரைப் பைத்தியமாக இருக்க வேண்டுமே!"
கிழவருக்கு துரையின் பேச்சைக் கேட்க சிரிப்பு வந்து விட்டது. சிரித்துக்கொண்டே பேசினார்.
"என்னைப் பற்றி எந்தத் தகவலும் தெரிந்துகொள்ள விரும்பவேண்டாம். போகப்போக நான் யாரென்று தானே தெரியும்—ஆனால் ஒன்று; நான் கானகத்தில் காயும் நிலவு! தற்பெருமை பேசுகிறேன் என்று எண்ணாதே!
நிலவோடு என்னை ஒப்பிட்டுக் கொள்கிறேனே யென்றும் சிரிக்காதே! உண்மையாகவே சொல்லுகிறேன்; நான் கானகத்தில் காயும் நிலவு" என்று கிழவர் அழுத்தந் திருத்தமாகப் பேசிவிட்டு, சற்று வேகமாக அடியெடுத்து வைத்து உலவ ஆரம்பித்தார்.
துரை, பரிமளாவைப் பார்த்துக்கொண்டு நின்றான்—பரிமளா, கிழவரின் நடையை ரசித்துக்கொண்டு நின்றாள். சிறிது நடந்தவர், திரும்பிவந்து துரையிடம் நின்று;
"எல்லாம் சரி — வயதான என்னைக் தொல்லை கொடுத்து, 'நீ யார்?', 'நீ யார்?' என்று உயிரை வாங்குகிறாயே; நீங்கள் இருவரும் யாராம்? அதைச் சொல்லேன்!" என்று குறும்பாகக் கேட்டார். துரை பேசாமல் நின்றான்.
"எனக்குத் தெரியாதென்று நினைக்கிறாயா? ஒன்று நிச்சயமாகத் தெரியும்—நீங்கள் இருவரும் கள்ளக் காதலர்கள். நேற்று இரவு, நீங்கள் இருவரும் அந்த அறையில் பேசிக்கொண்டிருந்தது என் காதில் விழாமல் போகவில்லை. கிழம் தூங்கியிருக்கும் என்று எண்ணிக்கொண்டு பேசியிருக்கிறீர்கள். கதவுகளைக் கூட வெளிப்பக்கமாக பூட்டிப் போட்டாய்—நான் போய்விடுவேன் என்று பயந்து! உம்—கதவுகளைப் பூட்டினீர்கள்! என் காதுகளைப் பூட்ட முடியுமா? — பரிமளாவும், நீயும் எங்கே போய் ஒளிந்து கொண்டு வாழ்வது என்று யோசித்தீர்கள் அல்லவா?"
துரையும், பரிமளாவும் சிரித்துக் கொண்டார்கள்.
"அய்யோ—உலகம் தெரியாத பிள்ளைகளே! இந்தக் கண்மூடி ஜெகத்திலே காதலாவது புடலங்காயாவது! எனக்குக் காதலர்களைக் கண்டாலே பிடிப்பதில்லை—அவர்கள் மீது ஒரு அனுதாபம் ஏற்படுகிறது — ஆனால் அவர்களைப் பாராட்ட வேண்டும் என்ற ஆசை எழுவதே கிடையாது!"
"வயதானவர்களுக்கே அப்படித்தான்"—
இந்தப் பதில் பரிமளா சொன்னாள்.
"என்ன என்ன" என்று கேட்டார் கிழவர் அவசரமாக!
"அந்தி வானத்து சூரியனுக்கு அல்லி மலர் மீது வெறுப்புத்தானே வரும்"—பரிமளா இதுபோலக்கூறினாள்.
"ஏன் அப்படி?" என்றார் கிழவர்.
"அந்திச் சூரியன் உலகை விட்டு விடை பெறுகிறவன். அவன் போன பிறகு, நிலவும் அல்லியும் சந்திப்பார்கள் என்பது அவனுக்குத் தெரியும் — அதனால் தான், தனக்கு கிடைக்காத அல்லி, நிலவுக்குக் கிடைக்கிறதே என்று எண்ணி, அல்லி மலரை வெறுக்கிறான் சூரியன்!"
"அது போல.........?"
"அல்லி மலர் போன்ற காதல் வாழ்வை, அந்தி வானத்து சூரியன் போன்ற கிழவர்கள் வெறுக்கிறார்கள்."
"ஆமாம்! அது உண்மை தான்" என்றான், துரை. அதற்கு விளக்கமும் கொடுத்தான்.
"வாலிபர்கள், வயோதிகப் பருவத்து நடவடிக்கைகளை வெறுக்கிறார்கள்."
கிழவருக்கு கொஞ்சம் கோபங்கூட வந்துவிட்டது.
"வயோதிகர், அனுபவித்துப் பார்த்ததை வெறுக்கிறார்கள். உங்களைப் போன்ற வாலிபர்கள், அனுபவித்திராத வயோதிகத்தையல்லவா வெறுக்கிறீர்கள்?"
உடனே பரிமளா கேட்டாள்;
"அப்படியானால், தாத்தாவுக்கு காதல் அனுபவம் உண்டு போலும்?"
"நிச்சயமாக, அந்த மோசமான அனுபவம் இல்லை."
"அப்படியானால், நீங்கள் — அனுபவித்துப் பார்க்காததை வெறுக்கலாமா?"
பரிமளாவின் இந்த திடீர்க் கேள்விக்கு, கிழவர், பதில் சொல்ல முடியாமல் திணறிவிட்டார். அங்குமிங்கும் உலவினார். பிறகு துரையிடம்,
"தம்பீ! சரியான பொருத்தம்—நல்ல திறமைசாலி! உனக்கேற்றவள்—உன்னுடைய வாழ்க்கை முழுதும் ஒரே விளையாட்டாகவும்—வேடிக்கையாகவும்—இன்பப் பொழுது போக்காகவும் அமையும். அதற்கேற்ற அரசி இவள்!"
"இன்பப் பொழுது போக்காக மட்டுமல்ல; இலட்சியக் கனவாகவும் இருக்கும்" என்று உறுதியோடு சொன்னான் துரை.
"இலட்சியமா? ஆமாம் தம்பீ—அது உனக்குக் கனவாகத்தான் போய் விடும்! உன் காதலியைப் பற்றித் தவறாகக் கூறுகிறேன் என்று கருதாதே! காதல் மாயையில் சிக்கியோர் யாரும் கடமையை நிறைவேற்றியதாக நான் படித்ததில்லை.
பரிமளாவுக்கு கோபமே வந்துவிட்டது.
"சரி பெரியவரே! காதல் மாயையில் சிக்கியோர் கடமையை நிறைவேற்றவில்லை — ஒத்துக்கொள்கிறேன் உங்களுக்காக! — ஆனால் கடமை வீரர்கள் பலர் காதல் மாயையில் சிக்கியிருக்கிறார்கள் என்பதையாவது ஏற்றுக்கொள்வீர்களா?" உடனே, துரை இடைமறித்து—
"அவ்வளவு ஏன் பரிமளா; நாம் காதலில் சிக்கியிருக்கிறோமே தவிர, காதல் மாயையில் சிக்கவில்லையே—" என்றான். உடனே கிழவர்;
"காதலோ—மாயையோ—எப்படியோ—எதிலோ—சிக்கியிருக்கிறீர்கள் — அது வரையில் ஒத்துக்கொள்ளுங்கள்" என்றார்.
"சிக்கலில் அவிழ்க்க முடிந்த சிக்கலும் இருக்கிறதே!" — இது துரை.
"வார்த்தைக்கு வார்த்தை வளர்த்துக்கொண்டே போவானேன்—துரை! இப்போது நீங்கள் இருவரும் என்ன தீர்மானம் செய்திருக்கிறீர்கள்?" என்று பேச்சை மாற்றினார் கிழவர்.
பேச்சு சுவாரஸ்யத்தில் ஈடுபட்டிருந்த பரிமளா, கொல்லைப் பக்கமாக ஏதோ சப்தம் கேட்கவே அங்கு விளக்குடன் சென்று பார்த்தாள். இருட்டிலே ஒரு பூனை ஓடியது தான் தெரிந்தது. மறுபடியும் விளக்குடன் கிழவரும் துரையும் இருக்குமிடத்திற்கு வந்துவிட்டாள். ஆனால், கொல்லைப் புறத்திலே ஒரு மனித உருவம், மறைந்துகொண்டு நின்றதை பரிமளா கவனிக்காமலே வந்துவிட்டாள்.
அந்த உருவம், விளக்கு வெளிச்சம் தன் மீது பட்டு விடாதபடி அங்குள்ள ஒரு மரத்தோடு மரமாக ஒட்டிக்கொண்டு நின்றது. அதன் கையிலே ஒரு பளபளப்பான கத்தியுமிருந்தது. பரிமளா, வீட்டுக்குள் திரும்பியவுடன் அந்த உருவம் கொல்லைப் புறத்து வாசல் பக்கம் வந்து நின்று கொண்டது.
அந்தப் பக்கம் கவனத்தை செலுத்தாத துரையும் பரிமளாவும் கிழவரின் பேச்சிலே முழு கவனத்தை செலுத்தினர். "அடுத்த ஏற்பாடு என்ன?" என்று கேட்ட கிழவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் துரை நின்றான்.
"உம்—காதலிக்க மட்டும் தெரிகிறது! காப்பாற்றத் தெரியவேண்டாமா? இந்தப் பக்கத்திலே எங்கேயிருந்தாலும் உங்களைப் பிடித்துவிடுவார்கள் — நீங்கள் பேசிக்கொண்டதிலிருந்து, பரிமளாவின் அப்பன் பெரிய முரடனாகத் தெரிகிறது — அது மட்டுமல்ல; என்னைப் போல காதல் எதிரியாகவும் காணப்படுகிறான். ஆகவே, வெளி தேசங்களுக்கு ஓடி விடுங்கள். ஓடுவதுதானே காதல் புத்தகத்தின் மூன்றாவது அத்தியாயம். முதல் அத்தியாயம் கலகத்தோடு முடியும்—இரண்டாவது அத்தியாயம் எதிர்ப்பு சக்திகளின் ஆர்ப்பாட்டத்தோடு முடியும்—மூன்றாவது அத்தியாயம் ஓட்டத்தோடு ஆரம்பமாகும்.!"
"காதலைப் பற்றி ஒரு புத்தகமே எழுதுவீர்கள் போலிருக்கிறதே" என்று கேலி செய்தான் துரை.
"அது என்ன பெரிய காரியம்! உங்களோடு இருந்து தினம் தினம் 'டைரி' எழுதினால், அதுவே ஒரு காதல் புத்தகமாகிவிடுகிறது!"
பரிமளா சிரித்துவிட்டாள்—துரையும் கிழவரின் பேச்சு சாதுர்யத்தைத் தனக்குள்ளாக வியந்துகொண்டான்.
"நான் சொல்வதைப் பேசாமல் கேளுங்கள்!—இங்கிருந்தால் உங்களுக்கு ஆபத்து! இலங்கைக்கு ஓடி விடுங்கள்" என்றார் கிழவர்.
"இலங்கைக்கா? வேண்டாம், வேண்டாம்!" என்று துரை உரக்கக் கத்திவிட்டான்.
"ஏன்—இலங்கையிலே பிழைப்பு கிடைக்காது என்று? அல்லது அனுமதி வாங்க முடியாது என்று? கவலைப்படாதே! இருக்கவே இருக்கிறது, கள்ளத் தோணி — அங்கு சென்றால் நீங்கள் நிம்மதியாக வாழ நான் இடம் தருகிறேன்."
"போவதற்கு வழியோ — அல்லது அங்கு சென்று வாழ்வதற்கு மார்க்கமோ இல்லாமல் அல்ல, நான் இதைச் சொல்லுவது!—இலங்கையில் நான் இனி அடியெடுத்து வைக்கமாட்டேன்."
"ஏன், இலங்கையை இப்படி வெறுக்கிறாய்? அது வேற்றூர் பூமி என்று?"
"இல்லை — இல்லை! இலங்கைதான் நான் பிறந்தத் தரணி—"
"என்ன — இலங்கையில் பிறந்தாயா?"
பரிமளாவும் திகைத்துவிட்டாள் — துரை, பரிமளாவைப் பார்த்துக்கொண்டே,
"ஆமாம் — இலங்கையில் தான் பிறந்தேன். இந்த விஷயம், என் பரிமளாவுக்குக் கூடத் தெரியாது — என் முழுக் கதையையும் சொல்லவேண்டிய அவசியம் இதுவரை ஏற்படவேயில்லை. என் வாழ்வின் சில பகுதிகள் மட்டுமே, பரிமளா தெரிந்திருக்கமுடியும்."
"இலங்கையில் பிறந்த காரணத்தால், அங்கு மறுபடியும் செல்லக்கூடாது என்பது எனக்கு விளங்கவில்லையே தம்பீ!"
"என் கதை, மிக விசித்திரமானது — மிக வேதனையானது! பெரியவரே! என் வாழ்க்கை ஏட்டின் இளமைப் பகுதி—முழுவதும் கண்ணீர்! கண்ணீர்!! கண்ணீர்!!!"
"சொல்லேன் கேட்போம்—"
"சொல்லத்தான் போகிறேன்—
"காதல் தேவையற்றது—எனக்குப் பிடிப்பதில்லை—என்றெல்லாம் சொன்னீர்களே; அந்தக் காதல் மட்டும் எனக்குக் கிடைத்திராவிட்டால் நான் புழுதி மண்ணுகப் போயிருப்பேன்—இந்தப் பரிமளாதான், என் சோக வாழ்விலே, ஒரு சுந்தரத் திருப்பத்தை உண்டாக்கினாள் — ஆமாம்—அவ்வளவு வேதனை நிறைந்த வெள்ளக்காடு என் வாழ்வு! எந்த இளைஞனும் என்னைப்போல இவ்வளவு பெரிய சோகச் சுமையை தூக்கிக்கொண்டு நடந்திருக்கவே முடியாது!—"
"கதைக்கு முன்னுரையை அதிகமாக எழுதாதே!—எங்கே உன் கதையைச் சொல்லு!"
"இதோ சொல்லுகிறேன்" என்று கனைத்துக் கொண்டான். பரிமளா, அத்தானின் அழகு வழியும் முகத்தையே பார்த்தாள். கிழவரும் துரையின் கதை கேட்கத் தயாரானார். கொல்லை வாயிலில் நின்ற பயங்கர உருவமும், சுவர் பக்கம் நெருங்கி வந்து நின்று காதை உள்ளே நீட்டிக்கொண்டு கதையை எதிர்பார்த்தது.
---
கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்