அத்தியாயம் 44 · 45 / 52

அத்தியாயம் 44

Chapter 44

மூல ஸ்கேன் 376 (chapter-44 portion)-387 (chapter-44 portion)

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

44

எப்படியும் மேனகா இறந்துவிடுவாள்; அப்படி இறந்துவிட்டால், அவள் கத்தி பாய்ந்து செத்தாள் என்பது ஊரிலே பரவிவிடும். பரவிவிடுமேயானால், தான் போலீசில் சிக்கிவிட நேரிடும் என்று அம்பலம் அச்சங்கொண்டார். அதன் காரணமாக முன் எச்சரிக்கையாகவே போலீசுக்குத் தகவல் கொடுத்துவிட வேண்டுமென்று முடிவு கட்டினார். வேலைக்கார ராமனை அழைத்து, பேராவூரணி போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிப்போய், மேனகா குத்தப்பட்ட செய்தியை சப் இன்ஸ்பெக்டரிடம் தெரிவித்து வருமாறு அனுப்பினார்.

ராமன், அவரிடம் — “மேனகாவை யார் குத்தியது என்று கேட்டால் என்ன பதில் சொல்வது?” என்று சந்தேகம் கிளப்பினான்.

அம்பலம் சிறிது நேரம் யோசித்தார். “என்னடா என்னைக் கேட்கிறாய்? முட்டாளே! உனக்குத் தெரியாதா? அந்தக் குடுகுடுப்பைக்காரன்தானே அவளைக் கொலை செய்ய முயன்றான்! என்னிடம் வந்து கேட்கிறாயே; போலீஸ் ஸ்டேஷனில் சொல்! கொலை செய்ய முயற்சித்த குடுகுடுப்பாண்டியை இங்கே பிடித்து வைத்திருப்பதாகவும் தெரிவித்து வா!”

அம்பலம் இதைச் சொன்னதும் ராமன் விழித்தான். அவனுக்குத் தெரியும்; அம்பலம் தான் மேனகாவை மரணப் படுக்கையில் கிடத்தியிருக்கிறார் என்பது!

அய்யோ, பாவம்; அந்தக் குடுகுடுப்பைக்காரன் சிக்கிக்கொண்டானே — என்ற வருத்தத்துடன் எஜமானன் உத்திரவை நிறைவேற்ற அவன் பேராவூரணியை நோக்கி ஓடினான்.

நாடியம் மடாலயத்தைத் தாண்டிச் செல்லும்போது மடாலயத்துப் பின்புறமிருந்து, “ராமா!” என்று ஒரு குரல் கேட்கவே, திரும்பிப் பார்த்தான். ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள். கை காட்டி ராமனை அருகே வருமாறு அழைத்தாள். அவனும் எதுவும் புரியாமல் அவளிடம் வந்தான். அழகான வெள்ளைச் சேலை அணிந்து — நீல நிறத் துணியினால் தலையின் பாதி பாகத்தை மூடிக்கொண்டு — முகத்தையும் மூக்குக்குக் கீழே கருப்பு சல்லாத்துணியால் மறைத்துக்கொண்டிருந்த அந்தப் பெண்ணின் நெளி நெளியான கூந்தல், குதிரைக் குஞ்சம்போல சுருட்டிவிடப்பட்டு தொங்கிக்கொண்டிருந்தது. அவளது நெற்றியும் கண்களும் மட்டுமே தெளிவாகத் தெரிந்தன. கண்களிலேகூட கண்ணாடி அணிந்திருந்தாள் அவள்.

“என்ன ராமா, சௌக்கியமா?” என்று கேட்டுக்கொண்டே அவளும் அவனிடம் நெருங்கி வந்தாள்.

ராமன், நாணிக் கோணி நின்று, “யார் நீங்க? என்னை எப்படித் தெரியும்?” என்று கேட்டுக்கொண்டே குழைந்தான்.

“எனக்கு உன்னை நன்றாகத் தெரியுமே — நீதானே வெள்ளியம்பலத்தின் வேலைக்காரன்?” என்று கேட்டுக்கொண்டே அவள் சிரித்தாள்.

“ஆமாம்; நானேதான்! அடேடே! நீங்க யாரம்மா?”

“என்னாது; என்னை அம்மான்னு கூப்பிடுறே! என்னைப் பார்த்தா ஒரு இளம் பெண்ணாத் தெரியிலியா?”

“தெரியுது; தெரியுது. ஆமாம், நீங்க யாரு? என்னை எப்படித் தெரியும்?”

“என் பெயர் ஷோக்சுந்தரி! சிலோன் தேசத்தைச் சேர்ந்தவள், நீ அம்பலத்தோடு புதுப்பட்டினம் சந்தைக்கு வரும்போது அடிக்கடி பார்த்திருக்கிறேன். ஆனால் நீ என்னைப் பார்த்ததில்லை. நீ அழகாக நடந்து அன்னம் போல அம்பலத்தோடு போவாய்; நான் ஒதுங்கி நின்று ஓரக் கண்ணால் பார்த்து ஏங்குவேன்!”

“ஏங்குவீங்களா? ஏன்?”

“இது புரியவில்லையா? ஒரு ஆணிடம் ஒரு பெண், இதைவிடப் பச்சையாக எப்படி விஷயத்தை வெளியிட முடியும்?”

“ஓகோகோ; புரிகிறது! ஷோக்சுந்தரி! நீ என்னை……” என்று ராமன் வார்த்தையை இழுத்தான், வலிப்பு வந்தவன் போல!

“ஆமாம் ராஜா! நான் உன்னைக் காதல் செய்கிறேன்” என்று அவள் பதில் கூறி நின்றாள்.

ராமன் அயர்ந்து போய்விட்டான். மெய்மறந்து நின்றான். “என்னை நீ காதலிக்கிறாயா?” என்று அலறினான். அவனையே அவனால் நம்ப முடியவில்லை. அவளோ, அவனைப் பார்த்துக்கொண்டே, “கண்ணாளா! என் கண்ணைக் கேளு; அது சொல்லும்! என் இருதயத்தைக் கேளு; அது சொல்லும்! எங்கே, மனந் திறந்து சம்மதங் கொடு! நாமிருவரும் நகமும் சதையும் போல வாழலாமா? சொல்லு கண்ணா!” — இப்படி விரகதாபத்தை வெளியிட ஆரம்பித்து விட்டாள் ஷோக்சுந்தரி.

“இது என்ன ஒரே ஆச்சரியமாயிருக்கு! சொப்பனம் காணுகிறேனா?” — ராமன் கண்களைக் கசக்கியபடி ஷோக்சுந்தரியை ஏற இறங்கப் பார்த்தான். வலிய வந்த அதிர்ஷ்டத்தை எண்ணி எண்ணி மகிழ்ந்தான். “ஆகா! எனக்காக ஒரு பெண்மணி இவ்வளவு நாட்களாகத் தவமிருந்திருக்கிறாளே!” என்று தன்னைப்பற்றித் தானே புகழ்ந்துகொண்டான். அவளது கரங்களை மெதுவாகப் பற்றினான்.

அவளும் அவனை அன்போடு பார்த்து, நாணிக் கோணி நின்றாள். “சத்தியம் செய்து கொடுங்கள்; திருமணம் செய்துகொள்வதாக!” என்று கட்டாயப்படுத்தினாள்.

“ஆயிரம் சத்தியம் செய்து கொடுக்கிறேன்!” என்று அவளது கையிலே அடித்துக் கொடுத்தான் ராமன்.

“அப்பாடா! என் ஜென்மம் சாபல்யம் அடைந்தது” என்று பெருமூச்சு விட்டாள். அவளோடு அந்த மடத்தடியிலேயே இருக்க வேண்டும்போல் தோன்றியது ராமனுக்கு!

ஆனாலும் எஜமானனின் கட்டளையை அவனால் மறக்க முடியவில்லை. அவளிடம் விடை பெற்றுக்கொள்வதற்குத் தவியாய்த் தவித்தான். அவளோ ராமனிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டேயிருந்தாள். “பரிமளா எங்கேயிருக்கிறாள்?” என்று அவள் கேட்டதும், ராமனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“அடேடே! அதுகூட உனக்குத் தெரியுமா? எப்படித் தெரியும்?” என்று அதிர்ச்சியோடு கேட்டான் அவன்.

“எனக்கு உன்னைப்பற்றி விசாரிப்பதேதான் வேலை. அப்படி விசாரிக்கும்போது, பரிமளா என்ற ஒரு பெண்ணை, உங்க எஜமானன் அடைத்து வைத்திருப்பதாக கேள்விப்பட்டேன் கண்ணாளா!” என்று செல்லமாகச் சிணுங்கிக்கொண்டே பேசினாள்.

“அந்தப் பரிமளா ஒரு நாள் என்னையும் ஏமாற்றிவிட்டு ஓடிவிட்டாள். இப்போது அந்தத் துரையைக் கொண்டு வந்து அடைத்து வைத்திருக்கிறோம்” என்று வீரப் பிரதாபத்தோடு செய்தியை வெளியிட்டுக்கொண்டே அவளது கன்னத்தைக் கிள்ளுவதற்காக முயன்றான். அவள் நல்ல உயரமாக இருந்ததாலும், ராமன் சரியான குள்ளமானபடியாலும் அவனுக்கு அவள் கன்னம் எட்டவில்லை. உதவிக்கு ஒரு கல்மீது ஏறிக்கொண்டான்.

துரை அடைபட்டிருப்பதைக் கேள்வியுற்ற ஷோக்சுந்தரியின் முகம் மாறிற்று. அந்தத் திடீர் மாறுதலை ராமன் கவனிக்கவில்லை. அவன் தான் காதல் போதையில் கட்டுண்டு தவிக்கிறானே; பாபம்! துரை எப்படி அடைபட்டான்; எதற்காக அடைபட்டான்? — என்பவைகளை எல்லாம் அவள் ராமனைக் கிண்டிக் கிண்டிக் கேட்டாள். புதிய போதையில் ஆழ்ந்து கிடந்த அவன், காரணங்கள் எதுவும் சரியாகத் தெரியாது என்று உளறியதோடு, மேனகாவை அம்பலம் வெட்டிவிட்டு, அந்தப் பழியை ஒரு குடுகுடுப்பைக்காரன் மீது போடப் போவதையும், அதற்காகவே தான் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போவதையும் அவளிடம் கூறினான். ஷோக்சுந்தரி, ராமனின் மடியில் சாய்ந்தபடியே அவனிடமிருந்து துரை பற்றியும் — மேனகா, குடுகுடுப்பைக்காரன் பற்றியும் ஓரளவு விஷயங்களைத் தெரிந்துகொண்டாள்.

ராமனோ, அவள் யார்? திடீரென்று தன்மீது பிரியங் காட்டக் காரணம் என்ன? — என்பவைகளைப்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட நேரமின்றி ஒடிந்து கிடந்தான். வலுவிலே கிடைத்த வாய்ப்பை இழக்க அந்த வாலிபனுக்கு மனமில்லையென்றாலுங்கூட, எஜமானனின் கட்டளைப்படி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போக நேரமாகிவிட்டதை உணர்ந்து அவளிடம் விடை கேட்டான்.

அவளோ ஊடல் புரிந்து நின்றாள். “நீங்கள் பிரிகிறீர்கள். எனக்கு அழுகை தாங்க முடியவில்லை” என்று கூறிக்கொண்டே, அவள் தன் கண்ணாடியைக் கழற்றி, அதைக் கைக்குட்டையால் துடைத்து மீண்டும் அணிந்துகொண்டாள். நாளைய தினம் அவசியம் சந்திப்பதாகச் சொல்லிவிட்டு பிரியாமல் பிரிந்தான் ராமன். அவன் போகும் வரையில் நின்று பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, ஷோக்சுந்தரி நாடியத்திலிருந்து மருங்கப்பள்ளம் செல்லும் மார்க்கமாக நடக்க ஆரம்பித்தாள்.

“துரையை அடைத்துவிட்டான் துரோகிப் பயல்! துரையை விடுவித்தே தீருவேன்” என்று அவளது வாய் முணுமுணுத்தபடியிருந்தது. கால்கள் அம்பலத்தின் வீடு நோக்கிப் பறந்தன.

மேனகாவின் சாவை ஒவ்வொரு விநாடியும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அம்பலம், வெளிப்புற திண்ணையிலே உட்கார்ந்திருந்தார். அவருக்கெதிரே ஷோக்சுந்தரி போய் நின்றாள். அவர் கேட்பதற்கு முன்பாகவே அவள் தன்னைத்தானே அறிமுகப் படுத்திக்கொண்டாள். சிலோனிலிருந்து வந்துள்ள அனாதையென்றும், பெரிய தர்ம தாதாவாகிய வெள்ளியம்பலம் ஏதாவது உதவி செய்வார் என்று எதிர்பார்ப்பதாகவும் அவள் பணிவோடு கூறினாள். “நீங்கள்தான் இருண்டுபோன என் வாழ்வுக்கு ஒளி தர வேண்டும்” என்று மன்றாடினாள்.

அவளது வரலாறு முழுவதையும் கேட்ட அம்பலம், கடைசியாக, ஏதோ சிந்தித்தவராக, “உனக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா?” என்று கேட்டார்.

“இதுவரையில் இல்லை. நீங்களே செய்துகொண்டாலும் சரி!” என்று சொல்லிவிட்டு, அவள் அவரைப் பார்த்து வெட்கப்பட்டு தலைகுனிந்து நின்றாள். பூமியைக் கால் விரலால் பிராண்டியபடி!

ஷோக்சுந்தரி திருமணமாகாதவள் என்று கேட்ட மாத்திரத்தில் அம்பலத்திற்கு ஆனந்தம் ஏற்பட்டது. புதையல் எடுக்க எல்லாக் காரியங்களும் கைகூடி வருகின்றன என்று பூரிப்படைந்தார். மேனகாவின் சாவைத் தவிர்க்கவே முடியாது. எப்படியும் செத்துவிடுவாள். கொலைக் குற்றத்தை சுமக்க குடுகுடுப்பைக்காரன் இருக்கிறான். இதோ, ஒரு ஷோக்சுந்தரி கிடைத்துவிட்டாள். இவளைத் துரைக்குத் திருமணம் செய்வித்து புதையலுக்குத் தேவையான பலியைக் கொடுத்துவிடலாம். நெடுநாளைய கனவும் பலித்துவிடும். பிறகு மாயாண்டிக் கிழவன் ஒருவன்தான் பாக்கி! அவனையும் புதையல் கிடைத்த பிறகு சமாதி செய்துவிட்டால் எல்லாத் தங்கங்களுக்கும் நானே ராஜாவாகி விடுவேன் — இப்படியெல்லாம் ஆசைக் கோட்டைகளும், சதி மாளிகைகளும் உருவாயின அம்பலத்தின் மூளையில்! ஷோக்சுந்தரியிடம் தந்திரமாகப் பேசி, அவளையும் அறையிலே போட்டுப் பூட்டிவிட்டால், இன்னும் ஓரிரு நாட்களில் திருமணத்தை நடத்தி, எல்லாவற்றையும் முடித்துவிடலாம் என்று கருதினார்.

“நீ பத்திரமாக இங்கேயே இரு! பாதுகாப்பாக உன்னை ஒரு அறையில் வைத்திருக்கிறேன். சில நாட்களுக்குள் உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையைத் திருமணம் செய்வித்து, உனக்குத் தேவையான வசதிகளைச் செய்கிறேன். உன்னைப் போலத் திக்கற்றவர்களுக்கு உபகாரம் செய்வது தானம்மா என் வேலை!” என்று அவளிடத்தில உபசார மொழிகள் பேசினார்.

ஷோக்சுந்தரியும் அம்பலத்திற்கு நன்றி கூறி நின்றாள். அவளை அழைத்துக்கொண்டு அம்பலம் வீட்டுக்குள்ளே போய், “இங்கே ஒரு அறையில் உன்னை பத்திரமாக வைக்கப் போகிறேன். எதற்கும் பயப்படாதே!” என்று கூறிவிட்டு, துரையின் அறையைத் திறக்கப் போனார். பிறகு என்னவோ நினைத்துக்கொண்டு, அந்த அறையைத் திறக்காமல், ஷோக்சுந்தரியை மலையாள பகவதியிருக்கும் அறையிலே விட்டு கதவைப் பூட்டிக்கொண்டார். ஷோக்சுந்தரிக்கு எதுவும் புரியவில்லை. விழித்தாள். “அறையைப் பூட்டுவதற்காகப் பயப்படாதே! உனக்கு நல்லகாலம் வரப்போகிறது” என்று சமாதானம் சொல்லியபடி அம்பலம் அதைவிட்டு அகன்றார்.

ஷோக்சுந்தரியைக் கண்ட குடுகுடுப்பாண்டி, நீண்டதொரு பெருமூச்சுடன் வேறிடம் போய் உட்கார்ந்துகொண்டான். ஷோக்சுந்தரியும் குடுகுடுப்பாண்டியை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, இன்னொரு பக்கம் போய் ஜன்னலண்டை அமர்ந்துகொண்டாள். அய்யோ, பாவம் — இந்தக் குடுகுடுப்பாண்டிக்குத்தான் ஆபத்து வரப்போகிறது! பொய்க் குற்றம் சாட்டி போலீசில் ஒப்புவிக்கப் போகிறார் அம்பலம் — என்று எண்ணியவாறு ஜன்னல் கம்பிகளைத் தடவிக் கொண்டிருந்தாள் ஷோக்!

புதையலுக்கு காவு தயாராகிவிட்டது என்ற களிப்புடன் அம்பலம், மாயாண்டிக் கிழவரிடம் ஓடோடி வந்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டார்.

“கிழவரே! நாம் தேடி அலையும் திரவியம், தேடாமல் வரும் அதிர்ஷ்டத்தால் திண்ணமாகக் கிடைக்கப் போகிறது!” என்று கூவினார்.

போலீஸ் ஸ்டேஷனிலிருந்து திரும்பிய ராமன், செய்தி சொல்ல வந்து — அவர் மாயாண்டியிடம் பேசிக்கொண்டிருப்பதை ஒளிந்திருந்து கேட்க ஆரம்பித்தான்.

“ஷோக்சுந்தரி என்று ஒரு பெண் அகப்பட்டாள். கன்னி கழியாதவள். அவளுக்குத் திருமணம் செய்வித்து சௌகரியங்கள் செய்வதாக வாக்களித்து பூட்டி வைத்திருக்கிறேன், எங்கும் ஓடிவிடாமல்! தகட்டில் இருக்கிறபடி அவளுக்கு ஒரு மாப்பிள்ளை தேடி திருமணம் செய்வித்து, உடனே கொலை செய்து நமது பலியை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.”

அதைக் கேட்ட மாயாண்டி, “மாப்பிள்ளைக்கு யாரைப் பிடிப்பது?” என்று கேட்டார்.

“ஓகோ, கிழவரே! இதுவரையில் நான் சொல்லவில்லையல்லவா? துரை ஓடிப் போனான் என்றீரே; அவனை நான்தான் அடைத்து வைத்திருக்கிறேன்.”

“அப்படியா?”

“ஆமாம். புதையல் ரகசியம் அவனுக்கும் தெரியுமல்லவா? அதனால்தான் அவனைப் பிடித்துப் போட்டிருக்கிறேன். இப்போது அது நல்லதாகவே போய்விட்டது.”

“ஆமாம்! உண்மைதான் அம்பலம்! துரையைத் தீர்த்துக்கட்டி விட்டால், புதையலை நாம் இருவருமே பங்கு போட்டுக் கொள்ளலாம். ஆனால் ஒன்று; அந்தப் பயல் துரை, பரிமளாவைத்தானே திருமணம் செய்து கொள்வேன் என்பான்.”

“அவள் தான் கிடைக்கவில்லையே, என்ன செய்வது? துரைக்கும் ஷோக்சுந்தரிக்கும் கட்டாயக் கல்யாணம் செய்து, காவு கொடுக்க வேண்டியதுதான்.”

அம்பலத்தின் முடிவைக் கேட்டு கிழவர் மௌனமாக இருந்தார். அம்பலத்தின் பேச்சைக் கேட்ட ராமன், தவியாய்த் தவித்தான். துடித்தான். துவண்டான். ஷோக்சுந்தரி அம்பலத்திடம் அகப்பட்டுக்கொண்டதையும், அவளை பலியிடப் போவதையும் கேட்டு கண்ணீர் விட்டான். அம்பலத்தின்மீது அவனுக்கு அடங்காத கோபம் பிறந்தது. கோபத்தை அவரிடம் காட்டி என்ன செய்வதென்று வருந்தினான். தனது அருமைக் காதலிக்கு இவ்வளவு அவசரமாக ஆபத்து வந்துவிட்டதே என்று அழுதான்.

எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அம்பலத்திடம் வந்து, போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டர் இல்லை என்றும், வந்ததும் உடனே வருவார்கள் என்றும் கூறிவிட்டுத் துக்கம் தொண்டையை அடைக்க அதைவிட்டு நகர்ந்தான். வீட்டின் ஒரு மூலையிலே உட்கார்ந்துகொண்டு திடீர்க் காதலியை நினைத்து தேம்பித் தேம்பி அழுதான். ‘கோ’வெனக் கத்தினான். அவளைப் பூட்டியிருக்கும் அறையின் பக்கமாக சோகநடை போட்டுப் போனான்.

ஷோக், ஜன்னலண்டை உட்கார்ந்திருந்தாள். அவளிடத்திலே சென்று இவ்வளவு ஆபத்தான செய்தியை எப்படி வெளியிடுவது என்று யோசித்தான். அவளிடம் செல்ல மனமின்றி, மெதுவாக இன்னொரு ஜன்னல் பக்கம் வந்தான். அங்கே குடுகுடுப்பைக்காரன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான். அவன் மூலமாகத் தன் காதலியிடம் வரப்போகும் ஆபத்தை அறிவிக்கலாமென்று தீர்மானித்துக்கொண்டான். குடுகுடுப்பைக்காரனிடம் நெருங்கி, “ஏ, பகவதி சாயபு! எனக்கு ஒரு உபகாரம் பண்ணுவாயா?” என்று கெஞ்சினான்.

பகவதி வேடத்திலிருக்கும் பரிமளாவும், ராமனால் ஏதாவது உதவி ஏற்படலாம் என்று எண்ணியவளாய், “என்ன வேண்டும்?” என்று ராமனைக் கேட்டாள்.

ராமன் கண் கலங்கியபடி பேசினான்: “அதோ உட்கார்ந்திருக்கிறாளே; ஷோக்சுந்தரி — அவள் என்னுடைய பிரிய சிநேகிதி! நானும் அவளும் உசிருக்கு உசிரு! அவளுக்கு என் எஜமானனால் பெரிய ஆபத்து வரப் போவுது! அதாவது, துரை என்கிறவனுக்கும் இவளுக்கும் கல்யாணம் செய்துவைத்து, இரண்டு பேரையும் உடனே கொலை செய்து பலி கொடுத்து புதையல் எடுக்கப் போகிறாராம். அந்த ஆபத்திலேயிருந்து என் காதலி ஷோக்சுந்தரியைக் காப்பாத்தணும். இந்த விஷயத்தை நீயே அவளுகிட்ட சொல்லிவிடுகிறாயா பகவதி?” என்று கெஞ்சினான் ராமன்.

அந்த வார்த்தைகளைக் கேட்ட பகவதிக்கு நெஞ்சு நடுக்கமெடுத்தது. தன் காதலன் துரை, இனிமேல் தப்ப முடியாது என்பதை அறிந்து அனலிடை மெழுகாக உருகிற்று அவள் உள்ளம். துரையோடு சேர்ந்து தானும் சாக விரும்பினாள்.

ராமனிடம் ஆறுதல் கூறி அனுப்பிவிட்டு, ஒரு மூலையிலே விழுந்து கண்ணீர் வடித்தாள். குடுகுடுப்பைக்காரன் அழுவதை ஷோக்சுந்தரி கவலையோடு கவனித்தாள். அம்பலத்தின் மனைவியைக் குத்திவிட்ட குற்றத்திற்குக் குடுகுடுப்பைக்காரன் ஆளாக வேண்டுமே, அதற்காக அழுகிறான் போலும் — எனக் கருதினாள் ஷோக்சுந்தரி!

துரையோடு தானும் பலி கொடுக்கப்படவேண்டும் என்கிற ஆசையாவது நிறைவேறினால் போதும் — என்று தனக்குள்ளே புலம்பிக்கொண்டாள் பரிமளா! எங்கிருந்தோ வந்த ஷோக்சுந்தரிக்குக் கிடைக்கும் பாக்கியம் தனக்குக் கிடைக்கக் கூடாதா என்று ஏங்கினாள். அதே சமயம் அவளுக்கு ஷோக்சுந்தரியின் மீதும் அனுதாபமும் பரிவும் ஏற்பட்டது. எதுவுமறியாத ஒரு அசட்டுப் பெண், ஆசைக்கார காண்டாமிருகத்தின் கையால் சாகவேண்டியிருக்கிறதேயென்று வருந்தினாள். ராமன் சொன்ன விஷயத்தை அவளிடம் ஜாடையாகவாவது சொல்லிவிடலாம் என்று கருதி அவள் பக்கம் போனாள்.

“என்னப்பா சாயபு! ஏன் வருத்தமாயிருக்கிறாய்?” என்று கேட்டாள் ஷோக்!

அதற்குப் பரிமளா பதில் சொல்லாமல், “சாயபு உனக்கு ஒரு ஜோஸ்யம் சொல்லப் போறான்; ஜோஸ்யம் சொல்லப் போறான்” என்றாள் பரிமளா.

“என்னா ஜோஸ்யம்?” என்றாள் ஷோக்.

“உனக்கு ராமன்னு ஒரு நாயகன் இருக்கான்.”

“ஓகோ, சரித்தான்! அதிருக்கட்டும் சாயபு! நீ பெரிய ஜோஸ்யம் சொல்றவன்கிறியே — நான் ஒண்ணு கேக்கிறேன் பதில் சொல்லு! நான் ஆணா? பெண்ணா? சொல்லு பார்ப்போம்!” என்று கேட்டாள் சுந்தரி.

“இது தெரியாதா? நீ ஒரு பெண் பிள்ளைன்னு பகிரங்கமாத்தெரியுதே!” என்று குடுகுடுப்பைக்காரன் நையாண்டி செய்தான்.

“பெண்ணா நான் — அதான் இல்லை” என்று சிரித்தபடி முக்காட்டை விலக்கினாள் ஷோக்சுந்தரி. மளமளவென்று உடையைக் கழற்றினாள். பரிமளா திகைத்தாள்.

கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்