அத்தியாயம் 33 · 34 / 52
அத்தியாயம் 33
Chapter 33
மூல ஸ்கேன் 288 (chapter-33 portion)-297 (chapter-33 portion)
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
33
வெள்ளியம்பலம் குரலை சரிப்படுத்திக் கொண்டு, மெதுவாகவும் நிதானமாகவும் பேச ஆரம்பித்தார். சூதான திட்டங்களை வகுக்கும் யோசனைகள் ஒன்றன்பின் ஒன்றாக உருவாகிக் கொண்டிருந்தபடியால் எங்கே தவறி வார்த்தைகள் வந்து விடுமோ என்ற பயத்தோடு அவர் பேச்சில் நிதானத்தை அளவுக்கு மீறி கடைப்பிடித்தார்.
“பரிமளா! இதை கவனமாகக் கேள்! போலீசாருக்கு பலமான தடயம் கிடைத்து விட்டது. வெட்டப்பட்டுக் கிடந்த கையை எங்கு கண்டுபிடித்தார்களோ அந்த இடம் துரையின் வீடு என்பதால், துரை சாமான்யத்திலே மீள வழியே கிடையாது. துரையையும், மாயாண்டிக் கிழவரையும் ஜாமீனில் விடுதலை செய்து, பிறகு வழக்கிலிருந்தும் விடுதலைபெற வேண்டுமென்றால்—துக்காராமைக் காட்டிக் கொடுத்தே ஆகவேண்டும். நான் போலீசாரிடம் சென்று, துக்காராம் கொலை செய்ததை நேரில் பார்த்தேன் என்று கூறப் போகிறேன். அதற்கு நீயும் சாட்சி சொல்லியாக வேண்டும். அதை விட்டு, நீ துக்காராம் மீது அனுதாபம் காட்டினால் ஆபத்துத்தான் வந்து சேரும்” என்று பயமுறுத்தினார். பரிமளாவுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. மௌனமாக நின்றாள். “அய்யோ, பாவம் துக்காராம்!” என்று மனதிற்குள்ளே வருந்தினாள். “மெளனம் சம்மதத்திற்கு அடையாளம்! நான் போய் வருகிறேன்” என்று கூறிவிட்டு, அம்பலம் புறப்பட்டார். தெருவிலே நின்ற ராமனைக் கூப்பிட்டு, “உள்ளே போய் அவர்களுக்கு வேண்டியதை கவனி; ஜாக்கிரதை” என்றும் எச்சரித்து விட்டு, போலீசாரை சந்திப்பதற்காக விரைந்தார்.
பரிமளாவின் மனமோ ஒரு நிலையில் இல்லை. துரையின் பெயரைச் சொல்லி, அம்பலத்திடம் ஆபத்தில் சிக்க வைக்கக் கூடாது என்பதற்காக துக்காராம் பெயரை உபயோகித்தாள். இப்போதோ, துக்காராமை இந்த பயங்கர சதித் திட்டத்திலிருந்து எப்படி விடுவிப்பது என்று புரியாமல் திகைத்தாள். பள்ளிக்குச் செல்லும்போது பட்டுக்கோட்டை தெருவிலே ஒரு நாள் துக்காராம் பரிமளாவிடம் அநாகரீக முறையிலே நடந்து கொண்டது உண்மைதான். அன்று முதல் அவன் மீது பரிமளாவுக்கு ஆத்திரம் ஏற்பட்டதும் ஆச்சரியமில்லைதான். அந்த ஆத்திரம் நாள்தோறும் வளர்வதற்குத் துக்காராமின் சேட்டைகள் காரணமாயிருந்தன என்பதையும் மறுக்க இயலாதுதான். ஏதோ அந்த ஆத்திரத்திலே, தானும் தன் காதலனும் தப்புவதற்காக அவனைக் காட்டிக் கொடுத்து விட்டாள். இப்போ து அவன் மரண முகப்பிலே நிற்கிறான். அவனை அவள் விடுவித்தாக வேண்டும். அவனை விடுவிப்பதன்றால், தன் அத்தானை பற்றிய கவலையை மறக்க வேண்டும். கவலையை என்ன; அத்தானையே மறந்து தீர வேண் டிய நிலைமை வந்தாலும் வரலாம். பரிமளாவின் நெஞ்சம் குழப்பக் காடாயிற்று. துக்காராமின் மீது அவளுக்கு அனுதாபமும், அன்பும் உதயமாக அந்தக் குழப்பம் காரணமாகவும் ஆயிற்று. அவன் அசடு வழிய, அவளைப் பார்த்து சிரிக்கும் போதெல்லாம், அவனது தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கும் தூக்குக் கயிறை நினைத்துக் கொண்டு அவள் வேதனைப்பட ஆரம்பித்தாள்.
“பரிமளா!” என்று பல்லை இளித்துக் கொண்டு அவன் கூப்பிடும்போதுகூட, முதல் நாள் இரவு போல அவள் சிடுசிடு வென்று விழாமல், சாதாரணமாக, ‘ஏன்?’ என்று கேட்க ஆரம்பித்தாள். பரிமளாவின் பணிவையும், குழைவையும் கண்ட துக்காராமுக்கு மீண்டும் நம்பிக்கை நட்சத்திரம் தோன்றத் துவங்கியது. பொழுது விடிந்ததும் துக்காராமை ஏமாற்றுவதற்காக அவள் சொன்னாளே; “இரண்டு நாள் தவணை கொடுங்கள்; உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியுமா—என்று யோசிக்கிறேன்” என்பதாக; அந்தத் தவணையை இன்றைக்கே முடித்து விடுவாள் போலிருக்கிறது என்று எண்ணி அவன் அகமகிழ்ந்தான்.
அவன் கேட்டதற்கெல்லாம் பரிமளா, படபடப்பின்றி பதில் கூறினாள். அவனோ மகிழ்ச்சியில் கூத்தாடிக் கொண்டிருந்தான். மாலை போட்டுக்கொண்டு நிற்கும் பலிக் கடாவைப் பார்ப்பது போல அவனை அவள் பார்த்தாள்.
அவர்களை விட்டுவிட்டு அவசரமாகப் புறப்பட்ட வெள்ளியம்பலம் பேராவூரணி போலீஸ் ஸ்டேஷனை நோக்கிப் பயணமானார்.
பேராவூரணி போலீஸ் ஸ்டேஷனில்தான் துரையும், மாயாண்டிக் கிழவரும் ‘லாக் அப்’பில் வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் மீது போலீசார், ‘சார்ஜ் ஷீட்’ பதிவு செய்வதற்கு முன்பாகவே வெள்ளியம்பலம் அங்கு போய்ச் சேர்ந்தார். பேராவூரணி சப் இன்ஸ்பெக்டருக்கு வெள்ளியம்பலத்தை முன்பே தெரியுமாதலால், வரவேற்று உபசரித்து “என்ன விசேஷம்?” என்று கேட்டார். “விசேஷமில்லாமல் வருவேனா” என்ற பீடிகையுடன் அம்பலம் ஆரம்பித்தார்.
“ஒரு கொலை கேஸ் விஷயமாக உங்களிடம் அவசரமாகப் பேச வந்தேன்” என்று அம்பலம் கூறியதும், சப் இன்ஸ்பெக்டர், பரபரப்புடன் அதை கவனித்தார். துரையும், மாயாண்டியும் ‘லாக் அப்’பில் இருப்பது தனக்குத் தெரியாது போலவே அம்பலம் நடந்து கொண்டார்.
“புதுப்பட்டினத்திலே துரை என்பவனுடைய வீட்டுக்கு போயிருந்தேன் ஒரு காரியமாக. அப்போது ஒரு பெண் ஓடிவந்து வீட்டுக்குள்ளே புகுந்தாள். அவள் அலறிக் கொண்டு ஓடி வந்ததிலேயிருந்து, ஏதோ பெரிய ஆபத்து என்று நினைத்தேன். அவள் பின்னாலேயே ஒரு வாலிபன் ஓடி வந்தான். அவன் கையிலே பளபளப்பான ஒரு கத்தி இருந்தது. அதைக் கண்டதும், நானும் துரையும் வெளியே வந்துவிட்டோம். “ஐயோ என்னைக் காப்பாத்துங்க!” என்று அந்தப் பெண் கத்தினாள். “சத்தம் போடாதே” என்று அவளையும் அதட்டிவிட்டு, எங்களையும் பார்த்து, “உள்ளே வந்தால் உயிர் போகும்!” என்று மிரட்டினான். என்ன செய்வதென்று தெரியாமல் நாங்கள் விழித்தோம். “துக்காராம்! துக்காராம்! என்னை விட்டு விடு!” என்று அந்தப் பெண் கூச்சல் போட்டதிலேயிருந்து, அவன் பெயர் துக்காராம் என்றும், “பரிமளா! சத்தம் போடாதே!” என்று அவன் எச்சரிக்கை செய்ததிலேயிருந்து, அவள் பெயர் பரிமளா என்றும் புரிந்து கொண்டோம். அப்போது தாடி வைத்த முரட்டுச் சாமியார் ஒருவர் அங்கு ஓடி வந்தார். அவர் எங்களைப் பார்த்து, “அய்யா! இங்கே ஒரு பெண்ணை, ஒரு துஷ்டன் துரத்திக் கொண்டு வந்தானா?” என்று பரபரப்போடு கேட்டார். நாங்கள், ‘ஆமாம்’ என்று உள்ளே கை காட்டினோம். “அட பாவிகளே! அதை வேடிக்கையா பார்க்கிறீர்கள்?” என்று சாமியார் எங்களைத் திட்டிவிட்டு உள்ளே ஓடினார். நாங்களும் உள்ளே ஓடினோம். அவருக்கும், அந்த துக்காராமுக்கும் கை கலப்பு ஏற்பட்டது. அந்த சமயத்தில் பரிமளா, அதை விட்டு வெளியே ஓடிவிட்டாள்.”
சப் இன்ஸ்பெக்டர் பெருமூச்சுடன், “ஆமாம்; அப்போதுதான் நாங்கள் அவளை தெருவில் பார்த்தோம்” என்றார்.
“முழுதுங் கேளுங்கள்” என்று மீண்டும் தொடர்ந்தார் அம்பலம்.
“பரிமளா ஓடிவிட்ட பிறகும், சாமியாருக்கும் துக்காராமுக்கும் சண்டை ஓயவில்லை. திடீரென்று சாமியார் கொல்லைப் பக்கம் ஓடினார். துக்காராம் அவரைத் தொடர்ந்து சென்று, அரிவாளால் அவரது கையை வெட்டினான் — கை துண்டாகிக் கீழே விழுந்து துடித்தது! அதைப் பார்த்து பயந்த துரை, வீட்டை விட்டு எங்கேயோ ஓடி விட்டான். அவ்வளவு பயங்கொள்ளி அவன். நான் தைரியமாகச் சென்று துக்காராமை இழுத்தெறிந்தேன். அவன் கையிலிருந்த கத்தியை ஓங்கினான்; நான் சமாளித்துக் கொண்டேன். அந்த சமயத்தில் கை வெட்டுண்ட சாமியார் ஓட்டம் பிடித்தார்.
அவரைத் தொடர்ந்து அந்த இருட்டிலே துக்காராம் ஓடினான். நானும் என்ன நடக்கிறது என்று பார்க்கப் பின்னாலேயே ஓடினேன். அவர்கள் ஓடிய வழி தவறி விட்டது. வேறு வழியில் நடந்து சென்ற நான், அங்கே பரிமளா ஓடி வருவதைக் கண்டேன். அவள் விபரமெல்லாம் சொன்னாள். அவள் எங்கள் ஊர் தாண்டவனின் மகள் என்று அப்போதுதான் புரிந்து கொண்டேன். வீட்டிலே தூங்கிக் கொண்டிருந்த அவளுக்கு துக்காராம் மயக்க மருந்து கொடுத்து தூக்கி வந்ததாகவும், அவளைத் தன் இஷ்டத்துக்கு இணங்க வைக்க முயன்றதாகவும், அவளும் அவனிடமிருந்து தப்புவதற்கு தந்திரமாக நடந்து கொண்டதாகவும், கடைசியில் புதுப்பட்டினம் வழியாக இருவரும் செல்லும்போது ஒரு சாமியார் சந்தேகப்பட்டு தன்னை மீட்க வந்ததாகவும், துக்காராம் — சாமியார் இருவரும் சச்சரவு செய்து கொண்டிருக்கும்போது அவள் திடீரென்று வீட்டுக்குள் நுழைந்ததாகவும் கூறினாள். பிறகு இருவரும் பேசிக்கொண்டே ஆற்றங்கரைப் பக்கமாக நடந்து வந்தோம். “ஐயோ! ஐயோ!” என்ற சப்தம் கேட்டது. இருவரும் ஒளிந்திருந்து பார்த்தோம். கையிழந்து தவிக்கும் சாமியாரை துக்காராம் பெரிய கம்பு ஒன்றினால் அடித்துக் கொண்டிருந்தான். நான் அருகே ஓடலாமென்று நினைத்தேன். பரிமளா தடுத்துவிட்டாள். அடிபட்ட சாமியார் பிணமாக விழுந்தார். “பயலே! தொலைந்து போ! நான் ஒரு பெண்ணை அழைத்து வந்தால் உனக்கென்ன? நாயே!” என்று துக்காராம் சாமியாரை உதைத்து படுகுழியொன்றில் தள்ளினான். அதையும், நானும் பரிமளாவும் கவனித்தோம். பிறகு, துக்காராம் அவசரமாக அதைவிட்டு நகர்ந்தான். நான் பரிமளாவிடம் “நீ வீட்டுக்குப் போ; ஜாக்கிரதையாக!” என்று கூறிவிட்டு அவனைத் தொடர்ந்தேன். பொழுது விடிந்தது. அவன் மருங்கப்பள்ளம் பக்கமே வந்து கொண்டிருந்தான்.
மீண்டும் அவளைத் தேடி வந்திருக்கிறான் போலிருக்கிறது! — இது தான் சமயமென்று அவனைப் பிடித்தேன். திமிறினான். விடவில்லை. துணைக்கு சில ஆட்கள் ஓடி வந்தனர். அவனைக் கொண்டுபோய் என் வீட்டில் அடைத்து வைத்திருக்கிறேன். இப்போது வந்தால் நீங்கள் அந்தக் கொலைகாரனை கைது செய்யலாம். என் வீட்டிலே தானிருக்கிறான்” என்று கூறி முடித்தார், அம்பலம்.
சப் இன்ஸ்பெக்டரால் இந்தச் செய்திகளையும், விபரங்களையும் நம்பாமல் இருக்க முடியவில்லை.
“அப்படியா விஷயம்! நான் அந்த துரை மீதும் மாயாண்டி என்பவர் மீதும் சந்தேகப்பட்டு அவர்களைப் பிடித்து வைத்திருக்கிறேனே!” என்று தன்னை நொந்து கொண்டார் சப் இன்ஸ்பெக்டர்.
“ஐயோ! அவர்களையா? அட பாபமே!” என்று ஏதுமறியாதவர் போல எழுந்து குதித்தார் அம்பலம்.
“ஆமாம்; கையைக் கண்டுபிடித்த நாங்கள், கேசைக் கண்டுபிடிக்க முயன்றோம். இன்று மத்தியானம் தான் துரையையும், மாயாண்டியையும் கைது செய்தோம்.”
“எங்கே கைது செய்தீர்கள்?”
“அவர்கள் வீட்டிலேதான்!”
“அவர்கள் என்ன சொன்னார்கள்?”
“எதுவும் கூறவில்லை; மெளனம் சாதிக்கிறார்கள். நானும் எதுவும் கட்டாயப்படுத்திக் கேட்கவில்லை. ‘லாக் அப்’பில் தானிருக்கிறார்கள். இன்னும் ‘சார்ஜ் ஷீட்’டே போடவில்லை!”
“அய்யோ, அப்படியானால் அவர்களை விட்டு விடுங்கள்! அவர்களை விடுதலை செய்துவிட்டு என்னோடு வாருங்கள்! உண்மையான கொலைகாரனை இப்போதே ஒப்புவிக்கிறேன்.”
“ஆல் ரைட்! இப்போதே விடுவிக்கிறேன்”
துரையும், மாயாண்டிக் கிழவரும் விடுதலை செய்யப்பட்டார்கள். வெள்ளியம்பலம், துரையை முன்பே தெரிந்தவர்போல, “என்ன தம்பீ! இப்படி மாட்டிக் கொண்டாய்? நான் வரலேன்னா அவ்வளவுதான்!” என்றார்.
துரை, எதுவும் பதில் சொல்லாமலே நின்றான். “என்னய்யா, மாயாண்டி! நீருமா சிக்கிவிட்டீர்; அட பாபமே!” என்றார் வெள்ளியம்பலம், கிழவரை நோக்கி! கிழவரும் தலை குனிந்தவாறு எதையோ சிந்தித்துக் கொண்டு நின்றார். வெள்ளியம்பலம், துரையையும் கிழவரையும் தனியே அழைத்துப் போய், துரையிடம், “எல்லாம் பிறகு பேசிக் கொள்வோம் — முதலில் நீங்கள் இதை விட்டுப் போங்கள்! இந்தக் கேசில் நீ சாட்சியாக வரவேண்டி யிருக்கும்; அவ்வளவுதான்! பரிமளா ஒரு பத்திரமான இடத்திலே வைக்கப் பட்டிருக்கிறாள். நாளை இரவு பனிரெண்டு மணிக்கு நீ மனோராவுக்கு வா! அங்கே பரிமளாவை உன்னிடம் ஒப்படைக்கிறேன்!” என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டு, சப் இன்ஸ்பெக்டரிடம் வந்து, “புறப்படலாம் சார்!” என்றார். சப் இன்ஸ்பெக்டர், போலீஸ் ஜவான்கள் இரண்டு மூன்று பேரை அழைத்துக்கொண்டு அம்பலத்துடன் புறப்பட்டார்.
துக்காராம் போலீஸ் கையில் சிக்கப் போகிறானே என்ற ஏக்கத்தோடு பரிமளா உட்கார்ந்திருந்தாள். துக்காராமை விடுவிக்க வழியே கிடையாதா என்று எண்ணமிட்டாள். அவளது இளம் இதயத்திலே புயல் வேகமாக வீசத் தொடங்கியது. சிறையிலே கிடக்கும் அத்தான்! சிலந்தி வலையிலே சிக்கியிருக்கும் அப்பாவி துக்காராம்! இவர்கள் இருவரையும் விடுவிக்க வழி என்ன? கேள்விகள் வேதனைக் கணைகளாக மாறித் துளைத்தன. இப்படி ஒரு நெருக்கடியும் சோதனையும் மிகுந்த கட்டம் எந்தப் பெண்ணுக்கும் ஏற்பட்டிருக்க முடியாது என்று தனக்குள்ளே அழுதாள்.
“எவனோ ஒருவன்; ஏனோதானோவென்று வாழ்ந்து கொண்டிருக்கும் இளிச்சவாயன்! அவனுக்காக, தன்னை உயிரினும் மேலாக நினைக்கும் அத்தானை பலி கொடுப்பதா? எத்தனை எத்தனை இன்பக் கனவுகள் — எத்தனை எத்தனை எதிர்காலத் திட்டங்கள் — அத்தனையும் அழிந்து போவதா?” — கேள்வி கிளம்பியது — பரிமளா மௌனமாக அழுதாள்.
“அத்தானாவது, உயிரைத் துரும்பென மதிப்பவர்! இந்த அப்பாவியோ உயிரைக் கரும்பென எண்ணிக் கிடப்பவனாயிற்றே! அவன் சாகவேண்டிய அளவுக்கு அப்படியென்ன தவறு செய்து விட்டான்? அவனைக் காட்டிக் கொடுப்பதால் அவளுக்கு என்ன லாபம்? காதலன் கிடைப்பான் — காதலில் வெல்வாள்! ஒரு அப்பாவியின் உயிரைக் காப்பாற்ற காதலைத் தான் தியாகம் செய்யக் கூடாதா?” — மீண்டும் கேள்வி துளைத்தது!
“அப்படியே துக்காராமைக் காட்டிக் கொடுத்து துரையைக் காப்பாற்றி விட்டாலும், துரைக்கு வெள்ளியம்பலத்தால் என்ன ஆபத்து காத்திருக்கிறதோ; யார் கண்டது?” — குழப்பம் பொங்கி யெழுந்தது!
“சரியான சாட்சிகளின்றி அத்தானின்மீது குற்றம் நிரூபிக்கப்படாமல் கூட போகலாம்! அப்படி சாட்சியம் இருந்தாலும் அவருக்கு சிறை வாழ்வுதான் கிடைக்கும் — சில ஆண்டுகளுக்குப் பிறகு அவரைச் சேர வழியிருக்கிறது! ஆனால் துக்காராம் சிக்கினால், அவன் வாழ்வே துண்டிக்கப்பட்டு விடுமே!”
பரிமளா தத்தளித்தாள் — கதியற்றவனைக் காப்பாற்றுவதா? காதலைத் தியாகம் செய்வதா? அல்லது காதலனுக்கு துரோகம் செய்வதா?
இந்த மூன்றில் ஒன்றை அவள் விரைவிலே முடிவு கட்டியாக வேண்டும். கடைசியில் காதலைத் தியாகம் செய்வது என்ற முடிவுக்கே வந்து சேர்ந்தாள்.
கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்