அத்தியாயம் 40 · 41 / 52
அத்தியாயம் 40
Chapter 40
மூல ஸ்கேன் 348-355 (chapter-40 portion)
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
40
அவனோடு அவள் தாராளமாகப் பேச முடியாதபடி, தான் ஒரு தடையாக வந்து சேர்ந்துவிட்டோம் என்று மலையாள பகவதி கருதினான் போலும்! அதனால் என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக கண்களை மூடிக்கொண்டு தூங்குவதுபோல் பாசாங்கு செய்தான்.
சிறிது நேரம் சென்றதும், அறையில் உலவிக்கொண்டிருந்த துரையும் ஜன்னல் பக்கம் போய் நின்று, ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். தூங்குவதுபோல் நடித்துக்கொண்டிருந்த குடுகுடுப்பைக்காரன் மெதுவாக இமைகளைத் திறந்து பார்த்து அறையில் நடப்பவைகளை ஆவலாகக் கவனித்துக்கொண்டிருந்தான்.
மேனகா ஜன்னல் பக்கம் வந்துவிட்டாள். எதிர்பாராத விதமாக துரையும் அவள் கண்களில் அகப்பட்டுக்கொண்டு அசைவற்று நின்றுவிட்டான். மேனகாவின் கையிலே ஒரு மாதுளம் பழம் இருந்தது. அவள் அதை துரையிடம் நீட்டி, “இந்த மாதுளம்பழத்தை சாப்பிடுங்கள்” என்றாள்.
“பரவாயில்லை — வேண்டாம்!” என்று துரை அலட்சியமாக விடையளித்தான்.
“ஏன், மாதுளை பிடிக்காதா?” மேனகாவின் விரக தாபம் நிறைந்த இந்த கேள்விக்குத் துரையினால் பதில் கூற முடியவில்லை. ரத்தினத்தின் ஒளி காட்டும் அந்த எழில் மாதுளையைக் கையிலேந்தி நிற்கும் அவளது கன்னங்களே இரண்டு மாதுளைகள்! என்ன செய்வது — அவனுக்குத்தான் அந்த மாதுளை தேவையில்லையே! அதனால் அவளையும் அந்த அழகுமிழுங் கனியையும் ஒப்பிட்டுப் பார்க்கும் கவிஞனாக அவன் மாறவில்லை.
மேனகா, அவனது இளமை துள்ளும் முகத்தைப் பார்த்தவாறு பளிங்குச் சிலைபோல நின்றாள். பிறகு, கையிலேயுள்ள கனியை உடைத்தாள். கண்ணகி காற்சிலம்பை உடைத்தபோது மாணிக்கப் பரல்கள் சிதறியது போல, மாதுளையிலேயிருந்து பவள விதைகள் சிதறின. அவைகளைத் தன் கரத்திலேந்தி அவன் முகத்துக்கு நேரே காட்டினாள். அவனோ, வேண்டாமென்பதற்கு அடையாளமாக தலையை அசைத்து நின்றான். “தயவு செய்து சாப்பிடுங்கள் எனக்காக!” என்று கெஞ்சு மொழி உதிர்த்தாள், அவனிடமிருந்து கொஞ்சு மொழி எதிர்பார்த்து!
“என்னம்மா இது; பெரிய வம்பாயிருக்கிறது! இந்த அறையிலே தனியே கிடந்து வாடுவதைவிட பெரிய அவஸ்தையாக இருக்கிறதே உன்னால்! ஏன் இப்படிச் செய்கிறாய்” என்றான் சிறிது ஆத்திரமாகப் பேசினான் துரை.
“உஸ்! மெள்ளப் பேசுங்கள் — குடுகுடுப்பைக்காரன் இருக்கிறான்” என்று தன் வாயைப் பொத்திக் காட்டினாள் அவள்.
“அவன் தூங்குகிறான். அதிருக்கட்டும் — நீயோ, திருமணமானவள். இப்படித் தவறாக நடந்துகொள்ள?” துரை, உரிமையோடு கேட்டான் அவளிடம்.
அவளும் இதுதான் சமயமென்று தனது கண்ணீர்ப் புராணத்தை ஆரம்பித்தாள்:
“திருமணமானவள் தான்! அதை மறுக்கவில்லை. ஆனால், பெண்களின் வாழ்வு, திருமணம் என்ற ஒரு சடங்கோடு முடிந்து விடுகிறதா?”
“அதெப்படி முடியும்? திருமணம், பெண்கள் வாழ்வில் ஒரு பருவத் திருப்பம்! அதற்குப் பிறகுதானே நல்ல குடும்பமெனும் பல்கலைக் கழகத்திற்கு அவர்கள் ஆசிரியர்களாகிறார்கள்!”
“அழகாகத்தான் பேசுகிறீர்கள்! ஆனால், பெண்கள் சமுதாயத்தைப்பற்றி பிரசங்கம் புரிகிறவர்களுக்கு தனிப்பட்ட ஒரு பெண்ணின் சங்கடங்கள் புரியாது போலும்! இல்லையா?”
“புரியாமல் என்ன? புலியின் பசிக்கு ஆடுகளைத்தான் கொடுக்க முடியும், சர்க்கஸ்காரனால்! அதைவிட்டு தானே இரையாக முடியுமா?”
“நீங்கள் குறிப்பிடும் ஆடுகள்……?”
“அறிவுரைகள்!”
“ஏட்டுச் சர்க்கரை இனிக்காதே.”
“நான் தரும் சர்க்கரை நாவுக்கல்ல தாயே — இருதயத்துக்கு!”
“?”
“ஆமாம் — தாய்க் குலம் தானே பெண்கள் குலம்!”
“ம் — புலியென்கிறீர்கள் என்னை! அய்யா சர்க்கஸ்காரரே! நான் புலியல்ல — இன்ப வானில் பறக்க சிறகடிக்கும் புறா! தாயல்ல வாலிபரே நான்! தாலியென்னும் லைசென்ஸ் கட்டப்பட்ட நாய்! திருமணமாகி விட்டது — தீய வழி கூடாது என ஆடுகளை அவிழ்த்து விடுவீர்……”
“என்ன, ஆடுகளையா?”
ஆமாம்; அறிவுரைகளை! இந்த அறிவுரைகளையெல்லாம் படிக்காதவள் அல்ல நான். படித்திருக்கிறேன்; பள்ளியிலே மட்டுமல்ல — பருமனான புத்தகங்களிலேகூட! அந்தப் படிப்புக்கு பருவத்தின் துடிப்பை அடக்கும் சக்தி இல்லை என்பதை ஆதாரபூர்வமாக நூல் வடிவிலே தரக்கூடிய அனுபவங்களையும் படித்துக்கொண்டு வருகிறேன். இப்போது! இளைஞரே! என்னைப் பாருங்கள்! இந்த மாதுளை முத்துபோல சத்து நிறைந்த யுவதி! சந்தன வில்லை சகதியிலே கிடக்கலாமா? கிடந்தால் அதைப் பார்த்துக்கொண்டுதான் போவீர்களா?”
“பிறகென்ன? சகதியிலேயிருந்து அதை எடுத்துப் பூசிக்கொள்ள முடியுமா?”
“மன்னிக்கவும் — சந்தன வில்லை சரியான உதாரணமில்லை! நான் குப்பையிலே வீசி எறியப்பட்ட கோமேதகம்! இதையாவது ஒத்துக் கொள்கிறீர்களா?”
“ஒத்துக்கொள்கிறேன். ஆனால், இந்த கோமேதகத்தை எடுக்க குப்பையைக் கிளற விரும்பவில்லை!”
“காரணம்?”
“கோமேதகம் எனக்குச் சொந்தமில்லை!”
“ஓகோ! அப்படியானால் சுய உடமையில்தான் அக்கரை காட்டுவீர்களா?”
“இந்த மாதிரி விஷயங்களில் பொது உடமை கூடாதம்மா!”
“பதில் கூறி நேரத்தைப் பாழாக்காதீர்கள்! இந்தப் பாவிக்கு ஒரு முடிவு சொல்லுங்கள்!”
“என்ன முடிவை என்னிடமிருந்து எதிர்பார்க்கிறாய்?”
“ஒரு பெண் ஒரு ஆணிடம் எதை எதிர்பார்ப்பாள்?”
“மேனகா!……” துரையினால் பேச இயலவில்லை. அவளது பரிதாபமான நிலையை அவனால் உணர முடிந்தது. ஒரு படித்த பெண், பட்டிக்காட்டு குட்டி ராஜாவிடம் அகப்பட்டுக்கொண்டு அலைமோ துகிறாள் என்பதைக் கண்டு உள்ளபடியே அவன் வருந்தினான். அவளது உள்ளத்திலே உலகத்தின் ஒளிமயமான பகுதிகளில் உலவ வேண்டுமென்ற ஆசைக் கனல் கொழுந்து விடுவதை, அவளது கண்களின் மூலம் அறிய முடிந்தது. வெறும் உணர்ச்சிக் கூடாக இல்லாமல், உயர் எண்ணங்கள் குலுங்கும் மலர்க் காடாக வாழ்வு அமைய வேண்டுமென்று தான் அவள் துடித்துக் கிடந்தாள். அந்தத் துடிப்பை கண்களிலே வழியும் நீர்த்துளிகள் துல்லியமாக அவனுக்குக் காட்டின. மேனகா, மீண்டும் பேசினாள்:
“என்னைப்பற்றி எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள். நான் உங்களிடம் சொல்ல வேண்டியவைகளைச் சொல்லிவிடுகிறேன். நீங்களே யோசித்துப் பாருங்கள், நான் அவருக்கு பொருத்தமான மனைவிதானா? இல்லை, இல்லை — அவர் எனக்குப் பொருத்தமான புருஷர்தானா?”
“இந்தக் கேள்வி, ஓமகுண்டத்திற்கு முன்பு உட்கார்ந்தாயே; அதற்கு முன்பே கிளம்பியிருக்கவேண்டும் உன் நெஞ்சில்!”
மேனகா பேசாமல் நின்றாள். தன் தந்தைக்காக தியாகம் செய்யவேண்டிய கட்டம், அதற்கு அவள் பலியானாள் — இப்படி ஒரு வசீகரத் தென்றலை காணிக்கையாக கேட்காமலே, வெள்ளியம்பலம் கருணை காட்டியிருக்க முடியும்; ஆனால் அப்படிக் காட்டியிருந்தால் அவர் வெள்ளியம்பலமாக இருந்திருக்க முடியாது!
கன்னங்களில் உருண்டோடும் கண்ணீர்த் துளிகளைத் துடைத்துக்கொண்டே, அவள், அவனைப் பார்த்து, “நீங்கள் என்னை ஏற்றுக்கொள்வதாயிருந்தால், நாம் இருவருமே இங்கிருந்து தப்பிவிட என்னால் வழி செய்ய முடியும்” என்று அழுத்தந் திருத்தமாகச் சொல்லிக்கொண்டே அவன் முகத்தைப் பார்த்தாள்.
துரையின் முகத்திலே எந்தவிதமான திடீர் மாறுதலும் ஏற்படவில்லை. மூலையில் தூங்குவதுபோல் கிடந்த மலையாள பகவதியின் முகத்திலே மட்டும் திடீர் மாறுதல் தோன்றியது.
“ஆகா! அருமையான நிபந்தனை அம்மா போடுறாங்க — அதான் சரி! அதான் சரி!” என்று கத்திக்கொண்டே அவன் ஜன்னலண்டை ஓடிவந்து, துரைக்கு அருகே நின்றான்.
அவன் எழுந்ததைக் கண்ட மேனகா, அதைவிட்டு நகர ஆரம்பித்தாள். உடனே, மலையாள பகவதி அவளைக் கூப்பிட்டு, “நில்லுங்கம்மா — சின்னம்மா வாயாலே, நமக்கு விடுதலைன்னு சொல்லியாச்சு! நல்லகாலம் பொறக்குது — நல்லகாலம் பொறக்குது! அம்மா கேக்கிறத்துக்கு — அப்பன் தலையை ஆட்டவேண்டியதுதான் பாக்கி!” என்று அவன் பேசிக்கொண்டேயிருந்தான்.
“ஏய், பகவதி! நில்லப்பா!” என்று அதட்டினான் துரை.
“அதெல்லாம் அப்பன் பூச்சாண்டி காட்டக் கூடாது! மலையாள பகவதி — சக்கம்மா — காளியாயி — சொல்றா நமக்கு ஒரு பெண்ணால விடுதலை இருக்குன்னு! அம்மா பகவதி சொன்னா பொய்க்காது! அப்பனே, நீ இந்த சின்னம்மா கேக்கிறத்தை தர்ரேன்னு சொல்லு! சீக்கிரம் சொல்லு!”
குடுகுடுப்பைக்காரன், தனது விடுதலைக்காக வேண்டி, தன் பக்கம் பேசுவது மேனகாவுக்கு ஒரு ஆறுதலாக இருந்தது.
“அய்யா பகவ தீ! நீ சொல்லய்யா! இவரோட மனசை இளகும்படிச் செய்யய்யா!” என்று அவனைக் கேட்டுக் கொண்டாள் மேனகா!
மலையாள பகவதியும், மேனகாவுக்காக துரையிடம் பலமான சிபார்சுகளை வாரி இறைத்தான். மேனகாவின் ரூபலாவண்யங்களை அங்கம் அங்கமாக வர்ணிக்கத் தொடங்கிவிட்டான். பெண் பாவம், பொல்லாது! — என்றும் பயமுறுத்தினான்.
ஆமாம் — அதனால்தான் என்னை நம்பிய பெண்ணுக்கு துரோகம் செய்யப் பயப்படுகிறேன் என்று பதில் தந்தான் துரை.
மலையாள பகவதி புன்னகை காட்டி நின்றான். மேனகாவும், முடிவுக்காக நின்றாள்.
கடைசியாக குடுகுடுப்பைக்காரன் மேனகாவிடம், “சின்னம்மாவுக்கு, இந்த அப்பன் மாப்பிள்ளையாக ஒத்துக் கலேன்னா — சாயபு பார்த்து சரியான ஜோடி சேர்க்கிறான் சரியான ஜோடி சேர்க்கிறான்!” என்று உறுதியாகச் சொன்னான்.
அது கேட்டதும் அவளும், “சாயபு! எப்படியோ எனக்கு இங்கிருந்து விடுதலையானால் போதும்! இந்த முர டன் கையிலேயிருந்து தப்பி, யாருங் காணாத சீமைக்குப் போய்விட வேண்டும்” என்று தயவாகக் கேட்டுக் கொண்டாள்.
“நல்லகாலம் பொறக்குது! நமக்கு விடுதலை பொறக்குது!” என்று கத்தினான் பகவதி.
அந்த சமயம் வெள்ளியம்பலம் வரும் ஓசை கேட்டு, மேனகா ஓடிவிட்டாள். வெள்ளியம்பலம் அறைக் கதவைத் திறந்து மலையாள பகவதியை வெளியே அழைத்துக் கொண்டு போனார்.
அம்பலத்திடம், பகவதி, இன்னும் வசியம் முடியவில்லையென்றும், அடைபட்டிருக்கும் ஆளிடமிருந்து ரகசியம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், அன்றிரவு கீழவன் ஒருவன் புதையல் தோண்டப் போவது மட்டும் உண்மையென்று சக்கம்மா காளி சொன்னதாகச் சொல்லுகிறான்.
அப்படியானால், அன்றிரவு சிவன் கோயில் பக்கம் ஆட்கள் சகிதம் போகவேண்டுமென்று அம்பலம் முடிவு செய்துகொண்டு குடுகுடுப்பைக்காரனை மீண்டும் அறைக்குள் போட்டுப் பூட்டிவிட்டுப் புறப்பட்டார்.
கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்