அத்தியாயம் 15 · 16 / 52
அத்தியாயம் 15
Chapter 15
மூல ஸ்கேன் 138 (chapter-15 portion)-146 (chapter-15 portion)
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
15
துரை தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.
"தோட்டத் தொழிலாளி என் அப்பா—!" என்று கதையைத் துவக்கியதுமே, மாயாண்டிக் கிழவர் குறுக்கிட்டு "அப்படியானால், இங்கிருந்து குடியேறிய தமிழர்தான் என்று சொல்லு!" எனக் கேட்டார். 'ஆமாம்', என்று தலையசைத்துக்கொண்டே, துரை தொடர்ந்தான்.
"தமிழகத்திலே பிறந்தவர்தான் என் தந்தை. தாயகத்தில் பிழைத்திட வழியில்லாத காரணத்தால் விழியிலே நீர் பெருக்கி, வெளிநாட்டுக் கரையோரங்களிலே மோதிச் சீரழியும் லட்சோபலட்சம் தமிழ்ப் பெருமக்களிலே ஒருவர்தான் அவரும்! என் தந்தையின் தந்தை—என் தாத்தா, தமிழ் நாட்டிலே பெரிய சீமானாக வாழ்ந்தவர். இப்போது அவர் வாழ்ந்த இடத்திலே புல் முளைத்துப் போய்விட்டது.
தாத்தாவின் தமிழ்நாட்டு வாழ்க்கை மிகமிக ஆடம்பரமானது. அவரது வீடு பெரிய மாளிகையாம்! இப்போது குட்டிச்சுவரைக் காணமுடியாது அங்கே—மாபெரும் கோயிலொன்று கட்டி, அதிலும் மரம் செடி முளைத்துப் போயிருக்கிறது—ஆண்டுக்கொரு பெரும் விழா நடத்துவாராம் தாத்தா! அதிலே ஆயிரம் பிராமணர்களுக்கு சொர்ண தானம் செய்வாராம். இடையிலே மாதம் ஒருமுறை பிராமணர்களுக்கு சமாராதனை! தான தர்மங்கள்! இப்படி, அவர் வீட்டில் விழா இல்லாத நாளே கிடையாது! வேட்டை! வேட்டை!! என் தாத்தா சேகரித்த பணமேட்டை கரைத்துக் கொண்டிருந்தனர், தானம், தருமம், பிராமண போஜனம் என்ற பெயரால்! தாத்தா, தன் மகனுக்கு—அதாவது என் அப்பாவுக்கு நடத்திய திருமணத்திற்குக்கூட பெரும் தொகை கடன் வாங்க வேண்டியிருந்ததாம்—கடன் முற்றியது, சொத்து அழிந்தது!
சொர்ணதானங்களும், அன்னதானங்களும்—இறந்த காலத்து நிகழ்ச்சிகளாக தாத்தாவின் மனக்கண் முன் தோன்றி புண்ணை அதிகப்படுத்தின. போஜனத்திற்கு வந்தோர், தானம் பெற கானம் பாடியோர் யாருமே இப்போது வரவில்லை. அற்ற குளத்தில் பறவைபோல் ஆயினர் சுற்றத்தார், சூழ்ந்திருக்கும் சொந்தக்காரர் அனைவரும்! தாத்தா, மனமுடைந்தார். வீடு, வாசல், மாடு, மனை—அனைத்துமே கடனுக்குக் காட்டப்பட்ட அடமானப் பொருளாக ஆகிவிட்ட பிறகு—அவையனைத்தும் கடன்காரர்களைச் சேர வேண்டிய நிலைமை ஏற்பட்ட பிறகு, இனி கௌரவத்தோடு எப்படி வீதியில் உலவ முடியும் என்ற வேதனை அவரைக் குடைய ஆரம்பித்து விட்டது! ஒரு காலத்தில் 'ஓகோ!' என்று வாழ்ந்தோம்—இன்று தெருவிலே நிற்கிறோம்—சீந்துவாரற்றுப் போய்விட்டோம்!—என்ற நிலை பிறந்து விட்ட உச்சக் கட்டத்தில் தாத்தா, தன் மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள, அப்பாவையும், அம்மாவையும் தனியே விட்டுவிட்டு, தற்கொலை செய்து கொண்டார்.
அப்பாவும் அம்மாவும் வாலிப வயதினர். தாத்தாவின் முடிவு அவர்களைத் தத்தளிக்கச் செய்தது. அம்மாவின் குடும்பம் மிக மிக ஏழ்மைக் குடும்பம்—அதுவும் நாதியற்ற குடும்பம். தாத்தா, தன் மகனுக்கு ஒரு ஏழைப் பெண்ணையே திருமணம் செய்ய வேண்டுமென்று அந்தப் பெண்ணை திருமணம் செய்து வைத்தாராம், பல பிரமுகர்களின் எதிர்ப்புக்கிடையே! பாட்டி, அப்பா, அம்மா மூவரும் தமிழ் நாட்டில் வாழ வழியின்றித் தவித்தார்களாம்.
சீமான் வீட்டு செல்லப்பிள்ளையாக வளர்ந்த காரணத்தால், அப்பாவுக்கு எந்தத் தொழிலும் செய்ய இயலவில்லை, பழக்கமுமில்லை. விவசாயத் தொழிலில் ஈடுபடலாம் என்று முடிவு கட்டி அந்த ஊர் அய்யர் ஒருவரிடம் அப்பா சென்றாராம். அந்த அய்யர், என் தாத்தாவிடம் பல ஏக்கரா நிலங்களை புரோகிதத் தொழிலுக்காக சன்மானமாகப் பெற்றவர். அப்பா, அவரிடம் சென்று நிலத்தை சாகுபடி செய்யும் பொறுப்பை தனக்குத் தருமாறு கேட்டாராம். அய்யரோ, மறுத்து விட்டார். தாத்தா, தானமளித்த நிலம்—அதை உழுது பயிரிட்டு தானியத்தை அளக்கும் குத்தகைக்காரன் வேலையாவது கொடுங்கள் என்று கெஞ்சியிருக்கிறார் அப்பா. அந்த வஞ்சகனோ, 'உழவு மாடு வாங்க உன்னிடமேது பணம்?' என்று உரத்தக் குரலில் கேட்டு விட்டு, கதவைத் தாளிட்டுக் கொண்டானாம். அப்பா, பாட்டியிடம் விஷயத்தைச் சொல்லி அழுதிருக்கிறார். பாட்டிக்கு என்ன தெரியும்; அவர்களும் புலம்பி யிருப்பார்கள்—தமிழ் நாட்டில் வாழ முடியாது என்று முடிவு ஏற்பட்டுவிட்டது! கையில் ஓடேந்தி, 'காசு தாரீர் அய்யா!' என்று வீதியிலே கிளம்புவதற்கு முன்பு ஏதாவது ஒரு வழி தேட வேண்டுமென்று யோசித்தார்கள்! 'திருப்பதி வெங்கடாஜலபதியே! வழி காட்டாயோ, இந்த திக்கற்றவருக்கு!' என்று பாட்டி அழுதார்கள்—வழி காட்டவில்லை வெங்கடேசர்—தாத்தா செய்து போட்ட வைரமாலை தான் ஒளி காட்டியது!
'தில்லை நடராசா! தொல்லை தீராயோ!' என அழுதார்கள் பாட்டியம்மாள்! தங்க வீடு சிரித்தது! தணல் அணைக்க தயாபரர் தயவு புரியவில்லை! இந்தக் கொடுமையான நேரத்திலே தான் இலங்கைத் தீவு, தன்னை வசப்படுத்திக் கொள்ள உழைப்பாளர்களைக் கூவி அழைத்தது! இலங்கையின் காடு மேடுகளை அழித்து கவினுறு சோலையாக்க, கப்பலிலே ஏறினார்கள் ஆயிரமாயிரம் தமிழர்கள். அவர்களோடு எங்கள் ஏழைக் குடும்பமும் சேர்ந்து கொண்டது! அப்பா, அம்மா, பாட்டி மூவரும் இலங்கையிலே தோட்ட வேலை பார்க்கத் தொடங்கி விட்டார்கள். 'குளிர் கொட்டும் வேளையிலே எங்கள் குடும்பம் வேலைக்குப் புறப்படும்—நானும் மனைவியுமாவது வாலிப வயதினர். என் அன்னைக்கோ கிழப்பருவம். தளர்ந்த உடல். தசையெல்லாம் நடுங்கும். நடக்க முடியாமல் நடப்பார்கள். தேஜஸ் குறையாது என் தந்தை பாதுகாத்த அந்த தேகம் தேயிலை பறித்து தேய்ந்தே விட்டது!' என்பதாக, என் அப்பா, பாட்டியைப்பற்றி தன் டைரியிலே எழுதி வைத்திருந்தார்," என்று கூறிவிட்டு துரை பெருமூச்சு விட்டான். அவன் கண்களிலே கலக்கம் படர்ந்தது—மாயாண்டிக் கிழவரும் அசைவற்ற நிலையிலே கதையை ஆவலோடு கேட்டுக்கொண்டிருந்தார். கதை கூறும் போது இயற்கையாகப் பெண்களின் முகத்தில் ஏற்படும் பிரதிபலிப்புகள் பரிமளாவின் முகத்திலும் மின்னி மின்னி மறைந்துகொண்டிருந்தன.
"டைரியிலே, அப்பா, இன்னும் ஒன்று எழுதியிருக்கிறார்—அதையும் படித்து விட்டு, என் பாட்டியின் திருமுகத்தையும் ஒருமுறை நினைத்தால், இப்போதுகூட என் இருதயம் வெடித்து விடும் போலிருக்கிறது!—பாட்டி, பழுமாகப் போய்த்தான் செத்தார்கள்—ஆனால் அவர்கள் மண்ணோடு கலப்பதற்கு முன், உலகத்தில் சந்திக்க வேண்டிய துன்பங்கள் எல்லாவற்றையும் தொகை தொகையாகச் சேர்த்து சந்தித்து விட்டார்கள்.
'என் அருமைத் தாயார் இலங்கை வந்த பிறகுகூட சேர்ந்தாற்போல நான்கு நாட்கள் பட்டினி கிடந்தார்கள்—எனக்கு மகன் பிறந்தான்—அந்தப் பிரசவச் செலவுக்குப் பணமில்லை. அதற்காக, என் தாயார், தன் உணவுக்கு ஏற்பட்ட தானியத்தை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக விற்று, ஒரு நாள் இரண்டு நாள் பிரசவச் செலவை செய்திருக்கிறார்கள். எனக்கு மகன் பிறந்தான். என் தாய் பட்டினி கிடக்கிறார்கள். அய்யோ, நான் அவர்களுக்கு மகனாகப் பிறந்தேனே—பாவி!' என்று என் தந்தை எழுதியிருக்கிறார் டைரியிலே! அதை இப்போது நினைத்தாலும் என் மனம் துடிக்கிறது—என் தந்தையின் மனம் என்ன பாடுபட்டிருக்குமோ—யாருக்குத் தெரியும்! அய்யா பெரியவரே! நீங்களும் உங்கள் நீண்டநாள் அனுபவத்தில் எத்தனையோ மனிதர்களை சந்தித்திருப்பீர்கள்—ஆனால் யாரும், என்னைப்போல, இளமையிலே இவ்வளவு வேதனைக் கணைகளுக்கு ஆளாகியிருக்கவே முடியாது—இளமையிலேயே தந்தையை இழந்தேன், தாயை இழந்தேன்—பழுத்த இலை என் பாட்டி, அவர்களது நிழலிலே வளர்ந்தேன்—நான் மட்டுமல்ல பெரியவரே! என் தங்கையும் அந்த நிழலிலே என்னோடு வளர வேண்டியவளாகி விட்டாள்!
என் பாட்டி, தன் ஆருயிர்க் கணவர் தற்கொலை செய்து கொண்ட சேதியையும் தாங்கிக் கொண்டார்கள், மகனும் மருமகளும் தன் நிழலிலே வாழ வேண்டும் என்பதற்காக! மஞ்சம், மாளிகை என்றெல்லாம் மந்தகாசமாய் வாழ்ந்த அவர்கள்—பஞ்சம், பட்டினி பிடித்தாட்டிய நேரத்திலும் சமாளித்துக் கொண்டார்கள்; மகனும் மருமகளும் குடும்ப விளக்கை பிரகாசிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக! பிறகு, மகனையும் மருமகளையும் விட்டு பரிதாபகரமாகப் பிரிந்தார்கள்—அப்போதும் சோகத்தை சுமந்து கொண்டு தள்ளாடி நடந்தார்கள்; பேரப் பிஞ்சுகளான என்னையும் என் தங்கத்தையும் குலக்கனிகளாக்க வேண்டும் என்ற ஆசையுடன்! பெருந்தகையீர்! என்னைப்போல கஷ்டப்பட்டவர்கள் யாருமிருக்க முடியாது! தந்தையின் பிரிவு எதிர்பாராத பயங்கரம்! தாயின் முடிவோ சொல்லத் தரமன்று!
சாக வேண்டிய வயது கிடையாது என் தாய்க்கு! என் பாட்டி அதைத்தான் சொல்லிச் சொல்லி அழுவார்கள்;
'அடப் பொல்லாத யமனே! என்னை விட்டு விட்டு, அவளைக் கொண்டுபோய் விட்டாயே!' என்று! அப்போது நானும் என் தங்கையும் பாட்டியைக் கட்டிக் கொண்டு அழுவோம். எனக்கு பத்து வயது இருக்கும். தங்கைக்கு ஐந்து வயது இருக்கும். அந்த வயதில் எங்களைக் கண்போலக் காத்த தாய் தந்தை இருவரையும் ஏக காலத்தில் பிரிந்து விட்டு, வாழ்வதென்றால் சாமான்யமா?
காட்டில் வாழ் குஞ்சுகள், இரை தேடி வரப்போகிறது தாய்ப் பறவை என்று சின்னஞ்சிறு அலகுகளைப் பிளந்து கொண்டு ஆகாயத்தை நோக்கி அமர்ந்திருக்கும்போது, தாய்ப் பறவையின் பிணம் அவைகளின் மீது விழுந்தால் எப்படியிருக்கும்?
அதே நிலைதான் எங்களுக்கும்! முல்லை மொட்டுக்கள் நாங்கள். செடியின் வேரிலே வெந்நீர் ஊற்றப்பட்டு விட்டது!—
நாங்கள் விளையாடித் திரிந்த திரிகோணமலையின் தெருக்கள், எங்களுக்கு பயங்கரமான குகைபோலக் காட்சி தந்தன. பள்ளிக்கூடத்திற்குப் போயிருந்தேன்—பிற்பகல் உணவுக்காகக் குதித்தோடி வந்தேன். வழக்கமாக வீட்டு வாசலில் நின்று என்னைக் கைதட்டி வரவேற்கும் அன்புத் தங்கையைக் காணவில்லை. அடுத்த வீட்டுக்காரர்கள் என்னை அழைத்து அணைத்துக் கொண்டார்கள். எனக்கு ஒன்றும் புரிய வில்லை. வீட்டுக்குள் நுழைய முடியாமல், அடுத்த வீட்டுக்காரர்கள் தடுப்பானேன்—அதுவும் அன்போடும், பரிவோடும் தடுப்பானேன்—அப்படித் தடுப்போரின் முகமெல்லாம் வெளுத்தும் போயிருப்பானேன்—திகைத்தேன். 'அப்பா கண்ணு! அழக்கூடாது—அம்மா செத்துப் போயிட்டுது' என்று அவர்கள் ஆறுதல் சொன்னார்கள்.
என் அம்மா செத்து விட்டார்கள்—இல்லை—இல்லை!—என் தாய் கொலை செய்யப்பட்டு விட்டார்கள்—ஆமாம்—கயிற்றுக் கட்டிலிலே ரத்த வெள்ளத்திலே என் தாய் மிதந்தார்கள்—அவர்களது விலாவிலும், முதுகிலும் கத்திக் குத்துக்கள்! தாயைக் கொலை செய்து விட்டார்கள். கொலை செய்தது யார் தெரியுமா?—பெரியவரே! பேசவே நடுங்குகிறது—நீங்களோ என் கதையை பொறுமையாகவும் நிதானமாகவும் கேட்கிறீர்கள்—என் உள்ளம் கொதிக்கும் கொப்பரையாகி யிருக்கிறது முதியவரே! என் தாயைக் குத்திக் கொலை செய்தது என் தந்தையாம்!—தாய் பிணமாகி விட்டார்கள்!—தந்தை கைதியாகி விட்டார்—காலையிலே என்னைப் பள்ளிக்கூடம் அனுப்பி வைத்ததால் நான் திரும்பி வரும்போது, 'மகனே!' என்று அழைக்காமல் மௌனமாகி விட்டார்கள். அவர்களே ஊமையாகியது, என் தந்தை. 'வள்ளீ! வள்ளீ!' என்று வாயிலே தேனொழுக அழைப்பார் அப்பா, அம்மாவை! அந்த அப்பா, தன் ஆசைக்குரிய ஒரு ஜீவனை அரை நொடியில் அழித்து விட்டார் என்ற கொடுமையான செய்திக்கு நான் அந்தப் பசலைப் பருவத்திலே இறையானேன்.
துடித்தேன்—துவண்டேன்—அழுதேன்—புரண்டேன்—அம்மாவின் பிணத்தையும் ஆஸ்பத்திரியில் கூறு போட்டு சோதனை செய்து, துண்டம் துண்டமாக ஒட்டித் தைத்து எங்களிடம் ஒப்புவித்தார்கள். பாட்டியின் நிலையைச் சொல்லவும் வேண்டுமோ? அவர்கள் அந்தத் தள்ளாத காலத்திலே, மருமகளின் கூறுபோட்ட பிணத்தை அள்ளிக்கொண்டு, சுடுகாட்டுக்குப் போனார்கள். மகனோ சிறையிலே அடைபட்டுக் கிடக்கிறான். அம்மா, அப்பா என்று அழுதுகொண்டே துடிக்கும் நாங்கள் இருவர். பாட்டி இந்தக் காட்சிகளையெல்லாம் கண்டாள். சுருக்கம் விழுந்த அவளது கன்னங்களிலே, கண்ணீர்த் துளிகள் பெருகி, வாய்க்கால்கள் போல ஓடின.
அடப்பாவி, கொலைகாரனா அந்தக் குமாரவடிவு என்று திரிகோணமலையே திட்டித் தீர்த்தது. என் அப்பாவின் பெயர்தான் குமாரவடிவு—குமாரவடிவு வள்ளியம்மாளைக் கொன்று விட்டார்—ஆம், என் தந்தை, என் தாயைக் கொலை செய்து விட்டார்.
பத்து வயது சிறுவனுயிற்றே நீ; இவ்வளவு விபரமும் அப்போது எப்படித் தெரியும் என்று எண்ணுகிறீர்களா? எனக்குப் பத்து வயதுதான் என்றாலும், அப்பா எழுதி வைத்த டைரியும், இந்தப் பயங்கர நிகழ்ச்சிக்குப் பிறகு, உயிரோடு சில வருடங்கள் இருந்த பாட்டி சொன்ன உண்மைகளும்தான் நான் சொல்லும் கதைக்கு ஆதாரங்கள்—பரிமளாவுக்கு கதையைக் கேட்கும்போதே கண்ணீர் பெருகுகிறது—கதையிலே வரும் இந்தக் குழந்தைப் பாத்திரம் எவ்வளவு குமுறியிருக்கும் என்று நீங்களே நினைத்துப் பாருங்கள்.
தாய் கொலை — தந்தை கைது — தங்கை தவிப்பு — பாட்டி ஒப்பாரி—இடையே நான், இளம் தளிராக!—எப்படி ஆரம்பமாகியிருக்கிறது பார்த்தீர்களா, என் வாழ்க்கை? இன்னும் பல வேதனைச் சுருள்கள் அடுக்கடுக்காக இருக்கின்றன—தாயை என் தந்தை கொலை செய்தார் என்பது உலகம் கூறும் செய்தி—நீதி தந்த தீர்ப்பு! ஆனால் உண்மை அதற்கு நேர்மாறானது!"
---
கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்