அத்தியாயம் 7 · 8 / 52
அத்தியாயம் 7
Chapter 7
மூல ஸ்கேன் 69-75 (chapter-7 portion)
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
7
கள்ளத் தோணிகள் இலங்கைக் கரையை அடைய வேண்டுமென்றால் அதற்கு நல்ல நேரம் இரவு தான். மனோராவிலிருந்து இலங்கைக் கரையோரம் ஏறத்தாழ நாற்பது மைல்கள் இருக்கலாம். காற்று சாதகமாக வீசினால் இரண்டு மணி நேரத்தில் கரை போய்ச் சேர்ந்துவிட முடியும். இல்லையேல் காற்றை அனுசரித்து தாமதமாகத்தான் போய்ச் சேரமுடியும். மாயாண்டிக் கிழவர் பிரயாணம் செய்த கள்ளத் தோணிக்கு காற்றின் உதவி கிடைக்கவில்லை. பொழுது விடிவதற்குள் எப்படியும் கரை போய்ச் சேர்ந்துவிடவேண்டும் என்று ஐயப்பன் மிகவும் கஷ்டப்பட்டான். படகிலுள்ள ஆட்கள் மீதெல்லாம் பாய்ந்து விழுந்தான். இயற்கையான பயங்கரக் குரலில் கத்தினான்.
எவ்வளவுதான் அவன் அலட்டிக்கொண்டும் கூட தோணி வேகமாகச் செல்ல முடியவில்லை. கிழக்கு நோக்கிச் செல்ல வேண்டிய தோணி காற்றை எதிர்த்து கடலைக் கிழித்து வேகமாகப் போவதென்றால் சாமான்யமா?
இருட்டோடு இலங்கைக் கரையை அடைய முடியாதென்று ஐயப்பன் முடிவு கட்டிவிட்டான். உடனே ஆட்களிடம் அவசர உத்திரவு போட்டான்.
“டேய் பசங்களா! இனிமே உங்க ஜம்பம், சாயாது! மரியாதையா இங்கேயே தோணியை நிறுத்திப் போடுங்க—இருட்டினவுடனே புறப்படலாம்—”
என்று கத்தினான். ஐயப்பனின் சொற்படியே தோணி நிறுத்தப்பட்டது.
“இங்கிருந்து எத்தனை மைலப்பா இருக்கும்?” என்று மாயாண்டிக் கிழவர் கேட்டார்.
“பத்து மைல் இருக்கும்—ஏன்? நீஞ்சிப் போகலாமென்று பார்க்கிறீரா?” என்று சிரித்தான் ஐயப்பன்.
“நீந்திப்போக என் உடலிலே வலுவேது? நீ வேண்டுமென்றால் நீந்தியும் போவாய்—தாண்டியும் போவாய்? என்னால் முடியுமா?”
“குறும்புக்காரக் கிழவா! இந்தா—இதைச் சாப்பிடும்—” என்று ஒரு மூட்டையைப் பிரித்தான் ஐயப்பன்.
அதில் கட்டுச் சோறும், வறுத்த கருவாடும் இருந்தது.
“அருமையான கருவாடு! பார்த்தீரா ஜம்முன்னு வாசிக்குது! வாசனையை புடிச்சிக்கிட்டே இந்த சோத்தை கொஞ்சம் வயத்திலே தள்ளும்—உம்!” என்று கிழவரிடம் நீட்டினான்.
பசியோடிருந்த கிழவரும், சாப்பிடத் துவங்கினார். தோணியிலிருந்த ஆட்களும் தங்கள் வயிற்றை நிரப்பும் கடமையில் துரிதமாக ஈடுபட்டார்கள். தோணி நடுக் கடலில் நிறுத்தப்பட்டு, கடல் அலைகளின் மோதுதலால் ஊஞ்சல் போல ஆடிக் கொண்டிருந்தது. ஐயப்பன் வயிறு புடைக்க சாப்பிட்டுவிட்டு ஒரு பெரிய ஏப்பம் விட்டான். அந்த ஏப்பம் வெளிப்படும்போதுகூட அவனது கூரிய பார்வை மாயாண்டிக் கிழவரின் மடியிலேயே இருந்தது. கொல்லர் வீட்டுப் பெண் கடலிலே கவிழ்ந்த கதையைச் சொல்லும்போது, மாயாண்டிக் கிழவர் அவரையுமறியாமல் தன் மடியைத் தடவிப் பார்த்துக்கொண்டார்.
அதை கவனித்துவிட்ட ஐயப்பன், எப்படியும் கிழவரின் மடியிலுள்ளது என்ன என்பதை தெரிந்து கொள்ளவேண்டுமென்று துடித்தான். ஏதோ ஒரு ஆவல் அவனைத் தூண்டியபடி யிருந்தது. அந்தப் பொருளின் மீது அவனுக்கு சந்தேகம் ஏற்பட்டுவிட்ட காரணத்தால் “என்னய்யா மடியிலே?” என்று திடீரெனக் கேட்பதற்கு அவன் மிகவும் தயங்கினான். ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டு, தந்திரமாகப் பேச்சுக் கொடுத்தான். அப்போதும் அவனையறியாமல் அவன் முகத்தில் அவனைக் காட்டிக் கொடுக்கும் அசடு வழிந்தது.
“மாயாண்டி—வெத்திலை பாக்கு கொடுமய்யா!”
“என்னிடம் ஏது, வெற்றிலை பாக்கு!”
“மடியிலே வைத்திருக்கிறீரே?”
“அது வெற்றிலை பாக்கு அல்ல!”
“பிறகென்னவாம்? எங்கே பார்ப்போம்!”
என்று மடியைத் தொடப் போனான் ஐயப்பன், அதற்குள் கிழவர் சமாளித்துக்கொண்டு “ஐயப்பா! அதெல்லாம்—கை நீட்டுகிற வேலை வைத்துக் கொள்ளாதே—உனக்கு வேண்டியது வெற்றிலை பாக்குத்தானே—அது என்னிடமில்லை—அதோடு விட்டு விடு!”
“ஏன் உம்மிடம் கை நீட்டக் கூடாதா?”
“ஐயப்பா—உன்னோடு நான் சமமாகப் பழகுவதை நீ தப்பாக எடுத்துக்கொண்டால் எனக்கு கோபம் வரும், அவ்வளவுதான் சொல்வேன்.”
“அட பெரிய மனுஷா? என்னோட சமமாகப் பழகினதாலே என்னய்யா வந்துட்டுது உமக்கு! கை நீட்டித் தொடக்கூடாதாமே இவரை! செத்து சமுத்திரத்திலே விழுந்தீர்னா அப்ப யாரய்யா—உம்மைத் தொட்டுத் தூக்குவாங்க? உறவு முறை ஜாதி சொந்தம், பிள்ளை குட்டி ஏராளமில்ல இவருக்கு!”
“பிள்ளை குட்டி—உறவு முறை இல்லாவிட்டால் என்ன? சாகும்போது அழுவதற்காக ஜாதி, சொந்தம்; பிள்ளைக்குட்டிகள் எல்லாம் வேண்டுமா என்ன? உலகந் தோன்றிய நாளாய், மனிதர்கள் ஒருவர்பின் ஒருவராக அழுதுகொண்டேதான் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்னுடைய சாவில் இந்த சம்பிரதாயமும் இல்லாமல் ஒழியட்டுமே.”
“ஓய்! வேதாந்தி—பேச்சை ஏன் நீட்டுகிறீர்? மடியிலே என்னய்யா கனம்? சொல்லும் என்றால்........”
“சொல்லத் தேவையுமில்லை—நீ கேட்க வேண்டிய அவசியமுமில்லை—”
“வெட்டு ஒண்ணு—துண்டு ரெண்டா பேசுகிறீரே!”
“அதுபோல அவசியம் ஏற்படுகிறது! பேசுகிறேன்!”
ஐயப்பன், அதற்கு மேலும் கிழவரிடம் கிளறிக் கேட்க விரும்ப வில்லை. ஆனால் ஏதோ ஒரு முக்கியமான பொருள் மட்டும், அவர் மடியில் இருக்கிறது என்பதை அவன் புரிந்து கொண்டான். மாயாண்டி தன் மீது சந்தேகப்பட்டுவிடக் கூடாதே என்பதற்காக பேச்சையும் மாற்றினான்.
“உம்—ராத்திரி பத்து மணி வரையிலே இங்கேயே கிடக்க வேண்டியது தான்!”
“அய்யோ—அவ்வளவு நேரமா?” என்றார் கிழவர்.
“ஆமாம் நடு ஜாமத்திலே கரைக்குப் போனாத்தானே; யார் கண்ணிலும் படாம இறங்க முடியும்—” என்று சொல்லிக்கொண்டே வெங்காய மூட்டையின் மீது சாய்ந்துகொண்டான் ஐயப்பன். மாயாண்டிக் கிழவரும் சிந்தனையில் ஆழ்ந்தார். கதிரவனின் வெம்மை அவரைக் கஷ்டப்படுத்திய போதிலும், அவர் அதைப் பொருட்படுத்தாதது போல காட்டிக்கொண்டார். தோணியிலுள்ள மற்ற ஆட்களும் மூட்டைகளில் சாய்ந்து கொண்டார்கள்—எல்லோரும் களைப்பாறத் துவங்கியதைக் கண்ட ஐயப்பன் ஆத்திரத்தோடு,
“டே டே! எல்லாரும் சுருண்டு போய்ட்டா என்னடா ஆகிறது! சுற்றியும் முத்தியும் பாக்கிறத்துக்கு ஒருத்தனாவது எழுந்திரிச்சு உட்காருங்கடா!” என்று கத்தினான்.
“நான் பார்த்துக் கொள்கிறேன்—நான் படுக்கமாட்டேன்—பயப்படாதே ஐயப்பா!” என்று கிழவர் கூறினார்.
ஐயப்பன் மீண்டும் மூட்டையில் சாய்ந்து கொண்டான். அவனுடைய சிந்தனை யெல்லாம் மாயாண்டிக் கிழவரின் மடியிலேயுள்ள பொருளைப் பற்றியே சுழன்று கொண்டிருந்தது.
மாயாண்டிக் கிழவரின் எண்ணமோ, முதல் நாள் இரவு தான் சந்தித்த அந்தக் காதலர்களின் மீது வட்டமிட்டது.
குறிக்கோளற்ற தனது பயணத்தின் குறுக்கே சந்திக்க நேரிட்ட அந்தக் காதல் புறாக்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டதை நினைத்து நினைத்து கிழவர் பெருமூச்சு விட்டுக் கொண்டார். அன்றைய பகல் பொழுது முழுதும்—நடுக் கடலிலே, சிந்தனையிலும் பெருமூச்சிலுமாகக் கழிந்தது அவருக்கு!
இரவு வந்தது—மருங்கப்பள்ளம் கிராமம் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தது. அந்த அமைதி நிறைந்த இரவில் தன் கண்கள் மட்டுமே மூடாமல் கிடக்கின்றன என்று பரிமளா நினைத்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். அவள் விஷயமாக அன்றிரவு, பல கண்கள் மருங்கப்பள்ளத்தில் விழித்திருந்தன என்பது அவளுக்கு அப்போது தெரியாது. அவள் வீட்டிலேயே இரண்டு கண்கள் அவளையறியாமல் பயங்கரமாக மின்னிக் கொண்டிருந்தன. பரிமளா, தன்னுடைய எதிர்காலம் எப்படி எப்படி சிக்கல் நிறைந்ததாக மாறுமோ என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள். அவளுடைய எதிர் காலத்தைப் பற்றி ஒரு நல்ல முடிவு செய்து விட்டதாக உறுமிக் கொண்டிருந்தார் தாண்டவன். பரிமளாவின் தாய் அஞ்சலை, நன்றாகத்தூங்கிக் கொண்டிருந்தாள்.
தாண்டவனுக்கு நிச்சயமாகப் புரிந்து விட்டது, தன் மகள் கெட்டு விட்டாள் என்று! யாரோ ஒரு பயலுடன் தன் குமாரி, சகவாசம் வைத்துக் கொண்டு, குடும்பத்து மானத்தைப் போக்கி விட்டாள்; இதை வளர விடாமல் தடுக்க, அவளைக் கொன்றுவிடுவது தான் நல்லது என்று தீர்மானித்தார் தாண்டவன். பக்கத்திலே கிடக்கிறது பளபளப்பான கத்தி! அதைக் கையிலே எடுத்துக் கொண்டார். பளிங்குச் சிலை போன்ற பரிமளாவை கண்ட துண்டமாக்கிவிட எழுந்தார். தந்தை—மகள்—என்ற அந்த ரத்தபாசம், எங்கு தான் போய் மறைந்து கொண்டதோ தெரியவில்லை. ரத்த பாசத்தை விட சிறந்த பாசமில்லை என்பர்—அது தாண்டவன் விஷயத்தில் பொய்யாகவே போய்விட்டதா? ஆம்—அப்படித்தான்! அதைத்தான் அந்தக் கத்தியின் பளபளப்பு சொல்லிக் காட்டியது.
பரிமளா படுத்திருக்கும் அறைக்கு அருகே தாண்டவன் கத்தியுடன் வந்துவிட்டார்—ஒரு வினாடி; பரிமளாவின் அழகான உடல் துண்டாடப்பட்டுவிடும்!
தாண்டவனின் உடல் வியர்வைக் குளமாகிவிட்டது. கத்தியை சரியாகக் கையிலே பிடித்துக்கொண்டார். பரிமளா படுத்திருக்கும் அறைக்குள்ளே காலடி எடுத்து வைத்தார். உள்ளே நுழைய வேண்டும்—ஒரே வெட்டு—கொலை—மனம் நிம்மதியாகிவிடும், இது தான் தாண்டவனின் முடிவு!—ஓங்கிய கத்தியுடன் உள்ளே நுழைந்தார் தாண்டவன்—ஆனால் அவர் அங்கே என்ன கண்டார்?
பரிமளாவை யாரோ சிலர் கட்டித் தூக்கிக்கொண்டிருந்தார்கள். தாண்டவன் உள்ளே நுழைந்ததைப் பார்த்த அவர்கள், அவர் மீது ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து, அவர் வாயையும், கால் கைகளையும் கட்டிப் போட்டு விட்டார்கள்—பரிமளாவுக்கும் பேச முடியாதபடி வாயிலே கட்டு! ஒரு முரட்டுக் கிழவன், பரிமளாவை தன் தோளிலே தூக்கிக் கொண்டு ஓடினான்—இந்த சந்தடியில் விழித்துக் கொண்ட அஞ்சலை அலறி அடித்து எழுந்து வருவதற்குள், பரிமளாவுடன் முரடர்கள் ஓடிவிட்டார்கள்—அஞ்சலை, அவசர அவசரமாக, கணவனை அவிழ்த்து விட்டாள். தாண்டவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
“என்னாங்க இது! எங்கே பரிமளம்?”
தாண்டவன் பதில் பேசவில்லை.
“மறுபடியும் மோகினிப் பிசாசு தூக்கிட்டுப் போயிட்டுதா?” என்று அலறினாள் அஞ்சலை.
“சீ! சும்மாகிட—” என்று அதட்டினார் தாண்டவன்.
---
கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்