அத்தியாயம் 20 · 21 / 52
அத்தியாயம் 20
Chapter 20
மூல ஸ்கேன் 179 (chapter-20 portion)-187 (chapter-20 portion)
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
20
சாமியாரும் நாங்களும் கள்ளத்தோணி மூலமாகக் கடலைக் கடந்து தென்னாட்டுக் கரை வந்து சேர்ந்தோம். சாளுவநாயக்கன் பட்டிணத்திலே, கடற்கரையில் ஓங்கி நிற்கும் அந்த ஏழடுக்கு உப்பரிகையை நானும் தங்கையும் கண்டு மகிழ்ந்தோம். தங்கைக்கு அந்த உப்பரிகையை விட்டு அகலவே மனம் வரவில்லை. அதிலே ஏறிப் பார்க்க வேண்டுமென்று நான் ஆசைப்பட்டேன். சாமியாரும் எங்களை பத்திரமாக பாதுகாத்து, உப்பரிகையின் மேல் தளம் வரையிலே அழைத்துச் சென்றார். பெரியவரே! தங்களை முதன் முதலாக நாங்கள் சந்தித்த அந்த உப்பரிகையிலே நானும் தங்கையும் நின்றுகொண்டு கடலைக் கண்டோம். களிப்பால் குதித்தது தங்கம். சாமியார் எங்களிருவரையும் கிண்டல்கள் பல செய்து உற்சாகப்படுத்திக்கொண்டேயிருந்தார். கசாப்புக் கடைக்காரன் கூடத்தான், ஆடு மாடுகளுக்குத் தீனி போடுகிறான். மறு நாள் அவைகளை வெட்டி விற்பனை செய்யும் வரையில் அவை சாகாமல் இருக்க வேண்டுமே—அதுபோலத்தான் எங்களுக்கும் சாமியார் பல்வகை உபசாரங்கள் செய்தார். பிறகு, எங்களை மெதுவாக அழைத்துக்கொண்டு, நடந்தே புறப்பட்டார். நாங்களும் பின் தொடர்ந்தோம்.
அனாதையாக இலங்கைத்தீவிலே விடப்பட்ட எங்களை வாழ்விக்க வந்த மகான்—முன்னே போகிறார் என்ற நினைப்போடு, அவனை வாழ்த்திக்கொண்டே, தங்கையை ஒரு கையில் பிடித்துக்கொண்டு நடந்தேன். தங்கையோ சிறுமி—பத்து வயதுக் கொழுந்து—எங்களோடு போட்டி போட்டு நடக்க முடியுமா?.....தள்ளாடியது—அதைக் கண்ட அந்த சாமியார், பரிவோடும், பாசத்தோடும் என் தங்கையைத் தன் தோளில் தூக்கிவைத்துக் கொண்டான். ஆமாம், பெரியவரே, தங்கையைத் தோளில் வைத்துக் கொண்டார். அப்போது எனக்குத் தெரியாது அந்தப் பாவி, என் செல்வத்தைக் கூரான வாளிலும் வைக்கப் போகிறான் என்று!—பச்சைக் கதிரசைக்கும் வயல்கள், பசுமைக் கரம் நீட்டும் இளமரங்கள், இடையிடையே மடை கோலிப் பாயும் சிறு வாய்க்கால்கள் இவைகளையெல்லாம் ரசித்தபடி, நாங்கள் பயணம் நடத்திக் கொண்டிருந்தோம். அந்தச் சாமியார், சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களைப் பற்றியும், அங்கேயுள்ள கோயில் குளங்களைப்பற்றியும் கதை கதையாய்ச் சொன்னான்.
அருகேயுள்ள நாடியம் என்ற கிராமத்தில் ஒரு மடாலயம் இருப்பதாகவும், அந்த மடாலயம் வட நாட்டுக்காரர்களுக்குச் சொந்தமானதென்றும், வடநாட்டு மதத் தலைவர்கள் அங்கே பல தலைமுறைகளாக ஒருவர்பின் ஒருவராக மடாதிபதியாக இருந்து வருவதாகவும், அவர்கள் எல்லாம் தனக்குத் தெரிந்தவர்களே என்றும் அவன் கதையளந்தான். நாடியம் கிராமத்திலே மடம் இருப்பது உண்மை. அது வடநாட்டு மடாதிபதிகளின் ஆதிக்கத்தில் இருப்பதும் உண்மை. அந்த அதிபதி, தனக்கு நண்பர் என்று சொன்னானே; அது எவ்வளவு தூரம் உண்மையோ எனக்குத் தெரியாது. பேசிக்கொண்டே மருங்கப்பள்ளம் கிராமம் வந்து சேர்ந்தோம்—அங்கேயிருக்கும் சிவன் கோயிலில் இன்றிரவு தங்கிவிட்டு, காலையிலே நாடியம் மடாலயத்துக்குச் சென்றுவிட்டு, பிறகு அந்த அதிபரின் சிபாரிசோடு, எனக்கு ஒரு நல்ல வேலை வாங்கித் தருவதாகவும், தங்கையை படிக்க வைப்பதற்கான வசதிகளைக் கவனிப்பதாகவும் அவன் சொன்னான்.
உலகத்தை வெறுத்துவிட்டு வெளிக் கிளம்பிய ஒரு துறவிக்கு நாங்கள் இருவரும் ஒரு பாரமாக வந்து சேர்ந்தோமே என்று நான் கவலைப்பட்டேன். “சுவாமீ! எங்களிடம் ஏன் இப்படி அக்கரை காட்டவேண்டும்—நாங்கள் யாரோ? தாங்கள் யாரோ?” என்று நான் வருத்தமுடன் கேட்டேன்.
“என்ன சொன்னாய் அப்பனே! நீ யார்? நான் யாரா?—நாம் எல்லோருமே ஆண்டவன்கள்! நாமே கடவுள்கள்! பல கூடுகளில் இருக்கும் ஒரே உயிர்! பிர்! பல பாத்திரங்களில் ஊற்றப்பட்டுள்ள ஒரே பசுவின் பால்! ஒரு உயிருக்கு ஒரு இன்னல் என்றால், அந்த இன்னல் எல்லா உயிரையும் பாதிக்கும். இதை சாதுக்கள் மட்டுமே உணர்வார்கள். அப்படி உணர்ந்த சாது நான்! அதனால்தான் உங்களை வாழ்விக்க முற்பட்டேன்” என்று சாமியார் சொற்பொழிவு நிகழ்த்தினான்.
பிறகு, மூவரும் அங்குள்ள சிவன் கோயிலுக்குச் சென்றோம். இருட்டாயிருந்த போதிலும் விளக்கு, ‘மினுக்—மினுக்’ என்று எரிந்து கொண்டிருந்தது. கோயில் வாயிலே நின்றபடி சாமியார் கூப்பிய கரமுடன் பஜனைப் பாடல்களைப் பாடினான். அவனாகவே ஆடினான், ஆண்டவனோடு ஐக்யமாகிவிட்டதாக நடித்தான். எங்களையும் பிரார்த்தனை செய்து கொள்ளும்படி கூறினான். தங்கை தங்கம், தனது பிஞ்சுக் கரங்களைக் குவித்தபடி ஆண்டவன் சன்னிதானத்தைப் பார்த்து, தேனொழுகும் மழலை மொழியால், “சாமி தாயே! எங்க பாட்டி, எங்க அம்மா, எங்க அப்பா—எல்லாரையும் எனக்கு திருப்பிக்கொடு!...” என்று கேட்டுக்கொண்டது. தாமரை இதழிலே பனித் துளி பட்டு சிதறுவதுபோல, என் தங்கத்தின் கன்னச் சரிவுகளிலே கண்ணீர்த் துளிகள் விழுந்து சிதறியதை, அந்த மங்கலான வெளிச்சத்திலும் நான் கண்டேன். என்னை நானே தேற்றிக்கொண்டேன்.
சாமியார், மூட்டை கட்டி வைத்திருந்த ஆகாரத்தை ஆளுக்குக் கொஞ்சம் சாப்பிட்டோம். “மிச்சம் வைங்க—காலையிலே சாப்பிடவேணும்” என்று கேலியாகச் சொன்னது என் கிளி! அய்யோ; அந்தக் கிளி அப்போது சாப்பிடுவதுதான் கடைசிச் சாப்பாடு என்பதை உணரவில்லை. சாப்பிட்டு முடிந்ததும்—கோயிலுக்கெதிரே உள்ள மேடையில் நாங்கள் மூவரும் படுத்தோம். நடந்து வந்த களைப்பினால் தூக்கமும் விரைவிலேயே வந்து எங்களை மயக்கத் துவங்கியது. சாமியார், தன் தோளிலே போட்டிருந்த நீண்ட பெரிய மூட்டையை கீழே இறக்கிவைத்துவிட்டு எங்களுக்குப் பக்கத்தில் படுத்துக்கொண்டான். இரவு நேரத்திலே உலவக் கிளம்பும் தவளைகளின் சங்கீதமும், பறவைகளின் ஒலியும், வயற்பூச்சிகளின் ஒலியும்—பயங்கரமாகத்தானிருந்தன. நான் தங்கையை அணைத்தபடி படுத்துக்கொண்டேன். தங்கை பயப்படுகிறது என்பது மட்டும் எனக்குத் தெரிந்தது. “பயமா?” என்று கேட்டால் அதிகமாக பயப்படுமே என்று எண்ணி கேட்காமலே இருந்துவிட்டேன். ‘பக்கத்திலே வேறு யாருடைய வீடாவது இருந்தால், அங்கு போய்ப் படுத்துத் தூங்கலாமே’ என்று சாமியாரைக் கேட்டேன்.
“இந்த ஊர் பொல்லாத ஊரப்பா!—அங்கெல்லாம் போகவே கூடாது!—அதுவும் ராத்திரி நேரத்திலே மிக ஆபத்து” என்று சாமி பதில் சொன்னான். எவையெவைகளையோ எண்ணிக்கொண்டே தூங்கிவிட்டேன்.
நடுநிசியிருக்கும்—அப்போது திடுக்கென்று விழித்தேன். என் அணைப்பிலே தூங்கிக்கொண்டிருந்த தங்கையைக் காணவில்லை. அதிர்ச்சியடைந்து, தலையைத் தூக்கிப் பார்த்தேன். சாமியாரையும் காணவில்லை. எழுந்து உட்கார்ந்தேன். கூச்சலிடவேண்டும்போல் தோன்றியது. கூச்சலிட்டேன்—கூவினேன்—அலறினேன்—ஆனால் அந்தக் கூச்சலும், அலறலும் என் காதுக்கே கேட்கவில்லை. வாய் மட்டும் திறந்திருக்கிறதே தவிர, ஒலி எழும்பவில்லை என்று எனக்கே புரிந்தது. கண்களை இறுக மூடிக்கொண்டு என்னை நானே தைரியப்படுத்திக்கொண்டேன். பட படவென்று ஆடியது என் இளந் திரேகம். “டக் டக்!” என்று இருதயம் துடிப்பதை நான் நன்றாக கேட்க முடிந்தது. எழுந்துவிட்டேன், நின்றேனா, இல்லையா—என்று நிதானித்துக் கொண்டேன். ஒரு அடி எடுத்து வைத்தேன்; கண்களை அகல விரித்துப் பார்க்க முடிந்தது; பார்த்தேன். ஒரு ஒலி கேட்டது; கவனித்தேன். “எழுவானுக்கும் தொழுவானுக்கும் இடையிலே—காக்கா மூக்கு நிழலிலே—பசும் பொன்! பசும் பொன்!! பசும் பொன்” என்ற வார்த்தைகள் திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டிருந்தன.
அந்த அமைதியும், அதே நேரத்தில் பயங்கரமும் கலந்த இரவிலே, இதுபோன்ற ஒலியை, ஒரு இளைஞன் அனாதையாக நின்றுகொண்டு, கேட்பதென்றால் முடிகிற காரியமா? மனதைத் தைரியப்படுத்திக்கொண்டேன். மெதுவாக ஒலி வந்த பக்கம் போனேன்.
“தேவீ! உன் காணிக்கையை கொடுத்துவிட்டேன். இன்னுமா தாமதம்! நரபலி கொடுத்தும், இந்த நாயை சோதிக்கலாமா?—புதையல் வரட்டும்! புதையலைக் கொண்டுவந்து காட்டு! தாயே! தாயே!! எங்கே புதையல்? எங்கே புதையல்?” என்ற வார்த்தைகள் என்னைக் கலக்கின. கொஞ்சம் வேகமாக அடியெடுத்துவைத்தேன். ஒரு விளக்கு எரிந்தது. கூர்மையாகப் பார்த்தேன்.” துரை, இப்போது கதையைத் தொடர முடியாமல் தத்தளித்தான். அவன் உதடுகள் நடுங்கின, கண்கள் குளமாயின. பரிமளாவின் மெல்லிய, பூப்போன்ற உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அங்குமிங்கும் உலவியபடி துரையின் கதையனைத்தையும் ஆழ்ந்த சிந்தனையுடன் கவனித்து வந்த மாயாண்டிக் கிழவர் அசைவற்று சிலைபோல நின்றார். துரை என்ன சொல்லப் போகிறான் என்பதை கிழவரும், பரிமளாவும் ஆவலோடு, அதே நேரத்தில் அழுகின்ற நெஞ்சத்தோடும் எதிர்பார்த்தார்கள். துரை தொடர்ந்தான்.
“மங்கலான விளக்கு ஒளிக்குப் பக்கத்திலே சாமியார் உட்கார்ந்திருந்தான். அவன் கையிலே ஒரு ரத்தம் தோய்ந்த அரிவாள் இருந்தது. அந்த அரிவாளைத்தான் அவன் அந்த பெரிய மூட்டையில் ஒளித்திருந்தான் போலும்—ஆனது ஆகிவிட்டது இனி என்ன? என்ற முடிவோடு, சாமியாரின் பின்னே சென்று இன்னும் கவனமாகப் பார்த்தேன். என் தங்கையின் உடல் இரண்டு துண்டுகளாகக் கிடந்தன. தங்கத்தின் தலை வேறு, முண்டம் வேறாக, ரத்தம் சொட்டியபடி கிடந்த காட்சியை நான் கண்டேன். அருமைமிகு தங்கையின் அழகோவியம் இப்படி அலங்கோலமாக்கப்பட்டுக் கிடப்பதை எந்த அண்ணனால்தான் சகிக்க முடியும்? கத்தினேன்—முன்போலவே வாய் அடைத்துக்கொண்டது; கண்கள் மங்கிவிட்டன; ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியவில்லை.
“அம்மா, சீவிச்சீவி சிங்காரிப்பார்களே; அந்தத் தலை வெட்டுண்டு கிடந்தது. பாட்டியின் முத்தங்களைப் பெற்றுப் பெற்று சிவந்துபோகும் அந்த ரோஜாக் கன்னங்கள், அழகு விழிகள், அது காட்டும் குறும்புப் பார்வை—எல்லாமே—ஆமாம் என் தங்கையே—என் செல்வப் பேழையே—நொறுக்கப்பட்டுவிட்டது. முன்னோக்கி நடப்பதாக எண்ணிக்கொண்டே, பின்னால் வெகுதூரம் வந்து ஒரு மரத்தில் மோதிக்கொண்டேன். அப்போதுதான் எனக்கு நினைவு வந்தது. நின்றபடி யோசித்தேன். இனி தங்கை பிழைக்க முடியாது—துண்டாகிவிட்டது—மேற்கொண்டு என்ன செய்யலாம்; இந்தத் துரோகியை எப்படித் தண்டிக்கலாம் என்று யோசித்துக்கொண்டேயிருந்தேன். “சரி! இவனையும் இதே இடத்தில் வெட்டிச் சாய்ப்பது!” என்ற முடிவோடு அவன் பக்கம் நடந்து வந்தேன். அப்போது அவன், அங்குள்ள ஒரு குழியில் தங்கையின் சிதைந்த உடல்களைப் போட்டு, மண்ணால் மூடிக்கொண்டிருந்தான்.
“தங்கைக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் காட்சியை அண்ணன் பார்த்துக்கொண்டே நின்றேன். இனி என்ன; நான் மட்டுமே மிச்சம்!—அவனைத் தொலைக்கவேண்டும் முடியாவிட்டால் அவனைத் தொலைக்கும் முயற்சியிலேயே சாக வேண்டும் என்ற முடிவோடு, அவனருகே பூனை போல நடந்துவந்தேன். அவன், தங்கையை நன்றாகப் புதைத்துவிட்டு, தன் எதிரிலே வைத்திருந்த ஒரு காளி சிலையோ, அல்லது வேறு ஒரு பயங்கரமான சிலையோ, சரியாகத் தெரியவில்லை—அதன் முகத்தில் காரித் துப்பினான்—‘அடி சண்டாளி! உன்னை நம்பி, நீ புதையலைக் காட்டுவாய் என நம்பி, நரபலிக்கு அலைந்து திரிந்து, கொண்டுவந்தேனே—நீ ஏமாற்றி விட்டாயே!’ என்று அந்த சிலையைக் கீழே போட்டு காலால் உதைத்தான். “புதையல், எங்கே புதையல்?” என்று கத்திக்கொண்டே சிலையைத் தூளாக்கினான். அவன் கவனமெல்லாம் சிலையின்மீது திரும்பியிருந்த அந்த நேரமாகப் பார்த்து நான் அவனிடம் ஓடி அங்கிருந்த கொடிய அரிவாளைத் தூக்கினேன். சாமியார் திடுக்கிட்டான். ஓடினான்; நான் துரத்தினேன். ஒரே வெட்டு! அவனைத் தொலைத்து விடலாமென்று துடித்தேன்!
“ஓடிக்கொண்டிருந்த சாமியார், அய்யோ என்று அலறினான். அதற்குள் நான் அவனிடம் போய்விட்டேன். அவன் என் அரிவாளுக்குத் தப்பி, அங்குள்ள பாழும் கிணற்றில் கால் தவறி விழுந்துவிட்டான். கிணற்றுமேல் நின்றுகொண்டு, உற்று நோக்கினேன். சப்தம் வருகிறதா என்று கவனித்தேன், ‘ஐயோ! ஐயோ!’ என்று முனகல் கேட்டது.
“பிறகு, அதுவுமில்லை. வெளியே இருந்த பெரும் பெரும் கற்களைத் தூக்கி கிணற்றுக்குள்ளே போட்டேன். பிறகு, என் தங்கை புதைக்கப்பட்ட இடத்திற்கு வந்தேன். அழுதேன்—அந்த மண்ணை முத்தமிட்டேன். புதையுண்ட என் கண்மணியை மீண்டும் தோண்டி எடுக்க விரும்பவில்லை. அரிவாளில் ஒட்டிக்கொண்டிருந்த என் தங்கையின் ரத்தத்தை முத்தமிட்டேன். கண்களில் ஒத்திக்கொண்டேன். பிறகு அந்த அரிவாளையும், சாமியார் விழுந்து கிடந்த கிணற்றுக்குள் போட்டேன்.
“அதன் பின் நான் அங்கு நிற்கவில்லை—கால் போன பக்கம் நடந்தேன்.”
---
கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்