அத்தியாயம் 30 · 31 / 52
அத்தியாயம் 30
Chapter 30
மூல ஸ்கேன் 262 (chapter-30 portion)-271 (chapter-30 portion)
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
30
அத்தானும், கிழவருந்தான் வருகிறார்களோ என்று ஆவலோடு நோக்கிய பரிமளா, துக்காராமையும், வெள்ளியம்பலத்தையும் கண்டு நடுங்கினாள். துக்காராமுக்கோ, ஆனந்தம் தாங்கவில்லை. வெள்ளியம்பலத்தின் கையிலே சிக்கி, எவ்வளவு பெரிய ஆபத்திலே அகப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதையும் மறந்து, துக்காராம் குதித்தான். “பரிமளா! நீயா? இங்கே எப்படி வந்தாய், என் அன்பே!” என்று கத்தினான். அவனது சரச மொழிகளை மறுத்துப் பேசும் தைரியம் பரிமளாவுக்கு வரவில்லை. அன்றிரவு மனோராவிலே நடந்தவைகள் அவள் மறந்து விடவில்லை.
தூக்கத்திலேயிருந்த தன்னை தூக்கிக்கொண்டு வந்து மனோராவிலே வெள்ளியம்பலம் பயமுறுத்தியதும், காதலனின் பெயரைச் சொல் என்று கட்டளையிட்டதும், கனல் விழி காட்டியதும், காதலன் பெயர் ‘துக்காராம்’ என்று தான் தந்திரமாகப் பொய் கூறியதும், அவள் நினைவிலே அடுக்கடுக்காக வந்தன.
“காதலன் துக்காராம்” என்று வெள்ளியம்பலத்திடம் சொல்லி விட்டு, இப்போது துக்காராமைப் பார்த்து, “தூ, போடா தூர!” என்று துடுக்கு மொழி கூறினால், அம்பலத்திடம் கூறிய பொய் அம்பலமாகிவிடுமே என்று பயந்தாள். அதனால் துக்காராமை அவள் அன்போடு நோக்க வேண்டியதாயிற்று.
“நீங்கள் இந்நேரத்தில் எங்கேயிருந்து வருகிறீர்கள்?” என்று அவனைப் பார்த்துக் கேட்டாள். “நானா? நான்...... நான்......” என்று அவன் இழுத்தான். பற்களெல்லாம் வெளியே தெரியும்படி இளித்தான். வெள்ளியம்பலத்தின் நிலைமையும் இப்போது நெருக்கடியாகத்தான் போய் விட்டது. புதையலைக் கண்டுபிடிப்பதற்காகவே துக்காராமைப் பயன்படுத்துகிறோம் என்ற ரகசியம் பரிமளாவுக்குத் தெரிந்துவிடக் கூடாதே — தெரிந்தால் விஷயம் ஊரெங்கும் பரவி விடுமே என்று அஞ்சினார் அவர்!
பரிமளா அந்த நேரத்தில் அங்கு வரவேண்டிய காரணமும் அவருக்குப் புரியவில்லை. அதைத் தெரிந்து கொள்ள விரும்பி, “நீ எப்படி பரிமளா இங்கு வந்தாய், இந்நேரத்தில்?” என்று கேட்டார்.
“தெரியாதா உங்களுக்கு?—அன்றிரவு வீட்டிலிருந்து வந்தேனே......”
இதை அவள் சொல்லி முடிப்பதற்குள், “ஓகோ, சரி! சரி!” என்று உரக்கக் கூவி அவள் பேச்சை நிறுத்தினார் வெள்ளியம்பலம். எங்கே, அவள் விஷயம் முழுவதையும் துக்காராமிடம் கூறி விடுவாளோ என்று அச்சம் அவருக்குப் பிறந்தது. அதனால் அதற்குமேல் அவளை அவர் பேச விடவில்லை.
துக்காராம் சும்மாயிருப்பானா?
“ஏன் பரிமளா, என்னை சிவன் கோயில் பக்கம் வரச் சொல்லி விட்டு, வராமல் இருந்துவிட்டாய்?” என்று ஆவலோடு கேட்டான். பரிமளாவுக்கு அந்தக் கேள்வி புரியவில்லை — விழித்தாள்!
“என்னா — தெரியாது மாதிரி விழிக்கிறே? இவரு வேலைக்காரன் ராமனிடம் சொல்லி அனுப்பினாயா — இல்லையா?”
பரிமளா, இப்போது அதிகமாகவே திகைத்தாள். நிலைமை முற்றிவிடக் கூடாதே என்று எண்ணிய வெள்ளியம்பலம்,
“சரி — சரி — கதையெல்லாம் அப்புறம் பேசுவோம். முதல்ல நடக்கவேண்டிய காரியத்தை கவனிப்போம்!” என்று தீர்மானமாகப் பேசினார்.
“இருங்க! ரொம்ப நாளைக்குப் பிறகு, காதலர்கள் சந்தித்திருக்கிறோம். பேசக்கூட விடமாட்டேங்கிறீர்களே!”
துக்காராம் கோபித்துக் கொண்டான்.
“என்னுடைய காரியத்தை முடித்துவிட்டு, பிறகு வருஷக் கணக்கில் பேசுங்களேன். யார் வேண்டாமென்றது?”
“உங்க காரியத்தை காலையிலே முடிக்கலாமே!”
“அதெல்லாம் முடியாது தம்பி! இப்போதே முடிக்க வேண்டும்.”
“மாட்டேன் — என்ன செய்வீர்?” — துக்காராம், தனக்கு ஒரு துணையிருக்கிறது என்ற தைரியத்தில் இப்படிப் பேசினான். உள்ளபடியே பரிமளா அவனை நேசிப்பதாக இவ்வளவுக்குப் பிறகும் அவன் நம்பினான் — பாவம்! பட்டுக்கோட்டையிலே வெள்ளியம்பலம் தன்னை சந்தித்த போது, பரிமளா தன்னைக் காதலிப்பதாக எண்ணியதே பைத்தியக்காரத்தனம் — அதன் பிறகு மருங்கப்பள்ளம் கிராமத்திலே ராமதாஸ் வந்து கூறியது கேட்டு கூத்தாடியது அதைவிட பைத்தியக்காரத்தனம் — புதையல் ரகசியம் அறிவதற்காக, பரிமளா பெயரை உபயோகப்படுத்தி, தன்னை ஏமாற்றி விட்டார் வெள்ளியம்பலம் என்று முடிவுக்கு வந்தவன், இப்போது நேரே அவளைக் கண்டதும், அவளைத் தன் காதலியாகவே எண்ணிக் கொண்டு இணையில்லாத பைத்தியக்காரத்தனம். தனக்கும் அவளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை — எந்தவிதமான பேச்சுமில்லை — காதல் கடிதப் போக்குவரத்தும் ஏற்பட்டதில்லை — கண் ஜாடை கூட இருந்ததில்லை — அப்படியிருந்தும், ஆயுளுக்கே முடிவு தேடும் ஆபத்து அவள் பெயரால் வந்தும் — அவன் காதல் போதையிலே தடுமாறினான்.
பளபளப்பான கத்தி, வெள்ளியம்பலத்தின் இடுப்பிலே இருக்கிறது என்பதை மறந்து அவரை எதிர்த்துப் பேசினான் — ‘மாட்டேன்! முடியாது!’ என்றெல்லாம்!
வெள்ளியம்பலத்திற்கு ஆத்திரம் பொங்கியது. ஒரே குத்தாகக் குத்தி அவனைக் கொன்று விடக்கூட நினைத்தார். அந்த நினைப்பை ‘புதையல்’ தடுத்தது. ஆத்திரத்தை அடக்கிக் கொண்டார்.
“சரிதான் தம்பி — வா! நம்ப வேலையை முடிச்சுட்டா, அப்புறம் நிம்மதியா இருக்கலாம் பாரு!”
இவர்கள் எதைப்பற்றி பேசிக் கொள்கிறார்கள் என்று பரிமளாவுக்குப் புரியவில்லை. அவள் அத்தானையும், கிழவரையும் நினைத்து நினைத்து ஏங்கினாள். இடையிலே முரடனும், முட்டாளும் குறுக்கிட்டு விட்டார்களே என்று மனம் புழுங்கினாள். அவர்களிடமிருந்து எப்படித் தப்புவது என யோசித்தாள்.
“நீங்களிருவரும் போய் உங்கள் வேலையைக் கவனித்து விட்டு வாருங்களேன். நான் இங்கேயே இருக்கிறேன்” என்று கூறிப் பார்த்தாள்.
“அதுவே சரி! நீ இங்கேயே இரு. நாங்கள் இதோ வந்து விடுகிறோம்” என்று கிளம்பினார், வெள்ளியம்பலம்.
துக்காராமுக்கோ அதில் இஷ்டமில்லை. ஏனெனில் அவனுக்கு உயிர்விட இஷ்டமில்லை; அதனால்தான்! பரிமளாவிடம் விஷயத்தைக் கூறிவிட எண்ணினான்.
“பரிமளா! — வேலையொன்றும் பிரமாதமில்லை. புதையல் ரகசியம் ஒரு சாமியாரிடமிருக்கிறது......” என்று துவங்கினான். அதற்குள் வெள்ளியம்பலம் தாண்டிக் குதித்து, “சொல்லாதே — போதும் நிறுத்து!” என்று கத்தினார்.
“அட இருங்கய்யா! என் காதலியிடம் சொன்னால் தப்பு ஒன்றுமில்லை. புதையலை, ஆளுக்குப் பாதி எடுத்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறோம். அதில், என் பாதியை நானும் என் காதலி பரிமளாவுந்தானே அனுபவிக்க வேண்டும்!”
“அதை வேண்டாமென்று நான் சொல்லவில்லையப்பா! பாதிப் புதையலை பரிமளாவும் நீயும் தாராளமாக அனுபவியுங்கள். அதற்காக அந்த ரகசியத்தை அவளிடம் சொல்ல வேண்டுமா என்ன?”
“என் காதலிக்குத் தெரியாத ரகசியமா?”
“புதையல் விஷயம் உன் காதலிக்குத் தெரியும் என்பது எனக்குத் தெரியும். நீ அவளிடம் சொன்னதை நான் கேட்டதால்தானே இவ்வளவு தூரம் நிலைமையே வளர்ந்திருக்கிறது!”
ஏதோ புதிய ரகசியம் தெளிவாகலாம் என எண்ணிய பரிமளா, ஒரு கேள்வி கேட்டு வைத்தாள் “எனக்கு அது எப்படித் தெரியும்?” என்று!
உடனே வெள்ளியம்பலம், “சும்மா இரு, பெண்ணு. சிவன் கோயிலிலே நீயும் துக்காராமும் பேசிக் கொண்டதை இந்தக் காதால கேட்டேன். “மாமரத்தடியிலேதான் தங்கம் புதைக்கப்பட்டது” என்று துக்காராம் சொன்னது, இல்லையா?” என்று கேட்டுவிட்டு அலட்சியமாக சிரித்தார்.
பரிமளாவுக்கு இப்போது எல்லாம் விளங்கி விட்டது. துரையின் தங்கை தங்கம் புதைக்கப்பட்ட சோகக்கதையை துரை தன்னிடம் சொன்னதை, வெள்ளியம்பலம் கேட்டு, இப்படி விபரீத அர்த்தம் செய்துகொண்டிருக்கிறார் என்று தெரிந்துகொண்டு, தனக்குள்ளாகவே சிரித்துக் கொண்டாள் — அந்தக் கவலை தோய்ந்த நேரத்திலுங்கூட.
“நானும் இவரும் அப்படியொன்றும் பேசிக் கொள்ள வில்லையே—ஒருவேளை கனவு கண்டார்களோ, என்னமோ?”
என்று பரிமளா கூறிய பிறகுதான் துக்காராமுக்கு உயிரே வந்தது. இல்லாவிட்டால் தங்கம் பற்றிய சம்பாஷணையை, பரிமளா வேறு யாருடனே பேசியிருக்கிறாள் என்று எண்ணி, மனதைப் புண்ணாக்கிக் கொண்டு தவித்திருப்பான், அந்த அப்பாவி வாலிபன்!
“அதெல்லாம் போகட்டும் — ஆக வேண்டியதை கவனிக்கலாம். துக்காராம்! உம்......புறப்படு!” என்றார் வெள்ளியம்பலம்.
“எங்கே?” என்றாள் பரிமளம்.
“அதை உனக்குச் சொல்லக் கூடாது. தங்கம் எடுக்கிற ரகசியத்தை வாங்குவதற்குப் போகிறோம்!” — இது வெள்ளியம்பலம்.
“தங்கம் இருக்கிற இடம் தெரியலாம்; எடுக்கிற ரகசியம் தெரியக் கூடாதா?” என்று சிணுங்குவது போல நடித்தாள் அவள்.
“உன்னிடம் சொல்லாமலா கண்ணே! இப்போதே சொல்கிறேன்!......அதாவது......ஒரு சாமியாரிடம்......” என்றான் துக்காராம்.
“சரி—சரி! புறப்படலாம்!” என்று கொஞ்சம் பலத்த குரலிலே கூறினார் வெள்ளியம்பலம். புறப்பட்டு என்ன செய்வது; பொழுது விடிய இன்னும் நேரமிருக்கிறதே! விடிந்தால் அல்லவா, வெள்ளியம்பலத்திடமிருந்து விடுபட முடியும் — என ஏங்கினான் அவன்.
துக்காராமின் பிடிவாதத்தைக் கண்ட வெள்ளியம்பலம் இடையிலே சொருகியிருந்த கத்தியைக் கையிலே எடுத்துக் கொண்டார்.
அதை கவனித்த துக்காராம் திடுக்கிட்டான். உயிரைப்பற்றிய ஆசை படையெடுத்தது அவன் உள்ளத்தில்!
“பரிமளாவும் என்னோடு வரவேண்டும்” என்று ஒரு நிபந்தனை போட்டான். அவளாவது வழியில் தன்னைக் காப்பாற்ற மாட்டாளா என்ற நம்பிக்கையில்தான் அவன் அந்த நிபந்தனை விதித்தான்.
“எல்லோருமே போகலாம். ம் — நீ முதலில் நட! பரிமளா — நீயும் புறப்படு!” என்று அதட்டினார் அந்தப் பொன்னுக்கு வீங்கி!
பரிமளாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. போலீசாரிடமிருந்து தப்பி, இந்தப் புதையல் தேடியின் கையில் அகப்பட்டு விட்டோமே என்று கவலைப்பட்டாள். வாடினாள். வழி? எதுவுமில்லை! எதிரே ஆறு! அதிலும் ஆழமில்லை. அகலம்தான் அதிகம் — விழுந்தாலும் சாக முடியாது. எது வரினும் வரட்டும் என்ற உள்ள உரத்தோடு அவர்களுடன் புறப்பட்டாள். வெள்ளியம்பலமோ, புதையலை நாளைக்கு எடுத்து விடலாம் என்ற நம்பிக்கையோடு நடை போட்டார். துக்காராமோ, தன் உயிர் மதில் மேல் பூனையாக இருக்கிறது என்ற முடிவோடு முன்னே நடந்தான்.
ஆற்றின் கரையோரமாகவே மூவரும் நடந்து கொண்டிருந்தார்கள்.
“அந்த எடந்தான் எது என்று குறிப்பிட்டு சொல்லேனப்பா — நானாவது கண்டுபிடிக்கிறேன்” என்று கால் வலியோடு கேட்டார் வெள்ளியம்பலம்.
“அவர் இருக்குமிடத்தை பார்த்துத்தான் கண்டுபிடிக்க முடியும். சொல்ல முடியாது — சொல்லவும் தெரியாது!” என்று கூறி நடந்தான் துக்காராம்.
ஆற்றங்கரை யோரத்திலே உள்ள புல் பூண்டுகளை மிதித்துக் கொண்டும், முட்களை சமாளித்துக் கொண்டும், பரிமளா, தீராத வேதனையைச் சுமந்தபடி அவர்களைத் தொடர்ந்தபடி யிருந்தாள்.
“சாமியாருமில்லை — மண்ணாங்கட்டியுமில்லை — அவரிடம் புதையல் ரகசியமுமில்லை — எல்லாம் பொய் — பொழுது விடியும் வரையில் இப்படித்தான் நடப்பேன்” என்ற உண்மையை பரிமளாவிடம் சொல்லிவிடலாம் என்று துக்காராம் துடித்தான். அருகிலே வெள்ளியம்பலம் வருவது அவனுக்கு அச்சமூட்டிற்று.
இருளின் கனம் கரையத் தலைப்பட்டது. லேசாக வெளுப்பு தோன்ற ஆரம்பித்தது. விடிவெள்ளி உதயமாக வேண்டிய நேரம்போல் தெரிந்தது. துக்காராமுக்கு மனதுக்குள்ளே மகிழ்ச்சி அரும்பியது. இன்னும் இரண்டொரு மணி நேரங்களில் தான் தப்பி விடலாம் என்று எதிர்பார்த்தான். இப்படி, ஆளுக்கொரு நினைவாக நடந்துகொண்டிருக்கும் அவர்கள் மூவரின் கவனத்தையும் ஒரு பயங்கரமான முணகல் சப்தம் கவர்ந்தது.
“ஆ! அய்யோ — அம்மா — அப்பா! அய்யோ — அய்யோ” என்ற வார்த்தைகள் கீழ் ஸ்தாயியில் ஒலித்துக் கொண்டிருந்தன.
ஒலி வந்த திக்கிலே மூவரும் திரும்பினார்கள். ஒரு புதரின் பக்கமிருந்து வந்தது அந்த ஒலி. புதரண்டை சென்று பார்த்தார்கள். புதரோரத்திலே ஒரு உருவம் நெளிந்து கொண்டிருந்தது. உற்று கவனித்தார்கள். ஒரு கையில்லை. கை, வெட்டப்பட்டு ரத்தம் பெருக்கெடுத்த படியிருந்தது. முகத்தை மண்ணிலே புதைத்துக்கொண்டு குப்புறக் கிடந்தபடியால், ‘அது யார்?’ என்று உடனே கண்டுபிடிக்க முடியவில்லை பரிமளாவினால்! அவள் துடித்துப் போனாள். ‘தூக்குங்கள்!’ என்று கத்தினாள்.
வெள்ளியம்பலமும், துக்காராமும் சேர்ந்து, அந்த மனிதனை மெதுவாகப் புரட்டினார்கள்.
கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்