அத்தியாயம் 18 · 19 / 52
அத்தியாயம் 18
Chapter 18
மூல ஸ்கேன் 163 (chapter-18 portion)-171
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
18
“மேரியின் அடாத செயலைப் புரிந்து கொள்ளாத அம்மா, என் தந்தை மீது தவறான எண்ணங்கொண்டு விட்டார்கள். தன் கணவர் தனக்கு சகிக்க வொண்ணாத கொடுமை புரிந்துவிட்டதாகவே கருதினார்கள். அன்பு மழை பொழிந்து அல்லும் பகலும் காப்பாற்றிய தாம்பத்ய உறவுக்கே மீளாப் பழி தேடிக் கொடுத்து விட்டார் தன் துணைவர் என்று மனம் வெதும்பினார்கள். அவர் உள்ளத்தைக் கொள்ளைகொண்டாள் அந்த வெள்ளைக்காரி என்று முடிவுகட்டிக்கொண்ட பிறகு, எவ்வளவு தான் சமாதானம் செய்தாலும் அவர்களை மாற்ற முடியாது என்று அப்பாவும் தீர்மானித்து விட்டார். உயிரையே அவர் மீது பதித்திருக்கிறோம்; அவர் இப்படி ஏமாற்றி விட்டாரே என்ற ஏக்கம், அம்மாவுக்கு!
“இருதயத்தில் தனி அரசு செலுத்த அவளுக்கு மட்டுமே உரிமையளித்திருக்கிறோம்; அவள் இப்படி தன்மீது அவசரப்பட்டு சந்தேகப்பட்டு விட்டாளே, என்ற ஆத்திரம் அப்பாவுக்கு!
“அதனால், அம்மாவும் அப்பாவிடம் சமாதானத்துக்கு வரவில்லை. அப்பாவும், அம்மாவை சமாதானப் படுத்த விரும்பவில்லை. பாட்டிக்கோ இந்த விபரங்கள் எதுவும் புரியாது. மகனுக்கும் மருமகளுக்கும் பேச்சு வார்த்தையில்லை என்பது மட்டும் தெரியும். கணவன் மனைவி, ஊடல் என்று கருதியிருந்தார்கள். போகப்போக பாட்டிக்கும் சந்தேகம் பிறந்து காரணமறிய முயற்சித்தார்கள். இருவரும் காரணம் தெரிவிக்கவில்லை.
“‘கர்ப்பவதியடா அவள்! அவள் மனங்கலங்க விடக்கூடாது!’ என்று அப்பாவிடம் பாட்டி கூறிய அறிவுரைகள் எல்லாம், பயனற்றுப் போய்விட்டன.
“தங்கத்தை வயிற்றிலே சுமந்திருந்த அம்மாவுக்கு, நான் மட்டுமே ஒரு ஆறுதலாயிருந்தேன். என்னை தூக்கி வைத்துக்கொண்டு, அம்மா, எங்கேயோ சிந்தனையை செலுத்தியபடி நிற்பார்களாம். பாட்டி, பக்கத்திலே வந்து, ‘வள்ளி’ என்று கூப்பிட்ட பிறகே, சிந்தனை கலைந்து திடுக்கிட்டுத் திரும்புவார்களாம். வேறு எதைச் சிந்தித்திருக்கப் போகிறார்கள்; அன்று டாக்துரை பங்களாவில் கண்ட காட்சியைத்தான் சிந்தித்துக் கொண்டிருந்திருப்பார்கள்.
“இந்த நிலையில் எனக்குத் தங்கையும் பிறந்தது. வறுமையின் வாடை—அப்பா அம்மா மன வேற்றுமை—பாட்டியின் சஞ்சலம்—இவைகளினூடே, எதைப்பற்றியும் கவலைப்படாத நானும், என் தங்கையும் வளர்ந்தோம்.
“ஆண்டுகள், ஒன்றிரண்டென உருண்டன. அப்பா, அம்மா உறவு ஏற்படவில்லை. ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமலிருந்தவர்கள், இப்போது ஜாடைமாடையாகப் பேசிக் கொண்டார்கள்.
“ஆனால் அந்தப் பேச்சு, இருவரிடையே பிளவை அதிகமாக்கத்தான் பயன்பட்டதே ஒழிய மீண்டும் சுமுகமான நிலையை உண்டாக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், ஒருவரையொருவர் மனம் புண்படச் செய்வதற்காகவே அந்தப் பேச்சுக்கள் ஆரம்பமாயின என்று கூறலாம். பாட்டிக்கோ, இன்னது செய்வது என்று புரியவில்லை. குடும்பம், குழப்பச் சேற்றிலே சிக்கி தத்தளித்தது!
“நளாயினி கதையிலே படித்திருக்கிறோம், அவள் தன் நாயகனை—தாசியின் இல்லத்திற்கு தூக்கிக்கொண்டு போனாள் என்று!
“ஆனால் என் அம்மாவோ, தீர விசாரிக்காமலே, அப்பாவின் மீது ஐயமுற்று புயலுக்குக் காரணமாகி விட்டார்கள்.
“அப்பாவின் வாழ்க்கையிலே எதிர்ப்பட்ட அந்த மூன்று சம்பவங்களும் புதிய கொள்கைகளை அவருக்கு தந்திடக் காரணமாயின. குப்பன்—சீதா, இருவரின் காதல்—இதயமற்றவர்களின் போலி நாடகம் என்று அவர் முடிவு கட்டினார்.
“மேரி—ஜோசப்—காதல், உடல்வெறி தீர்த்துக் கொள்ளும் இன்பக் கூத்து எனக் கண்டார்.
“கடைசியாக, தனது குடும்பத்திலே ஏற்பட்ட கணவன் மனைவி தகராறை வைத்து, அவசரக்காரர்கள் பெண்கள், உண்மைக்கு மதிப்பளிக்காத சந்தேக ஜீவன்கள் என்றும் முடிவு கட்டிக் கொண்டார். இந்த மூன்று நிகழ்ச்சிகளையே மையமாக வைத்து, புதிய இலக்கணங்கள் எழுதினார். டைரி எழுதும் பழக்கமுடைய அவர், குறிப்பிட்ட மாதம், தேதிகளிலே—நடைபெற வேண்டியது, அல்லது நடந்தது போன்ற செய்திகளுக்கு இடமளிப்பதை விட, தான் கண்ட புதிய தத்துவங்களைப்பற்றி விளக்கம் எழுதவே அதிகமாக அந்த டைரிகளில் இடமளித்தார்.
“‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது பழமொழி—பானைச் சோற்றைப் பொருத்த வரையிலே அந்தப் பழமொழி சரியானதுதான்—அதற்காக, எல்லாப் பானைகளிலும் உள்ள சோற்றுக்கும் இந்த ஒரு பானையிலுள்ள ஒரு சோறுதான் பதம் என்று கூறலாமா? பெரியவரே! தாங்களும், என் தந்தையைப் போலவே காதலைப் பற்றிய எண்ணங் கொண்டிருப்பதால், இதுபோன்ற கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்—தயவுசெய்து தவறாக எண்ணாதீர்கள். தங்கச் சுரங்கத்திலே அகப்படுவது எல்லாமே தங்கப் பாளமாகவோ, அல்லது வெறுங் கல்லாகவோ இருக்காதே! இரண்டும் கலந்துதானே இருக்கும். ஒரு குடும்பத்திலே ஒருவன் நல்லவன்—இன்னொருவன் பொல்லாதவன்—அந்த நல்லவன் என்ற ஒரு சோற்றைப் பதம் பார்த்து, அந்தக் குடும்பத்தார் அனைவருமே நல்லவர்கள் என்று கூறிவிட முடியுமா? அல்லது பொல்லாதவனைக் கொண்டு, அந்தக் குடும்பம் முழுதும் கொடியோர் நிறைந்த கூடாரம் என்றுதான் முடிவு கட்ட முடியுமா?
“இம்மாதிரி சிந்தனைகளுக்கெல்லாம் சிறிதும் வேலை தராமல், இரண்டு மூன்று நிகழ்ச்சிகளை அடிப்படையாக வைத்து, அகிலத்தின் ஆண் பெண் உறவுக்கே அப்பா அவசர வியாக்யானம் செய்து விட்டார். அந்த வியாக்யானங்கள் அவர் எழுதிக் குவித்த டைரிகளிலே அருமையான சொற்கோர்வைகளுடன் இருந்தாலும், தேவையான அறிவுரைகளாக அமையவில்லை. ஆனால் ஒன்று, அப்பாவின் அந்த விளக்கங்கள் அவருக்கு மனச்சாந்திக்காக எழுதப்பட்டவை என்று விட்டு விடலாம். ஆனால் தங்களைப்போல, மற்றவருக்கும் அந்தக் கருத்துக்களை உபதேசிப்பது எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.
“பெரியீர்! என் கதையை விட்டு எங்கேயோ போகிறேனே என்று வருத்தப்படாதீர்கள்—இதோ, கதைக்கு வந்து விட்டேன்—ஒவ்வொரு ஆண்டும் அப்பா எழுதிய டைரிகள் குப்பையில் போய்ச் சேராமல், அவராலேயே பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டன. அம்மா பார்த்து விடக்கூடாது என்பதற்காக, அவர் அந்தப் பழைய டைரிகளை எல்லாம் மூட்டை கட்டி, பரணை மீது ஒளித்து வைத்திருந்தார். அம்மா கொல்லப்பட்டு, அப்பா கைது செய்யப்பட்டபோது அகப்பட்ட டைரிகள் இரண்டே இரண்டுதான்.
“ஒரு டைரி, முழுதும் எழுதப்பட்டிருந்தது. இன்னொரு டைரி, அப்போது தான் வாங்கப்பட்டுப் புதிதாக இருந்தது. முழுதும் எழுதப்பட்ட டைரி, எனது ஒன்பதாவது வயதிலே பூர்த்தி செய்யப்பட்ட டைரியாகும். அந்த டைரியிலே இருந்த வாசகங்களும், அதில் அவர் கடைசிப் பக்கத்தில் எழுதியிருந்த, முதல் தேதி செய்ய வேண்டிய காரியம் பற்றிய தகவலும் தான் அவரைப் போலீசார் கையில் சிக்க வைத்தது.”
அம்மா, அப்பா இடையே தகராறுகள் பெருகிக் கொண்டிருந்த போதும்—அவர்களது தேயிலைத் தோட்டத்து வேலையிலே எந்தவிதமான குறைபாடும் ஏற்படவில்லை. என்னைப் பள்ளிக்கூடம் அனுப்பிவிட்டு அம்மா, அப்பா, பாட்டி மூவரும், தங்கை தங்கத்தையும் தூக்கிக் கொண்டு, தேயிலைக் காட்டுக்குச் செல்வார்கள். வழக்கம் போல் உழைப்பார்கள். வீடு திரும்புவார்கள். டாக்துரை வீட்டு வேலைக்கு, முதலில் அப்பா போவதில்லை—பிறகு அந்த மேரிக்கும் ஜோசப்புக்கும் கல்யாணமாகி, அவள் அவனோடு போய்விட்ட பிறகு அப்பா, துரையின் பங்களாவிலும் வேலைகளைச் செய்து வந்தார். அம்மாவும் மன வேதனையை அடக்கிக்கொண்டு, டாக்துரை பங்களாவில் ஊழியம் செய்தார்கள். டாக்துரைக்கு அம்மாவின்மீது ஏற்பட்ட அந்தக் கொடிய எண்ணம் மாறவே இல்லை. அவனுக்கு எத்தனையோ, பெண்கள்—கங்காணி காளிமுத்து மூலமாகவும், அவனது வெள்ளாட்டி, சீதை மூலமாகவும் தயக்கமின்றிக் கிடைத்துக் கொண்டிருந்த போதிலும், தான் அடைய முடியாதது ஒன்று உலகத்தில் இருக்கக்கூடாது என்ற மனப்பான்மை ஆணிவேர் விட்டுக் கிளம்பியது.
கேவலம், தன் தோட்டத்துக் கூலி, அவளைத் தன் இஷ்டத்துக்கு உட்படுத்த முடியவில்லை என்ற ஆத்திரம் விழுது விட்டது. கையிலே யிருக்கும் கனியை ஒரு கடி கடித்து விட்டெறிந்து விட்டு வானத்திலிருக்கும் சந்திரனைப் பிடித்துக்கொடு என்று குழந்தை அடம் பிடிக்கிறதே; அதுபோல அல்ல—ஆட்டையும், மாட்டையும் வேட்டையாடிக் கொன்றது போதாமல் ஆயிரமாயிரம் ஈக்கள் சூழ்ந்து நின்று எதிர்த்தாலும் அஞ்சாது, தேன் கூட்டை நெருங்குகிறதே கரடி—அதுபோல, அவன் வெறி பிடித்து அலைந்தான். குதித்து குதித்துப் பார்த்து கடைசியில் திராட்சைக்குலை புளிக்குமென்று குள்ளநரி நடை போட்டதென்று கதை தான் கேட்டிருக்கிறோம்—ஆனால் இந்த வெள்ளை நரி, ‘கிட்டாதாயின் வெட்டென மற’ என்ற மொழியை மறந்து, ‘முயற்சி திருவினையாக்கும்’ என்ற அறிவுரையை இந்த மூர்க்கமான நடவடிக்கைக்கு அனுசரணையாகக் கொண்டான், எப்படியும், என் அன்னையை மடக்கி விடக் கங்கணம் கட்டிக் கொண்டான்.
ஒரு நாள்—ஆம், அந்த நாள் தான் எங்கள் குடும்பம் அடியோடு பாழ்பட ஆரம்பித்த நாள்; அந்த துன்ப நாளிலே, தோட்ட வேலைக்கு அப்பாவும், பாட்டியும் சென்று விட்டார்கள். அம்மாவுக்கு உடல் நலமில்லை. தங்கமும், அம்மாவும் வீட்டிலே யிருந்தார்கள். நான் பள்ளிக்கூடம் போயிருந்தேன்—தேயிலைக்காட்டை சுற்றிப் பார்க்க, டாக்துரை போயிருக்கிறான்—அங்கே அம்மா இல்லை—கங்காணி காளிமுத்து மூலமாக அம்மா வீட்டிலிருப்பதை அறிந்து கொண்டான். அங்கிருந்து டாக்துரை, வீடு நோக்கிப் புறப்பட்டிருக்கிறான், கங்காணி காளிமுத்துவுடன்!—ஆம், அந்த வெறிகொண்ட மிருகம், தனது கோரைப் பற்களுக்கு இரை தேட, எங்கள் குடிசையை நோக்கிப் புறப்பட்டு விட்டது—தன்னிடம் கூலி பெற்று பிழைக்கும் ஒரு பெண், மானத்தை இழக்கவும் தயாராயிருக்க வேண்டுமென்பது, அந்தக் காட்டு ராஜாவின் தோட்டத்திலே, சட்டமாக அல்லவா இருக்கிறது!—அதற்கு எதிர்ப்புக் குரல் கொடுக்க, ஒரு ஏழையின் மனைவிக்கு ஏது அதிகாரம்? இந்த அகம்பாவம் நிறைந்த கேள்விக்குறி நெஞ்சத்திலே தாண்டவமாட என் அன்னையை நோக்கி அந்தப் பாதகன் சென்றான்—டாக்துரையும், காளிமுத்துவும் பேசிக்கொண்டிருந்ததை கவனித்த என் அப்பா, ஏதோ சந்தேகமுற்றவராய், பாட்டியிடம் வந்து, ‘அம்மா! தோட்டத்துக்கு சென்று கிழங்கு வெட்டி விட்டு, அரைமணி நேரத்தில் வருகிறேன்’ என்று கூறி விட்டு, அப்பா அதைவிட்டுக் கிளம்பினார்.
அப்பா, குத்தகைக்கு எடுத்து கிழங்கு பயிரிட்டு வந்த தோட்டம் ஒன்று உண்டு. அங்கு தான் போகிறார் என்று பாட்டி எண்ணியிருந்தார்கள். அப்பாவோ, வீடு நோக்கி விரைந்தார்.
அதற்குள் டாக்துரை, அம்மாவிடம் வந்து விட்டான். அப்பா, வேகமாக ஓடிவந்து வீட்டுக்குள் நுழைந்தார். அப்பா அங்கே என்ன கண்டார்? அம்மா, ரத்தக் குளத்திலே மிதந்து கொண்டிருப்பதைத்தான் கண்டார். அம்மாவின் உயிர் விளக்கு, சிறிது சிறிதாக அணைந்து கொண்டிருந்தது. விலாவிலும், முதுகிலும், நெஞ்சிலும், முகத்திலும் குத்துக் காயங்களும், குபுகுபுவெனப் பொங்கி வழியும் குருதியும் அம்மாவை மரண முகப்புக்கு வெகு வேகமாக இழுத்துச் சென்று கொண்டிருந்தன. ஐந்து வருட காலமாக, ‘வள்ளி’ என்று அன்பொழுக அழைக்காத அப்பா, அம்மாவை வாரி அணைத்து மடிமேல் கிடத்தியபடி ‘வள்ளி! வள்ளி!’ என்று கதறினார். அப்போதுங் கூட அம்மா அப்பாவிடம், கடின சித்தத்தோடு தான் நடந்து கொண்டிருக்கிறார்கள். அப்பாவிடம் நேரடியாகப் பேசாமல்—யாருக்கோ பதில் சொல்வது போல, ‘டாக்துரை என்னை சூறையாட வந்தான். நெருங்காதே என்று எதிர்த்தேன். என் கையிலே இருந்த கத்தியைக் கண்டு, அவன் பயந்து பதுங்கினான். காளிமுத்து அவனுக்கு உதவியாக வந்து பாய்ந்தான். அவ்வளவு தான்! கத்தி அவர்கள் கைக்கு மாறியது! அதன் பிறகு...... ஆனால்...... வெள்ளைக்காரியிடம் மன உறுதியை தளர விட்ட ஆண்போல இல்லாமல், இந்தப் பெண், வெள்ளை நாயிடமிருந்து தன் மானத்தைக் காப்பாற்றிக்கொண்ட பெருமையைப் பெற்று விட்டாள். நான் சாகப்போவது நிச்சயமாகி விட்டது. அத்தையிடம் என் கடைசி வணக்கத்தை சொல்ல வேண்டும். அதற்குள் அவர்கள் வரமாட்டார்கள். அதனால்...... அவர்களிடம்—என் குழந்தைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படி சொன்னால் நல்லது’.
இந்த வார்த்தைகள் தேய்ந்த நிலையிலே வெளிப்பட்டன. அம்மா கண்களை இறுதியாக மூடிவிட்டார்கள். குழந்தை தங்கம் அம்மாவின் மேலே விழுந்து புரண்டு கதற, அம்மா என் அருமைத் தங்கத்தை தொட்டுக்கூடப் பார்க்க முடியாமல், அசைவற்றுக் கிடக்க—அங்கே அப்பாவும் செயலற்று நின்றார்.
அந்த சமயத்திலே போலீஸ் படை உள்ளே புகுந்தது—அது டாக்துரையின் ஏற்பாடு. கங்காணி காளிமுத்து வாயிலாக செய்யப்பட்ட கைங்கர்யம். போலீசார், வீட்டை சோதனையிட்டனர், அவர்கள் கையிலே அப்பாவின் பழைய டைரிகள் சிக்கவில்லை. ஆனால், அப்பாவை சிக்கவைக்கும் இரண்டு டைரிகள் மட்டும் கிடைத்து விட்டன, அவர்களிடம்!
ஓட்டைப் பீரோவிலே இருந்த அந்த டைரிகள் தான் அப்பாவைக் காட்டிக் கொடுக்க துணை புரிந்தன.
ஒரு டைரியிலே இருந்த வாசகம்—‘ஒன்று வள்ளி சாக வேண்டும்; அல்லது நானாவது சாக வேண்டும்—அப்போது தான் இந்தக் குடும்பத்தில் நிம்மதியாயிருக்கும்!’
அதே டைரியின் கடைசிப் பக்கத்திலே உள்ள ஒரு வாசகம், சர்க்கார் தரப்பு வக்கீலுக்கு மிகவும் சாதகமாயிற்று.
‘முதல் தேதி—வள்ளி வெட்டப்பட வேண்டும்.’ இதுவும் அப்பாவின் கையெழுத்து தான்.
போலீசாருக்கு ஆதாரம் போதாதா என்ன?”
---
கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்