அத்தியாயம் 39 · 40 / 52

அத்தியாயம் 39

Chapter 39

மூல ஸ்கேன் 340 (chapter-39 portion)-347

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

39

குடுகுடுப்பைக்காரன் சிரித்த முகத்தோடு உள்ளே வந்து அம்பலம் குறிப்பிட்ட இடத்திலே உட்கார்ந்து கொண்டான்.

“ஏய், குடுகுடுப்பாண்டி — என்னா நல்லகாலம் வருதுன்னு சொல்றே? கொஞ்சம் விபரமாச் சொல்லேன்!”

“நானா சொல்றேன்? சத்தி மாகாளி — பகவதி சொல்ரா! அய்யாவுக்கு அஷ்ட ஐஸ்வர்யமும் கிடைக்கும். அய்யாவுக்கு கெடுதி நினைச்சவன் ‘அய்யோ’ன்னு போறான். ‘அய்யோ’ன்னு போறான்.”

“ஏய், சத்தம் போடாதேப்பா! கேக்கிறத்துக்கு பதில் சொல்லு!… அய்யா, ஒரு காரியத்துக்காக கஷ்டப்படுராருன்னு சொன்னியே; அது என்னா காரியம்? சொல்லு பார்ப்போம்!”

“விடியக் காலையிலே கூடச் சொன்னேன் அய்யா மெனக்கெடும் காரியம் காயா பழமான்னு அய்யா கவலைப்படுராரு கவலைப்பட வேண்டியதில்லை பூமியைப் பொறுத்த விஷயம் — அதுக்காகத்தான் அய்யா சிரமப்படுராரு. சிரமமில்லாம ஜெயமாகப் போகுது! காரியம் ஜெயமாகப் போகுது!”

“ஜெயம் இருக்கட்டும்; காரியத்துப் பேரைச் சொல்லேன். பூமியைப் பொறுத்த விஷயம்னா என்னா?”

“பகவதி, சுருக்கமாத்தான் சொல்லுவா! அவ்வளவு விபரமா சொல்ல மாட்டா! பூமியைப் பொறுத்த விஷயம் மண்ணைப் பொறுத்த விஷயம்!”

“அப்படின்னா; நிலம் வாங்குவேனா?”

“ஆமாம் வயல் வாங்குவார் அய்யா — பொன் வயல் வாங்குவாரு! சந்தோஷமா வாங்குவாரு! — சாயபுக்கு ஒரு கிழிஞ்ச துணி, பாவாடை, ஏதாவது கொடுங்கிறான். மகராசா மாதிரி யிருக்காரு!”

“பொன் வயல் வாங்குவேனா? ஏய் வாங்குவேனா? கிடைக்குமா? அதைச் சொல்லு!”

“கிடைக்கும்னு சொல்ரா, பகவதி! விடியக் காலைகூட சொன்னேன், இந்த வீட்டுக்கு ‘லக்ஷ்மி’ வரப்போறான்னு!”

“பூமியிலேயிருந்து என்னாப்பா கிடைக்கும்? புதையா?”

“பொன்னைப் பொறுத்த விஷயந்தான் கிடைக்கும்னு சொல்ரா பகவதி! அதுவும் சீக்கிரம் கிடைக்கும்னு சொல்ரா!”

“அப்படியா?”

“அய்யா ஒரு இடத்திலே நம்பிக்கை வச்சு அலையிராரு! — அந்த இடத்திலே அய்யாவுக்கு ஜெயமாகாது! அய்யாவுக்கு ஜெயமாகப் போற எடம் வேறன்னு சொல்றா பகவதி!”

“எந்த இடம்? எந்த இடம்?”

“அய்யா முயற்சி பண்ற காரியத்துக்கு, இன்னொரு மூதேவி மனுஷன் முயற்சி பண்ணப் போறான். சரியான சமயத்திலே அவன் மாட்டப் போறான்!”

“மாட்டப் போறானா? மாட்டிகிட்டான்!”

“அய்யா சொல்ற மனுஷனல்ல — சாயபு சொல்ற மனுஷன் — சாகிற வயசு உள்ள சண்டாளன்! அவன் அய்யோன்னு போகப் போறான், அம்மா பகவதி சொல்ரா! விடியக்காலைகூட சாயபு சொன்னான் — ஒரு கிழிஞ்ச துணி பாவாடை உங்கத் தங்கக் கையாலே, இந்தான்னு முகத்தில் வீசுங்க, மவராஜா — நல்லகாலம் பொறக்குது!”

“சாகிற வயது உள்ளவன் எனக்கு துரோகம் நினைக்கிறானா? — இந்தாப்பா சாயபு! கொஞ்சம் நிதானமா யோசனை பண்ணி சொல்லு! யார் அவன்?”

குடுகுடுப்பைக்காரன் சிறிது யோசனை செய்துவிட்டு பிறகு அம்பலத்தின் முகத்தைப் பார்த்து மளமளவென்று பேச ஆரம்பித்தான்.

“யோசிச்சான் சாயபு! பகவதி சொல்ரா, ஒரு வயசான மனுஷன் — வஞ்சக மனுஷன் — அவனுகிட்டத் தான் இருக்கு அய்யா தேடி அலையிற சொத்துன்னு! தோண்டி எடுக்கப்போறான் — ஆனா, అది அவன் கையில் கிடைக்காமல், அய்யா கையில்தான் கிடைக்கும்னு பகவதி சொல்ரா!”

“இந்தா சாயபு — விபரமாகச் சொல்றேனே: இந்த ஊர்ல புதையல் இருக்குன்னு எல்லோரும் தேடி அலையிறாங்க. எனக்குக்கூட கொஞ்சம் அதில் சபலந்தான். அது எனக்கு நிச்சயம் கிடைக்குமான்னு உன் பகவதியைக் கேட்டுப் பாரு!”

“கேட்டான் — கேட்டுட்டான். அய்யாவுக்கு பூமி தோண்டுற மந்திரம் தெரியிலே; தவிக்கிராருன்னு பகவதி சொல்ரா! அய்யா அதைப்பத்தி கவலைப்பட வேண்டிய தில்லைங்கிறான் சாயபு! இன்னிக்கோ, நாளைக்கோ, நடு ராத்திரியிலே அய்யாவோட சொத்தை அபகரிக்கப் போறான் அந்த மூதேவி மனுஷன்!”

“ஆ! அப்படியா?”

“ஆமாங்கிறா பகவதி!”

“அய்யோ”

“ஆனா — அவன் அபகரிக்கிற நேரத்திலே அய்யாக்கிட்ட சிக்கப் போறான்னும் சொல்றா பகவதி!”

“இன்றைக்கோ, நாளைக்கோ?… உண்மையாகவா?… புதையல் எடுக்கத் திட்டம் போட்டு விட்டார்களா?”

“ஆமாம் — இரண்டு பேரு சேர்ந்து எடுக்கிறதா முடிவு பண்ணினாங்கன்னு சொல்றா பகவதி! அதுக்குள்ள ஒருத்தன் கண்காணாம போயிட்டானாம் — ஒருத்தன் மட்டும் எடுக்கப்போறானாம்! பகவதி சொல்ரா — அய்யாவுக்கு அதிர்ஷ்டம் அடிக்குது! ஒரு கிழிஞ்ச துணி — பழசு, பட்டு, பாவாடை — உங்களோட தங்கக் கையாலே சாயபுக்கு கொடுக்கணுங்கிறான்.”

குடுகுடுப்பாண்டியின் இந்த வார்த்தைகள், அம்பலத்திற்கு புதிய தெம்பை உண்டாக்கின. அவன் சொல்வது மாயாண்டியைத் தானிருக்கும். மாயாண்டிக் கிழவன்தான் புதையலை எடுக்க முயற்சி பண்ணப் போகிறான். அந்த சமயம் பார்த்து அவனைப் பிடித்துவிட வேண்டும் என்று மனதுக்குள்ளே முடிவு செய்துகொண்டார்.

குடுகுடுப்பைக்காரன் மேலும் தொடர்ந்தான்:

“அய்யா நினைக்கிராரு; சாயபு சொல்றது சரியா இருக்குமான்னு! அய்யாவுக்கு ரெண்டே எதிரிதான் இருக்கான்! ஒருத்தன் ஜெயில்ல கிடக்கான்! ஒருத்தன் இன்னைக்கோ நாளைக்கோ சாவப் போறான்!”

“யாருப்பா சாகப் போறா?”

“அய்யா மனசு அப்பட்டமா தெரியுது! முதல் எழுத்து மாவன்னா உள்ள மனுஷன். அந்தப் பேர்வழியை அய்யா தொலைக்கப் போராரு! ஆனா ஒண்ணு அய்யாவுக்கு சொல்லி வைக்கிறான் சாயபு; அந்த வயசான மனுஷனை கொன்னா காரியம் ஜெயமா முடியாது! ஜெயமா முடியாது! ஜெயில்ல இருக்கிறவனையும் கொல்லக் கூடாதுங்கிறா பகவதி!”

“ஜெயில்ல யாரு இருக்கா?” என்று சந்தேகத்தோடு கேட்டார் அம்பலம்.

“ஜெயில்னா ஜெயிலே அல்ல! — அய்யாவுக்குக் கீழே அடங்கிக் கிடக்கிறான். அவனை விடக்கூடாதுங்கிறா பகவதி! விட்டா காரியம் கெட்டுடும்!”

“குடுகுடுப்பாண்டி! நீ மகா மேதாவியாயிருக்கிறே மகா கெட்டிக்காரன்! என் மனசிலே உள்ளதை யெல்லாம் அப்படியே புட்டுப் புட்டு சொல்லிவிட்டாயே. ஆனா ஒண்ணு; உனக்குத்தான் மந்திர தந்திரம், மாயம், வசியம் எல்லா வேலையும் தெரியுமே — அதைக்கொண்டு ஒரு காரியம் செய்யேன் பார்ப்போம்!”

“அய்யா சொன்னா அட்டி ஏ துங்கிறான் சாயபு! ஒரு கிழிஞ்ச புடவை கிழிஞ்ச வேட்டி — உடைஞ்ச செம்பு தவலை ஓட்டை உடைசல் பாத்திரம் போதுங்கிறான்…….”

“சரி — சரி — வேணுங்கிறது தர்ரேன். நான் சொல்ற ஆளை இங்கேதான் அடைச்சு வச்சிருக்கேன். அவனுகிட்ட வசிய மருந்து வேலை செய்து, எப்படியாவது அவனுகிட்டயிருந்து பெரிய உண்மையை நீ கிரகிக்கணும்!”

“அப்படியே சாயபு செய்வான். சந்தேகம் வேண்டாங்கிறா பகவதி. சுடுகாட்டு எலும்பு — இதோ இருக்கு! அய்யா, கவலைப்படவேண்டாம். கர்ப்பஸ்த்ரீயோட மணிக்கட்டு எலும்பு இது! கல்லையும் கரைக்கலாம். கடலையும் வற்ற வைக்கலாம் என்கிறாள் பகவதி!”

“சரி — அப்படியானால் வா! வசியத்தை ஆரம்பி! ரகசியத்தை வாங்கித் தா! வா! வா!”

“ஆகூம்! சாயபு அப்படி வரமாட்டான். அந்தப் பாவியிருக்குற இடத்திலே சாயபுவையும் கொண்டுபோயி அடைச்சுபோட்டது மாதிரி போடனுங்கிறாள் மலையாள பகவதி! அவனோட சாயபுவும் ஒரு கைதி மாதிரி கிடப்பான் — வசிய வேலை நடக்கும். ரகசியத்தைக் கக்கி விடுவான்.”

“ஆ! சபாஷ்! அப்படியே செய்கிறேன்!” என்று குடுகுடுப்பைக்காரனை அழைத்துக்கொண்டு, அம்பலம் உள்ளே கிளம்பினார். அம்பலமும், குடுகுடுப்பாண்டியும் பேசிக்கொண்டிருக்கும்போது, இதுதான் சமயமென்று, மேனகா துரை பூட்டப்பட்டுள்ள அறையின் ஜன்னல் பக்கமாக தன் முகத்தைக் காட்ட ஆரம்பித்தாள்.

துரையோ, அவளைக் கவனிக்காதது போல கண்ணை மூடிக்கொண்டு தூங்கும் பாவனையில் படுத்திருந்தான்.

“என்ன தூக்கமா?”

பதில் இல்லை.

“சாப்பிட்ட களைப்பாக்கும்!”

அதற்கும் பதில் இல்லை.

துரையின் மீது ஒரு சிறு கல் விழுந்தது. விழித்துப் பார்த்தான். திரும்பி வேறு பக்கம் படுத்துக்கொண்டான்.

மேனகாவுக்கு நிற்க இயலவில்லை. கூண்டிலே இருப்பது துரையல்ல; தானே இருப்பதாக அவள் கற்பனை செய்துகொண்டாள், துரைக்கு ஏற்பட்டுள்ள வேதனையில் தன்னோடு பேசுவது போன்ற இன்ப நிகழ்ச்சிகளை அனுபவிக்கும் எண்ணம் பிறக்கவில்லை போலும் என அவள் கருதினாள். அணை போட்டுத் தடுத்து வைத்திருந்த புது வெள்ளம் பொங்கியெழுந்து, அணையைப் பிளந்தெறியத் துவங்கிவிட்டது. அதன் எடுத்துக்காட்டாகத்தான் மேனகாவின் கண்களிலே புரட்சி வர்ணம் தோன்றியது.

“இப்படி வாருங்களேன் ஒரு சேதி” என்றாள் மேனகா!

அவன் வரவில்லை. அந்த சமயம் அம்பலமும், குடுகுடுப்பாண்டியும் அங்கே வருவதைக் கண்டு, மேனகா மறைந்துவிட்டாள்.

அம்பலம் அறையின் கதவைத் திறந்து குடுகுடுப்பாண்டியை உள்ளே தள்ளுவதுபோல தள்ளிவிட்டார். அவனும், “அய்யா! அய்யா! சாமி, சாமி! என்னை விட்டுடுங்க மகராஜா!” என்று கத்தியபடி உள்ளே விழுந்தான்.

அம்பலம், குடுகுடுப்பாண்டி ஆகிய இருவரின் நடிப்பையும் உணர முடியாமல் துரை விழித்தான்.

“இரண்டு பயல்களும் இங்கேயே கிடக்கட்டும்!” என்று உறுமிக்கொண்டு அறையைப் பூட்டிக்கொண்டு நகர்ந்தார், அம்பலம்!

தூரத்திலிருந்தே இதைக் கவனித்த மேனகாவுக்கு கவலை தாங்க முடியவில்லை. கோபமும் பிறந்துவிட்டது! துரையோடு, தான் தனித்துப் பேசி, தன் காதலை வெளியிட முடியாமல், யாரோ ஒரு குடுகுடுப்பைக்காரனைக் கொண்டு வந்து வைத்துவிட்டாரேயென்று அவள் குமுறினாள்.

துரை, குடுகுடுப்பாண்டியின் முகத்தை உற்றுப் பார்த்தான். எங்கேயோ பார்த்த முகத்தைப் போல இருந்ததோ என்னவோ; அவனையே வெறிக்கப் பார்த்தான். குடுகுடுப்பாண்டி, துரையிடம் எதுவுமே பேசாமல், அறையில் ஒரு மூலையிலே போய் உட்கார்ந்துகொண்டான். துரை, அவனைப் பார்த்து, “நீ யார்” என்றான். அதற்கு பதில் சொல்லாமல், அவன், ‘குடுகுடு’ வென குடுகுடுப்பையை ஆட்டிக் காட்டினான்.

“யாரப்பா?” என்றான் துரை, சிறிது ஆத்திரமாக!

“நான் மலையாள பகவதி!” என்றான் குடுகுடுப்பாண்டி!

மேனகா, ஜன்னல் பக்கமாக ஒருமுறை வந்து பார்த்து விட்டு, துரையின்மீது விழியை வீசிவிட்டு அகன்றாள். மேனகா வந்து போனதை, குடுகுடுப்பாண்டி கவனித்தான். அவன் கவனிப்பதை துரையும் கவனித்தான்.

கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்