அத்தியாயம் 49 · 50 / 52

அத்தியாயம் 49

Chapter 49

மூல ஸ்கேன் 423-429 (chapter-49 portion)

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

49

மாயாண்டியைக் காணவில்லை யென்றதும் அம்பலம் தன் ஆட்களுடன் வீடு நோக்கி விரைந்தார். வீட்டின் பக்கமிருந்து ஜுவாலை தெரிவதைக் கண்டு திடுக்கிட்டார். “அது என்ன ஜூவாலை” என்று அவர் கேட்பதற்குள் யாரோ இருவர் அவர் எதிரே ஓடிவந்து, “எஜமான்! எஜமான்!! நம்ப வீட்டைக் கொளுத்திவிட்டார்கள்!” என்று அலறினார்கள். அம்பலம் ஆத்திரத்தோடு ஓட ஆரம்பித்தார். முரடர்களும் கூடவே ஓடினார்கள். ராமனுக்கு மாத்திரம் இந்தச் சேதி அவ்வளவு பரபரப்பை அளிக்கவில்லை. தலையை ஆட்டிக்கொண்டு சற்று மெதுவாகவே நடந்தான் அவன்.

வெள்ளியம்பலம் வீதி முனையில் இருந்தபடி வீட்டை அண்ணாந்து பார்த்தார். தேர் எரிவதுபோல் வீடு எரிந்து கொண்டிருந்தது. மேகங்களைத் தொடுவதற்கு தீ நாக்குகள் முயற்சித்துக் கொண்டிருந்தன. அம்பலம் அப்படியே அசைவற்று நின்றார். ஊர் மக்கள் அனைவரும், தெருக் கூத்தை எப்படி ரசித்துக் கொண்டிருந்தார்களோ, அது போலவே தீ எரிவதையும் ரசித்துக்கொண்டு நின்றார்கள். கட்டப்பட்டு நிற்கும் தாண்டவனின் குரல் மட்டும் ஆவேசமாக ஒலித்தது.

“எரியட்டும் — மாப்பிள்ளையும் பெண்ணும் மங்களகரமாக எரிந்து சாம்பலாகட்டும்! நான் வெட்டிப் போட்ட இரண்டு பிணங்களுக்கும் வெள்ளியம்பலம் வீடுதான் சரியான சுடுகாடு! — மருங்கப்பள்ளத்து மக்களே! நாளைக் காலையிலே எல்லோரும் தயாராக வந்து விடுங்கள் — இந்த மயானத்திலே தான் மாப்பிள்ளை பெண்ணின் ஆத்மர சாந்தி அடைய பால் தெளிக்க வேண்டும். புரோகிதர்கள் யாராவது இருந்தால் — இன்று முதல் பதினாறாம் நாள் காலையிலே வந்து விடுங்கள்! கருமாதிக்கு தட்சனை தரப்படும்! கொத்தனார்களே! நீங்களும் கேளுங்கள் — நெருப்பிலே சாம்பலாகப் போன காதலர்களுக்கு இங்கேதான் நினைவு மண்டடம் எழுப்ப வேண்டும் — இப்போதே அதற்கான கூலியை அம்பலத்திடம் பேசிக்கொள்ளுங்கள்!...... ஹஹஹ... ஹே அம்பலம்! என்னை எதிர்த்தா என் மகளுக்குக் கல்யாணம் செய்கிறாய் — முடிந்ததா உன்னால்?.... அதோ பார் — ஆனந்தமாக எரிகிறது உன் வீடு!”

தாண்டவன் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்க அம்பீலத்தால் முடியுமா? தீயினும் கொடிய வார்த்தைகளாக அல்லவா அவைகள் இருந்தன்! அவரது பலங்கொண்ட மட்டும் தாண்டவனை அறைந்தார். கன்னத்திலே அறை விழுந்ததும், தாண்டவனின் கட்டுக்களும் தெரித்தன். அம்பலத்தின்மீது பாய்ந்தார். இருவரும் தெருவிலே உருண்டனர். தாண்டவனை முரடர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கினர்.

தாண்டவனிடமிருந்து விடுபட்ட அம்பலம். ஊர் மக்கள் மீது சீறி விழுந்தார். வீட்டை அணைப்பதற்கு யாரும் முன்வராமல் வேடிக்கைப் பார்ப்பதாக அவர் எண்ணினார்.

“இந்த ஊர் பசங்கள் அத்தனை பேரையும் விரட்டுங்கள்!” என்று ஆட்களுக்குக் கட்டளை யிட்டார். முரடர்களும் ஊர்மக்கள் மீது பாய்ந்தனர். அம்பலத்திற்கு என்ன செய்வது, என்ன சொல்வது என்றே புரியவில்லை.

“மாயாண்டியை யாருடைய வீட்டிலே ஒளித்து வைத்திருக்கிறீர்கள் — மரியாதையாகச் சொல்லி விடுங்கள்!” என்று வரட்டுக் கூச்சல் போட்டார்.

யாரிடமிருந்தும் பதில் வரவில்லை அவருக்கு. மாயாண்டி தன்னை ஏமாற்றிவிட்ட கோபம் வேறு — வீடு எல்லாம் சேர்ந்து, அவர் எல்லா வீடுகளையும் சோதனை போட்டு மாயாண்டிக் கிழவனைக் கண்டு பிடிக்குமாறு உத்திரவு போட்டார். முரடர்களுக்குக் கேட்கவா வேண்டும்! வீடுகளை முற்றுகையிட்டனர். சட்டிப் பானைகள் வெளியே வீசப்பட்டன. கூறைகள் பிய்த்தெறியப்பட்டன. குழந்தைகள் தூக்கி எறியப்பட்டனர். டெண்கள் இழிவாக நடத்தப்பட்டனர். கிராமமே அல்லோலகல்லோலப் பட்டது. வயதானவர்கள், வாலிபர்கள் என்று பாராது எல்லோரையும் பந்தாடிப் பரவசப் பட்டனர் அம்பலத்தின் ஆட்கள்!

அம்பலத்தின் ஆட்களை எதிர்க்கும் திராணியற்று மூலைக்கொருவராக ஓடினர் மக்கள். இதுதான் சமயமெனக் கண்ட காலிகள் தாங்கள் கண் வீசி வைத்திருந்த கன்னிப் பெண்களின் கற்பைச் சூறையாடிக் களித்தனர். மருங்கப்பள்ளம் பிணக் காடாக மாறவேண்டும் என்ற நோக்கத்தோடு அம்பலம் தன் ஆட்களைத் தட்டிக் கொடுத்தார். தனக்குத் தாண்டவனால் ஏற்பட்ட அவமானத்தைப் பற்றிப் பேசுவதற்கு மருங்கப்பள்ளத்திலே யாரும் மிச்சமிருக்கக் கூடாது என்பது அவரது எண்ணம்.

முரடர்களின் படை தாண்டவனின் வீட்டிலேயும் நுழைந்தது. அவர்களை வீட்டுக்குள்ளே நுழைய வொட்டாமல் தாண்டவன் தடுத்தார். அவரது தலையிலும், கை கால்களிலும் சரியான காயங்கள் ஏற்படவே தாண்டவன ஓடி விடுவதைத் தவிர வேறு வழியில்லாமற் போயிற்று!

தாண்டவன் ஓடியதும — அந்தத் தடியர்களை அஞ்சலை எதிர்த்தாள், தன் கண்ணீரால்! அவர்களுக்குக் கண்ணீரின் மதிப்பு தெரியாதே — அதனால் அஞ்சலையைத் தூர எறிந்துவிட்டு வீட்டுக்குள்ளே நுழைந்தனர் மாயாண்டியைத் தேடுவதற்கு! வீடெங்கிலும் சூறையாடினர் — மாயாண்டி காணப்படவில்லை. பலகையால் செய்யப்பட்ட சதுரமான குதிர் ஒன்று இருந்தது. அதிலே முரடர்களின் கோடரிகள் பாய்ந்தன. குதிர் பிளக்கப்பட்டது. அதற்குள்ளேயிருந்து “ஆ!” என்ற பெண்ணின் குரல் கேட்டது. அனைவரும் திடுக்கிட்டனர். கோடரியினால் காயம் பட்ட பரிமளாவை அணைத்தபடி துரை, வெளியே வந்தான். முரடர்கள் சற்று நேரம் திகைத்தனர். துரை, அவர்களை எதிர்க்கத் தொடங்கினான். அவனுடைய கமபு வீச்சுக்கு முன்னே நிற்க மாட்டாமல் முரடர்கள் ஓடினார்கள்.

அவர்களைத் துரத்தியபடி துரையும் ஓடி வந்தான். ஓடிய முரடர்கள், துணைக்கு ஆட்களை அழைத்தார்கள். துரைக்கும், அவர்களுக்கும் கடுமையான சண்டை — அவர்களிடமிருந்து விடுபட்ட துரை, ஓடிக் கொண்டிருக்கும் ஊர் மக்களைத் தடுத்து நிறுத்தி, “கோழைகளே! ஏன் ஓடுகிறீர்கள்? வெள்ளியம்பலம் என்ன, இந்த ஊருக்கு ராஜாவா? வெட்கமில்லையா உங்களுக்கு? உங்களது இரும்புக் கரங்கள், அந்த இருதயமற்றவனின் முகத்துக்கு நேரே உயரட்டும்! — அவனை எதிர்க்க யாரும் அஞ்சாதீர்கள்! எனக்கும் பரிமளாவுக்கும் அவன் நடத்திய திருமணம் நல்ல எண்ணத்தோடு நடத்தப்பட்டதல்ல — புதையலை எடுப்பதற்கு புதுமணத் தம்பதிகளின் ரத்தம் வேண்டும் அவனுக்கு! அதனால்தான் அவ்வளவு அக்கரையோடு அவன் அந்த விவாகத்தை நடத்தினான். எங்களைக் கொன்றுவிட்டு அந்தப்பழியைத் தாண்டவன் மீது போடவும் திட்டம் தயாரித்தான் — மாயாண்டிக் கிழவரின் தந்திரமான திட்டங்களால் — தாண்டவனின் உள்ளம் மாற்றப்பட்டு, நாங்களும் தப்பினோம் — தப்பிவிட்ட எங்களையும், தவறு எதுவும் செய்யாத உங்களையும் — தாக்குமாறு கட்டளையிட்டு காட்டுராஜா தர்பார் நடத்தும், அந்தக் கயவனை எதிர்த்து முஷ்டியை உயர்த்துங்கள்! உம் — மருங்கப்பள்ளத்து மக்கள் மானமில்லாதவர்கள் என்ற பட்டம் பெறாதீர்கள்! கோழைகளாய் — மோழைகளாய்த் திரிய எண்ணாதீர்கள்; உங்களுக்குத் துணையாக நான் இருக்கிறேன் — அதோ, என் நண்பன் ஆனந்தனும் மற்றவர்களும் வருகிறார்கள். அவர்கள் மிகவும் தைரியசாலிகள்! அம்பலத்தின் வீட்டிலேயிருந்து எங்களை மீட்ட அசகாய சூரர்கள்! அவர்களும் நம்மோடு சேர்ந்து கொள்வார்கள்! உம் — ஓடாதீர்கள் — எதிர்த்து நில்லுங்கள்!” என்று வீராவேசத்தோடு பேசினான்.

அதற்குள் ஆனந்தன் கோஷ்டியாரும் அங்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் அனைவரும் நிற்குமிடம் நோக்கி முரடர் படையும் பாய்ந்து வந்தது. இப்போது ஊர் மக்கள் துரையின் தலைமையிலே முரடர்களை எதிர்க்கத் துணிந்தார்கள். மருங்கப்பள்ளம் போர்க்களம் போலக் காட்சியளித்தது. அம்பலமும் அந்தக் களத்திற்கு வந்து சேர்ந்தார். துரை உயிரோடு இருப்பதைக் கண்டு அவர் ஆச்சரியத்தில் முழுகினார்.

“என்னைப் பார்த்து மட்டும் ஆச்சரியப்படாதே அம்பலம்! அதோ பார் என் பரிமளாவை” என்று சுட்டிக் காட்டி, அவளை எடுத்து அணைத்துக் கொண்டான் துரை.

பரிமளாவின் தலையிலே, கோடரி காயத்தினால் ரத்தம் வழிந்தபடி யிருந்தது.

“என்ன திகைக்கிறாய் தீயவனே! நீ கட்டிய கோட்டை டுயல்லாம் பொடிப் பொடியாகிவிட்டது! தாண்டவனைக் கொலைகாரராக நிறுத்தி விட்டு, எங்கள் குருதியைத் தெளித்துப் புதையலைக் கொள்ளை அடிக்கத் திட்டம் போட்டாயே; அந்தத் திட்டம் தீயிலே கருகி விட்டதடா பாவி! திருமணம் — தெருக் கூத்து — சோபன முகூர்த்தம் — நடுநிசியிலே பலி! பாதகா, பலி — பலிக்காமல் போய் விட்டதடா! காதல் வெற்றி பெற்று விட்டது! நேர்மை ஜெயித்து விட்டது! மாயாண்டிக் கிழவரின் தந்திரங்கள் வாகை மாலை சூடிவிட்டன! என்னுடைய நண்பர்கள், வெட்டி வா என்றுரைத்தால் கட்டி வரும் வீரர்கள். அந்தக் கடமையின் சிகரங்கள் — நினைத்த காரியத்தைச் செய்து முடித்து விட்டார்கள்! புதையலா வேண்டும் உனக்குப் புதையல்! உனக்குப் புத்தி வரட்டும் என்று தானே, மாயாண்டிக் கிழவர் — மனதைப் பொன்னாக்கிக் கொள்ளும் மந்திரத்தைப் புதையலாகக் கொடுத்தார்! வரவில்லையே; ஏன்? புதையல், இருதயமுள்ளவனுக்குக் கிடைக்க வேண்டுமடா! உன்னைப் போல காலியான உள்ளத்திலே இருக்க கூடியது அல்ல அது என்பதை இப்போதாவது உணர்ந்து கொள்!”

துரை பேசிக்கொண்டே போனான். அம்பலம் தன் ஆட்களுக்கு ஜாடை காட்டினார். அவர்கள் அவன் மீது தாவினர். மீண்டும் ரகளை! அப்போது ஒரு ரேக்ளா வண்டியிலே மாயாண்டிக் கிழவர் அந்தப் பக்கமாக வந்தார். வந்தவர், தான் வருவதை அந்தக் கூட்டத்தார் உணர வேண்டுமென்பதற்காக உரக்கக் கனைத்தார்.

அவரை அம்பலம் பார்த்து விட்டார். “அதோ அந்தக் கிழவனைப் பிடியுங்கள்!” என்று கத்தினார் அம்பலம். ஆட்கள் கிழவர் பக்கம் ஓடினர். கிழவர், ரேக்ளாவை வேகமாக ஓட்டினார். துரையிடமிருந்து முரடர்களைப் பிரிக்க வேண்டுமென்பதற்காகவே அவர் அப்படிச் செய்தார் என்று அம்பலத்திற்குத் தெரியாது.

ரேக்ளாவைத் துரத்திக் கொண்டு அம்பலமும், ஆட்களும் ஓடினர். அம்பலம் இன்னொரு ரேக்ளாவில் ஏறிக் கொண்டு, கையிலே ஒரு கத்தியுடன் மாயாண்டியின் ரேக்ளாவைத் துரத்தினார். ஓடிக்கொண்டிருந்த மாயாண்டியின் ரேக்ளாவில், யாருமறியாமல் தாண்டவனும் ஏறிக் கொண்டார்.

எப்படியும் மாயாண்டியைப் பிடித்துவிட வேண்டுமென்ற ஆத்திரத்திலே அம்பலம் தன் ரேக்ளாவை முடுக்கி விட்டார். முரடர்களை எதிர்த்து, அவர்களை முழுவதும் விரட்ட முடியாமல் திணறிக் கொண்டிருந்த துரை, மாயாண்டியை அம்பலம் துரத்திக்கொண்டு போவதை அறிந்தான். ஆனந்தனிடம் ஏதோ காதிலே சொல்லிவிட்டு பரிமளாவை அணைத்தபடி வேறு பக்கம் ஓடினான். அங்கு தயாராக இருந்த ரேக்ளாவிலே அவனும் பரிமளாவும் ஏறிக் கொண்டார்கள். அவனிடம் ஆனந்தன் ஓடி வந்து, “கரையில் படகு தயாராக இருக்கிறது. அதில் ஏறிக் கொண்டு தப்பி விடுங்கள். நான் போலீசாரை சந்திக்கப் போகிறேன்.” என்று கூறினான். சரியென்று தலையசைத்து விட்டு, துரை பரிமளாவுடன் ரேக்ளா வண்டியில் புறப்பட்டான்.

மாயாண்டியும், தரண்டவனும் சென்ற ரேக்ளா, மனோரா நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. அம்பலமும் அதைத் தொடர்ந்து வண்டியை முருக்கி விட்டார். அதே திக்கில் துரையும், பரிமளாவும் ரேக்ளாவில் டுவகு வேகமாகப் போய்க் கொண்டிருந்தனர்.

கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்