அத்தியாயம் 41 · 42 / 52

அத்தியாயம் 41

Chapter 41

மூல ஸ்கேன் 355 (chapter-41 portion)-362 (chapter-41 portion)

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

41

சூரியன் தனது கடமையை மூடித்துவிட்டு களைப்பாறுவதற்கு மேற்றிசையில் மறைந்துவிட்டான் என்று கூற முடியாது — சுற்றிக்கொண்டிருக்கும் உலகத்தின் ஒரு பகுதி சூரியனுடைய பார்வையை விட்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டது. அதனால் இருள் வந்தது.

அந்தப் பகுதியிலே ஒரு அணுதான் மருங்கப்பள்ளம். இருள் மூடிக் கிடக்கும் அந்தச் சிற்றூரில் மக்கள் நடமாட்டம் வழக்கம்போல குறைந்துவிட்டது, சிவன் கோயிலின் எதிரிலே அமைந்துள்ள ஏரி போன்ற அந்தத் தாமரைக் குளம், தனது எழிலை யாருக்கும் காட்ட முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது. வானத்து விளக்கும் இன்னும் ஏற்றப்படவில்லை. அப்படி ஏற்றப்பட்டாலும் அதை மறைப்பதற்காகவே கங்கணம் கட்டிக்கொண்டு மேகங்கள் எல்லாம் அணிவகுத்து நின்றன. தாமரைக் குளத்திலே குதித்துக் கிளம்பி மீண்டும் தண்ணீரில் விழும் கெண்டை மீன்கள் உண்டாக்கும் ஓசையையும், தவளைகளின் ‘கீதத்தையும், தாமரைக் குளத்தை நோக்கி நிற்கும் சிவன் கோயிலின் குள்ளக் கோபுரத்துப் பொந்துகளிலே ‘குடுகுடு’ வென்று ஒலியெழுப்பி காதல் புரியும் புறாக்களின் சப்தத்தையும் தவிர, வேறு எதையும் கேட்க முடியவில்லை.

கோயிலுக்கு எதிரேயுள்ள தெருவின் பக்கமாக ஒரு மனிதன் நடந்து வருவது தெரிந்தது. அந்த மனிதன் வேறு யாருமல்ல; மாயாண்டிக் கிழவரே தான்! கோயிலை நோக்கி வேகமாக நடந்து வந்தார். அவரது கையிலே ஒரு மண்வெட்டி இருந்தது.

குளத்துப் படித்துறையிலே இறங்கி முகம் கை கால்களை கழுவிக்கொண்டார். கோயிலுக்கு எதிரேயுள்ள திண்ணை போன்ற மேடையில் அமர்ந்து சுற்று முற்றும் பார்த்தார். பின்னர், இருண்ட ஆகாயத்தை நோக்கியபடி சிந்தனையில் ஆழ்ந்தார். அவரது முகத்திலே கலக்கமும், எதையோ எதிர்பார்க்கும் ஆவலும் நிரம்பியிருந்ததை கோயில் வாசலில் ‘மினுக், மினுக்’கென்று எரிந்துகொண்டிருந்த விளக்கு ஒன்று விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தது.

சிந்தனையில் ஆழ்ந்திருந்த அவரது கவனத்தை அந்த இருட்டில் திடீரென்று கிளம்பிய ஒரு இருமல் சப்தம் கவர்ந்தது. சுற்றுமுற்றும் பார்த்தார். அங்குமிங்கும் நடந்தார். யாரும் தென்படவில்லை. அவரது ஒவ்வொரு அசைவையும் கவனித்துக்கொண்டு சுமார் முப்பது ஆட்களும், வெள்ளியம்பலமும் கோபுரத்து மேலே உட்கார்ந்திருந்தார்கள். அவர்களிலே ஒருவன்தான் திடீரென்று இருமிவிட்டு, வெள்ளியம்பலத்தின் முரட்டுக் கையால் தன் தலையை வீங்க வைத்துக்கொண்டான்.

மாயாண்டி, குளக்கரைப் பக்கமாக நடந்தார். கோபுரத்தை அண்ணாந்து பார்க்காமல், வேறு பக்கம் பார்ப்பது போலப் பார்த்தார்.

வெள்ளியம்பலமும் ஆட்களும் அசையாமல் மூச்சைப் பிடித்துக்கொண்டு கோபுரத்துப் பொம்மைகள் போல நின்றார்கள். மாயாண்டி மீண்டும் கோயில் வாசல் பக்கமாக வந்து உள்ளே நுழைந்தார். மூல விக்கிரகத்திற்கு எதிரேயுள்ள நந்தி மண்டபத்தினருகே வந்து நின்றார். அங்கிருந்து கீழ் மூலையில் உள்ள சனீஸ்வரன் மண்டபத்தை உற்று நோக்கினார். உரக்கப் பாட ஆரம்பித்தார்.

“எழுவானுக்கும் தொழுவானுக்கும் இடையிலே — காக்கை மூக்கு நிழலிலே — கள்வர் புகும் வழியிலே — கண்டாலும் கம்மாளர் கண்ணிலே……!”

இந்தப் பாட்டை வெகு உருக்கமாகப் பாடினார். சனீஸ்வரன் அமர்ந்திருக்கும் காக்கை வாகனத்தை ஒரு முறை பார்த்தார். அதற்குள் அம்பலமும், அவரது ஆட்களும் கோபுரத்தின் வேறு பக்கத்திற்கு வந்து மாயாண்டியின் செய்கைகளை கூர்மையாக கவனிக்கத் தொடங்கினார்கள். மாயாண்டி, தன்னிடமுள்ள மண்வெட்டியால் நந்தி மண்டபத்திற்கு முன்பாக மண்ணைத் தோண்ட ஆரம்பித்தார்.

அம்பலம், ஆர்வத்தோடு அதைப் பார்த்துக் கொண்டேயிருந்தார். மாயாண்டி வெட்டிக்கொண்டேயிருந்தார். “எழுவானுக்கும் தொழுவானுக்கும்……” என்ற பாடலை அவர் வாய் முணுமுணுத்துக்கொண்டேயிருந்தது! ஆழமான குழி தோண்டப்பட்டுவிட்டது.

மாயாண்டி, தன் மடியிலேயிருந்து ஒரு செப்புத் தகட்டை எடுத்தார். அதை அந்தக் குழியின் ஓரத்தில் வைத்தார். ஆவேசம் வந்தவர் போல ‘எழுவான் தொழுவான்’ பாட்டை உச்சரித்துக்கொண்டு குதித்தாட ஆரம்பித்தார். மீண்டும் மண்வெட்டியை ஓங்கினார். ஆக்ரோஷமாக பூமியைத் தோண்டினார். ‘டங்’ என்று ஒரு சப்தம்!

“ஆகா! கண்டேன் கண்டேன்!” என்று மண்வெட்டியைக் கீழே போட்டுவிட்டு கையினாலேயே மண்ணைத் தள்ள ஆரம்பித்தார். ஒரு சிறு தவலை போன்ற பாத்திரம் — அதை எடுத்தார். குப்புறக் கொட்டினார்.

மேலே கோபுரத்திலிருந்த அம்பலம் அதை மிக ஆவலோடு பார்த்தார். தவலையிலிருந்து எதுவும் கீழே விழவில்லை என்பதைக் கண்ட மாயாண்டி, தீக்குச்சியின் உதவியால் தவலையைப் பரிசோதித்தார். அதற்குள்ளே சுருட்டப்பட்ட ஒரு தகடு இருந்தது. அதை பரபரப்போடு எடுத்துப் படித்தார். மீண்டும் தீக்குச்சியின் உதவியால் தகட்டை உற்று நோக்கினார். “ஆகா! அப்படியா சங்கதி? நான் அதிர்ஷ்டக்காரன்! ஜெயம்! ஜெயம்!!” என்று கூவினார். தோண்டிய குழியை மீண்டும் மண்ணைப் போட்டு மூடிவிட்டு, தவலை, தகடுகள், மண்வெட்டி ஆகியவைகளுடன் கோயிலைவிட்டு வெளியேறினார்.

அம்பலம் கோஷ்டியினர் கோபுரத்திலிருந்து இறங்கினார்கள். கிழவரைத் தொடர்ந்தார்கள். கிழவர், தன் பின்னால் யாராவது வருகிறார்களா என்று ஜாடையாகத் திரும்பிப் பார்த்துவிட்டு, கோயிலின் பின்புறமாக நடந்தார். அங்கே ஒரு தேவதையின் சிலை — பயங்கரமான உருவம் — மாடம் போன்ற அமைப்புள்ள மண்டபம் எதிரிலே ஒரு மாமரம்! அந்த மாமரத்தடிக்கு மாயாண்டி சென்றார்.

“தங்கம் புதைக்கப்பட்ட இடம் இதுதான்! எழுபது கோடி பசும் பொன்னுக்கு இங்கேதான் ஆதாரம் இருக்கிறது! மறைந்து கிடக்கும் பொன் மணியே! இந்த ஏழை மனிதனை வாழ்விக்க வந்த வழிகாட்டியே! உன்னைக் காணவேண்டிய காலம் வந்துவிட்டது! என் வாழ்வில் களிப்பு வந்துவிட்டது — இனி கவலை தொலைந்தது” என்று பூமியைப் பார்த்து கூத்தாடினார். கோயிலுக்குள்ளே எடுத்த தகட்டை கையிலே வைத்துக்கொண்டு, தீக்குச்சியின் உதவியோடு, ஏதேதோ திசைகளைக் குறித்துக்கொண்டார். தன் கால்களால் தரையை அளந்தார். கிழக்கிலே பத்து அடி வடக்கிலே பத்து அடி அளந்துகொண்டார். மண்வெட்டியைத் தூக்கி வீராவேசமாக, வெற்றிச் சிரிப்போடு பூமியை நோக்கி ஓங்கினார். ஓங்கிய மண்வெட்டி பூமியில் விழுவதற்குள் வெள்ளியம்பலம் ஓடி வந்து மாயாண்டியைப் பிடித்துக்கொண்டார். அம்பலத்தின் ஆட்கள் மாயாண்டியைச் சூழ்ந்துகொண்டார்கள். மாயாண்டி திகைத்து நின்றுவிட்டார்.

“ஆகா! என்ன இது? நான் ஒரு பயங்கரமான கனவு காண்கிறேனா? நான் இப்போது எங்கே இருக்கிறேன்? சொப்பன லோகத்தில்தானா? வேறெங்கே இவ்வளவு பெரிய கொடுமையான வேதனைக்கு ஆளாக முடியும்? அய்யோ! தூக்கத்திலிருந்து நான் விழித்துக்கொள்ள மாட்டேனா?” என்று கத்தினார் மாயாண்டி.

“என்ன உளருகிறாய் — கிழவா! எங்கே வந்தாய்? என்ன வேலை செய்கிறாய்?” என்று அதட்டினார் அம்பலம்.

“நான் எங்கே வந்தால் யாருக்கென்ன? நான் ஒரு பைத்தியக்காரன்! நான் எங்கேயும் வருவேன்!”

“பைத்தியக்காரனுக்கு கோயிலிலே என்ன வேலை?”

“பைத்தியக்காரனுக்கு வேறு எங்கேதான் வேலை?”

“பைத்தியக்காரனுக்கு மண்வெட்டி எதற்காக? கையிலே இது என்ன தகடு?”

“அய்யோ, என்னை விட்டுவிடு — நான் போகிறேன்.”

“கிழவா! வீணே சாகாதே! நீ எங்கு வந்திருக்கிறாய் — என்ன செய்கிறாய் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். புதையல் எடுக்க வந்திருக்கிறாய்; உண்மைதானே?”

“என்ன — புதையலா?”

“ஆச்சரியப்படுகிறாயா? அடி வாங்கி சாகாதே — உண்மையைச் சொன்னால் உயிர் பிழைப்பாய்! இல்லை; அதோ அந்த தாமரைக் குளத்திலே உன் பிணம் மிதக்கும்! ஜாக்கிரதை!”

“அப்பாடா! அவ்வளவு பெரிய தண்டனையா? அம்பலம்; அப்படியெல்லாம் ஒன்றும் செய்துவிடாதே! இன்னும் ஒரு முப்பது நாற்பது வருஷமாவது ஆனந்தமாக வாழ நான் ஆசைப்படுகிறேன்.”

“அப்படியானால் கக்கு உண்மையை! புதையல் எடுக்கத்தானே வந்தாய்?”

“ஆமாம்!”

“கொடு இப்படி அந்தத் தகட்டை!”

மாயாண்டி, தன் கையிலுள்ள தகடுகளை அம்பலத்திடம் கொடுத்துவிட்டு நடுங்கியபடி பேச ஆரம்பித்தார்:

“அம்பலம்! கொஞ்சப் பொருளல்ல; எழுபது கோடி பசும்பொன் இருக்கிறது! முழுவதும் வைத்து என்னாலும் நிர்வகிக்க முடியாது. நாம், ஆளுக்குப் பாதி எடுத்துக் கொள்வோம். எனக்கு நீ உயிரும், பாதிப் பொன்னும் கொடுத்தால் போதும். எல்லா ரகசியங்களையும் சொல்லி விடுகிறேன். அந்தத் துரையென்று ஒரு பயல். அவன் எனக்குத் துணைக்கு வருகிறேன் என்றான், ஆள் போன இடமே தெரியவில்லை; அயோக்கிய இளைஞன்! இதோ, இந்தத் தகடு இருக்கிறதே; இதுதான் புதையலைக் கண்டு பிடிக்கும் முதல் வாயிற்படி! இதன் உதவியைக் கொண்டு தான் இந்த இரண்டாவது தகட்டை கோயிலுக்குள்ளே எடுத்தேன். இதில் கண்டுள்ள குறிப்பின்படி, இப்போது இந்த இடத்தைத் தோண்டவேண்டும். இங்கே புதையல் கிடைத்தாலும் கிடைக்கலாம். அந்தத் தகடு நிச்சயமாக, எழுபது கோடி பசும்பொன்னை நமக்குக் காட்டிவிடும்.”

“அப்படியா! இதோ, இங்கே வெட்டச் சொல்லுகிறேன்! டேய்; ஆரம்பமாகட்டும்” என்று அம்பலம் ஆட்களுக்குக் கட்டளையிட்டார்.

ஆட்களின் அதிதீவிர சுறுசுறுப்பால் வெகு வேகமாக அந்த இடத்திலே பூமி குடையப்பட்டது. அம்பலமும், மாயாண்டியும் ஏதாவது சப்தம் வருகிறதா என்று கவனித்துக்கொண்டே நின்றனர்.

“டணார்” என்று ஒரு பெரிய ஒலி கிளம்பிற்று. ஆட்கள் மண்ணை அள்ளிவிட்டு குழிக்குள்ளேயிருந்து ஒரு பெரிய பெட்டியைத் தூக்கினார்கள். பழைமையடைந்து போன ஒரு பித்தளைப் பெட்டி! அதை அம்பலம் திறந்தார். திறக்க முடியவில்லை. கோடரி ஒன்றினால் அதை உடைத்தார். அந்தப் பெட்டிக்குள்ளே இன்னொரு சிறிய பெட்டியிருந்தது. அதையும் திறந்தார். அதற்குள்ளே ஒரு தகடுச் சுருள் காணப்பட்டது. அதை அம்பலம் பிரித்தார். மாயாண்டி படித்தார்.

“இங்கிருந்து நூறு கெஜ தூரத்திலே வெட்டு — எழுபது கோடி பசும்பொன் கிட்டும்!” என்று பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது. சிறிய எழுத்துக்களில், வெட்ட வேண்டிய இடத்திற்கான எல்லைக் குறிப்புகள் எழுதப்பட்டிருந்தன. திசையையும், அளவையும் காட்டுகிற கோடுகள் வரையப்பட்டிருந்தன.

“என்ன செய்யலாம்?” என்று அம்பலம் கேட்டார்.

“இது இன்று இரவுக்குள் யோசித்து முடிவு செய்கிற விஷயமல்ல; நாளைக்கு முயற்சிப்போம” என்று மாயாண்டி பதில் கூறினார்.

“நீர் எங்கும் ஓடிவிட்டால்?” என்று சந்தேகத்தோடு அம்பலம் கேட்டார்.

“எப்படி ஓடுவது? இந்தத் தகடுகளை எல்லாம் விட்டு விட்டு ஓடுவேனா? அம்பலம் என்னை ஏமாற்றாமல் இருந்தால் அது போதும் ஆண்டவனே!” என்று மாயாண்டி பெருமூச்சு விட்டார்.

“சரி, வீட்டுக்குப் போவோம்” என்று அனைவரும் அதைவிட்டுப் புறப்பட்டார்கள்.

கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்