அத்தியாயம் 29 · 30 / 52
அத்தியாயம் 29
Chapter 29
மூல ஸ்கேன் 254 (chapter-29 portion)-262 (chapter-29 portion)
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
29
பூதம் தன்னை அப்படியே விழுங்கி ஏப்பம் விடப் போகிறது என்று கற்பனை செய்துகொண்டே, துக்காராம் “என்னை விட்டு விடு!” என்று கத்தினான்.
“உன்னை மட்டுமல்ல; இதோ உன் காதலி பரிமளாவையும் பிடித்து வைத்திருக்கிறேன். இப்போது உங்கள் இருவரையும் பஸ்பமாக்கிவிடப் போகிறேன்” என்று பயமுறுத்தியது அந்தக் குரல்.
“அய்யோ, என் கண்மணி பரிமளா! நீயும் அகப்பட்டுக் கொண்டாயா? பூதமே! உனக்குப் புண்யமுண்டு. என் காதலியை விட்டு விடு. நாங்கள் இருவரும் எங்கேயாவது ஓடி விடுகிறோம். இனிமேல் இந்த இடத்திற்கு வரவே மாட்டோம்” — இப்படிக் கெஞ்சினான் துக்காராம்.
“உங்களிருவரையும் விட்டு விடுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை” என்று முரட்டுக் குரல் பிறந்தது.
“என்ன நிபந்தனையானாலும் சரி — கேட்கிறேன். உம், என்ன நிபந்தனை விதிக்கப் போகிறாய் என்று எனக்குப் புரியும். நாங்களிருவரும் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் — இப்படியெல்லாம் கள்ளக் காதல் செய்யக் கூடாது—என்று நிபந்தனை போடுவாய்—போடு!” என்று துக்காராம் சிறிது தைரியமாகப் பேசினான்.
அவன் ‘போடு’ என்று சொல்லி முடிப்பதற்குள் அவன் முதுகில் ‘படார்’ என்று கம்பால் ஒரு அடி விழுந்தது.
‘அய்யோ!’ என்று அலறியபடி துக்காராம் துள்ளிக் குதித்தான். தப்பிவிடலாம் என்கின்ற நம்பிக்கை சிறிது உதயமாகி, அதுவும் கருவிலேயே சிதைந்து விட்டதாக உணர்ந்தான்.
“அடே, மனிதப் பூச்சியே! நிபந்தனையைக் கேளடா மடையனே!”
“கேட்கிறேன் சாமி, கேட்கிறேன். சொல்லு!”
“தங்கம் எங்கே கிடைக்கும்? அதை உடனே சொல்!”
“இது என்ன பூகோள பரிக்ஷையா? தங்கம் கோலாரில் கிடைக்கும்.”
“யாரை ஏமாற்றுகிறாய்? வீணே சாகாதே! உண்மையைச் சொல்!”
“அய்யய்யோ! உண்மையா கோலாருதான்!”
“என்ன?”
துக்காராமின் முதுகில் மீண்டும் ஒரு பலமான அடி விழுந்தது.
“அம்மாடி! இது என்ன கோளாறு! இப்படி வந்து மாட்டிக்கிட்டேனே; அய்யா, பூதமே! என்னை விட்டுடு சாமி! வேணும்னா பரிமளாவை நீயே வச்சுக்க. எனக்கு உயிரைக் கொடுத்தா போதும். ஓடி விடுவேன்” — துக்காராம் கீழே விழுந்து தெண்டனிட்டபடி அழ ஆரம்பித்தான்.
“என்னை ஏய்க்க உன்னால் முடியாது. மரியாதையாகச் சொல்லி விடு: தங்கம் இந்த இடத்திலே இருக்கிறது — அது எனக்குத் தெரியும் — அது எந்த இடம் என்று எனக்குக் குறிப்பாகக் காட்டிவிடு!”
“தங்கமாவது, இரும்பாவது; எனக்கு ஒண்ணும் தெரியாது!”
“பொய்! பொய்!! தங்கம் புதைக்கப்பட்டிருக்கிற இடம், உனக்கு நன்றாகத் தெரியும் — அதைச் சொல்லி விடு! இல்லாவிட்டால் உன் முதுகுத் தோலை உரித்து செருப்புத் தைத்து விடுவேன்.”
“ஓகோகோ! நீ சக்கிலிய பூதமா? சாமீ! சாமீ! உனக்கு செருப்பு வேணும்னா ஆயிரம் செருப்பு நான் வாங்கித் தர்றேன். வீணா என் தோலை உரிச்சுடாதே!”
“தோலை மட்டும் உரிக்க மாட்டேன்; காலையும் முறித்து விடுவேன். சுளை போல உன் கண்களைப் பிடுங்கி விடுவேன். பனங்காய் போல் தலையைத் திருகி விடுவேன்; என்ன சொல்லுகிறாய்? தங்கம் இருக்கிற இடத்தை காட்டுகிறாயா?”
“இது என்னா வீண் வம்பு! — தங்கம்னா என்னா? வளையல் செய்ற பொன்னா? அல்லது வளையல் போட்டுக்கிற பெண்ணா?”
“பொன்! பொன்!! அது இந்த மண்ணிலே ஒளிஞ்சுகிட்டு இருக்கு — அதைத்தான் நீ காட்டவேண்டுமென்று கட்டளையிடுகிறேன்.”
“புரியுது—புரியுது. ஏதோ ஒரு சாக்குச் சொல்லி, என் மேல குற்றம் சாட்டி கொன்று சாப்பிட திட்டம் போட்டு விட்டாய்! இத பாரு! இப்படியெல்லாம் என்னை வம்புக்கு இழுக்காதே! நான் ஏதோ காதல் மயக்கத்திலே வழி தவறி வந்துட்டேன். எனக்கு விடை கொடு—முடிஞ்சா பரிமளாவையும் கொடு — இல்லேன்னா என்னை மட்டும் விடு!”
“சரி! உனக்கு நேரம் நெருங்கி விட்டது. உன்னை என் வயிற்றுக்குள் போட வேண்டியதுதான் —”
இந்த வார்த்தைகளைக் கேட்டதுதான் தாமதம்; என்ன வந்தாலும் சரியென்று துக்காராம் ஓட ஆரம்பித்தான்.
“எங்கேடா ஓடுகிறாய்?” என்று கூச்சலுடன் அவன் தோள் பட்டையை ஒரு கை அழுத்தியது. அதையும் திமிறிக்கொண்டு அவன் ஓடப் பார்த்தான். தலையில் ‘மளார்’ என்று ஒரு அடி விழுந்தது. அதையும் தாங்கிக் கொண்டு அவன் ஓடினான். அவனது சட்டையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டது அந்த முரட்டுக் கை.
துக்காராம், செத்துவிட்டது போன்ற உணர்ச்சியோடு அசைவற்று நின்றான். தன் எதிரே நிற்கிறது அந்தப் பூதம் என்ற எண்ணத்தில் கண்களை இறுக்கி மூடிக் கொண்டான். “டேய் துக்காராம்! என்னைத் தெரிகிறதா உனக்கு? பார்! கண்ணைத் திறந்து பார்!” என்று அந்தக் குரல் அவனை இன்னும் அஞ்சிட வைத்தது. சாவதுதான் சாகிறோம்; பூதத்தின் கையிலே சிக்கியிருக்கும் பரிமளாவை கடைசியாக ஒரு முறை பார்த்து விட்டுச் சாவோமே—என்னும் முடிவுடன் துக்காராம் தன் கண்களை மெதுவாகத் திறந்தான். தன் எதிரே நிற்பது யார் என்று சந்தேகத்தால் கண்களை சிமிட்டி சிமிட்டி ஊன்றிக் கவனித்தான்.
அவன் கற்பனை செய்திருந்த பூதமோ — சால் போன்ற வயிறும், குகை போன்ற வாயும், மரம் போன்ற கைகளுமுடைய ஒரு மாமிச பர்வதமாகும்.
ஆனால், இப்போது அவன் எதிரே பார்ப்பதோ நினைத்ததற்கு மாறான உருவம்! நன்றாகப் பார்த்தான். இருட்டிலே தோற்றமளிக்கும் அந்த பயங்கர சொரூபம் பூதமல்ல; வெள்ளியம்பலம்தான் என்ற தீர்மானத்திற்கு வந்துவிட்டான் என்பதை அவனது ஆழமான பெருமூச்சு எடுத்துக் காட்டியது. பூதம் என்ற சொல் கேட்டு அடைந்த திகிலைவிட அதிகமான திகில் அடைந்தான், வெள்ளியம்பலம் எனக் கண்டபோது! வெள்ளியம்பலம் தன்னை இப்படி மிரட்டுவானேன் — தங்கம் இருக்கும் இடத்தைக் காட்டு என்று கத்துவானேன் — இவ்வளவு கொடுமையாகத் தன்னை நடத்துவானேன் — என்று யோசித்தான். பரிமளா என்ற பெயரைச் சொல்லி, தன்னை யாரோ ஒரு கொலைகாரன் ஏமாற்றி விட்டான் என்ற உண்மையைப் புரிந்துகொண்ட பிறகுதான், தன்னை பரிமளா காதலிக்க வில்லையே என்ற பழைய நினைவுகளும் வரத் தலைப்பட்டன. “அப்போதே நினைத்தேன்; தனக்கும் பரிமளாவுக்கும் காதல் வளருவதற்கு இந்த மனிதர் இப்படி கஷ்டப் படுவானேன் என்று! இப்போதல்லவா புரிகிறது அது! அய்யோ, தெளிவு பிறக்கிற நேரம், உயிர் போகிற நேரமாயிருக்கிறதே!” — இதையெண்ணி மனதுக்குள் புலம்பித் துடித்தான், அந்தப் பரிதாபத்திற்குரிய வாலிபன். அவனுடைய இரங்கத்தக்க நிலையை பரிமளாவே நேரில் பார்த்திருந்தால்கூட வருத்தப்பட்டிருப்பாள்; ஏன் பாவம் அநாவசியமாக அவனைக் காட்டிக் கொடுத்தோமென்று!
“ஐயா! என்னய்யா இதெல்லாம்: எனக்கு ஒண்ணுமே விளங்கலியே!” — கெஞ்சும் தோரணையில் கேட்டான், வெள்ளியம்பலத்தைப் பார்த்து!
“நான் பூதமென்றேனே, அது உண்மைதான்! இங்கேயிருக்கும் புதையலைக் காக்கும் பூதம் நானே தான்.”
“அய்யய்யோ! இது என்ன மறுபடியும் அதிர் வேட்டு போடுறே சாமி! ராத்திரியிலே பூதம்; பகலிலே மனுஷனா?”
“கேளப்பா! பைத்தியக்காரனைப் போல் நடித்து என்னை இளிச்சவாயனாக்க முடியாது உன்னாலே! உயிர்மேல் உனக்கு ஆசையிருந்தா ஒழுங்கா உண்மையைக் கக்கி விடு!”
“வயிறே காலியாக இருக்கும்போது, எப்படி அய்யா கக்குவது? என்னமோ எனக்கு உண்மையெல்லாம் அஜீர்ணமாகிக் கிடக்கிற மாதிரி பேசுறீங்களே!”
“டே, பேச்சாளி! கதையெல்லாம் அளக்காதே! தங்கம் புதைக்கப்பட்டிருக்கிற இடத்தை மறைக்காம சொல்லி விடு!”
“அட கர்மமே; தங்கமாவது! மண்ணாங் கட்டியாவது! எனக்கு ஒன்றுமே விளங்க வில்லையே! அட கடவுளே! இது என்னப்பா சோதனை — என்னப்பா வேதனை!”
“இந்த பாரு—பயப்படாதே! நயமாவே கேட்கிறேன், சொல்லு! நம்ப ரெண்டு பேருமே கூட்டா சேர்ந்து புதையலை எடுப்போம்; யாருக்கும் தெரியாம அதை பாதுகாத்து பணக்காரனாவோம்! தம்பீ, துக்காராம்; உண்மை உன்னிடமிருக்கிறது; உழைப்பு என்னிடமிருக்கிறது! உண்மையையும், உழைப்பையும் ஒன்றாய்ப் பிசைந்து ஒற்றுமையாக காரியம் செய்தால், இந்த உலகத்திலேயே இரண்டே பணக்காரர்கள் தான் இருப்பார்கள். ஒன்று நீ! அடுத்தது நான்! என்ன சொல்லுகிறாய்?”
“அய்யா — நான் உண்மையைச் சொல்லட்டுமா?”
“சொல்லு தம்பீ சொல்லு! நல்ல பிள்ளையாண்டானல்லவா நீ — சொல்லுப்பா சொல்லு!”
“உண்மையாவே ஒரு உண்மையும் எனக்குத் தெரியாது பராபரமே!”
“பார்த்தாயா வாலாட்டுகிறாய்! ஏய் திமிர் பிடித்தவனே — கையிலே என்ன இருக்கிறது பார்!”
வெள்ளியம்பலம் ஒரு பாளை சீவும் அரிவாளை எடுத்து உயர்த்திக் காட்டினார். அதைக் கண்ட துக்காராம் விழி பிதுங்கும் அளவுக்கு பயந்து போய் நின்றான்.
“புதையல் ரகசியம் உன்னிடம்தான் இருக்கிறது. நீ சொல்லாவிட்டால் இப்போதே உன் தலையைத் துண்டாடுவேன். ம், சீக்கிரம் சொல்லு!”
துக்காராம், இனித் தான் மீள முடியாது என்பதை திண்ணமாக உணர்ந்து கொண்டான். தந்திரத்தை தந்திரத்தால் வெல்லலாம் என்ற ஒரு அணுவளவு யோசனை அவன் மூளையில் உதித்தது. அதையும் செய்து பார்த்து விடுவோம் என்ற முடிவோடு, துக்காராம் நடிக்க ஆரம்பித்தான்.
“ஐயாவே! கோபிக்காதீர்கள். உயிர் போய் விடுமென்ற பிறகு உண்மையைச் சொல்லாமல் இருப்பேனா? இதோ சொல்லி விடுகிறேன் — புதையல் ரகசியம் என்னிடந்தான் இருக்கிறது.”
“சொல்லு! சொல்லு! புத்தியுள்ள பயலே! இப்போதே சொல்லு!”
“அதைச் சொல்ல முடியாது!”
“ஏன்!”
“கொடுக்க வேண்டும்!”
“அப்படின்னா?”
“ஆமாம்; அந்த ரகசியம் ஒரு சாமியாரிடத்திலே இருக்கின்றது. எனக்கும் அந்த சாமியாருக்குத்தான் அந்த ரகசியம் தெரியும்.”
“ஏய்—ஏய்—பொய் சொல்லுகிறாயா? ‘தங்கம் இந்த மாமரத்தடியில் தான் புதைக்கப்பட்டிருக்கிறது’ என்று நீ உன் காதலியிடம் சொன்னதை நான் இந்தக் காதாரக் கேட்டேன்.”
துக்காராமுக்கு ஒன்றும் புரியாவிட்டாலும் சமாளித்துக் கொண்டான். யாரோ பேசியதை வெள்ளியம்பலம் கேட்டு விட்டு, எப்படியோ தவழுகத் தன்னை இழுத்து வந்து உயிரை வாங்குகிறான் என்றும், அந்த இடத்திலே இருக்கும் புதையலுக்காகத்தான் அவன் இப்படிப் படாத பாடு படுகிறான் என்றும், விளங்கிக் கொண்ட அவனுக்கு அவனை ஏமாற்றுவது எளிதாகவே தோன்றியது.
“புதையல் இங்கேயிருப்பது உண்மைதான்—மாமரத்தடி என்றும் சரிதான் — ஆனால் ஒன்று; அந்தப் புதையல் வெளியே கிளம்ப வேண்டுமானால், அதற்கு ஒரு தகடு வைத்து மந்திரம் ஜெபிக்க வேண்டும். அந்த மந்திரத் தகடு இல்லாமல் புதையல் இருக்குமிடத்தைத் தோண்டினால்; அவ்வளவுதான் — ஆள்பாடு ஆயிடும்” — என்பதாக துக்காராம் அளந்து கொட்டினான்.
“அந்த மந்திரத் தகடு எங்கேயிருக்கு தம்பீ?”
“அது அந்தச் சாமியாரிடம் இருக்கிறது!”
“அந்தச் சாமியார் எங்கேயிருக்கிறார்?”
“அதைச் சொன்னால் மந்திரம் பலிக்காது. என்னோடு வாங்க; அவரை உங்களுக்கு நேராவே காட்டுகிறேன்.”
“சரி, இப்போதே போவோமா? உடனே அவரிடம் அந்தத் தகட்டை வாங்கலாமா?”
“ஓ — பேஷாக வாங்கலாம். இப்போதே போகலாம்; வாருங்கள் போகலாம்.”
துக்காராமின் பேச்சைக் கேட்டு வெள்ளியம்பலம் அவனுடன் நடக்க ஆரம்பித்தார். துக்காராம் அந்த இருட்டில் கால் போன பக்கமெல்லாம் போய்க் கொண்டிருந்தான்.
இரவு முழுதும் அவரைத் தன் பின்னால் நடக்க வைத்து, எப்படியாவது இரவை ஓட்டிவிட்டால், விடிந்ததும் தப்பித்துக் கொள்ளலாம் என்கிற ஒரே முடிவோடு தான் துக்காராம் இந்தத் தந்திரத்தைக் கையாண்டான்.
இதைப் புரிந்துகொள்ளாத வெள்ளியம்பலமும், புதையலை எடுக்கப் போகிறோம் என்ற பூரிப்போடு, கால் வலியையும் கவனிக்காமல் அவனைப் பின் தொடர்ந்தபடி யிருந்தார். மருங்கப்பள்ளத்திலிருந்து, புதுப்பட்டினம் செல்லுகிற குறுக்குப் பாதையிலே, துக்காராம் நடந்தான்; அவரும் தொடர்ந்தார்; தனக்கு முன்னே ஒரு பலிக் கடா நடக்கிறது என்ற இறுமாப்பான எண்ணத்துடனேயே வெள்ளியம்பலம் அவனைத் தொடர்ந்தார். நடந்து, நடந்து புதுப்பட்டினத்தையும் கடந்து விட்டார்கள். இரவு, சீக்கிரம் தொலைய மாட்டேன் என்கிறதே எனும் முணுமுணுப்புடன் துக்காராம் முன்னோக்கி கால் வைத்துக் கொண்டிருந்தான். அவர்கள் எதிரே ஆறு குறுக்கிட்டது. ஆம்; புதுப்பட்டினத்திற்கும் ராஜாமடத்திற்கும் இடையிலே உள்ள ஆறுதான் அது. ஆற்றங்கரையோரமாக வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எதிரே தன்னந் தனியாக ஒரு உருவம் வருவதைக் கண்டார்கள். அதை நோக்கி அடியெடுத்து வைத்தார்கள். அது ஒரு பெண்ணின் உருவம்!
“பரிமளாவைப் போலிருக்கிறதே” என்று கூறினான், துக்காராம்!
“சரியாகத் தெரியவில்லை. அவளைப் போலத்தான் இருக்கிறது சாயல்” என்றார் வெள்ளியம்பலம்.
கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்