அத்தியாயம் 50 · 51 / 52
அத்தியாயம் 50
Chapter 50
மூல ஸ்கேன் 429 (chapter-50 portion)-438 (chapter-50 portion)
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
50
கிழக்கு வெளுக்க ஆரம்பித்துவிட்டது. மனோராவிற்கு அருகே கரையை நனைத்துக்கொண்டிருக்கும் கடல் அலைகளின் பக்கம் மாயாண்டிக் கிழவரின் ரேக்ளா வந்து நின்றது. தாண்டவனும் அவரும் பரபரப்போடு கீழே இறங்கினார்கள். கரையோரத்தில ஒரு சிறு படகு ஆள் யாருமின்றி நின்று கொண்டிருந்தது. மாயாண்டி, அந்தப் படகிடம் ஓடினார். ஒருக் கணம் யோசித்தார். பிறகு அதில் ஏறி உட்கார்ந்து கொண்டார். அந்தச் சிறிய படகுக்கேற்ற துடுப்பும் அதிலேயே இருந்தது.
“தாண்டவா! இது துரை, பரிமளாவுக்காக காத்திருக்கும் படகு! பரவாயில்லை — அவர்கள் எப்படியும் ஆனந்தன் உதவியால் தப்பி விடுவார்கள். இப்போது அவசரமான காரியம் என் உயிர் பாதுகாக்கப்பட வேண்டியது தான்! சரி; நான் புதுப்பட்டினம் போகிறேன் — பரிமளா, துரை ஜாக்கிரதை!” என்று கூறியவாறு மாயாண்டி படகைச் செலுத்த ஆரம்பித்தார்.
கரையிலே நின்று கொண்டிருந்த தாண்டவனின் காதில் ரேக்ளா வண்டி வரும் சப்தம் கேட்கவே, அவர் மாயாண்டியை நோக்கி, “சீக்கிரம்! சீக்கிரம்!!” என்று எச்சரித்தார். மாயாண்டியும் படகை வேகமாகச் செலுத்தத் தொடங்கினார்.
தூரத்தில் அம்பலத்தின் வண்டி வருவது கண்ட தாண்டவன், ரேக்ளாவை இழுத்து மறைவாக நிறுத்தி விட்டு, தானும் ஒரு இடத்தில் மறைந்து கொண்டார்.
படகிலே செல்லும் மாயாண்டி, அம்பலத்திடமிருந்து தப்பிவிட்டோம் என்ற பெருமூச்சோடு, தன் மடியை அவிழ்த்துப் பார்த்தார். பல நாட்களாக அவர் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் ‘புதையல் ரகசியத்தை’ மகிழ்ச்சியோடு கண்களிலே ஒத்திக் கொண்டார்.
“நீ தப்பிவிட்டாய்! பேராசைக் காரனிடமிருந்து நீ மட்டுமல்ல; துரை, பரிமளா இருவரும் தப்பிவிட்டார்கள்! எல்லாமே உன் சக்திதான்! உன்னை நல்ல காரியத்துக்குப் பயன்படுத்தக் கூடிய நல்லவர்கள் பலர் எனக்குக் கிடைத்துவிட்டார்கள். உன் மூலம் புதைந்து கிடக்கும் தங்கப் பாளங்களை எடுப்பேன் வரண்டு கிடக்கும் குடும்பங்களிலே வளம் உண்டாக்குவேன். என்னுடைய இலட்சியக் கனவு ஈடேறும் காலம் வந்துவிட்டது” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார் கிழவர். படகில் இருந்தபடியே மனோராவை அண்ணாந்து நோக்கினார்.
அந்த மனோராவின் உச்சியிலே நின்றுகொண்டு ஒரு நாள், ஆகாயத்தில் மேயும் மேக மந்தைகளை நோக்கி, “மேகங்களே! உங்கள் சாவுக் கண்ணீர் மாநிலத்தை வாழ வைக்கவும் உதவுகிறது. சில சமயம் அழிக்கவும் உதவுகிறது. ஆனாலும் உங்கள் சாவுக் கண்ணீர் வாழ்க! அது போல என் சாவுக் கண்ணீர் யாரையும் வாழ வைக்காதா?” என்று அவர் ஏக்கக் குரல் கிளப்பினார். அப்போதெல்லாம், எப்படியாவது அந்தப் புதையல் ரகசியத்துடன் வெளிநாட்டுக்கு ஓடிவிடவேண்டும் என்ற சூழ்நிலை இருந்தது. கொடியோன், சுயநலக்காரன், பேராசை பிடித்தவன் — அனைவருமே புதையல் ரகசியம் அறியத் துடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய கையிலே அது சிக்கி விட்டால், தன்னுடைய லட்சியம் நிறைவேறாது என்று மாயாண்டிக்கு பயம். அதனால் அது யாருடைய கையிலும் கிடைக்க வேண்டாம்; தான் சாவதற்குள் தன்னுடைய லட்சியம் பலிக்க ஏதாவது வழி கிடைக்குமா என்று காத்திருக்கலாம்; அதுவரை புதையல் ரகசியத்தைக் காப்பாற்றி வைத்திருக்க இந்த நாடு வசதியில்லை, என்கின்ற தீர்மானங்களோடு தான் அவர் கள்ளத் தோணி மார்க்கமாக இலங்கை செல்ல ஆயத்தமானார்.
அதற்குள் தான் இத்தனை புயல்கள் மாறி மாறி அடித்துவிட்டன. அதையெல்லாம் நினைத்துக்கொண்டு, புதுப்பட்டினம் நோக்கி படகை செலுத்திக்கொண்டிருந்த கிழவரின் கண்களிலே கரையோரத்திலே அம்பலத்தின் ரேக்ளா வந்து நிற்பது தெரிந்தது.
அம்பலம் கோபாவேசமாக வந்து இறங்கியதைக் கண்ட தாண்டவன், நன்றாகப் பதுங்கிக் கொண்டார். அம்பலத்தின் கையிலேயிருந்த பளபளப்பான கத்தி வேறு தாண்டவனைப் பயமுறுத்தியது. அம்பலம், மாயாண்டிக் கிழவரைக் கூவி அழைத்து, “நில்! நில்!” என்று கத்தினார். கிழவரின் படகும் அதிக தூரம் போகாத காரணத்தால், அம்பலத்தின் கூச்சல் அவர் காதிலே விழுந்து கொண்டு தானிருந்தது. அம்பலம் கடலிலே இறங்கி, கிழவரின் படகு நோக்கி நடக்க ஆரம்பித்தார். கிழவருக்கு அச்சம் பிறந்தது. அம்பலம், நடந்தே தன் படகிடம் வந்து விட முடியுமா என்று யோசித்தார். கையிலேயிருந்த துடுப்பை கடலுக்குள் செங்குத்தாக செலுத்திப் பார்த்தார். ஏறத்தாழ ஒரு ஆள் உயரத்துக்குக் குறைவான ஆழத்திலே தான் அவர் படகு போய்க் கொண்டிருந்தது என்பதை உணர்ந்து திடுக்கிட்டார். அம்பலம், கடலில் நடந்து வருகிறோம் என்பதையே மறந்துவிட்டு கிழவரை நோக்கி வந்து கொண்டிருந்தார், எரியும் கண்களோடு!
கிழவர், சக்தி முழுதும் பிரயோகித்து படகை செலுத்தினார். மார்பளவு தண்ணீரில் நடந்து கொண்டிருந்த அம்பலம், மாயாண்டி கைக்கெட்டாத தூரத்திற்குப் போய்விட்டார் என்பதை உணர்ந்தார். இனியும் நடந்தால் முழுகி விடுவோம் என்பது தெரிந்து விட்டது.
மாயாண்டியும், படகை இப்படியும் அப்படியுமாக செலுத்தி அம்பலத்திற்கு அகப்படாதவாறு போக்குக் காட்டினாரே தவிர, அம்பலத்திடமிருந்து விடுபட்டு அதிக தூரம் போய்விட முடியவில்லை. அம்பலம், கிழவரைப் பார்த்து, “மரியாதையாகத் திரும்பி விடு!” என்று கத்தினார்.
“உன் மிரட்டல்களுக்கு நான் பயப்பட மாட்டேன். அம்பலம்! நீ ஆடிய ஆட்டமெல்லாம் போதும்! இனிமேலாவது அறிவோடு நடந்துகொள்! காட்டுராஜா தர்பார்கள் அதிக நாள் நீடிப்பதில்லை! நான் உன்னை ஏமாற்றி விட்டேன் என்றுதானே இவ்வளவு ஆத்திரப் படுகிறாய் — நானா உன்னை ஏமாற்றினேன்? இல்லையப்பா இல்லை! நீயே தான் ஏமாந்தாய்! அந்த ஏமாற்றத்திலும் உன்னை அறியாமல் சில நல்ல காரியங்கள் செய்திருக்கிறாய் — என்ன திகைக்கிறாய்? நாமாவது, நல்ல காரியம் செய்வதாவது, என்று ஆச்சரியப் படுகிறாயா? பள்ளிக்கூடத்திற்குப் பக்கத்திலே புதையலுக்காக நீ தோண்டிய கிணறு ஊர் மக்களுக்குப் பயன்படுமல்லவா?” என்று சிரித்தார் கிழவர்.
இதைக் கேட்டதும் அம்பலம், வெகுண்டு — “கிணறு! அதை நாளைக்கே பாழாக்கி விடுகிறேன்!” என்று உறுமினார்.
“அம்பலம்! கிணற்றைப் பாழாக்கி விடுவாய் — ஆனால் நீ செய்திருக்கிற மற்றொரு நல்ல காரியத்தை மறுபடியும் நீயே நாசமாக்க முடியாது! பரிமளாவுக்கும் துரைக்கும் திருமணம் செய்து வைத்தாயே; அதைத்தான் சொல்லுகிறேன். காரியம் சாதிப்பதற்காக வேண்டி நல்லவர்கள், சில சமயங்களில் தீய வழியில் பிரவேசிப்பதுண்டு. அதுபோல, தீயவர்களும் நல்ல காரியங்கள் செய்து தீரவேண்டிய நெருக்கடிக்கு ஆளாவது உண்டு! அதே நிலைமையில் நீயும் மிகச் சிறந்த நல்ல காரியத்தைச் செய்து முடித்திருக்கிறாய். கருத்தொருமித்த இரு காதலர்களை இணைத்து வைத்து அவர்களைத் தம்பதிகளாக்குவதென்றால் சாதாரணமா? நீ செய்திருக்கிற ‘பாபங்’கள் அனைத்துக்கும் பரிகாரம் தேடுகிற ‘புண்ய’ காரியமல்லவா அது!” என்று சொல்லிவிட்டுக் கிழவர் சிரித்தார். சிரித்துக்கொண்டே படகையும் செலுத்தினார்.
“காதலர்கள்! திருமணம்! நல்ல காரியம்! ஏ கிழவா! அவர்கள் கதியை நாளைக்குப் பார்!” என்று ஓங்காரக் கூச்சலிட்டார் அம்பலம்.
“வீணே கத்தாதே! வருகிறேன்!” என்று கூறிவிட்டு படகை வேகமாக செலுத்த முனைந்தார் கிழவர். அவருக்குத் திகில் அடங்கவில்லை தான் படகில் இருக்கிறோம். அம்பலம் தண்ணீரில் இருக்கிறார் என்ற ஒரே ஒரு தைரியத்தில் மட்டுமே அவரால் துடுப்பை அசைக்க முடிந்தது.
அம்பலம், கிழவர் போகும் திக்கையே பார்த்துக்கொண்டிருந்தார். ஆளைக் கையோடு பிடிக்க முடியாது என்பதைத் தெரிந்துகொண்ட அம்பலம், கையிலுள்ள கத்தியை எடுத்தார். ஆத்திரமனைத்தையும் ஒன்று சேர்த்து, மாயாண்டியை நோக்கிக் கத்தியை வீசினார். மாயாண்டிக் கிழவரின் விலாப் புறத்திலே கத்தி வேகமாகப் பாய்ந்தது. “ஆ” என அலறிய மாயாண்டி, படகில் இருந்த புதையல் ரகசியத்தைக் கையிலே எடுத்துக் கொண்டார். துடுப்பு கடலிலே விழுந்தது. விலாப் புறத்திலே பாய்ந்த கத்தியோடு மாயாண்டி அப்படியே கடலிலே சாய்ந்தார். புதையல் ரகசியத்தைப் பிடித்திருந்த கை, படகிற்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்தது.
“துரை! பரிமளா! துரை! பரிமளா!” என்று அவரது உதடுகள் முணுமுணுத்தன. அலையிலே படகு ஆடிற்று. மாயாண்டியின் பிரக்ஞை தவறிற்று. கண்கள் மூடிக்கொண்டன. இலட்சியக் கனவுகளுக்கு அஸ்திவாரம் போட்டுக் கொடுத்த இருதயம், தன் வேலையை நிறுத்திக்கொண்டது. ஆகாயத்தை நோக்கி அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கும் தலை, தாழ்ந்தது. மாயாண்டி பிணமானார். அதை அறிவிப்பதுபோல் அவர் பத்திரமாகக் கட்டிக் காத்த புதையல் ரகசியம், அவர் கையை விட்டு நழுவி, கடலுக்கடியிலே போய்ச்சேர்ந்தது. சாகிற நேரத்திலே கூட, அம்பலத்தின் விஷயத்திலே அவர் ஜாக்கிரதையாக இருந்து புதையல் ரகசியம் அம்பலம் கையிலே கிடைத்துவிடாமல் கடலின் மடியிலே அதைச் சேர்ப்பித்து விட்டார்.
படகிலே மாயாண்டி பிணமாகச் சாய்ந்த காட்சியை அம்பலம் தீக் கண்களோடு பார்த்துக்கொண்டு நின்றார். தாண்டவன், கிழவரின் சாவைப் பார்த்துங்கூட, எதுவும் செய்ய முடியாமல் கண் கலங்கியபடி நின்று கொண்டிருந்தார். கம்பீரமாக நின்று கொண்டிருந்த மனோராவின் உச்சியிலேயிருந்து கிழவரின் குரல் எதிரொலிப்பது போல் தெரிந்தது.
“ஓ! ஆகாயத்தில் மேயும் மேக மந்தைகளே! உங்கள் வாழ்நாள் சதமென்று எண்ணியிருக்கிறீர்களா? குளிர்ந்த காற்றுதான் உங்கள் எமன் என்பதை மறந்து விடாதீர்கள். மேகங்களே! உங்கள் சாவுக் கண்ணீர், மாநிலத்தை வாழ வைக்கவும் உதவுகிறது; சில சமயம் அழிக்கவும் உதவுகிறது. ஆனாலும், உங்கள் சாவுக் கண்ணீர் வாழ்க! அதுபோல என் சாவுக் கண்ணீர், யாரையும் வாழ வைக்காதா என ஏங்குகிறேன். மேகப் பிராணிகளே! உங்கள் சாவுக் கண்ணீரின் சக்தியை இந்த ஏழை மனிதன் சாவுக் கண்ணீருக்குத் தாருங்கள் — உம் — சீக்கிரம்! அந்தக் குளிர் காற்று வீசுவதற்குள்! உடனே! உடனே!”
கிழவரின் பிணத்தின்மீது குளிர் காற்றுத்தான் வீசிக்கொண்டிருந்தது. ஆனால் அவரது ஆசைப் பொக்கிஷம், சாவுக் கண்ணீரால் நனைந்து, கடல் தண்ணீருக்குள் அமிழ்ந்து விட்டது. அவரது பெருந் தூக்கத்திற்கு துணை புரிவது போல் கடல் மாதா, அலைக் கரங்களால், அந்தப் படகுத் தொட்டிலை அசைத்துக் கொண்டிருந்தாள்.
“மாயாண்டி தொலைந்தான்” என்ற களிப்போடு, அம்பலம், கரை நோக்கித் திரும்பினார். துரையும், பரிமளாவும் ரேக்ளாவில் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களிடம் தாண்டவன் ஓடினார்.
அம்பலத்தின் உள்ளத்திலே பழி வாங்கும் உணர்ச்சி குமுறி யெழுந்தது. “அகப்பட்டீர்களா!” என்று கத்திக்கொண்டே, கரை நோக்கி நடந்தார். துரையிடம் ஓடிவந்த தாண்டவன், “மாயாண்டியைக் கொன்று விட்டான்!” என்று கத்தினார். துரையும் பரிமளர்வும், “அய்யோ!” என அலறித் துடித்தனர்.
அம்பலம், அவர்களை நோக்கி வேகமாக நடந்தார். மூவரும், கரையில் நின்றபடி அம்பலம் வருவதைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
மூவருக்கும் பின்னால் நாலைந்து சேக்ளா வண்டிகள் வந்து நின்றன. அவைகளிலேயிருந்து சுமார் இருபது முரடர்கள் இறங்கினார்கள். அவர்கள் இம்மூவரையும் முற்றுகையிட்டது போல சுற்றிக் கொண்டார்கள். அம்பலம், ஆனந்தப் பரவசத்தோடு, “விடாதே! விடாதே!” என கத்திக் கொண்டே, கடல் நீரில் நடந்து வந்து கொண்டிருந்தார். “கடைசியாக அனைவருமே சிக்கி விட்டோம்” என்று கண் கலங்கியபடி கூறினார் தாண்டவன். திடீரென அனைவரின் கவனத்தையும் கவரும் விதத்திலே, கார் வரும் ஒலி கேட்டது. கார் வெகு வேகமாக வந்து கரையோரத்திலே நின்றது. அதிலேயிருந்து பத்துக்கு மேற்பட்ட போலீசாரும், அதிகாரிகளும் இறங்கி வந்தனர். ஆனந்தனும் அவர்களோடு வந்தான். ராமனும் இருந்தான். போலீசாரைக் கண்ட முரடர்கள் சிதறி ஓடினார்கள். ஆகாயத்தை நோக்கி வேட்டுச் சப்தம் கிளம்பியது. முரடர்கள் அனைவரும் சரணாகதி அடைந்தார்கள். கரை நோக்கி நடந்து வந்த அம்பலம் மீண்டும் கடல் நோக்கி நடக்க ஆரம்பித்தார். போலீசார் அவரைச் சூழ்ந்து வளைத்துப் பிடித்துவிட முயன்றார்கள்.
“வெள்ளியம்பலம்! வாரும்! வாரும்!” என்று ஆசை வார்த்தை கூறி அழைத்துப் பார்த்தார்கள். அம்பலம் கேட்கவில்லை. கடல் நோக்கி நடந்துகொண்டேயிருந்தார்.
“அவரை விட்டுடுங்க — எங்க எஜமானுக்கு நீந்தத் தெரியாது — எப்படியும் திரும்பிடுவாரு!” என்று கேலியாகக் கத்தினான் வேலைக்கார ராமன்.
அம்பலம் திரும்பாதது கண்ட போலீசார், அவரைக்கரைக்கு அழைத்து வர வேண்டுமென்ற நோக்கத்தோடு பின்தொடர்ந்தனர் வேகமாக! அம்பலமோ அவர்களை விடவேகமாகக் கடல் நோக்கி நடந்தார். போலீசாரிடம் சிக்குவதைக் காட்டிலும் கடலில் மறைந்து விடுவதை மேலாகக்கருதினார் போலும், அம்பலத்தின் முழு உடலையும் கடல்மறைத்துக் கொண்டது. அவரைத்தேடும் முயற்சியிலே போலீசார் ஈடுபட்டனர். உயிரற்ற மாயாண்டியை ஊஞ்சலாட்டிக் கொண்டிருக்கும் படகைக் கரைக்குக் கொண்டுவந்தனர். அமைதி தவழும் கிழவரின் முகத்திலே முகத்தைப்பொருத்திக் கொண்டு துரையும் பரிமளாவும் அழுதனர். கிழவரின் மடியிலேயிருந்து ஒரு காகிதச் சுருளை போலீஸ் அதிகாரி எடுத்தார். அதை அங்கேயே படித்தார்.
கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்