அத்தியாயம் 47 · 48 / 52

அத்தியாயம் 47

Chapter 47

மூல ஸ்கேன் 408 (chapter-47 portion)-414 (chapter-47 portion)

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

47

“ஊரிலே ஒரு பெரிய புள்ளி — கோபக்கார மனிதர் — கொலை செய்யவும் தயங்காத சூரன் — இப்படியெல்லாந்தான் அம்பலத்தைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அம்பலம் ஒரு பெரிய ராஜ தந்திரி என்பது இப்போதுதான் புரிகிறது எனக்கு!” என்று மாயாண்டி புன்சிரிப்போடு கூறினார். அந்தப் பாராட்டு அம்பலத்தின் தலைக்கனத்தை இன்னும் சிறிது அதிகமாக்கியது.

“புதையல் ரகசியத்தை அந்த துரைப் பயலிடம் முழுவதும் சொல்லியிருந்தால், விழலுக்கு நீர் இறைத்தது போல் போயிருக்கும்; குப்பை மேட்டில் வைரத்தை வீசி ஏறிந்ததுபோல் ஆகியிருக்கும். நல்லவேளை, எந்த இடத்திற்கு அந்த ரகசியம் வரவேண்டுமோ; அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது. நாம் இருவரும், கடவுள் கிருபையால் ஒன்று சேராமல் போயிருந்தால், புதையலை இவ்வளவு புத்திசாலித்தனத்தோடு எடுப்பதற்கு எப்படி முடியும்?”

மாயாண்டி அம்பலத்தை அளவுக்கு மீறி பெருமைப்படுத்திக்கொண்டே யிருந்தார். அம்பலம் அந்த முகஸ்துதியிலே மயங்கியே விட்டார் என்றாலும், மாயாண்டிக்குத் தரவேண்டிய பங்கையும் தராமல் ஏமாற்றுவதற்கு என்ன வழி இருக்கிறது என்று யோசிக்கத் துவங்கினார். அவரிடமிருக்கிற ஒரே ஒரு வழி — ஆளையே அழித்து விடுவது தான்! சரி; காரியம் முடியட்டும்; பிறகு இந்தக் கருவேப்பிலையைக் கசக்கி எறிவோம் — என்று முடிவு செய்து கொண்டு, பரிமளா — துரை இருவரின் திருமணத்திற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க ஆரம்பித்தார்.

பெரிய பக்தல் போடுவதற்கான ஆட்கள் வந்து கூடிவிட்டார்கள். எல்லோருக்கும் ஆடம்பரமான சாப்பாடு போட வேண்டுமென்ற திட்டப்படி அறுசுவை உண்டி தயாரிக்கும் சமையற்காரர்கள் வரவழைக்கப்பட்டுவிட்டார்கள். ஊரெல்லாம் வெள்ளியம்பலம் வீட்டுக் கல்யாணத்தைப் பற்றியே பேச்சாக இருந்தது. தாண்டவன் கோபாவேசமாக இருந்தாலும், கூண்டுக்குள் புலி போலத்தான் கிடக்க நேரிட்டது. வெளிப்படையாக வெள்ளியம்பலத்தை எதிர்த்து எதுவும் செய்யும் தைரியம் இல்லை. உயிர்மீது ஆசையுள்ள யாரும் அம்பலத்தை எதிர்க்கக் கூடாது என்பதுதானே ஊராருக்குத் தெரிந்த பாடம். அதனால், அம்பலம் செய்யும் தவறுகளைக்கூடப் புகழ்ந்து பேசும் தப்பட்டைகள் அதிகமாகிக்கொண்டே யிருந்தனர். இந்த நிலையில் தாண்டவன் என்ன செய்ய இயலும்? அதுவும், அம்பலம் செய்வதோ ஒரு நல்ல காரியம். காதல் திருமணம் நடத்தி வைக்கிறார். இதைப்போய் ஒரு தகப்பன் முட்டாள் தனமாக எதிர்க்கிறானே — என்றுதான் மக்கள் கேலி பேசினார்கள்.

பரிமளாவின் தாயாருக்கு மட்டும், எப்படியாவது மகளும், மருமகனும் மணவறையில் இருப்பதைப் பார்த்து ஆனந்தப்பட வேண்டுமென்ற ஆவல் அலை மோதியது.

என்ன இருந்தாலும் தாயல்லவா? ஒரே மகள்! உயிர் போலப் பாதுகாத்தாள் அவளை! காணாமலே போய்விட்டாள் என்று கண்ணீருங் கம்பலையுமாக இருந்த சமயம்; இருக்கிறாள் என்ற சேதியே இன்பத் தேனாக வந்து பாய்ந்தது அவள் இருதயத்திலே! அப்படிப்பட்ட ஆசை மகளின் வாழ்க்கையிலே ஒரு திருநாள் — அந்தத் திருநாளை ஆசை தீரக் காணவேண்டுமென்ற அவா, அன்னைக்கு இருக்காதா என்ன? அதுபற்றித் தாண்டவனிடம் வாதாடிப் பார்த்து தோல்வி கண்டாள் அவள். எப்படியும், திருமண சமயத்திலாவது ஓடிப் போய் பார்த்து விட்டு வந்து விடவேண்டுமென்று திட்டம் தீட்டிக் கொண்டிருந்தாள் அவள்.

திருமண தினமும் வந்து விட்டது. துரைக்குக் கல்யாணம் என்று கேள்விப்பட்டு அவனது நண்பர்களும் வந்து சேர்ந்தனர். ஆனந்தனின் தலைமையிலே! அவர்களையெல்லாம் அம்பலம் உபசரித்து, தங்க வைத்தார்.

மாயாண்டிக் கிழவரோ — ஆனந்தனோடு பேசவும் இல்லை; பார்க்கவும் விரும்பவில்லை.

ஆனந்தன், கிழவரைப் பார்த்து, “என்ன தாத்தா; சௌக்கியமா?” என்று கேட்டான்.

அதைக்கேட்ட மாயாண்டி, “யாரப்பா? உன்னை எனக்குத் தெரியலியே!” என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.

உடனே, ஆனந்தன், அம்பலத்திடம் திரும்பி, “பார்த்தீங்களா! கிழவருக்கு என்னைத் தெரியிலேங்கிறாரு! பெரிய இடத்துக்கு வந்தாலே கண்ணு தெரியாது போலிருக்கு. இருக்கட்டும் இருக்கட்டும்; இந்தக் கிழவனை பிறகு — விசாரித்துக் கொள்கிறேன்” என்று உறுமினான்.

மாயாண்டி, அம்பலத்தைத் தனியே அழைத்துப் போய் “இந்தப் பசங்கள் எல்லாம் துரையோட தோழர்கள்! இவர்களை ஜாக்கிரதையாக கவனித்துக் கொள்ள வேண்டும். இவர்களால் ஏதாவது ஆபத்து வந்தாலும் வரலாம்!” என்று எச்சரிக்கை செய்தார். அம்பலமும், ஆனந்தன் கோஷ்டியாரைக் கண்காணித்துக்கொள்ள ஒரு முரடனை நியமித்து விட்டுத் தன் காரியங்களைக் கவனிக்கத் தொடங்கினார்.

வெளியூர்களிலேயிருந்தும் வெள்ளியம்பலம் வீட்டுக் கல்யாணம் விசாரிக்க மக்கள் திரளாகக் கூடினார்கள். மருங்கப்பள்ளத்திலே தாண்டவன் வீட்டைத் தவிர, மற்ற யாருடைய வீட்டிலும் சமையலே கிடையாது. எல்லோருக்குந்தான் கல்யாண வீட்டிலே விருந்தாயிற்றே! காலையிலே திருமணம் மாலையிலே ஊர்வலம் இரவு சோபன முகூர்த்தம் அதோடு, திருமணத்தை முன்னிட்டு, தெருக்கூத்து! ஊர் ஜனங்கள் எல்லாம் தெருக் கூத்திலேயிருந்து ரசித்துக்கொண்டிருக்கும் போது இங்கே தம்பதிகள் கொலை! ரத்தத்தைக் கிணற்றிலே தெளித்தல்! புதையல் வெடித்துக் கிளம்புதல்! — இப்படித் திருமண நிகழ்ச்சிகளைத் திட்ட வட்டமாக அமைத்துக் கொண்டார் அம்பலம்.

அதன்படி அதிகாலையிலே சாஸ்த்ரீய முறைப்படி திருமணச் சடங்குகள் ஆரம்பமாயின. புரோகிதரின் மந்திரங்கள் ஒலித்தன. மேள தாளங்கள், பாண்டு வாத்தியங்கள் முழங்கின. பரிமளா, மணக் கோலத்தோடு அழைத்து வரப்பட்டாள். இன்றிரவு பிணக் கோலமாகப் போகிறோம் என்ற நினைவோடு அவளும் வந்து மனையில் அமர்ந்தாள். தங்கச் சங்கிலிகள் கழுத்திலே மின்னிக்கொண்டிருந்தன. கல் இழைத்த ஒட்டியாணம் பூட்டப்பட்டிருந்தது. நாகர் — திருஉருவப்பூ முதலிய தலையலங்கார ஆபரணங்கள் அணிவிக்கப் பட்டிருந்தன. அழகுக்கு அழகு செய்தது போன்ற நிலையில் அவள் உட்கார்ந்திருந்தாள். அவளது கண் எதிரே — தானும், தனது அத்தான் துரையும் துண்டாடப்படுவது போன்ற காட்சி தான் தெரிந்துகொண்டிருந்தது.

சிறிது நேரத்திற்கெல்லாம் துரையும் ராமனால் அழைத்து வரப்பட்டான். விலை உயர்ந்த பட்டாடைகள் உடுத்தி மாப்பிள்ளைக் கோலத்திலே, அவன் பரிமளாவின் பக்கத்திலே அமர்ந்தான். மணமக்கள், மணவறையில் வந்து உட்காருவதை தூரத்தில் இருந்து பார்த்த மாயாண்டிக் கிழவர், அவர்கள் கண்ணில் படாமலே ஒதுங்கிக் கொண்டார்.

துரையும், பரிமளாவும் ஒருவரையொருவர் திகில் நிறைந்த கண்களோடு பார்த்துக் கொண்டனர். வரப்போகும் ஆபத்து, அத்தானுக்குத் தெரியுமோ என்னமோ என்று கலங்கிக் கொண்டிருந்தாள் அவள். ஏதோ ஒரு மர்மச் சுழலில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறோம்; பயங்கரமான விளைவை அனுபவித்துத்தான் தீரவேண்டும் போலும் — என்ற திடமான நம்பிக்கையிலே யிருந்தான் துரை. திருமணப்பந்தலிலேகூட இருவரும் தப்பிவிடலாம்; ஊரார் அறிய! — ஆனால் அவர்களைச்சுற்றியார் இருக்கிறார்கள்? முரட்டு மீசையும், மிரட்டும்கண்களும் கொண்டோர் — பளபளப்பான கத்திகளோடு அல்லவா நின்று கொண்டிருக்கிறார்கள்! ஏன் இப்படி ஒரு படை நிற்கிறது என்று யார் கேட்பது? அப்படி யாராவது கேட்டாலும், தாண்டவனால் தம்பதிகளுக்கு ஏதாவது ஆபத்து நேரக் கூடும்; அதைத் தடுப்பதற்காக — என்று பதில் சொல்லிவிட்டுப் போகிறார் அம்பலம்! சுற்றிலும் வெறி நாய்கள் போல முரடர்கள் — எதிரிலே தவளைகள் போல மந்திரமொலிக்கும் புரோகிதக் கூட்டம் — வேடிக்கை பார்க்க ஊரார் — காதல் திருமணத்திலே அம்பலத்திற்குள்ள அக்கரை பற்றிப் பேசிடும் பலர் — இவர்களுக்கிடையே — பரிமளாவும் துரையும்!

“கெட்டி மேளம்! கெட்டி மேளம்!” என்று அய்யர்கள் அலற — மஞ்சள் தோய்ந்த அரிசியை ஊரார் மணமக்கள் தலையில் கொட்ட — பரிமளாவின் கழுத்திலே துரை தாலியைக் கட்டினான். தாலி — தானம் — தர்ப்பாசூரநின் தவளைச் சப்தம் — எதுவுமே பிடிக்காத துரை, எதுவுமே செய்ய முடியாத நிலையில் ஒரு யந்திரப் பொம்மைக்கு விசை முடுக்கி விட்டதைப் போல, அம்பலத்தின் இஷ்டப்படி யெல்லாம் நடந்தான். இரவு சாகப்போகிற நமக்கு எந்தக் கல்யாணமாக இருந்தால் என்ன — என்று பரிமளாவின் இதயம் அங்கலாய்த்துக் கொண்டிருந்தது.

திருமண வைபவத்தை, பந்தல் கீற்றின் இடுக்கின் வழியாக இரு கண்கள் பார்த்துக்கொண்டிருந்தன. பரிமளாவின் தாய்தான் அது! அவளது கண்களிலே புதிய ஒளியே பிறந்தது. “பொருத்தமான ஜோடிதான்” என்று அவளையறியாமலே சொல்லிக்கொண்டாள். அந்தத் தாய், உள்ளத்திலேயிருந்து பொங்கி எழுந்த நல் வாழ்த்துக்களை அப்படியே கொட்டி விட்டு, வீடு நோக்கி ஒளிந்து ஒளிந்து ஓடினாள்.

விருந்து முதலிய வைபவங்கள் தொடர்ந்தன. முன் இரவிலே — மண மக்களின் ஊர்வலம். ஒரு பழைய காரிலே மணமக்கள் அமர்த்தப்பட்டு, அதை முரடர்கள் தள்ளிக் கொண்டு ஊர்வலம் நடத்தினார்கள். அப்போதுகூட பரிமளாவும் துரையும் ஒருவரையொருவர் கவலையோடு பார்த்துக்கொள்ள முடிந்ததே தவிர, பேசுவதற்கு வாய்ப்பில்லாமலே போய்விட்டது. தான் பிறந்து — வளர்ந்த ஊரைக் கடைசி முறையாகப் பார்க்கிறோம் என்ற எண்ணத்தோடு, அவள் ஊரைச் சுற்றி பார்வையை செலுத்தினாள்.

இளைஞன் துரையை அனாதைக்கோலத்திலே — அவள் முதன் முதலாக சந்தித்துப் பேசிய இடம் — அதைப் பார்த்தாள், காரில் இருந்தபடியே! கண்ணீர்ப் பெருக்கெடுத்தது; அவள் குதித்து விளையாடிய தாமரைக் குளம் — காதலனைத் தழுவிக் கிடந்த கோயிலின் பக்கம் — எல்லாமே அவள் இருதயத்தின் கனத்தை அதிகப்படுத்தின. துரை, அடிக்கடி பரிமளாவைப் பார்ப்பதோடு — தங்களைச் சுற்றி வரும் முரடர்களையும் பார்த்துக் கொண்டான். தப்பியோடுவதற்கு ஏதாவது மார்க்கமிருக்கிறதா என்பதே அவன் யோசனை!

துரையின் நண்பர்கள் ஆனந்தன் முதலியோர் ஊர்வலத்திலே கலந்து கொண்டிருந்தார்கள். அவர்களைக் கண்காணித்தபடி ஒரு முரடனும் வந்துகொண்டிருந்தான். தெருக் கூத்திற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க ராமன் பறந்து விட்டான்.

ஊர்வலம் முடிவுற்றது. இரவு — மீன் விருந்து! அதன் பிறகு, தெருக் கூத்து! ஊரே அங்கு திரண்டு விட்டது.

துரையும், பரிமளாவும் சோபன அறைக்குத் தனித்தனியே அனுப்பப் பட்டனர். துரையைக் கண்ட பரிமளா, அவன் மீது பாய்ந்து தழுவிக் கொண்டு, “அத்தான்! அத்தான்!” என்று தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். துரையின் கண்களிலும் நீர் கலங்கியது.

கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்