அத்தியாயம் 27 · 28 / 52

அத்தியாயம் 27

Chapter 27

மூல ஸ்கேன் 241-247

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

27

சுற்றிலும் போலீசார்—அதோடு அனல் மொழி சிந்திடும் தகப்பன் தாண்டவன்—இவர்களுக்கிடையே சிக்கிக்கொண்ட பரிமளாவுக்கு எப்படித் தப்புவது என்றே புரியவில்லை. அங்கே, அத்தானின் கதி என்ன ஆயிற்றோ புரியவில்லை. கூர்மாவதாரம் போன்றவனின் கையிலே இருந்த அந்தக் கூரிய கத்தி அத்தானின் நெஞ்சிலே பாய்ந்துவிட்டதோ என்னவோ—அதை நினைத்துக் கவலைப்படுவதா? அல்லது, தான் விடுபட முடியாதபடி சிக்கிக் கொண்டதை நினைத்து கவலைப்படுவதா?

மின்னற் பொழுதுதான்! அதற்குள் அந்தக் கன்னல் மொழிக்காரி ஒரு புதுவழி கண்டுபிடித்து விட்டாள். தன்னையும் குற்றமற்றவளாக்கிக் கொள்ள—அதோடு தன் அத்தானையும் காப்பாற்றிட அந்த வழியே சிறந்ததென எண்ணினாள்; பதட்டத்தோடு பேசினாள்.

“என்னைத் தூக்கிக்கொண்டு வந்தவன், அதோ வீட்டில்தான் இருக்கிறான். வாருங்கள்! உடனே போய் அவனைப் பிடிக்கலாம்” என்று பரிமளா கூறியதும், போலீசார்; “எங்கே? எந்த வீட்டில்?” என்று ஆவலாகக் கேட்டார்கள்.

“என்னோடு வந்தால் காட்டுகிறேன்—யாரோ ஒரு பயங்கரமான மனிதன்—பார்ப்பதற்கே விகாரமான சொரூபம்—அவன் தான் என்னைத் தூக்கிவந்து கெடுக்க முனைந்தான். நல்ல வேளையாக தக்க சமயத்தில், ஒரு கிழவரும் ஒரு வாலிபரும் குறுக்கே புகுந்து என்னைக் காப்பாற்றினார்கள். முரடனுக்கும் அந்த வாலிபருக்கும் சண்டை—இந்நேரம் கொலைகூட நடந்திருக்கலாம்—சமயம் பார்த்து நான் தப்பி வந்துவிட்டேன்” என்று பதட்டத்தோடு பேசினாள், பரிமளா!

“வாருங்கள் போகலாம்” என்று துடி துடிப்போடு போலீசார் புறப்பட்டார்கள். பரிமளா வழி காட்டிக் கொண்டே போனாள். தாண்டவனுக்கு எதுவுமே புரிய வில்லை. மகள் கூறுவது உண்மையாகத்தானிருக்குமா? அவள் இஷ்டத்துக்கு விரோதமாக எவனோ ஒரு கொடியவன் அவளைத் தூக்கி வந்திருப்பானா? அல்லது அவளே அவளது கள்ளக் காதலனுடன் ஓடி வந்துவிட்டு, தப்பித்துக் கொள்வதற்குப் பொய் சொல்லுகிறாளா? என்று யோசித்தபடி நடந்தார். இருட்டிலே பரிமளா முன் செல்ல, போலீசார் பின் செல்ல—கடைசியாக “இதுதான் வீடு!” என்று பரிமளா நின்றாள். போலீசார் ‘திபு திபு’ என்று உள்ளே நுழைந்தார்கள். பரிமளாவும் ஆவல் ததும்ப உள்ளே எட்டிப் பார்த்தாள். அவள் உட்பட அனைவருமே ஏமாந்து விட்டார்கள்!

ஐயப்பனோ, மாயாண்டியோ, அல்லது துரையோ யாருமே அங்கு காணப்படவில்லை. சிதறிக்கிடந்த சாமான்களையும், உடைந்து கிடந்த கண்ணாடிக் குவளைகளையும் மாத்திரமே காண முடிந்தது. பரிமளா திடுக்கிட்டாள். அத்தானை எப்படிப் பார்க்கமுடியும் என்று ஏங்கினாள். அவனது முகத்தைப் பார்க்காமல் அவளால் ஒரு விநாடிகூட இருக்க முடியாது—தவித்தாள்—தணல் வீழ் மெழுகாக உருகினாள். போலீசாரும் விளக்கின் உதவி கொண்டு வீட்டை சோதனை போட்டனர். ஒரு துணி—ஆம்; ரத்தம் தோய்ந்த துணி கிடைத்தது. சந்தேகம் வலுத்தது. மீண்டும் வீடு முழுதும் தேடினார்கள். தோட்டத்துப் பக்கமும் சோதனையை நீட்டினார்கள். ஒரு மரக்கிளை ஒடிந்து கிடந்தது. ஒரு அழகான பூச்செடி மிதியுண்டு வளைந்து கிடந்தது. உற்றுக் கவனித்தார்கள். இரண்டு மூன்று பேரின் காலடிகள் பதிந்திருந்தன. அதிலிருந்து அவர்கள் ஓடியிருக்க வேண்டுமென்று யூகித்தார்கள்.

“சண்டை நடந்தது என்றாயே; நடந்து எவ்வளவு நேரம் இருக்கும்?” என்று போலீசார் பரிமளாவைக் கேட்டார்கள்.

“நான் உங்களை சந்திக்கும்போதெல்லாம் சண்டை நடந்துதானிருக்க வேண்டும். சில நிமிஷங்கள் கூட ஆக வில்லை. அதற்குள் எப்படி மறைந்தார்களோ; தெரிய வில்லை” என்று வியப்புக் குறி காட்டினாள் அவள்!

“சில நிமிஷங்கூட ஆகவில்லை என்றால், பிறகு எங்கே போயிருப்பார்கள்? ஆச்சரியமாயிருக்கிறதே—” என்று மூக்கிலே விரலை வைத்தபடி நின்றார்கள், போலீசார்.

“அதோ! அதோ!!” என்று ஒரு போலீஸ்காரர் துள்ளிக் குதித்தார். “என்ன?” என்று எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பினர். ஒரு பெரிய வெட்டரிவாள் அங்கே புதரோரத்தில் கிடந்தது. அதை எடுத்துப் பார்த்தார்கள்; ரத்தம் தோய்ந்த அரிவாள்! ஆம்; சிறிது நேரத்துக்கு முன்புதான் ஏதோ நடந்திருக்கிறது; இல்லாவிட்டால் அந்த அரிவாளில் ரத்தம் சொட்டிக் கொண்டேயிருக்குமா?

ரத்தம் படிந்த அந்த அரிவாளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, இன்னொரு போலீஸ் “அட, இதோ பார்த்தீர்களா?” என்று குதித்தார். அவர் குறிப்பிட்ட பொருளையும் கூர்ந்து கவனித்தார்கள். ஒரு கட்டாரி! ஐயப்பனின் கையிலேயிருந்த கட்டாரி போலத்தானிருந்தது! அதையும் சோதித்து எடுத்துக் கொண்டார்கள்—

“இன்னும் ஏதாவது அகப்படும்—தேடுவோம்” என்ற ஆசையுடன் மீண்டும் சோதனை ஆரம்பமாயிற்று!

இரவு நேரம்—ஒழுங்கு படுத்தப்படாத கொல்லைப் பக்கம்—கல்லும் முள்ளும் நிறைந்த இடம்—அங்கே அடர்ந்திருக்கும் புதர்களிலே போலீசாரின் கண்கள் வட்டமிட ஆரம்பித்தன.

“இதைப் பார்த்தீர்களா?” என்று ஒரு போலீஸ்காரர் வியப்பை வெளியிட்டார். “என்ன? என்ன?” என்று எல்லோரும் ஓடினார்கள். புதரை சற்று விலக்கி, “இதோ பாருங்கள்” என்று காட்டினார். கையிலுள்ள அரிக்கன் விளக்கினது உதவியால், அவர் காட்டியது என்ன என்று தெரிந்துகொள்ள மற்றவர்கள் முயன்றார்கள். ஒரு கை கீழே கிடந்தது! சிகப்பு வர்ணம் பூசப்பட்டதுபோல அந்தக் கை முழுதும் ரத்தத்தால் நனைந்திருந்தது. முழங்கையோடு வெட்டப்பட்டு புதரிடுக்கில் கிடந்த அந்தக் கை, யாருடையதாயிருக்கலாம் என்ற சந்தேகம் பலமாக எழுந்தது போலீசாருக்கு! அனைவரும் வெட்டப்பட்டுக் கிடக்கும் அந்தக் கையைச் சூழ்ந்து கொண்டு, தங்கள் தங்களுக்கு உதயமான யோசனைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

“வாலிபமான மனிதனின் கையாகத் தெரியவில்லையே—சுருக்கங்கள் நிறைய இருக்கின்றனவே!”—இப்படி ஒருவர்!

“இல்லை—இல்லை; வயதான மனிதனின் கையாகத் தெரியவில்லை இது! வாலிபக் கையாகத்தான் தெரிகிறது.”—இது இன்னொருவர்.

“ஏதாவது பச்சை குத்தியிருக்கிறதா, பாருங்கள்!”

“இல்லை—பச்சையும் குத்தவில்லை—சிகப்பும் குத்த வில்லை!”

“ரகளை நடந்திருக்கிறது. ரகளை முடிவில் இந்த வெட்டரிவாளால் கையை வெட்டிப் போட்டிருக்கிறார்கள். அதைத் தவிர நம்மால் வேறெதுவும் சொல்ல முடியாது.”

“இந்தக் கை, பரிமளாவைத் தூக்கிக் கொண்டு வந்தவனுடையதா? அல்லது அவளைக் காப்பாற்ற வந்த வாலிபனுடையதா? பரிமளா குறிப்பிட்ட அந்தக் கிழவனுடையதா?”

இப்படி ஒருவருக்கொருவர் யோசனையை வெளியிட்டு வீணாகக் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள். தாண்டவனுக்கு மனசு, பகீர் பகீர் என்றது. கொலை நடப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகியுள்ள இந்த இடத்திலே, பரிமளா தனியாக அகப்பட்டுக்கொண்டு என்ன கஷ்டப்பட்டாளோ என்ற அதிர்ச்சி தாண்டவனின் இருதயத்திலே தோன்றி மறைந்தது. அவள்மீது அவருக்கு முன்னரே ஏற்பட்டுள்ள சந்தேகம், அந்த அதிர்ச்சியை நீடிக்க விடவில்லை.

“இந்த வெட்டுண்ட கைக்கு உரியவன் யாரென்று எப்படிக் கண்டுபிடிப்பது?”

“அது என்ன பெரிய காரியம்? கை முடமாக யார் அலைகிறானோ; அவனைப் பிடித்து விசாரிப்பது!”

“கை முடமாக ஒருவனா—ஆண்டவன் புண்ணியத்தில் அப்படி ஒன்பதாயிரம் பேர் உலவுகிறார்கள். அதில் யாரையப்பா கண்டுபிடிப்பது?”

“எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. கைதேர்ந்த ரேகை சாஸ்திரியிடம் இந்தக் கையைக் காட்டி, இது யாருடையது என்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே?”

“அப்படியெல்லாம் ரேகை சாஸ்திரி கிடைக்க மாட்டான். அப்படி ரேகை சாஸ்திரிகள் கிடைப்பதாயிருந்தால், போலீசுக்கு உதவியாக நாய்கள் தேவையில்லை—அந்த ஆரூடக்காரர்களே போதும்!”

“இவ்வளவு வம்பு ஏன்?—இப்போது நான் கண்டு பிடிக்கிறேன்; இது யாருடைய கை என்று! இருக்கவே இருக்கிறாள் பரிமளா, அவள் சொல்லட்டும், இது யாருடைய கை என்று!”

“ஆமாம்; அதான் சரி. பரிமளாவுக்குத் தெரியலாம்; இது யாருடைய கை என்று. அவளால் சுலபமாக சொல்ல முடியும்” — இவ்விதம் ஒரு போலீஸ்காரர் ஆமோதிப்பு வழங்கினார்.

“பரிமளா! நீ தான் சொல்லேன்; இது யாருடைய கை?” என்று கேட்டுக்கொண்டே பரிமளாவின் பக்கம் போலீஸ் அதிகாரி திரும்பினார். என்ன ஆச்சரியம்! அங்கே நின்று கொண்டிருந்த பரிமளா, எப்படித்தான் அதை விட்டு நழுவி ஓடி விட்டாளோ தெரியவில்லை. வெட்டுண்ட கையைப் பார்த்து யோசனைகள் பரிமாறிக் கொண்டிருந்த வேளை — இதுதான் நல்ல தருணமென்று அவள் ஓடி விட்டாள். ‘பரிமளா!’ என்று ஆத்திரத்தோடு கத்தினார் தாண்டவன்.

போலீசாருக்கு வேதனையும் வெட்கமும் தாளவில்லை. கஷ்டப்பட்டு அலைந்து திரிந்து, கடைசியில் கையிலே கிடைத்தவளை விட்டு விட்டோமே என்று வருந்தினர்.

“எங்கே போயிருப்பாள்? இப்போதே அவளைத் தேடிப் பிடியுங்கள்!” என்று மற்றவருக்கு உத்திரவு போட்டு விட்டு, போலீஸ் அதிகாரி கன்னத்திலே கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார் சோர்வோடு!

அந்த இருட்டிலே — திக்குத் தெரியாமல் நடந்து கொண்டிருந்தாள் பரிமளா. அத்தானும் கிழவரும் எங்கே போயிருப்பார்கள்? அவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது? கண்டுபிடிக்கும் வேலையில் ஈடுபடும்போது போலீஸ் கையில் சிக்கிவிட்டால்?

இப்படியெல்லாம் பரிமளாவின் இருதயம் குமுறிக் கொண்டேயிருந்தது. கால் போன பக்கமெல்லாம் சென்றாள் — ஓடினாள் — சிறிது நடந்தாள் — மீண்டும் ஓடினாள் — விடிவதற்குள் எங்கேயாவது போய் மறைந்துவிட வேண்டுமென்று திட்டம் போட்டபடி நடந்தாள். அப்படி நடந்து கொண்டிருப்பவளின் நெஞ்சத்தை எதிரொலிப்பதைப் போல், பெருக்கெடுத்தோடும் ஆற்றின் முழக்கம் கேட்டுக் கொண்டிருந்தது. ஊரை விட்டு வெகு தூரம் வந்துவிட்டாள். புதுப்பட்டினம் கிராமத்திற்கும் ராஜா மடம் என்ற ஊருக்கும் இடையிலே உள்ள ஆறுதான் அது! அந்த ஆற்றைக் கடந்துதான் பரிமளா செல்ல வேண்டும். என்ன செய்வது என்று யோசித்தாள். யோசித்துக்கொண்டிருக்கும்போதே, தொலைவிலே யாரோ வருவது தெரிந்தது. ஆம்; இரண்டு பேர்! அவர்கள் பரிமளாவை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள், தன் அத்தானும் — மாயாண்டிக் கிழவருமாக இருக்கக் கூடாதா என்று வருத்தமுற்றாள். அந்த உருவங்கள் பரிமளாவை அணுகின.

“அத்தானைப் போலத்தானிருக்கிறது சாயல்!” — என்று தனக்குத்தானே அவள் ஆறுதல் கூறிக் கொண்டாள். இரு உருவங்களும் இன்னும் அருகாமையிலே வந்துவிட்டன! பரிமளா, கண்கொட்டாமல் அந்த உருவங்களைப் பார்த்துக்கொண்டே நின்றாள்.

கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்