அத்தியாயம் 16 · 17 / 52

அத்தியாயம் 16

Chapter 16

மூல ஸ்கேன் 146 (chapter-16 portion)-147

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

16

"பாட்டியம்மா விபரம் சொல்லும் வரையில் நானும், அம்மாவைக் கொலை செய்தது அப்பாதான் என்று எண்ணியிருந்தேன். பிறகுதான் தெரிந்தது—அம்மா கொலை செய்யப்படக் காரணமாயிருந்த சூழ்நிலைகள் எவை என்பதும், ஏன் கொலை செய்யப்பட்டார்கள் என்பதும்!

அம்மா, அப்பா, பாட்டி முதலியோர் கூலி வேலை செய்து பிழைத்த தேயிலைத் தோட்டம் ஒரு வெள்ளைக்கார முதலாளிக்குச் சொந்தமானது—அந்த முதலாளியின் பெயர் காக்துரை—ஆனால் அந்த வட்டாரத்துத் தொழிலாளர்கள் அவனை டாக்துரை என்றுதான் தங்களுக்குள் அழைத்துக் கொள்வார்கள். குணத்தைக்கொண்டு அவனுக்கு அந்தப் பெயர் அமைந்தது என்பார்கள். ஆனால் என் பாட்டி அதற்கு சொன்ன விளக்கமே வேறு! பெண் மோப்பம் பிடிப்பதிலே அவன் கைதேர்ந்தவன். மோப்பம் பிடிக்கும் அந்தப் பண்புதான் அவனுக்கு டாக்துரை என்ற பட்டத்தை வழங்க மிகப் பொருத்தமான காரணமாயிருக்கும் என்பது பாட்டியின் வாதம். அது என்னவோ—முழுக்க முழுக்க உண்மை என்பது, தேயிலைத் தோட்டத்திலே நடைபெற்ற அக்கிரமச் செயல்களைப் பாட்டி வர்ணித்தபோது உறுதியாகி விட்டது எனக்கு!

அதிகாலையிலே எழுந்து, குளிரால் நடுங்கியபடி, தேயிலைக் கூடைகள் முதுகிலே சுமந்து, தேயிலைக் கொழுந்து பறிக்கும் வேலையிலே ஈடுபடும் எண்ணிறந்த பெண்கள் வெள்ளை முதலாளிகளின் கண் சுழற்சியிலே யிருந்தும், அவர் தம் கட்டளையை நிறைவேற்றக் காத்து நிற்கும் கங்காணிகள் சிலரது துரோக புத்தியிலே யிருந்தும் தங்களைக் காத்துக் கொள்வது என்பது அன்றாடம் நடைபெறும் பயங்கர நிகழ்ச்சியாகவும், சமாளித்துத் தீரவேண்டிய வாழ்க்கைப் பிரச்சினையாகவும் ஆகிவிட்டது என்று பாட்டி வருத்தத்தோடு கூறுவார்கள். முதலாளிகள், மேஸ்திரிகள், கங்காணிகள் இவர்களது பசி தீர்க்கும் பொருளாக மாறி, பின்னர் தங்கள் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்ள வழி தேடிக்கொள்ளும் பரிதாபத்துக்குரிய பாவைகள் சிந்தும் ரத்தக்கண்ணீரிலே முளைக்கும் தேயிலைக் கொழுந்துகள் தான் நாம் சுவையோடு, நாக்கைத் தட்டிக் கொண்டு சூடு ஆறிவிடாமல் அருந்துகிற தேநீர் என்று எண்ணுகிறபோது, நெஞ்சு நெகிழத்தான் செய்கிறது!—இப்போதெல்லாம், தேயிலைத் தோட்டங்களிலே, மிருக வெறியின் கோர தாண்டவம் அவ்வளவாக இருக்க முடியாது!—முதலாளிகளும், மேஸ்திரி, கங்காணிகளும் மனிதத் தன்மை பெற்றவர்களாக மாறி வருகிறார்கள்—மாறித்தான் தீர வேண்டும் என்கிற அளவுக்கு தொழிலாள வர்க்கத்தின் மான உணர்ச்சிப் போராட்டம் தலைதூக்கியிருக்கிறது. ஒரு சாண் வயிறைவிட, ஒரு சாண் கயிறு மேலப்பா—இந்த எண்சாண் உடம்பை எலும்பு தெரியத் தேய்த்து உழைப்பது போதாதென்று மானத்தையும் தானம் செய்ய வேண்டுமென்று எண்ணுகிற மமதைக்கு இடங்கொடோம்—என்ற உணர்ச்சி முழக்கம், ஏழையர் முகாமிலேயிருந்து எழும்பி விட்ட காரணத்தால், எதையும் எப்போதும் செய்யலாம், ஏன் என்று கேட்க ஆளில்லை என்று இறுமாந்திருந்த இழிதகையோர் இப்போது கொஞ்சம் அடங்கித்தான் போய்

கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்