அத்தியாயம் 32 · 33 / 52
அத்தியாயம் 32
Chapter 32
மூல ஸ்கேன் 278 (chapter-32 portion)-288 (chapter-32 portion)
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
32
யார் கண்ணிலும் படாமல் அம்பலம், பரிமளா, துக்காராம் மூவரும் மருங்கப்பள்ளத்திற்கு இரவு வந்து சேர்ந்தார்கள். வாய்க்கால் ஓரத்திலே அமைந்துள்ள அம்பலத்தின் பங்களாவிலே ரகசியமாக இருப்பதென்ற திட்டப்படி துக்காராமும் பரிமளாவும் அங்கே வைக்கப்பட்டனர்.
வேலைக்கார ராமனின் கண்காணிப்பிலே விடப்பட்ட அவர்களுக்கு அவனது குறும்புத்தனமான உபசாரங்கள் தலை வேதனையுண்டாக்கின. அம்பலத்தின் கட்டளைப்படி ராமன் சமையற் காரியங்களில் ஈடுபட்டு, அடுக்களையிலே பானை சட்டிகளை உருட்டவும் ஆரம்பித்தான். சரியாக பதினொரு மணிக்கு அம்பலம் உட்பட அனைவருக்கும் சரியாக வேகாத சோற்றை வடித்து விருந்துபசாரம் செய்தான். “ராமன் சமையல் எப்போதுமே ‘நளபாக’ந்தான்” என்று கூறிக் கொண்டு, புளியில்லாத குழம்பை ஊற்றி அவர்களைத் திணற அடித்தான். பரிமளாவுக்கு இருக்கும் வேதனையில், வேகாத சோறு — புளியில்லாக் குழம்பு — இவைகளின் ருசிகளைப் பற்றி ஆராயவா நேரம்? அம்பலத்தின் பிடிவாதத்திற்காக உட்கார்ந்து எழுந்தாள். துக்காராமுக்கும் பதார்த்தங்களின் சுவை எதுவும் தெரியவில்லை. எட்டாத கனியின் சுவையை ரசிக்கப் போகிறோம் என்று நாக்கைத் தட்டிக் கொண்டிருப்பவனுக்கு ராமன் வைத்த விருந்து பெரிதாகவா தோன்றும்! அவனுக்கும் உணவு தேவையில்லாமலிருந்தது. ஆர அமர சாப்பிட அம்பலத்திற்கும் மனமில்லை. அவர் மனம் புயலால் சூழப்பட்டிருந்தது.
புதையலை எப்படியும் தனக்கு உரிமையாக்கிக்கொள்ள வேண்டுமென்ற அடங்காத ஆசையால் துடித்துக் கொண்டிருப்பவரல்லவா அவர்! தனது திட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்ற வேண்டும் என்று உறுதி செய்து கொண்டார். முதலில் பரிமளா — துக்காராம் உண்மையான காதலர்கள்தானு — என்று கண்டுபிடிக்கும் திட்டம். அதற்கு, அவர்கள் இருவரையும் தனியாக பங்களாவில் விடவேண்டும் — அதே சமயம் அவர்கள் தன்னை ஏமாற்றி விட்டுப் போய்விடாமல் காவலுமிருக்க வேண்டும். அய்யோ — ஊர்ப் பெரிய புள்ளி, பொன் மலைக்கு அதிபதியாக வேண்டும் என்ற பேராசைக்கு அடிமைப்பட்டதின் காரணமாக, எவ்வளவு சங்கடமான காரியங்களில் எல்லாம் ஈடுபட வேண்டியிருக்கிறது.
“எவனோ தெரியவில்லை—திமிர் பிடித்த சோம்பேறிப் பயல். இவன் மாதிரி மைனர்கள் எல்லாம் என்னைக் கண்டாலே எழுபது அடி விலகி நடப்பார்கள். அப்படிப்பட்ட நான்; கேவலம் — இந்தக் கன்றுக் குட்டியிடம் பல்லைக் காட்ட வேண்டியிருக்கிறது!” —
என்று தனக்குத் தானே எண்ணிக் கொண்டு வருத்தப்படவும் தவறவில்லை வெள்ளியம்பலம்.
ஊரிலே எத்தனையோ கல்யாணங்கள் அவரது தலையீட்டால் நின்றுமிருக்கின்றன — நடந்துமிருக்கின்றன. அப்படிப்பட்டவர், யாரோ ஒரு அனாதைக்கு பரிமளாவைத் திருமணம் செய்து வைக்க வலிய வலிய முயன்று வளைந்து வளைந்து கொடுக்க வேண்டியிருக்கிறது. இதுவும் அவரது வீராப்பு நிறைந்த நெஞ்சிலே எழுந்த புகைச்சல்தான்! ஆனாலும் பொன் குவியல் என்ற அந்த ஆசைக் கனவு, எந்தப் புகைச்சலையும் நீடிக்க விடவில்லை.
துரையையும், பரிமளாவையும் பார்த்து, “ஜாக்கிரதையாக இருங்கள் — காலையிலே வருகிறேன். திண்ணையிலே ராமன் படுத்திருப்பான். ஏதாவது தேவையானால் சொல்லி அனுப்புங்கள்” என்று கூறிவிட்டு பங்களாவை விட்டுப் புறப்பட்டார் அம்பலம். ராமனும், ஒரு ஓட்டைப் பாயுடனும், பஞ்சு கிளம்பிய தலையணையுடனும் தன் சயனத்திற்குத் தயாரானான்.
துக்காராமுக்கோ ஆனந்தம் தாங்கவில்லை. குருடனுக்குக் கண்ணையும் திறந்து வைத்து, எதிரே பொன்னையும் கொட்டி வைத்தால் எப்படியிருக்கும்?
செவிடனுக்கு சிகிச்சை பார்த்து, கேட்கும் திறனையும் உண்டாக்கி விட்டு, செந்தமிழிலே ஒரு பாட்டையும் இசைத்துக் காட்டினால் எப்படி இருக்கும்?
அந்த நிலை பெற்றான் துக்காராம். பரிமளாவோ, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய சோதனை மிகுந்த கட்டத்திலே நின்று கொண்டிருந்தாள். அவளது உள்ளத்தைப் புரிந்துகொள்ளும் சக்தியற்ற துக்காராம், அசடு வழிந்திட ஒரு சிரிப்பை வரவழைத்துக் காட்டினான். பரிமளா முதலில் பேசுவதா தான் முதலில் பேசுவதா என்ற பிரச்சினையிலே சில விநாடிகளைக் கழித்த துக்காராம்! தன்னைத் தைரியப்படுத்திக் கொண்டு வாயைத் திறந்தான்.
“கண்மணி!”
பரிமளா பேசாமலிருந்தாள்.
“பரிமளா! நம்முடைய புனிதமான காதலை கடவுள் உணர்ந்து — நம் இருவரையும் எப்படி சேர்த்து வைத்து விட்டார் பார்த்தாயா?” என்று நாடக மேடை ராஜபார்ட் தோரணையிலே வசன மாரி பொழிய ஆரம்பித்தான்.
“அன்புள்ள காதலியே! ஏன் பேச மறுக்கிறாய்? வெட்கமா? உன்னுடைய வெட்கம் என் விலாவை வேலால் குத்திக் குடைகிறதே!”
இதைச் சொல்லிக்கொண்டே அவன் அவளிடம் நெருங்கினான்.
இதுவரையில் பொறுமையாக நின்று கொண்டிருந்த பரிமளா, துக்காராமை இரக்கத்தோடு பார்த்து,
“துக்காராம்!” என்றாள்.
“என்ன, துக்காராமா? கணவனைப் பெயர் சொல்லிக் கூப்பிடலாமா? பாபம்! பாபம்!!” எனக் கத்தினான் அந்தப் பைத்யக்காரன்.
“நான் சொல்வதைக் கேள்! என்னைப் போலவே நீயும் தொல்லையில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறாய். உன்னுடைய கஷ்டம் எனக்குத் தெரிகிறது. இந்த நேரத்தில் நாமிருவரும் கொஞ்சம் புத்திசாலித் தனமாக நடந்து கொள்ள வேண்டும்” என்றாள் பரிமளா.
“என்ன, என்னை மரியாதையில்லாம, நான் நீ என்று பேசுகிறாய்?”
“சொல்வதை முழுதுங் கேள், துக்காராம். எனக்கு உன்னிடத்திலே கொஞ்சமும் அன்பு இல்லை — பிரியம் இல்லை — என்பது உனக்கு முன்பே தெரியுமல்லவா?”
“ஆகா! எனக்கு மயக்கம் வருகிறதே!”
“இப்படியெல்லாம் உளராதே! வெள்ளியம்பலத்திடமிருந்து தப்புவதற்காக, ஏதோ ஒரு பொய் சொல்லி வைத்தேன், உனக்கும் ஒரு சிறிய பாடம் கிடைக்கட்டும் என்று! அந்த வேடிக்கை, இப்போது இவ்வளவு வேதனையாக வளர்ந்துவிட்டது. நிச்சயமாக நம்பு; எனக்கு உன் மீது துளியும் விருப்பமில்லை!”
“அப்படியெல்லாம் சொல்லாதே பரிமளா! நான் உனக்காக உயிரை விடவும் தயாராயிருக்கிறேன். என் மனம் உன்னை நாடி, ‘ஹேண்டில் பார்’ இல்லாத சைக்கிள் போல அலைந்துகொண்டே யிருக்கிறது!”
துக்காராம், பரிமளாவைத் தொட முயன்றான். பரிமளா, கோபத்தோடு ‘தூரப் போ’ என்று அதட்டினாள். துக்காராம் கேட்கவில்லை. கிடைத்திருக்கிற அருமையான சந்தர்ப்பத்தை நழுவவிட அவனுக்கு மனமில்லை. பரிமளாவைப் பிடித்து தன் பக்கம் இழுத்தான். பரிமளா, தன் பலங்கொண்ட மட்டும் அவன் கன்னத்திலே ஓங்கி அறைந்தாள். துக்காராம் அப்படியே அசைவற்று நின்றான் சிறிது நேரம். அந்த அடி அவனது புத்தியை ஒரு நிலைப்படுத்திவிட்டது.
“பரிமளா! போதும்—இனியும் உன் கை வரிசையைக் காட்டாதே! என்னால் தாங்க முடியாது” என்று கூறிக்கொண்டே வேறு பக்கம் விலகிப் போய் நின்று கொண்டான். பரிமளாவுக்கு அவன் மீது பரிதாப உணர்ச்சி ஏற்பட்டது.
“இப்போதாவது நான் சொல்வதைக் கேள், துக்காராம்!” என்றாள்.
“என்ன சொல்லுகிறாய்? வாயால் எவ்வளவு வேண்டுமானாலும் சொல்! கையால் மட்டும் சொல்லாதே!” என்றான் பரிதாபமாக!
“நாமிருவரும் அம்பலத்திடமிருந்து விடுதலை பெற வேண்டாமா?”
“நிச்சயமாக!”
“அப்படியானால், பெயரளவுக்கு உன் காதலி என்று நீ சொல்ல வேண்டுமே தவிர, இப்படியெல்லாம் என்னிடம் தவறாக நடக்கக் கூடாது!”
“ஏன்? எதற்காக? பெயரளவுக்கு காதலி என்று சொல்லி, உனக்கு ஏன் நன்மை செய்ய வேண்டும்? உனக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று உண்மையைக் கூறிவிட்டு, பொழுது விடிந்ததும் ஓடிப் போகிறேன் பார்!”
இதைக் கேட்டதும் பரிமளாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. எங்கே, அம்பலத்திடம் காட்டிக் கொடுத்து விடுவானோ என்ற அச்சம் தலை தூக்கியது. அவன் சொல்வது சரியென்று அம்பலத்திடம் ஒப்புக் கொண்டால், துரையை சிக்க வைக்கத் தன்னை கருவியாக பயன்படுத்துவார் வெள்ளியம்பலம்—என்ற திகிலும் கூடவே பிறந்தது.
அதற்காக, துரையைக் காப்பாற்றுவதற்காக, துக்காராமின் இஷ்டத்துக்கு இணங்குவதா? இந்தக் கேள்வியை எண்ணிப் பார்க்கவும் இயலவில்லை பரிமளாவுக்கு!
பரிமளா, ஏதாவது சாதகமான பதில் சொல்லுவாளா என்று எதிர்பார்த்துக் கொண்டே யிருந்தான் துக்காராம். எதிர்பார்த்து, எதிர்பார்த்து, கடைசியில் தன்னையுமறியாமல் அப்படியே உட்கார்ந்தபடியே உறங்க ஆரம்பித்து விட்டான். பரிமளா, இரவு முழுதும் கண்ணயராமல் கவலைக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தாள். தெருத் திண்ணையிலே ராமன் விடும் குறட்டை சப்தமும், வயல்களின் ஓரங்களிலேயிருந்து தவளைகள் எழுப்பும் சப்தமும் ஒன்றையொன்று வெல்ல முயன்று கொண்டிருந்தன.
இரவு முழுதும், யாருக்கும் தெரியாமல் அந்த பங்களாவைக் காவல் காத்துக் கொண்டு சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்த அம்பலத்திற்கு, பரிமளா, துக்காராம் உரையாடல்களின் மூலம், உண்மை புலனாகி விட்டது. இருவரும் காதலர்கள் அல்ல; பரிமளா தன்னை ஏமாற்றி விட்டாள் — என்ற கோபம் வேறு பொங்கியெழுந்தது. துக்காராமின் மீது அவருக்கிருந்த சிறிதளவு மதிப்பும் சிதறிப் போய்விட்டது. காரியமிருக்கிறது என்பதற்காக அவனைக் கட்டியழுதார். காலையில் அவன் முகத்தில் காரி உமிழ்ந்து, “போடா! போக்கத்தவனே!” என்று துரத்தி அடிக்க வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டார்.
பொழுதும் விடிந்தது. துக்காராம் விழித்துப் பார்த்தான். எதிரே பரிமளா இருந்தாள். எதிர்பார்த்த இன்ப இரவு ஒரு கனவாகவே போய்விட்டதை யெண்ணி ஏங்கினான். பரிமளா, அவனைப் பார்த்து “என்மீது கோபப்பட வேண்டாம் துக்காராம். ஏதோ ஆத்திரத்திலும் அவசரத்திலும் அடித்து விட்டேன். இரண்டு நாள் தவணை கொடுங்கள். உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியுமா என்று யோசனை செய்கிறேன்” என்று நயமாகக் கேட்டுக் கொண்டாள்.
முரட்டுக் குரல் படைத்த வெள்ளியம்பலத்தின் வாய் ஜாலங்களிலே மயங்கிவிட்ட அந்த முட்டாள் வாலிபன், மொழியோ—தேனோ என ஐயுறும் வகையில், குழலோ—குயிலோ என்று ஆராய்ந்திடும் வகையில் சொல் உதிர்த்திடும் சொக்கத் தங்கம் நிகர் சுந்தரியின் ஏமாற்று வார்த்தைகளுக்கா அடிமையாக மாட்டான்! முதலில் தயங்கினான் — பிறகு மயங்கினான் — நெருங்க மட்டும் விடவில்லை அவள்! வெற்றி பெற்று விட்டோம் என்ற அணுவளவு மகிழ்ச்சியோடு கதிரவன் வரவை எதிர்பார்த்திருந்தாள். மகளைக் காணோமே என்று மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்திடும் மாதா, அதே ஊரிலே தான் ஒரு மூலையிலே இருக்கிறாள் — மகளோ, இங்கு சிறைப்படுத்தப் பட்டிக்கிறாள். இரவெல்லாம் கண் மூடாதிருந்த வெள்ளியம்பலமும் பங்களாவின் வாயிலிலே வந்து உட்கார்ந்து கொண்டு, சிந்தனைகளை ஓட விட்டுக் கொண்டிருந்தார்.
துக்காராமை நம்பிப் புண்ணியமில்லை; இனி துரையைத்தான் பிடிக்க வேண்டும். அது எப்படி முடியும்? அவன் எங்கே ஓடி ஒளிந்திருக்கிறானோ — என்றெல்லாம் குழம்பிக்கொண்டே யிருந்தார்.
காலையிலே, பரிமளா, துக்காராம் இருவரிடமும் தன் கோபத்தைக் காட்டிக்கொள்ளவேயில்லை. இரவு நடந்தவை தனக்கு எதுவும் தெரியாது என்பது போலவே நடந்து கொண்டார். துக்காராமும் பரிமளாவின் வார்த்தையை நம்பி, அவளிடம் பழையபடியே பேசிப் பழகினான். மாலையும் வந்தது. பங்களா வாசலில் உட்கார்ந்திருந்த அம்பலத்திடம், ராமன் ஓடி வந்து, ‘தாண்டவன் வருகிறார்’ என்று பரபரப்புடன் கூறினான். உடனே, அம்பலம் பரிமளாவையும், துக்காராமையும் உள்ளேயே ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லி விட்டு, தாண்டவனிடமிருந்து ஏதாவது புதிய சேதிகள் கிடைக்குமா என்ற ஆவலோடு வரவேற்க எழுந்தோடினார்.
“என்ன; பரிமளா அகப்பட்டாளா?” என்று அவசர அவசரமாகக் கேட்ட அம்பலத்திடம், தாண்டவன் உதட்டைப் பிதுக்கிக் கொண்டே, ‘இல்லை’ என்று ஈன சுரத்தில் பதில் அளித்தார்.
“போலீஸ் எல்லாம் தேடின தாகக் கேள்விப்பட்டேனே” என்றார் அம்பலம்.
“தேடினது உண்மைதான்—கையிலே அகப்பட்டாள். பிறகு எங்களையும் ஏமாற்றி விட்டு எங்கேயோ மறைந்து விட்டாள்” என்றார் தாண்டவன்.
“இது என்னய்யா வேடிக்கை? கையிலே அகப்படுவதாவது; மறைவதாவது!”
“இது மட்டுமா வேடிக்கை? அவளைத் தேடிப் போனதிலே ஒரு கொலைக் கேஸ் கிடைச்சுது போலீசுக்கு!”
“கொலைக் கேசா?” — ஆச்சரியத்தோடு கேட்டார் அம்பலம்.
“ஆமாம்—புதுப்பட்டினத்திலே பரிமளாவைப் பிடித்தோம். அவள் தன்னை யாரோ ஒருவன் கெடுக்க முயன்றதாகவும், அப்போது ஒரு கிழவனும், ஒரு வாலிபனும் மீட்க வந்ததாகவும், அதனால் சண்டை நடப்பதாகவும் சொன்னாள். நாங்கள், அவள் சொன்ன இடத்துக்கு ஓடினோம். அங்கு யாருமில்லை, ஒரு கை மட்டும் வெட்டப்பட்டுக் கிடந்தது. அப்போது, பரிமளா எல்லோர் கண்ணிலும் மிளகாய்ப் பொடியைத் தூவி விட்டுப் போய் விட்டாள். பிறகு விசாரித்ததில், அது துரை என்பவனின் வீடு என்று தெரிந்தது.”
“உம்; அப்புறம் என்ன நடந்தது?”
“அப்புறம் என்ன? நான் போன விஷயம் நடக்கிலே! போலீசுக்கு புது கேஸ் கிடைச்சுது!”
“அந்தக் கேஸ்தான் இப்ப எதுவரையிலே இருக்குது?”
“எதுவரையிலே இருக்கு? இன்னைக்கு மத்யானம் பனிரெண்டு மணிக்கு, அந்தத் துரை என்பவனையும், மாயாண்டிக் கிழவனையும் போலீஸ்காரங்க கைது செய்து கொண்டு போயிருக்காங்க!”
இதைக் கேட்டதும் அம்பலத்தின் முகம் மாறி விட்டது. கொலை வழக்கில் துரையும், அந்த மாயாண்டியும் சிக்கி, தண்டிக்கப்பட்டு விட்டால், பிறகு எப்படி புதையல் ரகசியத்தைத் தெரிந்து கொள்ள முடியும்? — என்ற கேள்வி அவரது நெஞ்சைப் பிளந்தது. தாண்டவனோ, அம்பலத்திற்கு ஏற்பட்டிருக்கிற மனக் குழப்பத்தை அறியாமல் அந்தக் கொலைக் கேசைப் பற்றி அளந்து கொண்டே போனார்.
கேஸ் விசாரணைக்கு வந்தால், தானும், தன் மகளுங்கூட ஒரு சாட்சியாகப் போக நேரிடுமென்றும், எப்படியும் கேசைக் கண்டுபிடித்து விடுவார்கள் என்றும் தாண்டவன் வழக்கு பற்றிய விபரங்களை விளக்கினார். அம்பலத்தின் செவியில் இவையெல்லாம் ஏறவில்லை. தாண்டவனை வீட்டுக்கு அனுப்பிவிட்டு மீண்டும் யோசனையில் ஆழந்தார்.
“துரையும், கிழவரும் விடுதலை பெற வேண்டும். அப்போதுதான் புதையலைக் கண்டு பிடிக்கலாம். இந்த துக்காராமை, முன்பு நினைத்ததுபோல் துரத்தி விடுவதும் தவறான காரியம். இவன் பரிமளாவின் காதலன் இல்லாவிட்டாலும், புதையல் ரகசியம் தெரிந்தவன். அதுவுமன்றி, துரையை விடுவிப்பதென்றால் அவனுக்குப் பதிலாக இன்னொருவன் மீது குற்றச் சாட்டை சுமத்த வேண்டும். அதற்கு சரியான பலிக் கிடா இந்த துக்காராம் தான்! இவனை எப்படியாவது கொலை வழக்கில் சம்பந்தப் படுத்திவிட்டால். புதையலுக்கு கூட பங்குக்கு வர மாட்டான்.”
இப்படியெல்லாம் நினைவுச் சுழல்கள் எழுந்தன.
பரிமளாவைத் தனியாகக் கூப்பிட்டு, அவளிடம், துரையும், கிழவரும் கைதாகி விட்ட செய்தியை அம்பலம் கூறினார். பரிமளாவினால் சமாளிக்க முடியவில்லை. “அய்யோ! அத்தான்!” என்று அலறி விட்டாள். அம்பலம், அவளிடம் இரவு நடந்தவை எல்லாம் தனக்குத் தெரியுமென்றும், துரையை விடுவிப்பதன்றால், தான் சொல்கிறபடி கேட்க வேண்டுமென்றும் கூறினார்.
“துரை விடுதலையாக வேண்டுமென்றால், துக்காராம் தூக்கு மேடைக்குப் போய் ஆகவேண்டும்” என்றார் அம்பலம்.
“அய்யோ பாபம் — அப்பாவியாயிற்றே துக்காராம், வேண்டாம். வேறு வழி யோசனை செய்யுங்கள்” என்றாள் பரிமளா!
“வேறு வழி கிடையாது. உன் பிரிய காதலன் உயிர் பிழைக்க ஒரே வழி — நீ என் வார்த்தைகளைக் கேட்பது தான்!” என்று அழுத்தந் திருத்தமாகக் கூறினார் அம்பலம்.
“சரி, சொல்லுங்கள்” என்று அவரது பேச்சைக் கேட்க ஆயத்தமானாள் பரிமளா.
கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்