அத்தியாயம் 26 · 27 / 52
அத்தியாயம் 26
Chapter 26
மூல ஸ்கேன் 235 (chapter-26 portion)-240
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
26
“அடப்பாவி ஐயப்பனா?” என்று கிழவர் அலறியதும், “ஆமாம்; ஐயப்பன் தான்! அடே கிழவா! எங்கே ஓடப் பார்க்கிறாய்? மரியாதையாக நில்!” என்று பயங்கரமாகக் கத்திக்கொண்டு உரக்கச் சிரிக்க ஆரம்பித்தான் ஐயப்பன். நடுநடுங்கியபடி பரிமளா இங்குமங்கும் ஓடினாளே தவிர, இன்னது செய்வதென்று அவளுக்குப் புரியவில்லை. துரை கொஞ்சம் பின்வாங்கி நின்று கொண்டு, ஐயப்பனை எதிர்க்கத் தயாரானான். கிழவரும் தன் உடலை வளைத்து நிமிர்த்தி, ஐயப்பனின் முதல் தாக்குதலிலேயிருந்து சமாளித்துக் கொண்டு துரையுடன் சேர்ந்து கொண்டார்.
“கிழவா—நீ தப்பவே முடியாது! உயிர்மேல் ஆசையிருந்தால் கையில் உள்ளதை இப்படிக் கொடுத்து விடு!—ஏ, பொடியனே! நீயும் விலகிப் போய்விடு—வீணுக வம்பை விலைக்கு வாங்காதே!” என்று கர்ச்சனை புரிந்தான், கரகரத்த தொனியிலே ஐயப்பன்.
அவனது கொடூரமான பார்வையும், கையிலே பிடித்திருக்கும் பளபளப்பான கத்தியும், ஏதோ ஒரு திடுக்கிடும் முடிவை விரைவிலே உண்டாக்கும் அறிகுறிகளாக அமைந்திருந்தன. துரை, பின்னோக்கியே நகர்ந்து நகர்ந்து, மெதுவாக பீரோவின் பக்கம் வந்துவிட்டான். ஐயப்பனும் அவர்களிருவரையும் தொடர்ந்தபடி மெதுவாக முன்னேறி, தன் தடித்த கால்களை ஊன்றிக்கொண்டே நகர்ந்தான். பீரோவிடம் வந்துவிட்ட துரை, சடக்கென பீரோவின் கதவைத் திறந்து, அதிலேயிருந்த கைத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டான். அதுகண்ட பரிமளாவுக்கு உயிர் வந்தது போலாயிற்று. மாயாண்டிக் கிழவரும் மனத் துணிவு பெற்றார்.
“ஐயப்பா! ஜாக்ரதை! நீ சொன்னதை இப்போது திருப்பிச் சொல்லுகிறேன். உயிர் வேண்டுமானால்—இப்போதே ஓடி விடு!” என்று கிழவர் அழுத்தந் திருத்தமாகவும் ஆத்திரத்தோடும் கத்தினார்.
“தெரியுமடா, அது நாடகத் துப்பாக்கி என்று!”—இதைக் கூறிக்கொண்டே நரி ஊளையிடுவது போல சிரித்துக் காட்டினான் ஐயப்பன்.
துரைக்கு ஆத்திரம் பொங்கியது. தன்னால் மன்னிக்கப்பட்டு விரட்டப்பட்டவன், தன்னையே மிரட்டிக்கொண்டு எதிரே நிற்கிறானேயென்று துரை கொதித்தான். துப்பாக்கியை அவனுக்கு நேராக நீட்டி, “போகிறாயா? இல்லையா?” என்று உறுமினான்.
ஐயப்பன் பதில் சொல்லவில்லை; சிரிக்கத் தொடங்கினான் மறுபடியும்.
“சுட்டுத் தள்ளிவிடுவேன்—ஜாக்ரதை!” என்று துரை மீண்டும் கத்தினான்.
“சுடுடா பார்ப்போம்! சூரப் புலி மகனே, சுடுடா!” என்றபடி ஐயப்பன் அருகே நெருங்க ஆரம்பித்தான். ஏறத்தாழ ஐயப்பனின் கையிலுள்ள கத்தி துரையின் நெஞ்சுக்கு நேராக நின்றது. சமயம் பார்த்திருந்த துரை கத்தியைத் தட்டிவிட்டு, ஐயப்பனின் கையில் பலமாகத் தாக்கினான். கத்தி கீழே விழுந்தது கண்ட ஐயப்பன், அதை எடுக்க அவசரமாகக் குனியவே, ஏற்ற சந்தர்ப்பம் இதுவென எண்ணிய துரை, அவனது கழுத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். இருவரும் ஒருவரையொருவர் விடாமல் சண்டையிட ஆரம்பித்தார்கள். இருவர் முகத்திலும் மாறி மாறி குத்துக்கள் விழ ஆரம்பித்தன. ஐயப்பனின் முரட்டுத்தனமான தாக்குதலை துரையினால் சமாளிக்க இயலாது எனக் கண்ட மாயாண்டி, ஐயப்பனின் தலையிலும், மார்பிலும் இஷ்டம்போல் தாக்க ஆரம்பித்தார். மாயாண்டியின் குறுக்கீட்டை ஐயப்பன் வெகு சுலபமாக சமாளித்துக் கொண்டான். அவர் அருகே வரும்போதெல்லாம் தன் காலால் பலங்கொண்ட மட்டும் அவரை உதைத்து உருட்டினான். அதோடு துரையையும் தாக்கிக் கொண்டிருக்கத் தவறவில்லை.
அத்தான்; அந்த முரடனை எதிர்ப்பதற்கு மிகவும் கஷ்டப்படுவதையும், துணைக்கு செல்ல முடியாதபடி கிழவர் தவிப்பதையும் கண்ட பரிமளாவுக்கு பயம் அதிகமாகியது. ஐயப்பனோ, கிழவரைக் காலால் உதைத்துக் கொண்டே, துரையின் முகத்தில் தன் முரட்டு முகத்தால் மோத ஆரம்பித்தான். துரை அவனிடம் நன்றுக சிக்கிக் கொள்ளவே, அவனை நகர்த்திக்கொண்டே போய் கத்தியை கையில் எடுக்க முயற்சி செய்தான் ஐயப்பன். அதை உணர்ந்த கிழவர், கத்தியை அவனிடமிருந்து தள்ளி விடுவதற்காக ஓடும்போது, நாற்காலி தடுக்கி தலைகுப்புற கீழே விழுந்தார். அவரைத் தூக்கிவிட்டு, பரிமளா கத்தியிடம் ஓடினாள். ஆனால் அதற்குள் ஐயப்பனின் கையில் கத்தி அகப்பட்டுவிட்டது. கத்தி வைத்துள்ள அவனது கையை துரை பலமாகப் பிடித்துக் கொண்டான். அந்தப் பிடியிலிருந்து துரை சிறிது தளருவானேயானாலும் தன் உயிரை இழக்க வேண்டியதுதான். இதைப் பார்க்கும் பரிமளாவுக்கு எப்படியிருக்கும்? ஐயப்பன் ஒழித்துக் கட்ட என்ன செய்யலாமென்று யோசித்தாள். சுற்று முற்றும் பார்த்தாள். இருட்டிலே ஒரு மூலையில் கைத் துப்பாக்கி கிடந்தது. அதை ஓடிப் போய் எடுத்தாள். ஐயப்பனிடமிருந்து அத்தானைக் காப்பாற்ற வேண்டுமானால், கொலை செய்வதைத் தவிர, வேறு வழியில்லையென்று கண்டாள்.
“ஏய்! அவரை விடுகிறாயா?—சுடட்டுமா?” என்று ஆவேசமாகக் கூச்சலிட்டாள். அவளது கூச்சலே அவன் காதில் வாங்கவேயில்லை. நிலைமை விபரீதமாகிவிடும் எனக் கண்ட பரிமளா, கைத்துப்பாக்கியின் விசையை அமுக்கினாள், ஐயப்பனுக்கு சரியாகக் குறி வைத்து! ஆனால், அதில் சப்தம்தான் கேட்டதே தவிர, ரவை வெளிப்பட வில்லை. புகை கிளம்பியது. அது நாடகத் துப்பாக்கிதான் என்பதை பரிமளா புரிந்து கொண்டாள். ஐயப்பன் கொடூரமாகச் சிரித்தான்—பைத்தியங் கொண்ட நாய்போலக் குரைத்தான்—“அது நாடகத் துப்பாக்கி” என்பதை அந்தச் சிரிப்பு, குரைப்பு மூலமே விளக்கினான். கிழவரும் ஏமாற்றத்தோடு நின்றார்.
ஐயப்பனை நெருங்கவும் முடியவில்லை அவரால். அங்குள்ள நாற்காலி, பலகை, எல்லா சாமான்களையும் தூக்கி ஐயப்பன் மீது வீசிப் பார்த்துவிட்டார். சில குறி தவறி வேறு பக்கம் விழுந்தன. சில அவன் மேலே விழுந்து தோலில் சிறு காயத்தை ஏற்படுத்தியதோடு தங்கள் உருவத்தை வீணாக்கிக் கொண்டன.
நிலைமை மிஞ்சிவிட்டதை உணர்ந்த பரிமளா, வாயிற் புறத்துக் கதவைத் திறந்துகொண்டு வெளியே ஓடினாள்.
“பரிமளா! எங்கும் ஓடாதே இருட்டில்!” என்று கிழவர் கத்தினார்.
“இருங்கள்; இதோ வந்து விடுகிறேன்” என்று கூறிக்கொண்டே பரிமளா ஓட ஆரம்பித்தாள்.
தெருவிலே யாரையாவது துணைக்குக் கூப்பிடுவோம் என்ற முடிவுடன் தான் அவள் அவ்வளவு அவசரமாக ஓடி வந்தது! துரை வீட்டுக்கு மிக அருகாமையிலே வீடுகள் இல்லாததால், பரிமளா, உரத்த குரலெடுத்து “ஐயோ ஆபத்து—ஆபத்து—யாராவது வாங்களேன்!” என்று கூவினாள். அவளது சப்தம் மட்டும் எதிரொலித்ததே தவிர, ஆதரவுக் குரல் கொடுக்க யாரும் வரவில்லை. அந்த இருட்டிலே—அயர்ந்து தூங்குகிற நிசி வேளையிலே யார் தான் வருவார்கள்? பரிமளா இன்னும் சிறிது தூரம் ஓடிப் போய்க் கத்திப் பார்த்தாள். “ஐயோ......ஓடி வாங்க...... ஆபத்து! ஆபத்து!” என்று!
அவள் ஓடிய திசையிலேயிருந்து அவளை நோக்கி ஒரு வெளிச்சம் வந்தது. வெளிச்சத்தைக் கண்டதும் பரிமளாவுக்கு அவளையறியாமல் ஒரு தைரியம் மூண்டது. ஒளி வந்த திக்கு நோக்கி ஓடினாள். நாலைந்து பேர் வேகமாக வருவதும் தெரிந்தது. பரிமளாவுக்கு இன்னும் துணிவு அதிகமாகியது.
அவர்களை நோக்கி வேகமாக ஓட ஆரம்பித்தாள்.
வருபவர்களை வெளிச்சத்தின் உதவியால் போலீஸ்காரர்கள் என்று அடையாளம் கண்டுகொண்டாள்.
“ஐயா! ஐயா! ஓடி வாங்க—பெரிய ஆபத்து! சீக்கிரம்—சீக்கிரம்”—என்று கதறியபடி அவர்களிடமே வந்துவிட்டாள் பரிமளா.
“இந்நேரம் என்ன ஆகியிருக்குமோ? தன் ஆசை அத்தான் அந்த அக்ரமக்கார முரட்டுப் பயல் என்ன செய்தானே? தான் போய்ப் பார்க்கும்போது அத்தானின் நிலைமை என்னவோ? உயிரோடு பார்க்க முடியுமோ இல்லையோ? ‘பொன்னே! பூவே!’ என்றெல்லாம் கன்னல் மொழி உதிர்த்து காதல் கீதம் பாடிய அத்தானின் இதழ்களில், தன் இதழ்கள் இனியொரு முறை ஒற்றியெடுக்க முடியுமோ; முடியாதோ?”—
இப்படியெல்லாம் எண்ண அலைகள் குமுறியெழுந்திட, ஓட்டமும் நடையுமாக இருளிலே தவித்த பரிமளாவின் எதிரிலே நின்ற அந்த “ஆபத்பாந்தவர்கள்” யார்?
போலீஸ்காரர்கள் தான்! பரிமளாவுக்கும் பூரிப்பு ஏற்பட்டது. போலீசாரே உதவிக்கு வந்து அவள் எதிர்பார்க்காத சம்பவமல்லவா!
கண்களிலே புதிய ஒளி பெற்று நின்றாள் பரிமளா.
ஒரு போலீஸ்காரர் தன் கையிலேயுள்ள அரிக்கன் விளக்கைத் தூக்கி அவள் முகத்துக்கு நேராகப் பிடித்து, “யாரம்மா நீ?” என்று கேட்டார். அவர் கேட்டு முடிப்பதற்குள் “இவள் தான் பரிமளா!” என்ற ஒரு குரல் கேட்டது. அந்தக் குரல் எழுப்பியவர் போலீஸ்காரர் அல்ல; ஆனால் போலீஸ்காரரோடு வந்தவர் தான்.
“யார்?” என்று திகைத்தாள், தீ மிதித்தவள் போல பரிமளா!
“யாரா? நான் தான் உங்க அப்பன் தாண்டவன்” என்று பதில் வந்தது. ஆம், பரிமளாவின் தந்தை தாண்டவன் தான் போலீசாருடன் வந்தவர். பரிமளாவைப் போலீசார் சூழ்ந்து கொண்டார்கள். பரிமளாவின் மன நிலை கற்பனைக்கு எட்டக்கூடியதா என்ன?—கரையிலிட்ட மீன் போலானாள், அந்தக் கட்டழகி.
கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்