அத்தியாயம் 34 · 35 / 52
அத்தியாயம் 34
Chapter 34
மூல ஸ்கேன் 297 (chapter-34 portion)-306
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
34
துக்காராமோ, பரிமளாவிடமிருந்து எப்போது வரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்துத் தவமிருந்தான். வெகு நேரம் வரையில் மௌனமாகவே மனப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பரிமளா, உறுதியான முடிவோடு துக்காராமை அணுகினாள். அவளுக்குத் தெரியாது, போலீசார் துக்காராமைக் கைது செய்ய வந்துகொண்டிருக்கிறார்கள் என்பது! ஆனாலும் நிச்சயமாக வருவார்கள்; துக்காராமைப் பிடித்துச் செல்வார்கள் என்பதை அவள் தெரிந்து கொண்டாள். ஆகவே, மெதுவாக “துக்காராம்!” என்று அழைத்தாள். அவளுடைய அழைப்பிலே முன்னைவிட அதிகமாக அனுதாபம் கலந்திருந்தது. அவனோ அந்த அனுதாபத்தை அன்பின் உச்சம் என்று கருதி விட்டான். ஆஸ்பத்திரியிலேயிருக்கும் நோயாளிகளுக்கு நர்சுப் பெண்கள் உதவி செய்யும்போதும், அவனை அனுதாபத்தோடு தொட்டுத் தூக்கிடும் போதும், “காதலில்லா விட்டால் அவள் கரம் நம்மீது படுமா?” என்று ஒரு சில நோயாளிகள் எண்ணித் திருப்தி அடைவார்களாம். மேற்கொண்டு முயற்சிகளிலும் ஈடுபடுவார்களாம்.
அந்த நோயாளி நிலையிலே இருந்தான் துக்காராம். அதனால் தான் பரிமளாவின் அனுதாபக் குரலை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏதோ காதல் என்பது, ஒரு ஆணும் பெண்ணும் “கண்ணே! மணியே!” என்று பேசுவது, கட்டித் தழுவுவது, கலகலவென சிரிப்பது — இதுபோன்ற நிகழ்ச்சிகளோடு முடிந்துவிடும் கதையென்று மட்டுமே அவன் நினைத்திருந்தான். அந்தக் கதையை ரசிக்க டிக்கெட் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்தான்.
‘துக்காராம்’ என்ற அழைப்பிலேயே மனதைப் பறிகொடுத்த அவன, பற்களெல்லாம் தெரியும்படியாக “ஏன் பரிமளா?” என்று கேட்டான். அவன் கண் இமைகள் அசையாமல், அவளது இதழ் இன்னும் அசையுமா என்று எதிர்பார்த்து நின்றன. காதலைத் தியாகம் செய்யப் போகிறோம்; ஒரு கதியற்றவனை விடுவிக்கப் போகிறோம் — என்ற மனத் திருப்தியோடு பரிமளா அவனை நோக்கினாள்.
“துக்காராம்! உனக்காக நான் எவ்வளவு சங்கடப் படுகிறேன் தெரியுமா?” என்றாள் பேச்சுக்குப் பீடிகையாக!
“நானும் அப்படித்தான் தவிக்கிறேன்!” என்று நாக்குழறி நின்றான் அவன்.
“உன்னுடைய உயிருக்கு இன்னும் சில மணி நேரங்களில் ஆபத்து வரப் போகிறது!” — இதைக் கேட்டதும், அவன் நடுங்கினான்.
“என்ன சொல்லுகிறாய் பரிமளா?” தடுமாறினான் அவன்.
“கொடிய வழக்கு! கொலை கேஸ்! அதிலே நீ சிக்கிக் கொண்டாய்!”
“என்ன? என்ன?”
“ஆமாம்! வெள்ளியம்பலம் இப்போது போலீசாரோடு வரப் போகிறார். உன்னைப் போலீசாரிடம் பிடித்து ஒப்படைக்கப் போகிறார்.”
“அய்யோ! எனக்கு ஒண்ணும் புரியலியே!”
“கவனமாகக் கேள்...... ஆற்றங்கரையிலே கையிழந்த ஒரு பிணம் — ஞாபகமிருக்கிறதா?”
“ஆமாம் — ஆமாம்!”
“அந்தப் பிணம் விழக் காரணம் நீதான் என்று அம்பலம் உன்னைக் காட்டிக் கொடுக்கப் போயிருக்கிறார். நீ கொலை செய்ததை அவரே நேரில் பார்த்ததாகவும் சாட்சியம் கூறப் போகிறார் — உன் தலை தப்புமா இனிமேல்?”
“தப்பாது! தப்பாது!! பரிமளா! ஏன் என் மீது இப்படி திடீர்னு ஒரு அபாண்டத்தைச் சுமத்தப் போறாரு?”
“அதெல்லாம் சொல்ல நேரமில்லை. சொல்லத் தேவையுமில்லை. எப்படியோ, உன் மீது கொலைக் கேஸ் ஜோடிக்கப்பட்டு விட்டது!”
“பரிமளா! கொலைக் கேசுன்னா தூக்கு தண்டனையல்லவா கொடுப்பாங்க?”
“இல்லை; இல்லை — பல்லக்கில் வச்சு பவனி வருவாங்க!...... துக்காராம்! நீ தப்புவதற்கு ஒரே வழிதானிருக்கிறது!”
“என்ன வழி?”
“எப்படியாவது நீ இங்கிருந்து ஓடிவிட வேண்டும்!”
துக்காராம் பலமாக யோசிக்கத் தொடங்கினான். அவன் கண் எதிரே விலங்கு — சிறைச் சாலை — தூக்கு மேடை — எல்லாம் வரிசை வரிசையாக வர ஆரம்பித்தன.
ஓடிப் போவது — ஓடிப் போவது — என்று உச்சரித்துக் கொண்டே நின்றான். சிந்தனைக்கும் நடுக்கத்திற்கும் இடையே சிலந்தி வலை ஈ போலத் துடித்துக் கொண்டிருந்த அவன், திடீரென்று சிரிக்க ஆரம்பித்தான். “அய்யோ பாவம்; பைத்யம் பிடித்துவிட்டது போலும்!” என நினைத்து அதிர்ச்சி அடைந்தாள் பரிமளா. பைத்யமில்லை என்பது அவன் பேச ஆரம்பித்த பிறகே தெரிந்தது. பரிமளா ஏதோ சாக்குப் போக்குச் சொல்லி, தன்னை பயமுறுத்தி வெளியே துரத்திவிட முயலுகிறாள் என்று அவன் எண்ணிக் கொண்டான்.
“ஓகோ! உன்னை விட்டு ஓடிவிடுவேன் என்று இப்படி பயமுறுத்துறியா? அதான் நடக்காது என்னிடம்!” என்று சிரித்துக் கொண்டே கத்தினான்.
அவளுக்கு எப்படியிருக்கும்? கிணற்றிலே விழுந்தவனை தூக்கி விட்டவனைப் பார்த்து உயிர் பிழைத்தவன், “ஓகோகோ! உன் கிணறுதானா இது! அதுதானே பார்த்தேன் — கிணறு அசுத்தமாகி விடுமே பிணம் கிடந்தால் — என்று பயந்து என்னைத் தூக்கி விட்டாயா?” என்று கேட்டால், துணை புரிந்தவனுக்கு எப்படியிருக்கும்? அந்த நிலையிலே பரிமளா இருந்தாள். என்னமோ; அவன் வெளியே ஓடாவிட்டால், அவனுக்கு அவள் இணங்கி விடுவாள் என்றும், அதற்காகவே தான் அங்கேயே இருக்க வேண்டுமென்றும் முடிவு செய்து கொண்டான். கொலைக் கேஸ், தூக்குத் தண்டனை — இதையெல்லாம் பரிமளா கூறும்போது உண்மையாகவே பயந்தான். ஓடிவிட வேண்டும் என்று அவள் யோசனை கூறிய பிறகுதான் “எப்படி ஓடுவது?” என்று சிந்திப்பதற்குப் பதிலாக “ஏன் ஓடச் சொல்லுகிறாய்?” என்று கோணல் வழியிலே கேள்வி போட ஆரம்பித்தான்.
“துக்காராம்! உண்மையாகவே சொல்லுகிறேன் — உயிருக்கு ஆபத்து வரப் போகிறது — ஓடி விடு!” என்று பரிமளா மீண்டும் கெஞ்சினாள்.
“நீயும் வா! இருவரும் ஓடி விடுவோம்!” என்று தந்திரமாகக் கூப்பிட்டான் அவன். துக்காராமின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவளும் அவனோடு ஓடி விடலாம். ஆனால், அத்தானைக் காப்பாற்றுவதற்கு, அவள் அங்கே இருந்து ஆகவேண்டுமே என எண்ணி மீண்டும் துக்காராமை வலியுறுத்தினாள், “நீ முதலில் ஓடிவிடு! பிறகு நான் வருகிறேன்” என்று கூறி. அவனா கேட்பான்? அவன்தான் பரிமளா சூழ்ச்சி செய்கிறாள் என்று முடிவு கட்டி வைத்திருந்தானே; அவன் எப்படி ஓடுவான்? காப்பாற்ற வந்தவள் மீது கேலிக் கணை பொழிந்தான். ‘செத்தால் சாகிறேன் போ!’ என்று சிரித்தான்.
அவனது போக்கு அவளுக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணியது என்றாலும், அவனை நோக்கி எதிர்பாராமல் வரும் சாவை நினைத்து அவள் சங்கடப்பட்டாள். அதற்கு தானே காரணமாகவும் ஒரு விதத்தில் அமைந்து விட்டதை யெண்ணி யெண்ணி மனம் புழுங்கினாள். எவ்வளவு தான் எடுத்துச் சொன்னாலும் அவன் தன் பேச்சை நம்ப மாட்டான் என்று திண்ணமாகத் தெரிந்த பிறகு அவனை விட்டு ஒதுங்கி வேறு பக்கம் போய் உட்கார்ந்து கொண்டாள். “நல்ல வேளை, இவள் பேச்சில் மயங்காமல் போனோம். இவள் சொன்னதை நம்பியிருந்தால் என்ன ஆவது? இவள் எனக்குக் கிடைக்காமல் போய்விடுவாளே!” என ஆறுதல் மொழி கூறிக்கொண்டு துக்காராம் கம்பீரமாக வீட்டுக்குள்ளே உலவினான். “அம்பலம் வந்ததும் அவரிடம் சொல்லி, பரிமளா திருமணத்தை முடித்துவிட வேண்டும். அப்படி முடித்துவிட்டால் தான் பரிமளா சொன்ன பேச்சு கேட்பாள். அம்பலம், என்னையும் பரிமளாவையும் காதலர் என்றே எண்ணியிருக்கிறார். பரிமளாவும் என்னைக் காதலிக்கவில்லை யென்று உண்மையைச் சொல்ல முடியாது. சொன்னால் அம்பலம் பரிமளாவை ஆபத்துக்கு ஆளாக்குவார்; இதுதான் சமயம்; அம்பலம் வந்ததும் திருமணம்!” என தனக்குள் பேசிக் கொண்டான். அவனுக்கு என்ன தெரியும்; அம்பலம் அவனுக்கு “மாமியார் வீட்டு” அழைப்பு கொண்டு வருகிறார் என்பது!
கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது. பரிமளா திடுக்கிட்டெழுந்தாள். சுவற்றின் ஒரு மூலையிலுள்ள சிறிய ஓட்டை வழியாக வெளியே பார்த்தாள். அம்பலம், சப்- இன்ஸ்பெக்டர், ஜவான்கள் நின்று கொண்டிருந்தார்கள். புரிந்து கொண்டாள், துக்காராமுக்கு அழைப்பு வந்து விட்டது என்பதை! போனால் போகிறான்; சொன்னோம்; கேட்கவில்லை; இவன் போனால் அத்தான் விடுதலை நிச்சயம் — என்று எண்ணி மகிழ முடியவில்லை அவளால்! ஏதுமறியாத அந்த வாலிபனுக்கு இவ்வளவு பயங்கரமான தண்டனை கிடைப்பதா? இதை அவளால் சமாளிக்கவே முடியவில்லை.
துக்காராம் கதவைத் திறக்கப் போனான். தாழ்ப்பாளில் அவன் கை படுவதற்கு முன்பு, பரிமளா ஓடிப்போய் அவன் கையைப் பிடித்துக் கொண்டாள். அப்போதுகூட அவளது அழகான கையின் மென்மையான ஸ்பரிசத்தால் ஏற்பட்ட இன்பத்தை நினைத்தே பெருமூச்சு விட்டான் அந்த இளிச்சவாயன்.
“முட்டாளே! இதோ பார், யார் வந்திருக்கிறார்கள் என்று!” — பரிமளா அவனை சுவற்றின் இடுக்கு வழியாக வெளியே பார்க்கச் செய்தாள். துக்காராம் தெளிவு பெற்றான். பரிமளா சொன்னது உண்மையாகத்தானிருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டான்.
“சொன்னதை நம்ப மறுத்தாயே! இப்போது என்ன சொல்லுகிறாய்? கொலைக் கேஸ் — விலங்கு வெளியிலே நிற்கிறது; விளங்குகிறதா இப்போதாவது?” — பரிமளா பரிதாபத்தோடும், கோபத்தோடும் கேட்டாள். துக்காராம் பேசாமல் நின்றான். பேச முடியவில்லை. பரிமளா, அவனிடத்திலே மளமள வென்று பேச ஆரம்பித்தாள்.
“பரிதாபத்திற்குரிய வாலிபனே! பயப்படாதே! இப்போதும் குடி முழுகி விடவில்லை. நானே உன்னைக் காப்பாற்றுகிறேன். கதவைத் திறக்காதே! அம்பலம் கதவை உடைத்துக் கொண்டு வர துணிய மாட்டார். ஏனெனில் நான் இருப்பது போலீசாருக்குத் தெரிந்து விடும் என்று பயப்படுவார். என்னை அவர் இங்கு வைத்திருக்கும் காரணம் என்ன தெரியுமா? நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்; உனக்குத் திருமணம் செய்வதற்காக என்று! எனக்கும் உனக்கும் திருமணம் செய்து வைத்துப் பார்க்க அம்பலத்திற்கு என்ன அவ்வளவு அக்கரை வந்தது? என்னை வைத்து என் காதலர் துரையைப் பிடிப்பதற்காக நடத்தப்படும் சதி நாடகம் இது! துக்காராம்! என்னை மன்னித்து விடு! உனக்கு ஏற்பட்ட இவ்வளவு தொல்லைகளுக்கும் நான்தான் காரணம்! துரை என் அன்பர்! என் உயிர்! அவருக்கு அம்பலத்தால் வரும் ஆபத்தைத் தவிர்ப்பதற்காகவே, உன்னைக் காட்டிக் கொடுத்தேன். ஆனால், உனக்கோ பெரிய ஆபத்து காத்து நிற்கிறது இப்போது! இதிலிருந்து மீள வேண்டும் நீ!” — என்று துடி துடிப்போடு பேசினாள் பரிமளா. வெளியே கதவைத் தட்டிக்கொண்டே யிருந்தார் அம்பலம்.
ராமனும், “அய்யா! அய்யா!!” என்று உரக்க சப்தம் போட்டுக்கொண்டே யிருந்தான்.
பரிமளா உண்மையிலேயே தன்னைக் காப்பாற்ற முயன்றிருக்கிறாள் என்பதைத் துக்காராம் உணர்ந்து கொண்டான். “பரிமளா” என்றான் மெதுவாக! — கண்ணீர் பெருகி விட்டது அவனுக்கு! அவளும் அழுது விட்டாள். தன்னால் வெறுக்கப்பட்ட ஒருவன்; அவனுக்காக அவள் கண்ணீர் விட்டாள்.
“இப்போது நாமிருவருமே சிக்கிக் கொண்டோமே!” என்றான் அவன்.
“இல்லை! இல்லை! உன்னை சிக்க வைப்பதாக உத்தேசமில்லை! — உன்னைக் காப்பாற்ற முடிவு கட்டியிருக்கிறேன்.”
“எப்படி பரிமளா?”
“சொல்வதைக் கேள்! இப்போது வீட்டுக்குத் தீ வைக்கப் போகிறேன். வீடு எரியும். ஊர் கூடும். அந்த சமயத்தில் எரியும் வீட்டுக்குள்ளேயிருந்து நீ ஓடி விட வேண்டும். இருட்டில் யாரும் உன்னைக் காண முடியாது!”
“நீ?……”
“நான் என் அத்தானைக் காப்பாற்றியாக வேண்டும்!”
“எரியும் வீட்டுக்குள்ளே யிருந்தா?”
“இல்லை; நானும் வெளியே ஓடுவேன்! ஆனால் உன்னோடு வர மாட்டேன். ஊராரும், போலீசாரும் கூடியிருப்பார்கள். என் அப்பாவும் அம்மாவுங்கூட இருப்பார்கள். அவர்களுக்கு நேரே சென்று, போலீசாரிடம், கொலைக் குற்றத்தை நானே செய்தேன் என்று கூறுவேன். என் அத்தான் துரையை சிறையிலிருந்து விடுவிக்குமாறு வேண்டுவேன்.”
“நம்புவார்களா?”
“நம்பாவிட்டால் போகட்டும்; குழப்பமாவது ஏற்படுமல்லவா? எப்படியோ நீ தப்பி விடுவாய். அது ஒரு திருப்தி எனக்கு! அடுத்தபடியாக, அத்தானை விடுவிக்கவும் முடியும் என்ற நம்பிக்கை யிருக்கிறது எனக்கு! எப்படி என்று கேட்காதே! எனக்குத் தெரியும் அத்தானை விடுவிக்க வழி! போலீசாருக்கு எதிரிலேயே அம்பலத்தைக் குற்றவாளியாக்க என்னால் முடியும்!”
“நீயும் குற்றவாளியென்று ஒப்புக் கொள்ளா விட்டால்............என்ன?”
“என் அத்தானை விடுவிக்க அதைத் தவிர வேறு வழி கிடையாதே துக்காராம்! உன்னைக் காட்டிக் கொடுப்பதா? காதலருக்குத் துரோகம் செய்வதா? காதலைத் தியாகம் செய்வதா? இப்படி மூன்று வழி யோசித்தேன். மூன்றாவது வழியே சரியென்று பட்டது!”
“அப்படியானால்……”
“இதோ வீட்டைக் கொளுத்துகிறேன். நீ ஓடுவதற்குத் தயாராகிக் கொள்!” என்று தீப்பெட்டியைக் கையிலே எடுத்துக் கொண்டாள் பரிமளா!
துக்காராம் அப்படியே நின்று கொண்டிருந்தான். தெருக் கதவு வேகமாகத் தட்டப் பட்டது. ராமனின் கூச்சலும் அதிகமாயிற்று. “துக்காராம்! துக்காராம்!!” என்று அம்பலம் கத்தினார். பரிமளா, உள்ளிருந்தபடியே “இங்கே, துக்காராம் இல்லை!” என்று பதில் கொடுத்தாள். அம்பலத்துக்கு தூக்கி வாரிப் போட்டது.
“இது என்ன பெண் குரல்?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.
“அவன் பெரிய வேஷக்காரப் பயல்! பெண்ணைப் போல பேசி ஏமாற்றுகிறான்” என்றார் அம்பலம்.
உள்ளே, பரிமளா ஒரு தீக்குச்சியைக் கிழித்து ஒரு துணியிலே வைத்தாள். அந்தத் து ணி யை எடுத்து கூறைப் பக்கம் போடுவதற்குக் கொண்டு போனாள். அசையாமல் நின்றிருந்த துக்காராம் ஓடிப் போய், அவள் கையைப் பிடித்துக் கொண்டான். பரிமளா “ஏன்?” என்று அதட்டினாள்.
“பரிமளா! — என்னை மன்னித்து விடு! — உன்னை மிகச் சாதாரணமாக நினைத்து கேவலமாகவெல்லாம் விளையாடி விட்டேன்” என்று அழுதான் துக்காராம்.
அவளும், அவன் கையைப் பிடித்தவாறு அழுதாள். ஒருவர் கையை ஒருவர் பிடித்திருப்பதில இப்போது அவர்கள் எந்தவிதமான தவறான அர்த்தமும் கொள்ளவில்லை. சகோதரப் பாசத்தோடு இருவரும் நெருங்கி நின்றார்கள். கண்ணீர் விட்டார்கள்.
“சரி! நேரமாகிறது — வீட்டைக் கொளுத்துகிறேன். நீ ஓடத் தயாராயிரு!” என்று மீண்டும் கூறிவிட்டு, பரிமளா எரியும் துணியுடன் திரும்பினாள். துக்காராம் அவளை அப்படியே இழுத்து கையை இறுகப் பிடித்தான். அவள் கையிலுள்ள தீயை கீழே விழச் செய்தான். அவளைப் பரபரவென்று அங்குள்ள அடுக்களை அறைக்குள்ளே தள்ளி விட்டான். பரிமளா எதுவும் தோன்றாது திகைத்தாள். அடுக்களைக் கதவை வெளியே தாளிட்டான். மளமள வென்று ஓடி வந்து தெருக் கதவைத் திறந்தான். போலீசாரின் காலில் விழுந்து, “அய்யா, நான் தான் குற்றவாளி! — துரையை விடுவித்து விடுங்கள்!” என்று கூறி ஓவென அழுதான். போலீசார் அவன் கையில் விலங்கு மாட்டி அழைத்துச் சென்றனர்.
கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்