அத்தியாயம் 22 · 23 / 52

அத்தியாயம் 22

Chapter 22

மூல ஸ்கேன் 196-205

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

22

“என்ன, மகாவிஷ்ணு தோன்றினாரா? உண்மையாகவா?” என்று ஆவலோடு கேட்டாள் பரிமளா.

“உண்மையாகத்தான்—அவர் நின்று கொண்டிருந்த திசை நோக்கி ஓடினேன். நான் ஓட ஓட அவரும் தொலைவில் போவதாகத் தெரிந்தது—நான் விடவில்லை—எதிரே இருக்கிறது என்ன, ஏது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவரிடமே ஓடிவிட்டேன்.” பரிமளாவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“புதிய புராணமாயிருக்கிறதே இது! பசியால் ஒரு இளைஞன் துடித்ததைக் கண்டு பகவான் ஓடோடியும் வந்தார் என்று இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.”

“இது ஒன்றும் புதிதல்லவே, பரிமளா! சிற்றன்னைக் கொடுமையால் சீரழிந்த துருவனுக்கு சங்கு சக்கரத்தோடு காட்சி தந்தார் என்று படிக்கவில்லையா? பிரகலாதன் என்ற இளைஞன் விஷ்ணுவின் அருளால், பிராணாபத்துக்கள் பலவற்றிலேயிருந்து மீண்டான் என்று கதை கேட்டதில்லையா? பதினாறு ஆண்டுடைய மார்க்கண்டேயன் திருக்கடவூரிலே தெய்வத்தின் அருளால் எமனை வென்றான் என்று புராணம் கூறுகிறதே!”

“புராணம் கூறும் கதை கேட்டிருக்கிறேன்; படித்துமிருக்கிறோம். ஆனால் உங்களைப்போல துன்பத்தில் சிக்கிய உண்மைத் ‘துருவன்’களுக்கு எதிரே என்னப்பன் தோன்றி கருண மழை கொட்டினார் என்பதை கண்ணால் கண்டதுமில்லை; கண்டவர் சொல்லிக் கேட்டதுமில்லை.”

“நான் கண்ணால் கண்டேன்; விஷ்ணுமூர்த்தி துருவனுக்கு அபயங் கொடுத்ததை நான் கண்ணால் கண்டேன். விஷ்ணுமூர்த்தி மட்டும் இல்லாவிட்டால் இந்தத் துரை இவ்வளவு நாள் உயிரோடிருந்திருக்க முடியுமா?”

“என்ன சொல்லுகிறீர்கள்?”

“கொஞ்சம் பொறுமையாகக் கேளேன் பரிமளம்! இதோ, பெரியவர் எவ்வளவு அமைதியாகவும் நிதானமாகவும் கதை கேட்கிறார். நீயும் அதைப் போலக் கேளேன்!”

“ம்; சொல்லுங்கள்.”

“விஷ்ணுவிடம் ஓடினேனா? பசியால் ஏற்பட்டிருந்த மயக்கமும் களைப்பும் கூட மறந்து போய்விட்டது—அவ்வளவு வேகமாக ஓடினேன். விஷ்ணுவிடம் தாவிப் பாய்ந்தேன். சங்கு சக்கராயுதபாணியாக, நீலமேக சாமள வர்ணத்தோடு, மகாவிஷ்ணு நின்றார். அங்கே என்னைப் போலவே ஒருவன் அவருக்கெதிரே நின்று கொண்டிருந்தான்.”

“அது யார்?”

“அவன் தான் துருவன்!”

“துருவனா?”

“பரிமளா!—நான் ஏதோ பசி மயக்கத்தில் தூங்கி, அந்தத் தூக்கத்தில் இப்படி ஒரு புராணக் கனவு கண்டதாகச் சொல்லி உன்னை ஏமாற்றப் போகிறேன் என்று எண்ணுகிறாயா? இல்லை பரிமளா; இல்லை—இது நிச்சயமாகக் கனவு இல்லை—கண்ணெதிரே நடந்ததுதான்!”

“சரி—தொடருங்கள்”

“மகா விஷ்ணுவின் காலைப் பிடித்துக்கொண்டேன். உடனே பெரிய சப்தம்—”

“சப்தமா? என்ன சப்தம்?”

“ஜனங்கள் கூச்சல் போட்டார்கள்!”

“ஜனங்கள் ஏது? வைகுண்ட வாசிகளா?”

“கேள் பரிமளா!—சப்தம் கேட்டது—என் கண்களைக் கசக்கிக் கொண்டு, மனசைக் கொஞ்சம் நிதானப்படுத்திக் கொண்டேன்.”

“அதாவது விழித்துக் கொண்டீர்கள்!”

“இல்லை—ஒன்றும் புரியாமல் விழித்தேன்—‘அய்யோ’ என்று அலறிக் கொண்டு துருவன் ஓடிவிட்டான். விஷ்ணுவும் திகைத்துப்போய் நின்றான். ஜனங்கள் என் பக்கம் ஓடி வந்தார்கள். ஒரே ரகளை—குழப்பம்!”

“பிறகு?”

“பிறகென்ன? எனக்கும் ஜனங்களுக்குமிடையே ஒரு திரை விழுந்தது. மகா விஷ்ணு என்னை ஆத்திரத்தோடு பார்த்து, ‘யாரடா நீ?’ என்று கேட்டார். ‘விஷயம் புரியாமல்...’ என்று ஏதோ சொல்ல வாயெடுத்தேன்...... அதற்குள் அவர் என்னைப் பரபரவென்று இழுத்துக் கொண்டு ஓடினார்.”

“எங்கே?....”

“மேக் அப் பண்ணுகிற இடத்துக்கு!”

“ஓகோ—நாடகமா?”—பரிமளா சிரித்தாள்.

“இல்லை பரிமளா! தெருக் கூத்து!” என்றான் துரை.

“ம்—அப்புறம் என்ன நடந்தது?”

“என்ன நடக்கும்? உண்மையான விஷ்ணுமூர்த்தியின் காலில் விழுந்தேன்.”

“மறுபடியும் சிக்கல் உண்டாக்குகிறீர்களா?”

“இல்லை—உண்மையான விஷ்ணுமூர்த்தி என்பவர் அந்த நாடகக் கம்பெனியின் முதலாளி. அவரது துருவன் நாடகம், அந்த ஊர் திருவிழாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் முன்னிரவில் பசியால் மெலிந்த நான், களைப்புற்று தெருக் கோடியிலே படுத்துத் தூங்கிவிட்டேன். விழித்தபோது நாடகம் நடந்து கொண்டிருக்கிறது—துருவனுக்கு மகா விஷ்ணு காட்சி கொடுக்கும் கட்டம்—அதிலே தான் நம்ப கலாட்டா! பாலப் பருவத்தின் அறியாமையும், பசியின் கொடுமை தந்த மயக்கமும் சேர்ந்து என்னைக் குழப்பிவிட்ட காரணத்தால், விஷ்ணு வேடத்தைக் கடவுள் தோற்றம் எனக் கருதி ஏமாந்து விட்டேன். கூடியிருந்த ஜனங்கள் மிதித்துக் கொண்டு, மேடையிலே பாய்ந்து, துருவனை விரட்டி, விஷ்ணு வேடதாரியின் மனதையும் துளைத்து, இவ்வளவு கலவரம் செய்த என்னை சும்மா விடுவார்களா? முதலாளி விஷ்ணுமூர்த்தியிடம் கொண்டுபோய் விட்டார்கள். அவர் பெயர் தான் விஷ்ணுமூர்த்தியே தவிர, இரணியனைப் போல இருந்தார் முறுக்கிய மீசையோடு! வயதானவர்—வாலிபத்திலே அரிச்சந்திரா நாடகத்தில் சந்திரமதி வேஷம் போட்டுக்கொண்டு, மயான காண்ட சீன் நடித்தாரேயானால், ஊரே அழுமாம்!—நந்தனார் கதையிலே வேதியர் பாத்திரம் தாங்குவாராம்; “மாடு தின்னும் புலையா! உனக்கு மார்கழித் திருநாளா?” என்ற பாட்டை அபாரமாகப் பாடுவாராம். ஒரு நாள் கொஞ்சம் தண்ணீர் போட்டுக்கொண்டு, வேதியர் வேஷம் நடித்தாராம்; அதாவது ஒரு குடுக்கை பால் சாப்பிட்டாராம்—அவ்வளவுதான்; அன்று பாட்டு அபாரமாம்! “மாடு தின்னும் புலையா—உனக்கு மார்கழித் திருநாளா?” என்று பாட வேண்டிய வேதியர், “புல்லைத் தின்னும் மாடா! உனக்கு மார்திரு கழிநாளா?” என்று பாடினாராம். நல்ல வேளை, அந்தக் கிராமாந்திர ஜனங்களும் பாதிக்கு மேல் நீரில் மிதந்தவர்கள். அதனால் விஷ்ணுமூர்த்தி தப்பித்தாராம். இப்படியெல்லாம், அந்த முதலாளியைப் பற்றிய பல கதைகள் உண்டு.

“அவரிடம் கொண்டு போய் என்னை நிறுத்தினார்கள். ஆள், பார்வைக்குப் பயங்கரமாக இருந்தாலும், இளகிய இருதயம் படைத்தவர். நான் என்னுடைய நிலைமையை அவரிடம் விளக்கிச் சொல்லி அவரது காலைப் பிடித்துக் கொண்டு அழுதேன். விஷ்ணு வேடம் போட்டவன் மட்டும், என்னை மன்னிக்கத் தயாராயில்லை. ஏனென்றால், அவனுக்கு அந்த நாடகத்தில் ஒரே ஒரு சீன் தான்! அதை நான் கலாட்டா செய்து கெடுத்து விட்டேனும்; அதனால்! முதலாளி விஷ்ணுமூர்த்தி என்னை மன்னித்ததோடு, அந்தக் கம்பெனியிலேயே வேலைக்கும் சேர்த்துக் கொண்டார். முதலில் நாடக மணி அடிக்கும் வேலை எனக்கு; பிறகு சீன் இழுக்கும் வேலை கிடைத்தது. அந்த வேலையிலிருந்து நான் நடிகனாகவே ஆகும் ஒரு சந்தர்ப்பமும் வாய்த்தது. ‘ஒளவைப் பிராட்டி’ நாடகம் நடக்கிறது எங்கள் கம்பெனியில்!—இப்போதெல்லாம் தெருக் கூத்துகளாக இல்லாமல், ஒரு ஊரில் போய் ஒரு மாதம் தங்கி தொடர்ந்து நாடகங்கள் நடத்துகிற அளவுக்கு எங்கள் கம்பெனி வளர்ந்திருந்தது. ஊரின் மத்தியிலே கொட்டகைப் பந்தல் போட்டு கட்டணம் வைத்து வசூல் செய்து நாடகங்கள் நடத்தினோம். அப்படி நடக்கும் போதுதான் ஒரு நாள் நடிகனானேன். ஒளவையார் நாடகம்; முதல் நாலைந்து காட்சிகள் முடிந்து விட்டன. ஒளவையை ஏமாற்றுகிற முருகன், மாட்டுக்காரப் பையனை நாவப் பழ மரத்தில் உட்கார்ந்திருக்கும் காட்சி உண்டல்லவா? அதில் மாட்டுக்காரனாக நடிக்கிறவன் ஏதோ தவறு செய்தான் என்று, மேக் அப் அறையில்—முதலாளியிடம் அடி வாங்கினான். அழுதுகொண்டே நின்றான். பிறகு, நாவப் பழ சீன் வந்தது. ஒளவையாரும் மேடைக்கு வந்து விட்டாள், பாடிக்கொண்டே! மரத்தை அண்ணாந்து பார்த்தால், அங்கேயிருக்கவேண்டிய பையனைக் காணோம்.

“என்ன செய்வாள் ஒளவை? திகைத்தாள். இதைப் பார்த்த நான் உடனே ஒரு முடிவுக்கு வந்தேன். நாடக மேடை உட்புறமாகவே பரணில் ஏறி, மேலேயிருந்தபடியே மேடையில் உள்ள மரத்தில் இறங்கி, மாட்டுக்காரப் பையனைப் போல் உட்கார்ந்து கொண்டேன். நான் சாதாரணமாக உடுத்தியிருந்த கந்தல் ஆடை அதற்கு மிகவும் உதவி செய்தது. இந்த விஷயம் முதலாளிக்குத் தெரிந்தது. மறுநாள் முதல் நானே மாட்டுக்காரப் பையனை வேடம் தரித்தேன். மாட்டுக்காரனிலிருந்து மார்க்கண்டேயர் வரையிலே மள மளவென்று பெரிய வேடங்கள் கிடைத்தன, எனக்கு! துருவன் வேடம் என்னைப் போல யாரும் செய்ததில்லை என்று அப்போது ஊரிலே பெயர்! பிரகலாதா நாடகத்தில், நரசிம்மாவதாரம் தூணைப் பிளந்துகொண்டு இரணியனைக் கொன்று குடலைக் கிழித்து மாலை போட்டுக் கொள்ளும்போது ஒரு விருத்தம் பாடுவேன்; கொட்டகையே அதிரும் கைதட்டல்! மார்க்கண்டேயன் வேஷம் போட்ட போதுதான்—ஒரு சமயம் என் உயிருக்கும், சிவன் உயிருக்கும் ஆபத்து வந்து விட்டது.

“அதாவது; எமன் மார்க்கண்டேயனாகிய என்னைத் துரத்துகிறான். நான் ஓடிப் போய் சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொள்கிறேன். எமன் பாசக் கயிற்றை வீசுகிறான். உடனே சிலை வெடித்து சிவபெருமான் புறப்பட்டு எமனைக் குத்துவது போல ஈட்டியோடு பாயவேண்டும்—இது காட்சி!

“எமன், என்னை வழக்கம் போலத் துரத்தினான். நான் ஓடிப் போய் சிவலிங்கத்தைப் பிடித்துக் கொண்டேன். எமன் பாசக் கயிறு வீசுவதற்குள் சிவலிங்கம் வெடித்து சிவன் புறப்பட்டு விட்டார். தாமதமாக வீசப்பட்ட பாசக் கயிறு, என் மீது விழுவதற்குப் பதிலாக, சிவனின் கழுத்திலே விழுந்து; அவர் கழுத்து இறுகி விட்டது. கழுத்து இறுகியதால், சிவன் எமன் மீது வீச வேண்டிய ஈட்டியை என் மார்பின் மீது ஓங்கி வீசினார்—‘மார்க்கண்டேயன்’—மயக்கமுற்று விழுந்து விட்டேன். சிவனும் உருண்டு விட்டார். எங்கள் இருவருக்கும் ‘எமன்’ உதவி செய்ய வேண்டியதாயிற்று. எமன் வேடதாரி நல்ல நாட்டு வைத்தியருங்கூட. அவருடைய சிகிச்சைக்குப் பிறகு உடல் நலம் பெற்றேன் நான். நல்லதங்காள் நாடகத்திலும் நான்தான் மூத்த பிள்ளை. கிணற்றங் கரையிலே நின்று கொண்டு நான் பாடும் பாட்டுக்கு—“ஒன்ஸ்மோர்” விழாத நாளே கிடையாது. நல்லதங்காள் வேஷம்கூட நான் போட்டிருக்கிறேன். நல்லதங்காள் நாடகத்தில் எங்கள் கம்பெனியில் நிறைய வேடிக்கைகள் நடந்திருக்கின்றன. ஒருநாள் நான் நல்லதங்கை வேஷம் போட்டேன். வாழைத் தண்டை வைத்து அடுப்பெரிக்கும்கட்டத்தில் அன்று பெரிய தமாஷ் நடந்தது. வழக்கமாக, வாழைத் தண்டை மண்ணெண்ணெயில் நனைத்து வந்து வைத்திருப்பார்கள். நெருப்புப் பட்டதும், அது எரியும். ஜனங்களும் கை தட்டு வார்கள். அன்றைக்கு எண்ணெய் ஊற்றிவைக்க மறந்து விட்டார்கள் போலும். நல்லதங்காள், “நான் பத்தினியானால் வாழைத் தண்டு எரியட்டும்!” என்று காளி போலக் கத்தியும், கதறியும் பயனில்லை!

“விஷயம் விளங்கி விட்டது நல்லதங்காளுக்கு—என்ன செய்வதென்றே புரியவில்லை எனக்கு!—உள்ளே ஓடி வந்தேன். மண் எண்ணையை ஒரு கண்ணாடிக் குவளையில் ஊற்றி எடுத்துக் கொண்டு, மேடைக்கு வந்தேன். இதுபோலப் பேசினேன்:

“‘அஷ்டதிக்குப் பாலகர்களே! இதுவரையிலே இந்த நல்லதங்காள் வெறும் வாழைத் தண்டை மட்டுமே எரித்தாள். இப்போ இவள் அசல் பத்தினி என்பதைக் காட்டுவதற்காக, இதோ கொஞ்சம் தண்ணீரையும் அடுப்பிலே ஊற்றி, வாழைத் தண்டைப் பற்ற வைக்கிறேன்’—என்று புதிய வசனம் பேசிவிட்டு, எண்ணையை அடுப்பிலே ஊற்றி, நெருப்பு வைத்தேன். என்றைக்கும் விட அன்றைக்கு அந்த சீன் பலே ஜோர்!—பிரமாதமான கரகோஷம்!

“அரிச்சந்திரா நாடகத்திலே நான் லோகிதாசன் வேஷம் போடுவதுண்டு. லோகிதாசன் நாடக மேடையில் பாம்பு கடித்து இறக்கும் காட்சி தத்ரூபமாக இருக்கும். சந்திரமதியின் புலம்பலும் மிகக் கவர்ச்சியாக இருக்கும், மக்களுக்கு!—லோகிதாசனாகிய நான், பாம்பு கடித்து இறந்து கிடக்கிறேன். என்னை சந்திரமதி மயானத்தில் கொண்டுபோய்க் கிடத்தியிருக்கிறாள். அரிச்சந்திரன், சந்திரமதி தர்க்கம் முடிந்து சந்திரமதியை வெட்டப்போகிறான் அரிச்சந்திரன். நான் பிரேதம் போலவே, மூச்சு விடுவது ஜனங்களுக்குத் தெரியாமல் சிதை மேல் படுத்திருக்கிறேன். எனக்காக அடுக்கப்பட்ட வரட்டியிலே தேள் இருந்தது போலும். அதை யாரும் கவனிக்கவில்லை. அது நன்றுகக் கொட்டிவிட்டது என்னை. “அய்யோ! தேளு! தேளு!” என்று அலறியபடி எழுந்துவிட்டேன். சந்திரமதியை வெட்ட வாளெடுத்த அரிச்சந்திரன் திகைத்து விட்டான். வாள், சந்திரமதியின் கழுத்திலே மாலையாக விழுந்து, பிறகு பரமசிவன் வந்து, லோகிதாசன் உயிர் பிழைக்க வைக்க வேண்டும். வரட்டியிலே இருந்த தேள், கதையையே மாற்றி விட்டது! பாம்பு கடித்து இறந்தவனை தேள் எழுப்பி விட்டது. நல்ல காலம்; பரமசிவன் வேஷம் போட்டவன் கொஞ்சம் சமயோசித புத்திசாலி!—அவன் மேடைக்கு ஓடி வந்தான்!

“‘அகோ, வாரும் பிள்ளாய் அரிச்சந்திரா! உன்னுடைய சத்தியத்தை மெச்சினோம். உன் மனைவியின் குரல் கேட்டு, உன் மகனைக் காப்பாற்ற கைலாயத்திலிருந்து வேகமாக வந்தோம். வரும் வழியில் காளை மாட்டின் கால் முறிந்துவிட்டது. அதை ‘ரிப்பேர்’ செய்து கொண்டு வர நேரமாகுமே என்று யோசித்தோம். அதற்குள் லோகிதாசன் உயிர் எமலோகம் போய்விட்டால் திரும்ப ‘வாபஸ்’ பெற முடியாதே என்று, வழியிலே சந்தித்த வாயு பகவானை அனுப்பினோம். அவர் தேளாக உருவெடுத்து, பாம்பு கடித்து மாண்ட பாலகனை எழுப்பிவிட்டிருக்கிறார்—மங்களமுண்டாகட்டும்—சுபம்!’

“என்று ஒரு புது பிரசங்கம் செய்தான். அதற்கும் ஜனங்கள் கை கொட்டினார்கள். எனக்கோ தேள் கொட்டிய வலி தாங்க முடியவில்லை. இப்படிக் கூத்துங் குதூகலமுமாக வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. நாலைந்து ஆண்டுகள் உருண்டன. என் சிந்தையில் அழியாத சித்திரமாக விளங்கிக் கொண்டிருந்த பரிமளாவை எப்போது சந்திப்போம் என்று ஏங்கிக்கொண்டேயிருந்தேன். கம்பெனி முதலாளி விஷ்ணுமூர்த்தியும் திடீரெனக் காலமானார். கம்பெனியின் முழுப் பொறுப்பும் என் தலையில் விழுந்தது. நடிக நண்பர்களின் ஒத்துழைப்போடு, புதிய நாடகங்கள் தயார் செய்தோம்.

“வள்ளித் திருமணத்திற்கு பிரிவுபசாரம் வாசித்து விட்டு, ‘வாடிடும் ஏழை’ என்ற நாடகம் நடித்தோம்—நல்லதங்காள், சாவித்திரி, அரிச்சந்திரா, பிரகலாதா எல்லாம் சீந்துவாரற்றுப் போயின. என் எண்ணங்கள் நாடகமாயின. புதிய புதிய கருத்துக்களை நாடக மூலம் சொன்னோம். எதிர்ப்பு அதிகம்—அது போலவே ஆதரவும் வளர்ந்தது. நினைத்தவைகளை மக்களிடம் சொல்ல முடிகிறதே என்ற மகிழ்ச்சியால் ஆறுதல் பெற்றேன்—ஆயினும் என் ஆருயிர் மோகினியை சந்திக்கத் துடித்தேன்—சந்தித்தேன்—இருவரும் ஒன்று பட்டோம். பரிமளாவை நான் புரிந்து கொண்டேன். பட்டுக்கோட்டை பள்ளிக் கூடம்—மருங்கப்பள்ளம் கிராமம்—தாண்டவன் என்கிற அடையாளங்களால்!

“ஆனால் அனாதையான என்னை அவள் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் காதலரானோம். பெரியவரே! உம்மையும் சந்தித்தோம். உமது புதிரைப் புரிந்து கொள்ளத்தான் போலீஸ் உடையிலே வந்தோம். போலீஸ் உடை எங்கள் நாடகக் கம்பெனி உடையாகும்; அவ்வளவுதான்—எங்கே—பெரியவரே! என் கதை முடிந்தது; உமது கதையை ஆரம்பிக்கலாம்” என்றான் துரை. அவன் சொல்லி முடித்ததுதான் தாம்தம்; மாயாண்டிக் கிழவர் மயக்கமுற்றுக் கீழே சாய்ந்தார்.

கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்