அத்தியாயம் 23 · 24 / 52
அத்தியாயம் 23
Chapter 23
மூல ஸ்கேன் 206-214
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
23
துரை சொன்ன கதை முழுவதையும் கூர்ந்து கவனித்து வந்த கிழவர், திடீரென்று மயக்கமுற்று சாய்ந்த காரணம் தெரியாமல் துரையும் பரிமளமும் திகைத்து விட்டார்கள். அவரைத் தூக்கி எடுத்து மயக்கம் தெளிவதற்கான சிகிச்சைகளை செய்யத் தொடங்கினார்கள். கிழவரின் உடல் முழுதும் வியர்வையால் நனைந்தது. சுருக்கம் விழுந்த அவரது நெற்றியிலே வியர்வைத் துளிகள் முத்து முத்தாய் உருண்டன. பரிமளா கொண்டுவந்த தண்ணீரில் துண்டை நனைத்து அதை அவரது முகத்திலே ஒத்திக்கொண்டேயிருந்தான் துரை. சிறிது நேரத்திற்கெல்லாம், கிழவர் அசைந்து படுத்தார். மெதுவாக விழிகளைத் திறந்தார்.
“பெரியவரே! பெரியவரே!” என்று துடிதுடிப்போடு துரை அவரைக் கூப்பிட்டுப் பார்த்தான். எழுந்து உட்கார்ந்து கொள்ள விரும்புவதாக அவர் ஜாடை காட்டினார். துரையும், பரிமளாவும் அவரைத் தூக்கி நாற்காலியிலே உட்கார வைத்தனர். நாற்காலியிலே சாய்ந்தபடி கிழவர் பெருமூச்சு விட்டார். “ஏன் திடீரென்று மயக்கம் வந்தது? வழக்கமாக, வருமா?” என்று கேட்டாள் பரிமளா. ‘வராது’ என்பதையுணர்த்த அவர் தலையை அசைத்துக் காட்டினார். “நான் சொன்ன கதையினால் ஒரு வேளை, உணர்ச்சி வசப்பட்டு விட்டீர்களோ?” என்று ஆவலாகக் கேட்டான் துரை.
‘ஆமாம்’ என்று மெதுவாக உதடுகளை அசைத்தார்—‘உம்’ என்று முணகிக் கொண்டார்.
“இப்படித் தெரிந்தால் நான் சொல்லியிருக்க மாட்டேனே; இந்தக் கதையை” என்று தனக்குத் தானே வருத்தப்பட்டுக்கொண்டான் துரை. “சொன்னதால் தவறொன்றுமில்லை துரை” என்று கூறிவிட்டு, மீண்டும் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுக் கொண்டார் அந்த மர்ம மனிதர் மாயாண்டி.
“ஏதோ ஒரு வேதனையை மூடி மறைக்கிறீர்கள்—அது என்ன என்பதை எங்களிடம் சொல்லக் கூடாதா?”—துரை கலக்கத்தோடு கேட்டான்.
“சொல்லுகிறேன்—சொல்லத்தான் போகிறேன்!”
“இப்போது வேண்டாம்—களைப்பாயிருந்தால், பிறகு சொல்லுங்கள்”—இது பரிமளம்.
“இல்லையம்மா—இப்போதே நான் சொல்லித் தீர வேண்டும். அப்போதுதான் என் மனதிலுள்ள சுமை குறையும்.”
அவரது உதடுகளையே உற்று நோக்கிய வண்ணமிருந்தனர் துரையும் பரிமளமும். கிழவர் கனைத்துக் கொண்டார். ஏதோ ஒரு பெரிய ரகசியத்தை வெளியிடப் போகிறார் என்பதற்கான பீடிகையாக இருந்தது அவரது அசைவு.
“துரை! தள்ளாத வயதுடைய தன் தாயாரையும், பத்து வயது பாலகன் உன்னையும், ஐந்து வயதுள்ள அரும்பு உன் தங்கையையும் தவிக்க விட்டு விட்டுச் சிறை கோட்டம் புகுந்தானே குமாரவடிவு; அவனுடைய வாழ்க்கை ஏட்டை கொஞ்சம் புரட்டிக் காட்டுகிறேன்; கவனமாகக் கேள்!”
“என்ன? என் தந்தையின் வாழ்க்கை ஏடா?”
“ஏடா அது? சோக மேடு! சுகம் நுழைய முடியாத காடு! வாழ்ந்து கெட்டவனாக இலங்கைக்குச் சென்ற குமாரவடிவு—கொலைகாரனாக சிறைக்குள்ளே நுழைந்தான்—ஞானி போல வெளியே வந்தான்.”
“என்ன சொல்லுகிறீர்கள்? அப்படியானால்...... தாங்கள்......” என்று ஆவல் நிறைந்த குரலில் இழுத்தாற் போலக் கேட்டான் துரை.
“குமாரவடிவு, மனைவியைக் கொலை செய்ததற்காக குற்றஞ் சாட்டப்பட்டான். வள்ளிக் கிழங்கை வெட்ட வேண்டுமென்று எழுதப்பட்டிருந்த டைரிக் குறிப்பு அவனைக் கைதியாக்கியது. அவனைப் பற்றி உனக்குத் தெரிந்த கதைகள் முழுவதையும் என்னிடம் சொல்லிவிட்டாய். அவன் சிறகொடிந்த பறவைபோல கூட்டுக்குள்ளே அடைபட்டுத் தவித்தபோது, பறவைக் குஞ்சுகள் வெளியிலே பாதகர்களால் வேட்டையாடப்பட்ட பயங்கரச் சம்பவங்கள் அவனுக்குத் தெரியாது. ஆயுள் தண்டனை அடைந்த கைதி குமாரவடிவு—உனக்குத் தெரியுமோ என்னவோ—சிறைச் சாலை விதிப்படி, ஆயுள் தண்டனை என்பது சாகும் வரையிலே சிறையிலே கிடப்பது என்பதல்ல என்ற விஷயம்! ஆமாம் துரை; சாகும் வரையிலே இருக்கவேண்டிய அவசியமில்லை. முழுவதும் சாவதற்கு முன்பு அந்தக் கைதிகளுக்கு நிச்சயம் விடுதலை உண்டு. கைதியின் நடத்தைக்குத் தக்கவாறு நாட் குறைப்பு—கடைசியாக ‘போர்டு’ என்று ஒன்று கூடி, அதிலே ஓரிரு வருடங்கள் தள்ளுபடி—ஆண்டு தோறும் உள்ள விடுமுறைக் கணக்கு—ஆகிய இந்த வகைகளிலே ஏழெட்டு ஆண்டுகள் தண்டனை குறைக்கப்பட்டு, ஆயுள் தண்டனை அடைந்த கைதிகள் பத்து பனிரெண்டு வருடங்களில் விடுதலை பெற இயலும். அது போலத்தான் குமாரவடிவும் விடுதலை பெற்றான். சிறைச்சாலையிலேயிருந்து அவன் வெளியிலே வரும்போது ஏறத்தாழ உனக்கு இருபது அல்லது இருபத்திரண்டு வயதாகி யிருந்திருக்கலாம். வெளியிலே வந்த குமாரவடிவு உன்னையும், உன் தங்கையையும் தேடித் தேடி அலைந்தான். கொலைகாரனுக்கு யார் சரியான பதில் சொல்லப்போகிறார்கள்! சிறைச்சாலையிலே பித்தனைப் போல அலைந்து கொண்டு, சிறை அதிகாரிகளிட்ட வேலைகளைச் செய்து கொண்டு, ஓய்வு நேரம் முழுவதையும் உங்களைப்பற்றி நினைப்பதிலேயே செலவிட்டுக் கொண்டிருந்த குமாரவடிவுக்கு—நீங்கள் போன இடம் தெரியவில்லை என்றால் எப்படியிருக்கும்! தான் பெற்ற செல்வங்களைக் கண்டு களிக்கலாம்; வளர்ந்திருப்பார்கள்—வனப்பு மிகுந்தவளாயிருப்பாள் தங்கம்—வாலிபக் காளையாகத் திகழ்வான் மகன்—வாரியணைத்து மகிழலாம் என்று இன்பக் கனவுகள் பல கண்டிருப்பானே அவன்—அந்தக் கனவுகள் எல்லாம்—அவனது விடுதலையால் கலைந்து விட்டன என்கிறபோது எவ்வளவு வேதனைப் பட்டிருப்பான் அவன்? சிறையிலே எத்தனையோ வகைக் கைதிகள் இருப்பார்கள். பெரும்பாலும் மனைவியைக் கொலை செய்தவர்களின் கணக்கு அதிகமாகவேயிருந்தது, குமாரவடிவு இருந்த சிறைச் சாலையிலே!—கூடிப் பேசும் நேரங்களிலே அவர்கள் தங்களது சிறை புகு படலத்தைப் பற்றிய கதைகளை அவிழ்த்து விடாமல் இருக்க மாட்டார்கள்.
“சோர புருஷனோடு கூடிக் கிடந்தாள். சொரணையுள்ளவன் அதை அனுமதிக்க முடியுமா? தீர்த்துக் கட்டிவிட்டேன்; தீட்டிய அரிவாளால்!” என்று வீராப்பு பேசுவான் ஒரு கைதி!
“தாயார் வீட்டிலேயேதான் இருப்பேன். உனக்கு தாகமாக இருந்தால், இங்கு வந்துபோ—என்று சட்டம் பேசினாள்—தாலி கட்டியவனுக்குப் பொறுக்குமா? தரையோடு தலையை மோதி மோதிக் கொன்றேன்” என்று ஆத்திரத்தோடு கூறுவான், இன்னொரு கைதி.
“அய்யோ அத்தான்! உங்களை விட்டு எப்படிப் பிரிவேன்—என்று தேம்பி அழுது விடை கொடுத்தாள். ஊருக்குப் போவதாக போக்குக் காட்டி, இரவோடு இரவாகத் திரும்பி வீட்டுக்குப் போனேன். கள்ள புருஷனோடு கட்டிப் புரண்டாள் என்னுடைய கற்புக்கரசி; கண்டேன் அந்தக் காட்சியை! பிறகென்ன; கையே கத்தி!—அவ்வளவுதான்—காதலர் இருவரும் கூண்டோடு கைலாசம்” என்று பழி வாங்கிய கதையை உற்சாகத்தோடு உரைப்பான் இன்னொரு கைதி!
“ஆசை நாயகனும் அவளும் சேர்ந்து சொந்தப் புருஷனை என்னையே தீர்த்துக்கட்ட திட்டம் போட்டார்கள்—நடக்குமா என்னிடம்? ஒரு நாள் இரவு—என் மனைவியும் அவனும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். இதுதான் சமயமென்று இருவர் தலையையும் வெட்டினேன். தலைகள் இரண்டையும் தேங்காய் போல முடிந்து ஒரு கம்பிலே தொங்க விட்டு, தோளிலே வைத்துக் கொண்டு, நேரே நீதி மன்றத்திலே நுழைந்தேன். நீதிபதி மயக்கம் போட்டு விழுந்தார்—போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திடுக்கிட்டுப் போனார்கள்—அவர்களுக்கெல்லாம் நான் ஆறுதல் சொன்னேன். நான் செய்த நல்ல காரியத்துக்குத்தான் இந்தப் பரிசு” என்று கண்களிலே பொறி பறக்கக் கத்துவான் ஒரு கைதி!
“நான் ஒரு முட்டாள்! துரோகி! பாதகன்! வீணாக என் துணைவியின் மீது சந்தேகப்பட்டு, அவளைக் கொலை செய்தேன். அவள் உத்தமி—பதிவிரதை”—என்று கண்ணீர் வடிப்பான் ஒரு கைதி! இப்படிக் கொலை செய்ததை ஒத்துக்கொள்ளும் கைதிகளின் கூட்டத்திலே—குமாரவடிவு மட்டுமே பொய்யன் என்ற பட்டப் பெயரை வாங்கிக் கொண்டான். வள்ளியை வெட்ட வேண்டும்—என்பது கிழங்கைத்தானய்யா; மனைவியை அல்ல—என்று குமாரவடிவு உரக்க உரக்கச் சொல்லியும் கைதிகள் கேட்டார்களில்லை. “சும்மா—புளுகாதே” என்று கிண்டல் செய்து—அவன் நெஞ்சைத் துளைத்தார்கள். இதெல்லாம் சில மாதங்கள் தான்!—பிறகு குமாரவடிவு சாதாரண கைதி நிலையிலேயிருந்து மேஸ்திரி கைதியாக உயர்த்தப்பட்டான்.
அதன் பிறகு கைதி வார்டர் பதவியையும் ஏற்றுக் கொண்டான். கைதி வார்டர் என்றால் சிறைக்குள்ளேயே கொஞ்சம் கௌரவமான உத்தியோகம். அந்த உத்தியோகத்திற்கு சம்பளமே—தண்டனை நாள் குறைப்புத்தான்! ஆனால் அதிகமாகத் தூங்க முடியாது. நினைத்த சமயம் படுக்க முடியாது. இரவு பகல் எல்லா நேரத்திலும் வேலையிருக்கும். அந்த வேலையில் சிறு தடங்கலும் ஏற்படக்கூடாது. கஷ்டப் படுவதற்கேற்ற பயனிருக்கிறது. அதுதான் நாட் குறைப்பு என்றேனே; அது!
உலகத்தின் எங்கேயோ ஒரு மூலையிலே—குறிப்பிட்ட அளவு மட்டும் நடக்கலாம்; அந்த வேலியைத் தாண்ட முயன்றால் வேதனைக்காளாக நேரிடும்—என்ற உத்திரவுக்குப் பணிந்து நடைப்பிணம் போல வாழ்க்கையை நகர்த்தும் எண்ணற்ற மனிதர்கள்—அந்தப் பயங்கர நாட்களிலே ஒரு நாள் குறைந்தாலும் அதை மகிழ்ச்சியோடுதானே வரவேற்பார்கள்! அப்படித்தான் குமாரவடிவு நாட்களை எண்ணிக்கொண்டு வந்தான். விடுதலை பெற்ற பிறகுதான் அவனுக்குத் தோன்றியது, சிறையிலேயே ஆயுள் முழுவதையும் ஓட்டியிருக்கலாமே என்ற எண்ணம்! இனி என் செய்வது? வரமாட்டேன் என்றாலும் விடமாட்டார்கள்—ஒரு நாள் இருந்துவிட்டுப் போகிறேன் என்றாலும் அனுமதிக்க மாட்டார்கள்—அப்படிப்பட்ட இடமல்லவா சிறைச் சாலை!
சிறிய சிறையிலேயிருந்து, உலகமென்னும் பெரிய சிறைக்கு வந்த குமாரவடிவு, இலங்கைத் தீவிலே சில நாள் அலைந்தான். பிறகு, இந்தியாவுக்கு வந்து சேர்ந்தான். மகனும், மகளும் இனி அகப்பட மாட்டார்கள் என்ற தீர்மானத்துக்கு அவனே வரும் வரையில் அவர்களைத் தேடித் திரிந்தான். தமிழகத்து மண்ணை, குமாரவடிவு தனது கண்ணீரால் நனைக்கும் போதெல்லாம்—இதே மண்ணில் நீ நாடகமாடிக் கொண்டிருப்பதும்—உன் தங்கை நீண்ட துயில் கொண்டிருப்பதும், அவனுக்குத் தெரியாது. எப்படித் தெரிய முடியும்? தெரிந்துகொள்ளும் வாய்ப்புதான் ஏது?
குடும்பப் புத்தகத்தை செல்லரித்துவிட்டது—ஒரே ஒரு ஏடு குமாரவடிவு மட்டுமே காலக் காற்றிலே புழுதியோடு சேர்ந்து பறந்து கொண்டிருக்கிறான்—என்று தனக்குத் தானே அவன் சொல்லிக் கொள்வான்.
அப்படிப் பறந்து கொண்டிருந்தவன்—கிராமம் தோறும் பயணம் நடத்தி, புதிய தத்துவங்களை உபதேசம் செய்யும் ஞானியாக மாறினான்—ஆமாம், ஞானியென்று அவன் தன்னை எண்ணிக் கொண்டான்; யாரோ ஒரு பைத்தியக்கார வேதாந்தி என்று ஊரார் அவனைப் பரிகாசம் செய்தனர். அவன் அதற்காகக் கவலைப்படவில்லை. தான் கண்டுபிடித்ததாகக் கருதும் கருத்துக்களை, யாரிடமாவது சொல்லித் தீரவேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான். அவனது உபதேசங்களை மக்கள் காது கொடுத்துக் கேட்டதற்குக் காரணமே வேறு! அவன் வைத்தியத் தொழிலிலே நிபுணன் என்று பெயர் வாங்கிவிட்டான். தேயிலை இலைகளைப் பறித்த குமாரவடிவு இப்போது மூலிகைகளைப் பறிக்கும் சித்த வைத்தியராக மாறினான்.
இந்தத் திறமையை அவன் சிறையிலே பெற்றான். மருத்துவத்திலே மகா நிபுணன் ஒரு கைதி—அவனிடம் பெற்ற பாடம், குமாரவடிவின் வயிற்றுக்கு உதவி புரிந்தது. மருத்துவ குமாரவடிவின் பாதையிலே ஒரு புதிய திருப்பத்தை அளித்தது மருங்கப்பள்ளம் கிராமம்—ஆமாம் துரை!—உன்னுடைய தங்கை மண்ணோடு கலந்து கிடக்கிறாளே; அந்த மருங்கப்பள்ளம்தான்—உன் தந்தையின் பாட்டையையும் மாற்றியது என்கிறேன்! எழுபது கோடி பசும் பொன் மறைந்து கிடக்கிற இடம் மருங்கப்பள்ளம். எழுபது கோடி இல்லாவிட்டாலும்; ஏதோ கொஞ்சமாவது இருக்கத்தான் வேண்டும். அந்தப் புதையலைத் தேடி யார் யாரோ அலைகிறார்கள் என்பது உண்மைதான். குழந்தையை பலி கொடுத்து கொடுமை புரிகிற அளவுக்கு ஒரு சாமியாருக்குப் பொன்னாசை வளர்ந்திருக்கிறதென்றால்; மற்றவர்களைப் பற்றி கேட்கவா வேண்டும்? நடுக் கடலிலே எங்கள் தோணியை நீ வழி மறித்தாயே, அந்தத் தோணியிலிருந்த ஐயப்பன் என்ற முரட்டுப் படகோட்டி கூட அந்தப் புதையலுக்காக நாக்கைத் தட்டிக் கொண்டிருப்பவர்களிலே ஒருவனாவான்.
ஐயப்பனை போலவே பலர் அந்தப் புதையலை சாப்பிட பல் துலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய புதையலைப் பற்றிய ரகசியம்—அதை எடுக்கக் கூடிய வழி—அனைத்தும் அடங்கிய ஒரு செப்பேடும்—ஒரு சிறு கல்லும்—உன் தந்தையிடம் கிடைத்து விட்டது.”
“கிடைத்து விட்டதா? புதையலைப் பற்றிய குறிப்பா? எப்படி?” என்று துடிப்போடு கேட்டான் துரை.
“பொறு—சொல்லுகிறேன்!” என்று கனைத்துக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தார் கிழவர்.
“புதையலை எடுக்கும் வழியும் வகையும் கிடைத்து விட்டது—அதை எடுத்து என்ன செய்வது? யாருக்காக அதை எடுக்கவேண்டும்?—என்ற கேள்விகள் குடைய ஆரம்பித்தன குமாரவடிவை!”
கிழவர் பேச்சை முடிக்கவில்லை. அதுவரையிலே அவரது பேச்சை ஆவலோடு கேட்டு வந்த துரை, இப்போது சிறிது அவசரப்பட்டுவிட்டான்—மர்மக்கிழவர், மாயாண்டி தான் தன்னுடைய தந்தை என்று முடிவுகட்டி—அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவரது உள்ளத்தில் உள்ளவை அனைத்தையும் தெரிந்துகொள்ள விரும்பியிருந்த அவன் ஏனோ திடீரென்று அவசரப்பட்டு—“புதையலை யாருக்காக எடுக்க வேண்டும்? எனக்காகத்தான்—உங்கள் மகனுக்காகத்தான்!” என்று கத்திவிட்டான். பரிமளாவும், திகைத்துப் போனாள்; கிழவர் மரம் போலிருந்தார்.
“அப்பா! அப்பா!” என்று அவரை அணைத்துக் கொண்டு அழுதான் துரை.
“நான் உன் தந்தை குமாரவடிவு அல்ல—அவன் இறந்துவிட்டான். உண்மைதான்—நான் சொல்வதை நம்பு—அவன் இறந்துவிட்டான்”—என்று கூவினார் கிழவர்.
“உண்மையாகவா? நீங்கள் என் தந்தையில்லையா?”—துரை துடித்தான்.
“இல்லை”
“பிறகு நீங்கள் யார்?”
“உன் தந்தை குமாரவடிவின் நண்பன்—சிறைச் சாலைத் தோழன்—விடுதலை அடைந்த பிறகு நானும் அவனுமே நண்பர்களாக வாழ்ந்தோம். குமாரவடிவு சாகும் வரையிலே நான் அவனைப் பிரியவேயில்லை!” என்று கூறி கண்ணீர் வடித்தார் மாயாண்டி.
கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்