அத்தியாயம் 24 · 25 / 52
அத்தியாயம் 24
Chapter 24
மூல ஸ்கேன் 215-217, 220-225; duplicate physical witnesses 218-219 retained only in pages/ provenance
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
24
“நான் உன்னுடைய தந்தைதான்—பல வருஷ காலம் உன்னைப்பிரிந்திருந்த தந்தை நான்தான்—நீயும் உன் காதலி பரிமளாவும், நீலத் திரைக் கடலோரமுள்ள உப்பரிகையிலே நின்றிருக்கும்போது, திடீரெனத் தாக்கி திகிலுண்டாக்கிய நான் உன் தந்தையேதான்—உனக்கும் உன்னுடையவளுக்கும் ஒரு புரியாத புதிராக இருக்கும் இந்த மர்மக் கிழவன் உன் அப்பன் தானடா மகனே! டைரிகளை எழுதி எழுதிக் குவித்து, அதே டைரியினாலேயே காட்டிக் கொடுக்கப்பட்ட உன் தகப்பன் நானேதான்—ஏராளமான திரவியம், எடுபிடி, ஆள், அம்பு இவைகளோடு இன்பமாக வாழ்ந்து, இறுதியில் இருக்கவும் இடமின்றி இலங்கைக்கு ஓடி, இன்னல்கள் பலவற்றை வாழ்க்கையிலே சந்தித்த அபலைக் குடும்பத்தில் மிச்சமிருக்கும் தலைவன்—என் குலக் கொழுந்தாம் உன்னைப் பெற்றெடுத்த தகப்பன்—இதோ, ஆண்டிக் கோலத்திலிருக்கிறேனே நானேதான்!”
இப்படியெல்லாம் மாயாண்டிக் கிழவர், தன்னைத் தழுவிக் கொண்டு பேசியிருக்கக் கூடாதா என்று துரை கவலைப்பட்டான்.
பொய்க்காகவாவது “நான் உன் தகப்பன் தான்” என்று அவர் கூறியிருந்தால் அந்த சமயம் தன் மனம் சிறிது நிம்மதி அடைந்திருக்குமே யென்று எண்ணி ஏங்கினான். ஏக்கத்தோடு ஏக்கமாக, “அப்படியானால் என் அப்பா எங்கே, எப்படி, எப்போது இறந்தார்? அதையாவது சொல்லுங்களேன்” என்று தழுதழுத்த குரலிலே அவன் கேட்டான். கிழவர், அவனைப் பரிவோடு பார்த்து—
“துரை! புண்ணுக்கு மருந்து கேள்; தருகிறேன். அதை வேலால் குத்தும்படிச் சொல்லாதே என்னால் முடியாது!” என்றார்.
“என்ன பெரியவரே, சொல்கிறீர்கள்?”
“நீ என்னிடம் எழுதிக் காட்டிய உன் வாழ்க்கைச் சித்திரமே ஒரு சோகப் பெருவெள்ளம்—நான் வேறு உன் அப்பன் செத்த கதையைச் சொல்லி, சோகத்தை இரு மடங்காக்க வேண்டுமா? வேண்டாம்—உன் தந்தை குமாரவடிவு இறந்துவிட்டான்; அதோடு விட்டுவிடு!”
“இது என்ன பெரியவரே, போர்க்களத்திலேயிருந்து வீரனுடைய குடும்பத்திற்கு சாவுச் செய்தி வருமே—அது போல முடிவை மட்டும் ஒரு வரியில் கூறுகிறீர்களே!”
“ஆமாம்—குமாரவடிவின் வாழ்க்கையும் ஒரு போர்க்களந்தானே! ஆனால், அவன் வீரனாக நின்று சமர் புரியவில்லை; கோழை போல உலகத்துக்குப் பயந்து, ஒதுங்கி ஒதுங்கி நடந்து, கடைசியில் பிணமாகப் போனான்.”
“தயவு செய்து என் தந்தை இறந்த விபரத்தைச் சொல்லுங்கள்! அப்பா மாண்டது, மகனுக்கும் தெரியாத ஒரு மர்மச் சுழலாகப் போய்விட வேண்டாம். நான் கவலைப்படுவேன் என்று எண்ணாதீர்கள். என் குடும்பத்திலே நிகழ்ந்த துன்பத் தொடர்கதையின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்தவன் தான் நான். தாயார், பாட்டி, தங்கை மூவரையும் பிணமாகப் பார்த்தவன் நான். அதனால் மனம் மரத்துப் போய்விட்டது. தந்தை இறந்த விபரத்தை நீங்கள் தைரியமாகச் சொல்லலாம்.”
“கேட்க நீ தயார்! சொல்ல நான் தயாராகிக் கொள்வது கஷ்டமாயிற்றே! குமாரவடிவின் மகன் நீ. நான் அவனுக்கு நண்பன். சிறையிலும் வெளியிலும் அவனும் நானும் சேர்ந்து பழகினோம். அவன் இறந்தபோது நான் பக்கத்திலே தானிருந்தேன். ‘ஏன் இறந்தான்’ என்பதை வெளியிட என்னால் இயலவில்லை. நினைக்கும்போதே நெஞ்சு குமுறுகிறது. சொல்லவும் ஆரம்பித்தால்......அவ்வளவு தான் என் பாடு!”
“அடக்குவதற்குப் பதிலாக அதிகமாகத் தூண்டி விடுகிறீர்கள் ஆவலை! நீங்கள் அதை சொல்லித்தான் தீர வேண்டும்!”
“குமாரவடிவுக்கு கொடுத்த வாக்குறுதியை மீற மாட்டேன்; நண்பனாக இருந்த நான் துரோகியாக மாற மாட்டேன். சாவு அவனுடைய சொந்த விஷயம். வெளியிலே தெரியக் கூடாத பரம ரகசியம் அந்த சாவிலே அடங்கியிருக்கிறது. அதை நான் வெளியிலே சொன்னால் நட்புக்கு வகுக்கப்பட்ட நல்ல இலக்கணத்தை நாசம் செய்தவர்களின் பட்டியல்களிலே இடம் பெறுவேன்.”
“பெரியவரே—மகனிடம்தானே சொல்லப் போகிறீர்கள்; மாற்றாரிடம் அல்லவே?”
“இன்னுங் கூறப் போனால், சிறை மீண்ட பிறகு நானும் குமாரவடிவும் சேர்ந்து செய்த காரியங்கள் எத்தனையோ உண்டு. உலகத்திலே நடக்காதது எதையும் செய்துவிடவில்லை. அப்படி நடக்கும் காரியங்களின் அளவை விட எவ்வளவோ குறைவானதுதான் நாங்கள் ஈடுபட்ட காரியங்கள்—ஆனாலும், இப்போது அவன் இறந்துவிட்டான் என்பதற்காக அவைகளை வெளியே கூறி என் இருதயத்தில் விஷத்தை நிரப்பிக்கொள்ள மாட்டேன்.”
“அவைகளையெல்லாம் சொல்ல வேண்டாம் அய்யா!—எனக்குத் தெரியும் என்னென்ன நடந்திருக்குமென்று.”
“என்ன நடந்திருக்கும்?—துரை! நீ கற்பனை பண்ணுவது எனக்கும் புரிகிறது. வள்ளியம்மா, வீணாக தன்மீது சந்தேகப்பட்டதாலும், தொடர்ந்து பிடிவாதமாக பேசாமலிருந்ததாலும், ஒரு குடும்பத்தின் திசையே திரும்பி விட்டது என்று எண்ணியிருப்பான் குமாரவடிவு!—அதன் விளைவாக சந்தேகப்பட்டதுதான் பட்டு விட்டாள்; இனிமேல் என்ன? அவளுந்தான் சந்தேக நிவர்த்தியின்றி செத்து விட்டாள்; ஆகையால் நாம் இஷ்டம்போல் அலையலாம் என்று கண்ட பெண்களையும் வட்டமிட்டிருப்பான் என்று எண்ணுகிறாயா? அதுதான் இல்லை! பிறகு எது? மன நிம்மதிக்கு மதுவாயிருக்குமோ, என்று யோசிக்கத் துவங்குகிறாயா? அதுவுமல்ல!”
“எதுவானாலும் எனக்குக் கவலையில்லை! என் தந்தை எப்படி இறந்தார் என்ற செய்தியை மட்டும் சொல்லுங்கள், போதும்!”
“பாம்பு கடித்து இறந்தான்! போதுமா?”
“பாம்பா?”
“என்ன பாம்பு என்று கேட்கிறாயா? அதையும் சொல்லுகிறேன்; நல்ல பாம்பு!”
“பாம்பு எப்படிக் கடித்தது?”
“பைத்யக்காரா, இது தெரியாது? படத்தை உயர்த்தி—பல்லை அழுத்தி—காலில் கடித்தது. பாம்பின் தலையிலேயுள்ள விஷம் பல்லின் ஓட்டை வழியாக காலில் இறங்கி, பிறகு தலைக்குப் போய்......மயக்......”
“போதும் போதும்—அய்யா பெரியவரே! பாம்பு கடித்து அப்பா இறந்தார் என்பதில் என்ன ரகசியமிருக்கிறது? அதை ஏன் இவ்வளவு மறைக்கவேண்டும்?”
“ஏது—விடமாட்டாய் போலிருக்கிறதே—”
“விடமாட்டேன்; உண்மையைச் சொல்லி விடுங்கள். பாம்பு கடித்து அப்பா இறக்கவில்லை. ஏதோ சூது நடந்திருக்கிறது. என்னிடம் மறைக்காதீர்கள்—”
“பாம்பு தானப்பா—அதுவும் சிவன் கோயில் பாம்பு!”
“சிவன் கோயில் பாம்பு! பெரியவரே—என்னை ஏன் இப்படி சித்ரவதை செய்கிறீர்கள்? அப்பா இறந்த உண்மையைச் சொல்ல முடியாதென்றால் சும்மா இருங்கள்—வீண் புதிர்கள் போடவேண்டாம்”—துரை கொஞ்சம் கடுமையாக, சோகங் கலந்த குரலில் பேசிவிட்டு அப்பால் நகர்ந்தான்.
“பார் பரிமளா—உன் அத்தானுக்கு மூக்கின் மேலிருக்கிறது கோபம்—உம்; எப்படித்தான் துரையோடு குடும்பம் நடத்தப் போகிறாயோ, நீ!” என்று பரிமளாவைப் பார்த்து கிழவர் சாவதானமாகக் கூறினார்.
புயலில் சிக்கிய நிலையிலேயிருந்த பரிமளாவும் கிழவரைப் பார்த்து, “உங்களுக்குத்தான் என்ன, வயதான காலத்திலே இவ்வளவு பிடிவாதம்?” என்றாள்.
“வாதம்—பிடிவாதம் எல்லாம் வயதான காலத்தில்தானே வரும் பரிமளா! சொல்லக் கூடிய சங்கதியாயிருந்தால் இன்னேரம் சொல்லியிருக்க மாட்டேன்?”
இதைக் கேட்ட துரை கோபத்தோடு, “ஆமாம்—சொல்லக் கூடாத சங்கதி; அவ்வளவு கேவலமான சங்கதி; இதைவிடக் கேவலமான சங்கதிகளையெல்லாம் புத்தகம் புத்தகமாக எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். நடக்காத விஷயங்களை எழுதி நாலு காசு திரட்டுவதற்கென்றே நாடோடி மக்கள் சிலர் கையிலே பேனா பிடிக்கிறார்கள்—இவர் என்ன நடந்த விஷயத்தைச் சொல்ல இவ்வளவு பூச்சிடுகிறார்!”
“அப்படியானால் என்னையும் நீ குறிப்பிட்ட அந்த நடுத் தெருக் கும்பலோடு சேரச் சொல்லுகிறாயா, துரை?”
“என் அப்பாவைப் பற்றி உங்களை ராமாயணம் எழுதச் சொல்லவில்லையே நான்; தந்தையைப்பற்றி மகனிடம் கூறுவதிலே தவறொன்றுமில்லையே; அதுவும் முழுக் கதையுமா நான் கேட்கிறேன். முடிவு அத்தியாயத்தை மட்டும் சொன்னால் போதும் என்கிறேன்.”
“வீடு விழுந்தது என்பதற்கும், வீடு எரிந்தது என்பதற்கும் வித்தியாசமிருக்கிறது. விழுந்தாலும், எரிந்தாலும்—வீடு வீணாவது உண்மைதான். ஆனால், வீடு விழுந்தது என்கிறபோது, ஏதோ பழைய வீடு காற்றிலோ மழையிலோ விழுந்துவிட்டது என்று கூறி விடலாம்; வீடு எரிந்தது என்கிறபோது எப்படி எரிந்தது? ஏன் எரிந்தது? வேண்டுமென்றே யாராவது கொளுத்தினார்களா? அல்லது அடுப்பிலேயிருந்த நெருப்பு காற்றில் பரவி விட்டதா? இரவிலே விளக்கின் சுடர் தெறித்து ஓலையிலே தீப்பிடித்து வீட்டை அழித்ததா—இப்படிப் பல கேள்விகள் பிறக்கும். விழுந்ததை விட, எரிந்ததற்கு கேள்விகள் அதிகம்; தொடர்புடைய சம்பவங்களும் அதிகம். குமாரவடிவின் சாவு எரிந்ததைப் போன்றது. தொடர்புடைய சம்பவங்கள் அதிகம் கொண்டது. அவைகளைச் சொல்லாவிட்டால் சாவின் விபரத்தை நீயும் அறிந்துகொள்ள இயலாது. அவைகளைச் சொல்லவும் எனக்குக் கஷ்டமாயிருக்கிறது!”
“கடைசியாகக் கேட்கிறேன்; சொல்லப் போகிறீர்களா, இல்லையா?”
“இது ஏது வம்பு! அதான் சொன்னேனே பாம்பு கடித்து இறந்துவிட்டான் என்று!”
“சிவன் கோயில் பாம்பு என்றீர்களே; அந்தக் கோயிலுக்கு அப்பா ஏன் போனார்?”
“சுவாமி தரிசனத்திற்காக!”
“அப்பா கோயிலுக்குச் சென்று நான் பார்த்ததே கிடையாதே; உள்ளமே கோயில் என்று தனது டைரியிலே எழுதி வைத்திருக்கிறாரே—”
“அவன் சாமி கும்பிட்டதை நான் அறிவேன்—சிறையிலிருந்து வந்த பிறகு தெய்வ பக்தி அதிகமாகிவிட்டது அவனுக்கு!”
“ஆகியிருக்க முடியாது! என் தந்தை போன்றவரை சிறையிலே மூடும்போது கண்ணை மூடிக்கொண்டிருந்த அந்தப் பாழுங் கடவுள் மீது அவருக்குப் பக்தி வந்திருக்க நியாயமில்லை!”
“பக்தி ஏற்படாமலா, கோயில் கோயிலாகச் சுற்றி ஓடினா......”
இதைச் சொல்லிவிட்டு கிழவர் திடுக்கிட்டு நின்றார். அவர் நாக்குழறி விட்டதைப் புரிந்து கொண்டார்.
“என்ன! பாதியில் நிறுத்திவிட்டீர்கள்?” ஆவலோடு கேட்டான், துரை!
கிழவர் தொண்டையைக் கனைத்துக்கொண்டு தன்னைத் திடப்படுத்திக் கொண்டு, “துரை! நடந்த உண்மைகளைச் சொல்லி விடுவதே நியாயம் என்று படுகிறது எனக்கு!” என்றார். அவருக்கு ஏற்பட்ட நடுக்கம் அப்போதும் தெளிவாகத் தெரிந்தது.
“துரை! நான் சொல்லுகிறேன்; சொல்ல மாட்டேன் என்கிற பிடிவாதம் இனி என்னிடம் இல்லை—நீயும் பரிமளாவும் நான் சொல்லும் ரகசியத்தை வெளியே வெளியிடுவீர்களேயானால்......”
“வெளியிட மாட்டோம்; எங்கள் நெஞ்சிலே ரகசியமாகக் காப்பாற்றுவோம் பெரியவரே!”
“சரி; அதைப் பற்றிக் கவலைப்படாமல் விபரத்தைச் சொல்லுகிறேன்.”
“சொல்லுங்கள்.”
“குமாரவடிவை சிவன் கோயில் பாம்பு கடித்தது உண்மைதான்; அவன் அங்கேயே இறந்து விட்டதும் உண்மைதான். எந்தச் சிவன் கோயிலில் தெரியுமா? மருங்கப்பள்ளத்து சிவன் கோயிலில்!”
“மருங்கப்பள்ளம் சிவன் கோயில் இருக்கிறதே; அங்கேதான் என் தங்கையின் சவம் தூங்குகிற அதே மருங்கப்பள்ளத்தில் தான்!”
“ஆமாம்—உன் தந்தை அங்கேதான் பிணமாக விழுந்தான். நடு இரவில்—நல்ல தூக்க நேரத்தில் இந்தக் கொடுமை நடந்தது. அப்போது நானும் கூட இருந்தேன்.”
“இரவு நேரத்தில் கோயிலுக்குப் போன காரணம்?”
“காரணம் ஒன்றுமில்லை! நானும் அவனும், திருடப் போனோம்!”
“அய்யோ!”
“நானும் அவனும் கள்ளர்கள் என்று, நான்கு வருஷ காலமாகவே பேர் பெற்றவர்கள். பெரிய பெரிய விக்ரகங்கள் எல்லாம் நாங்கள் கை வைத்தால் அசையும். விக்ரகங்கள் என்றால், அதனுள்ளே புதைத்து வைக்கப்பட்டிருக்கும் தங்கக் கட்டிகளையும், வைரங்களையும் எடுப்பதுதான் எங்கள் வேலை! சிலைகள் அசைக்கப்படும். விக்ரகங்களுக்குக் கீழே புதைக்கப்பட்டிருக்கும் நாணயங்கள் சுருட்டப்படும். இதிலே குமாரவடிவு மிகத் திறமைசாலி! இந்தத் திருட்டுக் காரியத்தை அவன்தான் எனக்குக் கற்றுக்கொடுத்தான். சிலைகளையும் திருடி கடைகளிலும் விற்பனை செய்வோம். ஆனால், அப்படி எடுக்கப்படும் நாணயங்களை நாங்கள் மட்டும் சாப்பிட்டுக் கொழுத்தோம் என்று நினைக்காதே!”
“அப்படியா?”
“ஆமாம்; அதிலென்ன தப்பு? கையிலே இல்லை; கடவுளைக் கேட்டோம். எடுத்துத் தர அவருக்குக் கையில்லை—நாங்களே எடுத்துக்கொண்டோம்.”
“ம்—பிறகு?”
“பிறகென்ன? எங்கள் வாழ்க்கைச் செலவுகளுக்குப் போக மீதியை வாடிடும் ஏழைகளுக்குத் தந்தோம். ஒரு நாள், குமாரவடிவு ஒரு திட்டம் போட்டான். அதுதான் மருங்கப்பள்ளம் சிவன் கோயில் விக்ரகத்தைப் புரட்டுவது என்பது! அதை நான் தடுத்தேன். அவன் கேட்கவில்லை. மாரி, காளி கோயில்களில் விக்ரகம் புரட்டினால் கொஞ்சம் தான் கிடைக்கிறது. மருங்கப்பள்ளம் கோயில், ராஜா காலத்தில் கட்டப்பட்டது; அதனால் அந்தச் சிலையின் கீழே அதிகமாக இருக்கும். புறப்படு, போவோம், என்றான். நான் எவ்வளவோ போராடினேன். வெற்றி பெற முடியவில்லை. ‘அது சக்தியுள்ள கோயில்; விக்ரகத்தைத் தொட்டாலே வெந்து நீராகிவிட வேண்டும்—என்றெல்லாம் ஊரிலே பேசிக்கொள்கிறார்களப்பா’ என்றேன். ‘பார்ப்போம் அந்த சக்தியையும்’ என்றான். புறப்பட்டான். நானும் கூடச் சென்றுதானே தீர வேண்டும். சென்றேன். சிவன் கோயிலுக்குள்ளே அவன் நுழைந்தான், பூட்டை உடைத்து விட்டு! நான் வெளியிலே காவல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
திடீரென்று “அய்யய்யோ” என அலறினான் குமாரவடிவு! உள்ளே போய்ப் பார்த்தேன். பாம்பு அவனைச் சுற்றிக்கொண்டிருந்தது. பாம்பை உதறிவிட்டு வெளியே ஓடி வந்தான்; ‘மயக்கம் வருகிறது’ என்று கத்தினான்; கீழே விழுந்தான்; இறந்தான்!”
கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்