அத்தியாயம் 19 · 20 / 52
அத்தியாயம் 19
Chapter 19
மூல ஸ்கேன் 172-179 (chapter-19 portion)
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
19
“அப்பா, நீதிமன்றத்திலே நிறுத்தப்பட்டார். மனைவியைக் கொலை செய்த மாபாவி என்று தெருவார் திட்டித் தீர்த்தார்கள். பாட்டியின் முகத்தை ஊரில் உள்ளோர் பரிதாபமாகப் பார்ப்பது, பாட்டியை உயிரோடு வைத்து சித்ரவதை செய்வது போலிருக்குமாம். அய்யோ பாவம், தள்ளாத காலத்திலே இந்தக் கிழவி, மருமகளையும் சாகக் கொடுத்து, மகனையும் இழந்து தடுமாறுகிறாளே என்று ஊர் மக்கள் பேசுவது அவர்களுக்கு அழுகையையும் ஆத்திரத்தையும் உண்டாக்குமாம். பத்து வயதுப் பேரன் என்னையும், ஐந்து வயதுப் பேத்தி என் அருமைத் தங்கையையும் பார்த்துப் பார்த்து அழுது கொண்டிருந்த பாட்டி, வழக்கின் முறையையும் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். எப்படியாவது, தன் செல்வ மகனுக்கு தூக்குத் தண்டனை கிடைக்காமல் போய் ஆயுள் தண்டனை கிடைத்தாலும் போதும் என்று சொல்லிச் சொல்லி ஏங்கினார்கள். தான் ஒரு கிழம், பழுத்தப் பழமாக வீட்டிலே உட்கார்ந்திருக்கும் போது, தன் குடும்பத்தின் சுடர், தனக்கு முன்பாக பிணமாக சாய்வதை பாட்டி எப்படிப் பார்த்துக் கொண்டிருக்க முடியும்? நாங்களோ, அரும்புகள்! எங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை சுமக்கும் பாட்டியோ, பழுத்து விட்ட இலை! திடீரென்று தானும் மண்டையைப் போட்டு விட்டால், எங்கள் இருவரையும் யார் காப்பாற்றப் போகிறார்கள்—எங்கள் கதி என்ன—என்று பாட்டி பெருமூச்சு விடாமல் இருக்க முடியுமா?—அப்பாவின் வழக்கில் தீர்ப்புக் கூறும் நாளும் வந்து விட்டது—எங்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு, பாட்டி நீதிமன்றத்துக்குப் போனார்கள். அப்பா கூண்டிலே நின்றார். தங்கை தங்கம் அப்பாவிடம் போக வேண்டுமென்று துடித்தது. நான் கண்ணீர் விட்டபடி நின்றேன். பாட்டி சிலையாக இருந்தார்கள்.
“அப்பா, எங்களை ஒருமுறை பார்த்தவர், பிறகு எங்கள் பக்கம் திரும்பவேயில்லை. தீர்ப்பு கூறப்பட்டது. அப்பாவுக்கு மரண தண்டனை இல்லை. ஆயுள் தண்டனை தான் தரப்பட்டது—அவரது வாழ்க்கையில் பதினைந்து வருடங்கள் சிறையிலே உருள வேண்டும்—அப்பா, எங்களைப் பார்க்காமலே நீதிமன்றத்திலிருந்து போலீசாருடன் வெளியேறினார்.
“வள்ளி சாக வேண்டும், இல்லாவிட்டால் நான் சாக வேண்டும்—என்ற வார்த்தைகளும், வள்ளி முதல் தேதி வெட்டப்பட வேண்டும் என்ற வார்த்தைகளும், அப்பாவைக் குற்றவாளியாக்கப் பெரிதும் பயன்பட்டன. சிறையிலே அப்பாவை சந்தித்தபோது, பாட்டியிடம் அப்பா, நடந்த விஷயங்களைச் சொல்லிக் கண்ணீர் விட்டாராம்.
“முதல் தேதி வள்ளி வெட்டப்பட வேண்டும் என்று—தான் எழுதி வைத்ததின் பொருளை அப்பா, விக்கி விக்கி அழுதுகொண்டே பாட்டியிடம் கூறினாராம். தேயிலைத் தோட்டத்து வேலையோடு, அப்பா ஒரு கிழங்குத் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்துப் பயிர் செய்தார் என்று முன்பே கூறியிருக்கிறேன்—அந்தத் தோட்டத்திலே முதல் தேதியன்று வள்ளிக் கிழங்குகளை வெட்டி எடுக்க வேண்டும் என்பதைத்தான் அவர் தனது டைரியிலே எழுதி வைத்திருக்கிறார். கொலை செய்யப் போகிற ஒரு மனிதன் தான் அகப்பட்டுக் கொள்வதுபோல, முன்கூட்டி எழுதி வைப்பானை, என்கிற யோசனை கூட இல்லாமல், அந்த எழுத்துக்களையே ஒரு மனிதனின் வாழ்வைப் பாழாக்க உபயோகித்துக் கொண்டார்கள். வாதத்தின் திறமை, வழக்கறிஞனின் சாமர்த்தியம் என்கிற புகழ் மாலைகளைப் பெறுவதற்காக, ஒரு நிரபராதியின் வாழ்வில் பதினைந்து வருடங்கள் துண்டாக வெட்டப்பட்டன—வள்ளி வெட்டப்பட வேண்டும், என்ற அந்த வாசகம் சர்க்கார் தரப்பு வக்கீலுக்கு சாதகமாயிற்று. அதேபோல, என் அப்பாவிடமும் பணமிருந்து, ஒரு நல்ல வழக்கறிஞர் கிடைத்திருந்தால் அதே வார்த்தைகளை அந்த வக்கீலும் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பார்.
“‘வள்ளி வெட்டப்பட வேண்டும் என்றுதான் எழுதியிருக்கிறது. ஆனால், இந்த வள்ளியம்மையோ குத்தப்பட்டு செத்திருக்கிறாள்—ஆகவே டைரிக் குறிப்புகள் குமாரவடிவை குற்றவாளியாக்கும் சாட்சியாக, இருக்க முடியாது!’ என்பதுபோல அமைந்திருக்கும் அந்த வக்கீலின் வாதம். அதனால், அப்பா விடுதலை பெறவும் முடிந்திருக்கும். அப்படி ஒரு வழக்கறிஞரை வைத்து வழக்கு நடத்தும் வசதி அப்பாவுக்கு இல்லை.
“இதுபோல எத்தனையோ வழக்குகளில், எத்தனையோ நிரபராதிகளுக்கு என் தாத்தா பொன்னும் பொருளும் வாரிக்கொடுத்து, அவர்கள் உயிரைக் காப்பாற்றினாராம். இப்போது அவரது அருமைக்குரிய மகன் யாருமற்ற அனாதியாய் பதினைந்து வருடகாலம் கூண்டிலே கிடக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. அப்பாவையும் சிறைக்குச் சிறை மாற்றிக்கொண்டே தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். பாட்டி, எங்களை படாதபாடுபட்டு வளர்த்து வந்தார்கள்.
“ஆண்டுகள் உருண்டன. எனக்கு சுமார், பதினைந்து வயதிருக்கலாம். தங்கையும் பத்து வயதை எட்டிப்பிடித்து வளர்ந்து வந்தது. பாட்டி, உடல் நலிவுற்று படுக்கையில் விழுந்தார்கள். பிறகு அவர்கள் எழுந்திருக்கவேயில்லை. சுமார் ஒரு மாத காலம் பாட்டி, இயற்கையோடு போராடினார்கள்.
“எங்கள் இருவரையும் பாதுகாக்க, இன்னும் சிலகாலம் உயிரோடிருக்க அவர்கள் எவ்வளவோ ஆசைப்பட்டார்கள். யாருடைய கையிலாவது எங்கள் இருவரையும் ஒப்புவித்து விட்டு, நிம்மதியாக கண்ணை மூடலாம் என்று துடியாய்த் துடித்தார்கள். பழுத்து முதிர்ந்து, அனுபவத்தின் கீறல்கள் விழுந்த அந்தக் கிழ நெஞ்சத்திலே, எங்களைப்பற்றிய சிந்தனை அலைகள் கொந்தளித்துக் குமுறி எழுந்தன.
“என்னையும் தங்கையையும் நடுங்கும் கரங்களால் கட்டிப் பிடித்துக்கொண்டு பாட்டி கதறிய காட்சிகள் இன்னும் என் மனதை விட்டகலவில்லை. எலும்புகளாகி விட்ட பாட்டியின் கரங்கள் என்மீது படும்போது, எனக்கு எவ்வளவோ ஆறுதலாக இருந்தது. அந்தக் கரம் தானே, எங்கள் இருவரையும் இத்தனை நாள் சீராட்டிப் பாராட்டி வளர்த்த கரம் என்று நினைத்துக் கொள்வேன்—தங்கத்தைத் தழுவிக்கொண்டு அழுவேன்—தங்கமும் கூக்குரலிடும், பாட்டி மரணாவஸ்தையால் கஷ்டப்பட்ட அந்த நாட்களில் நானும் தங்கமும் சரியாக சாப்பிட்டதேயில்லை. பலநாள் பட்டினி கிடந்திருப்போம். அடுத்த வீட்டுக்காரர்களின் உபசரிப்புகள் எங்களை உயிரோடு வாழவைத்தன. இறுதியாக பாட்டி கண்களை மூடும் அந்த நாளும் வந்துவிட்டது. அன்று காலையிலே பாட்டியின் முகத்தில் சாவுக் குறிகள் தோன்ற ஆரம்பித்துவிட்டன. உலகத்தின் இன்ப துன்பங்களை அனுபவித்து—வாழ்வின் இரு துருவங்களையும் சந்தித்து—வைரம் பாய்ந்துபோன அந்த குடும்பத்தரு அடியோடு சாயப்போகும் நேரம் நெருங்கிக் கொண்டேயிருந்தது. அன்று எங்களிருவரையும் பாட்டி அருகிலேயே வைத்துக்கொண்டு அணைத்துக்கொண்டார்கள். இருபுறத்திலும் நாங்கள் இருவரும் அமர்ந்து, பாட்டியின் ஸ்பரிச உணர்ச்சியால் ஆட்கொள்ளப்பட்டு மெய் மறந்து போயிருந்தோம். அம்மா, தான் புதையுண்ட இடத்தில் மக்கி மடித்துப்போய்—உடல் மண்ணோடு மண்ணுக்கிவிட்டு, எங்கள் பாட்டிக்காக பூமியைத் தயார் செய்து வைத்திருக்கிறார்கள். அப்பா—எந்த சிறையிலே எந்த வார்டரிடம் அடி வாங்குகிறாரோ அல்லது எத்தகைய கஷ்டமான வேலையை செய்து வேதனை அனுபவிக்கிறாரோ—அல்லது இருக்கிறாரோ அவரும் செத்தாரோ தெரியாது. நாங்கள் இருவரும் எங்களுக்கு இருந்த ஒரே ஒரு ஆதரவையும் இன்னும் சில மணி நேரங்களில் இழக்கப் போகிறோம் என்ற கலக்கத்தோடு உட்கார்ந்திருந்தோம். பாட்டி எதுவும் பேசாமல் எங்களிருவரையும் மாறி மாறிப் பார்ப்பதும், எங்கள் முகங்களைத் தன் முகத்தோடு சாய்த்துக்கொள்வதுமாக இருந்தார்கள். அவர்களது கண்களில் நீர் துளிர்த்தது. என்ன எண்ணினார்களோ—யார் கண்டது? வயதான கிழங்கள் சாகும் காலத்தில் விரும்புவதென்ன? மகன் கொள்ளி வைக்க வேண்டும்; பேரன் பேத்திகள் நெய் விளக்குகள் பிடிக்க வேண்டும் என்றுதானே ஆசைப்படுவார்கள். அந்தக் கடைசிக் கடமையைச் செய்ய முடியாமல், குற்றமற்ற தன் மகன் எங்கேயோ சிறையில் சித்திரவதைப் படுகிறான் என்பதை பாட்டியால் எப்படித்தான் தாங்கிக் கொள்ள இயலும்—மகனை நினைந்து வழிந்த கண்ணீரோ—அல்லது எங்கள் எதிர்காலத்தைப் பற்றிய ஏக்கமோ—பாட்டியின் இருதயத்தை சல்லடைக் கண்களாகத் துளைத்துவிட்டது.
“அந்த நினைவு எதுவோ தெரியாது; பாட்டி அழுது கொண்டேயிருந்தார்கள். அண்டை அயலார் எல்லாம் வந்து கூடிவிட்டார்கள்; பாட்டியை வழி அனுப்பிவைக்க!
“திடீரென்று பாட்டி பேச முடியாத நிலை பெற்றார்கள். இனிமேல் பாட்டி, பேச மாட்டார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். ஆனால் தங்கம் புரிந்து கொள்ளாமல், ‘பாட்டி! பாட்டி!’ என்று கதறினாள். அவர்கள் பேச முடியவில்லை என்பதை கை ஜாடையால் உணர்த்தி விட்டு, எங்களை இறுகத் தழுவிக் கொண்டார்கள். ‘சிறிது நேரத்தில் உயிர் போய்விடும்’ என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் தாராளமாகப் பேசிக் கொண்டார்கள். எங்கள் அருமைப் பாட்டியின் காதுகளில் அந்த வார்த்தை விழுந்ததோ என்னமோ தெரியாது—அவர்கள் எங்களை அழுத்தமாகக் கட்டிக் கொண்டார்கள். எங்கள் முகங்கள், பாட்டியின் முகத்திலே பதிந்து விட்டன.
“பாட்டியின் கண்ணீரும், பசலைகளாகிய எங்களின் கண்ணீரும் ஒன்று சேர்ந்து—வர வர பாட்டியின் அணைப்பு பலமாயிற்று—நாங்களும் அசைவற்று அவர்கள் மீது ஒட்டிக்கொண்டிருந்தோம்—பலமான பிடி சிறிது சிறிதாக தளர்ந்தது. கடைசியில் பாட்டியின் கைகள் எங்கள் மேனியை விட்டு அகன்றன. அய்யோ—பெற்ற தாயைவிட அருமையாக வளர்த்த எங்கள் ஆசைப் பாட்டியை சாவு கொத்திக் கொண்டுபோய் விட்டது.
“‘சாஞ்சாடு அம்மா சாஞ்சாடு!’ என்று பொக்கை வாய்த் திறந்து பாடும் அந்தப் பாசமுள்ள பாட்டு இனி அந்தக் குடிசையிலே கேட்காது.
“‘அன்னிக் கொட்டு பொண்ணே அன்னிக்கொட்டு! அஞ்சாறு காசுக்கு அன்னிக் கொட்டு!’ என்று என் தங்கைக்கு விளையாட்டுப் பாட்டுப் பாடிய, அந்த இதழ்கள் திறக்காமல் மூடிவிட்டன. அடுத்த வீட்டுக்காரர்கள், தாங்கள் செய்யவேண்டிய கடமைகளை அவசரமாக செய்து பாட்டியை மண்ணுக்கு இரையாக்கிவிட்டு அவரவர்கள் வீட்டுக்குப் போய்விட்டார்கள். நாங்கள் தனியாகி விட்டோம். எங்கள் வீடு இருளாகிவிட்டது. பதினாறு பதினைந்து வயது நிரம்பிய நானும், பத்து வயதுத் தங்கையும் ஒரு குடும்பத்தை நடத்துவதற்கு துரத்தப்பட்டோம். புயலும், இடியும் சீறிக் கிளம்பும் அந்தகார இருட்டிலே, தளிர்களான நாங்கள் இருவரும் பயணம் நடத்துவதென்றால் முடியக்கூடிய காரியமா? யார் எங்களுக்கு நாதி? இந்தக் கேள்வியை நாங்களே கேட்டுக்கொண்டோம். உரக்க உரக்க கேட்டோம், பதில் கிடைக்கவில்லை. பெரும் பணக்கார வீட்டிலே இப்படி இரு இளம் சிட்டுகள் தனியாக விடப்பட்டு, முக்கியஸ்தர் செத்துப் போயிருந்தால், மூலை முடுக்குகளில் உள்ள சொந்தக்காரர்கள் எல்லாம் முந்திக்கொண்டு ஓடி வருவார்கள்—யார் யார், எப்படி எப்படி பங்கு போட்டுக்கொள்ளலாம் என்று திட்டம் போட்டபடி சூழ்ந்துகொள்வார்கள். ஆனால் அனாதைகளான எங்களுக்கு யார் துணை? கேள்விக் குறிகள் பெருகின. வீட்டின் தெருப் புறத்திலே உட்கார்ந்துகொண்டு, பாட்டியின் பிணம் போன திக்கைப் பார்த்துக்கொண்டேயிருந்தோம். அதுதான் எங்களின் உடைந்த உள்ளத்திற்கு ஆறுதலாக இருந்தது. இரக்கப்பட்ட தெரு மக்கள் எங்களுக்கு சிறு சிறு உதவிகளைச் செய்தார்கள். அவர்களால்தான் என்ன செய்ய முடியும்! அவர்களும் அன்றாடம் காய்ச்சிகள் தானே!
“இப்படி திக்குத் தெரியாமல் விழித்த எங்களுக்கு நல்ல திசை காட்டுவதாகக் கூறிக்கொண்டு, ஒரு மனிதன் வந்து சேர்ந்தான். காஷாய உடையும் ‘கடவுள் துணை’ என்ற மந்திரமும் அவனைச் சாமியார் என்று பறையடித்தன. அந்தச் சாமியார், எங்களது நிலையைப் பார்த்துப் பரிதாபப்பட்டான். அவன் இலங்கை வாசியல்ல. இந்தியாவிலேயிருந்து வந்தவன்தான். அவன் எங்களை அணுகி, இந்தியாவுக்குத் தன்னுடன் வருமாறும், அங்கே சுகமாக வாழ எங்கள் இருவருக்கும் வசதி செய்து தருவதாகவும் கூறினான். தெருமக்களும் சாமியாரைப்பற்றி வானளாவப் புகழ்ந்து, அவரோடு நாங்கள் இந்தியா செல்வது நல்லது என்று அறிவுரை கூறினார்கள். எனக்கும், என் தங்கை தேயிலைக் காடுகளின் ஓரத்திலே வளர்வது பிடிக்கவில்லை. கொடிய விலங்குகள் வாழும் பகுதியில் என் தங்கையும் வாழ்வது என்பது சமாளித்துத் தீரவேண்டிய ஒரு பயங்கரப் பிரச்சினையாகிவிடும் என்று நான் முடிவு கட்டியிருந்தேன். இந்தியாவில் வந்து எப்படியாவது பிழைத்துக் கொள்ளலாம் என்று தைரியங் கொண்டேன். நமக்கு ஒரு நல்ல வேலை; தங்கைக்கு ஒரு நல்ல கணவன்—இது கிடைத்துவிட்டால் போதும் என்ற ஆசையோடு இலங்கையிலிருந்து புறப்பட்டேன்......அப்போது தெரியாது; சாமியார் எங்கள் கெட்ட எண்ணத்தோடு, அழைத்து வருகிறான் என்பது! மருங்கப்பள்ளத்திலே யிருக்கும் புதையலை எடுக்க, ஒரு நரபலி வேண்டுமாம்—அதுவும் சின்னஞ்சிறு பெண்ணாக இருக்கவேண்டுமாம். அந்தப் பெண்ணின் ரத்தத்தை பூமியில் தெளித்தால்தான் புதையல் இருக்கும் இடம் வெடித்துக் கிளம்புமாம், இப்படி ஒரு நம்பிக்கையோடு, என்னையும், என் அன்புத் தங்கையையும் அந்தப் பாதகன் அழைத்துப் போனான் என்பது பிறகுதான் தெரிந்தது.”
---
கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்