அத்தியாயம் 42 · 43 / 52
அத்தியாயம் 42
Chapter 42
மூல ஸ்கேன் 362 (chapter-42 portion)-369 (chapter-42 portion)
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
42
அவர்கள் வீடு திரும்புவதவற்குள்ளாக கிடைத்த அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ள மேனகா எவ்வளவோ முயன்றாள். முடியவில்லை. மேனகாவின் முயற்சி வெற்றி பெறுகிறதா என்று பார்ப்பதற்காகவே மலையாள பகவதி குறட்டை விட்டுத் தூங்குவதுபோல நடித்தான். ஜன்னலண்டை நின்று துரையை அழைத்து அழைத்து அலுத்துப் போனாள் மேனகா. என்ன இருந்தாலும் இவனை ஜெயிக்காமல் விடுவதில்லை — என்ற முடிவோடு மேனகா தன் படுக்கையறைக்குப்போய் கட்டிலிலே தொப்பென்று விழுந்தாள். துரையும் தூங்காமல் புரண்டுகொண்டேயிருந்தான். சுவரோரத்தில் உருண்டுகிடந்த மலையாள பகவதியின் குறட்டை சப்தம் வேறு அவனுக்கு இடையூறாக இருந்தது. மலையாள பகவதி குறட்டை விடுவதோடு நிற்கவில்லை; புரளவும் ஆரம்பித்தான். பாவம்; அவனுக்கு கலகலப்பாக புரண்டு தூங்குவதற்கு நீளமான தாழ்வாரமே வேண்டும் போலும்! இப்படியும் அப்படியும் புரளாமல் ஒரே திக்கில் உருண்டு வந்துகொண்டேயிருந்தான். ‘நல்ல காலம் பொறக்குது’ என்ற அவனது குடுகுடுப்பைப் பல்லவியையும் தூக்கத்திலே புலம்பிக்கொண்டு புரண்டான். துரை, அவன் புரளுவதற்கு இடங் கொடுத்துவிட்டு, சுவரோரமாக ஒதுங்கிப் படுத்துக் கொண்டான். சிறிது நேரத்திற்கெல்லாம் அவனது கண்களை அசதி அணைத்துக் கொண்டது. தூக்கத்தின் முதல் வாயிற்படியிலே நுழைந்துவிட்டான். அவனது கன்னத்திலே எச்சில் பட்டதுபோல் ஒரு உணர்ச்சி — தூக்கக் கலக்கத்தோடு கன்னத்தைத் தடவிப் பார்த்தான். கன்னம் லேசாக ஈரமாகியிருந்தது. திரும்பிப் பார்த்தான். அவனுக்கு அருகாமையிலே, பகவதி குறட்டைவிட்டுக் கொண்டிருந்தான். “அடப்பாவி! உனக்கு இந்த வீடே போதாது போலிருக்கே” என்று முணு முணுத்துக் கொண்டே, துரை இன்னொரு பக்கம் போய்ப் படுத்தான். மீண்டும் தூங்க ஆரம்பித்தான், கன்னத்திலே ஏதோ விழுந்தது போலிருந்தது. ஆம்; அரைத் தூக்கத்திலே ஒரு சிறு கனவு! இரண்டு ரோஜாப் பூக்கள் கன்னத்தில் விழுந்ததுபோல் இருந்தது. அவைகளை எடுக்க கன்னத்தில் கை வைத்துப் பார்த்தான். பூக்கள் இல்லை. கன்னம் ஈரமாக இருந்தது. மேலே கூரையைப் பார்த்தான். ஏதாவது பல்லி, கில்லி என்று சந்தேகத்தோடு திரும்பினான். அருகே புரண்டு கிடந்தான், மலையாள பகவதி.
துரைக்குச் சிரிப்பும் ஆத்திரமும் பொங்கியது. “என்னடா இது மிருகம் மாதிரி புரளுகிறாய்” என்று அதட்டிக் கொண்டே பகவதியை பலங்கொண்ட மட்டும் தள்ளிவிட்டான். பகவதியோ, தூக்க போதையோடு, ஏதோ புலம்பியவாறு வேறு பக்கம் உருண்டான். துரை, கண்களை இறுக மூடிக்கொண்டு தூங்குவதற்கு ஆயத்தம் செய்தான். பகவதி அருகே புரண்டு வருவது தெரிந்தது. அசையாமல் இருந்து கவனித்தான். புரண்டுவந்த பகவதி மெதுவாக எழுந்து ஜன்னல் கதவுகளை சாத்தினான். துரைக்கு சந்தேகம் பிறந்தது. என்ன நடக்குமோ என்று ஆவலோடு எதிர்பார்த்தான். பகவதி தன் இடுப்பிலே மறைத்து வைத்திருந்த ஒரு பளபளப்பான கத்தியை எடுத்து தரையிலே வைத்தான். துரைக்கு நடுக்கம் அதிகமாயிற்று. கத்தியைக் கைப்பற்றிவிடலாமா என்று யோசித்தான். தன் உயிருக்கு பகவதியினால் ஆபத்து விளையப் போகிறது என முடிவு செய்து கொண்டான்.
பகவதி, அம்பலத்தின் ஏற்பாடாக இருக்கவேண்டும் — அல்லது, தன்னை ஒழித்துவிடக் கங்கணம் கட்டி வந்திருக்கும் பாதகனாக இருக்கவேண்டும். இதயத்திலே புயல் தாக்கிற்று. இன்னும் ஒருவினாடி தாமதித்தாலும் இறப்பது நிச்சயம் — இதை நினைத்தான் துரை. நினைவின் இடையிலேயே தரையில் கிடந்த கத்தியின் மீது பாய்ந்தான். அதைத் தன் கையிலே எடுத்துக் கொண்டு பகவதியின் முன்பு வீராவேசமாக நின்றான்.
பகவதியோ அசட்டுச் சிரிப்பை வீசிவிட்டு, “இப்போது என்னை என்ன செய்வதாக உத்தேசம்?” என்று கேட்டான்.
“என்னைக் கொல்ல வந்த உன்னை, இறப்புலகம் அனுப்பப் போகிறேன்.”
“அப்படியா? அவ்வளவு பெரிய புலியா? எங்கே — கத்தி என் நெஞ்சிலே பாயட்டும் பார்ப்போம்” என்று பகவதி ஆவேசமாகக் கூறிவிட்டு நின்றான். துரையும் கத்தியை ஓங்கியபடி அசையாது நின்றான்.
“உம் — நடக்கட்டும். ஏன் தாமதம்?” என்று கேட்டபடி, பகவதி தன் தாடி மீசைகளை அகற்றினான். உடனே துரை கத்தியை கீழே போட்டுவிட்டு, பகவதியைக் கட்டிக் கொண்டான். “கண்ணே — பரிமளா!” என்று சொன்னானோ தெரியாது.
ஆனால் அத்தனை முறையும் அவளிடமிருந்து முத்தங்களைப் பிரதி பலனாகப் பெற்றான். தூங்கும் பொழுது கன்னத்தை ஈரமாக்கியது யார் என்றும் தெரிந்துவிட்டது அவனுக்கு!
தாங்கள் சிக்கியிருக்கிற இடம் — எதிர்பார்த்து நிற்கிற ஆபத்துக்கள் — இவைகளையெல்லாம் சில நிமிஷ நேரம் மறந்தார்கள். மீண்டும் நினைவுகள் படிந்த உலகிற்குத் திரும்பிவந்தார்கள்.
அம்பலமும், ஆட்களும் வந்துவிட்ட ஒலி கேட்டது. இருவரும் தனித்தனியே பிரிந்து, ஜன்னலைத் திறந்து விட்டு, ஆளுக்கொரு மூலையிலே தூங்குவதுபோல படுத்துக் கொண்டார்கள்.
அம்பலம் டார்ச் விளக்கை அடித்துப் பார்த்தார். இருவரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். பகவதி வேடத்திலிருக்கும் பரிமளா மட்டும் தூக்கம் கெட்டுவிட்டது போல விழித்துப் பார்த்தாள். அம்பலம் ஜன்னலண்டை நின்று ஜாடையாக அழைத்தார். பகவதியும் அவரிடம் வந்தான். அவன் அம்பலத்தைப் பார்த்து, “என்னா சாயபு சொன்னது சரிதானா?” என்று கேட்டான்.
“ரொம்ப சரி! ரொம்ப சரி! ஆனா சாயபு! நீ இந்த துரையை விட்டுடக் கூடாது! ஏன்னா, இவனுகிட்டயும் ஏதாவது விஷயம் இருக்கும். என்னா, ஏதாவது முயற்சி பண்ணினாயா?”
“பண்ணிகிட்டுத்தான் இருக்கேன். புதையல் கிடைச்சாலும் அதை வச்சு நிர்வகிக்கிற ரகசியம் இவனுகிட்டத்தான்னு பகவதி சொல்ரா! இவன், சாமான்ய ஆளில்லை. நிஜத்தை கக்க மாட்டேங்கிறான். நாலு நாளைக்குள்ளே எப்படியும் இவனுகிட்ட இருக்கிற ரகசியத்தை சாயபு வாங்கித் தர்ரான். அய்யா, நம்பளை மறந்திடக்கூடாது. ஒரு பழைய துணி — பழைய சேலை — வேட்டி...”
“ஏய் சாயபு! அதெல்லாம் நிறையத்தர்ரேன். நீ காரியத்தை ஜெயமா முடி!”
இதைச் சொல்லிவிட்டு அம்பலம் அதைவிட்டு நகர்ந்தார். துரை, பரிமளாவை நெருங்கினான். அவள் மீண்டும் ஜன்னல் கதவுகளை சாத்தினாள். அம்பலம், படுக்கையறையிலே சுருண்டு கிடக்கும் மேனகாவின் கன்னத்தைத் தன் முரட்டு விரல்களால் கிள்ளி, அவளை எழுப்பிவிட்டார்.
அவளிடத்திலே, புதையல் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டுவிட்டதைக் கூறி மகிழ்ந்தார். சரியானபடி மாயாண்டிக் கிழவன் சிக்கிக்கொண்டான். துரையிடம் புதையல் சம்பந்தமாக மிச்சமிருக்கிற ரகசியங்களையும் குடுகுடுப்பை பகவதி கிரகித்துக் கொடுத்துவிடுவான். புதையல் அகப்பட்டதும், மாயாண்டிதான் முதல் பலி! இரண்டாவது பலி, துரை! மூன்றாவது பலி, மலையாள பகவதி! இவர்கள் மூவரையும் உயிரோடு விடக்கூடாது! ஏனென்றால் இவர்கள் மூவருக்கும் புதையல் பற்றிய ரகசியங்கள் தெரியும். நம்மைக் காட்டிக்கொடுத்து விடுவார்கள். நல்லவேளை, அந்தப் பயல் துக்காராமை சிறையில் பூட்டிவிட்டார்கள். ஒருவேளை அவன் விடுதலையாகி வந்தாலும் அவனையும் விடக்கூடாது! எப்படியும் நாலு கொலை தவிர்க்க முடியாததாகி விட்டது!
அம்பலத்தின் பயங்கரமான திட்டங்களைக் கேட்பதற்கே மேனகா பயந்தாள். “நாலு உயிர்களைப் போக்கி விட்டு, நாம் மட்டும் வாழவேண்டுமா? இப்படி ஒரு பயங்கர ஆசை ஏற்படுவது நியாயமா? தேன் எடுப்பதற்காக ஆயிரக் கணக்கான தேன் பூச்சிகளைக் கொல்லுவார்கள். நீங்களோ, புதையல் எடுப்பதற்காக மனிதர்களைப் பிணமாக்குகிறேன் என்கிறீர்கள்! அந்த மனிதப் பூச்சிகள் உங்களுக்கு என்ன தீங்கு செய்தன?” — இப்படியெல்லாம் கேட்கவேண்டும் போலிருந்தது அவளுக்கு! ஆனால் கேட்கவில்லை! கேட்டால் அவளும் அந்தப் பிண வரிசையிலே இடம் பெற நேரிட்டாலும் அதில் ஆச்சரியமில்லை!
மேனகா, மனம் புழுங்கியவாறு அம்பலத்தின் அகன்ற மார்பிலே சாய்ந்திருந்தாள். கரடு முரடான மலைப் பாறையிலே தாமரை மலர் ஒன்று கிடப்பதுபோல காட்சியளித்தது அவள் முகம். அறையிலே பூட்டப்பட்டிருக்கும் துரையின் அழகான மேனியை நினைவுக் கரங்களால் தழுவியபடி, அவள் அம்பலத்தின்மீது சாய்ந்து கிடந்தாள். அவளது கண்ணீரை, ஆனந்தக் கண்ணீராக எண்ணிக்கொண்டு, தனது 'நீக்ரோ உதடு'களால் அவளது கன்னத்தைத் தடவிக் கொடுத்தார், அம்பலம்!
“நாளைக்குப் பொழுது விடிந்தால், என்னென்ன நடக்குமோ?” என்ற எண்ணங்களை மேய விட்டுக்கொண்டு, அம்பலத்து வீட்டுத்திண்ணையிலே காவல்காரர்கள் புடை சூழ படுத்திருந்தார் மாயாண்டி! பொழுது விடிந்தது. தகட்டுச் சுருளிலே குறிப்பிட்டிருந்த திசை நோக்கி, அம்பலமும், மாயாண்டியும் சென்றார்கள். அந்தக் குறிப்பு, அவர்களை அங்குள்ள பள்ளிக்கூடத்து வாசலிலே கொண்டுபோய் நிறுத்தியது. தகட்டிலே குறிப்பிட்ட இடத்தை கோடுபோட்டுக் குறித்துக்கொண்டார்கள்.
“இங்கே வெட்டினால், ஊராருக்குத் தெரிந்துவிடுமே” என்று அம்பலம் சந்தேகப்பட்டார்.
“பள்ளிக்கூடத்தின் தண்ணீர் வசதிக்காக கிணறு வெட்டப் போகிறோம் — என்று சொல்லிவிட்டு, நமது காரியத்தை முடித்துக் கொள்ளலாம்” என்று மாயாண்டி யோசனை கூறினார்.
“பேஷான யோசனை! அப்படியே செய்வோம்!” என்று அம்பலமும் தலையசைத்தார்.
“பள்ளி மாணவர்களுக்காக, அம்பலம் கிணறு வெட்டப்போகிறார். தர்ம காரியத்தில் ஈடுபட்டுவிட்டார்” என்று ஊரார் பேச ஆரம்பித்தனர். ஆட்கள் கூடினர். அகலமும் ஆழமுமான கிணறு தோண்டப்பட்டது. ஒரே நாளில் கிணறு! மறுநாள் கல்வைத்துக் கட்ட ஆரம்பிக்க வேண்டும். தோண்டத் தோண்ட தண்ணீர் ஊறுகிறதே தவிர, புதையலுக்கு அடையாளம் எதுவுமில்லையே என்று அம்பலம் அங்கலாய்த்துக்கொண்டார். “இன்று இதோடு இருக்கட்டும். இரவு வருவோம், யாருக்கும் தெரியாமல் பரிசோதனை செய்வோம்” என்று மாயாண்டி ஆலோசனை வழங்கினார். ஊர்மக்கள் எல்லாம் படைதிரண்டு வந்து, தர்ம காரியமாக வெட்டப்படும் கிணற்றைப் பார்த்து மகிழ்ந்தார்கள். அம்பலத்தின் கைங்கர்யத்தையும் பாராட்டினார்கள். அம்பலமும், மாயாண்டியும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டு ஜாடையாக சிரித்தனர். அந்த சிரிப்பின் அர்த்தம், ஊர் மக்களுக்கு எப்படித் தெரியும்?
இரவு எப்போது வரும் என்று காத்திருந்த அம்பலம், மாயாண்டியுடன் பள்ளிக்கூடப் பக்கம் புறப்பட்டார். அவர் எப்போது வீட்டைவிட்டு வெளியே போவார் என்று எதிர்பார்த்திருந்த மேனகாவும், துரையிருக்கும் அறையின் ஜன்னலண்டை வந்து சேர்ந்தாள். துரை, மேனகாவை வரவேற்றான். அது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. கடுகடுப்பாக இருக்கும் அவனது முகம் மாறியிருப்பதை மேனகா உணர்ந்து மகிழ்ந்தாள். தான் ஜெயித்துவிட்டதாகக் கருதி கர்வமடைந்தாள். அப்போது மலையாள பகவதியும் ஜன்னலண்டை வந்து சேர்ந்தான், “நல்லகாலம் பிறக்குது!” என்று கூவியபடி!
“சின்னம்மா! நீ ஜெயிச்சுட்டே! சாயபு வாக்கு பலிச்சது! அய்யாவுக்கு உன் மேல இஷ்டம் வந்தாச்சு! சாயபு விடுவானா அய்யாவை!” என்று அளந்தான் பகவதி.
மேனகா, “உண்மையாகவா?” என்று கேட்டாள்.
துரை, “ஆமாம்” என்று தலையசைத்தான். மேனகாவுக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை.
“இன்றிரவே நாமிருவரும் வெளியேறி விடுவோமா?” என்று கேட்டாள்.
“நிச்சயமாக என்னையும் சேர்த்து அழைச்சிகிட்டுப் போங்க சின்னம்மா, உங்க குழந்தை குட்டிகளுக்கு புண்யமுண்டு!” என்று கெஞ்சும் தோரணையில் பேசினாள் பகவதி வேடப் பரிமளா!
“ஆகா, என் வாழ்வில் புதிய திருப்பம் வந்தது! பூரிப்பு வந்தது! விடுதலை, விடுதலை! மலையாள பகவதி, நீ வாழ்க! இருங்கள்; அவர் வரட்டும்; அவரிடமிருந்து சாவியைக் கைப்பற்றி, நாமெல்லாம் ஓடிவிடுவோம். நானும் பயணத்திற்கானவைகளைத் தயார் செய்கிறேன். ஏராளமான நகை நட்டு பணமெல்லாம் இருக்கிறது. அதையெல்லாம் எடுத்து இப்போதே மறைத்து வைக்கிறேன்” என்று தாங்காத சந்தோஷத்தோடு கூறிவிட்டு, மேனகா குதித்துக்கொண்டு ஓடினாள். இங்கு பரிமளாவின் கன்னம் ஈரம் ஆனது!
கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்