அத்தியாயம் 37 · 38 / 52

அத்தியாயம் 37

Chapter 37

மூல ஸ்கேன் 324 (chapter-37 portion)-330

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

37

எல்லோரின் கட்டுகளையும் கிழவர் அவிழ்த்து விட்டார். அவர்களும் பெருமூச்சோடு எழுந்தார்கள். ஓரிருவர் பலத்த காயத்தோடு வருந்திக் கொண்டிருந்தார்கள்.

“துரை எங்கே?” என்று கிழவர் மீண்டும் கேட்டார் ஆவ லாக! துரை வெள்ளியம்பலத்தின் கையிலே சிக்கிவிட்ட செய்தியைச் சொன்னார்கள். பரிமளாவுக்கு புதிய கவலை வந்து சேர்ந்தது. கிழவரும் அதிர்ச்சி அடைந்தார். பரிமளா, வெள்ளியம்பலம் — துரையை எதற்காகக் கொண்டு சென்றிருக்க வேண்டும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டாள். புதையலைப்பற்றி துரையிடம் ரகசியம் சேகரிப்பதற்கான ஏற்பாடு என்பது அவளுக்கு நன்றாக விளங்கி விட்டது. அவள், மாயாண்டிக் கிழவரிடம் வெள்ளியம்பலத்தின் சூழ்ச்சித் திட்டங்கள் அத்தனையும் விரிவாகக் கூறத் தொடங்கினாள். தன்னை மனோராவுக்குத் தூக்கி வந்தது முதல், ஆற்றங்கரையிலே மீண்டும் சந்தித்து, வாய்க்கால் ஓரத்து பங்களாவில் ஒளித்து வைத்திருந்தது வரை — துக்காராம் சிக்கிய பரிதாபம் உள்ளிட்ட எல்லாக் கொடிய சம்பவங்களையும் கிழவரிடம் பரிமளா வர்ணித்தாள்.

கிழவர், வெள்ளியம்பலத்தின் காட்டு ராஜா தர்பார்களைக் கேள்விப்பட்டிருக்கிறார் என்றாலும், இவ்வளவு பெரும் சூழ்ச்சிகள் புரிவதில் வல்லவன் என்று அவர் கேள்விப்பட்டதில்லை. அதனால் பரிமளா சொன்ன நிகழ்ச்சிகளை ஆச்சரியத்தோடு கேட்டார். நிகழ்ச்சிகளை விவரித்த பரிமளா, இடையிடையே துக்காராமை எப்படியும் நாம் விடுவித்தாக வேண்டும் என்பதையும் வலியுறுத்திக் கூறிடத் தவறவில்லை. “முதலில் துரையை விடுவிக்க வேண்டும். பிறகுதான் துக்காராம் விஷயம் கவனிக்கப்படும்” என்று கிழவர் பதில் கூறிவிட்டு, கடற்கரை மணற் பரப்பில் ஆழ்ந்த யோசனையோடு உலவத் தொடங்கினார். கடலிலும், அவர் உள்ளத்திலும் அலைகள் போட்டி போட்டுக்கொண்டு ஓலமிட்டன. தான் செல்லும் பாதையிலே எப்படியெப்படி யெல்லாம் சந்தர்ப்பங்களை சந்திக்க வேண்டியதாகிவிட்டது என்கிற எண்ணத்தின் அடையாளமாகத்தான் போலும், அவ்வளவு ஆழமான பெருமூச்சு கிளம்பியது அவருக்கு!

பரிமளாவும் திசை தெரியாத கலம் போல கடல் மணலில் அமர்ந்திருந்தாள். துரையின் நண்பர்களில் ஒருவனான ஆனந்தன் என்பவன் மட்டும் அங்கே நிலவிய மௌனத்தைக் கலைக்க விரும்பினான்.

“இங்கேயே உட்கார்ந்திருந்தால் என்ன நடக்கும்? மேலே ஆக வேண்டியதைப் பார்க்கலாம்!” என்று ஆரம்பித்தான் அவன்.

கிழவரும், “ஆமாம்; அதுதான் சரி — ஆனந்தா! நீ போய் ஒரு தோணி கொண்டு வா! அனைவரும் புதுப்பட்டினம் போகலாம்” என்றார்.

“புதுப்பட்டினமா? அப்படியானால் அத்தானின் கதி?” என்று ஆயாசத்தோடு வினவினாள் பரிமளா. அவள் கண்களிலே கிளம்பிய நீரூற்றை யாரும் கவனிக்க இயலவில்லை. நேரம் அப்படி!

“கேள் பரிமளா! இங்கேயே இருந்து துரையை மீட்பதென்றால் முடிகிற காரியமா? எல்லோரும் புதுப்பட்டினம் போவோம். நமது ஆனந்தன் வீட்டில் நீ தங்கிக் கொள். துரையின் வீட்டுக்கு நீ வரக் கூடாது. ஒரு சமயம் துப்பு விசாரிக்க வரும் போலீசார் கண்ணில் பட்டு விடுவாய். பிறகு தாண்டவன் வந்து விடுவான். அதனால் ஆனந்தன் வீடுதான் பொருத்தமானது. துரையை விடுவிப்பது எப்படி என்பது பற்றி நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். அதை விபரமாகக் காலையில் சொல்லுகிறேன். இப்போது நாமெல்லாம் இங்கிருந்து புறப்படுவதே நல்லது!” என்று கிழவர் கூறவே, ஆனந்தன், தோணி ஏற்பாடு செய்யக் கிளம்பினான்.

துரையை விடுவிக்க கிழவரும், பரிமளாவும், நண்பர்களும் இங்கே யோசித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில்தான், வெள்ளியம்பலம், பரிமளா ஓடிவிட்ட செய்தியை அறிந்து துடித்துப் போனார். வேலைக்கார ராமனுக்கு சரியான ‘பூசை’ நடைபெற்றது. வண்டியிலே கட்டுண்டு கிடக்கும் துரையை வாய்க்கால் ஓர பங்களாவிலே அடைத்து வைப்பது ஆபத்து என்று அம்பலம் புரிந்து கொண்டார். வெளியேறிவிட்ட பரிமளா, ஒருவேளை பங்களா ரகசியத்தை வெளியிட்டு விடக் கூடும் என்று பயந்தார். அதனால், துரையை தனது வீட்டிலேயே அடைத்து வைக்க முடிவு செய்து, வண்டியை வீட்டுக்கு ஓட்டச் செய்தார்.

மருங்கப்பள்ளம் கிராமத்திலே வெள்ளியம்பலத்தின் வீடுதான் பெரிய வீடு. இரண்டு மூன்று கட்டுக்கள் உள்ள அந்த வீட்டிலே துரை ஒரு கைதி போல அழைத்துச் செல்லப்பட்டான். இரண்டாம் கட்டிலேயுள்ள ஒரு பெரிய அறை திறக்கப்பட்டது. அதற்குள்ளே துரை தள்ளப்பட்டான். ஆட்கள் அனைவரும் அம்பலத்தை வணங்கி விட்டு அதைவிட்டு அகன்றார்கள். அம்பலம் ஒரு அசட்டுச் சிரிப்புடன் கனைத்துக்கொண்டு துரையின் எதிரே போனார்.

துரை, ஆத்திரத்தை அடக்க முடியாமல் அவரைப் பார்த்து, “இந்த அநியாயமெல்லாம் எதற்காக? ஏன் என்னை இப்படி சித்ரவதை செய்கிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு வெள்ளியம்பலம் சிரித்துக்கொண்டே, “எல்லாம் காரியமாகத்தான்! தூங்கு இப்போது! காலையில் பேசிக் கொள்வோம்” என்று அதைவிட்டு நகர ஆரம்பித்தார்.

“இல்லை. இப்போதே சொல்லுங்கள்! ஏன் இந்தக் கொடுமை? என் பரிமளா எங்கே?” என்று ஆவலைக் கொட்டினான் துரை.

“பரிமளா பத்திரமாக இருக்கிறாள். பையா! பரிமளாவை நீ பார்க்க வேண்டுமானால் — ஒரு சிறிய நிபந்தனை இருக்கிறது!”

“என்ன நிபந்தனை?”

“அந்த ரகசியத்தை என்னிடம் தரவேண்டும்!”

“எந்த ரகசியத்தை?”

“புதையல் ரகசியத்தை!”

“……!”

“சாமியாரிடமிருந்து நீயும் மாயாண்டியும் அபகரித்தீர்களே; அந்தப் புதையல் ரகசியத்தை என்னிடம் தந்தால் நீயும் பரிமளாவும விடுதலை பெறலாம்.”

“பொய்! சாமியாரிடம் புதையல் ரகசியம் அபகரித்தோமா? இல்லவே இல்லை!”

“மறைக்காதே! மண்டை நொறுங்கும்!” என்று கூறியபடி துரையின் தலையிலே ஓங்கி அறைந்தார் அம்பலம். கட்டப்பட்டு நிற்கும் துரைக்கு அதைப் பொறுக்க முடியவில்லை. தன்னுடைய கால்களால் அம்பலத்தை எட்டி உதைத்தான். அம்பலம் சீறும் புலியானார். ‘பளார்! பளார்!’ என்று பல முறை அவன் கன்னத்திலே பலங்கொண்ட மட்டும் அறைந்தார். அவரது முரட்டுக் கரத்தில திருக்கைவால் சாட்டையும் ஏறிவிட்டது. அதை ஓங்கியபடியே துரையை அதட்டிக் கேட்டார்: “புதையல் ரகசியம் தரப் போகிறாயா இல்லையா?” என்று!

அவனோ எதுவும் பேசாமல் நின்றுகொண்டிருந்தான்.

“பதில் சொல்லடா மடையா!” என்ற பயங்கரக் குரலும், திருக்கைவால் அடியும் மாறி மாறி ஒலிக்கத் தொடங்கின. துரை, “அம்மா! அப்பா!” என்று அலறத் தொடங்கினான். “அய்யோ! என்னிடமில்லை புதையல் ரகசியம்!” என்று ஓலமிட்டான். அவனது சட்டை கிழிந்து தொங்கியது. உடம்பெல்லாம் ரத்தக் கோடுகள். நெற்றியிலே தோல் கிழிந்து ரத்தம் முகமெல்லாம் வழிந்து கொண்டிருந்தது!

“பிறகு யாரிடம் இருக்கிறது? அந்தக் கிழப் பயல் மாயாண்டியிடமா? சொல்! உண்மையைச் சொல்!” என்று கத்தினார் வெள்ளியம்பலம். அவனோ, அடி தாங்காது “அம்மா; அப்பா” என முணகிக் கொண்டிருந்தானே தவிர, அவர் கேள்விக்குப் பதில் சொல்லத் தயாராயில்லை.

“சொல்லுகிறாயா — இல்லையா?” என்று அவன் தலை முடியைப் பிடித்துக் குலுக்கினார். அவன் கழுத்தை அமுக்கிக் கொல்வதாகப் பயமுறுத்தினார். அவன் எதற்கும் அசையவில்லை.

புதையல் ரகசியம் எப்படிப்பட்டது என்பதை அவன் உணருவான். அது தன் தந்தை குமாரவடிவின் சொத்து. அவர், அது எப்படிப் பயன்பட வேண்டும் என்று விரும்பினார் என்பதை மாயாண்டி மூலம் கேள்விப்பட்டிருக்கிறான். ஆகவே, தந்தையின் இறுதி மூச்சு நிற்கும்போது எழுந்த கொரிக்கையை அவன் நிறைவேற்றிட வேண்டுமென்று உறுதி கொண்டிருந்தான். அதனால் உயிர் போவதைப் பற்றிகூட அவன் கவலைப்படாமல் இருந்தான். புதையல், அம்பலம் போன்ற அக்கிரமக்காரர்களின் கையில் சிக்கிட லாகாது என்று அவன் தீர்மானித்தான்.

“விரலுக்கு விரல் நகக் கண்களிலே ஊசியேற்றி விஷயத்தைக் கிரகிக்கிறேன். விடியட்டும்!” என்று உறுமினார் அம்பலம்!

“மலடியின் வயிற்றைக் கீறுவதால் குழந்தை வந்து விடுமோ?” என்று துரை ஏளனம் செய்தான், வலியையும் பொறுத்துக்கொண்டு!

அடிகளாலும், உதைகளாலும் தான் எவ்வளவு பயங்கரமான மனிதன் என்பதை துரைக்கு உணர்த்திவிட்டோம் என்று கருதிய அம்பலம், சிறிது சமாதானமாக, “இதைக் கேளடா தம்பி! நீ மட்டும் அந்த ரகசியத்தைச் சொன்னால், உனக்கு வேண சௌகரியம் செய்வேன் — கேட்டதெல்லாம் கொடுப்பேன்” என்று உரைத்துவிட்டு அவன் முகத்தைப் பார்த்தார்.

“மாணிக்கத் தொட்டில் செய்திருக்கிறேன்; அதற்காக வாவது ஒரு பிள்ளை பெறு — என்று மலடியைப் பார்த்து எந்த மடையனும் கேட்க மாட்டான்” என்று மீண்டும் கேலி பேசினான்; காயங்களிலே ஒழுகும் ரத்தத்தைத் துடைக்கவும் கை எடுக்க முடியாத அந்தக் காளை!

அந்தக் கேலிக்குப் பதிலாக திருக்கைவாலின் ஒலி தான் கிளம்பியது. அடித்தார், அடித்தார், அவன் சுருண்டு விழும் வரையில் அடித்தார். ஆவேசம் வந்தவர் போலக் குதித்தார்.

“உண்மையைச் சொல்லாவிட்டால் உயிர் போகும்! இந்த வீட்டுக் கொல்லைப் புறத்திலேயே உன் பிரேதத்திற்குக் குழி வெட்டப்படும்! ஜாக்கிரதை!” என்று கூச்சலிட்டார்! கதவை ஓங்கிச் சாத்தி வெளியே பூட்டிக்கொண்டு போய்விட்டார். துரையோ முணகவும் சக்தியற்றவனாகத் தரையிலே கிடந்து துடித்தான்.

பொழுது விடியத் தொடங்கியது. வலியின் வேதனை பொறுக்க மாட்டாமல் தரையிலே நெளிந்துகொண்டிருந்த துரை, களைப்புற்றுக் கண்ணயர்ந்தான். கட்டுண்ட கைகளோடும் புரண்டு படுக்கவும் முடியாமல், இம்சைப்பட்ட அவனுக்கு தூக்கந்தான் சரியாக வருமா, என்ன? விழித்துக் கொண்டான். ஆனாலும் கண்களைத் திறக்கவில்லை. இமைக் கதவை மூடியவாறு சிந்தனையிலாழ்ந்தான். “தான் யார்? எங்கே பிறந்தோம்? எங்கே வளர்ந்தோம்? எப்படியெல்லாம் வாழ்க்கைச் சகடம் சுழன்றது! கடைசியில் இப்படியும் ஒரு கஷ்டம் வந்துவிட்டதே; ஏன்?” இந்தக் கேள்விக்கு அவனால் விடை காணவே முடியவில்லை. உடலிலே ரத்தம் கசிகிறது! உள்ளத்திலும் அப்படித்தான்! உலகத்தையே மறந்து தன்னைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான். அவனது சிந்தனையைக் கலைப்பது போல அந்த அறையின் ஜன்னல் பக்கம் ஒரு சிறு ஓசை கேட்டது. கண்களைத் திறந்து பார்த்தான். பொழுது சரியாக விடியவில்லை. ஜன்னல் பக்கம் யாரோ நிற்பது தெரிந்தது. ஆம்; அது ஒரு பெண்ணின் உருவம் தான்! கருக்கல் நேரம்! யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை!

“யாரது? பரிமளாவா?” என்று கேட்டான் ஆவலாக!

அவள் பேசவில்லை; அப்படியே நின்றுகொண்டிருந்தாள்.

துரை மெதுவாக எழுந்து ஜன்னல் பக்கம் நகர்ந்தான்.

கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்