அத்தியாயம் 45 · 46 / 52

அத்தியாயம் 45

Chapter 45

மூல ஸ்கேன் 387 (chapter-45 portion)-396 (chapter-45 portion)

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

45

பரிமளாவின் திகைப்பை அதிகப்படுத்துவது போல ஷோக்சுந்தரி திடீரென மறைந்துவிட்டாள். அவள் நின்ற இடத்திலே ஆண் உடையிலே துக்காராம் நின்று கொண்டிருந்தான். வழக்கமான அவனது கோமாளித்தனத்தின் அடையாளமாக, குடுகுடுப்பைக்காரனின் ஜோஸ்யத்தையும், திறமையையும் கிண்டல் செய்வதற்காக ஷோக்சுந்தரி வேடத்தைக் கலைத்துவிட்டான் என்றாலும், பரிமளாவினால் அதையெல்லாம் ரசிக்க முடியவில்லை.

“யார்? துக்காராமா?” என்று படபடப்போடு கேட்டுவிட்டாள். “என் பெயர் உனக்கு எப்படித் தெரியும்?” என்று குடுகுடுப்பைக்காரனைப் பார்த்து, துக்காராம் முறைத்தான்.

“தெரியும் — உன்னைத் தெரியாமல் இருக்குமா? உன் பெயரால் வந்த வினை தானே இவ்வளவும்!” என்று பரிமளா தனக்குத்தானே சலித்துக்கொண்டாள். எதிரே நிற்பது யார் என்று உணர முடியாத நிலையில் இருந்த துக்காராம் — சிறிது அஞ்சியவனாய், “ஒருவேளை, நீ துப்பறியும் இலாக்காவோ?” என்று சந்தேகத்தோடு கேட்டான்.

“இல்லை!” என்று பரிமளாவும் தனது வேடத்தைக் கலைத்தாள்.

அண்ணன் தங்கை என்ற அழியாத பாசத்தோடு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே நின்றனர். துக்காராமின் கண்களிலேயிருந்து நீர் தாரை தாரையாக வடிந்தது. பரிமளாவின் கண்களோ நீர்வீழ்ச்சிகளாயின. விவரிக்க முடியாத மௌனத்தின் விளிம்பிலே இருவரும் நின்றுகொண்டு, வேதனைகளை விழிகளால் தெரிவித்துக்கொண்டிருந்தார்கள். பரிமளாவின் இதழ்கள் மெதுவாக அசைந்தன.

“துக்காராம்! இங்கே எப்படி வந்தாய்?”

“ஜெயிலிலேயிருந்து தப்பி வந்தேன்.”

“அய்யோ — அது பெரிய குற்றமாயிற்றே!”

“இருக்கட்டுமே — முதல் குற்றம் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டால் மரண தண்டனை தான் அநேகமாகக் கிடைக்கும். ஜெயிலிலேயிருந்து தப்பிய குற்றத்திற்கு என்ன தண்டனை கொடுக்க முடியும்? எனக்கு நிச்சயமாய்த் தெரியும்; எந்த நீதிபதியானாலும் சரி — இரண்டு மரண தண்டனை ஒருத்தனுக்குக் கொடுக்க முடியாது! அதனால் எனக்குக் கவலையே இல்லை!”

“நீ ஜெயிலிலேயிருந்து எதற்காகத் தப்பவேண்டும்?”

“ஜெயில்ல இருக்கிறவன் தப்ப நினைக்கிறது அதிசயம் ஒண்ணுமில்லியே! ஆனாப் பரிமளா, நான் தப்பிச்சது உயிர்மேல் உள்ள ஆசையால் அல்ல! உன்னை ஒரு தடவை சாகிறத்துக்குள்ளே பாத்துவிடணும்னுதான் ஆசைப்பட்டேன். அதுக்காகத்தான் ஜெயிலை விட்டு ஓடி வந்தேன். எப்படியும் சாகப் போறேன். மரண தண்டனையிலேயிருந்து மீள முடியாது! அதற்குள்ளே உன் திருமுகத்தைப் பார்க்கணும்னு நான் பட்ட பாடு கொஞ்சமல்ல சகோதரி! எவ்வளவோ ஆபத்தையெல்லாம் கடந்து தப்பித்து வந்தேன்.

அன்று நீ வீட்டுக்கு நெருப்பு வைத்து என்னை வெளியேறும்படி யோசனை சொன்னாயே; உன் பேச்சைக் கேட்காமல், தங்கம் போன்ற உன் உடலைத் தரையிலே உருட்டிவிட்டு நான் போலீஸ்காரர்களிடம் சரணாகதி அடைந்தேன் அல்லவா; அன்று முதல் ஐந்தாறு நாட்கள் போலீஸ் ஸ்டேஷனில் அடைபட்டுக் கிடந்தேன். அந்த நாட்களிலே ஏதோ ஒரு பெரிய தியாகம் செய்துவிட்ட உணர்ச்சி மட்டுமே எனக்கு இருந்தது. ஏனென்றால், நான் மட்டுமே அந்த ஸ்டேஷனில் தனியாக இருந்தேன். பிறகு அங்கிருந்து பெரிய ஜெயிலுக்கு மாற்றினார்கள். ரிமாண்ட் என்ற பெயரிலே என்னைப் பூட்டி வைத்தார்கள். பெரிய ஜெயிலில் பெரிய ஆட்கள் எல்லாம் இருந்தார்கள். சைக்கிள் ரிப்பேர் செய்கிற துக்காராம் மாத்திரம் அல்ல; சைக்கிளையே உற்பத்தி செய்கிற முதலாளிகள் சிலர்கூட மோசடி கேசிலே சம்பந்தப்பட்டு உள்ளே இருந்தார்கள். ஜெயில் என்றால் என் மனசிலே இருந்த பயம் போய்விட்டது. ஜெயிலிலே மனிதனை வாட்டக்கூடிய ஒரே ஒரு சங்கடம் தனிமைதான். ஆனால் எனக்கு அந்தத் தனிமைதான் சந்தோஷம் தந்தது. வெளியிலே இருந்தாலும் இதே தனிமைதான் எனக்குக் கிடைத்திருக்கும்.

நீ எனக்கு இல்லையென்று முடிவாகிவிட்ட பிறகு கோடீஸ்வரன் குமாரி வந்தாலும், ரவிவர்மா பிக்சர் மாதிரி ஒரு ரதியே வந்தாலும் ஜோடியாக வாழ நினைப்பேனா நான்! என்னுடைய லைப் லட்சியமே பரிமளாதான்! அவள் எனக்குத் தங்கையாகிவிட்டாள். அதற்குப் பிறகு எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் எனக்கு சகோதரியாகத்தான் தெரிகிறது. அதனால் ஜெயிலின் தனிமை எனக்கு ரொம்ப உற்சாகமூட்டியது.

என் மீது பதிவான கேஸ் சம்பந்தமான முழு ஜோடிப்பு வேலைகளும் முடிவாகவில்லையாம். அதனால் கோர்ட்டுக்குப் போகவேண்டிய வேலை இன்னும் வரவில்லை. என்னுடைய வழக்கைப்பற்றி விசாரித்த கைதி நண்பர்களும், வார்டர்களும், நிச்சயமாக எனக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கிடைக்கும் என்று தீர்ப்பு சொல்லிவிட்டார்கள்.

நான் வெட்டிக் கொன்றதற்கு யாரும் நேரில் பார்த்த சாட்சி கிடையாதேயென்று ஒருவனிடம் வாதாடிப் பார்த்தேன், ஜெயிலில்!

சாட்சிகள் என்றால் என்ன அர்த்தம் என்பதை அவன் எனக்குப் புரியும்படியாகச் சொன்னான். அதெல்லாம் எதற்கு வீண் கதை!

தனிமையை அனுபவித்துக் கொண்டிருந்த என் நெஞ்சிலே மரண தண்டனையைப் பற்றிய எண்ணங்கள் கொஞ்சங் கொஞ்சமாக எட்டிப் பார்க்க ஆரம்பித்தன. நான் ரிமாண்டில் இருக்கும் காலத்திலேயே மூன்று நான்கு பேரை விடியற்காலையில் தூக்கு போட்டுத் தண்டனையை நிறைவேற்றினார்கள். அவர்களைத் தூக்கு மேடைக்கு அழைத்துப் போகும்போது அவர்கள் போட்ட சப்தம் என்னைக் கலங்க அடித்தது.

“அய்யோ!…… இன்னங் கொஞ்ச நாழிக்கெல்லாம் உலகம் மறைந்து போய்டுமே! எதையுமே பார்க்க முடியாதே!” என்று ஒருத்தன் கத்தினான்.

“அம்மா — என் தங்கச்சி!…… உங்க அண்ணனை கொல்லப் போறாங்க…… அய்யோ, சாகறத்துக்கு முன்னே ஒரு தடவை என் தங்கையைப் பாக்க முடியாதா?”

இப்படிக் கத்திக்கொண்டே போனான் இன்னொருத்தன். தங்கச்சி என்ற அந்த வார்த்தை என் உள்ளத்தைப் பிளந்துவிட்டது. பரிமளா!…… உன்னை ஒருமுறை பார்க்க வேண்டுமென்ற ஆசையை அந்த வார்த்தைதான் தூண்டிவிட்டது. கோர்ட்டு — வழக்கு — தீர்ப்பு — தூக்கு — இப்படியெல்லாம் எண்ணிக்கொண்டிருந்த என் இருதயத்திலே உன்னை ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்ற தீராத ஆசை முளைவிடத் தொடங்கிவிட்டது. எப்படியும் சாகத்தான் போகிறோம். அதோடு தப்பி ஓடியதற்கும் சேர்த்துத் தண்டனை தரட்டுமே என்று முடிவு செய்தேன். பயம் ஒழிந்தது.

கொடுமையான வயிற்று வலி என்று பாசாங்கு செய்து கீழே விழுந்து புரண்டேன். டாக்டர்களால் சீக்கிரம் கண்டுபிடிக்க முடியாத வியாதி அதுதான்!

நான் பள்ளிக்கூடத்திலே படிக்கும்போது சின்னப்பிள்ளையிலே அப்பா அம்மாவை ஏமாற்றி பள்ளிக்கூடம் போகாமல் இருக்க அந்த முறையைத்தான் கையாளுவேன். ஜூரம் என்றால் உடம்பைத் தொட்டுப் பார்த்துப் புரிந்துகொள்வார்கள். தலைவலிக்குக் கூட நரம்பு புடைத்திருக்கிறதா என்று பார்ப்பார்கள். பொய் வயிற்று வலியை சீக்கிரம் கண்டுபிடிக்கவே முடியாது. என் தந்திரம் ஜெயித்தது.

என்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார்கள். சிகிச்சைகள் நடந்தன. பலமாகத்தான் போலீஸ் காவலும் இருந்தது, படுக்கையைச் சுற்றி! இரண்டு மூன்று நாள் கண் விழிப்பு — அவர்கள் என் படுக்கை அருகே உட்கார்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள். இதுதான் சமயம் என்று புறப்பட்டேன். தப்பிவிட்டேன். உன்னை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென்று தவித்தேன். போலீசார் என்னை விரட்டுகிறார்கள் என்பதும் தெரிந்துவிட்டது. ஷோக்சுந்தரியாக மாறினேன்.

உன்னை ஊரெல்லாம் தேடினேன். உன் காதலன் துரை, இங்கு சிக்கியிருப்பதை மட்டும் தெரிந்துகொண்டேன். உன்னைப் பார்க்கவே முடியாது என்று தீர்மானித்த பிறகு, உன் ஆசைக் காதலனுக்காவது ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று இங்கு வந்தேன்! வந்த இடத்திலே, நான் தேடி அலைந்த தெய்வத்தை தரிசனம் செய்துவிட்டேன்”

— என்று கூறி, அவளது கரங்களை எடுத்துத் தன் கண்களிலே ஒத்திக்கொண்டான் துக்காராம். அந்த நிகழ்ச்சியிலே களங்கம் அணுவும் தலைகாட்டவில்லை. தூய்மை, கொடிவிட்டுப் படர்ந்து கிடந்தது.

“துக்காராம்! யாரோ ஒரு ஆசைக்காரப் பிசாசின் அகண்ட வயிற்றை நிரப்புவதற்காக நாமெல்லாம் நமது வாழ்க்கையை பாலைவனமாக்கித் தீரவேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டோம்” — என்று பரிமளா விம்மியழுதாள். ஆனால் அவளது நெஞ்சிலே புதுப் புது திட்டங்களும், புயல் வேக நினைவுகளும் சுழன்றபடி யிருந்தன. புதையலுக்காக துரையோடு தானும் தலைகொடுக்கலாம் என்ற திருப்தி உதயமாயிற்று அவளுக்கு! எப்படி?

துக்காராமைக் குடுகுடுப்பைக்காரனாக மாற்றிவிட்டால் அவனுக்கு விடுதலை கிடைத்துவிடும். குடுகுடுப்பைக்காரன் மீதும் அம்பலத்தின் அக்கிரமக் கண்கள் விழுந்திருக்கின்றன என்பது அந்த அபாக்கியவதிக்குத் தெரியாது! துக்காராம், தன் பொருட்டு செய்த தியாகத்தை மனதில்வைத்துக்கொண்டு அதற்கு பிரதி உபகாரமாக அவனைக் குடுகுடுப்பை வேடத்திலே வெளியேற்றிவிடத் தீர்மானித்தாள் அவள். குடுகுடுப்பைக்காரன் வேடம் போட்டுக்கொள்ள துக்காராமும் சம்மதித்து விட்டான். பரிமளா, சொல்லாவிட்டாலுங்கூட குடுகுடுப்பைக்காரன் பரிமளாதான் என்று தெரிந்த பிறகு அவனே அந்த வேட்த்தைப் போட்டுக் கொள்ளத்தான நினைத்தான்.

அவனுக்குத் தெரியும்; குடுகுடுப்பையாக மாறினால், இன்னொரு கொலை வழக்கு தன்மீது விழும் என்று! அப்படித் தெரிந்தும் ஒத்துக்கொண்டான். காரணம்? பரிமளா, பகவதியாக இருந்தால் அவள்மீது “மேனகா குத்தப்பட்ட குற்றம்” சுமத்தப்பட்டுவிடும். அதிலிருந்து அவளைக் காப்பாற்ற வேண்டியது தன்னுடைய கடமையென்று முடிவு செய்தான் துக்காராம். ஆகவே, பசவதியைக் காட்டிக் கொடுக்க அம்பலம் போட்டிருக்கும் திட்டத்தைப் பற்றியும் துக்காராம் அவளிடம் அதிகமாக விவரிக்கவில்லை. அவன் ஷோக்சுந்தரி வேடத்தில இருந்தால், பலி கொடுக்கப்பட்டிருப்பான் என்ற பயங்கர சதித் திட்டத்தையும், பரிமளா அவனிடம் வெளியிடவில்லை. வெளியிட்டிருந்தால், துக்காராம், பரிமளாவின் வேடத்தைக் கலைக்கவும், தான் குடுகுடுப்பாண்டி வேடம் அணிந்துகொள்ளவும் சம்மதித்திருக்க மாட்டான். ஷோக்சுந்தரியாகவே இருந்திருப்பான். பரிமளாவின் திட்டப்படி துக்காராம் மலையாள பகவதியாக மாறிவிட்டான். பரிமளா, பரிமளாவாகவே இருந்தாள். அத்தான் துரையோடு சேர்ந்து உயிர்விடப் போகிறோமேயென்ற மன ஆறுதல் அவளுக்குப் புதிய உற்சாகத்தைத் தந்தது.

கல்யாணமாகாத பெண்ணாக இருந்தால் பலியாகித்தீர வேண்டும் என்ற நிலைமை அம்பலத்தின் திட்டத்திலே இருக்கிறது என்பதைத் துக்காராம் உணரவில்லை. உணர்ந்திருந்தால் அவன் பரிமளாவின் பகவதி வேடத்தைக் கலைத்தேயிருக்க மாட்டான்.

அவளுக்கு உபகாரம் செய்வதாக நினைத்துக்கொண்டு, உயிர் போகும் காரியத்துக்கு அவளைத் தயார்படுத்தினான், அவனையறியாமலே! அவளும் அவனை விடுவிப்பதாக எண்ணிக்கொண்டு, கொலை வழக்கிலே இரண்டாவது முறையும் அவன் சிக்குவதற்கு எப்படியோ தன்னையறியாமல் காரணமாகிவிட்டாள்.

இருவரையும் விழுங்கி ஏப்பமிடக் காத்திருப்பது போல் அம்பலம், மேனகாவின் படுக்கையின் பக்கம் உட்கார்ந்திருந்தார். மேனகாவின் உயிர் சிறிது சிறிதாகப் பிரிந்து கொண்டிருந்தது. முழுவதுமே போய், உடல் ஜில்லிட்டுப் போகும் நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார் அம்பலம். எதிர்காலத்தைப்பற்றி இன்பச் கனவு கண்ட நேரத்திலே தனக்குத்தானே ஆயிரம் திட்டங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்த மேனகா, ஒரு வார்த்தையும் பேச முடியாதவளாகிவிட்டாள். பேச்சு அடங்கியது — கடைசி மூச்சும் காற்றோடு கலந்தது. மேனகா போய்விட்டாள. பருவ மலராக, பளிங்குச்சிலையாகக் காட்சி அளித்த அவளை, இனி மண்தான் முத்தமிடும்!

மேனகா கண்ணை முடிவிட்டதைப் பார்த்ததும் அம்பலம் அழுதார். ஆம், அழுது அவள் மீது ஆசையிருக்கிறது என்பதைக் காட்டிக்கொண்டார். அம்பலத்தின் பஞ்சணையிலே, அவர் படைத்த பிணம் கிடந்தது. ராமனிடம் சொல்லி அனுப்பியபடி போலீசாரும் வந்தார்கள். மேனகாவின் கொலை பற்றிய விபரங்களைத் தந்தார் அம்பலம். கொலைகாரன் எங்கேயிருக்கிறான் இப்போது என்று போலீசார் தேடத் தொடங்கினார்கள்.

உடனே அம்பலம், தன்னுடைய ஆட்களைப் பார்த்து, “என் கண்மணியைக் கொன்ற அந்த பாதகனை இழுத்து வாங்கடா!” என்று கூவினார். போலீசாருக்கு நேரே மேனகாவின் பிணத்திற்கான ஒப்பாரியை சுருதி பிசகாது இசைத்துக்கொண்டே யிருந்தார். முரடர்கள் கதவைத் திறப்பதைப் புரிந்துகொண்ட பரிமளா, அறையின் ஒரு மூலையிலே பதுங்கிக் கொண்டாள். துக்காராம் அவளிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டான். அவனுக்குத் தெரியும், தான் மறுபடியும் சிறைச் சாலைக்குப் போகிறோமென்பது!

பரிமளாவோ, அவனைத் தனது திறமையால் விடுவித்து விட்டதாகக் கருதி சந்தோஷத்தோடு விடைகொடுத்து அனுப்பினாள். அப்போது அவள் சிந்திய ஆனந்தக்கண்ணீரை, அவன் என்னமோ, சோகக்கண்ணீராகத்தான் கருதினான்.

வெளியே வந்த குடுகுடுப்பைக்காரனை சப்இன்ஸ்பெக்டர் ஏற இறங்கப் பார்த்தார். அம்பலம், தனக்கிருந்த அவசரத்தில் குடுகுடுப்பைக்கார வேடம் இன்னொரு கை மாறிவிட்டது என்கிற உண்மையைக்கூட புரிந்துகொள்ள வில்லை. துக்காராம் கையில் விலங்கு மாட்டப்பட்டது.

அவன், தன்னுடைய பரிமளாவுக்காக இரண்டாவது தடவையும் தியாகம் செய்கிறோம் என்கிற உறுதியோடும், உற்சாகத்தோடும் போலீசாரின் பின்னே போய்கொண்டிருந்தான்.

பரிமளாவோ, துக்காராம் போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட விபரம் தெரியாமல் ஆனந்தப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தாள். இப்போது அவளது நினைவெல்லாம் தானும் தன் அத்தானும் எப்போது சேர்ந்து சாகடிக்கப்படப் போகிறோம் என்பதைப் பற்றித்தான்.

அம்பலமும், மேனகாவின் பிணத்தை எரித்துச் சாம்பலாக்கிவிட்டு துரையின் கல்யாணத்திற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க முனைந்தார். கல்யாணத்தை சீக்கிரம் முடித்தால்தானே காவு கொடுத்து புதையலை விரைவில் எடுக்க முடியும் என்று துடித்தார் அவர், துரையின்மீது மேனகா விஷயமாக அவருக்கேற்பட்ட ஆத்திரம் அவனை விரைவில் பலிகொடுத்துப் பழிவாங்கி விடவேண்டுமென்ற அவசரத்திற்குக் கொண்டுவந்து விட்டது.

கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்