அத்தியாயம் 46 · 47 / 52

அத்தியாயம் 46

Chapter 46

மூல ஸ்கேன் 396 (chapter-46 portion)-408 (chapter-46 portion)

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

46

குடு குடுப்பைக்காரனை சிறைக்கு அழைத்துப்போய் விட்டார்கள் என்பதைக் கேள்விப்பட்ட ராமன், ஷோக்சுந்தரி எந்த நிலைமையில் இருக்கிறாள் என்று பார்ப்பதற்காகத் தவித்துக் கொண்டிருந்தான். அம்பலம், ஏதோ யோசனையில் ஈடுபட்டவாறு வீடு முழுவதையும் அளந்துகொண்டிருந்தால், அவனால் நினைத்ததை உடனே செய்ய முடியவில்லை.

அம்பலம் ராமனைப் பார்த்து, “டேய் — அந்த அறையிலே இருக்கிற பெண்ணுக்கு ஏதாவது பலகாரம் கொண்டுபோய்க் கொடுடா!” என்று கூறிவிட்டுத் திண்ணைப் பக்கம் போனதுதான் தாமதம்; ராமன் தாவிப்பாய்ந்து பலகாரத் தட்டைத் தூக்கிக்கொண்டான். பலி கொடுக்கப்படும் ஆட்டுக் குட்டிக்கு ஆகாரம் கொடுப்பது போலத்தான் நமது காதலிக்கும் — அம்பலம், பலகாரம் கொடுக்கச் சொல்லுகிறார் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். ஷோக்சுந்தரிக்கு வரப்போகும் ஆபத்தை அந்தக் குடுகுடுப்பைக்காரன் சொல்லியிருப்பானா? அதைக்கேட்டு ஷோக்சுந்தரி என்ன ஆனாளோ? — என்றெல்லாம் பிரலாபித்தான். “அய்யோ! என் காதலி எதற்காக இங்கே வந்து சிக்கவேண்டும்? என்னைப் பார்க்கவேண்டும் என்கிற ஆசையிலே அவள் இங்கே வரலாமா? அப்பத்தானே பார்த்துட்டுப் போனேன்; அதுக்குள்ளே அவளுக்குத் தாங்கவில்லையா? இங்கே வந்து இப்படி மாட்டிக்கொண்டாளே!” — என்றெல்லாம் ஒப்பாரி வைத்தபடி, பலகாரத் தட்டுடன் புறப்பட்டான்.

திண்ணைப் பக்கம் போன அம்பலம் எதிரே வந்து, அவனிடம் அந்த அறையின சாவியைக் கொடுத்து, “ஏய் ராமா! அறையைத் திறந்து அவளுக்கு வேண்டியதைச் செய். ஆள் புதுசு! அடைத்து வைத்திருப்பதாக நினைத்து அதிர்ச்சி அடைந்துவிடப் போகிறாள்! பிறகு காரியம் கெட்டு விடும். அடைத்து வைத்திருப்பது அவளுக்குத் தெரியாது போலவே நடந்துகொள்ள வேண்டும்” என்று கூறிவிட்டு, மீண்டும் வாயிற் பக்கம் போனார். அவரது மண்டையிலே யோசனைகளும், திட்டங்களும் பீறிட்டுக்கொண்டிருந்தன.

ராமன், அறையின் சாவியைப் பார்த்து குதூகலம் அடைந்தான். தன் காதலியின் அருகே சென்று பேசுவதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டதேயென்று மகிழ்ந்தான். சாவி தன்னுடைய கையில் இருப்பதால், எப்படியாவது ஷோக்சுந்தரியை இரவோடு இரவாக வெளியே அனுப்பி விடலாமென்றும் திட்டம் தீட்டிக் கொண்டான். அம்பலம், தன் விஷயத்தில் ஏமாந்துவிட்டார் என்று ஆனந்தப் பெருமூச்சு விட்டான்.

ஒரு கையில் சாவி — ஒரு கையில் பலகாரம் — உள்ளமெல்லாம் காதலியின் நினைவுச்சுமை — இவைகளைத் தூக்கியவாறு ராமன் அறைப் பக்கம் ஓடினான்.

அவசர அவசரமாகக் கதவைத் திறந்தான். “கண்ணே!” என்ற அழைப்போடு உள்ளே பார்த்தான்.

ஷோக்சுந்தரியின் ஆடையையும் நகைகளையும் அணிந்து கொண்டு அங்கே பரிமளா நின்று கொண்டிருந்தாள். ராமன் பரிமளாவை அடையாளம் கண்டுபிடித்துவிட்டான். ஆனாலும் குழப்பத்திலே சிக்கித்தவித்தான். தன் காதலி உடுத்தியிருந்த உடையே தான்! அவள் போட்டிருந்த நகைகளே தான்! ஆனால், முகம் மட்டும் எப்படி மாறிவிட்டது! ஒருவேளை காதல் மோகத்திலே முகத்தை சரியாகப் பார்க்காமல் போய்விட்டோமா? — என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்.

பரிமளா, ராமனைக் கண்டதும் திடுக்கிட்டாள். ஆனாலும் சமாளித்துக்கொண்டு, “என்ன ராமா? என்ன விசேஷம்?” என்று கேட்டாள்.

“நான் என்ன சொப்பனம் காணுகிறேனா?” என்று படி கையிலேயிருந்த பலகாரத் தட்டை மெய்மறந்து கீழே போட்டுவிட்டு மரம்போல நின்றான் ராமன். அவனுக்கு சுயநினைவு வர சில நிமிஷங்கள் பிடித்தன.

“ஷோக்சுந்தரியைத் தேடிக்கொண்டு வந்தாயா?” — இந்தக் கேள்வியைப் பரிமளா கேட்டதும், “ஆமாம்; என் காதலி எங்கே?” என்று அலறினான் ராமன்.

“ஷோக்சுந்தரியைக் காப்பாற்ற வேண்டுமென்று மலையாள பகவதியிடம் மன்றாடினாய் அல்லவா?”

“ஆமாம், அது எப்படித் தெரியும்?” என்று ஆச்சரியத்தில் மூழ்கினான் அவன். ஷோக்சுந்தரி எங்கே போனாள்? பரிமளா, எப்படி இங்கே வந்தாள்? — இந்தக் கேள்விகளுக்கு அவனால் பதில் காண முடியவில்லை. அவனது சிறிய மண்டை, இவ்வளவு பெரிய குழப்பத்தைத் தாங்கிக்கொள்ளும் சக்தி பெற்றதாயில்லை.

“என் காதலி எங்கே? எங்கே?” என்று ஆவல் ததும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தான்.

“அவளை விடுவிடுத்து விட்டேன். உன் காதலி தப்பிவிட்டாள்!” என்று பரிமளா அவனைத் தேற்றினாள்.

“எப்படித் தப்பினாள்?” அதை அறியத் துடித்தான் ராமன்.

பரிமளா, அவனிடம் முழு விபரமும் சொல்லவேண்டியதாயிற்று, அதற்கான பீடிகையை அவள் போட்டாள்.

“ராமா! உன் காதலியை நான் தான் காப்பாற்றினேன். நானில்லாவிட்டால் உன் காதலி உயிர் தப்பியிருக்க முடியாது. அதனால், நீ எனக்கு ஒரு உபகாரம் செய்யவேண்டும். பெரிய உபகாரம் ஒன்றுமில்லை. நான் சொல்லும் ரகசியம் எதையும் நீ வெளியிடக் கூடாது!”

ராமனும் ‘சரி’ யென்று ஆமோதித்து விட்டு, தன் காதலி தப்பியது எப்படி என்பதை அறியத் துடித்து நின்றான்.

பரிமளா, குடுகுடுப்பைக்காரனாக வந்தது தானே என்றும், தன் துரையை விடுவிப்பதற்காக அப்படி வந்ததாகவும், வந்த இடத்தில் ஷோக்சுந்தரியை விடுவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்றும், அதற்காக அவளுக்கு குடுகுடுப்பைக்காரன் வேஷம் போட்டு வெளியே அனுப்பிவிட்டதாகவும், ராமனிடம் கூறினாள்.

ஷோக்சுந்தரி, குடுகுடுப்பாண்டி வேஷத்தில் வெளியேறிய செய்தி கேட்டதும், ராமன் தீயை மிதித்தது போலக் குதித்தான். “அய்யோ! பகவதி வேஷத்தில் போனது என் கண்மணிதானா? ஆகா, மோசம் வந்ததே!” என்று புலம்பினான்.

பரிமளாவுக்கு ஒன்றும் புரியவில்லை. ராமனைத் தேற்றி விபரம் கேட்டாள். மேனகாவைக் கொன்ற குற்றத்தைக்குடுகுடுப்பையின் மீது சுமத்தி, தான் தப்பித்துக்கொள்ள அம்பலம் முயற்சி செய்து அதிலே வெற்றி பெற்று விட்டார். அதற்கு ஷோக்சுந்தரி பலியாகி விட்டாள் — என்ற விபரத்தை ராமன் வெளியிட்டு விம்மி விம்மி அழுதான்.

“குடுகுடுப்பைக்காரன் மீது குற்றம் சாட்டப்போவது ஷோக்சுந்தரிக்கு முன்பே தெரியுமா!” என்று பரிமளா, ராமனிடம் வினவினாள்.

“தெரியும்! தெரியும்! நான் தான் அவளிடம் சொன்னேன்!” என்று ராமன் கதறினான்.

பரிமளாவுக்கு விஷயம் புரிந்து விட்டது. துக்காராம், தன்னை விடுவிப்பதற்காகவே மீண்டும் தியாகம் செய்ய முனவந்திருக்கிறான் என்பது விளங்கி விட்டது. ராமனிடம், ஷோக்சுந்தரிதான் துக்காராம் என்பதை விளக்க அவள் விரும்பவில்லை. சிறையிலேயிருந்து தப்பிய துக்காராம், ஷோக்சுந்தரியாக மாறி, குடுகுடுப்பைக்காரனாக மீண்டும் சிறை சென்றுவிட்ட சம்பவம் பரிமளாவின் உள்ளத்தைக் கலக்கியது.

ராமனோ, தன் காதலி சிறைக்குள் அடைபட்டு விட்டாளே என்று தவித்தான். பரிமளா அவனைச் சமாதானம் செய்தாள்.

“ராமா! உனக்காகத்தான் உன் காதலியின் உயிரைக் காப்பாற்ற நினைத்தேன். துரையோடு சேர்ந்து நான் சாகிறேன்; அவள் சாகக் கூடாது என்று தான் அவளை வெளியேற்ற முயற்சித்தேன். நீ அழுது புலம்புகிறாயே என்று தான், அவளுக்கு பகவதி வேஷத்தைப் போட்டேன். பகவதியின் மீது இப்படியொரு குற்றச்சாட்டு விழப் போகிறது என்று எனக்குத் தெரியவே தெரியாது! தெரிந்திருந்தால் செய்திருக்க மாட்டேன். ராமா! நான் வேண்டுமென்று உன் காதலியை காட்டிக் கொடுத்ததாக நினைக்கிறாயா? அப்படி நான் நினைத்திருந்தால் அவளை சாவிலிருந்து மீட்டிருப்பேனா? அவளுக்குப் பதிலாக நான் சாக நினைப்பேனா? யோசித்துப் பார், ராமா; எனக்குத் தெரியாமலே இப்படி ஆகிவிட்டது!” என்று பரிமளா அழுதாள்.

“உன் காதலியைக் காட்டிக் கொடுப்பேனா?” என்று அவள் கேட்டாளே தவிர, “அய்யோ, என் சகோதரன் துக்காராமைக் காட்டிக் கொடுத்துவிட்டேனே!” என்று உள்ளுக்குள்ளே குமுறினாள். துக்காராமின் தியாக உள்ளம் அவளைக் கண்ணீர்க் கடலில் ஆழ்த்தியது. அவன் சென்ற திக்குநோக்கி மானசீகமாகத்தெண்டனிட்டு வணங்கினாள்; வாழ்த்தினாள். அவனே மனிதன்! அவனே மனிதன்! — என்று அவள் இருதயத்தின் உதடுகள் உச்சரித்துக்கொண்டே யிருந்தன.

பரிமளாவின் வார்த்தையை ராமன் நம்பினான். அவளுக்காக அனுதாபம் காட்டினான். அம்பலத்தின் மீது அவனுக்கு ஏற்பட்டிருந்த வெறுப்பு, பரிமளாவின் வார்த்தைகளால் அதிகமாகவே வளர்ந்தது. அதோடு தன் காதலியை சிறையில் போடவும் அம்பலந்தான் காரணம் என்கிறபோது ராமனின் ஆத்திரம் அளவு கடந்தது. “எப்படியும் என் காதலியை நான் விடுவித்தே தீருவேன். என் காதலி குற்றவாளி அல்ல; அம்பலந்தான் கொலைகாரன் — என்று துணியைப் போட்டுத் தாண்டுவேன். சத்தியம் செய்வேன்! சூடனை வைத்து அணைப்பேன்!” — இப்படியெல்லாம் கூறி ராமன் தகதகவென ஆடினான், தாங்காத ஆத்திரத்தோடு!

பரிமளா, அவனது ஆத்திரத்தை சிறிது தணித்து, அம்பலத்திடம் தன்னைப்பற்றி ஒரு பொய் சொல்லவேண்டுமென்று கேட்டுக்கொண்டாள்.

“பொய் என்ன பிரமாதம்! இன்றிரவு இங்கிருந்தே விடுவித்து விடுகிறேன் — பயப்பட வேண்டாம்!” என்று கையிலேயுள்ள அறைச் சாவியைக் காட்டினான்.

“நான் விடுதலை பெற விரும்பவில்லை. என் துரையோடு சேர்ந்து சாவதையே விரும்புகிறேன். ராமா! என்னை விடுவிக்க விரும்பாதே! நான் அவரோடு போகிறேன்! உன் காதலியை மட்டும் எப்படியாவது விடுவித்து விடு! இன்னொரு விஷயம், ராமா! நீ அம்பலத்திடம் ஒரு பொய் சொல்ல வேண்டும் என்றேனே, அது என்ன தெரியுமா? ஷோக்சுந்தரி என்று நாம் நினைத்திருப்பது பரிமளாதான் என்று அவரிடம் கூறி, அவரை நம்பவைக்கவேண்டும். புரிகிறதா? ஷோக்சுந்தரி வேடத்தில் பரிமளாதான் வந்திருக்கிறாள் என்று அம்பலத்திடம் அழுத்தந் திருத்தமாகச் சொல்லிவிடு! சொல்லுகிறாயா ராமார்?”

பரிமளா, ராமனிடம் கெஞ்சினாள். ராமனும், “அப்படியே சொல்லுகிறேன்” என்று தலையசைத்தான்.

“நீ அவரிடம் அப்படிச் சொன்னால்தான் நல்லது. இல்லாவிட்டால் உன் காதலிக்கு ஆபத்து வரும். ஷோக் சுந்தரி எங்கே என்று தேட ஆரம்பித்தால், நான் உண்மையைச் சொல்லித் தீரவேண்டி வரும் — இல்லையா?” என்று மீண்டும் பரிமளா தந்திரமாகப் பேசினாள்.

ராமனும், பரிமளா சொன்னபடியே சொல்வதாகக் கூறிவிட்டு, அதை விட்டு நகர்ந்தான். அம்பலத்தோடு பழகிக் கெட்டுப் போயிருந்த அவனது இருதயத்தைப் பரிமளாவின் கண்ணீரும், காதலியின் நினைவும் மாற்றி யமைத்தன. காதலியை எப்படி மீட்பது? அம்பலத்தை எப்படிக் காட்டிக் கொடுப்பது? — இந்த யோசனைகளோடு ராமன் அம்பலத்திடம் ஓடிவந்தான்.

ராமனின் ஓட்டத்தைக் கண்டு, அம்பலம் — “என்னடா விஷயம்?” என்று பரபரப்போடு கேட்டார்.

“அறையிலே இருப்பது — பரிமனா! பரிமளா!” என்று கத்தினான் அவன்.

“என்ன? பரிமளாவா?” — அம்பலம் திடுக்கிட்டார்.

“ஆமாம்! ஆமாம்!”

“உளராதே முட்டாள்! ஷோக் சுந்தரியல்லவா இருக்கிறாள்! பரிமளா, இங்கே எங்கு வந்தாள்?”

“அதுதான் தப்பு! நீங்கள் முகத்தை சரியாகப் பார்க்க வில்லை. பரிமளாவேதான்! துரையை விடுவிப்பதற்காக தந்திரமாக ஷோக்சுந்தரி போல வந்திருக்கிறாள்.”

ராமன் வலியுறுத்திச் சொன்னதும், அம்பலத்திற்கும் குழப்பம் ஏற்பட்டது. ஒருவேளை அவசரத்தில் நாம் தான் ஏமாந்து விட்டோமோ என்று சந்தேகப்பட்டார். ராமனையும் அழைத்துக்கொண்டு அறைப் பக்கம் ஓடி வந்தார்.

ஆம்; பரிமளாதான் இருக்கிறாள்! முகத்தை நன்றாக உற்றுப் பார்த்தார். அவள், முகத்தை மறைத்துக்கொள்ள முயன்றாள். அம்பலத்திற்கு சந்தேகம் வலுத்தது.

“முகத்தை மறைக்காதே! என்னைப் பார்” என்று கத்தினார், காட்டெருமை போல! திடுக்கிட்டு நடுங்கியவளைப் போல, பரிமளா முகத்தை மறைக்காமல் நின்றாள்.

பரிமளாவேதான்! அம்பலத்திற்கு சந்தேகம் நீங்கியது. ராமனைத் தட்டிக் கொடுத்தார். தான் சொன்னபடியே ராமன் செய்துவிட்டான் என்று பரிமளாவும் திருப்தி அடைந்தாள். அம்பலம், சாகச வலை விரிக்க ஆரம்பித்தார்.

“பரிமளா! நீ ஏன் இப்படி மாறுவேடம் போட்டுக் கொண்டு ஷோக்சுந்தரி — கீக்சுந்தரி என்றெல்லாம் பொய் சொல்ல வேண்டும்! உன் விஷயத்திலும், துரை விஷயத்திலும் என் மனம் மாறிவிட்டது என்பது உனக்குத் தெரியாதா? உங்களுக்கு கொடுத்த கஷ்டங்களுக்குப் பிராயச்சித்தமாகத் தானே, உங்கள் இருவருக்கும் கல்யாணம் செய்து வைக்க அலைந்து கொண்டிருக்கிறேன். பரவாயில்லை; காரியம் கைகூடப் போகிறது; நீயும் உன் காதலனும் இனிமேல் சந்தோஷமாக வாழவேண்டிய காலம்வந்து விட்டது. கடவுள், எப்படியோ உன்னை இங்கு அழைத்து வந்துவிட்டார். உன்னை நினைத்து ஏங்குகிற துரைக்கும் இனிமேல் கவலை கிடையாது; உங்கள் இருவரையும் விரைவில் தம்பதிகளாக்கப் போகிறேன். கவலைப்படாமல் இரு!” என்று கூறிவிட்டு அம்பலம், அறைக் கதவைப் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.

அன்று மாலையில், ஊர்ப் பொது மண்டபத்தில் அம்பலத்தின் தலைமையிலே ஊர் மக்கள் கூட்டப்பட்டார்கள். அம்பலம், மாயாண்டி இருவரும் காதுக்குள் ஏதோ பேசிக் கொண்டார்கள். கூட்டத்தில் தாண்டவனும் இருந்தார். திடீரென்று எல்லோரையும் வரவழைத்த காரணம் தெரியாமல், ஊர் மக்கள் விழித்துக் கொண்டிருந்தார்கள்.

அம்பலம் ஊர் மக்களைக் கூட்டிய காரணத்தை விளக்க ஆரம்பித்தார். “தாண்டவனுடைய மகள் பரிமளாவும், துரை என்ற வாலிபனும் காதலர்கள். அந்தக் காதலைத் தாண்டவன் அனுமதிக்காத காரணத்தால், பரிமளா ஊரைவிட்டே ஓடிவிட்டாள். அவள் ஊரிலே இருந்தால், தாண்டவன் அவளை வெட்டிக் கொலை செய்திருப்பார். ஊரைவிட்டு ஓடிய பரிமளாவையும், துரையையும் நான் நேற்றைய தினம் பிடித்து நம் வீட்டில் வைத்திருக்கிறேன். அவர்கள் இருவரும் கலியாணம் செய்துகொள்ள விரும்புகிறார்கள். நானும் அவர்கள் திருமணம் செய்துகொள்வதை விரும்புகிறேன். தாண்டவனுடைய அபிப்பிராயம் தேவை” — என்று அம்பலம் கூறியதும், தாண்டவன் கோபாவேசமாக எழுந்து, “முடியாது! முடியாது!! அவர்கள் இருவரும் எங்கே? என்னிடம் காட்டுங்கள்! அந்த நாய்களை, துண்டு துண்டாக நறுக்கி எறிகிறேன்” என்று கர்ச்சித்தார்.

அம்பலம் தாண்டவனிடம் நெருங்கி வந்து, “தாண்டவா! என்ன இது, இன்னுமா உமது ஆத்திரம் அடங்க வில்லை? பரிமளா நீர் பெற்ற ஒரே மகள் என்பதை மறந்து விட்டீரா? அவளது விருப்பம்போல் காதலித்தவனையே—” — அவர் இதைச் சொல்லி முடிக்கவில்லை; அதற்குள் தாண்டவன் இடைமறித்து, “முடியவே முடியாது! இது என்ன நியாயம்? நீங்களே சொல்லுங்கள்; அவள் விரும்புகிறாள் என்பதற்காக எங்கிருந்தோ ஓடிவந்த ஒரு நாடோடிப் பயலுக்கா அவளைக் கொடுப்பேன்? தாண்டவன் செத்தாலும் சாவான்; அந்தத் தடியனுக்கு மாமனாராக மாட்டவே மாட்டான்!” — தாண்டிக் குதித்ததில் தாண்டவனின் குடுமிகூட அவிழ்ந்துவிட்டது.

அம்பலமும் விட்டுக் கொடுப்பவராக இல்லை. கைக்கு எட்டிய தூரத்தில் கிட்டிவிட்ட புதையலை கேவலம், தாண்டவனின் கோபத்தால் மட்டுமே இழந்துவிட சம்மதிக்குமா அவரது காத்துக் கிடந்த நெஞ்சு? “என்னய்யா இது! இன்னும் உலகம் தெரியாத பத்தாம் பசலியாய் இருக்கிறீரே! இது என்ன, உனக்கும் அஞ்சலைக்கும் கல்யாணம் நடந்த காலம் என்றா நினைத்துக் கொண்டீர்? யோசித்துப் பாருமய்யா; பரிமளாவைத் துரைக்குக் கொடுக்கத்தான் வேண்டும். இல்லாவிட்டால், அவளை மரக் கிளையிலோ — ஆற்று வெள்ளத்திலோ — பிணமாகத்தான் காண்பீர், தெரியுமா? ஏதோ சின்னஞ் சிறிசு அதோட ஆசையைக் கெடுக்காதீர். ஆமாம்; சொல்லிவிடடேன்” என்றார் அம்பலம், எங்கேயோ தெருக் கூத்தில் கேட்டு ரசித்த வசனத்தை மறக்காமல்.

தாண்டவன் பேசாமல் நின்றார்.

“கோபத்தால் காதலை எதுவுமே செய்ய முடியாதய்யா! கதை தெரியுமா உமக்கு? லண்டன் சீமையிலே லைலாங்கிற ஒருத்தன், கயஸுன்னு ஒருத்தியை காதலிச்சானாம். உன்னைப் போல ஒரு முன்கோபக்கார அப்பன் தடுத்தானாம். கடைசியில என்ன நடந்தது தெரியுமா? ரெண்டு பேரும் கடல்ல விழுந்து செத்துட்டாங்களாம்...... அந்த மாதிரி நிலைமை பரிமளா விஷயத்திலும் ஏற்பட அனுமதிக்க மாட்டேன்; ஆமாம்!” — இப்படி ஏதோ கதை அளந்தார் அம்பலம்.

காட்டு ராஜா காதல் சுவை பேசினார். மாயாண்டியும் அதை ஆமோதித்தார். வாயைப் பிளந்துகொண்டு உட்கார்ந்திருந்த கிராமத்து மக்களும் ‘ச்சூ’ கொட்டினார்கள். அம்பலத்தின பேச்சை மறுத்தறியாதவர்கள் அவர்கள். ஆகவே, “கல்யாணம் செய்வதுதான் சரி” என்றார்கள். ஆனால், எதிர்பார்த்தபடி தாண்டவன் சிறிதும் இணங்க வில்லை. துரையையும் பரிமளாவையும் துண்டாடிவிட்டுத்தான் மறு வேலை என்று மார் தட்டினார்.

“காதலைத் தடுக்க நீ யார்? நான் அவர்களுக்குத் திரு பணம் செய்தே தீருவேன்!” என்று முழங்கினார், அம்பலம்.

தாண்டவன், அம்பலத்தை எதிர்த்துப் பேச முடியாமல் கூட்டத்தைவிட்டு வெளியேறினார்.

அம்பலம், ஊர் மக்களிடம், துரை, பரிமளா இருவரின் தூய காதலைப் பற்றி விளக்கி, அவர்கள் திருமணத்திற்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். அந்த ஆட்டு மந்தையும் தலையசைத்தது. அதோடு, தாண்டவனால், துரைக்கும் பரிமளாவுக்கும் ஏதாவது ஆபத்து நேருமென்றும், அவர்களை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் ஊர் மக்களை எச்சரித்தார்.

கூட்டம் கலைந்தது. அம்பலம், மாயாண்டியிடம் — திருமணத்தை உடனே நடத்தி விடலாமென்றும், இரவே அவர்களைக் கொலை செய்து காவு கொடுத்து, அந்தக் கொலைக் குற்றத்தைத் தாண்டவன் மீது போட்டுவிடலாமென்றும், அதற்காகத்தான் ஊர் மக்களைக் கூட்டி தாண்டவனுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் கூறினார்.

மாயாண்டிக் கிழவரும், அம்பலத்தின் யோசனையைப் பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்தார்.

கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்