அத்தியாயம் 8 · 9 / 52
அத்தியாயம் 8
Chapter 8
மூல ஸ்கேன் 75 (chapter-8 portion)-83
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
8
பரிமளாவைத் தூக்கிக்கொண்டு போன அதே நேரத்தில்—நடுக்கடலிலே பயணம் நடத்தும் மாயாண்டிக் கிழவரின் படகிற்கும் புதிய ஆபத்து பிறந்தது. இருட்டிப்போய் சிறிது நேரத்திற்கெல்லாம் ஐயப்பனின் உத்திரவுப்படி தோணியை கரை நோக்கி செலுத்த ஆட்கள் விரைந்தனர். ஆனால் அன்றைய தினமும் காற்று அவர்கட்கு சாதகமாக வீசவில்லை. ஆட்கள் தங்கள் உடலை வளைத்து வியர்வை கொட்டக் கொட்ட உழைத்து படகு செலுத்தும் வேலையில் ஈடுபட்டனர். ஐயப்பன் மட்டும் தைரியமாக, “இன்னும் பத்துமைல் தூரம்தான்! ஊராத்துரை லைட் ஹவுஸ் தெரிஞ்சுட்டா அப்பறம் ஓடுற ஓட்டம்—வல்வெட்டித்துறையிலே போயி, டகார்னு இறங்கிடலாம்—உம்—வேகமா விடுங்கடா!” என்று கத்தினான்.
“காற்று சாதகமாக இல்லையே” என்றார் மாயாண்டி!
“சாதகம் இல்லேன்னா பாதகம் பண்ண வேண்டியது தான்” என்று ஐயப்பன் கிண்டல் செய்தான்.
“என்னப்பா அர்த்தமில்லாமல் பேசுகிறாய்?”
“அர்த்தமில்லாதவன் தான் இந்த ஐயப்பன்!”
“ஆமாம், ஆமாம்—அது உண்மைதான்!”
“எது உண்மை! ஏ கிழவா! என் சேதி தெரியுமில்லே உனக்கு?”
மாயாண்டிக் கிழவருக்கு சந்தேகமும் திகிலும் பிறந்து விட்டது. தன்னிடம் மரியாதையாகவும், பரிவோடும் நடந்து கொள்ளும் ஐயப்பன் திடீரென்று மாறியிருப்பதற்குக் காரணத்தை அவர் புரிந்து கொண்டார். தன் மடியிலே பத்திரமாக இருக்கும் அந்தத் தாள் உரைக்கும், சிறு முடிச்சுக்கும் ஐயப்பன் அடிபோட்டு விட்டான்—என்பதையும் அவர் தெரிந்து கொண்டார்.
அநாவசியமாக ஐயப்பனிடம் கொல்லர் வீட்டுப் பழைய கதையை ஏன் பேசினோம்; பேசியதோடு விடவில்லை; முழு விபரங்களும் இந்த முரடனிடம் ஏன் கூறினோம்; என்றெல்லாம் அவர் தனக்குத் தானே நொந்து கொண்டார். இலங்கை போய் சேரும் வரையில் எப்படியும் அவனிடமிருந்து தன் ரகசியத்தைக் காப்பாற்றிக் கொண்டால், அதன் பிறகு கவலையில்லை யென்று முதலில் நினைத்திருந்தார். இப்போது ஐயப்பனின் நடவடிக்கையையும், பேச்சுத் தோரணைகளையும் பார்த்தால் இலங்கை போன பிறகும் அவன் தன்னை விடமாட்டான் போலிருக்கிறது என்று அஞ்சினார்.
காற்றில் தடுமாறும் தோணியைக் கூட கஷ்டப்பட்டு, செல்ல வேண்டிய திசைக்குத் திருப்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் மாயாண்டிக் கிழவர் தன் மன அலைகளை அடக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார். அவரது முக மாற்றங்களை நிலவு வெளிச்சத்தில் கொஞ்சம், கொஞ்சம் பார்க்க முடிந்த ஐயப்பன், தன் உதட்டை கடித்துக் கொண்டு ஏதோ ஒரு பெரிய காரியம் செய்வதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டான். ஆட்கள் எல்லாம் மிகப் பரப்பரப்புடன் தங்கள் கடமையில் ஈடுபட்டிருந்தனர். ஐயப்பன் மட்டும் தோணியின் நடுவேயுள்ள பாய்மரத்தின் மீது சாய்ந்து நின்று கொண்டு, மாயாண்டிக் கிழவரையே பார்த்துக் கொண்டிருந்தான். தன்னிடமுள்ள ஒரு பொருளைப் பறிக்க எதிரே ஒருவன் நிற்கிறான் என்ற எண்ணம் வந்துவிட்ட போது நம்மையறியாமலே நம் கை அந்தப் பொருளைத் தொட்டுப் பார்த்து அதை ஜாக்கிரதைப் படுத்துவது இயற்கைதான். அதேபோல மாயாண்டிக் கிழவரும் தன் மடியை தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டார்.
“ஓய் மாயாண்டி!” என்று பயங்கரமாக கூச்சலிட்டான் ஐயப்பன்.
கிழவர், அமைதியாக அவனிடம் பேசினார். “ஐயப்பா! ஏனிப்படி திடீரென மாறி நிற்கிறாய்? நாமெல்லாம் எப்படி பழகியிருக்கிறோம்—இப்போதென்ன உனக்கு வந்தது?”
“பழகியவனைத்தானய்யா நீ ஏமாத்துறீர்? போனாப் போகுதுன்னு உம்மை தோணியிலே ஏத்தி வந்தா, நீரு நமக்கிட்டேயே உம்ம ஏமாத்து வேலையை காட்டுறீயே!”
“என்னப்பா ஏமாற்றினேன்?”
“மடியிலேயிருக்கிறது என்னான்னு சொன்னா, உன் தலையா வெடிச்சு போய்டும்! அதைச் சொன்னா என்ன?”
“அது உனக்குத் தேவையில்லாத சங்கதி; அதனால் சொல்லவில்லை!”
“சீ! பொய்க்குளி கிழவா! புடிடா இவனை!” என்று கிழவர் மீது பாய்ந்தான் ஐயப்பன். கிழவருக்குப் பின்னே இருந்த இன்னொரு ஆளும் ஐயப்பன் சொற்படி கிழவர் மீது பாய்ந்து, அவர் கைகளைப் பின் புறமாகக் கட்டிக் கொண்டான். கிழவர் திமிறினார், நடுக் கடலிலே அந்த தள்ளாத கிழவர் அத்தனை பேரை எப்படி எதிர்க்க முடியும்! இருந்தாலும் ஆவேசமும், முரட்டுத் தைரியமும் தலையெடுத்த காரணத்தால் கிழவர் தன் காலின் பலங்கொண்ட மட்டும் ஐயப்பனை உதைத்தார். அவன் கீழே விழுந்து விடாமல் சமாளித்துக்கொண்டு நின்றான். பினனால் கைகளைப் பிடித்துக் கட்டிக் கொண்டவனிடமிருந்து விடுபட்டு தோணியின் வேறு பக்கம் பாய்ந்தார். “ஏய் விடாதே!” என்று ஐயப்பன் பயங்கரமாகக் கத்தினான். எதிர்த்த மூலையில் வேலை செய்துகொண்டிருந்த ஆட்களும் கிழவரை மடக்கிக் கொண்டனர். ஆட்கள் அங்குமிங்கும் ஓடியதாலும் கிழவர் ஆவேசமாகத் துள்ளிக் கொண்டிருந்ததாலும் படகு வேகமாக ஆட ஆரம்பித்தது. கவிழ்ந்து விடுமோ என்று நினைக்கிற அளவுக்கு அந்தத் தோணி கடலிலே தத்தளித்தது. கிழவரோ இனி எதுவும் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்து விட்டார். கடலில் விழுந்தால் மட்டுமே தன் எண்ணம் நிறைவேறும்; இல்லையேல் பல நாளாய்ப் பாதுகாத்து வரும் அந்தப் பொருள்கள் இந்தப் பாதகர் வசம் சிக்கிவிடும் என்று தீர்மானம் செய்துகொண்டார். ஆகவே; எதிரே ஆட்கள் மடக்கியதும் ஒரே பாய்ச்சலாக கடல் நோக்கிப் பாய்ந்தார். ஆனால் அவர் கடலில் விழுந்து விட ஐயப்பன் விடவில்லை. தடுத்துப் பிடித்துக்கொண்டான்.
எல்லோரும் சூழ்ந்துவிடவே கிழவர், வசமாக சிக்கிக் கொண்டு விழித்தார். ஐயப்பன் அவரது மடியை அவிழ்த்து தாள் உரையை எடுத்துக்கொண்டு, வேட்டியில் முடிந்திருந்த முடிச்சையும் அவிழ்த்துப் பார்த்தான். அதில் ஒரு சிறிய கல் இருந்தது, அதையும் எடுத்துக் கொண்டான். தாள் உரையிலே இருப்பது என்ன என்று பார்ப்பதற்காக பக்கத்திலிருந்தவனை தீக்குச்சியை கொளுத்தச் சொன்னான். தீக்குச்சியின் வெளிச்சத்திலே, மாயாண்டிக் கிழவர் கண்ணீர் விடுவது நன்றாகத் தெரிந்தது! கொளுத்திய குச்சி முழுவதையும் அவர் முகத்தைப் பார்த்து ரசிப்பதற்கே செலவிட்டான் ஐயப்பன்.
“ஒரு தாள் உரை—ஒரு கல்லு! இதை இழப்பதற்கு இந்தக் கிழவன் இப்படி அழுவானேன்?” என்ற கேள்வி ஐயப்பனை அதிக குழப்பத்திற்கு ஆளாக்கியது—மீண்டும் ஒரு குச்சியைக் கிழிக்கச் சொல்லி, அந்த ஒளியில் தாள் உரையைப் பிரித்துப் பார்த்தான்—அதில் குறுக்கும் நெடுக்குமாக கோடுகள் போட்ட ஒரு செப்பேடு சிறிய அளவில் இருந்தது—கிணறு போல ஒரு வட்டம்—மரம் போல ஒரு குறிப்பு—இன்னும் ஏதோ உருவங்கள்—அந்த செப்பேட்டில் எழுதப்பட்டிருந்தன. ஐயப்பனுக்கு கிழவர் சொன்ன கதையில் காணாமற்போன செப்பேடும், சிறிய கல்லும் ஞாபகத்திற்கு வந்தன. செப்பேட்டில், காணப்படும் இடத்தில் அந்தசிறு கல்லைக் கொண்டுபோய் வைத்தால், அந்தக் கல், புதையல் இருக்குமிடத்தைக் காட்டிவிடும் என்று கிழவர் சொன்ன கதையின் முடிவுரை ஐயப்பனை இப்போது மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அந்த மகிழ்ச்சி மின்னிய அந்த இமைப் போதில் ஐயப்பன் கண்ட கனவு எவ்வளவு மகத்தானது! செப்பேட்டுக் குறிப்பின்படி கல்லைக் கொண்டுபோய் தரையில் வைக்கிறான். அந்தக் கல் காந்தம் போல் இழுக்கப்பட்டு ஓடுகிறது.
அது நிற்கிற இடத்தில் தோண்டிப் பார்க்கிறான். இரும்பைத் தங்கமாக்கும் குளிசக் கல்லும், குடங் குடமாக தங்கத் துகள்களும் கிடைக்கின்றன—பிறகு? வைர மிழைத்த கட்டிலிலே ஐயப்பன் வைப்பாட்டியார் புடை சூழ சயனித்திருக்கிறான். ‘ஐயப்பா’ என்ற பெயரால் பல கப்பல்கள் பிரயாணிகளை ஏற்றிக்கொண்டும், ஏற்றுமதி இறக்குமதிப் பொருள்களை ஏற்றிக்கொண்டும் உலகெலாம் வியாபித்திருக்கும் சமுத்திரத்திலே பயணம் நடத்துகின்றன.
இப்படி ஆனந்தமான கனவு ஒருக்கணம் தோன்றி மறைந்தது ஐயப்பனுக்கு! அந்த செப்பேட்டையும், சிறிய கல்லையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது தோணியிலேயிருந்த ஆட்களில் ஒருவன் “அய்யோ அய்யோ ஆபத்து!” என்று கத்தினான். அனைவரும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள். ‘பளீச்’ என்று ஒரு ஒளிக் கதிர் அந்த தோணியிலே பட்டது! ஐயப்பன், “அட கடவுளே!” என்று அலறி விட்டான். அந்த வெளிச்சம் ஐயப்பன் கண்ணிலே பட்ட காரணத்தால் சில வினாடிகள் அவனால் சரியாக எதையும் பார்க்க முடியவில்லை.
“போலீஸ்தான்! போலீஸ்தான்!!” என்று கத்தினான் ஒருவன்.
“போச்சு! போச்சு!!” என்று அலறினான் இன்னொருவன்.
“தோணியைத் திருப்பி காற்றுவாக்கிலே வேகமா விடுங்கடா, தடிப்பசங்களா!” என்று விகாரக் குரலில் கூச்சலிட்டான் ஐயப்பன்.
“கிட்ட வந்துவிட்டார்கள்” என்றான் ஒரு தொடை நடுங்கி.
“சீ! முட்டக்கூட வருவார்கள்—முழு முட்டாளே! தள்ளுங்கடா சீக்கிரம்—உம், பாயை மாத்தி கட்டுடா; பரதேசிப் பயலே! சோத்து நாய்களுக்கு சுறு சுறுப்பே கிடையாது!” என்று குலைத்தான் ஐயப்பன்.
தோணி, காற்று வாக்கிலே திருப்பப்பட்டு வேகமாக ஓடியது—வெங்காய மூட்டைகள் எல்லாம் ஒவ்வொன்றாக கடலிலே வீசி யெறியப்பட்டன. ஆனாலும் முழுவதும் கடலுக்குள் போய்ச் சேர முடியவில்லை. ஒவ்வொரு மூட்டையையும் நிதானமாக எடுத்து கடலுக்குள்ளே வீசுவதென்றால் சாதாரணமாக இருக்கிறதா? ஐயப்பனின் தேகம் பதறியது. மாயாண்டிக் கிழவருக்கு உலகமே சுற்றுவது போல் தெரிந்தது. அவர் எதுவும் பேசவில்லை. வெங்காய மூட்டைகள் கடலுக்குள்ளே போய் யாருக்கும் பயனில்லாது போவது போலவே தன்னுடைய ரகசியப் பொருள்களும் யாருக்கும் பயனில்லாமல் போகப் போகிறது என்று எண்ணிக் கண்ணீர் வடித்தார் அவர். ஏறத்தாழ படகு காலி செய்யப்பட்டு விட்டது. இனிமேல், “மீன் பிடிக்க வந்தோம்” என்று கூறி தப்பித்துக்கொள்ள ஒரு சாக்கு இருக்கிறது என நினைத்து ஆறுதலாக ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டான். எவ்வளவு தான் ஐயப்பனின் படகு வேகமாகப் போனாலும் பின்னே துரத்தும் போலீஸ்காரர் படகிடமிருந்து தப்பிவிட முடியவில்லை. “பட், பட்” என்று துப்பாக்கி ஒலியும் கேட்க ஆரம்பித்தது! ஐயப்பன் ஆட்கள் நடுங்கிப் போய் அசைவற்று நின்று விட்டனர். படகு மட்டும் காற்று வாக்கிலே—அதாவது மீண்டும் “மனோரா” இருக்கும் திக்கு நோக்கி போய்க் கொண்டிருந்தது. ஆட்களின் துரிதமில்லாமல் படகு எவ்வளவு நேரம் காற்றின் உதவியால் மட்டும் செல்ல முடியும்! போலீஸ்காரர்கள் வந்த தோணி மிகவும் அருகே வந்துவிட்டது. ஆட்கள் எல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து ஐயப்பன், தன் பயத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் “பயப்படாதிங்க, போலீஸ்காரனுகிட்ட உளராதிங்க—எல்லாரும் ஒண்ணு போல, மீன் பிடிக்க வந்ததா சொல்லுங்க!” என்று கூறினான்.
அப்போது மாயாண்டிக் கிழவர், ‘ஐயப்பா! ஜாக்கிரதை, கள்ளத்தோணி வியாபாரம் செய்யத்தான் வந்தோம் என்று நான் சொல்லப் போகிறேன்’ என்று கர்ச்சித்தார்.
“என்னடா கிழவா?”
“ஆமாம்—மரியாதையாக அந்த செப்பேட்டையும், கல்லையும் கொடுத்துவிடு—இல்லாவிட்டால் எல்லோரையும் நானே காட்டிக் கொடுத்துவிடுவேன்” என்று உறுமினார் மாயாண்டி.
“என்ன சொன்னாய்—காட்டிக் கொடுப்பியா? கிழ நாயே!—உன்னை உயிரோட கடல்லே மிதக்க விடுறேன் பாரு!—” என்று சப்தமிட்டுக் கொண்டே, ஐயப்பன் கிழவனைத் தூக்கி கடலில் வீசப் போனான்—அந்த நேரத்தில் போலீஸ்காரர்கள் அடித்த வெளிச்சம் ஐயப்பனின் கண்ணில் மின்னல் போலப்பட்டு, கண்களைத் திறக்க முடியாமல் செய்துவிட்டது. அதே சமயத்தில் பல குண்டுகள் பட படவென வெடித்தன.
அதிர்ச்சி அடைந்த ஐயப்பன் தோணிக்குள்ளேயே கிழவனைப் போட்டுவிட்டு, தன்னிடமிருந்த செப்பேட்டையும், கல்லையும் கிழவனிடமே கொடுத்து “கிழவா! கிழவா! எங்களைக் காட்டிக் கொடுத்துவிடாதே!” என்று கெஞ்சினான்.
மாயாண்டி சிறு கல்லையும் செப்பேட்டையும், உள் மடியிலே வைத்து பத்திரப்படுத்திக் கொண்டு, தோணியிலிருந்தபடியே திடீரெனக் கடலில் குதித்துவிட்டார். போலீஸ்காரர் சோதனைக்கு ஆளாகி அந்தக் கல்லும் செப்பேடும் பறி போவதைவிட தானும் அந்தப் பொருள்களும் கடலிலே மறைந்து அழிந்து விடலாம் என்ற முடிவிலே அவர் விழுந்து விட்டார். அவர் கடலிலே விழுந்ததற்கும், போலீஸ்காரர்கள் ஐயப்பன் படகை ஆக்ரமிப்பதற்கும் சரியாக இருந்தது.
போலீஸ் அதிகாரிகளில் கம்பீரமான ஒரு உத்தியோகஸ்தர், அழகான இளந்தாடி உடையவர் - மாயாண்டிக் கிழவர் கடலிலே குதித்ததைக் கண்டு, அவரைத் தொடர்ந்து தானும் குதித்துவிட்டார். கொந்தளித்துக் குமுறும் அலைகளினுடனே அந்த இளந்தாடி உத்தியோகஸ்தர் மிகவும் சிரமப்பட்டு நீந்தினார். சிறிது நேரம் அவர்கள் இருவரும் குதித்த இடத்திலே அமைதி நிலவியது. இனி இருவருமே திரும்பி வர மாட்டார்கள் என்ற முடிவு கட்டிக் கொள்ளவேண்டிய நிலை பிறந்தது. ஐயப்பன் உட்பட அனைவருக்கும் போலீஸ்காரர்கள் கைகளிலே விலங்கு பூட்டிவிட்டார்கள். அது வரையிலே கடலில் விழுந்த இருவரையும் காணவில்லை. போலீஸ் படகிலிருந்து பெரிய டார்ச் லைட் கடல் நோக்கி அடிக்கப் பட்டது. அந்த வட்ட வடிவ வெளிச்சத்திலே, ஒரு கொத்து தாடி மட்டும் மிதந்தது. அதை ஐயப்பன் கோஷ்டியார் யாரும் பார்க்கவில்லை. போலீசார் மட்டுமே பார்த்தார்கள். உடனே வெளிச்சத்தை வேறுபக்கம் திருப்பினார்கள். கிழவரின் உடலைத் தூக்கிக் கொண்டு, போலீஸ் உத்தியோகஸ்தர் படகிடம் வந்து கொண்டிருந்தார். எல்லா போலீசாரும் உதட்டைப் பிதுக்கினார்கள். கிழவர் தீர்ந்துவிட்டார் என்று அவர்களுடைய கண்கள் செய்தி தெரிவித்தன. போலீஸ் உத்தியோகஸ்தர் கிழவரின் உடலை படகிலே வைத்தார். தன்னுடைய இளந்தாடி கடலிலே போய்விட்டதை அந்த உத்தியோகஸ்தர் உணர்ந்தார். கிழவர் கண் விழிக்கவில்லை. அவர் மட்டும் கண் விழித்துப் பார்த்திருந்தால், அந்தப் போலீஸ் உத்தியோகஸ்தர், முதல் நாள் இரவு தான் சந்தித்த துரைதான் என்பதைத் தெரிந்து கொண்டிருப்பார்.
---
கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்