அத்தியாயம் 21 · 22 / 52

அத்தியாயம் 21

Chapter 21

மூல ஸ்கேன் 187 (chapter-21 portion)-196 (chapter-21 portion)

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

21

“சாகக் கூடிய வயதல்ல—ஆனாலும் அம்மா சாகடிக்கப்பட்டார்கள்—சருகாக மாறியும் சலியாது உழைத்த பாட்டியை சாவு அழைத்துக்கொண்டது.

“தந்தையோ சிறைச்சாலையில் வாடுகிறார் என்பது மட்டும் தெரியும்—எங்கே, எப்படி? அது தெரியாது. அன்புக்குத் துணை—ஒரே ஒரு அருமைத் தங்கை—அதையும் அந்த எருமை மனிதன், புதையலுக்கு எருவாகப் போட்டுவிட்டுப் போய்விட்டான். உலகம் மட்டுமல்ல, என்னுடைய எதிர்காலமே இருள் மூடிக் கிடப்பதாகத் தோன்றியது.

“நடு நிசி—‘எங்கே போகிறாய்?’ என்று என்னையே நான் கேட்டுக்கொண்டேன். கேட்கத்தான் முடிந்ததே தவிர, பதில் சொல்ல முடியவில்லை. மழை வரப்போவதை அறிவிக்க இருட்டிலே கத்திக்கொண்டிருந்த கிருட்டிகளுக்குக்கூட ஒரு லட்சியம் இருந்திருக்கும்—அதுகூட இல்லை எனக்கு. வானம் வேறு உறும ஆரம்பித்தது. இருளின் கனம் அதிகமாகிக்கொண்டே வந்தது. லேசான மழைத் தூறல்கள்—ஆகா! அந்த சமயத்தில் எனக்கு எப்படியிருந்தது தெரியுமா? மழைத் துளிகள் என் முகத்திலே பட்டுத் தெறித்துச் சிதறுவதும்—என் ஆடைகள் மெல்ல மெல்ல ஈரமேறுவதும்—ஏதோ ஒரு விதமான விரக்தி மனப்பான்மையை அளித்தது.

“நானும் தங்கையும் மழையைக் கண்டாலே மயில் போலக் குதிப்போம் முன்பெல்லாம். மழைத் துளிகளிலே நிற்பதைவிட ஆனந்தம் வேறு இல்லை என்று எண்ணுவோம். ‘உடம்புக்கு ஆகாது; உள்ளே வாங்க’ என்று பாட்டி அன்பாகக் கோபிக்கிற வரையிலே மழையிலே நனைந்துகொண்டு ஆடுவோம்; பாடுவோம். வீட்டுக்குள்ளே வந்துவிட்டால்கூட, திண்ணையிலே அமர்ந்து மழையை ரசிப்போம். தெருவிலே சிறு சிறு வாய்க்கால்கள் போல நெளிந்தோடும் மழைத் தண்ணீரிலே நாங்கள் மிதக்க விட்டிருக்கிற காகிதப் படகுகள் எவ்வளவு? கம்பீரமாக மிதந்து செல்லும் எங்கள் படகுகளின்மீது மழைத் துளிகள் படுவதும், பின்னர் அவை ஈரத்தால் கனத்து உருவிழந்து பழைய காகித உருவிலேயே நீரில் கரைவதும்—அதற்காக நானும் தங்கையும் ‘த்சு’ கொட்டி அனுதாபம் தெரிவிப்பதும்—இன்றல்ல; என்றும் மறக்க முடியாத நிகழ்ச்சிகள். அப்படியெல்லாம் மழையை ஒரு விருந்தாகக் கருதிய நான் தான், அந்த நடு நிசி வேளையிலே தூறல் கண்டு துடித்துப் போனேன்.

“நானும் தங்கையும் அன்று போட்டி போட்டுக் கொண்டு காகிதப் படகுகள் விட்டோம். என் படகு முதலில் கவிழ்ந்துவிட்டது—அப்போது தங்கை எப்படிக் கூத்தாடியது தெரியுமா? அது கூத்தாடிக்கொண்டிருக்கும் போதே திடுக்கென நின்றுவிட்டது. நான் தெருவைப் பார்க்காமலே, தங்கையின் முகத்தைப் பார்த்து, அதன் படகும் கவிழ்ந்துவிட்டது என்று தெளிவாகச் சொன்னேன். இப்போது—காகிதப் படகல்ல—என் தங்கப் படகு, எனக்கு முன்பே கவிழ்ந்துவிட்டது. நான் நடந்து கொண்டிருக்கிறேன்; என் மீதும் மழைத் துளிகள் வேகமாக விழுகின்றன; இந்த அனாதைப் படகு, எப்போது கவிழுமோ தெரியாது—எண்ண அலைகள் மோதி மோதி இருதயக் கரைகள் அனைத்தும் சீரழிந்துபோக நிலையிலே கால் காட்டும் வழியிலே போய்க்கொண்டிருந்தேன். பயங்கரமான மின்னல்கள்—உள்ளத்தை உலுக்கும் இடி முழக்கங்கள்—பெருமழை—பேய்க் காற்று! ஒண்டுவதற்கு இடமில்லை. வெகுதூரம் வரையில் மரம் மட்டைகளும் கிடையாது—வயல் வெளி வரப்பின் மீது அசைவற்று நின்றுகொண்டிருந்தேன். இயற்கை அன்னை எனக்கு தலை முழுக்காட்டிக் கொண்டிருந்தாள். தங்கையின் சாவுக்குத் தலை முழுக வேண்டுமல்லவா?—அதை நிறைவேற்றிடுவதாக எண்ணிக்கொண்டே நின்றேன். நீர் வீழ்ச்சியின் கீழே நிற்பதுபோல இருந்தது; அவ்வளவு கனத்த மழை! அந்த மழையை என்னோடு சேர்ந்து ரசிக்க என் தங்கையில்லை. அது மண்ணுக்கு அடியிலே ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிறது.

“விடியற்காலை வரையிலே மழை நிற்கவில்லை. அதன் பிறகு கொஞ்சம் கருணை காட்டியது வானம்—கிழக்கு வெளுக்க ஆரம்பித்தது. கண்ணை அகல விழித்துப் பார்த்தேன். எனக்கு எதிரே சிறிது தூரத்திலே ஒரு கட்டிடம் தெரிந்தது—இரவெல்லாம் அதன் பக்கத்திலேயே நின்றிருக்கிறேன்; ஆனால் அந்த இடம் என் கண்ணுக்குத் தெரியவில்லை. அவ்வளவு இருட்டு! அந்தப் பாதகச் சாமியார் சொன்னானே; அந்த நாடியம் மடாலயம் தான் அந்தக் கட்டிடம். அது இருளிலே மூழ்கியிருந்த காரணத்தால் எனக்குத் தெரியவில்லை. மடங்களையே பொதுவாக இருள் கப்பிக்கொண்டிருப்பதால்தான் ஆதரவற்றோருக்கு அது ஒளி வழங்குவதில்லை என்று சொல்வது இயற்கையிலேயே என் விஷயத்தில் உண்மையாகத்தான் போய்விட்டது. மடத்தை நோக்கி நடந்தேன். மடத்தின் எதிரே பெரியதொரு அரச மரம் வானுற ஓங்கி நின்றது. அதன் உச்சியிலே பறந்துகொண்டிருந்த அன்னதானக் காவிக் கொடி, மழையிலே நனைந்தும், கிழிந்தும், தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு சுருண்டு கிடந்தது. மடத்து வாசலில் ஒதுங்கினேன். எனக்கு முன்னே, உள்ளூர் ஆடு மாடுகள் சில அங்கே ஒதுங்கியிருந்தன. முதுகெல்லாம் புண்ணுள்ள கழுதைகள் இரண்டு மூன்று அங்கே ஒதுங்கி நின்றன. சாணமும், ஆட்டுப் புழுக்கைகளும் நிறைந்திருந்த அந்த இடத்திலே கைகளைக் கட்டிக் கொண்டு குளிரை அடக்கியபடி ஒண்டிக் கொண்டேன். காலைக் கதிரவனின் ஒளி அரும்பிற்று. இரவு முழுதும் பட்ட கஷ்டத்தில் ‘அப்பாடா’ என்று பெருமூச்சு விட்டபடி, அப்படியே உட்கார்ந்த நிலையில் சிறிது கண்ணயர்ந்தேன். யாரோ என் முதுகில் தட்டி எழுப்பினார்கள். வாரிச் சுருட்டி எழுந்தேன். புரியாத பாஷையில் பேசினான் அவன். வடநாட்டு ஆள்போலத் தோன்றினான். நாடியத்திலுள்ள மடாலயம், வடநாட்டு சாமியார்களுக்குச் சொந்தமல்லவா; அதைச் சேர்ந்த ஆள்போலும் அவன்.

“‘அய்யா—உடம்பெல்லாம் நடுங்குது—கொஞ்சம் தூங்க விடு’ என்றேன்.

“முரட்டுத் தனமாக ஏதோ பதில் சொன்னான். என் தலையிலும் ஒரு குட்டு வைத்தான்.

“அவன் பாஷை புரிய வேண்டிய அவசியமென்ன எனக்கு? இருதயம் புரிந்துவிட்டது. அது எத்தகைய பண்புடையது என்பதை என் தலையில் ஏற்பட்ட வேதனை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தது. மடாலயத்திலிருந்து வெளியேறினேன், எதிரே மரத்தில் தொங்கும் அன்னதானக் கொடியைப் பார்த்தபடி—எனக்குள்ளாகவே சிரித்துக்கொண்டு நடந்தேன். பசியின் கொடுமையும் ஆரம்பமாகிவிட்டது. நாடியத்திலே உள்ள வீடுகளில் எல்லாம் சோறு கேட்டேன். வீட்டுக்குக் கொஞ்சம் கிடைத்தது. சாப்பிட்டேன். மிச்சங்கூட ஆகிவிட்டது. அதைக் கீழே எறியவில்லை. சட்டையைக் கழற்றி, அதிலே கொஞ்சம் பூவரசு இலைகளைப் பரப்பி, மீதிச் சோற்றைக் கொட்டி, நன்றுக முடிந்து வைத்துக் கொண்டேன், இரவுக்குத் தேவைப்படுமென்று!

“மறுநாள் பேராவூரணிப் பிரயாணம்—கிராமாந்திர மக்கள் அன்புள்ளங் கொண்டவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு பேராவூரணி. சாப்பாட்டுக்கு சிறிது முன் போய் பிச்சைக் கேட்டால், ‘இன்னும் சாப்பாடு ஆகவில்லை’ என்பதும், சாப்பிட்ட பிறகு போய்க் கேட்டால், ‘சாப்பாடெல்லாம் ஆகிவிட்டது!’ என்பதும், சாப்பிடுகிற நேரம் பார்த்துப் போனால், ‘சாப்பிடும்போது வந்திருக்கிறாயே—பிறகு வா!’ என்பதும் பிச்சைக்காரர்களுக்காக வீட்டுக்காரர்கள் தயாரித்து வைத்திருக்கிற பல்லவியாகும். அந்தப் பல்லவியை நான் பேராவூரணியிலே கேட்கவில்லை. ‘என்ன, பரம்பரைப் பரதேசி போலப் பேசுகிறாயே!’ என்று கேட்கிறீர்களா? ஏறத்தாழ ஆறு மாத காலம் பிச்சைக்கார வாழ்க்கையை நடத்தியதில் ஏற்பட்ட அனுபவமாக்கும் இது! அடைக்கலமென்று வந்தவர்கள் குழந்தை போலப் பாதுகாக்கும் அன்பு நெறி வளர்க்கும் பேராவூரணியில் அதிக நாள் இருக்கவில்லை நான். ‘ஏதாவது வேலை பாரப்பா—கூலி நிறைய கிடைக்கும்’ என்று பரிவோடு பேசும் பலரை நான் அங்கு சந்திக்க வேண்டியதாயிற்று. வேலை பார்க்கக்கூடாது என்ற சோம்பேறித்தனமில்லை எனக்கு. எதிலுமே புத்தி செல்லவில்லை. ஒருவேளை, பைத்தியமாகிவிட்டோமோ என்று நானே சந்தேகப்பட்டுக் கொள்வேன். வேலையை ஒழுங்காகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை பிறக்கவில்லை. அதனால் பேராவூரணியைவிட்டு இரவோடு இரவாகப் புறப்பட்டேன்.

“‘வேலை பாரேன்’ என்ற அன்புத் தொல்லை ஒழிந்தது. மருங்கப்பள்ளம் வந்தேன். மாதங்கள் பல ஓடிவிட்டன, என் தங்கையின் கல்லறையைப் பார்த்து! அதிலே கண்ணீர் சிந்த ஆசை கொண்டேன். கோயில் பக்கம் சென்றேன்—தங்கை புதைக்கப்பட்ட இடத்திலே அமர்ந்து ஆசை தீர அழுதேன். தங்கையின் உடலுக்குப் போர்வையாக அமைந்த மண்ணைக் கண்ணீரால் நனைத்து முத்தமிட்டேன். மீண்டும் மழை வந்துவிட்டது. நான் எதிர்பார்த்ததுபோல் பெருமழை. என் கந்தல் சட்டையின் கிழிந்த பைகளிலே நிரப்பி வைத்திருந்த காகிதங்களை எடுத்துக் கப்பல் செய்தேன். என் பெயரில் ஒன்று—என் தங்கையின் பெயரில் ஒன்று—இரண்டு கப்பல்களையும் மழை நீரில் மிதக்க விட்டேன். கப்பல்கள் போவதைப் பார்த்துக் குதித்துக் கூத்தாடினேன்—சிரித்தேன்—அழுதேன். பிறகு, அந்த இடத்தை விட்டு ஊர்ப் பக்கம் ஓடினேன். ஒரு வீட்டுத் திண்ணையிலே படுத்தேன். வீட்டுக்காரர் ஒரு முரடர். முன்கோபக்காரர். என்னை விரட்டினார். ‘என்னய்யா—இந்தப் பக்கத்திலே நீர் ஒருத்தர்தான் மோசமானவராயிருக்கிறீர்’ என்று எதிர்த்துப் பேசிவிட்டேன். அவ்வளவுதான்—ஒரே அடி—தடிக் கம்பினால் என் மண்டையிலே போட்டார். ரத்தம் வழிந்தோடியது. ஒரு தாழங் குடையை எடுத்துக்கொண்டு அவர் வெளியே அலுவலாகப் போய்விட்டார். ஓடுவதுபோல வீட்டை விட்டு குதித்த நானும், ஓட முடியாமல் தத்தளித்தேன்—அப்போது அந்த முரடருடைய வீட்டிலேயிருந்து, ஒரு சின்னப் பெண்—எட்டு ஒன்பது வயதிருக்கும்—ஓடிவந்து என்னை வீட்டுக்கு அழைத்துப் போய், அதன் அம்மாவை வெட்டுக் காயத்திற்கு மருந்தெல்லாம் போடச் சொல்லி, சாப்பாடும் கொடுத்தது. சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது அதன் அப்பா வந்துவிட்டார். அந்த அம்மாமீது பாய்ந்தார். ‘ஏன் இந்தப் பிச்சைக்காரப் பயலை உள்ளே விட்டாய்?’ என்று!

“‘இல்லை—பாப்பா தான் அழைச்சிகிட்டு வந்தாள்!’ என்று அந்த அம்மா பெண் குழந்தையின் மீது பழியைப் போட்டார்கள்.

“‘பெண்ணு அழைச்சிகிட்டு வந்ததோ; பெண்ணு! உனக்கு வீட்டுக்கு மருமகனா—மாப்பிள்ளையா—உள்ளே வச்சி, உபசாரத்தோட சோறு போடுகிறாயா?’ என்று ஓங்கி அறைந்தார் மனைவியை. அந்தச் சின்னப் பெண்ணுக்கும் ஒரு அடி; முதுகில் ‘பளார்’ என்று விழுந்தது.

“‘வீட்டுக்கு மருமகனா, மாப்பிள்ளையா?’ என்று கேட்டாரே, அவர் வீட்டுக்கே நான் மருமகனாகி விடுவேன் என்று எனக்கு அப்போது தெரியாது—”.

துரை, கதையில் சிறிது தொய்வை ஏற்படுத்திவிட்டு பரிமளத்தைப் பார்த்தான். அவள் முகத்தில் புதிய ஒளி வீசியது. ஆவலோடு, அவனையே பார்த்தாள்—கிழவர் பிணம்போல அசைவற்று இருந்தார்.

துரை துவங்கினான் மீண்டும்!

“இன்னும் பரிமளத்திடமே நான் சொல்லவில்லை அந்த ரகசியத்தை. எனக்கு ஆதரவு கொடுத்து—ஆகாரமும் அளித்து—அப்பாவிடம் அடியும் வாங்கிய, அந்தச் சிறுமிதான், பரிமளா!” என்றான் துரை.

பரிமளாவின் உள்ளம் பூரிப்பால் வீங்கியது. கிழவர் மட்டும் அங்கேயில்லாமல் இருந்திருந்தால், “அத்தான்” என்று முத்துதிர்த்து அவன் மீது தாவியிருப்பாள். அவள் விழிகள் ஆனந்தக் கண்ணீர் பெருக்கின.

“பாவம்; எட்டு வயது சிறுமி அப்போது! ஏழெட்டு வருடம் கழித்த பிறகே எங்களிடையே காதல் தோன்றியது. பரிமளாவினால் அப்போது என்னை அடையாளங் கண்டுபிடிப்பது கஷ்டம்தானே! பரிமளாவின் தந்தையால் நான் விரட்டப்பட்டுங் கூட, மருங்கப்பள்ளத்தை விட்டு நான் உடனே போகவில்லை. என் தங்கையின் கல்லறையும், பரிமளாவின் சந்திப்பும், எனக்கு சிறிது ஆறுதலாயிருந்தன. திருட்டுத்தனமாக சோறு கொண்டு வந்து தருவாள் பரிமளா. அதைச் சாப்பிட்டபின் இருவருமாக விளையாடுவோம். இப்படி ஒரு மாதம்—பரிமளாவும் என்னை விட்டுப் பிரிய நேர்ந்தது. பட்டுக்கோட்டையிலே உறவினர் வீட்டுக்குச் சென்று, அங்கிருந்தபடி படிப்பதற்கு அவள் அப்பா ஏற்பாடு செய்து விட்டார். பரிமளாவுக்கு அந்த நிகழ்ச்சிகள் எதுவும் இப்போது சரியாக ஞாபகமிருக்க முடியாது—சிறுமிதானே அப்போது!

“எப்படியோ, அந்தச் சிறுமியின் பெரிய உள்ளத்தின் மீது, இந்தப் பிச்சைக்கார இளைஞனுக்கு ஆசை விழுந்து விட்டது. அந்தப் பிஞ்சு உள்ளத்திலே எத்துணை பெரிய அன்புக் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. அந்தக் கோயிலே அனாதையான எனக்கும் இடம் அமைக்கப்பட்டிருக்கிறது என்று எண்ணி ஆறுதல் பெறுவேன். பரிமளா, என்னிடமிருந்து பிரிக்கப்பட்டதாக உணர்ந்தேன். வாழ்வைப் பற்றிக் கவலைப்படாமல், வேலை வெட்டி வேண்டாமென்று ஊதாரிச் சிறுவனாய் அலைந்து கொண்டிருந்த நான், எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட ஆரம்பித்தேன். ஆம்; பரிமளாவை நினைத்துக்கொண்டுதான்!—அவள் தகப்பனார் கேட்டாரே, ‘வீட்டுக்கு மருமகனா’ என்று; அதைப் பூர்த்தி செய்யத்தான். பரிமளா பட்டுக்கோட்டை போய்விட்டாள். என் வாழ்வை நேர் படுத்திக் கொண்டு அதன் பிறகு அவளை சந்திப்பது என்று முடிவு கட்டினேன். அப்படித்தான் அவளை சந்தித்தேன்; ஏழெட்டு வருடங்களுக்குப் பிறகு!

“அப்போது என்னைப் பரிமளா மறந்து விட்டாள். நானும் அவளிடம் புதியவனாகவே பழகினேன். ‘என்ன பரிமளா! சரிதானே?’ என்றான் துரை. பரிமளாவுக்கு ஒன்றுமே புரியவில்லை, ‘அத்தான்’ என்று கத்தி விட்டாள்! கிழவர் இப்போதும் ஒன்றும் பேசவில்லை.

“பரிமளா, படிக்கச் சென்ற பிறகு வேலை தேடிப் புறப்பட்டேன். பழையபடி பேராவூரணி போகலாமா என எண்ணினேன். அங்கு தரப்படும் வேலை பரிமளாவை சந்தித்து அவளுக்குக் கணவனாக ஆகக் கூடிய தகுதியை அளிக்காதோ—எனக் கருதி வேறு ஊர்களில் அலைந்தேன். இந்தச் சமயத்தில்தான் நான் மிகவும் தொல்லைப் பட்டேன். பல நாள் பட்டினி—மயக்கம்—சோர்வு—இப்படி வாடி உலர்ந்தேன். ஏதோ ஒரு ஊர். அங்கே கோயிலில் திருவிழா. அந்த ஊரின் பெயர் ராஜாமடம் என்று நினைக்கிறேன். அன்று, பகல் முழுதும் அலைந்தேன். ஒரு பருக்கை சோறு கிடைக்கவில்லை. எல்லோரும் கோயிலுக்குச் சென்று திருவிழாவைக் காண்பதிலேயும்—ஆண்டவனைத் தொழுவதிலேயும் அக்கரை காட்டினர். பசி தாங்கவே முடியவில்லை. தெருவில் தள்ளாடி நடந்து கொண்டிருந்தேன். ஒரு பெருமாள் கோவில் வாசல்—‘கடவுளே! உனக்குக்கண்ணில்லையா?’ என்று கதறினேன். கண்கள் சுழன்றன எனக்கு. அவ்வளவுதான்; விழுந்து விட்டேன். பிறகு எனக்கு எதுவுமே தெரியாது.

“‘பக்தா! எழுந்திரு!’ என்ற குரல் கேட்டது—மெதுவாகக் கண்களை விழித்துப் பார்த்தேன்.

“சிறிது தூரத்திலே ஒரு பச்சை நிற ஜோதி தெரிந்தது. ‘எழுந்திரு பக்தா!’ என்ற குரல் மீண்டும் கேட்டது. மகாவிஷ்ணு சங்கு சக்கரங்களோடு நின்று கொண்டிருந்தார். திடுக்கிட்டு எழுந்தேன்—‘பகவானே! கடவுளே! என்னைக் காப்பாற்று’ என்று அவர் முன்பாக ஓடினேன்.”

---

கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்