அத்தியாயம் 38 · 39 / 52
அத்தியாயம் 38
Chapter 38
மூல ஸ்கேன் 331-340 (chapter-38 portion)
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
38
இளமை சுமந்து ஒரு எழிலாள் நின்று கொண்டிருந்தாள். அவளது முகத்திலே அமைதியின் சாயல் இல்லை. ஏதோ ஒன்றை எதிர்நோக்கும் ஏக்கம் கலந்த ஆவலின் ரேகைள் படர்ந்திருந்தன. அவளது கண்கள் சிவப்பேறியிருந்தன. இரவெல்லாம் தூங்காமலிருந்திருக்கவேண்டும் அவள், அதோடு, ஆழ்ந்த சிந்தனையிலும் அவள் ஈடுபட்டிருந்திருக்க வேண்டும். அவள் ஏன் அங்கு வந்து நிற்கிறாள்? தன்னை வேடிக்கை பார்க்க வந்திருக்கிறாளா? — என்ற ஆத்திரம் நிறைந்த கேள்விகள் துரையின் நெஞ்சத்தைத் துளைத்தெடுத்தன.
“யாரம்மா நீ?” என்று கேட்டான், சினத்தையும் சீற்றத்தையும் விழுங்கிக்கொண்டு!
“இந்த வீடுதான்!” என்று மெதுவாகப் பதில் கூறினாள் அவள்.
“வெள்ளியம்பலத்திற்கு நீ……?” என்று இழுத்தாற்போல் கேட்டான் துரை.
“நீங்கள் தான் சொல்லுங்களேன்; அவருக்கு நான் என்ன வேண்டுமென்று!” — இது அவள்.
“ம” என்று மீண்டும் பேச்சை இழுத்தான்.
“ம” சரிதான்! அடுத்த எழுத்து என்னவென்று சொல்லுங்கள்; பார்க்கலாம்” என்றாள் அவள்.
“க” என்றான்.
“இல்லை — ‘கா’” என்றாள்.
“ம” — “கா” — துரைக்கு சந்தேகம் வந்துவிட்டது.
“ஆமாம் — ம — கா — ரா — ணி” என்று முத்தாய்ப்பு வைத்து ஒரு பெருமூச்சும் விட்டாள் அவள்!
“மகாராணி என்றால் பெயரா? — அல்லது…?” என்று ஐயத்தை வளர்த்துக் காட்டினான் அவன்.
“பெயரல்ல! மகாராணியேதான்! இரண்டாம் தாரம்!” என்று விளக்கினாள். துரை, மௌனமாக இருந்தான்.
“ஏன் மௌனமாக இருக்கிறீர்கள்? பெயர் என்ன என்று கேட்கவில்லையே; ஏன்?” என்று அவள் பேச்சைத் தொடர ஆரம்பித்தாள்.
துரை, ஒரு அசட்டுப் புன்னகையை மட்டும் பதிலாகத் தந்துவிட்டு சும்மாயிருந்தான்.
“பாவம் — உங்களைப் பார்க்கும்போது பரிதாபமாயிருக்கிறது. எங்கே, இப்படி கையை நீட்டுங்கள் — அவிழ்த்து விடுகிறேன்” என்று, அவள் தன் கைகளை ஜன்னலுக்கு உட்பக்கமாக நீட்டினாள். துரையும் தன் கைகளை அவள் பக்கமாக நீட்ட, அவள் அவனது கட்டுகளை அவிழ்த்து விட்டாள். வெகு நேரமாகக் கட்டப்பட்டு வலியெடுத்துப் போயிருந்த கைகளை உதறிக்கொண்டு துரை சிறிது மன நிம்மதி பெற்றான்.
அந்த நிம்மதி, ஒரு விநாடிகூட நீடிக்க முடியவில்லை. அம்பலத்தின் திட்டங்கள் எப்படியெப்படி இருக்குமோ, என்ற அச்சம் அவனை முற்றுகையிட்டுக் குழப்பியது.
அவனது மனம் எங்கேயோ சுற்றி அலைகிறது என்பதைப் புரிந்துகொண்ட அவள், அவனைப் பார்த்து, “உங்களுக்கு ஏன் இப்படி ஏற்பட்டது?” என்று கவலையோடு கேட்டாள்.
“என்னம்மா, என்னைக் கேக்கிறே? உன் புருஷன் சொல்லாமலா இருந்திருப்பார்……”
“அவர் என்னிடம் சொல்லவில்லையே!”
“ஒருவேளை…… இளம் பெண்ணிடம் இரகசியம் சொல்லக் கூடாது என்று இருந்திருப்பார்!”
“நான் என்ன இளம் பெண்ணா? நீங்கள் அப்படியா நினைக்கிறீங்க?”
“நினைக்கிறதா?…… பார்த்தாலே தெரியுதே; அதனால்தான் சொன்னேன்.”
“பார்த்தாலே என் பருவம் தெரிகிறதா? பருவம் மட்டுந்தான் தெரிகிறதா? பருவத்தின் துடிப்புகளும் தெரிகிறதா?”
அவளது பேச்சின் போக்கு, துரைக்கு பயத்தை உண்டாக்கி விட்டது. வெள்ளியம்பலத்தின் தந்திரங்களில் இதுவும் ஒன்று போலும் என எண்ணிவிட்டான் ரச வல்லியை அனுப்பி, அவள் மூலமாக புதையல் ரகசியத்தைப் பெற திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறதாக்கும் என எண்ணினான்.
“அம்மா…… கொஞ்சம் நான் தனியாக இருக்க விரும்புகிறேன். நீ போய்ட்டு வாம்மா!” என்று அறையின் வேறு மூலைக்குத் திரும்பினான் துரை.
“என்ன; அம்மா, அம்மா என்று கூப்பிடுகிறீர்கள்…… என் பெயர் மேனகா!”
“இருக்கட்டும், அதனால் என்ன? —” என்று துரை அவள் கண்ணில் படாதபடி வேறு பக்கம் சென்றான். அவளும் அதைவிட்டுப் போய்விட்டாள். துரையின் உள்ளத்திலே தீர்க்க முடியாத குழப்பங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உருவெடுத்தன. ‘யார் இவள்? இவள் ஏன் என் கட்டுகளை அவிழ்த்துவிட வேண்டும்?…… அம்பலத்திற்கு மனைவியாக வாய்த்தவள் என் மீது அனுதாபங் காட்ட வேண்டிய காரணம் என்ன? இதுவும் சூழ்ச்சிதானா? அல்லது காலத்தால் சூறையாடப்படும் இளமைக்கு இரை தேடக் காத்திருந்து, இதுதான் சமயம் என முடிவு கட்டிக் கொண்டாளா?” — பசியின் வேதனைகூட தெரியவில்லை; அவ்வளவு பெரிய புதிராக வந்து சேர்ந்தாள் மேனகா, அவனுக்கு!
ஜன்னல் பக்கம் நிழலாட்டம் இல்லையென்பதைத் தெரிந்து, அவள் போய்விட்டாள் என்று புரிந்துகொண்டு அங்கே வந்து நின்றான் துரை. வெள்ளியம்பலம், வீட்டுத் திண்ணைப் பக்கத்திலே யாரோ ஆட்களோடு உரக்கப் பேசிக்கொண்டிருப்பது அவன் காதில் விழுந்தது. என்ன பேசுகிறார் என்று கவனித்தான். புரியவில்லை. அப்போது அவசர அவசரமாக மேனகா ஜன்னலண்டை வந்தாள். தன் கையிலுள்ள ஒரு பொட்டலத்தை ஜன்னலுக்குள் போட்டுவிட்டு “பத்திரம் — பத்திரம்!” என்று கூறிவிட்டு மறைந்து விட்டாள்.
வியப்பில் சிக்குண்ட துரை, அதை எடுத்துப் பிரித்தான். இட்லிகள்! பெருமூச்சு விட்டுக்கொண்டே அவைகளை சாப்பிட ஆரம்பித்தான். மீண்டும் வந்தாள். ஒரு சிறு குவளையில் தண்ணீரை ஜன்னல் கம்பிகளின் இடுக்கு வழியே உள்ளே வைத்துவிட்டுப் போய்விட்டாள்.
துரை விழித்தான். எப்படியோ எண்ண அலைகளின் மோதுதலுக்கிடையே காலை உணவை ஒருவாறு முடித்துக்கொண்டு, களைப்போடு கீழே படுத்தான். கதவு திறக்கும் ஒலி கேட்டது. துரை, ஆவலோடு எழுந்தான். கதவு திறக்கப்பட்டது. வேலைக்கார ராமனும், ஒரு முரடனும் வந்தார்கள் உள்ளே!
“அய்யா உத்திரவு — பல் துலக்குவதற்காக பத்து நிமிஷம் வெளியே வரலாம்!” என்றான் ராமன்.
“பல் துலக்கத் தேவையில்லை!” என்று கூறினான் துரை.
“அதெல்லாம் முடியாது — துலக்கித்தான் தீரவேண்டும்” என்று கட்டளையிட்டான் ராமன்.
துரையும் அவனோடு வெளியே வந்தான். தோட்டத்துப் பக்கம் சிறையிலே வார்டர்கள் நிற்பதுபோல முரடர்கள் கையிலே கம்புடன் சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள். வார்டர்களின் பாதுகாப்பின் கீழே, கொலைக் குற்றக் கைதிகள், தங்களது கடன்களை முடித்துக்கொள்வது போலவே, துரையும் முடித்துக்கொண்டான்.
ஒரு சிறிய கிராமம் — இங்கே இப்படி ஒரு காட்டு ராஜாவின் தர்பார் நடக்கிறது — என்று தனக்குத்தானே நினைத்து நெருப்பாக மாறி நின்றான் துரை.
மீண்டும், துரை பூட்டப்பட்டான். சிறைக் கைதிகளுக்குத் தருவது போலவே, ஒரு குவளை கஞ்சியை ஜன்னல் வழியாக வைத்துவிட்டு ராமன் நடையைக் கட்டினான்.
துரை, அந்தக் கஞ்சியை கையில் எடுத்துப் பார்த்து தனக்குள்ளாக சிரித்துக்கொண்டான். அப்போது அவள் கை உள்ளே நுழைந்தது. ஒரு பீங்கான் கோப்பை! — அவள் மறைந்துவிட்டாள். சூடான டீ! — துரை, அந்தத் தேநீரை சுவைத்தான். அவன் பட்ட வேதனைகளுக்கு அந்த சூடான தேநீர் மட்டும்தான் ஆறுதல் வழங்கியது. சூடான தேநீர்! சுவையாக இருந்தது; ஆனால் அந்த சூட்சமம் புரியவில்லையே அவனுக்கு! யோசித்தான்; யோசித்தான்; முடிவுகாண முடியவில்லை. அப்போது அவள் வந்தாள், பீங்கான் கோப்பை, குவளை முதலியவை ஜன்னல் பக்கம் இருந்தன. அவைகளை எடுத்துக்கொண்டு அவனையும் ஒரு முறை கூர்மையாகப் பார்த்துவிட்டு மளமள வென்று போய்விட்டாள்.
அவளுக்கு எதிரே அம்பலம் வந்தார். “என்ன மேனகா!” என்று கேட்டுக்கொண்டே, அவளோடு திரும்பி அவரும் தொடர்ந்தார். அங்குள்ள ஒரு மேடையிலே குவளைகளை வைத்துவிட்டு, அவள் அவரது தோள்களைத் தழுவினாள். அவர் அவள் கைகளை தன் முரட்டுக் கரங்களால் அமுக்கினார்.
“அய்யோ! அய்யோ!” என்று அலறி அவள் கைகளை விடுவித்துக்கொண்டாள்.
“அப்பாடா! சிவந்துவிட்டது போங்கள்!” என்று சிணுங்கினாள்.
“சீ! போ நாயே! — இதுக்கு அழுதுகிட்டு!” என்று முதுகில் ஒரு தட்டுத் தட்டினார். அவளோ வில்லாக வளைந்தாள், அந்த அடியிலிருந்து தப்புவதற்காக. — “சூ! என்னா இது முரட்டுத்தனம்!” என்று ஊடல் புரிந்தாள்.
“அடக் கழுதை! என்னா பிகுவு பண்ணுதுடா இந்த நாயி!” என்று கொஞ்சிக்கொண்டே அவள் கன்னத்தைக் கிள்ளினார் அம்பலம்.
“அய்யோ, கையோட சதையை எடுத்துடாதிங்க!” என்று கத்தினாள் அவள்.
“பெரிய கொய்யாப்பழமாக்கும் கிள்ளினா சதை வர?” என்று கிண்டல் செய்தார் அவர்!
அவள் ஒரு ஆழமான மூச்சு விட்டு நின்றாள். அந்தப் பெருமூச்சிலே தான் எத்தனை எத்தனை எண்ணங்கள்!
அவள், அம்பலத்திற்கு மனைவியாகி மூன்று வருடங்கள் முடியப் போகின்றன.
“மேனகாவுக்கு என்னாடி; எவனாவது இந்திரன் கிடைக்காமலா இருப்பான்?” — இப்படி ஊரார் பேசிக் கொண்டிருக்கும்போது அவளும் உள்ளுக்குள் மகிழ்வாள்.
திருத்துரைப்பூண்டி அவள் சொந்த ஊர். நடுத்தரமான குடும்பத்தைச் சேர்ந்தவள். நாலுபேரைப் போல நமது பெண்ணும் படிக்க வேண்டுமென்று அவள் பெற்றோர் ஆசைப்பட்டனர். அவளும் படித்தாள். படிப்பும் முடிந்தது. மாப்பிள்ளை தேடும் படலம் ஆரம்பமாயிற்று.
மருங்கப்பள்ளம் கிராமத்திலே சொந்தக்கார மாப்பிள்ளை ஒருவன்; அவனும் படித்தவன், அவனைக் கல்யாணம் செய்து கொள்வதிலே மேனகாவுக்கும்கூட ஆசைதான்.
திருமணம் நிச்சயமாயிற்று. மருங்கப்பள்ளத்திலே மாப்பிள்ளை வீட்டிலே திருமணம், முதல் நாள் பெண் அழைப்பு. காலையிலே திருமணம். இரவு பெண் வீட்டாருக்கும், மாப்பிள்ளை வீட்டாருக்கும் பெரிய தகராறு!
போடுவதாக வாக்களித்த நகைகளை மாப்பிள்ளை வீட்டார் போடவில்லை. அதன் காரணமாக மேனகாவின் தந்தை சச்சரவை வளர்க்க ஆரம்பித்தார். பேச்சு முற்றி, இரு தரப்பாருக்கும் கை கலக்கிற நிலைமை ஏற்பட்டு விட்டது.
மேனகாவின் தந்தை ஆத்திரக்காரர், மாப்பிள்ளையின் தந்தையை அடித்துவிட்டார். தந்தை தாக்கப்பட்டதை மாப்பிள்ளையால் சகிக்க முடியவில்லை. மாமனார்மீது பாய்ந்துவிட்டான். மாமனாரும் மாப்பிள்ளையென்று பார்க்காமல் அவன் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டார். கொலை விழுந்த பிறகு கலகம் அடங்கிவிட்டது…… வெள்ளியம்பலம் அந்த நேரத்தில் குறுக்கிட்டார்.
மேனகாவின் தகப்பனாரை தூக்கு மேடையிலிருந்து காப்பாற்றுவதாயிருந்தால், தனக்கு மேனகாவைத் திருமணம் செய்துவைக்க வேண்டுமென்று நிபந்தனை விதித்தார்.
கொலை செய்யும் வரையிலே, தனக்காகக் காத்திருக்கும் தூக்கு மேடையைப்பற்றி நினைத்துப் பார்க்காத மேனகாவின் தந்தை, இப்போது அஞ்சி நடுங்க ஆரம்பித்தார்!
அப்பாவைக் காப்பாற்றித் தீரவேண்டிய பொறுப்பு, தன் தலையில் விழுந்துவிட்டதை மேனகா உணர்ந்தாள். வெள்ளியம்பலம் மேனகா விவாகம் உடனடியாக நிச்சயிக்கப் பட்டது. மாப்பிள்ளை இறந்தது கொலையல்ல; தற்கொலையென்று பஞ்சாயத்தார் முடிவு செய்தனர். மாப்பிள்ளை வீட்டாரும் வெள்ளியம்பலத்தின் பயமுறுத்தலுக்கு அடங்கி ஒடுங்கிப் புழுங்கிக் கிடந்தார்கள்.
மேனகா, அம்பலத்தின் மனைவியானாள். அதுமுதல் ‘கழுதை’, ‘நாய்’ என்ற காதல் வர்ணனைகளை அவள் காதுகள் கேட்கத் தவறவில்லை. அவள் பள்ளியிலே படித்திருக்கிறாள், தமிழ் இலக்கியங்கள்! நிலவே! தேனே! மலரே! மணியே! அன்பே! உயிரே! அருமருந்தே! — இப்படியெல்லாம் காதல் யாழை மீட்டும் காதலர்களை சந்தித்திருக்கிறாள், காவிய ஏடுகளில்!
ஏட்டில் கண்ட எழிலோவியம் — வீட்டு வாழ்விலும் காணலாம் என அவள் கட்டிய கோட்டைகள் ஏராளம்!
ஆனால், சந்தர்ப்பம் ரோஜா மலரை இரும்புக் கரங்களில் ஒப்புவித்து விட்டது! செந்தாமரைக் குளத்திலே காட்டெருமை விளையாடும் சூழ்நிலை எப்படியோ திடீரென அமைந்து விட்டது!
மேனகா, திருமணமான சில மாதம் வரையில் — தந்தைக்காக தான் செய்த தியாகத்தை எண்ணி பெருமைப்பட்டாள். பிறகோ, அவளது மென்மை நிறைந்த பருவத்தின் படையெடுப்பு பலமாகி விட்டது.
முதுமையும் முரட்டுத்தனமும் கொண்ட முள்வேலிக்குள்ளே, எங்கோ ஒரு மூலையில் பறிப்பாரின்றி வாடும் முல்லைக் கொடியாக அவள் கிடந்தாள். நாய்; கழுதை; — வாடி; போடி — இப்படி வார்த்தைகளைக் கேட்பதையே அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தென்றலை விரும்பினாள் — நானும் காற்றுத்தானே; என்று புயல் அடித்துக் கொண்டிருக்கிறது அவள் வாழ்விலே!
இந்த நிலையிலேதான் துரை கொண்டுவரப்பட்டான். அம்பலம், புதையலைத் தேடி என்னவெல்லாமோ செய்கிறார் என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும். அவருக்கு அந்த புதையல் கிடைப்பதற்கு முன் — தான் தேடி வாடிய புதையல் தனக்குக் கிடைத்து விட்டதாக அவள் கருதினாள்.
“கன்னம் என்ன கொய்யாப் பழமோ?” என்று கேட்கும் வெள்ளியம்பலத்தின் வரட்டுக் குரலுக்கும், “தித்திக்கும் தேன் கரும்பே! கொய்யாக் கன்னம் கொடு!… கோவை இதழ் தந்திடு — கோமளமே! நான் பதிலுக்கு பத்தாயிரம் முத்தாரம் தந்திடுகிறேன்!” என்று தழுவிடும் வாலிபத்தின் முழக்கத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை மேனகா எண்ணி யெண்ணி ஏங்கிய காலத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டதாக அவள் உறுதி கொண்டாள்.
“துரை, ஆணழகன்! அவன் என் விடுதலைக்கு சம்மதித்தால், நான் அவன் விடுதலைக்கு சம்மதிப்பேன்” என்று யார் காதிலும் விழாமல் மெதுவாக — ஈனசுரத்தில் கூறிக்கொண்டாள்.
வெள்ளியம்பலம், துரை அடைபட்டிருக்கும் அறைக்கு வந்தார். ஜன்னல் பக்கம் நின்று அவனைப் பார்த்தார்.
“என்னப்பா! உண்மையைச் சொல்லப் போகிறாயா; இல்லையா? என்ன முடிவு செய்திருக்கிறாய்?” என்று கம்பீரத் தொனியிலே கேட்டார்.
“முடிவு செய்துவிட்டேன் — சாவதற்கு!” என்றான் துரை!
“யமனே வந்து, கணக்கு நோட்டைக் காட்டி, உன்னைக் கூப்பிட்டாலும் — நான் அனுப்ப மாட்டேன்; மார்க்கண்டேயனைக் காப்பாற்றிய பரமசிவனைப் போல நான் உன்னைக் காப்பாற்றுவேன்; ஏன் தெரியுமா? புதையல் எனக்குக் கிடைத்த பிறகுதான் உன் புதையல் நடைபெற வேண்டும். இந்த பார் துரை! நான் சொல்வதைக் கேள்; அந்த ரகசியத்தை என்னிடம் சொல்லிவிடு; அது எங்கேயிருக்கிறது என்று காட்டிவிடு! இருவருமே பங்கு போட்டுக்கொள்வோம்!” என்று சமாதானம் பேசினார் அவர். துரை மெளனமாக நின்றான். அப்போது தெருவிலே குடுகுடுப்பைக்காரனின் குரல் கேட்டது.
“இந்த ஊட்டு அய்யாவுக்கு நல்லகாலம் பொறக்குது! — பெரிய அதிர்ஷ்டம் வரப்போகுது! அதிர்ஷ்டம் வரப்போகுது! திடீர்னு அதிர்ஷ்டம் வரப்போகுது!”
அம்பலம், அந்த வார்த்தைகளை ஆவலோடு கேட்டார். துரையை விட்டகன்று, தெருப்பக்கம் போனார்.
“ராத்திரிகூட, விடியக்காலையில சொன்னான் சாயபு! சுடுகாட்ல உதயமானதை சொன்னான். அய்யாவைப் பாரு! மகாராஜா மாதிரியிருக்காரு! அய்யாவுக்கு திடீர்னு அடிக்கப்போவுது அதிர்ஷ்டம் — அய்யா ஒரு காரியத்துக்காக கஷ்டப்படுராரு — அதை ஒருத்தன் தட்டிக்கிட்டு போகப் பார்க்கிறான் — நடக்காது அது! அய்யாவுக்கு நல்லகாலம் பொறக்குது! ஐஸ்வர்யம் வருது! அய்யா கட்டுற ஒரு கிழிஞ்ச துணி — அம்மா தூக்கிப்போட்ட ஒரு பழைய சீலை — ஏதாச்சும் கேக்கிறான் சாயபு!…… நல்லகாலம் பொறக்குது! குடு! குடு! குடு! குடு! கொடு! கொடு! கொடு! கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக்கிட்டு — பூமியைப் பொளந்துகிட்டு கொடுக்கப் போவுது அய்யாவுக்கு!”
அம்பலத்திற்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. குடுகுடுப்பைக்காரனை உள்ளே வருமாறு கூப்பிட்டார்.
கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்