அத்தியாயம் 6 · 7 / 52

அத்தியாயம் 6

Chapter 6

மூல ஸ்கேன் 60 (chapter-6 portion)-68

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

6

பரிமளா மீது விழ இருந்த அரிவாள் வெட்டைத் தடுத்து நிறுத்தியது வெள்ளியம்பலத்தின் கைதான். தெருவோடு நடந்து கொண்டிருந்த அம்பலத்தின் காதிலே பரிமளா வீட்டு சப்தம் கேட்கவே அவர் வேகமாக உள்ளே நுழைந்தார். அவர் நுழைந்ததற்கும்—பரிமளா ஆபத்திலிருந்து விடுபடுவதற்கும் நேரம் மிகச் சரியாயிருந்தது. எங்கே சண்டை சச்சரவுகள் நடைபெற்றாலும், சந்தோஷ, துக்க சமாச்சாரங்கள் நடைபெற்றாலும் அங்கே தனக்கே தலைமை ஸ்தானம் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படும் பெரிய—மனிதராயிற்றே வெள்ளியம்பலம், ஆகையால் அவர் தாண்டவன் கையைத் தடுத்து நிறுத்தியதில் ஆச்சரியமில்லை.

சில சமயங்களில் கெட்டவர்கள் செய்யும் காரியங்கள் கூட நன்மையாகவே முடிந்து விடுகிறது. நமக்கென்ன என்று வெள்ளியம்பலம் போயிருந்தால், பரிமளாவின் உயிர் போயிருக்குமல்லவா? இன்னொன்று—கெட்டவர்களின் செய்கை நன்மையை மின்னல் போலத் தோன்றச் செய்து, அந்த மின்னலில் இருந்தே, இடி—மழை—புயல்—பூகம்பம்—வரையிலே தீமைகளைப் பொழிந்து விடவும் கூடும்.

அதே போன்ற ஒரு தீய சூழ்நிலைக்கு அஸ்திவாரக் கல் நாட்டுவது போலத்தான் அமைந்தது, பரிமளாவுக்கு வெள்ளியம்பலம் செய்த உதவி.

“என்ன தாண்டவம்—ஏனய்யா—கத்தியைத் தூக்கிக் கொண்டு பாய்கிறீர்?” என்று அதட்டலாகக் கேட்டார் அம்பலம்.

தாண்டவன் கோபாவேசத்திலும் கூட அம்பலத்திற்குக் காட்ட வேண்டிய மரியாதையைக் காட்டி மௌனமாக நின்றார்.

“ஆறுவது சினமய்யா—ஆறுவது சினம்! நீர் அரிவாளால் காரியத்தை முடிச்சுட்டு நாளைக்கு உம்மை ஜாமீனில் எடுக்கிறத்துக்கு, நானல்லவாய்யா போய் அழணும்! ஏது ஊர்ல கொஞ்சங்கூட மனுஷனை நிம்மதியா இருக்க விட மாட்டீங்க போலிருக்கே! இப்ப என்னய்யா நடந்தது? ஏன் இப்படி புலி போலப் பாய்ந்தீர்?”

தாண்டவன் பதில் சொல்லாமல் கீழே உட்கார்ந்தார்.

“என்னய்யா—ஒரு மனுஷன் கேட்கிறேன்; பதில் சொல்லாமல் வாயடைத்துப் போய்விட்டீர்!”

கணவன் பதில் சொல்லாததால் அம்பலத்திற்குக் கோபம் வந்துவிடக் கூடும் என்று பயந்த அஞ்சலை, “நான் சொல்லுகிறேனுங்க!” என்று ஆரம்பித்தாள்.

“சொல்லு! சொல்லு!” என்று அம்பலமும் ஆவலாகக் கேட்டார்.

“ராத்திரி தூங்கிக்கிட்டு இருந்த என் பெண்ணை மோகினிப்பிசாசு, தூக்கிக் கொண்டு போய்ட்டுதுங்க—மகள் காலையிலே தான் திரும்பி வந்தா—அதை அவரு நம்பாம இப்படி துள்ளிக் குதிக்கிறாரு!”

“மோகினிப் பிசாசு!”

“ஆமாங்க—அதான் அந்த கொல்லர் வீட்டுப் பெண்ணு, கன்னி கழியாமல் மோகினியா சுத்திக்கிட்டு நிக்குதே—அது தான்!”

“ஓகோ—அது ஏன், இந்தப் பெண்ணை தூக்கிக்கிட்டுப்போச்சு—ஆச்சரியமா இருக்கே”

“இந்தப் பெண்ணுதானே பட்டுக்கோட்டை பெரிய பள்ளிக்கூடத்திலே படிக்கிற பெண்ணு?”

“ஆமாங்—இதுதான்! வேற ஏதுங்க; ஒண்ணே ஒண்ணுதான் கண்ணே கண்ணுன்னு! அதுக்கும் இப்படி ஆபத்து வரப்பாத்துச்சு!”

அம்பலத்திற்கு குழப்பம் ஆரம்பமாகி விட்டது. மோகினிப் பிசாசு மருங்கப் பள்ளத்துப் பக்கத்திலே சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதை அவர் நிறையக் கேள்விப் பட்டிருந்தாலும் கூட, அந்தப் பிசாசு வந்து, இந்தப் பெண்ணை எப்படித் தூக்கிக் கொண்டு போயிருக்க முடியும் என்கிற சந்தேகம் அவருக்கு எழுந்தது.

அவர் பரிமளத்தைப் பார்த்து, உன் பெயர் என்னம்மா—என்று கேட்டார்—அவளும், கலங்கிய கண்களைத் துடைத்தபடி பரிமளம் என்று கூறினாள்—

“அழாதே அம்மா! மோகினிப் பிசாசு உன்னைத் தூக்கிக்கொண்டு போகும் போது எத்தனை மணியிருக்கும்?”

“அதற்குத்தான் ஆறுமாதமாக அழுது கொண்டிருக்கிறேன்—அப்பா, ஒரு ரிஷ்ட்வாட்ச் வாங்கித் தர மாட்டேன் என்று கூறிவிட்டார். இப்போது எவ்வளவு சரியாக மணியைச் சொல்லியிருப்பேன்.”

பரிமளாவுக்கு வெள்ளியம்பலம் என்றாலே எப்போதும் ஒரு வெறுப்பு உண்டு. அதுவும் இப்போது மோகினிப் பிசாசு பற்றிய விளக்கம் கேட்க ஆரம்பித்தது அவளுக்குப் பிடிக்கவேயில்லை. ஆகவே அம்பலத்தின் கேள்விகளுக்கு தாறுமாறாக பதில் சொல்வதென்று தீர்மானித்துக் கொண்டாள். அம்பலம், தன்னை அப்பாவின் கையிலிருந்து விடுவித்ததின் மூலம், இன்னும் ஏதாவது புதிய ஆபத்து அவரிடமிருந்தே ஏற்படக்கூடும் என்று பரிமளா பயந்தாள். அம்பலமும் கேள்விகளை அடுக்கினார்.

“மோகினிப் பிசாசு பார்வைக்கு எப்படியிருந்தது?”

“பிசாசு மாதிரியே இருந்தது. ஆனால் மிகவும் நல்ல அழகு—”

“வயது என்ன இருக்கும் அதற்கு?”

“நான் அதைக் கேட்டேன்—ஜாதகக் குறிப்பு அதன் அப்பா பெட்டியிலே இருக்கிறது—பார்த்துச் சொல்லுகிறேன் என்றது.”

“ஓ—நீயும் அதோடு பேசினாயா?”

“ஆமாம் பேசினேன்!”

“அந்த பிசாசு என்ன பாஷை பேசுகிறது!”

“பிசாசு பாஷை தெரியாதா? சமஸ்கிருதம் தான் பேசியது!”

“சமஸ்கிருதமா? உனக்குப் புரிந்ததா?”

“ஓ! அது பேசப்பேச பக்கத்திலே யாரோ மறைந்திருந்து தமிழிலே மொழி பெயர்த்துக் கொண்டிருந்தார்கள்—?”

“அது யார்? ஆணா பெண்ணா?”

“அதுதான் கண்ணுக்குத் தெரியவில்லையே—பேசியதிலிருந்து பெண் என்றும், குரலிலிருந்து ஆண் என்றும் தீர்மானித்துக் கொண்டேன்.”

“ஆமாம், பிசாசு உன்னை ஏன் தூக்கிக் கொண்டு போனதாம்?”

“இதுமாதிரி எல்லாம் நடக்கத்தான்!”

“குறும்புக்காரிதான் நீ! ஆமாம்—கொல்லர் வீட்டுப் பெண் தானே அந்த மோகினி! அதுக்கிட்ட நீ கேட்டிருக்கலாமே; அவுங்க அப்பா தங்கத்தை எல்லாம் எங்கே புதைத்து வச்சார் என்று!”

“அதையும் கேட்டேன்—பதிலும் சொல்லிற்று!”

“என்ன சொன்னது? என்ன சொன்னது?”

“அவளுடைய அப்பா புதைத்த தங்கம் இருக்குமிடத்தை அவள் சொல்லும்போது, ஆச்சரியகரமாக என் காதுகள் அடைத்துப் போய்விட்டன. உடனே விழித்துக் கொண்டேன். எனக்குப் பிரக்ஞை வந்துவிட்டது!”

“அடா அடா! அதையல்லவா நீ கேட்டிருக்க வேண்டும்—அது சரி—அந்தப் பிசாசு உன்னை தூக்கிக் கொண்டு போன இடம் எதம்மா?”

“மனோராவிற்குப் போகிற பாதையிலே இருக்கிறதே பெரிய மதகு, அங்கேதான் நான் இருப்பதாக உணர்ந்தேன் கண்விழித்துப் பார்த்தபோது!”

வெள்ளியம்பலத்திற்குப் பரிமளாவின் பேச்சிலே சிறிது நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. மோகினிப் பிசாசுஇப்படி யெல்லாம் செய்யக்கூடும் என்றும், அத்தகைய பிசாசு மருங்கப்பள்ளத்து வட்டாரங்களிலே அலைந்து கொண்டிருக்கிறது என்றும் நம்புகிறவர்களுக்கு பரிமளாவின் பொய், உண்மையாகத் தானே தெரியும். ஆகவே அம்பலம், தாண்டவனை சமாதானப் படுத்தினார்.

“நீர் ஒன்றும் மகளைப்பத்தி தப்பாக நினைக்காதீர் அய்யா! மோகினிப் பிசாசு அலைகிற விஷயம் தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோமே; தீர விசாரிக்காமெ கத்தியைத் தீட்டிப் பாய்வதிலே என்னய்யா புண்ணியம்?” என்று கொஞ்சம் காரசாரமாகவே சொன்னார் அம்பலம்.

“எனக்கு என்னமோ போங்க; நம்பிக்கையில்லை! படித்த பெண்ணு அது—ஏதாவது சொல்லி தப்பிச்சுக்கப் பாக்குது!—அதனுடைய நடை உடை பாவனைகளை நான் சில நாளாப் பாத்துக்கிட்டுத்தான் வர்றேன்—எனக்கென்னமோ சந்தேகந்தான்!”

“அட முட்டாள் மனுஷா அப்படியே சந்தேகமிருந்தாலும் அதை வெளியில் சொல்லக் கூடாதய்யா! சந்தேக நிவர்த்தியே ஆகாமல் சண்டமாருதமா கிளம்பினீர்ன்னா, ஊர் காரித் துப்புமய்யா! நான் ஊருக்குப் பெரிய மனுஷன்—நானே நம்புகிறேன், உமது மகள் பேச்சை! நீர் என்னமோ நெருப்பு மாதிரி கொதிக்கிறீரே!”

“மோகினிப் பிசாசு, பெரிய மதகடிக்குத் தூக்கிட்டுப் போச்சுன்னு சொல்லுதே; ஒரு கேள்வி கேட்கிறேன்! பதில் சொல்லுமா?”

“என்ன கேட்கிறீர், கேளும்?”

“பெரிய மதகடியில் இருக்கிற ஒரு முக்கியமான செடி கொடியின் பெயரைச் சொல்லட்டும்—நான் போய் சரி பார்த்து, இதன் பேச்சை நம்புகிறேன்” என்று முடித்தார் தாண்டவன்.

“ஏன் பரிமளம்! உங்க அப்பா கேட்கிறது நியாயம் தானே, மதகடியில் தானே பிசாசு உன்னை தூங்கவைத்தது—அங்கேயுள்ள ஒரு முக்கியமான செடி கொடியைச் சொல்லேன்—அப்பாவின் சந்தேகம் தீரட்டும்!” என்றார் அம்பலம்.

“அந்த ஆபத்தான நேரத்தில் நான் அதையெல்லாம் பார்த்து ஞாபகமா வைத்திருக்கிறேன்” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, திடீரென அவளுக்கு ஒரு நினைவு வந்தது. அதுதான் அந்த மதகடியில் பாம்புபோல் வந்து அவர்களை பயமுறுத்திய பிரண்டைக் கொடி! பரிமளத்திற்கு புதிய தெம்பு ஏற்பட்டது.

“சொல்லுகிறேன்—ஞாபகம் வந்து விட்டது—அங்கே பிரண்டைக்கொடி நிறைய இருக்கிறது” என்றாள்.

தாண்டவனுக்கு சிறிது தயக்கம் பிறந்தது; பேசுவதற்கு!

“என்னய்யா—இனி என்ன சந்தேகம்?” என்றார் கேலியாக அம்பலம்.

“பிரண்டைக்கொடி—சரி; நீங்க தான் சாட்சி—வாங்க தயவு செய்து என்னோட—உங்களுக்கு நேராகவே பார்க்கிறேன், பிரண்டைக்கொடி இருக்கிறதா என்று! அப்படி இல்லாவிட்டால் மகள் என்றும் பார்க்காமல் பிணமாக்கி விடுறேன்—நீங்க சாட்சி! வாங்க!!” என்று துடித்துக் கிளம்பினார் தாண்டவன். வெள்ளியம்பலமும், தாண்டவனுடன் புறப்பட்டார்.

பரிமளாவுக்கு பயமெல்லாம் போய்விட்டது. அப்பா, அங்கு போய் பிரண்டைக்கொடியைக் கட்டாயம் பார்ப்பார்—தான் சொன்ன பொய்யை எல்லாம் நம்பி விடுவார்—என்று தற்காலிகமாக ஆறுதலடைந்து, பாம்புபோல் வந்து பயமுறுத்திய அந்தப் பூவரசு இலைக்கும், பிரண்டைக்கொடிக்கும் வாழ்த்து சொல்லிக் கொண்டாள் தனக்குள்ளாகவே!

தாண்டவனும், வெள்ளியம்பலமும், பரிமளம் குறிப்பிட்ட மதகு நோக்கி நடந்தார்கள். பரிமளத்தின் விஷயத்திலே வெள்ளியம்பலத்திற்கு ஏன் இவ்வளவு அக்கரை பிறந்தது என்று அவருக்கே தெரியவில்லை. பரிமளா கூறும் மோகினிப்பிசாசு—தாண்டவன் கூறும் கள்ளக் காதலன்—இந்த இரண்டில் எது சரி? என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆசை மட்டும் அம்பலத்தின் மனதிலே அலைமோதிக் கிளம்பியது—மோகினிப் பிசாசு உண்மையாயிருக்கும் பட்சத்தில் யாராவது மந்திரவாதிகளைக் கொண்டு அதைக்கட்டி, அதன் மூலம் தங்கம் புதைக்கப்பட்ட இடத்தை தெரிந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை பிறந்தது அவருக்கு! அல்லது, பரிமளத்திற்கு யாரோ ஒரு கள்ளக் காதலன் இருப்பது உண்மையானால், அந்தக் காதலன் முதல் நாள் இரவு தான் கோயிலிலே சந்தித்து ஓட்டம் பிடித்த காதலனாயிருந்தால், அவன் மூலமும் தங்கம் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளலாம்—“அதோ அந்த மாமரத்தடியில்தான் தங்கத்தைப் புதைத்தது” என்ற வாசகத்தைக் கூறியது அவர் சந்தித்த அந்தக் காதலன் தானே! ஒருவேளை அவனே பரிமளாவின் கள்ளக் காதலனாக இருந்தால்? இப்படி எல்லாம் யோசனை செய்து கொண்டு, அம்பலம் தாண்டவனுடன் மதகுப் பக்கம் வந்தார்—தாண்டவன் மதகடியை ஆவலாகப் பார்த்தார்—பரிமளா குறிப்பிட்ட பிரண்டைக் கொடி அங்கேயிருந்தது.

“பார்த்தீரா? பரிமளம் சொன்னது உண்மைதான்!” என்று கூச்சலிட்டார் வெள்ளியம்பலம்.

பிரண்டைக் கொடிக்கும் பக்கத்திலே கொஞ்ச தூரத்தில் ஒரு செருப்பு மட்டும் கிடந்தது. இருவரின் கண்களும் அந்த செருப்பின் மீது பாய்ந்தன. அம்பலம் அந்த செருப்பை உற்றுப் பார்த்தார். அவருக்கு ஒரு சரியான உண்மை கிடைத்து விட்டது. அவர் அந்த உண்மையைதாண்டவனிடம் வெளியிடவில்லை.

மதகடியில் கிடந்த செருப்பும், முதல் இரவு, கோயிலடியில் கிடந்த செருப்பும் ஒரு ஜோடி! இரண்டும் ஒருவனுடையது! அம்பலம் துரத்தும் போது ஓடிய வேகத்தில் துரை விட்டுச் சென்ற செருப்பைத்தான் முதல் நாள் இரவு அம்பலம் எடுத்து வைத்துக் கொண்டார். இப்போது அதனுடைய ஜோடி கிடைத்தது! ஆம்—பரிமளாவின் காதலன் தான் அவன்—பரிமளாவைப் பிடித்தால் அவனைப் பிடித்து விடலாம்—அவன் மூலம் தங்கம் புதைக்கப்பட்ட இடத்தை கண்டு பிடித்து விடலாம் என்று முடிவு கட்டிக்கொண்டு மௌனமாக நின்றார் அம்பலம். எப்படியாவது பரிமளாவை தன் வீட்டிற்கு தூக்கி வந்து ரகசியத்தை அறிய வேண்டுமென்ற தீர்மானத்துடன் நடக்க ஆரம்பித்தார்—தாண்டவன் உள்ளமும் போர்க்களமாகி விட்டது. யாரோ ஒரு ஆடவனுடன் தான் தன் மகள் அந்த இரவைக் கழித்திருக்க வேண்டுமென்று முடிவு கட்டிக் கொண்டார். அனாதையாகக் கிடந்த அந்த செருப்பைக் கையிலே எடுத்துக் கொண்டார்.

“என்னய்யா—பரதன் மாதிரி புறப்பட்டு விட்டீர், பாதுகையைத் தூக்கிக் கொண்டு!” என்று கிண்டல் செய்தார் அம்பலம். கேலியை ரசிக்கும் நிலையில் தாண்டவன் இல்லை. அம்பலந்தான் என்ன; கேலி செய்தாரே தவிர—அவர் எண்ணமெல்லாம், பரிமளாவிடம், அந்த ரகசியத்தை எப்படி விசாரிக்கலாம் என்பதிலேயே மூழ்கியிருந்தது. முதல் நாள் இரவு கோயிலில் கண்ட காட்சிகள் அனைத்தும் அவர் மனக் கண்ணில் நிழலாட்டம் போட்டன. இருவரும், ஊர்ப் பக்கம் திரும்பினார்கள்; ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளாகவே ஒவ்வொரு பயங்கர முடிவை செய்து கொண்டு!

---

கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்