அத்தியாயம் 28 · 29 / 52
அத்தியாயம் 28
Chapter 28
மூல ஸ்கேன் 247 (chapter-28 portion)-254 (chapter-28 portion)
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
28
இங்கே ஆற்றங்கரையிலே அனாதையாக நின்று தவிக்கிறாள் பரிமளா. இந்தப் பரிமளாவைக் காண வேண்டுமென்று மருங்கப்பள்ளத்திலே துக்காராம் தவித்துக் கொண்டிருந்தான். தூதனாகச் சென்ற ராமன் இன்னும் திரும்பி வரவில்லையே என்று வழிமேல் விழிவைத்துக் காத்துக் கிடந்தான். தன்னுடைய காதல் எதிர்பாராத முறையில் வெற்றி கண்டுவிட்டதே என்று தனக்குத்தானே எண்ணி மகிழ்ச்சி யடைந்தான். ஊரிலே பெரிய புள்ளி — வெள்ளியம்பலம் என்றாலே வெட வெடத்துப் போகிறார்கள் ஜனங்கள் — அப்பேற்பட்ட அசகாய சூரன் — கிராமீயப் பிரமுகர் — அவரே தன்னுடைய காதலியின் தலைமைத் தூதராக அமைந்திருக்கிறார் என்றால், தன்னுடைய அதிர்ஷ்டத்தையும், பெருமையையும் எப்படித்தான் வர்ணிப்பது என்று அவனுக்கே புரியவில்லை. பட்டுக்கோட்டைக்கு வந்து தேடிப் பிடித்து, வீட்டிலே உட்கார வைத்து சாப்பாடும் போட்டு, ராஜோபசாரம் செய்து, பரிமளாவிடமும் தூதுபோய் விஷயத்தைச் சொல்லிவிட்டு வந்திருக்கிறார் என்றால் — இதைவிட வேறு யார் தன் காதலுக்காக இவ்வளவு அக்கரை காட்ட முடியும் என்பதை நினைத்து நினைத்து சந்தோஷப் பெருமூச்சு விட்டுக்கொண்டான். பரிமளாவிடம் தூது போன ராமன் இன்னும் திரும்பி வரவில்லை.
“ராமன் அவளிடம் என்ன சொல்லியிருப்பான்? அதற்கு அவள் என்ன பதில் சொல்லியிருப்பாள்? — அவளைப் பிரிந்து, நான் அன்ன ஆகாரமின்றிக் கிடக்கிறேன் என்று சொல்லச் சொன்னேனே — அதைக் கேட்டதும் அவள் என்ன பாடுபடுவாள்? நான் பொய் சொல்லியனுப்பினேன் என்று புரிந்துகொள்வாளா? — உம் — யார் கண்டது? — அவள் என்னைக் காணாமல் எத்தனை நாளாகப் பட்டினி கிடக்கிறாளோ? — கை வளையல்கள் கழன்று விட்டனவோ என்னமோ? — இந்த ராமன் நான் சொன்னதையெல்லாம் என் பரிமளாவிடம் ஒழுங்காக சொல்லியிருப்பானா? — எங்கே பார்க்கலாம்? எப்போது பார்க்கலாம்? — என்று கேட்டு வரச் சொன்னேனே; அதற்கு என்ன பதில் தருகிறாளோ? — அட கடவுளே! — நீ மாத்திரம் நினைத்த அவதாரம் எடுத்து நினைத்த இடத்துக்கெல்லாம் போயிருக்கிறாயே! ஆண் மானும், பெண் மானுமாக — ஆண் யானையும், பெண் யானையுமாக வெல்லாம் உருவம் மாறி உலகத்தார் கண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்திருக்கிறீர்களே; தெய்வங்களே! — அதுபோல நானும் பரிமளாவும் யானையாக மாறாவிட்டாலும், பூனையாகவாவது மாறி ஒருவரையொருவர் சந்தித்து சந்தோஷமாயிருக்க சக்தி அளிக்கக் கூடாதா எங்களுக்கு? — அப்படி மாறினால் ஊரார் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவி விட்டு, இருவரும் இன்பமாக இருப்போமே — ஒரு நாளைக்காவது, ஒரு மணி நேரமாவது, அந்த மாதிரி சக்தியைத் தரக் கூடாதா சண்டாளக் கடவுளே! —
என்ன, இந்த ராமனையும் வரக் காணோம்? பரிமளா சீக்கிரம் விட்டால்தானே அவன் வருவான்! பாவம் — என்னைப் பற்றி அவள் என்னென்ன கேட்டுக் கொண்டிருக்கிறாளோ? காதலனுக்கு காதலியைப் பற்றிப் பிறர் சொல்லக் கேட்பதிலும், காதலிக்கு காதலனைப் பற்றிப் பிறர் சொல்லக் கேட்பதிலுந்தானே தனி ஆனந்தமேயிருக்கிறது! இந்த ராமன் செய்த புண்யங்கூட நான் செய்யவில்லையே! அவனாவது என் பரிமளாவின் அழகான முகத்தை தரிசித்துவிட்டு வருவான்; அதுகூட முடியவில்லையே என்னால் — ராமன் வரட்டும்; அவன் கால்களைத் தொட்டுக் கும்பிடுகிறேன். பரிமளா வீட்டை மிதித்த கால்கள் என்ன, சாமான்யமா?”
இப்படியெல்லாம் தனியாகப் பிதற்றிக் கொண்டே இங்குமங்கும் அலைந்து கொண்டிருந்தான் துக்காராம். பித்தம், முற்றுவதற்குள்ளாக, நல்ல வேளையாக ராமனும் வந்து சேர்ந்தான். “ராமா! ராமா!!” என்று ஆவலோடு கத்திக்கொண்டு அவனிடம் ஓடினான்.
“பார்த்தாயா பரிமளாவை? — கண்டாயா என் கறு கண்ணை?”
“கண்டேன் பரிமளாவை!”
“என்ன சொன்னாள்?”
“அய்யா சோறு தண்ணியில்லாமல் கிடக்கிறாரு — வயிற்றுக்குள் ஆகாரம் இறங்குவதில்லை என்று சொன்னேன்.”
“அதற்கு அவள் என்ன சொன்னாள்?”
“ஜீரணத்துக்கு மருந்து சாப்பிடச் சொன்னது!”
“ஆகா, எவ்வளவு கவலை என்னைப்பற்றி! — ஏ, ராமா! நீ சொல்வதுதானே; மருந்து வைத்தியனிடமில்லே, உன் கிட்டம்தான் இருக்கிறதென்று!”
“சொல்லாமல் இருப்பேனா? என்னிடம் மருந்து இருக்கிறது என்று சொன்னேன். அப்படின்னு அதையே அய்யாவுக்குக் கொடுன்னு சொன்னது.”
“உன்னிடமா? அட பைத்தியம், என்னுடைய நோயைத் தீர்க்கக் கூடிய மருந்து பரிமளாவிடம்தான் இருக்கிறது என்று சொல்லியிருக்க வேண்டும்!”
“ஓகோ, அப்படியா? அந்தப் பெண்ணு டாக்டர் வேலைக்கு படிச்ச விஷயம் எனக்குத் தெரியாது. அடுத்த தடவை போகும்போது சொல்லி விடுகிறேன்.”
“ராமா — பரிமளா எப்படி இருக்கிறாள்?”
“ரொம்ப அழகாக!”
“அதிருக்கட்டும், என்னைப்பற்றி என்ன சொன்னாள்? எங்கே, எப்போது சந்திக்கலாம் என்று சொன்னாள்?”
“உங்களை சந்திக்கணும்னு அந்தப் பெண்ணு துடிக்குது!”
“அப்படியா? ஆகா, என் ஆருயிரே! இன்பவல்லி! துடிக்கிறாயா? நான் என்ன செய்வேன்? உன்னை எப்படி சந்திப்பேன்?”
“சந்திக்க வழி சொல்லியிருக்கு!”
“சொன்னாளா? வழி சொன்னாளா? ராமா, சீக்கிரம் சொல்லு அந்த வழியை!”
“ராத்திரி, ஊரு அடங்கின பிறகு, இரண்டு பேரும் சந்திக்கிறதாம்!”
“பலே! பலே! எந்த இடத்தில் ராமா?”
“இந்த ஊரிலே ஒரு சிவன் கோயில் இருக்கே; தெரியுமா?”
“ஆமாம் — வரும்போது பார்த்தேன்.”
“அந்தக் கோயில் பக்கம் உங்களை வரச் சொன்னது, இன்னைக்கு ராத்திரிக்கு!”
“ஆகா! ஆகா! ராமா, இந்த சேதி கொண்டு வந்த உனக்கு நான் என்ன கொடுக்கப் போகிறேன்? கவலைப்படாதே; நான் எழுதிய காதல் புஸ்தகங்கள் அச்சானதும், உனக்கு ஒரு ஐம்பது புஸ்தகம் இனாமா அனுப்பி வைக்கிறேன்!”
“ஆமாம்; அனுப்புங்க. தலையணை இல்லாம ரொம்ப கஷ்டமாயிருக்கு எனக்கும்!”
“அப்படின்னு ராமா, இன்னைக்கு ராத்திரி ஊர் அடங்கினவுடனே சிவன் கோயில் பக்கம் போனு — அங்கே என்னுடைய காதலி வருவாள்!”
“ஆமாம்!”
“காதல் வாழ்க! — காதலர் வாழ்க!!”
இரவு எப்போது வரும், எப்போது வரும் என்று ஏங்கிக் கொண்டிருந்தான் துக்காராம். மாலையிலே ராமன் போட்டுத் தந்த பனை வெல்லக் காபிகூட அவனுக்கு இனிப்பைத் தரவில்லை. இரவு அருமையான விரால் மீனும், வயல் நண்டும் போட்டு குழம்பு வைத்தான் ராமன். அதையெல்லாம் சுவைப்பதற்கு, துக்காராம் தயாராக இல்லை. அவனுடைய இருதயம் ‘பட பட’ வென்று அடித்துக் கொண்டிருந்தது. எத்தனையோ முறை நேரிலே கண்டிருந்தாலும், மனம் விட்டுப் பேசப் போகிற முதல் நாள் இதுதான் என்று எண்ணியபோது அவனுக்கு ஒரு இடத்தில் இருப்புக் கொடுக்கவில்லை. ஊர் அடங்கிவிட்டதா இல்லையா — என்று மிக உன்னிப்பாக கவனித்தபடியிருந்தான்.
சேரிச் சிறுவர்கள் தமுக்கு அடித்து விளையாடிக் கொண்டிருந்த சப்தம் அவன் காதைத் துளைத்தது. எங்கேயோ ஒரு மூலையில் சிலர் கூடிக்கொண்டு ரதி மன்மதன் லாவணி பாடிக்கொண்டு கூத்தடித்த ஒலியும் அவனுக்குக் கர்ண கடூரமாக இருந்தது.
சிறிது சிறிதாக அந்த ஒலிகள் குறைந்து, ஊரிலே அமைதி நிலவ ஆரம்பித்தது. துக்காராம் சிவன் கோயிலை நோக்கிப் புறப்பட்டான், தன் காதலியைக் காண்பதற்காக!
“நாம் போன பிறகுதான் வருவாளோ? அல்லது நமக்கு முன்பு காத்துக் கொண்டிருக்கிறாளோ — அய்யோ! அப்படிக் காத்துக்கொண்டிருந்தால் அவள் காலெல்லாம் வலியெடுத்திருக்குமே; நாம் போனதும் முதல் வேலை, அவள் காலை அமுக்கி வலியைத் தீர்ப்பதுதான் — ஆகாகா — அவளைப் பார்த்ததும் என்ன பேசுவது? அவள்தான் என்ன பேசுவாள்?” —
இவ்வாறு சிந்தனை செய்தபடி அவன் கோயில் பக்கம் வந்து சேர்ந்தான். அவன் எதிர்பார்த்தபடி அங்கே பரிமளாவைக் காணவில்லை. நல்ல இருட்டு! கண்களை அகலத் திறந்து சுற்று முற்றும் பார்த்தான். யாருமில்லை. மெதுவாகக் கனைத்தான். “பரிமளா” என்று மெல்லிய குரலில் கூப்பிட்டுப் பார்த்தான் — பதில் இல்லை. மரங்களின் சலசலப்பும் — தவளையின் கத்தலும் — பூச்சிகளின் இரைச்சலும் — ஒரு பயங்கரமான சூழ்நிலையை அவனுக்கு நினைவுபடுத்தின. மீண்டும் ஒரு முறை “பரிமளா” என்று கூப்பிட்டான். பதில் இல்லை. ஆனால், யாரோ கனைத்ததுபோல் தெரிந்தது — அவள்தான் என்று ஆவலோடு எதிர்பார்த்தான். யாரும் வரவில்லை — மறுபடியும் மெதுவாக — “பரிமளா!” என்று அழைத்தான். கலகலவென்று யாரோ சிரித்தார்கள். அந்தச் சிரிப்பிலே குளிர்ச்சி இல்லை. கொடுமை நிறைந்திருந்தது. மிகப் பயங்கரமான சிரிப்பு — துக்காராமுக்குத் தூக்கி வாரிப் போட்டது — இருதயத்தைக் கைகளால் அழுத்திக் கொண்டு அசைவற்று மரம் போல் நின்றான்.
“அகப்பட்டுக் கொண்டாயா?” என்று ஒரு கரகரப்பான குரல் கிளம்பியது.
“யார்? யார் அது?” என்று அழுதபடி அலறினான் பரிதாபத்துக்குரிய துக்காராம்.
“யாரா? நான்தான் பூதம்!”
“பூதமா? அய்யோ, பூதமா?” — கை கால்கள் தட்டி விட்ட வீணைத் தந்திகள் போல் அதிர்ந்தன அவனுக்கு.
“பூதம்தான்—புதையலைக் காக்கும் பூதம் நான்தான்!”
“பூதம் — பூதம்” என்று கத்திக்கொண்டே துக்காராம் ஓடினான்.
“ஓடாதே — நில்! பூதத்தின் உத்திரவை மீறினால் உன்னைப் பொடி செய்து சாப்பிட்டு விடுவேன்” என்று அதட்டியது அந்தக் குரல்.
துக்காராம் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டான் — உடலெங்கும் வியர்வை கொட்டிற்று—ஏதேதோ உளறினான், அவனையறியாமல்!
கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்