அத்தியாயம் 31 · 32 / 52

அத்தியாயம் 31

Chapter 31

மூல ஸ்கேன் 271 (chapter-31 portion)-278 (chapter-31 portion)

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

31

கையிழந்த அந்த மனிதன் யார் என்று பரிமளா கண்டுபிடித்து விட்டாள். அவள் அஞ்சியபடி அத்தான் துரையுமல்ல; அந்தக் கிழவருமல்ல! ஐயப்பனின் உருவமே அது! ரத்தத்தால் ஐயப்பனின் மார்பகமெல்லாம் நனைந்து போயிருந்தது. வெட்டுண்ட கரத்திலேயிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டேயிருந்தது. துக்காராமுக்கு நடுக்கம் தாங்கவில்லை. தெருக் கோடிகளிலே தம்பட்ட மடித்து மாயாஜாலக்காரன் வேடிக்கைக்காக காட்டுவானே ரத்தம் — அந்த ரத்தத்தைப் பார்த்தே மயக்கம் போடக் கூடிய வீராதி வீரன் துக்காராம்! உண்மையிலேயே எங்கேயோ ஒரு அனாதரவான இடத்தில் இதுபோன்ற ஒரு பயங்கர சம்பவத்தைக் காணுவதென்றால் எப்படியிருக்கும்? உடம்பெல்லாம் உதறலெடுத்தது அவனுக்கு! ஆனால் அந்த நடுக்கத்திலும், வெள்ளியம்பலத்தின் கையிலேயிருந்து தப்புவதற்கு ஒரு நல்ல யோசனை மின்னல் வேகத்திலே தோன்றியது. வெட்டுண்டு கிடக்கும் மனிதன் யாரென்று அவனுக்கும் தெரியவில்லை. வெள்ளியம்பலத்திற்கும் தெரியவில்லை. இதை துக்காராம் பயன்படுத்திக் கொண்டான். தன் அபூர்வ யோசனையை செயல் படுத்தவும் தொடங்கி விட்டான்.

“ஆகா! அய்யோ! இவரா? என்னய்யனே! உமக்கா இந்த கதி ஏற்பட்டு விட்டது? தாளேன்! தாளேன்!!” என்று தவித்தான். தை தகவெனக் குதித்துக் கத்தினான்.

அதைக் கண்ட வெள்ளியம்பலம், “யாரப்பா இது? உனக்குத் தெரியுமா?” என்று ஆவல் ததும்பக் கேட்டார்.

“யாரா? இவர் யாரா? அய்யோ! தாழி உடைந்து விட்டதய்யா, வெண்ணெய் திரளும் போது! இவர்தான் நாம் தேடி வந்தவர்! இவரிடமே உங்களை அழைத்து வந்தேன்!” — துக்காராம் பிரமாதமாக அழ ஆரம்பித்தான்.

அந்த சோக நாடகத்தை வெள்ளியம்பலம் நம்பிவிட்டார்.

யாரோ ஒருவன் வெட்டுப்பட்டுக் கிடக்கிறான் என்ற அலட்சிய எண்ணத்தோடு இருந்தவருக்கு, திடீரென அக்கரை வெள்ளம் அலை மோதிக்கொண்டு கிளம்பியது. சாகக் கூடாத வயதிலே சாகிற பாசமுள்ளவர்கள், கடைசி மூச்சோடு போராடிக் கொண்டிருக்கும் போது கூட, மனங் துணிந்து “கையெழுத்துப் போடு இந்த உயிலிலே!” என்று கோரிக்கை சமர்ப்பிக்கிற உலகம் — அந்த உலகத்திலும், உள்ளத்தை எடுத்து வைத்துவிட்டு உலவுகிற பிரமுகர்கள்—அத்தகைய பிரமுகர்களின் அணிவகுப்பிலே ஒருவரான வெள்ளியம்பலம்!

அவர் எப்படி ஐயப்பனின் உயிர் போக சம்மதிப்பார்; புதையல் ரகசியத்தைப் பெற்றுக் கொள்ளாமல்! ஆகவே ஓடினார் ஆற்றுக்கு! தன் மேல் துண்டை நனைத்து எடுத்துக்கொண்டு ஐயப்பனிடம் வந்தார்; அவனது முகத்திலே தண்ணீரைப் பிழிந்தார்; அவனது உடலை மெதுவாக அசைத்தார்; உயிர் கொஞ்ச நஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கிறதா என்று கவனித்தார்; அவ்வளவு கவலை அவருக்கு அவன் மீது!

அவனுக்கு தப்பித் தவறி உயிர் வந்துவிடக் கூடாது; வந்தால் தன் பாடு ஆபத்து — என்று எண்ணிக் கொண்டிருந்த துக்காராம் திடுக்கிடும் வகையிலே ஐயப்பன் மெதுவாகக் கண்ணை விழித்துப் பார்த்தான். உடலிலேயிருந்த ரத்தம் பெரும் பகுதி வெட்டுண்ட கரத்தின் வழியே வெளியேறிவிட்டதால், ஐயப்பன் அசையக்கூட சக்தியற்றிருந்தான்.

“கண்ணைத் திறந்து விட்டான். கொஞ்சம் வாயையும் திறந்து அந்த ரகசியத்தை சொல்லி விட்டால் போதும், கடவுளே!” என்று பிரார்த்தனை செய்தார் வெள்ளியம்பலம்.

ஐயப்பன் தன் வரண்டுபோன வாயைத் திறந்தான். உலர்ந்த உதடுகளை அசைத்தான். ஈரமற்ற நாக்கு அசைக்க முடியாதபடி ஒட்டிக் கொண்டிருந்தது.

அவன் தாகத்தால் கஷ்டப்படுகிறான் எனக் கருதிய வெள்ளியம்பலம், துண்டிலே நனைத்திருந்த தண்ணீரை அவன் வாயிலே பிழிந்தார். அழுக்குத் துணியோடு பிழியப்பட்ட அந்த நீரை ஆவலாகக் குடித்தான் ஐயப்பன்.

“அப்பாடா!” என்று சொல்வதுபோல அவன் கண்கள் பிரகாசம் பெற்றன. தலையை மட்டும் திருப்பி சுற்று முற்றும் பார்த்தான்.

“ஐயோ! என்ன இடி விழப் போகிறதோ?” என்று ஏங்கித் தவித்தான் துக்காராம். ஆனாலும் சமாளித்துக் கொண்டு, ஐயப்பனின் பக்கத்திலே கவலையோடு உட்கார்ந்து கொண்டான். அம்பலத்திற்கு அவசரம் தாங்க முடியவில்லை.

“அய்யா! அய்யா! அந்தப் புதையல் ரகசியம் எங்கேயிருக்கிறது?” என்று பதட்டத்தோடு கேட்டார். ஐயப்பன் கண்களை மிரள மிரள விழித்தான். தொண்டையிலே விக்கல் வேறு ஆரம்பமாயிற்று.

“அட பாவி! செத்து விடுவான் போலிருக்கிறதே!” என்று பதறிய அம்பலம், முயற்சியைக் கைவிடாமல் மறுபடியும் “புதையல் ரகசியம் எங்கேயிருக்கிறது?” என்று கேள்விக் கணையைத் தொடுத்தார்.

“புதையல்! புதையல்!! புதையல் ரகசியம்!!!”— புலம்ப ஆரம்பித்தான் ஐயப்பன்.

“ஆமாம், புதையல் ரகசியந்தான்!” என்று வலியுறுத்தினார் வெள்ளியம்பலம். வீடு பற்றி எரியும்போது பீடிக்கு நெருப்பு கேட்டவனையும் மிஞ்சிவிட்டார் அவர்.

ஐயப்பனோ மரணமுகப்பில் ஏதேதோ உளறிக் கொண்டிருந்தான். சிறிது பிரக்ஞை வரும். அப்போது கண்களை அகல விழிப்பான். ஏதோ சொல்ல நினைப்பான். நினைவு தடுமாறும். இப்படி மாறி மாறி அவன் அவஸ்தைப்பட்டான். அந்த மரணாவஸ்தையையும் பொருட்படுத்தாமல் காரியத்தை சாதித்துக் கொள்ள துடியாய்த் துடித்தார் அம்பலம்.

“தயவு செய்து சொல்லுங்கள்! புதையல் ரகசியம் யாரிடம் இருக்கிறது?”

ஐயப்பன், கண்களை விழித்தான். சுற்றுமுற்றும் பார்த்தான். பரிமளா மீது அவன் பார்வைப் பட்டது! பல்லைக் கடித்துக் கொண்டு கத்தினான். “இவளுடைய காதலன் — ஆசை நாயகன் — அவனிடம்......” என்று அவன் முடிப்பதற்குள்,

“யாரிடம்? துக்காராமிடமா?” என்று அவன் தோள்களைக் குலுக்கினார் வெள்ளியம்பலம்.

“இல்லை! துரை! துரை! துரை! அவளோட ஆசைப் புருஷன் — அந்த நாடகக்கார துரை!”

“யார், துரையா? பரிமளாவோட புருஷன் துரையா? இல்லியே; இதோ இந்தத் துக்காராமல்லவா?” என்று கத்தினார் வெள்ளியம்பலம்.

“இல்லை; துரை தான்! அந்த துரையும், மாயாண்டிக் கிழவருந்தான்...... என்னை ...... என்னை ......” என்று ஏதோ உளறிக் கொண்டே கண்ணை மூடிக் கொண்டான் ஐயப்பன்.

அம்பலம் விடுவாரா? மிச்சமிருக்கிற உயிரையும் தேடித் தோண்டி இழுத்துவந்து அவன் நாக்கிலே நிறுத்திப் பேசவைக்க முயன்றார்.

“அதெல்லாம் இருக்கட்டும் — புதையல் ரகசியம் இப்ப எங்க இருக்கு?”

“இதோ, இவளைக் கேளுங்க — இவ சொல்லுவாள்! அந்த மாயாண்டி — துரை — ரெண்டு பேரையும் விடாதிங்க!”

ஐயப்பனால் அதற்கு மேல் பேச முடியவில்லை. விக்கல் அதிகமாகிவிட்டது. துக்காராம் மெய்மறந்து சோகத்திலே அனைத்தையும் துறந்துவிட்டவன் போல அசைவற்று நின்றான். ஐயப்பனின் உடல் புழுப்போல் நெளிந்தது. வாயை இரண்டு முறைப் பிளந்தான். புது உண்மைகள் வருமா என்று எதிர்பார்த்தார் அம்பலம். ஐயப்பனோ இறுதி மூச்சை விட்டுவிட்டு, வாயையும் கண்களையும் இறுக மூடிக் கொண்டான். தொட்டுப் பார்த்தார் — உதட்டைப் பிதுக்கினார். துக்காராம் ‘ஓ’வென அலறி, “அய்யோ! நான் என்ன செய்வேன்?” என்ற ஒப்பாரியைத் தொடங்கினான்.

பரிமளாவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஐயப்பனின் வாக்கு மூலத்தால், வெள்ளியம்பலம், துரையையும், கிழவரையும் காட்டிக் கொடுத்து விடுவாரோ என்று கிலி கொண்டாள்.

வெள்ளியம்பலத்தின் மூளை பலமாக வேலை செய்தது!

“துக்காராம்தான் தன்னுடைய காதலன் என்கிறாள் பரிமளா! செத்துப்போனவனோ அவள் காதலன் துரை என்கிறான். செத்தவனிடம்தான் புதையல் ரகசியம் இருந்ததாகத் துக்காராம் சொல்கிறான். செத்தவனே, அந்த ரகசியம் — துரை, மாயாண்டிக் கிழவர் இருவரிடமும் இருக்கிறது என்கிறான். ஒரு வேளை, அவர்கள் இவனைக் கொன்றுவிட்டு ரகசியத்தைக் கைப்பற்றியிருக்க வேண்டும். ரகசியம், துரையிடமும் — மாயாண்டியிடமும் தான் சிக்கியிருக்க வேண்டும்!...... அது சரி! பரிமளாவுக்கு, துரை காதலனா? துக்காராமா? ஒருவேளை இருவருமே காதலர்களாக இருந்தால்? அப்படித்தானிருக்க வேண்டும்! இவளுடைய இரண்டு காதலர்களுக்குமே, தங்கம் புதைந்து கிடக்கும் இடம் தெரிந்திருக்க வேண்டும்! நாம்தான் வீணக் குழப்பிக் கொள்கிறோம். அப்படியானால், பரிமளா, துக்காராம் இருவரையும் சில நாளைக்குத் தன் பாதுகாப்பிலே வைத்திருக்க வேண்டும். அப்படி வைப்பதால், துக்காராமும் பரிமளாவும் காதலர்கள்தானு என்ற உண்மை தெரிந்துவிடும்! அதோடு, பரிமளா மூலமாகவே துரையையும் பிடித்துவிட வேண்டும்! அந்த நாடகக்கார துரையும், மாயாண்டிக் கிழவனும் அகப்பட்டுவிட்டால், பிறகு எந்தவிதக் குழப்பமுமில்லாமல் என் ஆசை நிறைவேறிவிடும்!”

—இப்படி யோசித்தார் வெள்ளியம்பலம். பிறகு ஒரு முடிவோடு பரிமளாவைப் பார்த்து, “பரிமளா உன்னைப் பற்றி நான் புரிந்து கொண்டேன் — உனக்கு இரண்டு காதலர்கள்! ஒருவன் துரை! இன்னொருவன் துக்காராம்!” என்றார்.

“இல்லை—இல்லை! துக்காராம் மட்டுந்தான்—துரையை எனக்குத் தெரியவே தெரியாது!” என்றாள் பரிமளா.

“அதிருக்கட்டும்—இப்போது அதற்கு சாட்சி வேண்டாம்! நான் இடுகிற கட்டளையை நீயும் துக்காராமும் நிறைவேற்ற வேண்டும்!”

“என்ன கட்டளை?”

“உங்கள் இருவரையும் என் வீட்டிற்கு அழைத்துப் போகிறேன், யாருக்கும் தெரியாமல்! அங்கே உங்கள் இருவருக்கும் ரகசியமாக திருமணத்தை நடத்தப் போகிறேன்.”

இதைக் கேட்டு துக்காராம் மகிழ்ச்சி அடையவில்லை. இதில் ஏதோ சூது இருக்கும் என்று பயந்தான்.

“பயப்படாதே, துக்காராம்! இனிமேல் உன்னை துன்புறுத்த மாட்டேன். புதையல் ரகசியம் அந்த துரையிடம் இருக்கிறது என்பது தெரிந்த பிறகு, உன்னை எதுக்காக கஷ்டப் படுத்தணும்! பயமில்லாமல் என்னோடு திரும்பிவா!” என்றார் வெள்ளியம்பலம்.

“மருங்கப்பள்ளத்திற்கு வந்தால் அப்பா பார்த்து விடுவார்” என்றாள் பரிமளா!

“அதெல்லாம் கவலைப் படாதே! ராத்திரிக்கு போகலாம் மருங்கப்பள்ளத்துக்கு! என்னுடைய பங்களாவிலே இரண்டு பேரும் யாதொரு கவலையுமில்லாமல் இருக்கலாம். நீங்கள் இதற்கு இணங்கித்தான் தீரணும்!”

இனிமேல் தனக்குத் தொந்திரவு இல்லை என்று நம்பிய துக்காராமும் ‘சரி’ என்று ஒப்புக் கொண்டான்.

துக்காராமை காதலன் என்று கூறிவிட்டு, பிறகு அவன் மணக்க மாட்டேன் என்றால் உண்மை வெளியாகி விடுமே என்று பயந்த பரிமளாவும், வேறு வழியின்றி வெள்ளியம்பலத்தின் யோசனைக்கு இணங்கினாள்.

பரிமளாவை எப்படியாவது அழைத்துக் கொண்டு போய்விட்டால், அவளைக் கொண்டு துரையைப் பிடித்து விடலாமென்று உறுதி கொண்டார் அம்பலம். துக்காராம் — பரிமளா திருமணம் நடத்துவதால் அவர்கள் உண்மையான காதலர்கள்தானு என்பதையும் கண்டுபிடித்து விடலாமென்று நம்பினார். ‘சரி; வாருங்கள் புறப்படலாம்’ என்று அழைத்தார்.

“ஐயப்பனின் பிணம் மறைக்கப் பட்டால் அத்தானும் கிழவரும் தப்புவதற்கு ஒரு வேளை சாதகமாயிருக்கும்” என்று எண்ணிய பரிமளா, “இந்தப் பிணத்தை இழுத்து ஒதுப்புறமாக எறிந்து விடலாமே” என்று அம்பலத்திடம் கூறினாள்.

அம்பலமும் ஆட்சேபணை தெரிவிக்காமல் அங்குள்ள ஆழமான படுகுழியொன்றில் பிரேதத்தை இழுத்தெறிந்தார். பூமியைத்தோண்டி புதையல் எடுத்து, ஆகாயத்தை அளாவ கோட்டை கட்ட நினைத்த ஐயப்பன், பிணமாகக் குழியிலே விழுந்தான்!

வெள்ளியம்பலம் அவர்களை நோக்கி, “காதலர்காள்! புறப்படுங்க! புதையல் ரகசியம் எங்கேயிருக்கிறது என்று தெரிஞ்சாச்சி. நீங்களும் புதுத் தம்பதிகளாக ஆகிற நேரம் வந்தாச்சி! புறப்படுங்க!” என்று சந்தோஷத்தோடு அழைத்தார்.

பரிமளாவுக்கும் தனக்கும் கலியாணம் என்ற பரவசத்தோடு துக்காராம் புறப்பட்டான்—‘இன்னும் எத்தகைய துன்பங்கள் தொடருமோ?’ என்ற ஏக்கத்தோடு பரிமளாவும் அவர்கள் பின்னே போக வேண்டியதாயிற்று.

கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்