அத்தியாயம் 48 · 49 / 52
அத்தியாயம் 48
Chapter 48
மூல ஸ்கேன் 414 (chapter-48 portion)-422
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
48
ஏராளமான மக்கள் கூட்டத்திற் கிடையிலே தெருக் கூத்து ஆரம்பமாகியது. ஊர்ப் பெரிய மனிதர் என்ற முறையில் வெள்ளியம்பலம் தனியாக ஒரு சாய்வு நாற்காலியில் படுத்துக்கொண்டே தெருக்கூத்தை ரசித்துக்கொண்டிருந்தார். மகாபாரதம் — போர்க்கள நிகழ்ச்சிகளைப் பின்னணியாக வைத்து அபிமன்யு வதைப் படலம் என்ற கதையை நடத்திக் காண்பித்தார்கள். பாரதப் போர் ஆரம்பிப்பதற்கு முன்பு களப்பலி என்று ஒரு பலிகொடுக்க வேண்டும்; அதற்கு யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று யோசனை செய்து, கடைசியில் பீமனுடைய மகன் அரவான் என்ற பெரும் வீரனைக் களப்பலி கொடுக்கிற கட்டம் மக்கள் ஒரே ஆர்வத்தோடு ரசித்துக் கொண்டிருந்தனர். அம்பலத்திற்கு அங்கே புத்தி செல்லுமா; என்ன! அவருடைய நினைவு எப்போது மணி பனிரெண்டாகும் — தம்பதிகளின் தலையை நறுக்கலாம் — ரத்தத்தைக் கிணற்றிலே எப்படித்தெளிக்கலாம் — என்பவைகளைப் பற்றியே சுழன்று கொண்டிருந்தது.
பக்கத்திலே பயபக்தி மரியாதையோடு உட்கார்ந்திருந்த ராமனைக் கூப்பிட்டு, காதிலே ரகசியம் ஏதோ பேசினார். அதற்கு அவன் பதில் சொல்லும்போது கொஞ்சம் பலமாகவே, “அதெல்லாம் வீட்டைச் சுற்றி காவல் இருக்குங்க — எங்கேயும் ஓட முடியாது!” என்று கத்தினான். அம்பலம், அவன் காதைப் பிடித்துத் திருகி, “சத்தம் போடாதே” என்று எச்சரித்து விட்டு, மீண்டும் ஏதோ அவன் காதுக்குள்ளே சொல்லி, அவனை அங்கிருந்து அனுப்பிவைத்தார். ராமனும் தெருக் கூத்தை விட்டுப் பிரிய மனமில்லாமல் பிரிந்தான்.
தெருக் கூத்திலே அரவான் களப்பலிக்கான ஆயத்தங்கள் நடக்கும் கட்டம் ஆரம்பமாகிறது. பாரத யுத்தம் நடந்தால் தான் பூமி பாரம் குறையும் — பூமாதேவிக்கு தலைவலி கொஞ்சம் நீங்கும் பூமாதேவியின் தலைக் கனத்தைக் குறைப்பதற்காகவே பாரத யுத்தத்தை ஏற்பாடு செய்து — பச்சைக் குழந்தைகள், பருவ மங்கைகள், பழம் நிகர் பெற்றோர்கள், அனைவரையும் விட்டு அவர்கள் வீட்டுப் போர் வீரர்கள் மாண்டு மடியும்படி செய்யப் போகிறேன் — என்பதாக கிருஷ்ண வேடதாரி, வசனமும் பாட்டும் கலந்து திரௌபதியிடம் தனியாகப் பாடிக் கொண்டிருந்தான். பாட்டு முடிந்ததும் அடுத்தக் காட்சியாக அரவானை இழுத்து வந்து அவன் தலையை வெட்டி களப்பலி கொடுத்தார்கள் பாண்டவர்கள்.
அந்தச் சமயத்திலே தெருக்கூத்து பார்த்துக்கொண்டிருந்த மக்களிடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அம்பலம் திடுக்கிட்டு எழுந்தார். “இதோ நானும் களப்பலி கொடுத்து விட்டேன்! களப்பலி கொடுத்து விட்டேன்!” என்று பயங்கரச் சிறிப்பு சிறித்துக்கொண்டு, கோரமான முகத்துடனும், கையிலே ஒரு ரத்தம் படிந்த அரிவாளுடனும் தாண்டவன் கூத்தாடிக் கொண்டு வந்தார். அவரது ஆத்திரக் கூத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிய மக்கள் அவரெதிரே நிற்காமல் ஒதுங்கி நினறனர். தாண்டவன் அம்பலத்திற்கு நேராகப் போனார். அம்பலத்திற்கும் பயம் தான். ஆனாலும் சமாளித்துக் கொண்டு, அசையாமல் நின்றார். தாண்டவன் மீண்டும் கத்தினார்:
“ஹ ஹஹ! அடே அம்பலம்!...... என்னை யாரும் ஒன்றும் செய்யமுடியாது!...... இதோ பார், பட்டாக் கத்தி! பாரடா பார் இதிலே படிந்திருக்கும் ரத்தத்தைப் பார்!...... இது யாருடைய ரத்தம் தெரியுமா? தாண்டவனை அலட்சியப் படுத்தி — தான்றோன்றித் தனமாக நடத்தினாயே திருமணம்; அந்தத் தம்பதிகளின் ரத்தம்!....... தகப்பனுக்கு இஷ்டமில்லாமல், என்னமோ நீதான் பெற்ற தகப்பன் மாதிரி, என் பெண்ணுக்கு ஒரு அனாதைப் பயலைக் கட்டி வைத்தாயே; அந்தப் பயலின் பச்சை ரத்தமும், என் பசுங்கிளியின் பாசரத்தமும் படிந்த கத்தியடா இது! பார் பாவி பார்!..... பரம பாதகா — ஊர்க் குடியைக் கெடுக்கும் சண்டாளா! உன்னை எதிர்க்க யாருமில்லை என்ற தைரியத்திலேதானே, பெற்றவர்களைத் துரும்பாக மதித்து — பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடினாய்; இதோ, உன்னை எதிர்த்து ஜெயித்து விட்டேன் — மாதா பிதா இருவரையும் அலட்சியப் படுத்திய அந்த மானங் கெட்ட பெண்ணையும் பழி வாங்கி விட்டேன் — காலையிலே கல்யாணம்!.... இரவிலே பிணம்! ஹஹஹ... வெள்ளியம்பலம்! தாண்டவன் தைரியத்தைப் பார்த்தாயா? போய்ப் பார்! உன் ஆசீர்வாதமும் — பாதுகாப்பும் பெற்ற அபாக்யவதியும், அற்பப் பயலும் சவமாகப் படுத்திருக்கும் காட்சியைப் போய்ப் பார்! போடா போ.....”
தாண்டவனை, யாராலும் நிறுத்த முடியவில்லை. யாராலும் தடுக்க முடியவில்லை. வெறி கொண்டவனைப்போல ஆடினார்.
வெள்ளியம்பலம் காதலர்களைப் பலி டுகாடுக்க கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். இப்போதோ காரியமே முடிந்துவிட்டது என்று கேட்டு களிப்படையாமல் இருப்பாரா? ஆனாலும் மனதில் எழுந்த மகிழ்ச்சியை வெளியே காட்டிக் கொள்ளாமல், “அடப் பாவி! ஆசைக் காதலர்களைக் கொன்று விட்டாயா? எனக்கு அப்போதே தெரியும் அதற்காகத் தானே காலை முதல் அவர்களுக்குக் காவல் போட்டு வைத்திருந்தேன்...” என்று அங்கலாய்த்துக் கொண்டார். தெருக் கூத்திலே தொடர்ச்சி இல்லை — ஊரார் திகைத்து நின்றனர் — தாண்டவனோ பெயருக்கேற்றபடி தாண்டவமாடிக் கொண்டிருந்தார்.
என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்தவரின் கண்ணிலே ராமன் பட்டான். உடனே அம்பலம் ஊர்மக்களைத் தூண்டி விட்டு, தாண்டவனைப் பிடித்து நிறுத்துமாறு கூறினார். அம்பலமும் தாண்டவனை எதிர்த்தார். ஊரார் சூழ்ந்துவிட்ட காரணத்தால் தாண்டவன் அடங்கி, கையிலேயுள்ள கத்தியை எறிந்துவிட்டு நின்றார். இதுதான் சமயமென்று ஊரார் தாண்டவனைக் கட்டிப் போட்டார்கள்.
விஷயந் தெரிந்த தாண்டவனின் மனைவி அஞ்சலை ஓடோடி வந்தாள். கட்டுண்டு கிடக்கும் தாண்டவன் மீது விழுந்து, “அடப் பாவி! என் மகளை அநியாயமாகக் கொன்று விட்டாயே!” என்று அலறினாள்; மயங்கி விழுந்தாள்.
இதுதான் சமயமென்று, அம்பலம்; ராமன் வந்த பக்கமாக நழுவினார். ராமன், கையிலே ஒரு பாத்திரத்துடன் வந்து கொண்டிருந்தான். பாத்திரத்தைப் பிடித்திருந்த அவன் கரங்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. அம்பலம் அவனிடம் ஓடிவந்து “ராமா! என்ன இது?” என்று பரபரப்போடு கேட்டார்.
ராமன், குரல் நடுங்கியவாறு, “ஏஜமான்! நமக்கு முன்னாடியே, தாண்டவன் காரியத்தை முடித்து விட்டான்” என்றான்.
“அது தெரியுமடா எனக்கு — இருவரும் செத்தே விட்டார்களா?” என்றார் அம்பலம்.
“துண்டாடிவிட்டான் எஜமான், துண்டாடிவிட்டான்” என்று கண்ணீர் வடித்தான் ராமன்.
“சபாஷ்!.... இது என்ன?” என்று பாத்திரத்தைப் பார்த்தார்.
“இது அவர்கள் இருவருடைய ரத்தம் — அய்யோ! ரெண்டு பேர் கழுத்திலே இருந்தும் நீர் ஊற்று மாதிரி ரத்தம் குபுகுபுன்னு கொட்டுதுங்க! பாக்க சகிக்கிலீங்க! கட்டில் அறையிலே ஒருத்தரோட ஒருத்தர் சந்தோஷமாக முத்தம் கொடுத்துக்கொள்ளும்போது, இரண்டு பேர் தலையையும் பனங்காய் மாதிரி சீவிட்டான் பாபிப் பயல்!”
“அதிருக்கட்டுமடா! இதை ஏன் இங்கு எடுத்துக் கொண்டு வந்தாய்?”
“மாயாண்டிக் கிழவர்தான் சொன்னார், அதன்படி எடுத்து வந்தேன். கொஞ்ச நேரமானால் ரத்தம் உறைந்து விடும் பிறகு தெளிக்க முடியாது! இப்போதே உங்களையும் அழைச்சிகிட்டு கிணற்றங் கரைக்கு வரும்படி அவர் தான் சொன்னார். அவர், ஆட்களையெல்லாம் அழைத்துக் கொண்டு, புதையல் எடுப்பதற்குத் தோதா அங்கேயிருப்பதாகவும் சொன்னார், எஜமான்.”
“அப்படியா? வா போவோம்!” என்று ராமனுடன் அம்பலம், கிணற்றடி நோக்கிப் புறப்பட்டார்.
கிணற்றடியிலே
ரத்தக் கிண்ணத்துடன் ராமன், நடுங்கியவாறு அவர் பின்னே போய்க் கொண்டிருந்தான்.
ராமன் சொன்னவாறு, அம்பலத்தின் ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள். அம்பலம் அவர்களைப் பார்த்து, “மாயாண்டி எங்கே?” என்று கேட்டார்.
“இதோ வந்துவிட்டேன். ஜெயம்! ஜெயம்!” என்று மகிழ்ச்சியோடு கத்தியபடி மாயாண்டி அங்கு வந்து, அம்பலத்தின் அருகாமையிலே நின்றார்.
“பார்த்தீரா கிழவரே! நாம் செய்ய வேண்டிய காரியத்தை அந்தத் தாண்டவனே செய்துவிட்டான்!” என்று சிரித்தார் அம்பலம்.
“ஆமாம்!” என்று தலையசைத்தவாறு, மாயாண்டி ராமனின் கையிலேயிருந்த பாத்திரத்தைப் பார்த்தார். அவரது முகத்திலே மாறுதல்!
அதைக் கவனித்த அம்பலம், “என்னய்யா; உம் இருதயத்தில் இரக்கம் வந்து புகுந்துகொண்டதோ, இந்த ராமன் பயலைப் போல!” என்று சிரித்தபடி கேட்டார் அம்பலம். “இல்லை; இல்லை! என்ன இருந்தாலும், என்னோடு சிறிது நாளாவது பழகியிருக்கிறான் — பாவம்! இந்ததுரை!” என்றவாறு, மாயாண்டி கண்களைத் துடைத்துக்கொண்டார். அவர் தேகம் ஏனோ பதறியது!
“உலகத்திலே எந்தக் காதலருக்கும் ஏற்படமுடியாத முடிவு இது! அம்பிகாபதி அமராவதி கூட இப்படிச் செத்ததாகக் கதை இல்லை. இருவரின் ரத்தமும் ஒரே பாத்திரத்தில்! உண்மைக் காதலர்களுக்கு இது பூரிப்பான முடிவு! இந்த மாதிரி ஒரு புண்யம் நமக்கு கிடைக்கப் போவதால் தான், இவர்களைக் கொலை செய்த பாவத்திலிருந்து நமக்கு விடுதலை கிடைக்குமென நம்புகிறேன்” கிழவர் கலங்கியவாறு இப்படிப் டேசினார்.
“கொலை பண்ணிய பாவம் நமக்கு ஏனய்யா வருகிறது? அதுதான் தாண்டவனைச் சேரப் போகிறதே!” என்று கேலி பேசிவிட்டு “ஆகவேண்டிய காரியத்தைப் பார்ப்போம்” என்று அவசரப் படுத்தினார் அம்பலம்.
“ஆகவேண்டியதென்ன, தெளிக்கவேண்டியது தான்” என்று, ராமனிடமுள்ள பாத்திரத்தை வாங்கி, அம்பலத்திடம் கொடுத்தார் மாயாண்டி.
அம்பலம், தன் ஆட்களைப் பார்த்து “டேய்! — இதை நான் கிணற்றிலே தெளித்ததும், படீர் என புதையல் வெடித்துக் கிளம்பும் — எல்லாப் பசங்களும் ஜாக்கிரதையா இருங்கள்!” என்று கூறியவாறு, பாத்திரத்திலுள்ள ரத்தத்தை அள்ளி கிணற்றிலே தெளித்தார்.
அவர் எதிர்பார்த்தபடி திடீரென எதுவும் வெடித்துக் கிளம்பவில்லை. பாத்திரத்திலுள்ளது முழுவதையும் கிணற்றிலே ஊற்றினார். எதிரொலி எதுவுமில்லை. மாயாண்டியைப் பார்த்தார். அவசரப் படாதீர்கள் என்பது போல் மாயாண்டி தலையை அசைத்தார். அம்பலம் மெதுவாக — ஆவலுடன் கிணற்றுக்குள்ளே எட்டிப் பார்த்தார். தகதகவென ஏதோ மின்னிக் கொண்டிருந்தது. அம்பலத்தின் கண்கள் விரிந்தன, எல்லோரையும் பார்க்கச் சொன்னார். ‘டார்ச்’ விளக்கை கிணற்றுக்குள்ளே அடித்தனர். பளபளவென மின்னும் பெரிய பெட்டிதான் அது. எல்லோரும் ஆவலோடு கிணற்றுக்குள்ளே பார்த்தபடி இருந்தனர்.
“என்ன செய்யலாம் மாயாண்டி?” எனக்கேட்டார் அம்பலம்.
“இப்போது தான் நாம் எதிர்பார்த்தது புறப்பட ஆரம்பித்திருக்கிறது. இதை எடுத்தால் அடுத்தது வரும் என நினைக்கிறேன்” என்றார் மாயாண்டி மகிழ்ச்சியுடன்!
அம்பலம், ஆட்களுக்குக் கட்டளையிட்டார். நாலைந்து பேர் கிணற்றுக்குள்ளே இறங்கினர். இறங்கியவர்கள் “வெள்ளிப் பெட்டி! வெள்ளிப் பெட்டி!” எனக் கத்தினார்கள். அம்பலமும், மற்றவர்களும், கண்ணை இமைக்காமல், திறந்த வாய் மூடாமல், கிணற்றுக்குள்ளே பார்த்துக் கொண்டே யிருந்தனர். பெட்டியை மெதுவாகத் தூக்கி, மேலேயிருந்து அனுப்பப்பட்ட கயிற்றிலே கட்டி விட்டார்கள். அம்பலமும் மற்றவர்களும் பெட்டியை கிணற்றங் கரையிலே வைத்தனர். அம்பலம், தாங்காத ஆர்வத்தோடு, பெட்டியைத் தடவிப் பார்த்தார். ஆட்கள் கூறியபடி அது வெள்ளிப் பெட்டியல்ல — ஈயமாக இருக்கவேண்டும். அல்லது வேறு ஏதாவது உலோகமாக இருக்க வேண்டும். அதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படவேயில்லை. உள்ளேயிருப்பது பற்றித்தான் அவருக்குக் கவலையெல்லாம். பெட்டியைக் கஷ்டப்பட்டுத் திறந்தார். உள்ளே இன்னொரு பெட்டி இருந்தது. அதைத் திறந்தார். அதற்குள்ளே இன்னொரு பெட்டியும் “இதையும் திற — புதையல் காண்பாய்!” என்ற எழுத்துக்களும் காணப்பட்டன. அம்பலத்தின் ஆனந்தத்திற்கு எல்லையில்லை. அவசர அவசரமாக மூன்றாவது பெட்டியையும் திறந்தார். அதிலே ஒரு வேலைப்பாடமைந்த ஓலையிருந்தது, அந்த ஓலையை எடுத்துப் பார்த்தார். அம்பலத்தின் முகம் திடீரென மாறியது! பாத்திரத்திலே மிச்சம் ஒட்டிக்கொண்டிருந்த ரத்தத்தின் சிகப்பையும் தோற்கடிக்கிற விதத்திலே அவரது முகமும், கண்களும் சிவந்தன. ஓலையிலே காணப்பட்ட எழுத்துக்களை திரும்பவும் படித்தார்; கண்களைக் கசக்கிக்கொண்டு! அதிலே இருந்த வாசகம் இதுதான்!
“மனிதனே! பொன்னைத் தேடி அலையாதே! முதலில் உன் மனதையே பொன்னாக்கிக் கொள்!”
அம்பலத்தினால் அங்குநிற்கவே முடியவில்லை! “எங்கே அந்த மாயாண்டிக் கிழவன்? என்னை ஏமாற்றி விட்டான்! உடனே அவனைக் கொல்லுங்கள்!” என்று கத்தினார் அம்பலம்.
எல்லோருமே “மாயாண்டி எங்கே?” என்று பார்த்தனர். மாயாண்டி, அங்கே இல்லை; எங்கேயோ போய் விட்டார். போய்விட்டாரா; அல்லது அவரும் அம்பலத்தோடு சேர்ந்து ஏமாந்து போய் — இனி நின்றால் கொன்று விடுவார்கள் என்ற பயத்தில் ஓடி விட்டாரா? — இப்படி ஒரு கேள்வி அங்கிருந்தவர்கள் உள்ளங்களிலே எழுந்தது.
கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்