அத்தியாயம் 43 · 44 / 52

அத்தியாயம் 43

Chapter 43

மூல ஸ்கேன் 369 (chapter-43 portion)-376 (chapter-43 portion)

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

43

தண்ணீர் எவ்வளவு ஊறியிருக்குமோ — தன் முயற்சிக்குத் தடையாக ஆகிவிடுமோ — என்றெல்லாம் கிணற்றைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கிய அம்பலம், மாயாண்டியுடன் பள்ளிக்கூட வாசலுக்கு வந்து சேர்ந்தார். ஆவலோடு கிணற்றை எட்டிப் பார்த்தார்.

கிணற்றிலே ஊறியிருக்கும் கலங்கிய தண்ணீரிலே அவரால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக மாயாண்டி கிணற்றில் இறங்கிப் பார்ப்பதாக முடிவாயிற்று. அவரது இடுப்பிலே ஒரு கயிறு கட்டப்பட்டு அது மேலேயுள்ள ஒரு மரத் துண்டில் முடிந்து வைக்கப்பட்டது. அம்பலத்தின் உதவியோடு மாயாண்டி கிணற்றுக்குள் இறங்கினார். மேலிருந்தவாறு அம்பலம், மாயாண்டியின் ஒவ்வொரு அசைவையும் பரபரப்போடு கவனித்துக்கொண்டிருந்தார்.

சிறிது நேரத்திற்கெல்லாம் மாயாண்டி, “வெற்றி! வெற்றி!” என்று கத்தினார்.

அம்பலம், “ஆகா! அப்படியா!” என்று கிணற்றுக்கு மேலே கூத்தாடினார்.

மாயாண்டி, கிணற்றிலே இரும்புச் சங்கிலி பிணைக்கப்பட்ட ஒரு பெட்டியிருப்பதாகக் கத்தினார். உடனே அம்பலம் அதைத் தூக்குவதற்குத் தானும் இறங்க ஆரம்பித்தார்.

உடனே மாயாண்டி, “வேண்டாம் — வேண்டாம்! சிறிய பெட்டிதான் — நானே எடுத்து வருகிறேன்” என்று கூவினார்.

“இதோ இன்னொரு கயிறு அனுப்புகிறேன் — அதிலே கட்டிவிடு! நான் பெட்டியை மேலே இழுத்து விடுகிறேன்” என்றார் அம்பலம்.

அதற்கு மாயாண்டிக் கிழவர் சிரித்துக்கொண்டே, “ஏன் — பெட்டியைக் கயிறு மூலம் எடுத்துக்கொண்டு, என்னைக் கிணற்றுக்குள் வைத்து மூடிவிடலாமென்று உத்தேசமோ? முடியாது; முடியாது; நானே எடுத்து வருகிறேன்!” என்று கிண்டல் செய்தார்.

“அடக் கிழவா! உமது பங்கு உமக்குத் தரப்படும் அய்யா! பயப்படாதீர்!” என்று அம்பலம் தாங்கமுடியாத மகிழ்ச்சியோடு குதித்தார். கிழவரும் பெட்டியுடன் கிணற்றுக்கு மேலே வந்து சேர்ந்தார்.

இரும்பாலான கனமான சிறிய பேழை; மெலிந்த சங்கிலியால் இணைக்கப்பட்டிருந்தது. மிகவும் கஷ்டப்பட்டு அம்பலம் அதைத் திறந்தார். அதற்குள்ளேயும் ஒரு பளபளப்பான தகடு இருப்பதைத்தான் அவர்கள் கண்டார்கள். மாயாண்டிக் கிழவர், “சரிதான் போ!” என்று அலுத்துக்கொண்டு உதட்டைப் பிதுக்கினார். “புதையலைத் தேடினா ஒரே தகடா கிடைக்குதே” என்று அவர் முணுமுணுத்தார்.

அதைக்கண்ட அம்பலம் “அதற்குள் அசந்துவிடலாமா? முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்! அதிருக்கட்டும்; இதைப் படிக்கலாம்” என்று தகட்டை மாயாண்டியின் கையிலே கொடுத்தார்.

கிழவரும் அந்த எழுத்துக்களைப் படிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டு, கடைசியிலே ஒருவாறு படிக்க ஆரம்பித்தார். அதிலேயிருந்த வாசகம் இதுதான்:

“புதையல் இங்கே இருக்கிறது. திருமணமான தம்பதிகளை திருமண தினத்தன்றே கொலை செய்து, அந்த ரத்தத்தை இந்த இடத்தில் தெளித்தால், புதையல் வெடித்துக் கிளம்பும்.”

இதைப் படித்து முடித்ததும், மாயாண்டிக் கிழவர் “அய்யோ — என்ன அக்கிரமம்! தம்பதிகளைக் கொலை செய்ய வேண்டுமா? அப்படிப்பட்ட புதையல் நமக்கு வேண்டவே வேண்டாம்!” என்று அலறினார்.

“கல்யாணமான உடனே கொலை செய்வதற்குத் தகுந்தபடி தம்பதிகள் எங்கே அய்யா கிடைப்பார்கள்?” என்று அங்கலாய்த்துக்கொண்டார், அம்பலம்.

அதைக் கேட்ட கிழவர், “ஓகோ! பலிக்கு ஆட்களை தேடவே ஆரம்பித்து விட்டீரா? வெள்ளியம்பலம்! சொல்வதைக் கேளும். இவ்வளவு கொடுமையான காரியத்தைச் செய்து இந்தப் புதையலை எடுக்கவேண்டாம். நம் பேராசைக்காக யாரோ இரு பருவ மலர்கள் தங்கள் உயிரை இழப்பதா? கொடுமை! கொடுமை! எனக்குப் புதையலும் வேண்டாம் — ஒண்ணும் வேண்டாம்” என்று உறுதியாக உரைத்தார்.

“நீ ஒரு கோழைக் கிழவனய்யா! கொலை என்றால் இப்படிப் பயப்படுகிறீரே! கோடீஸ்வரனே ஆகப் போகிறோம் — இதையெல்லாம் நினைத்துப் பயந்தால் காரியம் நடக்குமா?” என்று அம்பலம் தைரியம் கூற ஆரம்பித்தார்.

கிழவர் கடைசி வரையில் உறுதியாக நின்று மறுத்துப் பார்த்தார். முடியவில்லை. அம்பலத்தின் தீர்மானத்திற்கு இணங்கித் தீரவேண்டிய நிலைமை ஏற்பட்டது.

“எங்கே போய் புதிய தம்பதிகளைக் கல்யாண மேடையிலேயே கண்டுபிடித்துக்கொண்டு வருவது!” என்ற யோசனையோடு அம்பலம் குழம்பிக்கொண்டிருந்தார். இருவரும் வீடு நோக்கித் திரும்பினார்கள்.

அம்பலம் அறைக்குள் நுழைவதைக் கண்ட மேனகா, அயர்ந்து தூங்குவதைப்போல் பாசாங்கு செய்தாள். அம்பலமும் அவளை எழுப்பும் எண்ணமின்றி, புதையலிலேயே தன் மனம் முழுதும் அலைய விட்டுக்கொண்டே படுத்தார். சாவிக் கொத்தை எங்கே வைக்கிறார் என்பதை மட்டும் மேனகா கவனமாகப் பார்த்துக்கொண்டாள்.

திருமணத் தம்பதிகள் — திருமணத் தம்பதிகள் — இந்த வார்த்தைகளையே அம்பலத்தின் வாய் மெதுவாக முணுமுணுத்துக் கொண்டிருந்தது. திடீரென அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.

“துரை நம்மிடந்தானே இருக்கிறான். அவனுக்குத் திருமணம் செய்துவைத்து காரியத்தை முடித்துவிட்டால் என்ன?” — இப்படி நினைவுச் சுழல்!

“திருமணம் என்றால் ஒரு பெண்ணும் வேண்டுமே — அதற்கு எங்கே போவது? அப்படியே இருந்தாலும் மாப்பிள்ளை, பெண் — சம்மதங்கள் இருந்தால்தானே திருமணத்தை சுமுகமாக முடித்து, காரியத்தையும் சுலபமாக நிறைவேற்றிக் கொள்ளலாம்?” — இப்படிக் கேள்விச் சரங்கள்!

“அய்யோ — அந்தப் பரிமளா ஓடாமல் இருந்தாலும் இப்போது அவளுக்கும் துரைக்கும் திருமணத்தை நடத்தி நம் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ளலாமே!” — இப்படியெல்லாம் சிந்தனைப் புயல்கள்!

வெள்ளியம்பலம் குழப்பத்தின் எல்லை வரையில் போய்ச் சேர்ந்தார். தூங்குவதற்குக் கண்ணை மூடினால் திருமணம் நடப்பது போலவும், அந்தத் தம்பதிகள் முதல் இரவு சந்திப்புக்கு முன்பே கொலை செய்யப்படுவது போலவும், அவர்களது இரத்தத்தை கிணற்றில் தெளிப்பது போலவும், கிணறு வெடித்து தவலை தவலையாக — பாளம் பாளமாக — தங்கக் கட்டிகள் சிதறுவது போலவும், காட்சிகள் அடுக்கடுக்காய் நகரத் தொடங்கின. சாவிக் கொத்துக்காகக் காத்திருந்த மேனகாவும், அம்பலம் சிறிது அயர்ந்திருக்கும் சமயமாகப் பார்த்து, அதைக் களவாடிக்கொண்டு அறையைவிட்டு பூனைபோல் வெளியேறினாள்.

தங்கள் அறையின் கதவு திறக்கப்படுவதை அறிந்த துரையும், மலையாள பகவதியும் ஒருவரைவிட்டு ஒருவர் விலகித் தயாராக நின்றுகொண்டிருந்தனர். கதவு திறக்கப்பட்டது. மேனகா, கையிலே ஒரு அழகிய சிறு பெட்டியுடன் உள்ளே வந்து, “ம் — சீக்கிரம் சீக்கிரம்!” என்று துரையிடம் அவசரப்படுத்தினாள். துரையும் அவள் பின்னே மெதுவாக நடக்க ஆரம்பித்தான். மலையாள பகவதியும் அவர்களோடு புறப்பட்டான். கொல்லைக் கதவைத் திறந்துகொண்டு மூவரும் கொல்லைப்புறம் வந்துசேர்ந்தார்கள். மூவரும் ஆழ்ந்த பெருமூச்சுக்களால் தங்கள் இதய ஆசைகளை காட்டிக்கொண்டனர். கொடூரம் நிறைந்த சிறைச் சாலையில் ஆயுள் தண்டனை பெற்ற கைதியாக அடைபட்டிருந்த மேனகா, தனக்குக் கிடைக்க இருக்கிற விடுதலையை நினைத்துத்தானோ என்னவோ, சுவாசப்பைகளின் ஆழத்திலிருந்து, அவ்வளவு நீளமான பெருமூச்சை வெளிப்படுத்தினாள். கொல்லைப்புறத்துச் சுவரைத் தாண்டியகவேண்டும். தனக்குத்தான் நன்றாக வழி தெரியுமென்றும், தானே முதலில் சுவற்றில் ஏறி வழி காட்டுவதாகவும் கூறினாள், மேனகா. துரையோ, தானும், அதன்பிறகு மலையாள பகவதியும், கடைசியாக மேனகாவும் சுவரைத் தாண்டவேண்டுமென்று திட்டம் வகுத்தான்.

அந்தத் திட்டப்படி முதலும் இரண்டாவதுமாக சுவரேறிக் குதிக்கும் துரையும், மலையாள பகவதியும், மேனகாவைத் தங்கள் பின்னே வரவொட்டாமல் தடுத்து ஓடிவிடலாம். மேனகாவையும் ஒரு தவறிலேயிருந்து காப்பாற்றலாம். திட்டப்படியே சுவற்றில் முதலில் துரை ஏறினான். வீட்டுக்குள்ளே ஏதோ சப்தம் கேட்டது போலிருந்தது. மலையாள பகவதி கொல்லைப் பக்கமுள்ள ஒரு புதரில் நன்றாக மறைந்துகொண்டாள். மேனகா, துரை சுவற்றில் ஏறுவதற்கு உதவி செய்துகொண்டிருந்தாள். துரை பாதிச் சுவர் ஏறிவிட்டான். கொல்லைவாசல் பக்கமிருந்து “அடேய்!” என்ற அம்பலத்தின் குரல் கேட்டது. மேனகா திரும்பினாள் திடுக்கிட்டு!

அம்பலம் துரையை நோக்கி ஒரு பளபளப்பான கத்தியை ஆவேசத்தோடு வீசினார். துரையின் முதுகுப் புறம் வீசிய அந்தக் கத்தியை மேனகா பாய்ந்து தடுத்தாள். கத்தி, மேனகாவின் நெஞ்சிலே பாய்ந்து தொத்திக்கொண்டது. மேனகா, அலறியபடி கீழே விழுந்தாள். தூங்கிக்கொண்டிருந்த காவற்காரர்கள் விழித்துக்கொண்டனர்.

அம்பலம், மேனகா விழுந்த இடத்திற்கு ஓடிவந்தார். துரையையும் காவற்காரர்கள் பிடித்துக்கொண்டார்கள். நிலைமையின் நெருக்கடியை உணர்ந்துகொண்ட மலையாள பகவதி, புதரிலிருந்து மெதுவாக நழுவி, வீட்டுக்குள்ளே ஓடி, துரை அடைபட்டிருந்த அறையிலே படுத்துக்கொண்டு தூங்குவதுபோல் நடிக்க ஆரம்பித்தாள். அவள் இருதயத் துடிப்புகளை அவளால் அடக்கவே இயலவில்லை. இன்னும் என்ன நடக்குமோ என்ற அச்சம் அவளைக் கப்பிக்கொண்டது. துரையை இழுத்துவந்து அறைக்குள்ளே தள்ளினார்கள். “குடுகுடுப்பைக்காரன் இருக்கிறானா?” என்று கேட்டபடி அம்பலம் உள்ளே பார்த்தார். அவன்தான் அயர்ந்து கொரட்டை விட்டுத் தூங்குகிறானே!

“சரி! குடுகுடுப்பைக்காரனை இவனோடு வைக்காதே! அவனை வேறு அறையில் போடு! துரையை இந்த அறையிலேயே போடு!” என்று ஜெயிலர், வார்டர்களுக்கு உத்திரவிடுவது போல, அம்பலம் தன் ஆட்களுக்கு கட்டளையிட்டார்.

துரை அந்த அறையிலே பூட்டப்பட்டான். குடுகுடுப்பைக்காரனை தூக்கத்தோடு எழுந்து நடக்கவைத்து வேறு அறைக்குக் கொண்டுபோனார்கள். அவன் அதிக தூக்கத்தில் தள்ளாடுவதுபோல, விழுந்தும் எழுந்தும் அவர்களோடு போனான். அவனும் ஒரு அறையில் அடைக்கப்பட்டான்.

ரத்தக் குளத்திலே நீந்துவதுபோல மேனகா கிடந்தாள். அவளைத் தூக்கி படுக்கையிலே கிடத்தினார்கள். உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது. வாழ்க்கையிலே புதுமை காண நினைத்த அந்த எழில் மலர், கருகும் நிலையிலே காணப்பட்டது. நெஞ்சிலேயிருந்து பெருகும் உதிரத்தை, அவள் கண்களிலேயிருந்து பெருகும் கண்ணீர் தோற்கடித்தது. அவளைச் சூழ்ந்து அம்பலமும் ஆட்களும் நின்றுகொண்டிருந்தார்கள். வாழ்விலே மாற்றம் — இருட்டிலேயிருந்து ஒளியுலகிற்கு விடுதலை இவைகளை விரும்பினாள் மேனகா! ஆனால் விடுதலை வேறு ரூபத்திலே வருவதற்குக் காத்திருந்தது.

கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்