அத்தியாயம் 36 · 37 / 52
அத்தியாயம் 36
Chapter 36
மூல ஸ்கேன் 317 (chapter-36 portion)-324 (chapter-36 portion)
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
36
“இந்த வழியாக எங்கே போகிறோம்?” என்று கிழவரைப் பரிமளா கேட்டாள். “மனோரா பக்கம் போய் விட்டு, புதுப்பட்டினம் போகிறோம்” என்றார் அவர்.
“அவர் எப்படியிருக்கிறார்? எங்கே யிருக்கிறார்?” என்று அவளால் கேட்காமலிருக்க முடியுமா? கேட்டாள். “புதுப் பட்டினத்திலேதான்” என்று கிழவரும் பதில் சொன்னார். பதில் சொன்னாரே தவிர, அவர் உள்ளம் ஒரே குழப்பமாக இருந்தது. அம்பலத்தின் சூழ்ச்சியால் துரைக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அவர் கருதினார். மனோராவிலே துரையிடம் பரிமளாவை ஒப்படைப்ப தாகச் சொன்னது பொய் என்பது, பரிமளா பங்களாவிலே இருந்ததால் புலனாகிவிட்டது. பரிமளா பெயரைச் சொல்லி துரையை ஏமாற்றவே அம்பலம் திட்டம் தீட்டியிருக்க வேண்டுமென்று தீர்மானித்தார் கிழவர். இந்தச் செய்தியைப் பரிமளாவிடம் சொல்லி, அவளைப் பயமுறுத்த விரும்பவில்லை அவர். அதனால் சிந்தனையில் ஆழ்ந்தவாறு மௌனமாக நடந்து கொண்டிருந்தார். பரிமளாவும் அவரைத் தொடர்ந்தபடி யிருந்தாள்.
புதுப்பட்டினம் போனதும், கிழவரிடமும் அத்தானிடமும் அம்பலத்தின் செய்கைகள் அத்தனையும் ஒன்று விடாமல் சொல்லி, அவருக்குச் சரியான தண்டனை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று மனதுக்குள் முடிவு கட்டிக் கொண்டாள். அதோடு அப்பாவி துக்காராமையும் விடுவிக்க வழி கண்டுபிடிக்க வேண்டுமென்று உறுதி கொண்டாள். இப்போதே துக்காராமைப் பற்றி மாயாண்டிக் கிழவரிடம் சொல்லிவிட அவளுக்கு ஆசை தான்! — ஆனால், அவரது மௌனத்தையும் சிந்தனையையும் அவள் கலைக்க விரும்ப வில்லை. அவரிடத்திலே அவள் வைத்திருந்த மதிப்பின் காரணமாக அவர் பின்னாலேயே போய்க் கொண்டிருந்தாள். புதுப்பட்டினம் போன தும், முதல் வேலை துக்காராமை விடுவிப்பது தான் — என்று அவள் நெஞ்சுக்கு அவளே சொல்லிக் கொண்டு இருண்ட பாதையிலே கிழவரோடு சென்றாள். நீண்ட நேர மௌனத்திற்குப் பிறகு, கிழவர் அவளைப் பார்த்து, “ஏன் பரிமளா! நீயும் துரையும் முதலில் எங்கே — எப்படி சந்தித்தீர்கள்?” என்று கேள்வி யொன்றை வீசினார். அந்தக் கேள்வி அவருக்கு அத்துணை அவசியமில்லை யென்பது அவளது பதிலை எதிர்பார்க்காமல் அவர் முன்னோக்கி நடந்து கொண்டிருந்ததிலிருந்தே நன்றாகத் தெரிந்தது. பரிமளா அந்தக் கேள்வியை அப்போது எதிர்பார்க்கவில்லை. அதனால் பதில் சொல்லத் தயங்கியவாறு சென்றாள். “ஓகோ, சொல்ல வெட்கமாயிருக்கா?” என்று கேட்டுக் கொண்டே கிழவரும் நடந்தார்.
வெட்கமாகத்தானிருந்தது அவளுக்கு! ஒரு இளம் பெண்ணைப் பார்த்து, எதிர்பாராத நிலையிலே ஒரு கிழவர் இது போன்ற காதல் சம்பந்தப்பட்ட கேள்வியை ஏவுவதென்றால் வெட்கமாக இருக்காதா என்ன? வேதனையையும் விலக்கிடக் கூடிய வெட்கம் சூழ்ந்தது அவளை! அந்த வெட்கம், அவள் நெஞ்சிலே பழைய நிகழ்ச்சிகளைக் கொண்டு வந்து நிறுத்தியது. கிழவரின் வினாவுக்கு விடை கிடைக்க வில்லையே தவிர, அந்த வேல் விழியாளின் இருதயத் திரையிலே அந்த இன்ப நினைவு நிழலாடத் தொடங்கி விட்டது.
பட்டுக்கோட்டைப் பள்ளியிலே அன்று ஆண்டு விழா. புதிதாக வந்திருந்த தலைமை ஆசிரியர் என்றுமில்லாத புதுமையாக அன்று பெரியதோர் விழாவுக்கு ஏற்பாடு செய்து விட்டார். மாணவர்களாகிய எங்களுக் கெல்லாம் தாங்க முடியாத உற்சாகம். காலை முதல் மாலை வரை படிப்பு, படிப்பு என்று இருந்த எங்கள் வாழ்க்கையிலே அந்த ஆண்டு விழாச் செய்தி ஒரு நல்ல மாற்றத்தைத் தருவதாக அமைந்தது. புதிய தலைமை ஆசிரியர் புரட்சிக் “கருத்துகளுக்கு மதிப்பளிக்கக் கூடியவர் பழைய எண்ணங்கள் — பாசி பிடித்த நம்பிக்கைகள் — அவருக்கு அறவே பிடிக்காது! அதனால் அந்த ஆண்டு விழாவையும் புதுமையான வழியிலே நடத்திக் காட்ட ஆர்வம் கொண்டார். காலையிலே மாணவ மாணவிகளின் அணிவகுப்பு! — மாலையிலே மாறு வேடப் போட்டிகள் — விளையாட்டுப் போட்டிகள் — பரிசளிப்பு விழாக்கள் — இரவு நாடகம்! நாடகத்தை மாணவர்களே நடிப்பதற்கு பயிற்சி பெற போதிய அவகாசமில்லாததால் வேறு ஒரு நாடகக் குழுவினரை நாடகத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். வருவோர் போவோரைக் கவனிக்கவும், கூட்டத்தினரை சரியானபடி சமாளிக்கவும், மாணவர் தொண்டர் படையொன்று நிறுவப்பட்டிருந்தது. மாணவிகள் தொண்டர் படையிலே நானும் ஒருத்தி.
இரவு நாடகம் ஆரம்பமாயிற்று. தொண்டர் படைச் சேவகியாக வேலை பார்க்கும் எனது கவனமெல்லாம் நாடகத்திலேயே இருந்தது. நாடகத்தின் பெயர் “நூர் ஜஹான்”. நூர்ஜஹானாக ஒரு அழகி நடித்தாள். ஆகா, அவள் நடிப்பை எப்படித்தான் வர்ணிக்க முடியும்!
“சரித்திரத்திலே வரும் நூர்ஜஹான்தானோ இவள் — இல்லை, இவள் அவளை விட அழகானவள்” என்று வியந்தனர் மாணவர். தன் கணவன் ஷேர்கான் கொல்லப்பட்ட போது அந்த அழகிக்கு ஏற்பட்ட சோகப் பெரு வெள்ளமும், அவன் கொல்லப்பட காரணமாயிருந்த தன் அழகை நினைத்து அவள் சிந்திய கண்ணீரும் — அப்பப்பா! இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது! ஆட்ட பாட்டங்களிலே — ஆனந்த லாகிரியிலே வாழ்வை விரட்ட கங்கணம் கட்டிக் கொண்ட காவலன் ஜஹாங்கீரின் கட்டிலறை மோகினியாக அவள் மாறும் கட்டம் — அதன் பிறகு நாடாளும் அவள் திறமை — எல்லாமே அற்புதம்! அற்புதம்! சரித்திரத்தில் மட்டுமல்ல; நாடகத்திலேகூட! — பூ ஏந்திய அந்தப் பூங்கோதையாக நடித்த அழகிக்கு அன்று அளவில்லாத பாராட்டுகள்! இடையிடையே சபாஷ் கரகோஷம்!
ஆண்டு விழா வெற்றிக் கட்டத்தை எட்டிப் பிடிப்பது அங்குள்ள சில பொறாமைக்காரர்களுக்குப் பிடிக்கவில்லை. “புதிதாக வந்த தலைமை ஆசிரியர் ஏதேதோ செய்கிறார் — எத்தனையோ புராண நாடகமிருக்க — இந்த சரித்திர நாடகந்தானா கிடைத்தது” — எனச் சீறியவர்கள் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து நின்றார்கள். அவர்களின் தீய முடிவுப்படி நாடகம் நடக்கும்போதே பந்தலுக்குத் தீ மூட்டப் பட்டு விட்டது! மக்கள் சிதறியோடினர். நல்ல வேளை, நாடகம் நடந்த இடத்திற்கும், பள்ளிக் கட்டிடத்திற்கும் கொஞ்ச தூரம். அதனால், தீ பள்ளிக்கூடத்தில் எட்டவில்லை. கயவர்கள் ஏற்பாடு செய்திருந்த காலிகளின் குழப்பம் ஆரம்பமாயிற்று. நடிகர்கள் மூலைக்கொருவராகப் பறந்தனர். நான் தொண்டர் படை சேவகி ஆயிற்றே — அங்குமிங்கும் ஓடி அவசர உதவிகள் செய்ய முற்பட்டேன். அப்போது நாடகத்திலே நூர்ஜஹான் வேஷம் போட்ட பெண்மணி தன்னந் தனியாக ஓடிக் கொண்டிருந்தாள். “அய்யோ, தனியாக ஓடுகிறாளே” என்று நானும் துணைக்கு ஓடினேன். அவளை அழைத்துக் கொண்டு பள்ளிக்கூடப் பக்கம் போனேன். அதற்குள் பந்தலில் கலகம் அதிகமாகி, போலீசாரின் தடியடிப் பிரயோகம் துவக்கப்பட்டு விட்டது. ஒரு புறத்திலே தீ! மறு புறத்திலே கலகம்! நானும், அந்த அழகியும் பள்ளியிலே ஒரு வகுப்பறைக்குள் போய் நுழைந்து கொண்டோம். கலகக்காரர்களிடமிருந்து அந்த நடிகையை தப்புவிக்க வேண்டுமென்று நான் பெரிதும் கஷ்டப்பட்டேன். வகுப்பறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டுக் கொண்டோம்.
‘நூர்ஜஹான்’ என்னைப் பார்த்துக் கேட்டாள்: “மிகவும் நல்லவளாயிருக்கிறாயே; நீ இந்த ஊர் தானா?” என்று!
“மருங்கப்பள்ளம் என் சொந்த ஊர்” எனக் கூறி என் விபரங்களை அவளிடம் சொன்னேன்.
அவள், என் பெயரையும், என் அப்பா பெயரையும் இரண்டு மூன்று தடவை திருப்பித் திருப்பிக் கேட்டாள். வெளியிலே கலகம் ஓய்ந்து விட்டதாகத் தெரிந்தது. தீயும் அணைந்து விட்டது. அழகி, “வெளியே போகலாமா?” என்று கேட்டாள். அதற்கு நான், “இந்த வகுப்பறைகள் சில, தொண்டர் படையின் பொறுப்பிலேதான் விடப்பட்டிருக்கின்றன; அதனால் இங்கேயே இரவைக் கழித்து விட்டு காலையில் போகலாம்” என்று சொன்னேன். அவளும் சம்மதித்தாள். நான் அவளோடு பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன். அவளது நடிப்பை அவளுக்கு நேராகவே புகழ் எனக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டது. “அசல் நூர்ஜஹான் போலவே இருக்கிறாய்” என்றேன்.
“அப்படியா?” என்று அவள் வேடிக்கையாகப் புன்னகை புரிந்தாள். ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டேயிருந்தோம்.
“நூர்ஜஹான் வேடத்திற்காகவே நீ பிறந்திருக்கிறாய்!” என்றேன்.
அதற்கு அவள், “ஏது! என்னை நீ புகழ்வதைப் பார்த்தால், நீ ஜஹாங்கீராகப் பிறந்திருக்கக் கூடாதா என்று ஏங்குவாய் போலிருக்கிறதே!” என்று குறும்பு பேசினாள்.
“நிச்சயமாக அப்படித்தான் நினைக்கிறேன்” என்றேன் நான்! அவளுக்கும் எனக்கும் அந்த ஒரு இரவிலே, ஒரு சில மணி நேரங்களிலே நல்ல நட்பு ஏற்பட்டு விட்டது.
அவள் கேட்டாள்; அதை இப்போது நினைத்தாலும் எனக்கு வெட்கமாக இருக்கிறது. “நான் ஜஹாங்கீராகவும், நீ நூர்ஜஹானாகவும் இருந்தால் எப்படியிருக்கும்?” என்று!
“நான் அவ்வளவு அழகா?” என்றேன் நாணத்தோடு!
“ஆமாம்!” என்று தலையசைத்தாள் அவள். பிறகு இருவரும் இரண்டு பலகைகளிலே படுத்து உறங்க ஆரம்பித்தோம்.
விடியற்காலை! சேவலின் குரல் கேட்டு விழித்தேன். நூர்ஜஹான் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளை எழுப்புவதற்காகப் போனேன். நல்ல தூக்கம் அவளுக்கு!
வேடிக்கை செய்யவேண்டும் போலிருந்தது எனக்கு! அவளது நீண்ட ஜடையை பலகையின் காலிலே முடிந்துவிட்டு தூரத்தில் உட்கார்ந்து கொண்டு அவளை எழுப்பினேன். அவள் எழுவாள்; ஜடை, தடை செய்யும்; சிரிக்கலாம் என்று எதிர்பார்த்தேன். எழுப்பினேன்; எழுந்தாள். ஜடை தடை செய்யவில்லை! ஆனால் ஜடைக்கும் அவள் தலைக்கும் சம்பந்தமில்லை யென்பது தெரிந்தது. அழகான சுருள் கிராப்போடு நூர்ஜஹான் எழுந்தாள். நூர்ஜஹான் வேஷம் போட்டது நடிகை அல்ல; நடிகர்! ஆம். என் உள்ளமெனும் நாடக சாலையிலே என்றென்றும் கூத்தாடும் நடிகர்! என் அழகு துரை!
முதலில் கோபித்தேன் — ஆனால் என்ன காரணமோ; அந்தக் கோபம் நீடிக்கவில்லை. பெண் வேட துரையிடம் உள்ளத்தைப் பறிகொடுத்தேன் — உறவாடினேன் — ஆண் என்று தெரிந்த பிறகு, அந்த உறவை ஒடித்துக் கொள்ள இயலாமலே போய் விட்டது. அந்த ஒரு நாள் விநோத சந்திப்பு — தினம் தினம் தித்திக்கும சந்திப்புகளாயிற்று!
துரை, என்னுடையவரானார்! நான் அவருடையவளானேன்!
இதைத்தான் பரிமளா, கிழவரிடம் பதிலாக சொல்லியிருக்க வேண்டும்! ஆனால் சொல்லவில்லை! எப்படிச் சொல்வாள்? அதனால் மெளனமாக இருந்தாள். இருவரும் மனோரா பக்கம் வந்து விட்டார்கள். கிழவர், துரையைப் பற்றிய செய்தி அறியத் துடித்தார். மனோராவின் அருகாமையிலே சென்றார். அங்கே ஏழெட்டு மனிதர்கள் பூமியிலே உருண்டு கொண்டிருப்பதை இருவரும் கண்டார்கள். கிழவர் ஓடிப்போய் கவனித்தார். அனைவரும் துரையின் நண்பர்கள் தான்! கை கால்கள் கட்டப்பட்டு கீழே உருட்டி விடப்பட்டிருந்தார்கள். கிழவர் திகைத்தார்! —
“துரை எங்கே?” என அலறினார் — யாரும் பதில் சொல்ல வில்லை! — அவர்கள் வாய்களும் கட்டப்பட்டிருந்தன.
கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்