அத்தியாயம் 35 · 36 / 52

அத்தியாயம் 35

Chapter 35

மூல ஸ்கேன் 307-317 (chapter-35 portion)

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

35

எந்த விதமான கலக்கமுமின்றி அவர்கள் பின்னே துக்காராம் நடந்தான். உலகத்தில் யாரும் செய்திட எண்ணவும் முடியாத அற்புத காரியமொன்றை சாதித்து விட்ட கர்வத்தோடு அவன் போய்க் கொண்டிருந்தான். அத்தகைய ஒரு பெருந் தியாகச் செயலைப் பாராட்டுவதற்காகவே அரசாங்கத்தார் அவன் கரங்களில் வெள்ளித் தோடா அணிவித்து வீதி வழியே பவனி நடத்திச் செல்வதாகவும் அவன் கருதினான். துக்காராம் போன்ற வாலிபர்களது உள்ளங்களில் இத்துணை மாறுதல் ஏற்படுவது வியப்புக்குரியதுதான். உலக வழக்குகளிலே சில விதி விலக்குகள் தோன்றும்போதுதான் ஒரு சிலர் மட்டுமே நினைவுக்குரியவர்களாகிறார்கள், எத்தனையோ கோடி பிறந்து மடியும் இந்த ஜெகத்தில்!

சரியாகவோ தவறாகவோ அவளிடத்தில் அவன் ஒரு மாறாத பாசத்தை வைத்து விட்டான். அம்பலம் காட்டிய மாயையிலே பல தொல்லைகளையும் அனுபவித்தான். அவனுக்கும் உயிர் தப்ப வேண்டுமென்ற ஆசைகள் பல தடவைகள் ஏற்பட்டதுண்டு. ஆனாலும், அவனது பிரேமையின் வடிவமாக எதிரே நிற்கும் பரிமளா, தன்னை வெறுக்கிறாள்; அதே நேரத்தில் தன் உயிருக்காக வேண்டி அவளையே தியாகம் செய்து கொள்ளத் தயாராகி நிற்கிறாள் — என்பதை அவனால் அதிக நேரம் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவனது இதயத்திலே தொங்கிக் கொண்டிருந்த இரக்க சுபாவத்தை உசுப்பிவிடக் கூடிய நிகழ்ச்சியாக மாறிவிட்டது அது.

வெறும் ஆவல் — வெறி — தாகம் என்பவைகள் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, தியாக உணர்ச்சி தலை தூக்கி கிளம்பி விட்டது. அவனை ஆட்டி வைத்த ‘மிருகம்’ பதுங்கி விட்டது. துக்காராம் மனிதனாக எழுந்து நின்றான். அந்த மனிதனின் “கடைசி யாத்திரை இது தானா?” என்று கேட்பது போன்ற விழிகளோடு, அடுக்களைக்குள்ளே முடங்கிக் கிடந்தாள் பரிமளா. கதவின் வெளித்தாழ்ப்பாள் திறக்கப் பட்டது; அம்பலம் உள்ளே வந்தார். அவளது இருதயத்து உதடுகள் பொல பொல வென்று “சாபங்”களை உதிர்த்துக் கொண்டேயிருந்தன என்பதற்கு அடையாளமாக அவள் கண்களிலே நீர் முத்துக்கள் உருண்டு கொண்டிருந்தன. அம்பலம் சந்தேகத்தோடும், சிறிது படபடப்போடும் கேட்டார்: “ஏனம்மா! அந்தப் பயலின் வெறிக்கு பலியாகி விட்டாயா?” என்று!

“இல்லை! பலியானது துக்காராம் தான்! என் காதல் வாழ்வுக்காக தன் வாழ்வைப் பலி கொடுத்தவர் துக்காராம் தான்! உங்கள் ஆசை மாளிகையின் அஸ்திவாரத்தைப் பலப்படுத்துவதற்காக தன் இளமைக் கனவுகளை அழித்துக் கொண்டவர் அவரே தான்!” என்று அழுதாள் பரிமளா.

“என்ன உளருகிறாய்? அவன் உன்னை உள்ளே போட்டு அடைக்கக் காரணமென்ன?”

“பெரிய வீட்டில் நீங்கள் என்னை அடைத்திருக்கிறீர்கள் — என்னை வைத்து லாபம் பெற! அவர் என்னை இந்த அடுக்களையில் அடைத்துப் போட்டார் — என்னைக் காப்பாற்ற!”

“புரியும்படி சொல்!”

“துக்காராம் — தியாகி! தியாகி!! புரிகிறதா இப்போதாவது?”

அந்த மாதிரி வார்த்தைகளையே கேட்டறியாதவர் அவர். ஆகவே பரிமளாவின் உணர்ச்சி மிகுந்த சொற்களில் பொதிந்து கிடக்கும் ஒரு வாலிபனின் வாழ்க்கைக் காவியத்தை அவரால் உணர முடியவில்லை...... “உன்னை நான் அடைத்து வைத்திருக்கிறேன் என்று தானே கவலைப் படுகிறாய் பரிமளா? ஏன் இவ்வளவு சிரமங்களை ஏற்றுக் கொண்டு திரிகிறேன் என்பது உனக்குத் தெரியுமா? எனக்கென்ன அக்கறை வந்தது? எதற்காக துரையை விடுவிக்க நான் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்? யோசித்துப் பார் கொஞ்சம்!” என்று சாகசமாகப் பேசினார் அவர்.

“யோசித்தேன்! ஏன் கஷ்டப் படுகிறீர்கள் என்றும் தெரிந்து கொண்டேன்! தியாகம்! இது ஒரு வகை தியாகம்!” என்றாள் அவள், அழுகையை அடக்கிக் கொண்டே!

“இன்றோடு உன் கஷ்டமெல்லாம் தீர்ந்து விடும், பரிமளா!”

“கொன்று விடப் போகிறீர்களார்?”

“கொல்வதா?”

“இல்லை; புதையலுக்குப் பலி, கிலி ஏதாவது வேண்டுமோ என்று கேட்டேன்!”

“பைத்யம்! பைத்யம்!! அதல்ல நான் சொல்வது. இன்று உன் காதலன் துரையோடு உன்னை அனுப்பி வைக்கப் போகிறேன். என்ன திகைக்கிறாய்? துரையும், மாயாண்டியும் விடுதலையாகி விட்டார்கள் தெரியுமா?”

அவர் எதிர்பார்த்த அளவுக்கு பரிமளா ஆனந்தக் கூத்தாடவில்லை — இந்த சேதி கேட்டு! ஏனெனில் துக்காராமின் முடிவும், இனிமேல் அம்பலத்தின் ஆட்ட பாட்டங்கள் எப்படியிருக்குமோ என்ற நிலையும், அவளைக் குழப்பத்திலே ஆழ்த்தியிருந்தன.

“பயப்படாதே பரிமளா! நாளை துரை இங்கு வருவான். நீயும் அவனும் யார் கண்ணிலும் படாமல் இந்த ஊரை விட்டு வெளியேறி விடலாம். கண்ணுக்கும் காதுக்கு மெட்டாத தூரத்திலே நீயும் துரையும் காதல் வாழ்க்கை நடத்த நானே எல்லா ஏற்பாடுகளும் செய்து தரப் போகிறேன்” என்று கூறிவிட்டு அவள் முகத்தையே பார்த்தார். தங்களின் காதல் வாழ்விலே அவருக்கு அக்கறையில்லாவிட்டாலும், ஏதோ ஒரு சதியை நிறைவேற்றிக் கொள்ள துரையை இங்கு அழைத்து வருவார் என்பதை மட்டும் நிச்சயமாக நம்பினாள் பரிமளா. மருங்கப்பள்ளத்து சிவன் கோயிலுக்கருகே இருக்கிற புதையல் தன் வாழ்வுக்குப் பூகம்பமாக வந்து சேர்ந்ததே யென்று ஏங்கினாள் பரிமளா. நாளை இரவு துரை வந்து விட்டால், எப்படியும் இந்த முரடரிடமிருந்து தப்புவதற்கு ஒரு வழி செய்ய வேண்டுமென்ற முடிவோடு பரிமளா சுருண்டு படுத்துக் கொண்டாள்.

பரிமளாவை சந்திக்க முடியுமா? அம்பலம் சொன்னது உண்மையாக இருக்குமா? — என்ற சந்தேகத்தோடு, துரையும் மாயாண்டியும் புதுப்பட்டினம் போய்ச் சேர்ந்தார்கள். போனதும் போகாததுமாக, மாயாண்டி புதையல் ரகசியத்தை மறைத்து வைத்திருந்த இடத்திற்கு ஓடினார். அவர் வைத்தபடியே இருந்த அந்த ரகசியத்தை எடுத்து மடியில் கட்டிக் கொண்டார். துரை திரும்பிவிட்ட சேதி கேட்டு அவன் நண்பர்கள் எல்லாம் ஓடி வந்தனர். மறுநாள் இரவு எப்போது வரும் — எப்போது பரிமளாவை சந்திக்கலாம் — என்ற ஆவலோடு மணித் துளிகளை விரட்டிக்கொண்டிருந்தான் துரை. மாயாண்டிக்கு மாத்திரம் அம்பலத்தின் பேச்சிலே அவ்வளவாக நம்பிக்கையில்லை. தங்களை விடுவிக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பதும் அவர்களுக்குப் புரியவில்லை. எதற்கும் — அம்பலம் குறிப்பிட்ட மனோராவுக்கு, துரை பத்து நண்பர்களுடன் போவதென்று தீர்மானிக்கப்பட்டது. அம்பலத்தினால் ஏதாவது ஆபத்து நேருமானால் அதிலிருந்து தப்புவதற்காகவே அந்த ஏற்பாடு. மாயாண்டிக் கிழவர் மருங்கப்பள்ளம் சென்று, அங்கே பரிமளா இருக்கிறாளா? — என்ற விபரத்தை அறிந்து வர வேண்டுமென்றும், அதற்கு அவரே தகுதியானவர் என்றும் தீர்மானம் நிறைவேறியது.

எதிர்பார்த்திருந்த நேரமும் வந்து விட்டது. மாயாண்டி, மருங்கப்பள்ளம் நோக்கிப் பயணமானார். துரையும் அவனது நண்பர்களும் மனோராவுக்குப் புறப்பட்டார்கள். மருங்கப்பள்ளம் போன்ற கிராமங்கள் மாயாண்டிக் கிழவருக்கு மிகவும் பழக்கமான இடங்கள். கிராமத்தார் அனைவருமே அவரிடத்திலே அனுதாபத்தோடு பேசிக் கொண்டிருப்பார்கள். அத்தகைய அனுதாபம் தான் போகிற வேலைக்குப் பயன்படும் என்று நம்பித்தான் மாயாண்டி அந்த ஊருக்குக் கிளம்பினார். முதலில், அவர் தாண்டவன் வீட்டுக்குள் நுழைந்தார். அங்கே தாண்டவனின் மனைவி சோக முகத்தோடு உட்கார்ந்து கொண்டிருந்தாள். தாண்டவனும் ஆத்திரமும் வருத்தமும் ஒன்றையொன்று முந்திட வீட்டுத் திண்ணையிலே அமர்ந்திருந்தார். மாயாண்டிக் கிழவர், “என்ன தாண்டவம் — சுகந்தானா?” என்று கேட்டபடி அங்கேயே உட்கார்ந்தார். சிறைக்குப் போன மாயாண்டி, இவ்வளவு சீக்கிரம் எப்படித் திரும்ப முடிந்தது என்ற வியப்போடு, தாண்டவன், “ஜெயிலிலேயிருந்து எப்பய்யா வந்தீர்?” என்று கேட்டார்.

“போனதும் வந்து விட்டேன். அதிருக்கட்டும்; உமது மகள் அகப்பட்டு விட்டாளா?” என்ற கேள்வியைப் போட்டார் மாயாண்டி. அதற்குத் தாண்டவன் பதில் சொல்வதற்குப் பதிலாக, பரிமளாவின் தாயாரே ஒப்பாரி மூலம் நிலைமையை விளக்கி விட்டாள், அவள் வந்து சேரவில்லை யென்று! சிறிது நேரம் அங்கே பேசிக் கொண்டிருந்து விட்டு, பரிமளாவைப் பற்றி எந்த விதமான புலனும் கிடைக்காத காரணத்தால் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினார் மாயாண்டி.

இரவும் வந்து விட்டது. மாயாண்டி, மெதுவாக வெள்ளியம்பலத்தின் வீட்டு வழியே சென்றார். அம்பலம் வீட்டில் இல்லையென்று தெரிந்து கொண்டார். அவரது வாய்க்கால் ஓரப் பங்களாவில் இருப்பாரோ என்று சிலரை விசாரித்தார். “அங்கும் இருக்க நியாயமில்லை. ஏனெனில் அந்த பங்களா இரண்டு நாளாய்ப் பூட்டிக் கிடக்கிறது” என்று ஒருவர் பதில் சொன்னார். இன்னொருவர், “அந்த வீட்டிலே ஒரு கொலைகாரன் அடைபட்டிருந்ததாகவும், அவனை நேற்றுப் போலீசார் கைது செய்தார்கள்” என்றும் தகவல் கொடுத்தார். மாயாண்டிக்கு அந்த பங்களாவைப் பற்றி சந்தேகம் ஏற்பட்டது. அதை நோக்கி நடந்தார். வேலைக்கார ராமன் பங்களாவின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவன் மாயாண்டி வருவதைப் பார்த்து, “வாங்க தாத்தா” என்று எழுந்தோடி வரவேற்றான். “வெள்ளியம்பலம் எங்கேப்பா?” என்று கேட்டுக் கொண்டே அந்த வீட்டின் ஒட்டுத் திண்ணையிலே உட்கார்ந்து கொண்டார் மாயாண்டி.

“அவரு...... அவரு...... எங்கேயோ போனாருங்க!” என்று மழுப்பினான் அவன்.

“கதவு பூட்டியிருக்கிறது; உள்ளே விளக்கு எரிகிறதே யப்பா!” என்று மாயாண்டி ராமனிடம் கேட்டார்.

“லட்சுமி களை யிருக்கணும்னு விளக்கு எரியுதுங்க” என்று சமாளித்தான் ராமன். மாயாண்டி, ராமனை அன்போடு அழைத்து, “ராமா! கொஞ்சம் பொடி வேணும்! வாங்கிட்டு வர்ரியா?” என்று அவனை அனுப்ப வழி பார்த்தார்.

“பொடி என்கிட்டே இருக்கு தாத்தா; இந்தாங்க!” என்று டப்பாவை அவரிடம் கொடுத்தான். பொடி போடும் பழக்கமில்லாத அவர், பொடியைப் போட்டுக்கொண்டு தும்மத் துவங்கினார். ராமனை எப்படியாவது வெளியே அனுப்பி விட்டால் உள்ளேயிருப்பவர்களைப் பற்றி ஏதாவது உளவு கண்டு பிடிக்கலாம் என்று மாயாண்டி துடித்தார். “ராமா, சுருட்டு இருக்கா உன்கிட்டே?” என்றார். “இதோ!” என்று எடுத்து நீட்டினான். அதையும் புகைக்க வேண்டிய சிரமம் ஏற்பட்டது. மாயாண்டியும், ராமனும் பேசிக் கொண்டிருப்பதை உள்ளேயிருந்து பரிமளாவினால் நன்றாகக் கேட்க முடிந்தது. மாயாண்டிக் கிழவரின் குரல்தானோ என்ற சந்தேகத்தோடு, அவள் சுவரின் இடுக்கு வழியே வெளியே பார்த்தாள். அவரேதான் என்று மகிழ்ந்தாள். தான் உள்ளே யிருப்பதை எப்படித் தெரியப்படுத்துவது என்று தெரியாமல் தவித்தாள். வேண்டுமென்றே தனக்கு ஏதோ தேவையிருப்பது போல, உள்ளிருந்து, “ராமா! ராமா! அது யாரு ராமா?” என்று உரக்கக் கேட்டாள். மாயாண்டிக்கு விஷயம் புரிந்து விட்டது. ராமன் நடுங்கி விட்டான். “என்னப்பா பெண் குரல்.” என்று மாயாண்டி கேட்டார்.

“எனக்கு அப்பவே தெரியும்; இந்த வீட்ல மோகினிப் பிசாசு இருக்குதுன்னு சொல்லிகிட்டே இருக்கேன்! அய்யா கேக்கிறாரா?” என்று நடுங்குவது போல நடித்தான் ராமன்.

மாயாண்டியும், பிசாசுக்குப் பயப்படுவது போல, “அப்பாடி! பிசாசுன்னா நமக்கு ஆகாதப்பா! — நான் வர்ரேன்!” என்று வேகமாக நடக்க ஆரம்பித்தார்.

ராமன் வீட்டுக்குள்ளே திரும்பி, “இந்தாம்மா! சத்தம் போடாம இரு!” என்று கூறிவிட்டுத் தன் படுக்கையைத் திண்ணையிலே விரித்துக் கொண்டான். மணி ஓடிக்கொண்டேயிருந்தது.

நடு நிசி. பரிமளாவுக்குத் தூக்கம் வரவில்லை. எப்படித் தூக்கம் வரும்? கண்ணுக்குத் தெரிந்த உதவியும் கை விட்டுப் போய் விட்டதேயென்று கவலையில் ஆழ்ந்தாள் அவள். நேரம் ஆக ஆக அவளுக்கு பயம் அதிகமாயிற்று. எப்படியாவது அந்த வீட்டை விட்டுத் தப்பிவிட வேண்டுமென்று முடிவு செய்து விட்டாள். அம்பலம் சொன்னபடி துரை வருவது சந்தேகந்தான் என்று நினைத்து விட்டாள். தான் எப்படியும் வெளியேற வேண்டும். தன்னைத் தடுப்பதற்கு துக்காராமும் கிடையாது. ராமன் மட்டுமே இருக்கிறான். அதுவும் வெளியிலே தூங்குகிறான். ஆகையால் தப்பித்துச் செல்ல இதுதான் தக்க சமயம் என்று புறப்பட்டாள். கூரையைப் பிரித்துக் கொண்டு வெளியே குதிக்க முடியுமா? — முடியாது. அதற்கான வசதிகள் இல்லை. நீண்ட யோசனைக்குப் பிறகு, மூலையில கிடந்த ஒரு கடப்பாரையை எடுத்தாள். கொஞ்சங் கொஞ்சமாக, மண் சுவற்றைப் பெயர்க்க ஆரம்பித்தாள். ‘விடுதலை; விடுதலை!’ என்ற ஆர்வத்தோடு அவள் அந்தக் காரியத்திலே நடுக்கமின்றி ஈடுபட்டாள். எப்படியும் அங்கிருந்து ஓடித் தன் அத்தானைக் காண வேண்டுமென்று முயன்றாள் பரிமளா. அவள் அத்தானோ அவளைக் காண்பதற்காக நண்பர்களோடு, மனோராவுக்கு வந்து சேர்ந்தான்.

நண்பர் கூட்டத்தின் மீது டார்ச் லைட்டின் ஒளி பட்டது. துரையுள்பட அனைவரும் திடுக்கிட்டனர்.

“துரை! வந்துட்டியா? ஏம்ப்பா இவ்வளவு துணையோடு வர்ரே?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார், எதிரே நின்ற அம்பலம்.

“இருட்டுக் காலமல்லவா?......திருடர் பயம் அதிகமாயிருக்கிறதே!” என்றான் துரை.

“மடியிலே கனமிருந்தால் தானே வழியிலே பயம்!…… சரி...... வா! வா!......” என்று அவனை அழைத்துக் கொண்டு மனோராவின் அடித் தளத்துப் பக்கம் சென்றார். நண்பர்களும் அவன் கூடச் சென்றார்கள்.

“பரிமளா எங்கே?” என்று ஆவலாகக் கேட்டான் துரை.

“உப்பரிகையிலே இருக்கிறாள். உன் வரவுக்காக காத்திருக்கிறாள்” என்று கூறினார் அவர்.

அனைவரும் மனோராவுக்குள் நுழைந்தனர். அந்த மனோராவின் ஒவ்வொரு உப்பரிகைக்கும் படிகள் உண்டல்லவா?....... அந்தப் படிகள் வழியே ஏறி முதல் உப்பரிகையை அடைந்தனர். முதல் உப்பரிகையிலிருந்து அதற்கு மேல் உப்பரிகைக்கு ஏற, துரை முதலில் முயன்றான். ஆனால் அவனது நண்பர்கள், “நீ கடைசியில் ஏறலாம்” என்று கூறிவிட்டு அவர்கள் முதலில் படிகளைக் கடந்து, இரண்டாம் உப்பரிகையை அடைந்தனர். துரையும், இன்னொரு நண்பனும், அம்பலமும் முதல் உப்பரிகையில் இருந்தனர். துரையும் படியேற முயற்சித்தான், அவ்வளவுதான்; அம்பலம், தன் கையிலேயுள்ள டார்ச் லைட்டால் தலையில் ஓங்கி அடித்தார். அவன், ‘அய்யோ’ என்று சப்தம் போடுவதற்குள், ஐம்பதுக்கு மேற்பட்ட முரடர்கள் முதல் உப்பரிகைக்குள் நுழைந்து விட்டனர். இரண்டாம் உப்பரிகையில் இருக்கும் நண்பர்கள் யாரும் கீழே இறங்க முடியாமல் தடுக்கப் பட்டனர். கீழேயிருந்த துரையின் ஒரே ஒரு நண்பனும் பலத்த காயத்திற்கு ஆளாகி மரணாவஸ்தையோடு கீழே விழுந்தான். துரை முரடர்களால் கட்டித் தூக்கப்பட்டு, வெளியே கொண்டு வரப்பட்டான். உப்பரிகையில் சிக்கிக்கொண்ட நண்பர்கள், மேலேயிருந்து கீழே குதித்து, துரையைக் காக்க முயன்றனர். முடியவில்லை. விடுபட முடியாதபடி அவர்கள் உப்பரிகையிலே சிக்கி விட்டதாலும், அவர்களைக் கீழே இறங்க விடாமல் முரடர்கள் தடுத்து நின்றதாலும், துரை வெள்ளியம்பலத்தின் கையிலே சிக்கி விட்டான்.

அங்கே, தன்னை விடுவித்துக் கொள்ள பரிமளா முயலுகிறாள். இங்கே துரையும் சிக்கிக் கொண்டான். இந்தச் செய்தியை அவளுக்குச் சொல்ல யார் இருக்கிறார்கள்? அவளோ, மிகவும் கஷ்டப்பட்டு, சுவற்றை இடித்துக் கொண்டிருந்தாள். சப்தமும் கேட்கக் கூடாது. சுவற்றிலும் துளை ஏற்பட வேண்டும். இந்தக் கடினமான காரியத்தை அவள் மன தைரியத்தோடு செய்து இறுதியில் வெற்றியும் பெற்றாள்.

சுவற்றிலே அவள் நுழையும் அளவுக்கு துவாரம் ஏற்பட்டு விட்டது. நுழையவும் முயற்சித்தாள். தெருவிலேயிருந்து ராமனின் குரல் கேட்டது.

“யார்ரா இது? கன்னம் வைக்கிறது” என்று அதட்டினான். ஓடிப் போய், தெரு வாசல் இருக்கும் வழியாக கவனித்தாள். நாய் ஒன்று அவன் கன்னத்திலே தன் முகத்தை வைத்து படுத்திருக்கிறது. ராமன் மீண்டும் கத்தினான்.

“யார்ரா இது — கன்னத்தில கன்னம் வைக்கிறது?” என்று கேட்டு விட்டு, நாயைத் தள்ளி விட்டு, புரண்டு படுத்துக் கொண்டான்.

பரிமளா மீண்டும் தைரியம் பெற்றாள். சுவற்றிலே தான் உண்டாக்கிய துவாரத்தின் வழியாக படுத்தபடியே வெளியே எட்டிப் பார்த்தாள். யாருமில்லை. நகர்ந்து நகர்ந்து வெளியே வந்து விட்டாள். “அப்பாடா!” என்று பெருமூச்சு விட்டாள். யாரோ, அவளது தோளைப் பிடித்துக் கொண்டார்கள். “அகப்பட்டுக் கொண்டோம்!” என்ற ஏக்கத்தோடு, பரிமளா அப்படியே குப்புற விழுந்தாள்.

“பரிமளா” என்று ஈன சுரத்திலே அழைப்பு வந்தது.

“யார்? மாயாண்டிக் கிழவரா?”

ஆம்! அவரே தான் — என்று பரிமளா மகிழ்ந்தாள்.

“புறப்படு! புறப்படு!!” என்று அவரும் அவசரப் படுத்தினார். இருவரும் எதுவும் பேசாமல் நடந்து கொண்டேயிருந்தார்கள். மருங்கப்பள்ளம் கிராமத்தைத் தாண்டி வெகு தூரம் நடந்து விட்டார்கள்.

எதிரே ஒரு பெரிய வண்டி வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் இருவரும் பதுங்கிக் கொண்டார்கள். வண்டி அவர்களைக் கடந்து சென்றது. அந்த வண்டியிலே தான், கை கால் கட்டப்பட்ட துரையும், அம்பலமும் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்?

கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்