அத்தியாயம் 17 · 18 / 52
அத்தியாயம் 17
Chapter 17
மூல ஸ்கேன் 155-163 (chapter-17 portion)
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
17
டாக்துரை, கூலிக்காரப் பெண்களைக் தன் வெறி தீர்க்கும் கருவிகளாகவே கருதி வந்தான். முதலாளியின் தயவு கிடைத்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற தப்புக் கணக்குப் போட்டுக்கொண்ட ஒரு சில அப்பாவிப் பெண்களும் அவனது ஆட்டத்திற்கு அடிபணிந்தார்கள். பாட்டிக்கு உள்ளூர பயம் பிடித்துக் கொண்டது. அந்தப் படுபாவி முதலாளியின் பார்வை அடிக்கடி என் அம்மாவின் மீதும் விழ ஆரம்பித்ததாம். பாட்டி, அம்மாவிடம் ‘வள்ளீ! எச்சரிக்கையாயிருக்க வேண்டுமடி! டாக்துரையின் நடவடிக்கை எனக்கு அச்சத்தை உண்டாக்குகிறது—ஜாக்ரதை’ என்று சொல்லிக் கொண்டிருப்பார்களாம். அம்மா—துணிவு மிக்கவர்கள். நியாயத்திற்கு புறம்பாக யார் எதைச் செய்தாலும் அதை தீவிரமாகக் கண்டிக்கக்கூடிய சுபாவம் உள்ளவர்கள். டாக்துரை, அம்மாவின் பக்கம் வந்து, ‘வாட்—வல்லீ’ என்று இளிக்கும்போதெல்லாம், அம்மா, சடக்கென்று ‘வாட்டாவது பூட்டாவது—போய்யா’ என்று முகத்தைத் திருப்பிக்கொண்டு ஆத்திரத்தோடு பேசுவார்களாம். டாக்துரை, பாச்சா பலிக்காது என்று தெரிந்து கொண்டு, திரும்புவானாம். ஆனாலும் அவன் ஒரு அரிய சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தே யிருந்தான் என்பது அவனது நடவடிக்கைகளால் நன்கு புலனாகி விட்டது, அம்மாவுக்கும் பாட்டிக்கும்.
தேயிலைத் தோட்டத்து வேலைகள் முடிந்து, துரையின் வீட்டு வேலைகளையும் கவனித்தால் அதிகமாக சம்பளம் கிடைக்கும் என்ற எண்ணத்தின்மீது, மாலை நேரங்களில் அப்பாவும் அம்மாவும் டாக்துரை வீட்டில் சில மணி நேரங்கள் பணி புரிவதுண்டு. அப்பா கூடத்தானேயிருக்கிறார் என்ற தைரியத்தில் அம்மாவும் அந்த வேலையை ஒப்புக்கொண்டார்கள். இல்லாவிட்டால், மூன்று நான்கு உறுப்பினர்கள் உள்ள எங்கள் குடும்பம் கஷ்டமில்லாமல் வாழ முடியாதே—நான் சிறுவன்—பள்ளிக்கூடம் போக வேண்டும்—இரண்டொரு மாதங்களில் எனக்கு ஒரு தம்பியோ தங்கையோ பிறக்கப் போகிறது என்று பாட்டி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்—அதுவும் பிறந்து விட்டால், வீட்டிலே ஐந்து உறுப்பினர்களாகி விடுவோம். அதையெல்லாம் சமாளிக்க, எப்படியோ கஷ்டப்பட்டு சம்பாதித்தால் தானே முடியும்—பெருவாழ்வு வாழ்ந்தோமே என்று பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தால் போதுமா? இறந்த காலத்தை எண்ணி, நிகழ்காலத்தை கண்ணீர் வடிக்கவே உபயோகித்துக் கொண்டால் எதிர்காலமும் இருட்டாகத்தானே போய்விடும். ஆகையால், நடந்தவைகளை மறந்து—தோட்டக் கூலியாக மட்டுமின்றி, டாக்துரை வீட்டு வேலைக்காரர்களாகவும் என் பெற்றோர்கள் வியர்வை வடித்தார்கள். எட்டு மாத கர்ப்பவதி என் அம்மா—அப்போது தான் அந்த வேலையை அம்மா அங்கு ஒப்புக்கொண்டது—என் ஆருயிர்த் தங்கை தங்கம் அம்மாவின் வயிற்றிலே வளர்ந்து கொண்டிருந்த நேரம். அம்மா, ஓடியாடி உழைத்து சம்பாதிக்கிறார்கள்—அம்மாவின் சிரமத்தைப் பார்த்து, பாட்டி சொல்லுவார்களாம் ‘அடி வள்ளீ! கர்ப்பவதிகள் நிறைய வேலைகள் செய்தால் தான் சுகப் பிரசவம் ஆகும்’ என்று!
இதே பாட்டி, ஏழையாகப் போன பிறகு இப்படிச் சொன்னார்கள்—பணக்காரப் பாட்டியாகவே இருந்திருந்தால், ‘வள்ளீ உடம்பு கெட்டு விடும், ஓய்வு எடுத்துக்கொள்—கர்ப்பவதி கஷ்டப்படக்கூடாது!’ என்றும் கூறியிருப்பார்கள்.
எப்படியோ, அம்மா—அளவுக்கு மீறி சிரமங்களை ஏற்று குடும்பத்தைக் கவனித்தார்கள். குழந்தைகளாவது சந்தோஷமாயிருக்கட்டுமே என்று அம்மா அடிக்கடி சொல்லிக்கொண்டே கண்ணீர் சிந்துவார்களாம்—அப்படிப்பட்ட அருமை அம்மாவைத்தான் நான் சிறுவயதிலேயே இழந்தேன்—ரத்த வெள்ளத்தில்—என்னைப் பெற்ற தாய் மிதந்து கிடந்த கோரக் காட்சியை இந்தக் கண்ணாலே கண்டேன்—அய்யோ, அவ்வளவு தொல்லைகளையும் தாங்கிக்கொண்டு உழைத்த அந்த உத்தமியின் எண்ணமாவது ஈடேறிற்றா என்றால் அதுவும் இல்லை. குழந்தைகளாவது நன்றாயிருக்கட்டும் என்று உழைத்தார்கள். அதையும் பார்க்காமலே அவர்கள் போய்விட்டார்கள்.
டாக்துரையின் பங்களாவிலே வேலை பார்த்துவிட்டு அப்பாவும் அம்மாவும் வீட்டுக்கு வரும் வரையில் நான் வீட்டு வாசலிலேயே நின்று கொண்டிருப்பேன். அம்மா என்னைத் தூக்கி முத்தமிடுவாள். அப்பா, என் கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சுவார். அந்தக் குழந்தைப் பருவத்து நிகழ்ச்சியெல்லாம் இப்போதுகூட எனக்குக் கனவுபோல் இருக்கிறது.
‘அம்மா!—பாப்பா எப்போ பிறக்கும்?’ என்று நான் மழலைத் தமிழிலே கேட்பேனும்—பாட்டி, என்னை வாரி அணைத்துக்கொண்டு பரிகாசம் செய்வார்களாம். இதையெல்லாம் பாட்டி என்னிடம் அழுதுகொண்டே சொல்லியிருக்கிறார்கள். இப்படி சுமுகமான சூழ்நிலையிலே யிருந்த ஒரு குடும்பத்திலே கொலை நிகழுமளவுக்கு ஏற்பட்ட குழப்பந்தான் என்ன என்று கேட்கத்தான் தோன்றும். குழப்பம் அப்படியொன்றும் முக்கியமானதல்ல. ஆனால் அந்தக் குழப்பம் கொலைக்குக் காரணமா என்றால் அதுவுமில்லை. கொலைக்கு, அந்தக் குழப்பம் முழுவதுமே காரணமில்லையே தவிர கொலைக்கான சூழ்நிலைகளை உண்டுபண்ணித் தருவதற்கு அந்தக் குழப்பம் ஒரு வகையில் காரணமாகத்தானிருந்திருக்கிறது. ‘என்ன உளருகிறாய்?’ என்று கேட்பது போலிருக்கிறதே; பெரியவரே உங்கள் பார்வை! குழப்பத்தைப்பற்றி விளக்குவதால் ஏற்படுகிற குழப்பம் இது! அவ்வளவுதான்! அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தகராறுகள் ஏற்பட்டு, அது முற்றிப்போய் ஒருவரோடு ஒருவர், பேசாமலேயே சில வருடங்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் உண்மை. என் தங்கை பிறந்த பிறகு, இருவரும் இரு துருவங்களாகி விட்டனர். கணவன், மனைவி என்பது, கடமையளவுக்குப் போய்விட்டதே தவிர, பாசம், நேசம் எல்லாம் பாழாகி விட்டது. என் தந்தை ஒரு தத்துவஞானி போல, வாழ்வு—சாவு—காதல்—இவைகளைப்பற்றியெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார். துறவிகளுக்கு உலகத்தைப்பற்றி எழும் வெறுப்பைப்போல, என் தந்தைக்கும் வெறுப்பு எழுந்து விட்டது. இந்த வெறுப்பு ஏன் எழுந்தது? அப்பா சந்தித்த பல சம்பவங்கள்தான் இத்தகைய வெறுப்புக்குக் காரணம் என்பதை அவர் எழுதியுள்ள டைரிக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. குப்பன்—சீதா, இருவரின் காதல் குழப்பம் அப்பாவின் உள்ளத்திலும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது! காதலுக்கு, ஒரு ஆண்மகன் தரும் முக்கியத்துவம் எவ்வளவு மட்டமானது என்பதை குப்பனுடைய போக்கிலிருந்து அவர் கணக்குப் போட்டு விட்டார்—அதுபோலவே காதலுக்கு பெண்கள் தரும் மதிப்பு எத்தகையது என்பதற்கு மற்றொரு உண்மைச் சம்பவத்தை அவர் தனது டைரியில் விபரமாக எழுதியிருக்கிறார். இந்த சம்பவந்தான், அப்பா அம்மா தகராறுக்கு மூலகாரணம். டைரியில் அவர் எழுதியுள்ள சுவையான பகுதிகளையும் சம்பவத்தையும் சுருக்கி நினைவு இருக்கும் வரையில் கூற விரும்புகிறேன்.
டாக்துரைக்கு ஒரு மகள் உண்டு—அவளுடைய பெயர் மேரி. அவள் இலங்கையிலே பிறந்து வளர்ந்தவள். ஆங்கிலமும், கூடியவரை சிங்களமும், தமிழும் பேசக்கூடிய திறமை வாய்ந்தவள். வெள்ளைக்கார வீட்டுப்பெண் என்றால், நவ நாகரீகத்துக்குக் கேட்க வேண்டுமா? அதிலும் மேரி புதிய நாகரீகங்களைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிற ஒரு யுவதி. ஏற்கனவே உடுத்தியிருக்கிற அரை ஆடைகளையும் கால் ஆடைகளாகக் குறைத்து அணிந்து கொள்வது பற்றி பெரிய பெரிய ஆராய்ச்சிகள் நடத்துவாள். நாகரீகத்தின் தீவிரமான வேகம், நிதானமின்றி அலைமோதுகிற காரணத்தால், ஆடையின்றி வாழ்ந்த காட்டுமிராண்டி காலத்துக்கு மக்களை இழுத்துப் போகிறது என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக, அந்தப் பகுதியிலே மேரி விளங்கினாள். அவளுக்கு ஜோசப் என்ற ஒரு காதலன் உண்டு. உறவினன் கூட! அவனும் அவளும் நடுவீதியிலே கைகோர்த்துக் கொண்டு ஆடுகிற ஆட்டங்களும், கேளிக்கை விநோதங்களும்—பார்ப்பதற்கு ஆபாசமாயிருக்கும். அத்தகைய காதலின் உச்சக்கட்டத்திலே அவர்கள் அலைந்து கொண்டிருந்தார்கள். விரைவிலே அவர்களுக்குத் திருமணம் செய்யப் போவதாகவும் டாக்துரை சொல்லிக் கொண்டிருந்தார். திடீரென்று அந்த ஜோசப்புக்கு சென்னையிலே வேலை கிடைத்து விட்டது. சென்னையிலே உள்ள அவனது பெற்றோர்கள், “நல்ல வேலை இது! நழுவ விடக்கூடாது! உடனே வா!” என்று அவசரக் கடிதம் போட்டுவிட்டார்கள். ஜோசப் தன் காதலி மேரியிடம் பிரியா விடை பெற்றுக்கொண்டு, விரைவில் திரும்பி வந்து விவாகத்தை முடித்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு, சென்னை போய்ச் சேர்ந்தான். ஜோசப் சென்னைக்குச் செல்லும் அந்த சமயத்தில் எல்லாம் என் பெற்றோர்கள் டாக்துரையின் வீட்டில் தான் வேலை செய்து கொண்டிருந்திருக்கிறார்கள். அம்மா, கர்ப்பவதியாக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்றேனே; அது அப்போது தான்! காதலன் சென்னைக்குச் சென்றுவிட்ட நாலைந்து நாளைக்கெல்லாம், எங்கள் குடும்பத்திலே புயல் வீசச் செய்த சம்பவத்திற்கு, மேரி கதாநாயகியானாள்.
மேரி, தன்னையே உயிராகப் பாவிக்கிறாள் என்று எண்ணிப் பெருமூச்சு விட்டுக்கொண்டு, சென்னையிலே இருக்கிறான் ஜோசப். ஆனால், இவளோ—இங்கு தன் தகப்பனைப்போல காம வேட்டைக்கு கணை தொடுக்கப் புறப்பட்டு விட்டாள். அப்பாவைப் போலவே பெண்ணும் என்ற பெயரை எடுக்க வேண்டுமென்பதிலே அவளுக்கு அவ்வளவு ஆசை! அவள் ஆசையின் விளைவு, எங்கள் குடும்பத்திலே எத்துணை கொந்தளிப்பை உண்டுபண்ணி விடும் என்பதை கண்டாளா?—ஒரு நாள் மாலை தேயிலைத் தோட்டத்து வேலை முடிந்து, பாட்டி வீட்டுக்கு வந்து விட்டார்கள் என்னைப் பராமரிக்க; அப்பாவும், அம்மாவும் துரையின் வீட்டு வேலைகளைக் கவனிக்கச் சென்றிருக்கிறார்கள். அப்பா, நந்தவனத்திலேயுள்ள மலர் செடிகளை சீர்படுத்திக் கொண்டிருந்திருக்கிறார். அம்மா பாத்திரங்களைத் துலக்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது மேரி, என் தந்தையின் பக்கம் வந்திருக்கிறாள். அப்பா, ‘என்னம்மா சௌக்யமா?’ என்று வழக்கம்போல் கேட்டிருக்கிறார். உளறிக் குளறித் தமிழைப் பேசும் அவளும் ‘சௌக்கந்தான்’ என்று கூறிவிட்டு ‘குமாரவடிவு—என் பெட்ரூமிலேயிருக்கிற லைட்டை ஏற்றிக்குடு!—எனக்கு லைட்டை ஏற்றத் தெரியிலே’ என்று கூப்பிட்டிருக்கிறாள். அப்பாவும் சாதாரணமாக நினைத்து, அவளது படுக்கையறைக்குப் போய் அங்குள்ள விளக்கை எடுத்து ஏற்ற முயற்சி செய்திருக்கிறார். திடீரென்று மேரி, அந்த அறையின் திரைச் சீலையை இழுத்து விட்டு, அப்பாவிடம் நெருங்கியிருக்கிறாள். அப்பாவுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘என்னம்மா—’ என்று கேட்டபடி அசைவற்று நின்று விட்டார் அவர்.
‘ஒண்ணுமில்லே—ஒன்மேல எனக்கு ரொம்ப லவ்வு!’
‘என்னாது—லவ்வா?’
‘ஆமா—லவ்வுன்னா தெரியாது—காதல்—காதல்’ என்று அவள் விளக்கமும் கொடுத்து நின்றாள்.
‘காதலா? அட கர்மமே—என் மீதா—நான் பிள்ளை குட்டிக்காரன் அம்மா!’
‘பிள்ளையிருந்தா என்னே—உனக்கு நாப்பது வயிசு இருக்கும்—இருந்தாலும் யங் காத்தானே இருக்கே—எனக்கு ரொம்ப லவ்வு உன்மேல!’
‘அடடா—வேலைக்காரன் கிட்டே.........’
‘அது எனக்கு ஒரு டேஸ்ட்!’
‘டேஸ்டாவது—மண்ணாங்கட்டியாவது—அம்மா—மேரியம்மா—சொல்வதைக் கேளுங்க—உங்க காதலன் ஜோசப்புக்கு துரோகம் பண்ணாதீங்க—அது பாவம்!’
‘துரோகமா—ஜோசப் மேலயும் எனக்கு லவ்தான்—உன் மேலயும் எனக்கு லவ் தான்! ஒரு நாளைக்கி, ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா, வீட்டு சாப்பாட்டுக்கு துரோகமா? வீட்டு சாப்பாடு இல்லேன்னா, ஹோட்டல் சாப்பாடு சாப்பிடக்கூடாதா? வாட் ஈஸ் தீஸ்! நான்சன்ஸ்!’
இந்த உரையாடல்களை அப்பா, தன் டைரியிலே அப்படியே எழுதியிருக்கிறார்—பொழுது போகாத நேரங்களில் நான் இந்தக் கட்டத்தைப் படித்துப் படித்து மனப்பாடமே செய்து விட்டேன்—பிறகு கதையைக் கேளுங்கள்.
அப்பா, மேரிக்கு எவ்வளவோ புத்திமதிகளை எடுத்துச் சொல்லியும் அவள் கேட்பதாயில்லை. அவளது காமப் பசியின் முன்னே கற்பைப்பற்றிய உபதேசங்கள் எம்மாத்திரம்?
‘அம்மா மேரி! சொல்வதைக்கேள்—காதல் என்பது ஒரு ஜீவனுள்ள எழுத்துக் கோர்வை. அதை இப்படிப் புழுதியில் எறியாதே! உங்கள் ஆங்கிலத்து நூல்களிலே அரும்பெரும் காதல் இலக்கியங்கள் உண்டாம்—ரோமியோ ஜூலியட் என்ற காதல் மகா காவியத்தை கேள்விப்பட்டிருக்கிறேன்—அப்படி நடந்திருக்குமா ஒரு கதை என்று சந்தேகமும் பட்டிருக்கிறேன். அவ்வளவு புனிதமான கதை நிகழ்ந்திருக்க முடியாது என்பதற்கு, நீ ஒரு எடுத்துக்காட்டாய் இருக்கிறாய்!’ என்று மேரியிடம் சொன்னேன். அதற்கு மேரி, ‘அப்படியா—ரோமியோ ஜூலியட் கதை தெரியுமா? தெரிந்தும் என்னை ஏமாத்துறாயே—எங்கே ஒரு முத்தம் கொடு! கமான்! மை டீயர்! ரோமியோ ஜூலியட் எல்லாம் நடக்க முடியாத ஸ்டோரிகள்! கிளியோபாட்ரா கேள்விப்பட்டியா நீ? சீசர், ஆண்டனி என்ற இரண்டு லவ்வர்கள் அவளுக்கு!—அவளைப் போலத்தான் எனக்கும்! ஜோசப்—சீசர்! நீ ஆண்டனி!’ என்று புலம்பினாள் அந்த வெள்ளைப் பெண்.
இவள் கிளியோபாட்ராவையும் மிஞ்சக்கூடிய பாஞ்சாலியாக இருப்பாள் போலிருக்கிறதே என்று அஞ்சியவாறு, அந்த அறையை விட்டு வெளியே நகர ஆரம்பித்தேன்.
‘ஊஹும்—போகாதே மேன்! போனா, எங்க பாதரிடம் சொல்லி, நீ என்னை லவ் பண்ணினதா சொல்லி, வேலைக்கு சீட்டு கிழிச்சுடுவேன்!’ என்று கோபித்தாள் அவள்.
நான் மீண்டும் புத்தி சொல்ல அவளைப் பார்த்தேன்—அவள் அதற்கு வாய்ப்பு தராமலே என் மீது தாவிப் பாய்ந்து என்னைக் கட்டிக்கொண்டாள். அவளிடமிருந்து என்னால் விடுபடவே முடியவில்லை. வெறிநாய் போல என் கன்னத்தைப் புண்ணாக்கி விட்டாள்—ஓங்கி அடித்து அவளைத் தரையிலே தள்ளிவிடத் தீர்மானித்து அதற்காக முயன்றேன்—ஆனால் அந்த சமயத்திலே தான் என் மனைவி வள்ளியம்மாள் அறைக்குள்ளே நுழைந்தாள்—இல்லை—என் வாழ்விலே புயல் நுழைந்தாள்.’
இது போலத்தான் அப்பா, அந்த சம்பவத்தை வர்ணித்திருக்கிறார். அம்மா, உள்ளே வந்ததும்—மேரி, அப்பாவை விட்டு விட்டு வெளியே ஓடிவிட்டாள். அப்பா, அம்மாவைப் பார்த்து ‘வள்ளீ!’ என்று அழைப்பதற்குள், அம்மா கோபத்தோடு—‘போதும்—நம் உறவு இன்றோடு முடிந்தது!’ என்று சொல்லிக்கொண்டே அதை விட்டு வெளியேறி விட்டார்கள்.
இந்த சம்பவமும் அம்மாவின் கொலைக்கான சூழ்நிலைகளுக்கு ஒரு அடிப்படையாக அமைந்தது.
அப்பா கொலைகாரர் அல்ல என்று நிரூபிக்க எங்கெங்கோ சுற்றி வளைக்கிறாயே; சுருக்கமாகச் சொல்லி விடேன் என்று கேட்கிறீர்களா?—அல்லது தொடர்கதை எழுதும் ஆசிரியர்களைப்போல, சம்பவங்களை முக்கிய இடத்தில் நிறுத்தி ஆவலைக் கிளப்புகிறானே; என்று கிண்டல் செய்கிறீர்களா?—பெரியவரே! அப்படியெல்லாம் தவறாக நினைக்காதீர்கள்.
என் கதையையும்—என் குடும்பக் கதையையும் விளக்கமாகச் சொன்னால்தான் என்னைப்பற்றி நீங்கள் கொண்டிருக்கிற அலட்சியம் நீங்கும்—என் மீது அனுதாபம் பிறக்கும் தங்களுக்கு! அதனால் பொறுமையோடு என் கதையை நீங்கள் கேட்டுத்தான் தீர வேண்டும்.”
---
கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்