அத்தியாயம் 25 · 26 / 52

அத்தியாயம் 25

Chapter 25

மூல ஸ்கேன் 226-235 (chapter-25 portion)

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

25

குமாரவடிவின் முடிவைச் சொல்லிவிட்டு, மாயாண்டிக் கிழவர் மௌனமாக இருந்தார். துரையின் முகமும் வெளிறிப்போய் இருந்தது. பரிமளா, அவனையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். துரையின் உள்ளத்திலே ஏதோ ஒரு குழப்பம்—அவன் எழுந்து அங்குமிங்கும் உலவினான். அவன் கண்களிலே கலக்கம்—பேசுவதற்கு சிறிது நேரம் எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. பிறகு, கிழவரைப் பார்த்துக் கிண்டல் கலந்த ஆத்திரத் தொனியிலே கேட்டான்:

“ஊருக்கு உபதேசம் செய்யும் ஞானியாகவும், மருத்துவராகவும் இருந்து என் தந்தை வாழ்க்கையை நடத்தியார் என்று முதலில் கூறினீர்களே; அதற்கும் இப்போது சொல்கிற கதைக்கும் நிறைய முரண்பாடு இருக்கிறதே?”

“ஆமாம்—முதலில் அப்படித்தான் சொன்னேன். நீ தோண்டித் தோண்டி இப்படி கேள்விகளைப் போட்டு உண்மை விஷயத்தை கிரகித்துக் கொள்வாய் என்று எனக்கு அப்போது தெரியாது.—

ஞானியாகவும்—மருத்துவனாகவும் வாழ்க்கை நடத்தியது உண்மைதான்! ஆனால் அது குமாரவடிவு அல்ல—இந்த மாயாண்டிதான்! உன் தகப்பனின் தவறுகளை உன்னிடம் சொல்லக்கூடாது என்பதற்காகவே முதலில் மறைத்தேன். அவன் இறந்த பிறகு நான் மேற்கொண்ட மருத்துவத் தொழிலை அவன் செய்துவந்த தொழிலென்று உன்னிடம் பொய் சொன்னேன். நீ என்ன, என்னைப் பொய் சொல்ல விடுகிறாயா? உண்மைகளையெல்லாம் கக்க வைத்து விட்டாய்.”

“மருங்கப்பள்ளம் கிராமம் தான் என் தந்தையின் வாழ்க்கைப் பாதையைத் திருப்பியது என்றீர்களே முன்பு—அது?”

“அதுவா?—அது தெரியவில்லையா உனக்கு! கொள்ளைக்கார குமாரவடிவை வாழ்க்கைப் பாதையிலிருந்து திருப்பி சாவுப் பாதைக்கு அழைத்துச் செல்ல அந்தக் கிராமம் காரணமாயிருந்தது என்பதையே அப்படிச் சொன்னேன்.”

“அது போகட்டும்—ஏதோ புதையல் ரகசியம் அப்பாவிடம் கிடைத்தது—ஆனால் அதை யாருக்காக எடுக்க வேண்டும் என்று அப்பா கவலைப்பட்டார்—என்பதாகத் தெரிவித்தீர்களே; அதுவும் பொய்தானா?”

“கவலைப்பட்டது உண்மைதான்—புதையல் ரகசியம் கிடைத்ததும் உண்மைதான். குமாரவடிவு—தன் மரண முகப்பிலே அந்த ரகசியத்தை என்னிடம் ஒப்படைத்து விட்டுத்தான் கண்ணை மூடினான். அப்படி ஒப்படைக்கும் போதுதான் என்னிடம், அவன் அழுதுகொண்டே சொன்னான்: ‘மாயாண்டி—உண்மையிலேயே இந்தக் குறிப்பின்படி புதையல் கிடைத்தாலும், அதை யாருக்காக நான் எடுக்கவேண்டும்? இதோ, ஒரு நொடியில் சாகப் போகிறேன். இந்தா, இதை நீயே வைத்துக்கொள்; புதையலை எடுத்து ஏதாவது நல்ல காரியங்கள் செய்ய முடியுமானால் முயற்சித்துப் பார்; அப்படி முடியாவிட்டால் யாரிடமாவது சுயநலக்காரர்களிடம் அது சிக்கிவிடாமல் பார்த்துக்கொள்! மாயாண்டி! என் மகனையும், மகளையும் சந்திப்பாயானால் என்னுடைய கதையை அவர்களிடம் சொல்லி விடாதே!’—

இந்த வார்த்தைகளோடு அவன் மூச்சும் அடங்கி விட்டது. புதையலைக் கண்டுபிடிக்கும் செப்பேடும், சிறு கல்லும் என் கையிலே! அவைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்றே எனக்குப் புரியவில்லை.”

துரை குறுக்கிட்டுப் பேசினான்; “ஆமாம்—அந்த செப்பேடும் சிறுகல்லும் என் தந்தையிடம் எப்படிக் கிடைத்தன?”

“அதைத்தானே சொல்ல வருகிறேன். மருங்கப்பள்ளம் கோயிலில் விக்ரகத்தைப் பெயர்க்கப் போனோமே—அப்போது குமாரவடிவிடம் அந்த ரகசியம் கிடைத்தது. அவனைக் கோயிலுக்கு அனுப்பிவிட்டு நான் தூரத்தில் நின்றேன், காவலாக! கோயிலில் நுழைந்த அவன் வழி தெரிவதற்கோ, எதற்கோ தீக்குச்சியைக் கிழித்திருக்கிறான். அவன் கண்களிலே இந்த எழுத்துக்கள் பட்டிருக்கின்றன.

“எழுவானுக்கும் தொழுவானுக்கும் இடையிலே...... காக்கை மூக்கு நிழலிலே...... கள்வர் புகும் வழியிலே...... கண்டாலும் கம்மாளர் கண்ணிலே...... எழுபது கோடி பசும் பொன்!”—

என்பதுதான் அந்த வாசகம். குமாரவடிவு யோசித்திருக்கிறான். சுற்றுமுற்றும் பார்த்திருக்கிறான். வார்த்தைக்கு வார்த்தை பொருள் பிரித்திருக்கிறான். ‘எழுவான்’ என்பது உற்சவ விக்ரகம்—விழாக் காலங்களில் எழுந்தருளுகின்ற சிலை; ‘தொழுவான்’ என்பது மூல விக்ரகம். ஆகவே மூல விக்ரகத்துக்கும், உற்சவ விக்ரகத்துக்கும் இடையிலே—என்று பொருள் கொண்டான். ‘காக்கை மூக்கு நிழலிலே’ அதையும் யோசித்திருக்கிறான். அங்கே சனீஸ்வரனின் சிலையொன்று காக்கை வாகனத்தில் அமர்ந்திருக்கிறது. அந்தக் காக்கையின் மூக்கு நிழல் எங்கெங்கே படுகிறது என்று கையிலேயுள்ள தீக்குச்சியின் மூலம் கவனித்து, அதையும் குறித்துக் கொண்டிருக்கிறான். ‘கள்வர் புகும் வழியிலே’—என்பதற்கு அர்த்தமே தேவையில்லை. அவன் புகுந்த வழியும், அர்ச்சகர்கள் புகுந்திடும் வழியும் ஒன்று தானே! ஆகவே கள்வர் புகும் வழியை சுலபமாகக் கண்டு பிடித்துவிட்டான். ‘கண்டாலும் கம்மாளர் கண்ணிலே’—என்பதுதான் அவனைக் கொஞ்சம் குழப்பியிருக்கிறது. பிறகு அந்தக் குழப்பத்தையும் தீர்த்துக்கொண்டான். யாரோ ஜாதிப் பித்து பிடித்தவர்கள் கையிலே சிக்கியிருக்கிறது இந்த ரகசியம் என்று முடிவு கட்டிக்கொண்டு, கையிலேயுள்ள கடப்பாறையால் தான் குறித்துக் கொண்ட இடத்தில் குத்தினான். ‘டங்’ என்று சப்தம் கேட்டது. மீண்டும் தோண்டிப் பார்த்தான். ஒரு சிறிய பெட்டி—மிகச் சிறிய பெட்டி—அதிலே ஒரு சிறு கல்—செப்பேடு! அந்தச் செப்பேட்டிலே புதையலைக் கண்டுபிடிக்கும் வழிகள்—அந்த இடத்திலே கொண்டுபோய் அந்தச் சிறு கல்லை வைத்தால், புதையல் இருக்குமிடத்திற்கு அந்தக் கல் இழுக்கப்படும்—அங்கே தோண்டினால் ஏராளமான பொன் கிடைக்கும்—அத்தகைய மகத்தான ரகசியம் அவனிடம் அகப்பட்டது. அதை எடுத்துக் கொண்டு திரும்பும்போதுதான் பாம்பு அவனைக் கடித்தது. சப்தம் போட்டான். உள்ளே ஓடினேன். பாம்பை உதறிவிட்டு வெளியே ஓடி வந்தான். விஷயத்தை விசாரித்தேன்—நடந்தவைகளைச் சொன்னான்.”

பரிமளா இடைமறித்து, “அவரைப் பாம்பு கடிக்கக் காரணம்?” என்று ஆவலாகக் கேட்டாள்.

“பகவானின் கோபத்தாலோ, புதையல் ரகசியத்தின் மகத்துவத்தாலோ பாம்பு கடித்தது என்று எண்ணுகிறாயா?—அது ஒன்றுமில்லை; அப்படியானால், அந்தப் பாம்பு என்னையும் கடித்திருக்க வேண்டுமே—குமாரவடிவு கொடுத்த ரகசியம் என்னிடம்தான் இருக்கிறது. இதுநாள் வரையில் எந்தப் பாம்பும் என்னைத் தீண்ட வில்லையே!

கோயில்களில் விக்ரகங்களைப் புரட்டி காசு திருடினான் குமாரவடிவு என்பதற்காக பாம்பு கடித்திருக்குமென்றால், குமாரவடிவை விடப் பெரிய கொள்ளைக்காரர்கள் கோயில் தர்மகர்த்தாக்கள் என்ற பெயரிலே—அர்ச்சகர்கள், பூசாரிகள் என்ற பெயரிலே—கோயில் சொத்துக்களை சுருட்டிக் கொண்டிருக்கிறார்களே; அவர்களையெல்லாம் அங்கத்திற்கு ஒரு பாம்பு வீதம் கடித்திருக்க வேண்டுமே! பாம்பு கடித்ததற்கு பழைய நம்பிக்கைப்படி காரணம் எதுவுமில்லை பரிமளம்! பழமையான கோயில்—அதிகப் புழக்கமில்லாத இடம்—புதரும் மரங்களும் நிறைந்த பகுதி—பாம்புகள் தங்கள் வாசஸ்தலமாக அந்த ஆலயத்தை ஆக்கிக்கொண்டிருக்கின்றன. அவைகளிலே ஒன்றை, அவசரத்திலே குமாரவடிவு மிதித்திருக்கிறான்; கடித்து விட்டது. குற்றவாளிகளைத் தண்டிக்க கோயில் கொண்ட கடவுள் பாம்புகளை அனுப்புவதென்றால், தன் ஆலயத்துக்கு முன்பு பச்சைக் குழந்தையை ஒரு படுபாவி சாமியார் கொலை செய்தானே, அந்தக் கொடுமையைப் பார்த்துக் கொண்டிருப்பானேன்?—

குமாரவடிவு கோயிலில் நுழைந்ததற்கும்—பாம்பு கடித்ததற்கும் புதிய அல்லது பழைய காரணம் எதுவுமில்லை. இயற்கையாக—சந்தர்ப்ப வசத்தால் நடந்து விட்டது. அவ்வளவுதான்!”

துரையின் கண்களிலே நீர்த் துளிகள் தேங்கி நின்றன. தன் தந்தை, திருடித்தான் வாழ வேண்டும் என்கிற நிலை பெற்றதும், அப்படித் திருடும்போது தேடற்கரிய திரவியம் கிடைத்ததும், அதை எடுத்து அனுபவிக்க முடியாமல் மாண்டு போக நேரிட்டதும், ஆகிய இந்தச் செய்திகள் அவனை அனலில் தள்ளி வாட்டின. ‘அப்பா!’ என்று ஈன சுரத்தில் முனகினான். அவன் இருதயத்திலே ஒப்பாரியும் புலம்பலும் ஆரம்பமாகி விட்டது என்பதை அவன் கண்கள் தெரியப்படுத்திக் கொண்டிருந்தன. பரிமளாவுக்கும், தன் அத்தானின் நிலை சங்கடத்தைக் கொடுத்தது. மாயாண்டிக் கிழவர், அவனைப் பரிவோடு பார்த்து—

“பார்த்தாயா—இதற்குத்தான் நான் உண்மையைச் சொல்ல மாட்டேன் என்றேன். என்னிடம் எந்தக் கதையையும் கேட்காதே என்றேன்—விடமாட்டேன் என்றாய்—இப்போது விசனப் படுகிறாய்” என்று அங்கலாய்த்துக் கொண்டார்.

“பெரியவரே!—பாம்பின் விஷத்தை இறக்கி, அப்பாவைக் காப்பாற்ற முடியாமலே போய் விட்டதா?”—துரை கேட்டான் சோகத்தோடு!

“முடியாமல்தான் போய் விட்டது. எத்தனையோ மூலிகைகளைக் கொண்டு வந்து முயற்சித்துப் பார்த்தேன்; முடியவில்லை. அவனும், தான் இறந்து விடுவோம் என்பதைத் திண்ணமாகத் தெரிந்துகொண்டான். புதையல் ரகசியம் கிடைத்த விபரத்தை மயக்கத்தோடு சொன்னான். சொல்லி விட்டு என்னைப் பிரிந்தான்—‘கோயில் திருடன் ஒழிந்தான்’ என்று ஊரிலே பேசிக் கொண்டார்கள். ஆனால் குமாரவடிவுதான் அந்தத் திருடன் என்பதுயாருக்கும் தெரியாது—

கோயில்களிலே திருட்டு நின்றுவிட்டது. அதை யொட்டி திருடன் ஒழிந்தான் என்று ஊரிலே கூறி விட்டார்கள். எனக்கு சரியான துணையில்லாத காரணத்தால் இரவில் கோயில் நுழையும் தொழிலை நிறுத்தி விட்டேன். தொழிலை நிறுத்தியதற்கு அது மட்டுமல்ல காரணம்; எனக்கு அந்தத் தொழிலை நீடித்து நடத்தப் பிரியமும் இல்லை. போலீசார் கையில் சிக்கிவிட்டால் என்னிடம் இருக்கிற புதையல் ரகசியமும் அல்லவா பறிபோய்விடும்—நீ போலீஸ் உடையில் என்னைப் பிடித்தபோது கூட அதற்காகத்தானே நான் அதிகமாக பயப்பட்டேன். ஆகவே, பிழைப்பு நடத்த வேறு வழிகள் யோசித்தேன். உன் தகப்பன் செய்தான் என்று பொய் சொன்னேனே, அந்த மருத்துவத் தொழில் மேற்கொண்டேன். வயிற்றைக் கழுவ மார்க்கம் ஏற்பட்டது. சித்தர் என்று என்னை நானே எண்ணிக்கொண்டு அதன்படி நடக்கலானேன்—

என் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்களும், உன் தந்தையின் வாழ்வில் ஏற்பட்ட திடுக்கிடும் சம்பவங்களும், எனக்குப் புதிய புதிய எண்ணங்கள் வடித்துக் கொடுத்தன. அனுபவம் சிறந்த ஆசானல்லவா? அந்த அனுபவங்களைப் பின்னணியாக அமைத்து, என் மனதில் தோன்றிய கருத்துக்களை இசைத்தேன்—

தப்போ—சரியோ—எனக்கு சரியென்று பட்டவைகள், மற்றவருக்கும் சரியென்று படவேண்டுமென்ற பிடிவாதம் ஏற்பட்டது எனக்கு! இதெல்லாம் குமாரவடிவு இறந்த பிறகு—ஆம்; கொள்ளைக்காரன் இறந்த பிறகு—என் நிழல்—என் ஆருயிர் நண்பன் இறந்த பிறகு ஏற்பட்ட மாறுதல்கள்—

வெறும் மாயாண்டி, மாயாண்டி வைத்தியரானேன். பிறகு மாயாண்டிச் சாமியாராகவும் ஆனேன். பெரியதொரு பொக்கிஷத்தின் சாவி என்னிடம் இருக்கிறது. பொக்கிஷமும் இருக்கிறது. ஆனால், அதைத் திறந்து பொன்மலைகள் வெளியே எடுக்க எனக்குப் பயமாக இருக்கிறது.”

“மருங்கப்பள்ளம் புதையலைத்தானே குறிப்பிடுகிறீர்கள்”—துரை கேட்டான் இப்படி.

“ஆமாம்; அதைத்தான் குறிப்பிடுகிறேன். ஒண்டிக் கட்டையாக ஊர் சுற்றுவதிலே இருக்கிற ஆனந்தம், அந்தப் புதையலை எடுத்த பிறகு எனக்கு ஏற்படுமா என்பது சந்தேகந்தான்! அதுவுமின்றி அதை எடுத்துவிட்டேன் என்ற சேதி தெரிந்துவிட்டால், எத்தனைக் கத்திகள் என் முகத்தில் பாயுமோ—அதுவும் பயமாயிருக்கிறது! வேறு யாரிடமாவது இந்த ரகசியத்தைக் கொடுத்து விடுவோமென்றால், குமாரவடிவு சொன்னது போல, யாராவது சுயநலக்காரர்கள் கையிலே சிக்கி—அந்தப் புதையல் சீரழிந்து விடுமே என்கிற எண்ணம் குறுக்கிடுகிறது. என்னிடம் புதையலைப் பற்றிய ரகசியம் இருப்பது ஒரு சிலருக்குத் தெரிந்து விட்டது என்பதும் புரிந்து விட்டது. விஷயம் முற்றுவதற்குள் இந்த ஊரை விட்டே ஓடிவிடலாம் என்று தான் இலங்கைக்குப் புறப்பட்டேன். போகும் வழியில் தான் மனோராவில் உங்களை சந்தித்தேன். திரும்பி, உங்களோடு இப்படிக் கதை பேசவேண்டிய சந்தர்ப்பமும் ஏற்பட்டது. அதோடு என் நண்பனின் மகனைக் கண்ட சந்தோஷமும் ஏற்பட்டது. இனிமேல் எனக்குக் கவலையில்லை. இந்த சொத்துக்கு உரியவன் யாரோ, அவனிடமே இதைக் கொடுத்து விடலாம்.”

கிழவர் பெருமூச்சு விட்டார்.

“பெரியவரே! அந்த ரகசியம், கோயிலிலே புதைக்கப்பட்ட காரணம் என்ன?” என்றான் துரை.

“மருங்கப்பள்ளத்திலே ஒரு கொல்லர் குடும்பத்தைப் பற்றி பெரிய கதை சொல்வார்கள். அந்தக் கொல்லர் தான் அந்தப் புதையலுக்கு உரியவராம். அவர் குடும்பம் முழுவதும் கடலில் அமிழ்ந்து அழிந்து விட்டது. எதிர்பாராமல் குடும்பம் அழியும் என்பதை அறியாத அவர், புதையல் ரகசியத்தை அந்தக் கோயிலில் மறைத்து வைத்திருப்பார் என்று யூகிக்கிறேன். கதை, உண்மையோ பொய்யோ—அங்கே புதையல் இருப்பது உண்மை—‘எழுவானுக்கும் தொழுவானுக்கும்’ என்ற பாடல் இருப்பது உண்மை—இந்தக் கல்லைக் கொண்டுபோய், செப்பேட்டில் குறித்த இடத்தில் வைத்தால் புதையல் அகப்படுமென்றும் நம்புகிறேன்.”

“நீங்கள் முயற்சித்துப் பார்த்தீர்களா?”

“நான் எப்படி முயற்சிப்பது? முயற்சிக்கும்போது, திடீரென்று மலை மலையாகப் பொன் மணிகள் வெடித்து வந்துவிட்டால் அவைகளை நான் எப்படிப் பாதுகாப்பது? நமது அரசாங்கம் நடந்தாலும், அவர்களிடம் கொண்டு போய் ரகசியத்தைக் காட்டி, புதையலைப் பொதுமக்களுக்குப் பயன்படுத்தச் சொல்வேன். சொன்னாலும் நடக்கும். நடப்பதோ அன்னியர் ஆட்சி! இது முடிந்து நமது ஆட்சி வரும் வரையில் எனக்கு ஆயுள் நீளும் என்பது சந்தேகந்தான். அதனால்தான் எதுவும் புரியாமல் அலைகிறேன். யாரிடம் கொடுப்பது என்பது தெரியாமல் தவிக்கிறேன். துரை! இனிமேல் நான் அலைய வேண்டியதில்லை; ஆளைத் தேடவும் வேண்டியதில்லை; பொறுப்பான வாலிபன் நீ கிடைத்து விட்டாய். உன் தந்தை கண்டுபிடித்த சொத்து நீயே வைத்திரு பத்திரமாக! காலம் வரும்போது, இதன் உதவியைக் கொண்டு புதையலை எடு. அதைப் பொது மக்களுக்குப் பயன்படுத்தும் நிலை வரும் வரையில் காத்திருப்போம். என் காலத்தில் நல்ல அரசு மலராவிட்டாலும், உன் காலத்தில் மலராமலா போகப் போகிறது! அப்போது அந்த அரசிடம், இதை ஒப்படைத்து—நாடு செழிக்க, வழி வகுத்திடு! இந்தா இதைப் பிடி!” என்று உணர்ச்சியோடு கூறிக்கொண்டு, மடியிலிருந்த செப்பேட்டையும் சிறு கல்லையும் எடுத்து துரையிடம் நீட்டினார் மாயாண்டி.

துரை, அதை வாங்குவதற்காகக் கை நீட்டினான். திடீரென்று பயங்கரமான சப்தத்துடன், ஒரு முரட்டு மனிதன் கொல்லைப் புறமிருந்து உள்ளே பாய்ந்தான். இவ்வளவு நேரமும் ஜன்னல் வழியாக இவர்கள் பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்த கரிய உருவமே அது!

முரடனின் கரத்திலே ஒரு கத்தி இருந்தது. முகத்திலே கொலை வெறித் தன்மை இருந்தது!

“மாயாண்டி—மரியாதையாக அதை இங்கே கொடு” என்று கத்தினான் அந்த முரடன்.

“யார்? அடப் பாவி—ஐயப்பனா?” என்று அலறினார் மாயாண்டி. பரிமளா கதறிக் கொண்டு ஓட ஆரம்பித்தாள்.

கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்