அத்தியாயம் 51 · 52 / 52

அத்தியாயம் 51

Chapter 51

மூல ஸ்கேன் 438 (chapter-51 portion)-447

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

51

மாயாண்டியின் எழுத்துக்கள் தான் அவைகள், “அன்புள்ள துரைக்கு” என்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது கடிதம்.

“அன்புள்ள துரைக்கு இதய வாழ்த்து. நான் ஈடுபட்டிருக்கும் காரியங்களால், நாமிருவரும் இனிமேல் சந்திக்கவே முடியாமற் போய்விடுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டு விட்டது எனக்கு. அதனால் தான் உன் கையிலோ அல்லது யாராவது நல்லவர் கையிலோ கிடைக்காதா என்ற ஆவலுடன் இந்தக் கடிதம் எழுதுகிறேன்.

இந்தக் கடிதத்தை நீ படிக்கும் நிலைமை ஏற்பட்டால் அப்போது நான் இறந்து போயிருப்பேன் என்று தான் பொருள். ஒருவேளை, நீ என் பிணத்தின் அருகாமையிலே நின்றுகொண்டு கூட இதைப் படிக்க நேரிடலாம். அனைத்தையும் வெறுத்து விட்ட துறவி போல என் பயணத்தை ஆரம்பித்தேன். நீயும் பரிமளாவும் குறுக்கே வந்தீர்கள். புதையல் ரகசியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிற பொறுப்போடு, உங்கள் இருவரையும் காப்பாற்றி வேண்டும் என்கிற பொறுப்பும் வந்து சேர்ந்தது எனக்கு. இதைப் பொறுப்பு என்று சொன்னால்கூட அவ்வளவாகப் பொருந்தாது. பாசம் என்று சொல்ல வேண்டும் மகனே, பாசம் என்று சொல்லவேண்டும். நீ வியப்படைவதையும், உன் கூரிய விழிகள் விரிவடைவதையும் என்னால் காண முடியவில்லை தம்பி! நான்தான் உன் தந்தை குமாரவடிவு.

சொந்த நாட்டில் பிழைக்க வழியில்லாமல் கடல் கடந்து வயிறு கழுவச் சென்ற குமாரவடிவு நானே தான். குமாரவடிவு, கோயிலில் நுழைந்து சிலைகளைப் பெயர்க்கும்போது பாம்பு கடித்து இறந்து விட்டான் என்று உன்னிடம் சொல்லியிருந்தேன். இல்லை, மகனே — இல்லை! குமாரவடிவு அப்போது சாகவில்லை. சிறையிலிருந்து வெளிவந்த குமாரவடிவு சிலைகளைப் பெயர்க்கும் தொழில் நடத்தி ஜீவனம் நடத்தி வந்தான்.

குமாரவடிவு என்ற பெயரோடு அல்ல; மாயரண்டி என்ற பெயரோடு! அப்படிப் பெயாக்கும் போதுதான் ஒரு நாள் மருங்கப்பள்ளம் கோயிலிலே என் கையில் புதையல் ரகசியம் சிக்கியது. பாம்பு கடித்தது என்று சொன்னேனே; அது உண்மையிலேயே உருவத்தில் பாம்பல்ல என்றாலும் — பண்பிலே பாம்பாகத்தான் வந்து சேர்ந்தது, புதையல் ரகசியம் என்னிடம் வந்த பிறகு என் வாழ்விலே திருப்பம் ஏற்பட்டது. பாம்பை மடியிலே கட்டிக்கொண்டிருப்பது போல அந்த ரகசியத்தைக் கட்டிக் கொண்டு ஊர் சுற்ற ஆரம்பித்தேன். மருத்துவனைப் போல, சாமியாரைப் போல மக்களிடையே நடமாடினேன். எப்படியோ என் பிழைப்பு நடைபெற்றது.

எத்தனையோ கோடி தங்க நாணயங்களுக்கு நான் சொந்தக்காரன். ஆனாலும், அவைகளைக் கண்ணால் பார்க்கவும் நான் விரும்பவில்லை. ஒருவிதமான தெவிட்டல் ஏற்பட்டு விட்டது. சிலைகளைப் பெயர்த்து அதன் கீழேயுள்ள நாணயங்களையும், கற்களையும் திருடி அதன் மூலம் வாழ்க்கையை நகர்த்தியிருக்கிறேன். ஆனால், எனக்காகக் கோடிக் கணக்கில் குவிந்து கிடக்கும் பொன்மணிகளை ஏறெடுத்தும் பார்த்தேனில்லை. அது ஏன் என்றுதான் உன்னிடம் முன்பே சொல்லியிருக்கிறேனே துரை! மறுபடியும் பழைய கதையை ஞாபகப்படுத்துவானேன்.

அப்படி ஞாபகப்படுத்தினால், மண்ணுக்கடியிலே புதைந்து கிடக்கும் தங்கப் பாளங்களும், வைரக் கற்களுமா ஞாபகத்திற்கு வருகின்றன? தங்கம் நிகர் தங்கமும், என் தாயும், என்னருமை வள்ளியம்மாளும் அல்லவா எடுக்க முடியாத புதையலாக மண்ணுக்குள் மங்கிக் கிடக்கிறார்கள், அதையெல்லாம் நினைத்து அழுவதற்கு நேரமில்லை தம்பி, உன்னைப் பார்த்தேனே; அதுவே போதும்; புதையல் கிடைத்தது போல!

உன்னையும், பரிமளாவையும் சந்திப்பதற்கு முன்பு, காதல் என்ற மூன்றெழுத்து வார்த்தையைப் பற்றி நான் போட்டிருந்த கணக்கே வேறு. நீ தான் என் டைரி முழுவதும் படித்து என்னைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்கிறாயே. மகனே! அந்த டைரிகளில் ஏதாவது மிச்சம் மீதி இருந்தால் அதன் கடைசிப் பக்கத்திலே எழுதி வை.

“காதல் என்பது ஒரு மயான பூமி என்று என்-தந்தை எண்ணியிருந்தார். ஆனால், அங்கே சில சமயங்களில் மலர்ச் செடிகளும் முளைப்பதுண்டு என்ற முடிவுக்கு அவர் வந்தார்”.

இதுபோல எழுதி வை மகனே! காதலைப் பற்றிய என் அபிப்பிராயம் முழுவதும் மாறி விட்டது என்று நீயோ, பரிமளாவோ கருதிவிட வேண்டாம். முட்களே நிறைந்த செடியில் ரோஜா இருப்பது போல ஒரு சில துரைகளும், ஒரு சில பரிமளாக்களும் இருக்கலாம். இதுதான் நான் இறுதியாகப் போட்ட புள்ளி. இந்தத் தொகை ஒருவேளை கூட்டவும் நேரிடலாம். அதற்காக சந்தோஷப்பட மறுக்கவா போகிறார்கள் என்னைப் போன்றவர்கள்!

வெள்ளியம்பலம் போன்ற காட்டானைகள் திரியும் நாட்டில் உன்னையும் பரிமளாவையும் போன்ற மான் குட்டிகள் நிம்மதியாக வாழ்வது கஷ்டந்தான். ஆனால் துரை, நீயும் உன் காதலியும் இத்தனை இடையூறுகளையும் தாங்கிக்கொண்டு காதல் சாம்ராஜ்யத்தைக் காப்பாற்ற கம்பீரமாக நின்றீர்களே; அதை நான் பாராட்டுகிறேன். அதே சமயத்தில் காதலுக்காக நெஞ்சிலே ஒதுக்கியிருக்கும் இடத்தில் ஒரு பாதியை மக்களுக்குப் பணி செய்வதற்காக ஒதுக்குவது நல்லது. நான், அந்தக் காரியத்தில் இறங்குவதற்கு இளமையிலேயே சக்தியற்றுப் போய்விட்டேன். இலங்கை என்னைக் கசக்கிப் பிழிந்து விட்டது. தேயிலைச் சீமைக்கு என் தேகத்தை தேய்த்துக் கொடுத்து விட்டேன். பிற்பகுதியும் சிறையிலே சிதைந்தது. இறுதிப் பகுதியிலே சிறிது முயன்றேன். அதற்குள் சுயநலம் குறுக்கிட்டு விட்டது. மகனையும், மருமகளையும் காப்பாற்ற வேண்டிய சுயநலம்! அதனால்தான உனனிடம் ஒப்புவிக்கிறேன் அந்த வேலையை!

எத்தனையோ தியாகச் செம்மல்கள், வீடு, வாசல், மாடு, மனைகளை விட்டு நாடு, நாடு என்று பாடிக் கிளம்புவார்கள். அவர்களின் அணிவகுப்பிலே நீயும் ஒருவனாகத் திகழ வேண்டும் துரை! பரிமளாவை விட்டுப்போக வேண்டாம். அவளையும் அழைத்துப்போ! நாட்டிலே செய்வதற்குக் காரியங்களா இல்லை! நூற்றுக்கணக் வெள்ளியம்பலங்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பாடங் கற்பிக்கவேண்டும்.

ஊரிலே பெரிய மனிதர்களாக நடந்துகொண்டு ஊதாரித்தனமாக வாழ்க்கை நடத்தும் அம்பலங்களை ஒழித்துக் கட்டுவதே உத்தமர்களின் வேலையாக இருக்க வேண்டும். அப்பப்பா; சாதாரண வசதிகள் படைத்த இந்த அம்பலமே இப்படிக் காட்டுராஜா தர்பார் நடத்தினால் பெருந்தனம் படைத்த சீமான்கள் எனப்படுவோர் எப்படி யெப்படி மக்களை ஆட்டிப் படைக்க மாட்டார்கள்!

அம்பலம் செய்திருக்கிற கொலைகள் ஒன்றா இரண்டா? போலீசாரின் கண்களிலே பொடி தூவி விட்டு, கொடி கட்டி வாழும் கொடியவனல்லவா இந்த அம்பலம், துரை! உன்னைக் காப்பாற்ற வேண்டும் என்ற சுயநல ஆசையிலே என்னையறியாமலே பொதுநலத் தொண்டு ஒன்றும் செய்திருப்பதாக நான் கருதுகிறேன். இந்தக் கடிதம் எழுதும் போது, அம்பலத்தின் முடிவு என்ன என்பது எனக்குத் தெரியாது. ஆனால் போலீசாரின் கையிலே அவன் சிக்கித் தீரவேண்டிய நிலைமைகளை உருவாக்கி வைத்திருக்கிறேன். புதையலை அபகரிக்க நாக்கைத் தட்டிக்கொண்டு வந்த ஐயப்பனின் கையை நான் வெட்டி எறிந்தேன் என்பது தான் உனக்குத் தெரியும்.

ஆனால், அம்பலத்தின் சூழ்ச்சியால் நீயும் நானும் விடு தலை அடைந்தோம். எனக்குப் பதிலாக துக்காராமைப் பிடித்துக் கொடுத்தான் அம்பலம், அவனுக்கு அப்போது நீயும் நானும் தேவைப்பட்டோம். அந்தத் தேவைக்குத் துக்காராம் பலியானான். அந்தோ பரிதாபம் — சிறைச் சாலையிலே வாடும் துக்காராமை எப்படியாவது விடுதலை செய்ய வழிபார்! இதோ இந்த கடிதமே நல்ல சாட்சி. ஐயப்பனின் கையை நான் தான் வெட்டினேன் என்கிறபோது துக்காராமைத் தண்டிக்க நியாயமில்லை அல்லவா? முன்பே அந்தக் குற்றத்தை நான் ஒப்புக்கொண்டிருப்பேன். அப்படி ஒப்புக்கொண்டு சிறை புகுந்திருப்பேனேயானால் நீயும் பரிமளாவும் என்ன கதி ஆகியிருப்பமீர்களோ, யார் கண்டது?

நான் வெளியில் இருந்ததால் தான் வெள்ளியம்பலத்தையே ஏமாற்றி, அவன் செலவிலேயே உனக்கும் பரிமளாவுக்கும் திருமணம் நடத்த முடிந்தது. தம்பீ, அதற்காக நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறேன் தெரியுமா? போலித் தகடுகளும், போலிப் பெட்டிகளும் தயார் செய்தேன். அவைகளின் மூலம் வெள்ளியமபலத்தை ஏமாற்றினேன்.

கடைசியாக ரத்தம் வேண்டும் என்றேன். அதன் மூலம் உங்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தேன். என் ஏற்பாடுகள் திடீர் திடீர் என்று மாறுகிற அளவுக்கு சம்பவங்கள் நிகழ்ந்தன என்றாலும், அந்தச் சம்பவங்களையெல்லாம் நமக்குச் சாதகமாகவே ஆக்கிக் கொண்டேன். அம்பலத்து வீட்டு வேலைக்கார ராமனை கைக்குள் போட்டுக் கொண்டேன். அவன் தான் சொன்னான்; மேனகாவை அம்பலத்தான் கொன்றான் என்று! அவன் மூலம் தான் அறிந்தேன்; மேனகா கொலை விஷயமாக ஒரு குடுகுடுப்பைக்காரன் கைது செய்யப்பட்டிருக்கிறான் என்பதையும்! குடுகுடுப்பைக்காரன் என்றதும் தலில் பயந்தேன் பரிமனாதான் அகப்பட்டுக் கொண்டாளோ என்று! பிறகு தெரிந்தது. ஷோக்சுந்தரி என்ற பெண் என்று!

துரை! முடியுமானால் அந்தஷோக்சுந்தரியை விடுதலை செய்து ராமனை மகிழ்ச்சிப்படுத்து! அதேபோல துக்காராமின் விடுதலையால் பரிமளா மீதுள்ள பழியும் நீங்கும். அந்த இருவரின் விடுதலையையும் அக்கரையோடு கவனி.

இன்னும் என்ன எழுத இருக்கிறது மகனே!

உங்கள் வாழ்க்கையிலே தாண்டவனின் குறுக்கீடு இருக்குமோ என்று சந்தேகப்படத் தேவையில்லை. தாண்டவன் நமக்கு மிகவும் நெளுங்கிய உறவினர். நான்தான் குமாரவடிவு என்ற உண்மையைச் சொல்லி, என் மகனுக்கு நான் பெண் கேட்டதும், அவர் அளவற்ற மகிழ்ச்சியில் ஆழ்ந்தார். அதன் பிறகுதான் அவரும் அம்பலத்தை எதிர்க்கத் துணிந்தார். வெறும் ஆட்டு ரத்தத்தை கத்தியில் பூசிக்கொண்டு அவர் ஆடிய ஆட்டமிருக்கிறதே, அதை நீ பார்த்திருக்க மாட்டாய். அவருக்கு என் நன்றியைச் சொல்லு!

ராமனை மறந்து விடாதே — அந்தக் குள்ளப் பையன் நல்ல சமயத்தில் எனக்கு உதவிகள் செய்தான்.

மேனகா கொலை சம்பந்தமாக வழக்கு நடைபெற்றால் அவன் நேரில் கண்ட சாட்சியாக விசாரிக்கப்படத் தகுதியுள்ளவன். இன்னொன்று சொல்ல மறந்துவிடப் போகிறேன். உனக்கு வாய்த்திருக்கிற நண்பர்கள் இருக்கிறார்களே; அவ்வளவு பேரும் மணிகளப்பா மணிகள்! தோழமைக் குன்றங்கள்! அடடா அந்த ஆனந்தன் பட்டிருக்கிற பாடு கொஞ்சமா? அம்பலத்தின் வீட்டிற்கு நெருப்பு வைத்தேன். நீங்கள் உள்ளேயிருக்கிறீர்கள், சோபன அறையில்! உங்களை வெளியேற்றும் நோக்கத்துடன் தான் வீட்டுக்குத் தீ மூட்டப் பட்டது. அந்தச் சமயத்தில் கதவுகள் உள்ளே தாள் போடப்பட்டன. அம்பலத்தின் ஆட்களால்! சிறிது தாமதித்தால் நீயும் பரிமளாவும் சாம்பலாகி விடுவீர்கள், அப்போது உன் தோழன் ஆனந்தன் வீட்டுக்குள்ளே குதித்திருக்கிறான் பார்; அடடா... அந்த நல்லவனுக்கு என் வாழ்த்துக்களை குவித்திடு.

கடிதத்தை நீட்டிக்கொண்டே போவேன் — இன்னும் எவ்வளவோ சொல்ல வேண்டி யிருக்கிறது உனக்கு! சாகாமல் நேரில் சந்தித்தால் நிறைய பேசலாமே என்ற நம்பிக்கை வேறு தலை நீட்டுகிறது. அப்படி சந்தித்தால் நான் உன் தந்தை என்பதைக் கூற மிகவும் வெட்கப்பட்டிருப்பேன், கஷ்டப்பட்டிருப்பேன்.

உன் கண் எதிரே நான் சாக நேரிட்டால் என் மடியிலுள்ள புதையல் ரகசியத்தை உன்னிடம் தந்திட முடியும். இல்லாவிட்டால் அதுவும் நானும் மறைந்து விட்டதாகத் தான் அர்த்தம்.

தம்பீ, நான் எழிதியிருப்பவைகளையெல்லாம் மறந்து விடாதே, நான் வருகிறேன். விடைபெற்றுப் போய்விட்ட பிறகு மீண்டும் விடைபெற்று என்ன பிரயோஜனம். இப்போதுதான் கருதுகிறேன்; மோட்சம், நரகம் என்றெல்லாம் முட்டாள்கள் கதறுகிறார்களே; அவை இருக்கக் கூடாதா என்று! அப்படி அவை இருந்தால், அங்கிருந்தபடியே என் “அந்தராத்மா” உன்னைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்குமல்லவா? பரவாயில்லை — சாவதற்குள் உன்னைப் பார்த்து, உனக்காக சில நன்மைகள் செய்வதற்கு இந்தப் பாவிப் பயன்பட்டேனே; அது போதும்!

அன்பு மகனே! என் அருமை மருமகளுக்கு என் வாழ்த்துக்களைச் சொல்லு! என் பிணம் உன் கண்ணிலே அகப்பட்டால், தங்கத்திற்குப் பக்கத்திலே புதைத்து விடு!”

அன்புள்ள தந்தை, குமாரவடிவு.

துரையும், பரிமளாவும் கிழவரின் சவத்தின் மீது விழுந்து புரண்டு அழுதனர்.

துரை, “அப்பா! அப்பா!” என்று கதறினான்.

கிழவரோ, தன வேலைகளையெல்லாம் முடித்துக் கொண்டு களைப்புற்றுத் தூங்குகிறவர் போலக் காணப்பட்டார்.

அம்பலத்தைத் தேடிய போலீசார் வெறுங் கையோடு திரும்பினர்.

மருங்கப்பள்ளம் மக்கள் அனைவரும், துரையையும் பரிமளாவையும் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு வரவேற்றனர். கிழவரின் கல்லறையும், தங்கத்தின் நினைவுச் சின்னமும் அருகருகே அமைக்கப் பட்டன. மாயாண்டியின் கடிதப்படி, சிறையில் இருக்கும் குடுகுடுப்பைக்காரன் ஷோக்சுந்தரிதானா என்று போலீசார் சோதனை செய்யவே, தப்பி ஓடிய துக்காராம் என்று தெரிகிறது. மேனகாவின் கொலை வழக்கில் துக்காராம் சிக்க மாட்டான். ஐயப்பன் கொலை வழக்கிலும் அவன் சம்பந்தமில்லை. சிறையிலிருந்து ஓடிய குற்றத்திற்காக மட்டும் ஐந்தாறு மாதம் தண்டனை கிடைக்கும் என்று சட்டம் தெரிந்தவர்கள் பேசிக்கொண்டார்கள். பரிமளா அதுகேட்டு சந்தோஷப் பெருமூச்சு விட்டாள்.

அந்த மகிழ்ச்சிச் செய்தியோடு, அவளும், துரையும் மனோரா நோக்கிப் பறந்தார்கள், காதல் கீதம் பாட!

மனோரா கடற்கரைப் பகுதிகளிலே அவர்கள் வானம் பாடிகள் போலத் திரிந்தார்கள். இன்ப கீதம் இசைத்துக் கொண்டிருந்த அவர்கள் முன்னே கடல் அலைகளால் மோ துண்டு ஒரு உருவம் ஆடிக்கொண்டிருந்தது. அருகே சென்று பார்த்தார்கள். வெள்ளியம்பலத்தின் மூச்சற்ற உடல்தான் அது!

துரை, அம்பலத்தின் பிணத்தை உற்றுப் பார்த்தான். பிணத்தின் கை இறுக மூடியிருந்தது. கஷ்டப்பட்டு கையைத் திறந்து பார்த்தான். கைக்குள்ளே புதைபல் ரகசியம் இருந்தது. துரை அதை ஆச்சரியத்தோடு பார்த்தான்.

பரிமளா, “ஆகர! புதையல்ரகசியமா?” என்று குதித்தாள். துரை, “ஆமாம்” என்று சொல்லிக் கொண்டே, அதை, கடலில் வீசி எறிந்தான்.

“அய்யோ! புதையலை வீசி விட்டீர்களே!” என்று திடுக்கிட்டாள் பரிமளா!

“போனால் போகிறது! பேசும் புதையல் நீ இருக்கும் போது பெரும் பகை வளர்க்கும் அந்தப் புதையல் எதற்காக?” என்று அவளை அணைத்தவாறு போலீஸ் ஸ்டேஷனுக்குப் புறப்பட்டான், வெள்ளியம்பலம் திரும்பி வந்த செய்தியைச் சொல்ல!

---

கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்